வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


எப்போதும் தமிழ் சமூகத்திற்கு ஒரு சாபக் கேடு உண்டு. கலைஞர்களையோ, படைப்பாளிகளையோ அவர்கள் வாழும் காலத்தில் நாம் நாம் அறிந்துக் கொள்வதே கிடையாது. தான் வாழும் காலத்தில் பத்து கோடி மக்கள் தொகை கூட இல்லாத காலத்தில் ஷேக்ஸ்பியர் கொண்டாடப்பட்ட விதமும், முப்பது கோடி மக்கள் தொகை கொண்ட தேசத்தில் பாரதியார் கொண்டாடப்பட்ட விதமும் நாம் அறிந்ததே. இறந்தப் பின்னரும் கூட நாம் ஒரு சில கலைஞர்கலைதான் கொண்டாடுகிறோமே தவிர திறமை படைத்த அனைவரையும் கொண்டாடுவதில்லை. அந்த வகையில் தமிழ் திரைப்படத் துறையில் சாதித்த ஒரு சில இசைக் கலைஞர்களை பற்றியக் கட்டுரைகள் இந்தப் பகுதியில் இடம்பெறப் போகிறது.

"சிகரம் தொட்டவர்கள்". திரு. பி.ஜி. எஸ். மணியன் அவர்கள் எழுதவிருக்கும் இந்தத் தொடர் குறைந்த பட்சம் உங்களுக்குள் ஒரு சிறு அதிர்வையாவது, அல்லது அந்தக் கலைஞர் பற்றிய ஒரு புரிதலையாவது ஏற்படுத்தும் என்பது எங்கள் நம்பிக்கை.

 

 

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


பி.ஜி.எஸ். மணியன்

இலக்கியத்திலும், இசையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ள அவர், இசையில் ஓரளவிற்கு பரிச்சயமும் உள்ளவர். ஆன்மீக கட்டுரைகளை மதராஸ் அய்யப்ப சேவா சங்கம் (கச்சாலீஸ்வரர் கோவில் - அரண்மனைக்கார தெருவில் - அமைந்துள்ளது) வெளியிட்ட ஆண்டு விழா மலர்களில் ஆன்மீகக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். தமிழில் "மகாலக்ஷ்மி சுப்ரபாதம்" எழுதி வெளியிட்டுள்ளார்.

அவற்றுக்கு அவரே ராகங்களும் அமைத்து இருக்கிறார். (தற்போது அவரது சொந்த உபயோகத்துக்கு கூட ஒரு புத்தகமும் இல்லாமல் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆன்மீக சொற்பொழிவுகள் சிலகாலம் செய்துள்ளார்.

அரக்கோணம் அருகில் உள்ள நெமிலி பாலா பீடத்தின் சார்பாக "சொற்பொழிவு செம்மல்" என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு பழைய திரைப்படங்களில் ஆர்வம் அதிகம்.

இனி தான் எழுதப் போகும் தொடர் பற்றி அவரே கதைக்கிறார்.

பொழுது போகாமல் சமீபத்தில் ஒருநாள் சிந்தித்துக் கொண்டிருந்த போது அந்தக்காலத்து இசை அமைப்பாளர் டி. ஜி. லிங்கப்பா அவர்களை பற்றிய தகவல்கள் கிடைத்தன.

அவர் போன்று அந்தக்காலத்தில் சாதனை படைத்த இசை அமைப்பாளர்கள் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.

அறிவியல் வளர்ச்சி குறைவான அந்தக்கால கட்டத்தில் அவர்கள் இசை அமைத்த பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிலைத்து நிற்கின்றன.

