வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை
இதழ்: 2 :: சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
நகுலனின் இரு கவிதைகள் - விக்ரமாதித்தன் நம்பி
--------------------------------
மனிதன் - ஈ.பீ.டொங்காலா - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
வந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழ்மகன்
--------------------------------
கோடை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சிப் பட்டறை - 1 - தினேஷ்
--------------------------------
மூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது - விட்டல்ராவ்
--------------------------------
அஞ்சலி : திருமதி. கமலினி செல்வராஜன் - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
மொழியும், இலக்கியமும் - விட்டல்ராவ்
--------------------------------
 
   
 
1

 
 
 
 
   
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
  -----------------------------  
     
     
     




மனிதன் - ஈ.பீ.டொங்காலா

(கொங்கோ குடியரசு தேசச் சிறுகதை)

- தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்

'...இல்லை. இந்தத் தடவை தப்பிச் செல்ல முடியாது. நாற்பத்தெட்டு மணித்தியாலத்துக்குப் பிறகு அம் மனிதன் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவன் ஒளிந்திருக்கும் ஊரைக் கூட கண்டுபிடித்தாயிற்றாம்.'

'எவ்வளவு வதந்திகள் பரவுகின்றன?'

'ஒரே சந்தர்ப்பத்தில் அம் மனிதனை பல இடங்களில் காணக் கிடைத்திருக்கிறது. சரியாகச் சொன்னால் பல சந்தைகளில் ஒரே நேரத்தில் தோன்றுவதற்கு வரம் கிடைத்த ஒருவனைப் போல. இராணுவத்தினர் அம் மனிதனை தேசத்தின் மத்திய பிரதேசத்தில் கண்டு துரத்திச் சென்றிருக்கிறார்கள். ஆனாலும் பிடித்துக் கொள்ள முடியவில்லையாம். வடக்கின் சதுப்பு நிலத்தில் பாரசூட் மூலம் குதித்த இராணுவத்தினர், தாம் அம் மனிதனை சுற்றிவளைத்துத் தாக்கியதாகக் கூறுகின்றனர். அவர்களுக்குக் கிடைத்த ஒரே சாட்சி பாறையின் உச்சியில் கிடைத்த இரத்தக் கறை. முற்பகுதியில் இருக்கும் இராணுவத்தினர், தாம் அம் மனிதன் தப்பிச் செல்ல முற்பட்ட படகுக்கு வேட்டு வைத்ததாகச் சொல்கின்றார்கள். அம் மனிதன் நதியின் வழியே தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் துரதிஷ்டவசமாக படகு மூழ்கியதாம்.'

இவ்வாறான அனைத்து விடயங்களும், கருத்துக்களும் முன்வைக்கப்பட்ட போதிலும் விசாரணை நடவடிக்கைகள் கைவிடப்படவில்லை. அப்பொழுதும் கூட, ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறை வலையமைப்பு இன்னுமின்னும் பலப்படுத்தப்பட்டது. காவல்துறைக்கு புதிதாக ஆட்கள் இணைத்துக் கொள்ளப்பட்டது மாத்திரமன்றி, இராணுவ வீரர்களுக்கு முழுமையான பலத்தைப் பிரயோகிக்கும் அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது.

இராணுவ வீரர்கள் பிரதேசத்தின் தொழிலாளர் குடியிருப்புக்களை ஆக்கிரமித்தனர். வீடுகளின் கதவுகளை உடைத்த அவர்கள் பஞ்சையும், வைக்கோலையும் பாவித்து தயார் செய்யப்பட்டிருந்த மெத்தைகளை துப்பாக்கி முனையில் பொருத்தப்பட்டிருக்கும் இரும்பு உளியினால் குத்தி ஓட்டையாக்கி, அவற்றுக்குள் தாம் தேடி வந்த மனிதன் இருக்கிறானா எனத் தேடிப் பார்த்தனர். தானியங்களைச் சேமித்து வைத்திருந்த சாக்கு மூட்டைகளில் துவாரங்களிட்டுப் பரிசோதித்தனர். தாம் கேட்கும் கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் கூறாத ஊராரை துப்பாக்கிக் கட்டையால் தாக்கினர். தமது வீடு உடைபடுவதற்கு எதிர்ப்பைத் தெரிவித்த ஒவ்வொருவரும் தாக்குதலுக்குள்ளாக நேர்ந்தது. எனினும் இவ்வனைத்து இராணுவத் தந்திரங்களாலும் சாதகமான பதிலைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. முழு தேசமுமே குழப்பத்துக்குள்ளானது. அவர்கள் தேடும் அவ் வீரச் செயலைச் செய்த மனிதன் ஒளிந்திருப்பது எங்கே?

