வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை
இதழ்: 2 :: சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
நகுலனின் இரு கவிதைகள் - விக்ரமாதித்தன் நம்பி
--------------------------------
மனிதன் - ஈ.பீ.டொங்காலா - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
வந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழ்மகன்
--------------------------------
கோடை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சிப் பட்டறை - 1 - தினேஷ்
--------------------------------
மூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது - விட்டல்ராவ்
--------------------------------
அஞ்சலி : திருமதி. கமலினி செல்வராஜன் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
மொழியும், இலக்கியமும் - விட்டல்ராவ்
--------------------------------
 
   
 
1

 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  -----------------------------  
     
     
     




தமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சிப் பட்டறை - 1

- தினேஷ்


வாழ்வின் பல நிகழ்வுகளில், சில நிகழ்ச்சிகள் மட்டுமே பதிவு செய்யத் தகுதி வாய்ந்தவைகளாகயிருக்கின்றன. அதற்கான ஆவலையும் உட்தூண்டுகின்றது. அவற்றில் சென்ற வருடம் திருவண்ணாமலையில் நடந்த சிறுகதை பயிற்சி பட்டறை வகுப்பும் ஒன்று. இந்நிகழ்வில் பல எழுத்தாளர்கள், தத்தமது அனுபவங்களையும், சிறுகதையின் நுட்பங்களையும் எடுத்துரைக்க அவ்வப்போது சிற்சில கதைகளையும் சொல்லி வந்திருந்தவர்களை ருசிப்படுத்தினர். அவற்றைக் குறித்தெல்லாம் இங்கே எழுத்துக்களாக பதிவு செய்கிறபொழுது அந்தக் கதைகளைத் தவிர்த்துவிட்டு வெறும் கட்டுரையாக மட்டுமே வாசிக்கக்கொடுக்க விரும்பவில்லை. உயிரில்லாத மெய் போன்றது அது. மேலும், கதைகள் கேட்பதும், அவற்றின் மேன்மைகளையும், கையாளும் விதத்தையும், நுட்பங்களைக் குறித்துச் சிலாகிப்பதும், பேச்சுக்களை இயற்கையோடு அமர்ந்து கேட்டு இன்புற்றதன் சுவையை, கணினியின் முன்னால் அமர்ந்து படிக்கையில் கிடைத்துவிடுமா? என்பதும் கேள்வி. எனினும், அச்சுவையைப் பரிமாற எத்தனிக்கும் சிறு முயற்சியாகத் தொகுத்த கட்டுரைகளே இனி நீங்கள் வாசிக்கவிருப்பது.

ராஜேந்திர சோழன்:

நான் எழுபதுகளில் எழுத ஆரம்பித்தேன். நான் எழுத தூண்டுகோலாக அமைந்தது எது என்றால், நான் 9ஆம் வகுப்பு படிக்கும்பொழுதே நிறைய வாசிப்பேன். வாசிக்கும்பொழுதே அதிலெல்லாம் ஏதோ பொய்யாகவே சொல்லியிருக்கின்றார்களே, புனைவுகளே அதிகமாக இருக்கிறதே., வாழ்க்கைக்கு நேரடியாக தேவைப்படுகின்ற விஷயங்களைச் சொல்லவில்லையே என்ற கவலையோடுதான் படித்தேன். அப்போது ஏற்பட்ட உந்துதல்தான், வாழ்க்கையில் நாம் என்ன பார்க்கின்றோமோ அதனை அப்படியேதான் எழுத வேண்டும். அதுவே உண்மையான படைப்பு என்ற சிந்தனை வந்ததன் பின்புதான் நான் எழுத ஆரம்பித்தேன்.