அவர்களை பற்றி "சிகரம் தொட்டவர்கள்" என்ற தலைப்பில் தமிழ் ஸ்டுடியோவில் எழுதலாமே என்று தோன்றி இருக்கிறது. அதற்கு உங்கள் ஆதரவும் தேவை. வாரந்தோறும் கட்டுரைகளைப் படித்து விட்டு உங்கள் மேலான கருத்தகளை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS சிகரம் தொட்டவர்கள் தொடர்கள் வாயில்


இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 6

பி.ஜி.எஸ். மணியன்  pgs.melody@gmail.com

"ராமநாத அய்யரைப் பொறுத்தவரையில், அவர் சொல்கிற சங்கதிகள் நம் குரலில் வந்தே தீரவேண்டும். அந்த சங்கதிகள் வராமல் நம்மை விடமாட்டார்" - பின்னணிப் பாடகி ஜமுனாராணி.

ஆர்யாமாலாவின் அபரிமிதமான வெற்றிக்குப் பிறகு ஸ்ரீராமுலு நாயுடு எம்.கே. தியாகராஜா பாகவதரை கதாநாயகனாக ஒப்பந்தம் செய்து தனது அடுத்த படத்தை துவக்கினார்.

சற்றேறக்குறைய அதே காலகட்டத்தில் பாகவதரின் சொந்தப் படமான "திருநீலகண்டர்" ஐம்பது வாரங்களைக் கடந்து வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துக்கொண்டிருந்தது.

படம்:  சிவகவி படத்தில் எம்.கே. தியாகராஜபாகவதர்.  முருகனாக இசை மேதை எஸ். ராஜம் அவர்கள்.

திருநீலகண்டர் படத்தின் இயக்குனாரான ராஜாசாண்டோ அவர்களே ஸ்ரீராமுலு நாயுடுவின் படத்தையும் இயக்குவது என்று முடிவானது.

அந்தக் காலத்தில் பாகவதரின் படம் என்றால் வசனம் எழுத இளங்கோவன் அவர்களும், பாடல்களுக்கு பாபநாசம் சிவன் அவர்களும் கண்டிப்பாக இடம் பெற்றே ஆக வேண்டும் என்பது பாகவதரின் எழுதப் படாத ஒப்பந்தம். அதன்படி பாடல்களை பாபநாசம் சிவன் அவர்கள் எழுதி இசை அமைக்க, பின்னணி  இசையை ஜி.ராமநாதன் கவனித்துக் கொள்வது என்று தீர்மானிக்கப் பட்டு "சிவகவி" படம் ஆரம்பமானது

பாடல்கள் பதிவான போது நடந்த ஒரு சம்பவம் ஜி. ராமநாதனே முழு இசை அமைப்பையும் கவனித்துக்கொள்ள வைத்தது.

பாடலை எழுதி அதற்கான மெட்டையும் அமைத்துவிட்டு தியாகராஜ பாகவதரிடம் அதனை பாடிக்காண்பித்தார் பாபநாசம் சிவன்.

கேட்டுவிட்டு,"நன்றாகத்தான் வந்திருக்கிறது. ஆனால்.. எதற்கும் ராமனாதனிடமும் இதனைக் காட்டி ஏதாவது திருத்தங்கள் இருக்கிறதா என்று கேட்டுவிடலாமே," என்றார்
தியாகராஜ பாகவதர்.

"என்னுடைய பாட்டிலேயே திருத்தம் சொல்லக்கூடிய அளவுக்கு ராமநாதன் இருக்கிறான் என்றால் அவன் நிச்சயம் நல்ல ஞானஸ்தனாகத்தான் இருக்கணும். அதனாலே, இனிமேல் நான் பாட்டை எழுதிக் கொடுக்கறதோட நிறுத்திக்கறேன். ராமநாதனே இசை அமைப்பை கவனித்துக் கொள்ளட்டும்" - என்று பெருந்தன்மையோடு மனம் உவந்து பாடல்களுக்கும் இசை அமைக்கும் பொறுப்பை ராமனாதனிடமே கொடுத்துவிட்டார் பாபநாசம் சிவன்.