தேச பிதா, மாபெரும் வழிகாட்டி, மக்களின் மீட்பர், சிரேஷ்ட தலைவர், ஆயுட்கால ஜனாதிபதி, இராணுவத்தின் பிரதான கட்டளைத் தளபதி மற்றும் நாட்டு மக்களின் நேசத்துக்குரிய தந்தையான அவர், சாதாரண பொதுமக்கள் நுழைவது முற்றுமுழுதாகத் தடைசெய்யப்பட்ட ஒரு மாளிகையிலேயே வாழ்ந்து வந்தார். யுத்த தந்திரங்கள் குறித்து பட்டம் பெற்ற இஸ்ரேல் பேராசிரியரொருவரின் அறிவுரைக்கிணங்க வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பு வளையங்கள் மாளிகையைச் சுற்றிவர இருந்தன. ஒருபோதும், எந்தத் தீவிரவாதத் தாக்குதலும் நடத்த ஒரு வழியும் இல்லை.

அரண்மனையைச் சூழவிருந்த பிரதேசத்தின் ஐநூறு யார் தூரத்துக்கு வெளியே பத்து யாருக்கு பத்து யார் இடைவெளியில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் காவலுக்கு நின்றனர். அவர்கள் பகலிரவாக தமது கடமையைச் செய்துவந்தனர். இவ்வாறான இன்னுமிரு பாதுகாப்பு வளையங்கள் இருநூறு யார் தூரத்திலும், நூறு யார் தூரத்திலும் கூட ஈடுபடுத்தப்பட்டிருந்தன. அரண்மையைச் சுற்றி வர ஆழமான நீர் ஆழி. அந் நீர் ஆழியானது, ஆப்பிரிக்க மற்றும் இந்திய முதலைகளினதும், மத்திய அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட, சிறிய மீன்களால் வயிற்றை நிரப்பி திருப்தி கொள்ளாத முதலைகளினதும் வாழிடமாக இருந்தது. நீர் ஆழிக்கு வெளியே இன்னுமொரு அகழி இருந்ததோடு, அந்த அகழியானது எந்தவொரு விலங்கினையும் தமது விஷப் பற்களால் தாக்கி கணத்தில் கொன்று விடக் கூடிய சக்தியுடைய கறுப்பு மற்றும் பச்சை நிற மும்பாஸ் பாம்புகளால் நிறைந்திருந்தது. (மும்பாஸ் எனப்படுவது பச்சை மற்றும் கறுப்பு நிறத்தில் ஆப்பிரிக்காவுக்கு மாத்திரமே சொந்தமான கொடிய விஷமுள்ள பாரிய பாம்பு இனமாகும்.)

அரண்மனையைச் சுற்றிவர, உறுதியான கற்களால் கட்டப்பட்ட அறுபது அடி உயரமான மதில்சுவர் இருந்தது. அதில் இடத்துக்கிடம் காவல் கூடமும், பரிசோதனைக் கூடமும் கட்டப்பட்டிருந்தன. மதிலின் உச்சியில் தேடல் விளக்குகளும், ஆணி முற்கம்பிகளும், கண்ணாடித் துண்டுகளும் பொருத்தப்பட்டிருந்தன. மாளிகைக்குள்ளே செல்ல மிகப் பெரிய வாயில்கள் இரண்டு இருந்ததோடு அதைத் திறந்தவுடன் அது நீர் ஆழிக்குக் குறுக்கே இட்ட பாலமாக மாறும். அந்தக் கதவை உள்ளேயிருந்து மாத்திரமே இயக்க முடியும்.

