வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

 

 
     
     
     
   
வலது புறம் செல்லவும்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


அகத்தியன்

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் 90 களில் முக்கியமாக பேசப்பட்டவர் இயக்குனர் அகத்தியன். இவரது இயற்பெயர்கருணாநிதி என்பதாகும். இவரதுசொந்த ஊர் தஞ்சாவூர்
மாவட்டம் பேராவூரணி ஆகும். இவரதுமுதல் படம் ரவிராகுல் நடித்த "மாங்கல்யம் தந்துனானே "என்ற படமாகும் இந்தபடம்1991 ஆண்டு வெளிவந்தது. 1993 ஆண்டு பிரசன்னா மதுமதி ஜோடியாக நடித்த "மதுமதி' வெளிவந்தது. இந்தப் படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வில்லனாக நடித்தார். மூன்றுஆண்டுகள் டைவெளிக்குபின்னர்1996
இல் சிவசக்தி பாண்டியன் தயாரிப்பில் அஜித்-சுவாதி ஜோடியாக நடித்த வான்மதி"
படத்தை இயக்கினார்.

தேவா இசையில் இந்தப்படத்தின் பாடல்கள் ஹிட்டாகின. அதே1996 ஆண்டு வெளிவந்த
"காதல்கோட்டை"படம் தமிழ்திரை உலகத்தை இவர்பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தது. படம்மிகப்பெரிய வெற்றியை
கொடுத்தது .இந்தப்படத்திற்க்காக அகத்தியனுக்கு சிறந்த இயக்கம்
மற்றும் சிறந்த திரைக்கதைக்கான இரண்டு தேசிய விருதுகள் கிடைத்தன. அகத்தியனுக்கு மட்டும்மல்லாமல் அஜித்துக்கும் தேவயானிக்கும் சிவசக்திபாண்டியனுக்கும் இந்தப்படம்ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம். இந்தப்படம் தமிழ்சினிமாவின் டிரென்ட் செட்டராக அமைந்தது. பின்னர் இதே ஆண்டில்
தீபாவளிக்கு வெளியான "கோகுலத்தில் சீதை"படம் மூலம் மீண்டும் தான்
ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்தார் . இந்தப்படமும் மிகச்சிறப்பான படமாக அமைந்தது.

நடிகர் கார்த்திக்கும் இந்தப்படம் பேர் சொல்லும் விதமாக அமைந்தது.
இந்தப்படத்தில் கார்த்திக்கின் கதாபாத்திரம் மிக அருமையாக அமைக்கப்பட்டிருக்கும்.

கார்த்திக்,மணிவண்ணன்மற்றும்
சுவலட்சுமி ஆகியோர் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்கள்.1997 இல் "விடுகதை வெளியானது. 1998 இல்பிரசாந்த் இஷாகோபிகர் நடிப்பில் வெளிவந்த "காதல் கவிதை" நல்ல பெயர்வாங்கி
தந்தது. இளையராஜா இசையில்இந்தப்படத்தின்
பாடல்கள் மிகச்சிறப்பாக இருந்தன.
அதன் பின்னர்ஹிந்தியில் இரண்டு
படங்கள் இயக்கினார் . மீண்டும் 2002 இல் "காதல் சாம்ராஜ்யம்" என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். பின்னர் 2004 இல் ஜெய்ஆகாஷை வைத்து "ராமகிருஷ்ணா" 2005 இல் நந்தாவை வைத்து "செல்வம்" என்ற படத்தை இயக்கினார்.

அகத்தியன் கடைசியாக எடுத்த படம்
விக்ராந்த், பாரதி நடிப்பில் வெளிவந்த
"நெஞ்சத்தைகிள்ளாதே". சரவணன் நடித்த "சந்தோசம் " படத்தின் திரைக்கதை இவர் எழுதியதே. சில படங்களில் பாடல்களும் எழுதி உள்ளார்.

இவரின் ஒரு மகளான விஜயலட்சுமி
சென்னை 28 , கற்றது களவு, அதே
நேரம் அதேஇடம், அஞ்சாதே ஆகிய
படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியோடு
"சுல்தான் திவாரியார்" அனிமேஷன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவரது இன்னொரு மகள் நிரஞ்சனி
costume designer ஆக இருக்கிறார்.

இன்னொரு மகளான மக்கள் தொலைக்காட்சி கார்த்திகாவின்
கணவர் திரு விஷால் நடித்த "தீராத விளையாட்டுப்பிள்ளை" படத்தின் இயக்குனர் ஆவார். அகத்தியன் தற்போது "அவர்களும் இவர்களும்" என்ற படத்தில்
நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் ஏற்கனவே கோகுலத்தில் சீதை
படத்தில் ஒரு காட்சியில் தோன்றினார்.

