வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


எஸ்.வி. வெங்கட்ராமன் -11

பி.ஜி.எஸ். மணியன்  

தமிழிசைக்கு தரமான பாடல்கள்...

"திருமழிசை ஆழ்வார்" - எஸ்.வி. வெங்கட்ராமன் இசை அமைப்பில் வெளிவந்த அடுத்த படம் இது.

இப்படி ஒரு படம் வந்ததா என்ற சந்தேகம் அனைவர் மனத்திலும் எழுவதில் ஆச்சரியமே இல்லை.

"நந்தனார்" - படத்தின் வெற்றிக்குப் பிறகு "இசை முரசு" எம்.எம். தண்டபாணி தேசிகர் அவர்கள் நடித்த கடைசி படம் இது. பொருளாதாரச் சிக்கல்களினால் நீண்ட காலம் கிடப்பில் இருந்து ஒரு வழியாக 1949 -இல் வெளிவந்த படம் வந்த சுவடே தெரியாமல் மறைந்தும் போனது.

பாபநாசம் சிவன் - எஸ்.வி. வெங்கட்ராமன் - எம்.எம். தண்டபாணி தேசிகர் என்ற மூவர் கூட்டணியில் அருமையான தமிழ் இசைப் பாடல்கள் தமிழ் இசை உலகுக்கே கிடைத்தன. பாபநாசம் சிவன் அவர்கள் மீது பெருமதிப்பு வைத்திருந்த தேசிகர் ஒவ்வொரு பாடலையும் வெகுவாக அனுபவித்துப் பாடி இருந்தார். இந்தப் படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு மற்றும் ஒலிநாடாக்கள் இன்றும் கிடைக்கின்றன என்பது குறிப்பிடப் படவேண்டிய விஷயம். தமிழ் இசை இயக்கத்தினர் கட்டாயம் பயன்படுத்திக்கொள்ளவேண்டிய பாடல்கள் இவை.

தமிழசை வளரவேண்டும் என்று வாய் நிறையப் பேசுகிறோம். ஆனால் இப்படிப்பட்ட பாடல்களை நாம் புறக்கணித்தே விடுகிறோம். திரைப்பட சங்கீதம் என்று இவற்றை புறக்கணித்து விடக்கூடாது. தமிழிசைக்கு அருந் தொண்டாற்றியவர் தேசிகர். அவர் பிரபலப் படுத்திய பாடல்கள் அநேகம். அப்படி இருக்க அவர் பாடிய "திருமழிசை ஆழ்வார்" படப் பாடல்களை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விடுவது இசை உலகுக்கே மிகப் பெரிய நஷ்டம்.
பாபநாசம் சிவனின் பாடல்களுக்கு கன ராகங்களை அழுத்தமாகக் கையாண்டு எஸ்.வி. வெங்கட்ராமன் மெட்டமைக்க அவற்றை வெகு அற்புதமாகப் பாடி இருக்கிறார் தண்டபாணி தேசிகர் அவர்கள்.

"இன்றே பிறவிப் பயன் அடைந்தேன்" - சிம்மேந்திர மத்யமத்தில் அமைந்த இந்தப் பாடலைக் கேட்பவர்கள் கட்டாயம் பிறவிப் பயன் அடைந்தேன் என்று நிறைவடைவார்கள். கல்யாணி, ஷண்முகப்ரியா, சஹானா - ஆகிய ராகங்களில் அமைந்த ராகமாலிகைப் பாடல் "வாராமல் இருப்பாரோ" - இன்னொரு அற்புதமான பாடல்.

சிவனின் பாடல்கள் மட்டும் என்று அல்ல. திருமழிசை ஆழ்வாரின் பாசுரங்களும் கூட அருமையான முறையில் கேட்பவர் செவிகளை நிறைக்கின்றன. சில பாடல்களின் நேரம் வெறும் ஒன்றரை நிமிடங்கள் தான். அவற்றைக் கூட இசை அமைப்பாளரும், பாடகரும் மனதில் நிற்கச் செய்துவிடுகிறார்கள். மோகனம், காபி, தேஷ், சிந்துபைரவி ஆகிய ராகங்களையும் வெகு சிறப்பாகக் கையாண்டிருக்கிறார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

என்ன செய்து என்ன? படம் வந்த சுவடே தெரியாமல் மறைந்து போனதால் காலத்தை வென்று நிலைத்திருக்க வேண்டிய பாடல்கள் இன்று அகில இந்திய வானொலி நிலையத்தினரால் கூடப் புறக்கணிக்கப் பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.

இதற்குப் பிறகு வெங்கட்ராமனின் இசை அமைப்பில் "நவ ஜீவனம்", பாலாஜியின் "லைலா மஜ்னு", "இதய கீதம்" ஆகிய படங்கள் வந்து போயின என்று தான் சொல்லவேண்டும். இதனால் பாடல்களின் தரம் பற்றி அறிய முடியவில்லை.