மக்களின் நேசத்துக்குரிய தந்தை வாசம் செய்த நூற்றைம்பது அறைகளுள்ள மாளிகைக்குள்ளே விசாலமான கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. அவை எல்லாப் பொருட்களினதும், மனிதர்களினதும் விம்பங்களை இரு மடங்கு, மும் மடங்குகளாகக் காட்டின. இக் கண்ணாடிகளைக் காண நேரும், மாளிகைக்குள் பிரவேசிக்கும் எவருமே அசௌகரியத்துக்குள்ளாவர். தமது ஒவ்வொரு அசைவையும் எவரோ ஒருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் எனும் உணர்வு எவருக்குள்ளும் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அனைவரினதும், அனைத்து செயற்பாடுகளும் கண்ணாடிக்குக் கண்ணாடி பரவிச் சென்று, இறுதியாக இருக்கும் கண்ணாடியில் பிரதிபலிக்கும். இனத்தின் தந்தை அந்தக் கண்ணாடியில் பார்க்கும்போது, அங்கு நடைபெறும் அனைத்தையும் கண்டுகொள்ள முடியும். நாட்டில் அடிக்கடி எழும் கலவரங்களையும், சதித் திட்டங்களையும் தடுக்க இப் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் பெரிதும் பயனுள்ளதாக அமைந்திருந்தன.

அந்த மாளிகைக்குள் இனத்தின் தலைவர், ஆயுட்கால ஜனாதிபதி ஓய்வெடுப்பது எவ்வறையிலென எவருக்குமே தெரியாது. அவரது சிக்கலான திருப்தியை முன்னிட்டு தொடர்ச்சியாக இரவுகளில் சேவை செய்த தாசிப் பெண்கள் கூட அதை அறிந்திருக்கவில்லை. இன்பம் அனுபவிப்பதற்காக அவரால் உபயோகிக்கப்பட்ட, இன்னும் பருவமடையாத சிறுமிகள் கூட அவர் உறங்கும் அறையை அறிந்திருக்கவில்லை.

தேச பிதா, உன்னதமான வழிகாட்டி, இராணுவத்தின் பிரதான கட்டளைத் தளபதியான அவரை நேரடியாகக் கண்டுகொள்வதென்பது நாட்டு மக்களுக்குச் சிரமமாக இருந்தது. எனினும், அவரது உருவப்படங்களை எல்லா இடங்களிலும் காணக் கூடியதாக இருந்தது. எல்லா வீடுகளிலும் அவரது புகைப்படங்களைத் தொங்க விட வேண்டும் என்பது அரச கட்டளையாக இருந்தது. வானொலியில் செய்தியறிக்கை ஆரம்பித்ததும், முடிவுற்றதும் அவரைப் பற்றிய உயர்ந்த கருத்துக்களை வாசிப்பதோடுதான். தொலைக்காட்சி செய்தியறிக்கை ஆரம்பித்ததும், வாசிக்கப்பட்டதும், முடிவுற்றதும் அவரது புகைப்படத்தின் முன்னிலையில்தான்.

எல்லாப் பத்திரிகைகளும், அவற்றை அச்சிடும் ஒவ்வொரு தடவையும் அவரைப் பற்றி பொதுமக்கள் கூறும் வர்ணனைகள் பற்றிய விபரங்களைப் பிரசுரிப்பதற்காக நான்கு பக்கங்களை ஒதுக்க வேண்டியிருந்தது. எல்லா இடங்களிலும் அவரைக் காணக் கூடியதாக இருந்தபோதிலும், அவரை நெருங்குவது மிகக் கடினமான காரியமாக இருந்தது. அவ்வாறான வீரச் செயலைச் செய்வதென்பது எவராலும் சாத்தியப்படாத ஒன்று.