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS வலது புறம் செல்லவும் TS அகத்தியன் தொடர்கள் வாயில்

வலது புறம் செல்லவும் - 1


இயக்குனர் அகத்தியன் 28-03-2011, 08.00 PM

கடவுளிடம் அவரின் உதவியாளர்கள் வந்து நின்றார்கள். "என்ன?’’ என்று கேட்டார். மனிதர்களைப் படைத்து, அவர்களுக்கு நன்மை செய்வதாகவே அனைத்தையும் படைத்து விட்டீர்கள். அவர்கள் உங்களை மதிக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு கெட்டதையும் அவர்களுக்காக படைத்து விடுங்கள் என்றனர். கெட்டதை அவர்களே படைத்துக் கொள்வார்கள். கீழே எட்டிப் பாருங்கள் என்றார் கடவுள். கீழே எட்டிப்பார்த்தனர்.

"மனிதர்கள் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தனர்’’.

செய்முறை மட்டும் தான் நாம். மூலப்பொருட்கள் எல்லாம் கடவுள்தான். இதற்காகத்தான் இந்த மூலப்பொருள் என்று கடவுள் படைக்கவில்லை. ஆனால் இது இதற்குப் பயன்படும் என்று கண்டுபிடித்தது மனிதனின் புத்திசாலித்தனம்.

நிலையாக ஓரிடத்தில் மனிதன் தங்கிவாழ ஆரம்பித்த பின் தேவைக்காக சேமிக்க ஆரம்பித்தான். பழ உணவுகளைப் பானையில் இட்டு எதிரிக்குப் பயந்து பூமியில் புதைத்து வைத்தான். அடையாள மிட்டான். திடீரென எதிரிகளின் தாக்குதல் நிகழ இடம் பெயர்ந்தான். மீண்டும் தன் இருப்பிடம் வந்து அடையாளம் வைத்ததைத் தோண்ட மது உருவானது. காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது. இங்கே மனிதனின் புத்திசாலித்தனம் என்று மேலே சொன்னதை மறுக்கத்தான் வேண்டியிருக்கிறது. அதற்கும் மேலே சொன்ன "கடவுள் படைப்பில் எல்லாம் நல்லது’’ என்பதும் தவறுதான். எல்லா நன்மைக்குள்ளும் தீமை வைத்துதான் கடவுள் படைத்திருக்கிறார்.

இங்கிலாந்து, பிரான்ஸ் , போர்ச்சுகீசிய நாடுகள், ரோம சாம்ராஜ்யம், மெசபெடோமியா பகுதிகள் இங்கெல்லாம் முறையாக ஒயின் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் போதையும் கலந்தார்கள். அது ராஜரீக பானம் என்றழைக்கப்பட்டது.

அரண்மனை விருந்துகளின் வி.வி.ஐ.பிக்களுக்கு மட்டுமே இந்த "ராஜரீக’’ பானம் பரிமாறப்பட்டது. பின்பெரும் வணிகர்கள் அயல்நாட்டுத் தூதர்கள் என அது சற்று தன் எல்லையை விரித்துக் கொண்டது. தயாரித்தவன் அதைக் குடித்தாலும் தலை சீவப்பட்டது. அரண்மனையில் அதைக் கண்டுபிடித்தவனோ தயாரித்தவனோ வயதாகி ஓய்வு பெறும்போது அவர்கள் உயிரோடு நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். பிரான்சில் ஓய்வு கொடுத்து அனுப்பும்போது நான்கு விரல்களும் துண்டிக்கப்பட்டன. இவ்வாறெல்லாம் மது ஒரு கௌரவம் மிக்க பானமாகக் கருதப்பட்டது.

எல்லைகளில் குளிரில் காவல் காக்கும் வீரர்களுக்காக சாராயம் தயாரிக்கப்பட்டது. அதை பீப்பாய்களில் ஊற்றி, முத்திரை பதித்து ஒருவருக்கு இத்தனை அவுன்ஸ் என்று அளந்து கொடுத்தார்கள்.