"நான் எழுதற பாட்டையும் போடற ராகத்தையும் என்னைவிட சின்னவன் திருத்தறதா?" என்று நினைக்காமல் பரந்த மனதோடு - அதுவும் போட்டி பொறாமை நிறைந்த கலை உலகில் - வளர வேண்டிய இளம் கலைஞனை ஊக்குவித்து முன்னேறச் செய்திருக்கிறார் பாபநாசம் சிவன். அந்த அளவுக்கு தன்னுடைய தகுதியை ஜி.ராமநாதன் வளர்த்துக்கொண்டிருக்கிறார் என்பது கவனிக்கப் படவேண்டிய ஒன்று. வாய்ப்புகளை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய தகுதியை மட்டும் வளர்த்துக்கொள்வது என்பதில் ஒருவன் கவனம் செலுத்தி வந்தால் தானாகவே அவனை வாய்ப்புகள் தேடிவரும் என்பது இதில் இருந்து நாம் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று.

'சிவகவி" - பொய்யாமொழி என்னும் தமிழ்ப் புலவரின் கதை. தமிழ் இசை தெய்வீகம் வாய்ந்தது என்பதை நிலை நாட்டும் கதை என்பதால் பாடல்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தமையாக இருக்கவேண்டும் என்ற கவனத்துடன் ஒவ்வொரு பாடலும் அமைந்தது.

படம் வளர்ந்து கொண்டிருந்தபோது, தயாரிப்பாளர் ஸ்ரீராமுலு நாயுடுவுடன் ஏற்பட்ட மனத்தாங்கல் காரணமாக படத்திலிருந்தே விலகிக் கொண்டார் இயக்குனர் ராஜாசாண்டோ. ஆனால் அதற்காக மனம் கலந்கலாத ஸ்ரீராமுலு நாயுடு தானே படத்தை இயக்குவது என்று இறங்கினார்.

பாகவதருக்கு ஜோடியாக ஜெயலக்ஷ்மி (வீணை எஸ். பாலச்சந்தர் அவர்களின் சகோதரி), மற்றும் டி.ஆர். ராஜகுமாரி. சமீபத்தில் அமரரான திரு எஸ். ராஜம் அவர்கள், என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ . மதுரம் ஆகியோர் நடித்தனர்.

தியாகராஜ பாகவதர், பாபநாசம் சிவன், ஜி. ராமநாதன் என்ற மூவர் அணியில் அற்புதமான காலத்தை வென்ற கவித்துவமும், இசை நயமும் மிக்க பாடல்கள் பிறந்தன.

சில படங்களில் இடம் பெரும் அனைத்துப் பாடல்களுமே வெற்றி பெற்றுவிடுவதில்லை. சில பாடல்கள் ரசிகர்களின் கவனத்துக்கே எட்டாமல் மறைந்து விடுவதும் உண்டு. பிற்காலத்தில் பாகவதரின் மகத்தான வெற்றிப் படமான "ஹரிதாஸ்" படத்தில் கூட சில பாடல்கள் இப்படி அமைந்திருக்கின்றன. ஆனால் "சிவகவி" படத்தைப் பொறுத்தவரையில் படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள்தான்.

பாடல்களுக்கான ராகங்களை பாடல் வரிகளைப் பார்த்ததுமே இவை இப்படித்தான் அமையவேண்டும். அப்போதுதான் பிரபலமாகும் என்று கணித்துவிடுவதில் வல்லவராக ஜி.ராமநாதன் இருந்தார். அவரது கணிப்பு வீண்போகவில்லை.

படத்தில் ஒரு பாடல் காட்சி. குருகுலத்தில் சகமாணவியிடம் காதல் வயப்படும் கதாநாயகன் தன் மனம் கவர்ந்த மங்கையின் முகத்தை வருணித்து பாடுவதாக அமைந்த காட்சி.