அவ்வாறிருக்கையில் இம் மனிதன் அவ் வீரச் செயலைச் செய்திருக்கிறான். இராணுவக் காவல்வீரர்களைத் தாண்டிச் சென்று, முதலைகளிலிருந்தும், பாம்புகளிலிருந்தும் தப்பி, அறுபது அடி உயரமான மதிலையும் தாண்டி உள்ளே வந்து, கண்ணாடி விம்பங்களில் சிக்கிக் கொள்ளாது தவிர்த்து, தேச பிதா அருகே சென்ற அவன் அவரைக் கொலை செய்திருக்கிறான். சாதாரண ஒரு கலகக்காரனைக் கொன்றுபோடுவதைப் போல, அவன் அதனைச் செய்திருக்கிறான். பிறகு காவல்கூடங்கள், பாலம், பச்சை மற்றும் கறுப்பு நிறப் பாம்புகள், முதலைகள் மற்றும் பாதுகாப்பு வளையங்களைக் கடந்து, தப்பித்துச் சென்றிருக்கிறான். இவையெல்லாம் நடைபெற்று நாற்பத்தெட்டு மணி நேரங்கள் ஆன பிறகும், அவன் இன்னும் சுதந்திரமாக இருக்கிறான்.

அதன் பிறகு வதந்திகள் பரவத் தொடங்கின. அவை எங்கிருந்து ஆரம்பித்தன என எவருக்கும் தெரியவில்லை. 'அம் மனிதன் துரத்தப்படுகிறான்… அவன் இருக்கும் இடம் தெரியும்… அவன் ஒளிந்திருக்கும் ஊரைக் கண்டுபிடித்து அதைச் சுற்றி வளைத்தாயிற்று… இம்முறை அவனுக்கு தப்பித்துச் செல்ல முடியாது.'

இராணுவத்தினர் நிறைந்த ஜீப் வண்டிகள், ட்ரக் வண்டிகள், லொறிகள், ஆயுதத் தாங்கிகள் ஆகியவை, விடிகாலை மூன்றுமணிக்கு தமது பயணத்தை ஆரம்பித்தன. யுத்த தாங்கிகள் பிரதேசத்தின் வீடுகளைச் சுற்றிப் பயணிக்க முயற்சிக்கவில்லை. அவை நேராகப் பயணித்தன. அவர்கள் தாண்டி வந்த கிராமங்கள் தீப்பற்றி எரியத் தொடங்கின. சடலங்கள் அவர்களது சக்கரங்கள் பதிந்துருளும் இடையறாச் சங்கிலிக் கோவைகளிடையே சிக்குண்டு நொறுங்கி துணுக்குகளாகின.

படையினர் மிக விரைவிலேயே குறிப்பிடப்பட்ட கிராமத்தை அடைந்தனர். தமது துப்பாக்கி முனையில் பொருத்தப்பட்ட இரும்பு கூர் முனைகளால் குத்தி கிராமத்தவர்களை எழுப்பினர். அவர்களது எல்லா இடங்களிலும் இழுத்துத் தேடினர். தானியக் களஞ்சியங்களை ஒன்றுமில்லாமலாக்கினர். மரங்களின் மேலே பார்த்தனர். பரண்களின் மேலே ஏறிப் பார்த்தனர். எனினும் அவர்கள் தேடி வந்த மனிதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இராணுவத்தின் கட்டளைத் தளபதி கோபத்தால் வெடித்தான்.

"அவன் இங்கேதான் இருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். எமது அன்புக்குரிய மக்கள் தலைவர், எப்பொழுதும் வாழும் ஒருபோதும் மரிக்காத வீரரைக் கொன்ற நாசகாரனை எனக்குத் தெரியும். அந்தப் பாவிக்கு மீசை இருந்தது. அவனுக்கு ஒரு கண் குருடாக இருந்தது. அவன் மறைந்திருக்கும் இடத்தினை உங்களால் பத்து நிமிடங்களுக்குள் கூற முடியாவிட்டால், நான் உங்கள் வீடுகள் எல்லாவற்றுக்கும் தீ வைப்பேன். உங்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து சித்திரவதைப்படுத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொல்வேன்."