என் வாழ்க்கையும் பல களங்களைச் சந்தித்து பயணப்படுகின்றது. அரசியல் களம் போல வறட்சியான காலம் நிலவுகின்ற சமயத்தில் எல்லோரும் அவரவர் சார்ந்திருக்கின்ற தொழில்களோடு தங்களின் வாழ்க்கையை சுருக்கிக்கொள்கின்றார்கள் என்ற எண்ணத்தோடு தான் நான் இருந்தேன். எங்கள் வறட்சியான பகுதியில் பாலைவனச்சோலை போல ஆங்காங்கே சில நண்பர்கள் கூடி இலக்கியம் பேசிக்கொண்டிருப்போம். நாம் வாழ்கிற சூழலும் அவசர மயமாக, இயந்திரமயமாக சுழல வேண்டிய கட்டாயமும் இருக்கிற காரணத்தினால், என்றாவது எங்கள் பழைய நண்பர்களையெல்லாம் பார்க்கிற பொழுது நம் பழைய காலமெல்லாம் திரும்பி வராதா என்று பேசிக்கொண்டிருப்போம். ஆனால், நாங்கள் நினைத்தது போல வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு மோசமில்லை, எல்லோரும் ஏதோ வாழ்ந்து தொலைத்தால் போதும் என்று இருந்தாலும், அதிலிருந்து விடுபட்டு பல்வேறு தொழில்களிலிருந்து, தளங்களிலிருந்து, வாழ்க்கைச் சூழல்களிலிருந்து பிரித்துக்கொண்டு ஏதோ எழுத வேண்டும், படிக்க வேண்டும், வாசிப்பு பயிற்சி வேண்டும் என்கிற இலக்கிய நாட்டத்தோடு வந்திருக்கிற மாபெரும் இளைய சமுதாயத்தைப் பார்க்கிறபொழுது, இன்று இங்கு வந்திருக்கின்ற பல நண்பர்களைப் பார்க்கின்ற பொழுது பரவசமான மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னமும் இலக்கியத்தின்மீது ஆர்வம் உள்ள இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்பதை இந்தக் கூட்டம் வாயிலாகத்தான் அறிந்துகொள்ள முடிகிறது.

நாம் தொழில் நிமிர்த்தமாகவோ, அல்லது வேறு ஏதேனும் விஷயத்திற்காகவோ வெளிமாநிலங்களுக்குச் செல்வோமேயானால், அங்கு பேசப்படுகிற மொழி நமக்கு புரியாததாக இருக்கும். ஆனால், அங்கு எவரோ ஒருவர் தமிழில் பேசிக்கொண்டிருப்பாராயின் நம் மனது மகிழ்ச்சியடையும். அவர் நமக்கு நெருக்கமானவர் போன்ற என்ணம் ஏற்படும். நாம் கன்னியாகுமாரியைச் சேர்ந்தவராகயிருக்கலாம், அவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவராகயிருப்பார், இதற்கு முன் அவரை நாம் பார்த்திருக்கக் கூட வாய்ப்பில்லை, ஆனாலும், நம் மொழி பேசுகிற ஒருவரை அடையாளம் கண்டுகொள்வதால் ஒரு இனம் புரியாத பாசமும், அன்பும், நெருக்கமும் அந்த மனிதர் மீது உண்டாகிறது. அதுமாதிரிதான் பல மனிதர்கள் பல வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பொழுது இலக்கியம் கற்க வேண்டும் என்று வந்திருக்கிறவர்களைப் பார்க்கையில் நம் மொழி பேசுகிறவர், நாம் இயங்கிய தளத்தில் இயங்க ஆசைப்படுவர்கள் இவர்கள் என்ற நெருக்கம் இங்கு வந்திருக்கிற நண்பர்கள் மீதும் ஏற்படுகிறது.

தமிழ்ச்சிறுகதையின் தோற்றம் பற்றியோ வளர்ச்சி பற்றியோ, சொல்லிக்கொண்டிராமல் இந்தக் கூட்டத்தை இரட்சிப்புக் கூட்டம் போலவோ, வழிகாட்டுதல் கூட்டம் போலவோ பயன்படுத்திக்கொள்ளாமல், என்னளவில் என் படைப்புலகம் சார்ந்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். வெறும் வழிகாட்டுதல் மட்டும் வைத்துக்கொண்டு ஒரு நல்ல இலக்கியம் உருவாகி விடாது.