மரபுகளை மீறுபவன்தான் மனிதன். அதைப்பிடித்து இதைப்பிடித்து காக்காய் பிடித்து தயாரிப்பு ரகசியத்தைக் கண்டறிந்தான் ஒருவன். கும்பலாக காட்டுக்குள் சென்று, காய்ச்சி, மாதக்கணக்கில் உருண்டு கிடந்து கை கால் தளர்ந்ததும் இல்லம் திரும்பினார்கள். உழைக்க மனித சக்தி இல்லையென்றதும் யோசித்த அரச வம்சம் முத்திரையோடு அலுமினியக் குழாய்களில் சரக்கை அடைத்து தானியமோ, பட்டுப்புழுக்களோ, துணியோ கொடுத்து இரவுகளில் வந்து வாங்கிச் செல்லலாம் என்றது. பட்டுப்புழுக்கள் கொடுப்பவருக்கு அளவின்றி குழாய்கள் கிடைத்தன. பட்டுப்புழுக்களுக்காகவும் பருத்திக்காகவும் மனிதர்கள் அலைய ஆரம்பித்தனர். உழைப்புக்கு ஊதியம் சாராயம் என்றானது.

முழுமையான நாகரீகம் தோன்றியதும் எல்லா விருந்துகளிலும் மது அனுமதிக்கப்பட்டது. 17, 18ம் நூற்றாண்டு வரை கிடைத்தற்கரிய பொருள் மது என்பதால் அதற்கு கௌரவம் கொடுத்து குடித்தார்கள். அப்படியே அனுபவித்தார்கள். விழாக் காலங்களில் மதுவிருந்து கொண்டாடினார்கள். மீண்டும் விழாக் காலத்தை எதிர்நோக்கினார்கள்.

நாமறிந்த வரலாறுகளில் வெள்ளையர்களின் விருந்து என்றால் மது பிரதானம். இப்படி கௌரவத்தின் அடையாளமாக இருந்த மது மாறத் துவங்கியது மொகலாயர்களால். ஓபியம் கிடைத்தாலும் சரி சாராயம் கிடைத்தாலும் சரி முழுநேர உணவாக ஆகிப்போனது அவர்களுக்கு. குடிப்பதும் தின்பதும் மட்டுமே அரசலட்சணம். இப்போது அது புருஷலட்சணம். அறுபதுகள் வரை புருஷலட்சணத்திற்கு பர்மிட் என்ற ஒன்று தேவைப்பட்டது. ரேசனில் குடிக்கும்போது ஆசை இருந்தாலும் அளவாய்க் குடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

மறப்போர் புரியும் வீரர்களுக்கு போர்க்காலங்களில் பசியைப் பொருட்படுத்தாமல் வெறிகொண்டு எதிரியைத் தாக்க மது கட்டாயமாகப் பரிமாறப்பட்டது. பின்னாளில் அதே மறவர்கள் ஜாதிக் கலவரங்களில் குடியை பிரயோகித்தனர். ஒரே ஊருக்குள் பிரிந்து சண்டை போட்டுக் கொள்ளும் போது கூட இருதரப்பும் குடித்தனர். குடித்தால் வீரம் வரும் என்று விதைக்கப்பட்டது.

இன்னும் பின்னால் பர்மிட் எல்லாம் தூக்கிப்போட்டு விட்டு கடையில் வாங்கலாம் பாரில் குடிக்கலாம் என்றானபோது குடிப்பவக்ளின் எல்லை விரிந்தது. வயது வித்தியாசமின்றி குடிப்பழக்கம் தொற்றியது.

வானொலி இல்லாக் கிராமங்களில் வேலை இல்லாதோர் சாராயம் குடித்து விட்டு பகல் இரவு என்று சீட்டாடினார்கள். நகரங்களில் வருமானம் இல்லாதோர் அதற்காகக் கவலைப்பட்டுக் குடிக்க ஆரம்பித்தனர். வசதி உள்ளவர்கள் குடித்துவிட்டு "கிளப்’’ புகளில் சீட்டாடுவதை வேலையாக மாற்றிக்கொண்டனர்.

அரசின் உறவினர்கள் காய்ச்ச, அரசு அதை விற்க ஒரு பழக்கம் உருவானபோது மதுக்கடை இருக்கும் இடத்தில் திருவிழாக் கூட்டம் தோன்றியது. முகவரி கேட்பவருக்கு அடையாளமாக இருந்த கோவிலும், பள்ளிக்கூடமும், சைக்கிள் கடையும் மாறிப்போய் மதுக்கடை என்றானது. மதுக்கடைகளில் குடிக்கும் போதெல்லாம் வெட்டிப்பேச்சும், தகராறும் என்றாகிப்போனது. ரோட்டில் விழுந்து கிடப்பதும் காலையில் எழுந்து தள்ளாடி வீடு போவதும் சராசரிகளின் சராசரியானது. காலை ஆறுமணிக்கு குடிப்பவர்களுக்காக தெருவோரங்களில் அரசியல்வாதிகளால் மதுவிற்பனை அமோகமானது.