இந்தக் காட்சிக்காக "முகம் அது சந்திரபிம்பமோ" என்று பல்லவியை பாபநாசம் சிவன் எழுதினர். சிந்துபைரவி ராகத்தில் மிக அருமையாக ஜி. ராமநாதன் இசை அமைக்க பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டு விட்டது. ("தமிழ் சினிமாவில் முதல் முதலில் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்படுவது என்பது சிவகவி படத்தில் தான் அநேகமாக ஆரம்பமாகி இருக்கவேண்டும்" என்று திரு. வாமனன் அவர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்.)

அப்போதெல்லாம் ஒரு பாடல் பதிவு என்பது சுலபமான விஷயம் அல்ல. இப்போது போல அப்போதெல்லாம் "டேப் ரெக்கார்டர்" வசதி எல்லாம் இல்லை. எனவே.. முதலில் இசை அமைப்பாளர் பல முறை சொல்லிக்கொடுத்து ஒத்திகை பார்த்து, அதன் பிறகு பக்கவாத்தியங்களுடன் ஒரு ஒத்திகை, அதில் திருப்தி ஆனால் மட்டுமே நேரடியாக"மைக்" முன்னே பாடல் பதிவுக்கு தயாராவார்கள். அது மட்டும் அல்ல. படச்சுருளில் இருக்கும்"சவுண்ட் நெகடிவ்"வில் தான் பாடல் பதிவாக்கப் பட்டு அதன் பிறகு ப்ரொஜெக்டர் மூலம் திரையில் ஓடவிட்டு அதில் உள்ள நிறை குறைகளை சரிபார்த்துக்கொள்வார்கள்.

சற்று நிதானித்து யோசித்துப் பார்த்தோமென்றால் ஒரு உண்மை புலனாகும். அநேகமாக ஒரு பாடல் பதிவுக்கு ஒரு நாள் கூட ஆகிவிடும். அப்படி இருக்கும் போது ஒரு படத்தில் பத்துப் பாடல்களுக்கு குறையாமல் இருக்கும். அவை அனைத்தையும் பதிவு செய்வது என்பது எவ்வளவு கடின உழைப்பு தேவைப்படும் ஒன்று. அப்படி கஷ்டப்பட்டு உழைத்து காலத்தை வென்ற பாடல்கள் எத்தனை எத்தனை அன்றைய இசை அமைப்பாளர்கள் கொடுத்திருக்கிறார்கள்...!

அந்த ரீதியில் "முகம் அது சந்திரபிம்பமோ" பாடலும் தயாரானது. பதிவு செய்யப்பட்ட பாடலை ப்ரொஜெக்டரில் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் - பாடலாசிரியர், இசை அமைப்பாளர், பாடியவர், இயக்குனர் ஆகிய அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தே போனார்கள்.

காரணம் - "முகம் அது சந்திரபிம்பமோ" என்ற பல்லவியின் ஆரம்பவார்த்தைகள் ஒவ்வொரு முறை திரும்பத் திரும்ப ஒலிக்கும் போதெல்லாம் "முகம்மது சந்திரபிம்பமோ" என்று ஒரு குறிப்பிட்ட மதத்தலைவரின் பெயராக காதுகளில் விழுந்த வண்ணம் இருந்தது.

இப்போதெல்லாம் தமிழை எவ்வளவுதான் கடித்துத் துப்பினாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் நாற்பதுகளில் தயாரிப்பாளர்களே அவற்றை எல்லாம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆகவே பாடல் வரிகளை மாற்றவேண்டிய கட்டாயம். ஏதாவது ஒரு இடத்தில் என்றால் - சரணத்தின் நடுவில் வரும் வார்த்தை என்றால் கூட பரவாயில்லை. பல்லவியின் ஆரம்ப வரிகள். பாடல் முடியும் வரை திரும்ப திரும்ப பல முறை வரவேண்டிய வரிகள் அல்லவா? அதில் தவறு என்றால் யாரால் ஏற்றுக்கொள்ளமுடியும்...?