இலக்கியப் படைப்பு என்பது தொடர்ந்த பயிற்சிகளின் வாயிலாக வரக்கூடியது. அதற்கு முதலில் அனுபங்கள் வேண்டும். நம் அனுபவங்கள் செரிமானமாகி, அதனுடன் சிற்சில ரசாயன மாற்றங்கள் சேருமாயின் அதுவே ஒருநாளில் படைப்புகளாக வெளிவரும். ஒருவர் மற்றவருக்கு எப்படி மிதிவண்டி ஓட்டவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கலாம். அவர் சொல்லிக்கொடுத்துக்கொண்டே இருப்பதனை நாமும் கேட்டுக்கொண்டேயிருந்தால் நாமும் சைக்கிள் ஓட்டியாயிற்று என்ற நிலைக்கு வரமுடியாது. நாமாக அந்தச் சைக்கிளில் ஏறி பயின்றால்தான் கற்றுக்கொள்ள முடியும். இதுவே படைப்புலகத்திற்கும் பொருந்தும். அதன் படியே என் அனுபவங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

முதலில் உங்களிடம் இரண்டு விஷயங்களை பகிர்ந்துகொள்கிறேன். முதலாவது சிறுகதை என்கிற வடிவத்தை என்னுடைய அனுபவத்தின் அடிப்படையில் அதனை எப்படிப் பார்க்கிறேன் என்பதை சிறு வரையறை மூலமாக விளக்க ஆசைப்படுகிறேன். சிறுகதைகளின் வரையறைகளை அறிந்துகொண்டுதான் ஒருவர் எழுத வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை. தான் மேற்க்கொண்டிருக்கிற துறையின் தியரிகளை அறிந்துகொள்வதன் வாயிலாக, அவர் மேலும் இத்தளத்தில் நுட்பமாக இயங்கக் கூடிய சூழல் உருவாகிறது. சிறுகதை என்றால் என்ன? என்பதைக் கூட அறியாமல் பலரும் நல்ல கதைகளை எழுதியிருக்க கூடும். சிறுகதையின் இலக்கணங்கள் என்னென்ன? என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளாமலேயே சிலர் நன்றாக எழுதுவார்கள் மறுப்பதற்கில்லை. ஆனால் தான் மேற்கொண்டிருக்கின்ற துறையின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதும் முக்கியமானது.

பின்பாக இரண்டாவது விஷயமாக நான் எழுதத்துவங்கிய எழுபதுகளின் காலகட்டத்தில் என்னிடமிருந்து எப்படி சிறுகதைகள் பிறப்பெடுத்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனநிலையில் படைப்புகள் வெளிப்பாடு அமையும். இதனைப் பிற்பாடு சொல்கிறேன்.

இங்கு வந்திருப்பவர்கள் ஏற்கனவே நிறைய படித்தவர்களாகத்தான் இருப்பார்கள், முன்பே சிறுகதைகளைப் பற்றியும் தெரிந்தவர்களும் இருப்பார்கள், தெரியாதவர்களும் இருப்பார்கள். எனவே கோட்பாடு ரீதியாக முறையாக சிறுகதை அறிமுகத்திலிருந்து இன்றைய வேளையைத் துவங்கலாம்.

படைப்பு நுட்பங்களைத் தெரிந்துகொண்டால் தான் படப்பை நுட்பமாக மாற்றமுடியும். படைப்பை ஆற்றல் மிக்கதாக ஆக்க முடியும். மனிதனுக்கு எண்ணற்ற தேவைகள் இருக்கும். இந்த தேவைகளுக்கு ஆதாரங்களாக இருப்பவைகளை இரண்டே இரண்டாக வகைப் பிரிக்க முடியும். மனிதன் என்பவன் உடலும் மனமும் சார்ந்த ஒரு உயிர். மனம் எங்கு இருக்கிறது?, மனித உடம்பில் அது எந்த உறுப்பில் இருக்கிறது? என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் செல்ல வேண்டியதில்லை. மனம் என்று எதைக்குறிப்பிடுகிறோமென்றால், மனித மூளையின் சிந்தனையின் ஒரு பகுதியை., சிந்தனைக்குரிய ஒரு தொகுப்பை அறிவு சார்ந்ததாகவும், இன்னொன்றை உணர்ச்சி சார்ந்த்தாகவும் வகைப்படுத்திக்கொள்கிறோம். இங்கு உணர்ச்சி சார்ந்தவைகளை வகைப்படுத்துவதை மனம் என்று பிரிக்கிறோம். ஆக, இந்த உடல் சார்ந்த., மனம் சார்ந்த தேவைகளைத்தான் மனிதர்களின் அடிப்படைத் தேவைகளாக வகைப்பிரித்துக்கொள்கிறோம். இதனை ஆங்கிலத்தில் material need, spirutal need என்று பிரிக்கிறார்கள்.