குடிப்பவன் வீட்டிலும் பெண்கள் இருந்தார்கள். விற்பவன் வீட்டிலும் பெண்கள் இருந்தார்கள். குடிப்பவனைத் திட்டினாள், விற்பவனை வாழ்த்தினாள். குடிப்பவன் குழந்தைகள் பட்டினி கிடந்தனர். வேலைக்கு சென்றனர், விற்பவன் குழந்தைகள் கறிச்சோறு தின்றனர். கான்வென்ட் சென்றனர். அரசு எழுபத்தைந்து ரூபாய்க்கு குவாட்டரை ஒருவனுக்கு விற்று ஒரு ரூபாய்க்கு அவனுக்கு அரிசி கொடுத்தது. ஸ்டார் ஓட்டல்களில் காக்டெய்ல் பார்ட்டி வைத்து விழாக்களுக்கு படித்தவர்களை அழைத்தார்கள். மாநாடுகளுக்கு குவாட்டரும் பிரியாணியும் கொடுத்து அரசியல்வாதிகள் மக்களை அழைத்தார்கள். ரேசன் கடைகளிலும் பொது இடங்களிலும் போராட்டம் நடத்த மது லஞ்சமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. திருமணங்களுக்கும் மரண நிகழ்வுகளுக்கும் குடிப்பதற்காக ஒரு கூட்டம் வந்தது. ஒரு குவாட்டர் தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறிப்போனது. ராஜரீக பானம் தனது ராஜபாட்டையில் தேரேறி வந்து, இறங்கி, நடந்து, தடுமாறி, லஞ்சமாக மாறி அழுக்காகி ரோட்டில் விழுந்து கிடக்கிறது.

தமிழகமெங்கும் குடிப்பதும் சண்டையிடுவதும் பண்பாட்டின் அடையாளச் சின்னங்களாக மாறிப்போயின. திருமண மேடையில் குடித்துவிட்டு வந்த ஆணை உதறித் தள்ளி ஒரு பெண் எழுந்தாள். எங்கள் கணவர்கள் குடிப்பதற்கு கடை இல்லை என்று பெண்கள் போராட்டம் நடத்தினர். மனைவிகளும் பிள்ளைகளும் அப்பன்களுக்கு டாஸ்மாக் போய் வாங்கி வரும் புதிய கலாச்சாரம் கண்டது தமிழகம். தமிழனின் விருந்தோம்பலில் தவறாமல் மது இடம் பெற்றது. சில இல்லங்களில் தூங்கப் போகும்போது பெண்கள் மது அருந்தும் பழக்கம் உருவானது. வீடுகளில் அரிசி, சர்க்கரை, உப்பு போல மதுவும் எப்போதும் இருக்க இடம்பிடித்தது. யாருமே வீட்டில் இல்லாதபோது அதில் கொஞ்சம் குடித்துவிட்டு தண்ணீர் ஊற்றி வைக்க சிறுவர்கள் கற்றுக் கொண்டார்கள். உன் தங்கையின் "அண்டர்வேரை" நான் போட்டிருக்கிறேன் என்று போதையில் நண்பனிடம் சொன்னவன் அங்கேயே கொலை செய்யப்பட்டான். டாஸ்மாக் வாசலில் கட்டிங் என்ற புதிய கலைச் சொல் உருவாகி மொழிக்கு வளம் சேர்த்தது. மதுக்கடை ஓரங்கள் சிறுநீர்க் குளங்களாக மாறிப்போயின. மதுக்கடையின் அருகிலேயே அருந்துமிடங்கள் உருவாக்கப்பட்டு இந்நாட்டின் இளவரசர்களுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டன. அங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு மனிதர் எரிபொருள் நிரப்பிக்கொண்டனர். காவல்துறை வீதிகள் தோறும் "do not mix drink and drive" என்று பலகை வைத்தது. வண்டியை நிறுத்திவிட்டு பாரில் குடிக்கும் வரை காத்திருந்து வீடு திரும்பும்போது சந்துகளில் நின்று சட்டம் தன் கடமையைச் செய்து கையை பைக்குள் விட்டுக் கொண்டது. நானும் இந்தக் கூட்டத்தில் ஒருவனாக எங்கோ ஒரு மூலையில் அமர்ந்து இதை எழுதுகிறேன். இப்படி கௌரவமாக ஆரம்பித்த குடி மனிதனின் மொத்த கௌரவத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறது.

இதனுள் மனிதர்களும் தொலைந்து கொண்டிருக்கிறார்கள். தொலைந்தவர்களை அடுத்தவாரம் தேடுவோம். பின் தொலையாமல் இருப்பது எப்படி என்பதையும் ஆராய்வோம்... கையில் மதுவோடுதான்.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.