பத்து நிமிடங்கள் கழிந்தன. உலகத்தைப் படைக்கும் சந்தர்ப்பத்தில் இருந்திருக்கக் கூடிய அமைதியைப் போன்ற அச்சுறுத்தும் அமைதியொன்று அங்கே ஆட்சிபுரியத் துவங்கியது. அதனைத் தொடர்ந்து கட்டளைத் தளபதி பழிவாங்கும் படலத்தை ஆரம்பிக்கும்படி கட்டளையிட்டான். அவர்கள் கிராமத்தவரை உடல்ரீதியாக சித்திரவதைப்படுத்தத் தொடங்கினர். சிலரை இரு கால்களிலும் தொங்கவிட்டுத் தாக்கினர். இன்னும் சிலரது திறந்திருந்த காயங்களில் மிளகாய்த் தூளிட்டு அழுத்தினர். ஏனையவருக்கு பசுஞ்சாணியை உண்ணும்படி நிர்ப்பந்தித்தனர். ஆன போதிலும் கூட கிராமத்தவர்களால் இனத்தின் தந்தையை வேட்டையாடிய மனிதனின் பெயரைக் கூற முடியவில்லை.

தொடர்ந்து இராணுவத்தினர், அக் கிராமத்தின் அனைத்து வீடுகளுக்கும் தீ மூட்டினர். கிராமத்தவர்கள் ஒரு வருடமாகப் பாடுபட்டுப் பெற்றுக் கொண்ட விளைச்சல்களைக் கூட தீயிட்டு அழித்தனர். எனினும் அவர்களுக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியவில்லை. உண்மையில் அவர்களது அமைதிக்குக் காரணம் மிக எளிதானது. அது, இனத்தின் தந்தையைக் கொன்றது யாரென உண்மையிலேயே அவர்கள் அறிந்திராததுதான்.

அம் மனிதன் தனது செயலை தனியாகவே நிறைவேற்றியிருந்தான். அவன் அதற்காக மாதக்கணக்கில் தயாராகியிருந்தான். கற்றுக் கொள்ளுதல், ஆய்வு செய்தல் மற்றும் திட்டமிடல் ஆகியவற்றுக்கு நீண்ட காலம் எடுத்திருந்தான். அதனைத் தொடர்ந்து போலி மீசையொன்றை ஒட்டிக் கொண்ட அவன், கொள்ளையனைப் போல இடது கண்ணை கறுப்புத் துண்டொன்றால் மறைத்துக் கொண்டான். உட்புக முடியாத மாளிகைக்குள் நுழையக் கூடிய வழிமுறைகளை அவன் அறிந்திருந்தான். ஆகவேதான் ஏகாதிபத்தியவாதியான நாட்டின் தலைவரை வெற்றிகரமாகக் கொல்ல அவனால் முடிந்திருந்தது.

அவன் அக் காரியத்தை எவ்வளவு இலகுவாக நிறைவேற்றினான் என்றால், தான் பிடிபட்டு தன்னை எவ்வளவுதான் சித்திரவதை செய்து வேதனைக்குள்ளாக்கிய போதும் உண்மையை வெளியிட்டு விடாமலிருப்பதற்கான ஆத்ம சக்தியும், தன்னம்பிக்கையும் அவனுள்ளே இருந்தது. தான் ஒருபோதும் உண்மையை வெளியிட மாட்டேனென அவன் தனது மனசாட்சியுடன் சத்தியம் செய்திருந்தான். அவனது இரகசியம் வெளிப்பட்டுவிட்டால், அத் தந்திரோபாயங்களை மீண்டும் பாவிக்க முடியாது போகும். அதைத் தவிர்ப்பதே அவனது தேவையாக இருந்தது.