இப்போதெல்லாம் இப்படி தவறை திருத்த கணினி இருக்கிறது. ஒரு முறை மட்டும் எந்த வரியில் தவறு தென்படுகிறதோ அந்த வரியை மட்டும் பாடிவிட்டு கணினியில் பதிவு செய்து அதனை தேவையான இடங்களில் ஒட்டிக்கொள்ளலாம். (அதுவும் கூட தேவை என்று தோன்றினால் மட்டுமே!.)

மறுபடி பாபநாசம் சிவன் அவர்கள் "முகம் அது" என்ற வார்த்தையை நீக்கிவிட்டு "வதனமே சந்திரபிம்பமோ" என்று ஆரம்ப வரிகளை மாற்றி எழுத, மீண்டும் ஒரு முறை பாடல் ஆரம்பம் முதல் புதிதாக இசை அமைப்போடு பாகவதர் பாட..

மறுபடி படச்சுருளில் ஏற்கெனவே இருந்ததை அழித்துவிட்டு புதிதாக "சவுண்ட் நெகடிவ்"வில் பாடல் பதிவாக்கப்பட்டு வரும் வரை அனைவரும் "சரியாக வரவேண்டுமே" என்ற படபடப்போடு நகத்தை கடித்துத் துப்பாத குறையாக டென்ஷனின் மூழ்கிக் காத்துக்கொண்டிருந்தனர்.

ஆனால் இப்போது மாற்றப்பட்டு வந்த "வதனமே சந்திரபிம்பமோ" பாடல் முன்பை விட நேர்த்தியாக அமைந்ததோடு அல்லாமல் மகத்தான வெற்றிப் பாடலாக அமைந்து இன்று வரை காலங்களைக் கடந்து நிலைத்து விட்டிருக்கிறது.

ஜி.ராமனாதனின் இசையில் பாகவதரின் குரலில் சிந்துபைரவி கேட்பவர் மனங்களை எல்லாம் வருடிச் சென்றது.

சிவகவி படத்தில் தியாகராஜ பாகவதர் "மனம் கனிந்தே" என்று இன்னொரு அருமையான பாடலையும் பாடி இருக்கிறார். ரதிபதிப்ரியா ராகத்தில் வெகு நேர்த்தியாக இசை அமைத்திருக்கிறார் ஜி. ராமநாதன். ஆனால் இந்தப் பாடல் சிவகவி பாடல்கள் அடங்கிய ரெக்கார்டுகள் அந்தநாளில் வெளிவந்தபோது அதில் இடம் பெறவில்லை. ஏன் தெரியுமா? பாகவதர் இந்தப் பாடலைப் பாடிய அதே காலகட்டத்தில் இசை முரசு எம்.எம். தண்டபாணி தேசிகர் இதே ரதிபதிப்ரியா ராகத்தில் ஒரு பாடலை தானே இசை அமைத்து பாடி ரெக்கார்டாக கொண்டு வருவது என்று இருந்தார். இப்போது பாகவதரும் அதே ராகத்தை கையாண்டுவிட்டால் அவரது குரல் இனிமையில் வெளிவரும் பாடலுக்கு முன்பு தனது பாடல் எடுபடாமல் போய்விடக்கூடிய சூழல் உருவாகிவிடுமே என்பதால் அவர் பாகவதரை அணுகி தனது சந்தேகத்தை வெளிப்படுத்தி "மனம் கனிந்தே" பாடலை ரெக்கார்டில் பதிவு செய்வதை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டார். தியாகராஜ பாகவதரும் மிகவும் பெருந்தன்மையோடு பாடலை ரெக்கார்டாக பதிவு செய்யாமல் தவிர்த்துவிட்டார்.பாகவதர் விட்டுக்கொடுத்ததால் வெளியான தேசிகரின் பாடல் மிகவும் பிரபலம் ஆனது. அந்தப் பாடல் தான் "ஜகஜ்ஜனனி சுகபாணி கல்யாணி".

சிகரம் தொடுவோம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.