அதன் பிறகு சி.ஆர். சுப்பராமன் அவர்களுடன் இணைந்து "பாரிஜாதம்", "வனசுந்தரி" ஆகிய படங்களுக்கும் இசை அமைத்திருந்தார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

இவற்றில் இருபத்தியொரு பாடல்கள் நிறைந்த "பாரிஜாதம்" படத்தில் பதினைந்து பாடல்களுக்கு சி.ஆர். சுப்பராமன் இசை அமைக்க ஆறு பாடல்களுக்கு இசை அமைத்தார் எஸ்.வி. வெங்கட்ராமன். மிஸ்ர பஹாடி, மிஸ்ரா மாண்ட், மிஸ்ர பீலு, மிஸ்ர பங்களா, சிந்துபைரவி ஆகிய ஹிந்துஸ்தானி ராகங்களை இந்தப் படத்தில் பயன்படுத்தி இருக்கிறார் என்று அறிய முடிகிறது..

அதே சமயம் ஜனரஞ்சகமான இசையையும் தன்னால் கொடுக்க முடியும் என்று அடுத்து வந்த படம் ஒன்றின் மூலம் நிரூபித்துக் காட்டினார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

"திருவிதாங்கூர் சகோதரிகள்" லலிதா, , பத்மினி, ராகினி மூவரும் எஸ்.வி. சகஸ்ரநாமத்துடன் இணைந்து நடித்த "சிங்காரி" படத்துக்கும் அப்போதைய வழக்கப் படி இரண்டு இசை அமைப்பாளர்கள். படத்தில் இடம் பெற்ற பதினான்கு பாடல்களில் ஒன்பது பாடல்களுக்கு டி.ஏ. கல்யாணம் அவர்கள் இசை அமைக்க ஐந்து பாடல்களுக்கு எஸ்.வி. வெங்கட்ராமன் இசை அமைத்தார்.

இந்தப் படத்தில் இடம் பெற்ற எஸ்.வி. வெங்கட்ராமன் இசை அமைப்பில் ஒரு நகைச்சுவை இருகுரலிசைப் பாடல், "ஒரு சாண் வயிறே இல்லாட்டா இந்த உலகினில் ஏது கலாட்டா" - அனைவராலும் பேசப்பட்டது. படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராவிட்டாலும் 1951 வரை தொடர்ந்து பிஸியாவே இயங்கி வந்தார் எஸ்.வி. வெங்கட்ராமன்.

அந்த நேரத்தில் தான் 1952 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் "பராசக்தி" படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானார். அவரது ஆரம்பகாலப் படங்களில் ஒன்றான "கண்கள்" படத்திற்கு எஸ்.வி. வெங்கட்ராமன் இசை அமைத்தார். இந்தப் படப் பாடல்களில் இப்போது - அதுவும் - எப்போதாவது ஒரு முறை கேட்க முடிவது "ஆளு கணம் ஆனா மூளை காலி" என்ற ஜெ. பி. சந்திரபாபுவின் பாடல்தான். இந்தப் படத்தில்"பிஸ்மில்லாஹ் ரஹ்மான்" என்று துவங்கும் இஸ்லாமியப் பாடலை எஸ்.வி. வெங்கட்ராமனே பாடினார்.

அதன் பிறகு புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் அவர்கள் எழுதிய "அன்னா கரீனா" நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட "பணக்காரி" என்ற படம் எஸ்.வி.வெங்கட்ராமனின் இசையில் வெளிவந்தது. நாகையா - டி.ஆர். ராஜகுமாரி இணைந்து நடித்த இந்தப் படத்தில் வில்லனாக எம்.ஜி.ஆர். நடித்தார். பாடல்களை பாபநாசம் சிவன், தஞ்சை ராமையாதாஸ், லக்ஷ்மணதாஸ், குயிலன் ஆகியோர் எழுத எஸ்.வி. வெங்கட்ராமன் இசை அமைத்தார்.. இசை அனைவரும் ரசிக்கும்படியாக அமைந்திருந்தாலும் எம்.ஜி.ஆர். "ஆன்ட்டி-ஹீரோ" வாக வந்ததாலோ என்னவோ படம் படுதோல்வி அடைந்தது. இதற்கு பிறகு எம்.ஜி.ஆர் படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு எஸ்.வி. வெங்கட்ராமனுக்கு கிடைக்கவே இல்லை.

வருடம் 1954 .

ஐம்பத்திரண்டாம் ஆண்டு சிவாஜி கணேசன் திரை உலகில் நுழைந்தார் என்றால் அவருக்கு முன்பே ஒரு துணை நடிகராகத் தனது வாழ்க்கையைத் துவங்கி கதாநாயகனாக உயர்ந்த "மக்கள் திலகம்" எம்.ஜி. ஆர். அவர்கள் "மலைக்கள்ளன்" படத்தின் மூலமாகவும் ....

நடிகர் திலகம் அவர்கள் "மனோகரா" படத்தின் மூலமாகவும்....-

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக உயர்ந்து விட, அதன் காரணமாக அது வரை நிலவி வந்த தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் ஒரு முடிவுக்கு வந்து நடிகர்களின் ஆதிக்கம் தோன்ற ஆரம்பித்தது இந்த ஆண்டில் தான்.

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.