எவ்வாறாயினும் இராணுவத்தினர் தனது கிராமத்துக்கு வந்திருப்பது குறித்து அவன் வியப்படைந்தான். அவர்கள் உண்மையிலேயே அவனை அடையாளம் கண்டு கொண்டிருப்பார்களா? இல்லாவிட்டால் அவர்கள் செய்வதெல்லாம் போலி மிரட்டல்களா? உண்மையில் இராணுவத்தினர் அவனைப் பற்றி அறிந்திருக்கவில்லை. எதையுமே அறிந்திராத ஊராரோடு சேர்ந்து அவனும் இராணுவத்தினர் முன்னே நின்றுகொண்டிருந்தான். முழுமையாக மீசையை மழித்திருந்த அவன் தனது இரு கண்களாலும் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறதென அவதானித்தபடியிருந்தான்.

கிராமத்தவரின் அமைதி குறித்து கட்டளைத் தளபதி மிகவும் கோபமடைந்திருந்தான்.

"நான் கடைசியாகத் திரும்பவும் சொல்கிறேன். ஒற்றைக் கண்ணுடைய அவன் ஒளிந்திருக்கும் இடத்தை நீங்கள் எவரும் சொல்லாதுவிட்டால், எமது அன்புக்குரிய தலைவர், எமது கட்சியின் நிறுவுனர், இனத்தின் தந்தையைக் கொன்ற பாவி ஒளிந்திருக்கும் இடத்தைப் பற்றி சொல்லாதுவிட்டால் நான் உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து சுட்டுக் கொல்வேன். நான் உங்களுக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் தருகிறேன்."

கோபத்தால் மூர்க்கமாகியிருந்த கட்டளைத் தளபதி, தனது கைக்கடிகாரத்தை உற்று நோக்கினான். இரண்டு நிமிடங்கள்... ஒரு நிமிடம்... முப்பது நொடிகள்...

"நான் சத்தியமாகச் சொல்கிறேன்… அந்த மனிதனைப் பற்றி எமக்கொன்றும் தெரியாது. அவன் இந்த ஊர்க்காரன் ஒருவனல்ல என்பதனை நாம் சத்தியமிட்டுச் சொல்கிறோம்." என கிராமத்துத் தலைவன் குறுக்கிட்டான்.

"உன்னிடம் எமக்கு வேலையில்லை. நான் உங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவனை சுட்டுக் கொல்லப் போகிறேன். அப்பொழுது உங்களால் புரிந்துகொள்ள முடியுமாக இருக்கும். ஹேய்… உன்னைத்தான்."

அவன் எதிர்பார்த்தபடியே கட்டளைத் தளபதி அவனை நோக்கி விரலை நீட்டினான். அவன் அதிர்ச்சியடையவில்லை. அவனுக்கும் அதுதான் உண்மையிலேயே தேவையாக இருந்தது. தனக்குப் பதிலாக இன்னுமொருவனைக் கொன்றழிக்க இடமளித்து, மீதி ஆயுட்காலத்தை நிம்மதியாகக் கழிப்பது எப்படியென சிந்தித்தபடி அவன் நிம்மதியற்றிருந்தான். தனது இரகசியம் தன்னோடே செத்துப் போவது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

"உனது கிராமத்தவர்களதும், கிராமத்துத் தலைவனினதும் சொல்பேச்சுக் கேட்காத தன்மையால் உனக்கு உயிர்த் தியாகம் செய்ய நேர்ந்திருக்கிறது. நீயொரு அப்பாவி. ஆனால் உயிர்ப் பலிகடா நீதான். இவனை மரமொன்றில் கட்டி வைத்து சுட்டுக் கொல்லுங்கள்."

அவர்கள் அவனை கைகளாலும், கால்களாலும், துப்பாக்கித் தடிகளாலும், துப்பாக்கியின் இரும்பு முனைகளாலும் தாக்கினர். தொடர்ந்து பூமி நெடுகவும் இழுத்துக் கொண்டு சென்று மா மரமொன்றோடு சேர்த்து வைத்துக் கட்டினர். அவனுக்குப் பின்னால் அழுது ஓலமிட்டபடி சென்ற அவனது மனைவி மிக மோசமாக அப்புறப்படுத்தப்பட்டாள். இராணுவத்தினர் நால்வர் அவனைக் குறிபார்த்தனர்.

"கடைசியாகக் கேட்கிறேன். கொலைகாரன் ஒளிந்திருப்பது எங்கே?"

"எமக்குத் தெரியாது" என கிராமத்துத் தலைவன் கூறினான்.

"சுட்டுக் கொல்லுங்கள்."

அவனது இருதயம் இலேசாக அதிர்ந்தது. ஓசையெதையும் எழுப்பாமலேயே அவன் கீழே சரிந்தான். அவர்களால் மீண்டும் ஒருபோதும் கொலைகாரனைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது.

புகை மண்டலம் மறைந்துபோயிற்று. முரட்டுக் கயிற்றால் கட்டப்பட்டிருந்த சடலத்தைப் பார்த்தவாறு கிராமத்தவர்கள் ஆழ்ந்த மௌனத்தில் மூழ்கியிருந்தனர். தனது மிரட்டலை செயல்படுத்தியிருந்த கட்டளைத் தளபதி அவர்களுக்கு முன்னாலிருந்தான். உன்மத்தம் கொண்ட மனநிலை ஏற்படுத்தியிருந்த அதிர்வால் கட்டளைத் தளபதி அடுத்து என்ன செய்வதெனத் தீர்மானிக்க முடியாதிருந்தான்.

"நல்லது" என அவன் கூறவும், கிராமத்தவர்கள் அவனது சுபாவத்தைப் புரிந்துகொண்டனர்.

"என்ன நல்லது?" கிராமத்துத் தலைவன் கோபத்துடன் கத்தினான்.

"நீங்கள் தேடுகிற மனிதன் குறித்து எமக்குத் தெரியாதென்று நான் சொன்னேன் அல்லவா? நீங்கள் எம்மை நம்பவில்லை. இப்பொழுது எங்களிலொருவரைப் பலியெடுத்துவிட்டீர்கள். இனி நாங்கள் என்ன சொல்வது?"

கட்டளைத் தளபதிக்கு பதிலாகச் சொல்ல எதுவுமிருக்கவில்லை. அடுத்ததாகச் செய்ய வேண்டியது என்ன என்பதைத் தீர்மானிக்க முடியாது திரும்பிய அவன் இராணுவத்தினரை அழைத்தான்.

"நாங்கள் முன்னே செல்வோம். கொலைகாரன் அடுத்த கிராமத்தில் ஒளிந்திருக்கக் கூடும். காலத்தை வீணாக்க முடியாது. முன்னே செல்வோம்."

கிராமத்தவர்களை நோக்கித் திரும்பிய அவன் கத்தினான்.

"நாங்கள் அந்த நாசகாரனைத் தேடிக் கண்டுபிடிப்போம். ஒளிந்திருக்கும் இடத்திலிருந்து வெளியே எடுப்போம். அவனது செவி, நகங்கள், கண்களைப் பிடுங்குவோம். அவனது தாய், மனைவி, பிள்ளைகள் முன்னிலையில் அவனை அம்மணமாக்கித் தொங்கவிடுவோம். அதன் பிறகு பிணத்தை நாய்களுக்கு உண்ணத் தருவோம். நான் சொல்வதைச் செய்யக் கூடியவன்."

ஜீப் வண்டிகளும் யுத்த தாங்கிகளும் அம் மனிதனைத் தேடிச் செல்ல வேறு திசைக்குத் திரும்பின.

அவர்கள் இன்னும் கூட அம் மனிதனைத் தேடுகின்றனர். அவன் எங்கேயாவது ஒளிந்திருக்கக் கூடுமென அவர்கள் நம்புகின்றனர். ஆனால் எங்கே? தேசத் தலைவரின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டிருந்த மக்களது இதயங்கள், அம் மனிதனைப் பற்றிக் கதைக்கப்படுவதைக் கேட்கும்போதெல்லாம் வேகமாகத் துடித்தன. ஒரு காலத்திலும் இருந்திராத வண்ணம் காவல்துறை வளையங்கள் அதிகப்படுத்தப்பட்டிருந்தன.

புதிய ஜனாதிபதி, இனத்தின் இரண்டாவது தந்தை, இனத்தின் நிறுவுனரது பாதையை அடியொற்றி தனது கோத்திரத்தைச் சேர்ந்த கூலிப்படைக் கொலைகாரர்களையும் உளவாளிகளையும் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர்களாக நியமித்தார். தனது குலத்தைச் சேர்ந்தவர்களையே பாதுகாப்புப் பிரிவுகளில் நியமித்தபோதிலும் கூட இனத்தின் இரண்டாவது தந்தை, தனது மாளிகையிலிருந்து வெளியே செல்ல விரும்பவில்லை. அவர், தான் ஒருவராலும் கொல்லப்பட முடியாத சாகாவரம் பெற்ற நபரொருவர் என அறிக்கையொன்றை வெளியிட்டார். ஆனால் அவர் மாளிகையின் பாதுகாப்பு இடமொன்றில் ஒளித்திருந்தார். எவ்வளவுதான் பாதுகாப்பு வளையங்கள் இருந்தபோதிலும், திடீரென அம் மனிதன் தோன்றி தன்னைக் கொலை செய்ய இடமிருக்கிறது என்ற சந்தேகம் அவருக்குள் இருந்தது.

இப்போதும், தேச மக்களின் எதிர்பார்ப்பான அம் மனிதனை, மக்கள் இல்லையெனச் சொன்னபடி, பார்த்திருக்கின்றனர்.

*********************

எழுத்தாளர் பற்றிய குறிப்பு

ஈ.பீ.டொங்காலா - E.B. Dongala (Emmanuel Boundzéki Dongala)

1941 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி கொங்கோ குடியரசில் பிறந்த எழுத்தாளர் ஈ.பீ.டொங்காலா ஒரு இரசாயனவியலாளர் ஆவார். தனது ஆரம்பக் கல்வியை கொங்கோ குடியரசின் தலைநகரில் கற்ற இவர், தனது உயர்கல்வியையும் பட்டப்படிப்பையும் அமெரிக்காவில் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து பிரான்ஸுக்குச் சென்ற இவர் அங்கு சேதன இரசாயனவியலில் பி.எச்.டி (PhD) பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்த பின்னர் கொங்கோ குடியரசுக்குத் திரும்பி வந்து, அங்கு 1998 ஆம் ஆண்டுவரை ஆசிரியராகக் கடமையாற்றினார். அக் காலப்பகுதியில் அங்கு இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட இவர், தனது நண்பரும் எழுத்தாளருமான பிலிப் ரூத்தின் உதவியோடு தற்போது அமெரிக்காவில் குடியேறி அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றி வருகிறார்.

ஃப்ரெஞ்ச் மொழியில் எழுதி வரும் எழுத்தாளர் டொங்காலாவின் படைப்புக்கள் இதுவரையில் பன்னிரண்டுக்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல பிரபல இதழ்களில் கட்டுரைகளையும், ஆக்கங்களையும் எழுதி வரும் இவர், இதுவரையில் நான்கு நாவல்களையும், ஒரு சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். இவரது தொகுப்புக்கள், சர்வதேச விருதுகள் பலவற்றைப் பெற்றுள்ளதோடு, இவரது சிறுகதைத் தொகுப்பான Jazz et Vin de Palme ( Jazz and Palm Wine) எனும் தொகுப்பு கொங்கோ குடியரசால் தடைசெய்யப்பட்டது.

இவரது, குழந்தைப் போராளிகளைப் பற்றிய விருது பெற்ற நாவலான ‘Johnny Mad Dog’ 2008 ஆம் ஆண்டு இதே பெயரில் திரைப்படமாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

'மனிதன்' எனும் இச் சிறுகதை தடைசெய்யப்பட்ட சிறுகதைத் தொகுதியிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட ஒரு கதையாகும்.

மேலே செல்க...(go to top)
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

   
எங்களைப் பற்றி  
|  விதிமுறைகள்  |  விளம்பர உதவி  |  நன்கொடை  |  தள வரைபடம்

© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)

  </