இதனை இரண்டாகப் பிரிக்கின்ற காரணத்தினாலேயே இந்த மெட்டீரியல், ஸ்ப்ரிட்சுவல் இரண்டும் முற்றாகத் தனி என்று அர்த்தமாகாது. இவையிரண்டுமே ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டு, தொடர்புகொண்டுதான் இயங்கிக்கொண்டிருக்கிறதே தவிர, தனித்தனியாக இல்லை. மிகச்சிறந்த வாசகம் ஒன்று உள்ளது, ”மனிதன் உணவால் மட்டுமே வாழமுடியாது”. இதுவும் உண்மை. மனிதன் வெற்றியால் மட்டுமே வாழமுடியாது என்று சொன்னாலும் அதுவும் உண்மை. இங்கு உணவு என்று எடுத்துக்கொண்டால் கூட, அதனை தயாரிப்பதற்கும் பலவகையான தயாரிப்புகள் கலந்துள்ளது. அதில் பல சேர்க்கைகள் நிகழ்ந்துள்ளது. அதே வேளையில் உணவு என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. நன்றாக சிந்தித்துப்பார்த்தால் மனத்தேவைகளின் அடிப்படை தான், இன்று மனிதர்கள் கண்டுபிடித்திருக்கிற அனைத்து வகையான கண்டுபிடிப்புகளும். மனத்தேவைகள் இல்லையென்றால் விலங்குகளைப் போல காலையில் எழுந்திருப்பது, பொழுது சாயும் வரையிலும் இரைதேடிக்கொண்டிருப்பதுமாக இருந்திருக்க வேண்டும். மனிதனினும் ஆதி நிலையில் அப்படித்தான் இருந்திருப்பான். சூரியன் உதித்ததிலிருந்து மறையும் வரையிலும் இரை தேடிக்கொண்டிருந்திருப்பான்.

இப்படி வாழ்ந்த மனிதன் படிப்படியாக, பள்ளிகளில் படித்ததுபோல பழைய கற்காலம், புதிய கற்காலம், கூர்மை தீட்டப்பட்ட ஆயுதம், பட்டை தீட்டப்பட்ட ஆயுதங்களின் காலம் என்றெல்லாம் வந்திருக்கும். மிருகங்களை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களின் தேவைகளும், வளர்ச்சியும் பெருகியது. அன்றைக்கிருந்த ஒரே சூழ்நிலை மனிதன் கூட்டம் கூட்டமாக இரை தேடிப்போவான், விலங்குகளும் அப்படியே. விலங்குகள் தனித்திருந்தால் மனிதர்கள் அவைகளைக் கொல்வார்கள். மனிதர்கள் தனித்திருந்தால் விலங்குகள் அவர்களைக் கொல்லும். இதைத்தாண்டி இவற்றை எளிமையாகப் புரிந்துகொள்ள முடியாது.

அன்றைக்கு அவர்களுக்கு ஏதாவது ஒரு விலங்கு தனக்கு உணவாக கிடைத்துவிட்டால் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி பெரியதாக இருக்கும். அன்றைக்கு மாலையில் தனது இருப்பிடம் வந்து சேர்ந்ததும் வேட்டையாடிய உணவை உண்டுவிட்டு மன நிறைவில் ஆனந்த பரவசமாக கூத்தாடுவான். அங்கு இருப்பவர்களும் அவனோரு சேர்ந்துகொள்வார்கள். நீங்கள் திரைப்படங்களில் பார்ப்பது போல மலைவாழ் மக்களெல்லாம் எப்படி ஆடுகிறார்கள் என்று பார்த்திருக்கலாம். அதுபோல கைகளை கோர்த்துக்கொண்டோ, அல்லது தனக்கு மனதிற்கு பிடித்ததுபோல எந்தவித முறையும் இல்லாமல் கைகளை, கால்களை ஆட்டிக்கொண்டு, ஆவென்று கத்திக்கொண்டு ஆட்டம் போடுவான். அவனது ஒரே எண்ணம் இன்றைய நாள் நல்ல உணவுடன் முடிந்திருக்கிறது என்ற பரவசம் தான். இதுதான் அடிப்படை. இதுதான் அனைத்து கலைகளுக்கும் அடிப்படை.

அவன் சாப்பிட்டு முடித்தவுடன் அமைதியாக இருக்காமல், எதற்காக தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பரவசக்கூத்து ஆடவேண்டும். அதுதான் அவனது மனவெளிப்பாடு. இந்த மனவெளிப்பாடுகளின் தொடர்ச்சியான நிலைதான் இன்றைக்கிருக்கிற கலை, இலக்கியம், சிற்பம், ஓவியம் இன்னும் பிறவும். ஆக, மனித மனத்தேவைகளின் வெளிப்பாடுகள் தான் கலையும் இன்னபிறவும்.

இங்கு படைப்பு என்பது என்ன?

படைப்பு என்பதை மிகச்சுருக்கமாக விளக்க வேண்டுமாயின், படைப்பு என்பது இந்த புவிக்கோளில் இதற்கு முன்பு எப்போதும் நிகழாதது. இதற்கு முன்பே ஒருவர் இதேமாதிரி ஒரு படைப்பை படைத்துவிட்டு அதனையே நீங்களும் இங்கு செய்திருந்தால் அது படைப்பு ஆகாது. ஏற்கனவே இல்லாதது, மிகவும் புதிதானது. இது மனிதனின் படைப்பு.

கோடிக்கணக்கான மனிதர்கள் இவ்வுலகில் இருக்கிறார்கள். ஆனால், புதிதாக பிறக்கிற குழந்தை இந்த கோடிக்கணக்கான மனிதர்களைப் போல இல்லாமல் வித்தியாசமான குணாதிசயங்களுடன், முக அமைப்புடன் இருக்கிறது. இது இயற்கையின் படைப்பு. ஒரு அம்மாவிற்கே பல குழந்தைகள் பிறந்தாலும், முக அமைப்பில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், அதன் நடவடிக்கைகளிலும், மனதிலும் , அறிவிலும் வித்தியாசப்படுகிறது. ஒரு குழந்தை பாவனைகளில் அப்பாவைப் போல என்றும், இன்னொரு குழந்தை அம்மாவைப் போன்றே செய்கைகள் இருக்கிறது என்றும் சொல்வார்கள். ஆக, படைப்பு என்பது இதுவரை இந்த புவிக்கோளில் நிகழாத புதிய ஒன்று.

அடுத்து வெளியும், காலமும் இல்லாமல் உலகில் எந்தவொரு பொருளும் இயங்க முடியாது. அது மனிதனாக இருக்கலாம், விலங்காக இருக்கலாம். அணு, அணுக்கரு, அணுக்கருவிற்குள் இருக்கிற துகள்கள் கூட ஒரு வெளியும், காலமும் சார்ந்துதான் இயங்க முடியும். அதன் படி பார்த்தால் கலை இலக்கியப் படைப்பும் ஒரு வெளி சார்ந்தும், காலம் சார்ந்தும்தான் இயங்க முடியும். இது ஒரு பொதுக்கோட்பாடு. ஆனால், எல்லா கலைக்கும் இந்த காலமும், நேரமும், வெளியும் சரிசமமாக பங்களிப்பதில்லை. சில கலைகளில் காலத்தின் தாக்கம் அதிகமாகவும், சில கலைகளில் வெளியின் தாக்கம் அதிகமாகவும் இருக்கிறது.

குறிப்பாக ஓவியக்கலையை எடுத்துக்கொள்ளலாம், அதற்கு வெளிதான் (space) முக்கியம், அதுவே சிற்பக்கலைக்கும் அப்படியே. நடனம் என்று எடுத்துக்கொண்டால் கால அளவும் , நேரமும் முக்கியம். இதன்படி பார்த்தால் சிறுகதையானது எந்த மேலாண்மையின் கீழ் வரும் என்று நினைக்கிறீர்கள்?

அடுத்த இதழில்...

தமிழ் ஸ்டுடியோ சார்பாக திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை தோட்டத்தில் மூன்று நாட்கள் சிறுகதை பயிற்சிப் பட்டறை நடந்தது. அதன் தொகுப்பு தொடர்ந்து கூடு இணைய இதழில் வெளிவரும்.

மேலே செல்க...(go to top)
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </