வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS முந்தைய இதழ்கள் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்.. கூடு இணைய இதழுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. வாசித்து முடித்த பின்னர் உங்கள் கருத்துகளையும் மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
 
 

“அந்தத் தூசியையாவது தட்டிக் கொண்டுவந்து தரக் கூடாதா” என்பாள்.. காணாததற்கு அம்மா தாத்தா, கிராமத்தில் இறந்த போனபின் அங்கேயுள்ள பந்திப் பாய், ஜமுக்காளங்களும் இங்கே வந்து விட்டது.”போ, அதுக்கும் மண்டையிடி புடிச்சாச்சா” என்று அங்கலாய்ப்பாள்.

 

இரண்டு கட்டில்கள் கிடந்தன ஒரு பெண், ஒரு கட்டிலில் இருந்தாள், அவசரமாக எழுந்தாள். வட்ட முகம் நீளமான முடி. நடிகை அம்பிகா, (அந்தக்கால அம்பிகா-மலையாள நடிகை-அவள்தானோ என்று பல தடவை நினைத்ததுண்டு-) போலிருந்தாள். அப்பாவைப் பார்த்ததும் அவளும், “வாங்க, வீட்ல எல்லாரும் சௌக்கியமா, உங்களை பாக்கத்தான் வந்தாரா, நானும் வந்திருப்பேனே” என்றாள்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
ஊஞ்சல்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


மேலும் ஒளிப்படங்களைக் காண..


கலாப்ரியா

எழுபதுகளில் எழுதத் தொடங்கி, குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற கலாப்ரியா கவிதைக்குள் கதையை சுருக்கி வைக்கும் முயற்சியை தொடங்கினார். பேச்சுவழக்கை கவிதைக்குள் கொண்டுவந்த கலாப்ரியாவினது கவிதைகளின் பாடுபொருளாக அடித்தட்டு மக்களும் அவர்களது வாழ்வு சார்ந்த சிக்கல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம்,வண்ணநிலவனின் கையெழுத்துப் பத்திரிக்கையான 'பொருநை'யில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். இந்த பெயருக்குள் சோமசுந்தரத்தின் ஒரு தலைக் காதலியின் பெயரோடு கலாப்பூர்வமானவன் என்ற அர்த்தமும் அடைக்கலம்.

பின்னர் 'கசடதபற'வில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார்.

'கசடதபற'விற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபத்தில் எழுதும் போது மிகுந்த வரவேற்பைப் பெற்றார்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணிகளுக்கு இடையில் தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வரும் 'கலாப்ரியா' தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

பிறந்த தினம்: 30 - 7 - 1950

கவிதைத் தொகுப்புகள்

வெள்ளம் (1973)
தீர்த்தயாத்திரை (1973)
மற்றாங்கே(1980)
எட்டயபுரம் (1982)
உலகெல்லாம் சூரியன் (1993)
கலாப்ரியா கவிதைகள்(1994)
கலாப்ரியா கவிதைகள் (2000)
அனிச்சம்(2000)
வனம் புகுதல்(2003)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS கலாப்ரியா தொடர்கள் வாயில்


அதிசய ராகம்.....

கலாப்ரியா  

ராமச்சந்திரன் என்கிற தாஸ், ராஜனின் நண்பன், அவரை எனக்கு அதிகம் பழக்கம் கிடையாது. அவர்கள் இருவரும் வேறு கல்லூரி, கட்டுப்பாட்டுக்குப் பேர் பெற்ற கல்லூரி. ராஜனின் பழக்கத்திற்குப் பின் அநேகமாக எங்கள் குழுவினரின் போக்கே மாறியது என்று சொல்லலாம். அவன் பாளையங்கோட்டைப் பகுதியில் இருந்து எங்கள் பகுதிக்கு மாற்றி வந்திருந்தான். அவனுக்குத் தோழிகள் அதிகம் என்பான். அதிகமோ இல்லையோ அநேகமாக, பொருட்காட்சிக்கு, டென் கமாண்ட்மெண்ட்ஸ், கிங் ஆஃப் கிங்ஸ் என்று கிறிஸ்துவ சினிமாக்களுக்கு வரும் பெண்கள் அவனைப் பார்த்தால் புன்னகைக்காமல் இருக்கமாட்டார்கள். முதலில் கதீட்ரல் சர்ச் பக்கம் இருந்தான். குலவாணிகர் புரம் சர்ச்சில் அவன் அப்பாவுக்கு வேலை.அவனது பெரியப்பா, மேரேஜ் கவுன்சலர். ஊசிக்கோபுரம் சர்ச்சுக்குத்தான் போவான்.

வாராந்திர ஞாயிற்றுக் கிழமை ஆராதனைக் கூட்டங்களுக்கு வரும் அவனையொத்த பெண்கள் அனைவரின் பெயரையும் சொல்லுவான்.. லில்லி (டார்லிங்), மரியா, மேபல், கமலா, என்று சின்னப் பெயர்களாகச் சொல்லுவான். ”ஏல உண்மையான பெயரா இல்லைன்னா.. நீ வச்ச பேரால, கூப்பிடச் சௌகரியமா ரெண்டு எழுத்து மூணு எழுத்துல நீயா சொல்லுதியா” என்று கேலி செய்வோம். அவனைக் கொஞ்ச நாள் “ஏல மூன்றெழுத்து...” என்று கேலியாகக் கூப்பிடுவோம்.ஒரு சமயம் அவனைப் பார்த்துச் சிரித்த ஒரு பெண்ணின் பெயரைக் கேட்ட போது ”மாலா” என்றான் .”வாடா மூனெழுத்து, இப்ப நான் மாலான்னு கூப்பிடுவேன் அவ திரும்பி உன்னைப் பார்க்கலேன்னா,...மவனே உன்னைய சிலுவையிலேயே அறஞ்சிருவோம் ”..என்று சொல்லி விட்டு. ”ஹை, மாலா”ன்னான் ஒருவன். அவள், அதே புன்னகையுடன் திரும்பினாள். எல்லோரும் ஒட்டுமொத்தமாகப் பயந்துபோய் ”ஒன்னுமில்லை சிஸ்டர்” என்றதும், அவள் களுக்கென்று சிரித்துவிட்டாள்.அநேகமாக ராஜனின் வரவுக்குப் பின்னால்த்தான் நான் தியேட்டரில் காத்துக் கிடப்பதைவிட்டு “சைட்’ அடிக்க ஆரம்பித்தேன் என்று சொல்லவேண்டும். அதுசமயம் வயதும் பத்தொன்பதைத் தாண்டியிருந்தது.

ராஜனின் நண்பனான ராமச்சந்திரன், எனக்கு சிறிதே அறிமுகம். ஒருநாள் பஸ்ஸ்டாப்பில், ‘சாயங்காலத்து சசி’க்காக காத்துக் கொண்டு நின்று கொண்டிருந்த போது அவன் பாளை பஸ்ஸில் வந்து இறங்கினான். பின்னாலேயே ஒரு பெண், அவள் குடும்பத்தினருடன். என்னைப் பார்த்ததும் அவனே, ”ஹலோ, பார்ட்னர்”, என்றவன், சைகையிலும் கண்ணாலும் “கொஞ்சம் என்னுடன் வாங்களேன்” என்றான். பெண்ணும் அழகாயிருந்தது. சரி என்று கிளம்பினோம். நகரின் பெரிய ஜவுளிக்கடையினுள் போனார்கள். நாங்களும் போனோம். அங்கே அப்போதெல்லாம் செருப்பை வெளியே கழற்றிப் போட்டு விட்டுத்தான் போக வேண்டும். வெளியே செருப்புகள் குவிந்திருக்கும். சமயத்தில் செருப்புகள் காணாமல்ப் போய் விடும். யாராவது அழகான புதுச் செருப்பு போட்டிருந்தால், “ஏல என்ன பெரிய ஜவுளிக்கடையில வாங்குனதா என்று கிண்டலாகக் கேட்போம்.....அங்க ஏதுல செருப்பு என்றால், அதான் வாசலில் கிடக்கிறத “லாத்தி”ட்டு (ஆட்டை போடுவது) வந்துட்டியான்னு கேட்காம்ல“ என்று இன்னொருவன் சொல்லுவான். இதேமாதிரி, ”ஏல செருப்பு நல்லாருக்கே எந்தக் கல்யாண வீட்டில “ஆத்துனது” என்போம்..ஜவுளிக்கடையில் எனக்குத் தெரிந்த நண்பர்கள் பலர் இருந்தார்கள். ”எட்டயபுரம்” குறுங்காவியத்தில் வருகிற ‘சின்னச் சங்கரன்’ உட்பட. அதனால் சும்மா அங்கே போவது சங்கடமாயில்லை. சின்னச் சங்கரன் கூடக் கேட்டான்,”ஏல என்ன இந்த மாதிரி ’கலர்’ பின்னால சுத்த ஆரம்பிச்சிட்டே,” என்று. கொஞ்சம் அசடு வழிந்து விட்டு வெளியே வந்தோம். குடும்பம் கோயிலுக்குள் நுழைந்தது. அப்போது கந்த சஷ்டிக்கு கொடியேறி இருந்தது. அதனால் எப்போதும் அடைத்தே இருக்கும், வடக்குக் கோபுர வாசல் திறந்து இருந்தது. அங்கிருக்கும் லாரி ஒர்க் ஷாப்பை தற்காலிகமாகக் காலி செய்து விடுவார்கள், அங்கே வைத்துத்தான் முருகனுக்கு, சூர சம்ஹாரம் முடிந்ததும் தெய்வானையை திருக்கல்யாணம் நடக்கும். வடக்குக் கோபுர வாசல் வழியாக உள்ளே போனோம்.

அப்போதுதான் முதன் முதலாக, “பார்ட்னர், என்னை தாஸ் என்றே கூப்பிடுங்கள்’’ என்றான் ராமச்சந்திரன். ”தாஸ்” என்பதைச் சற்று சத்தமாகச் சொன்னான். அதைக்கேட்டு அந்தப் பெண், லேசாகத் திரும்பியது. தாஸின் அப்பா திசையன்விளை பக்கத்தில் மிகப் பெரிய பணக்காரர். தாஸ் கோயிலுக்கே வந்தது கிடையாது போலிருக்கிறது.கோயில் சன்னதியில், திரு நீறோ, சந்தனமோ எதைக் கொடுத்தாலும் வாயில் போட்டுக் கொண்டான். தீவாரனைத் தட்டில் பத்து ரூபாய் போட்டான். ஐயர் அசந்து போனார். அவர் சாமிக்குச் சாத்திய மாலையொன்றை அவனுக்குப் போட்டார். கூனிக் குறுகி அதைக் கழற்றி என்ன செய்ய என்றான். அந்தப் பெண் அவனைப் பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தது. அவளது அம்மா “என்னடி சிரிப்பு” என்று அதட்டினாள்.

தாஸ் அதிகம் போனால் நான்கரை, நலே முக்கால் அடிதான் இருப்பான். பி.ஏ இரண்டாம் ஆண்டு படிக்கிறவன் என்று சொல்ல முடியாது. ஏதோ ஹைஸ்கூலில் இருந்து அப்போதுதான் வெளியே வந்தவன் போலிருப்பான். கிட்டத்தட்ட பார்த்திவ் பட்டேல் மாதிரி இருப்பான். ஆள் சரியான கறுப்பு. மீசை, முளைக்கட்டா வேண்டாமா என்றிருக்கும். பெண் அவனைப் பார்த்து லேசாகக் கையசைத்தது. எனக்கு திகீர் என்றது. அவ்வளவு செக்கச்சிவப்பான, கொஞ்சம் பெரிய பெண்ணாகவே இருந்தது. அது எப்படி தாஸைப் பார்த்து கையசைக்கிறது என்று தோன்றியது. நாம் என்னடாவென்றால் ஏற்கெனவே பழகிய பெண்ணைக் கண்டே சொல்லத்தான் நினைக்கிறேன் என்று பாடிக் காலத்தை கழிக்கிறோம். இங்கே விண்ணப்பம் போடாமலே வேலை கிடைக்கிறதே என்று நினைத்துக் கொண்டேன். கோயிலை விட்டு வெளியே வந்ததும். நான் அந்தக் குடும்பத்தின் பின்னால் தொடர்ந்தேன். தாஸ், கையைப் பிடித்து ரகசியமாய் அமுக்கி, “இதோட விட்டுரணும், ஏதோ நம்ம வேலையப் பார்க்க வந்த மாதிரி நைசா நழுவிரனும்., என்றவன், “ஹாஸ்டலுக்கு நேரமாகிறது..பக்கத்தில் எங்கே நல்லாச் சாப்பிடலாம்..” என்றான். நான், ”இந்தா ராஜாவிலாஸ் நல்லா இருக்கும். இதைவிட ஆபிரகாம் ஓட்டல் நல்லா இருக்கும்” என்றேன். எதிரே இருந்த ராஜாவிலாஸுக்குள் விறுவிறுவென்று நுழைந்து, மளமளவென்று ஆர்டர் சொல்ல ஆரம்பித்தான். ”சீக்கிரமா, ரெண்டுரெண்டு முட்டை போட்டு கொத்துபுரோட்டா, ரெண்டு கோழி வருவல், ரெண்டு மட்டன் வருவல்,” என்று சொன்ன தோரணையே மூச்சை நிறுத்தி விட்டது. அதற்குள், இது என்னது நீலம் பழமா, ரெண்டு வெட்டி, தனி இலையில், ரெண்டு பேருக்கும் வையிங்க..என்றான்.

பட்டறையிலிருந்தவர் பழத்தை வெட்டி எடுத்துக் கொண்டு அவரே கொண்டு வந்து தந்தார். .நானெல்லாம் ஓட்டலுக்குப் போனால் கையில் ஒன்னரை ருபாய் வைத்துக்கொண்டு அதுவும் பையில் பத்திரமாக இருக்கிறதா என்று பத்துத் தரம் பார்த்துக் கொண்டு, ரெண்டு ரொட்டி சால்னா அல்லது ஒரு எம்ப்டி செட், மட்டன் வருவல் என்று தின்றுவிட்டு, ஒரு மணிநேரம் கையையே மோந்து பார்த்து சாபல்யம் அடைகிற ஆட்கள். அப்பொழுதுதான் அவனைப்பற்றிச் சொல்லுகிற கதைகள் எல்லாம் நினைவு வந்தது. அவன் அப்பா பெரிய பண்ணையார். தமிழ்நாட்டுக்கே வாழைப்பழம், காய், இலை என்று சப்ளை பன்னுகிறவர். எல்லாம் சொந்த விவசாயம். ஏகப்பட்ட நஞ்சை, புஞ்சை. காணாததற்கு தேரிக்காட்டில் சிமெண்ட் போட்டு நஞ்சை நிலம் மாதிரி, மண்ணெல்லாம் கொண்டு வந்து கொட்டி, வாழை நட்டு சோதனை முயற்சிகள் செய்வதாக வேறு சொன்னார்கள்.

நேரமானால் ஹாஸ்டலில் அனுமதிக்க மாட்டார்களென்று அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டு எழுந்தான். பார்ட்னர் நீங்க மெதுவா சாப்பிட்டுட்டு வாங்க நான் போறேன் என்று கிளம்பி விட்டான். எனக்குச் சாப்பிட முடியாமல் ‘திட்டு முட்டு’அடித்தது, திண்டாடித் திணறிச் சாப்பிட்டு முடித்தேன். நான் கடையை விட்டு வெளியே வரும்போது.முதலாளி கேட்டார், “தம்பி பார்சல் வேணும்ன்னா கொடுக்கச் சொல்லிருக்காவ......,.“என்றார். ரெண்டு மாம்பழம் வேணும்ன்னா பார்சல் வாங்கிக்கிடலாமான்னு தோன்றியது. அம்மாவுக்கு நீலம் பழம் என்றால் உயிர். அப்படியெல்லாம் வாங்கிக் கொடுத்திருந்தால், அந்தப் புண்ணியவதி எவ்வளவு சந்தோஷப் பட்டிருப்பாள். குறைந்தது அவளைத் திட்டாமலாவது இருந்திருக்கலாம், ஆனால் அதெல்லாம் பிற்காலத்தில்தான் நடந்தது. அம்மாவுக்கு, மாலை ஏழு மணிக்கு போத்தி ஓட்டலில், எல்லா ஸ்பெஷல் ஐட்டங்களும் தீர்ந்து போன பின்னர் போடும் ரவா உப்புமா ரொம்பப் பிடிக்கும். நிறைய டால்டா விட்டு லேசாக முந்திரி போட்டு, பூ மாதிரி உதிரியாய் இருக்கும். ”என்னதாம்ழா பக்குவம் பண்ணுவானோ....நம்ம உப்புமா கிண்டினா, கட்டி தட்டிப் போயிருது இல்லேன்னா நெளுநெளுன்னு ஆகீருது”, என்பாள் அம்மா. அப்போது முகம் சற்று சந்தோஷமாய் இருக்கும். இதற்கு அவள் கொடுத்த விலை, அவளது சொத்து முழுவதும். சரி என்று இருந்த காசுக்கு உப்புமா வாங்கிப் போனேன். முன்பெல்லாம் ஓட்டலில் கணக்கு உண்டு. எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம். விற்றுத் தின்ன வயலோ சொத்தோ இல்லை அதனால் இப்போ கணக்கெல்லாம் நிறுத்தியாகி விட்டது..

தாஸ் வந்ததையும் சென்றதையும் ராஜனிடம் சொன்னேன். ”அவனுக்கென்னலே, உங்க வீட்டுச் சொத்தா, எங்க வீட்டுச் சொத்தா, ஊர் பூராவும் அவன் சொத்துதான்.நீ தின்னது போக, செலவுக்கு நூறு ரூபாய் கேட்டாலும் கொடுத்திருப்பான்.நீ சொன்ன புள்ளைய கரெக்ட் பண்ண ரெண்டு மூனு வாரமா அலையுதான். அவனுக்குன்னு சிக்குது பாரு.உண்மையிலேயே கன்னி ராசின்னா அவனுக்குத்தான் பொருந்தும்.ஒருத்திய கணக்கு வச்சுட்டான்னா அதிகம் போனா, பதினைந்து நாள்தான், புள்ளை மசிஞ்சுருதுடா....” என்ன மாயம்ன்னு கேட்டா, நான் என்னமாவது பண்ணறேனா, நீங்களும் கூடவேதானலெ இருக்கீங்க,அதுக வந்து விழுந்தா நான் என்ன பண்ணறது என்பானாம்.”சரி ஒரு கதை தெரியுமா....” என்றான் ராஜன்.”உன் ஃப்ரெண்டும்பியே... அந்த பெரிய இரும்பு வியாபாரி, ஆனந்தனா, அவன் தங்கச்சிய ப்ராக்கெட் போட்டு பத்து நாளாச்சு .தெரியுமா என்றான்.கையில் உப்புமா சூடு ஆறிக் கொண்டிருந்தது.”இருடா வாரேன்” என்று அம்மாவிடம் உப்புமாவைக் கொடுத்து விட்டு வந்தேன்.அவள் பசியில் இருந்திருக்க வேண்டும்,” கொடுப்பா..” என்று சந்தோஷமாய் வாங்கிக் கொண்டாள்.அவள் வேறு . ஏதோ கேட்க வாயெடுத்தாள். நான் அதற்குள் ராஜனைப் பார்க்க தெருவிற்கு வந்து விட்டேன்.

”என்னதுலே சொல்லுதே, யாருலெ, புஷ்பாவையா...சொல்லுற.. அவ இப்பதானல பி.யு.சி சேந்திருக்கா” என்றேன். புஷ்பராணி என்கிற புஷ்பா அப்படியிருப்பாள். அவள் கான்வெண்டில் படிக்கிற போதே சற்று மீறின உடல் வாகுடன், தினமும் ஒருமணி நேரமாவது செலவழித்துச் செய்து கொண்ட தலையலங்காரமும் உடம்பையொட்டின யூனிஃபாரமுமாக பஸ்ஸில் எல்லோர் கண்ணையும் உறுத்துவாள். ஆனால் பயங்கர நெருப்பு. கண்டக்டர் கூட அவள் பக்கத்தில் போகாமல் தள்ளியே நின்று டிக்கெட் கேட்பான். பெரும்பாலும் அவளது தோழிகள்தான் டிக்கெட் எடுப்பார்கள். பஸ்ஸிலும் அங்கே இங்கே திரும்ப மாட்டாள். அவள் அண்ணன் எனக்கு கல்லூரியில் இரண்டு வருடம் சீனியர். நான் பி.யு.சி படிக்கையில் அவன் பி.ஏ.இரண்டாம் ஆண்டு படித்தான். அப்போதே அவன் முகத்தையொட்டி, படிந்தமாதிரி தாடி வைத்திருப்பான். கதர் வேட்டியும் வெள்ளைச் சட்டையும்தான் போடுவான். என்னைப் போல் தவறாமல் முதல் நாள் தலைவர் படம் பார்க்க வந்து விடுவான். அநேகமாக எனக்கு சமீபமாகத்தான் அமர்வான். இடைவேளையில்”படம் ஒண்ணும் ஒப்பேறாது போலிருக்கே..” என்றால் லேசாகச் சிரிப்பான். அவ்வளவுதான். ஹைரோடில் ஒரு பெரிய இடம் அவர்களுடையதுதான். பெரிய காம்பவுண்ட், ஒரு லாரி திண்டாடி நுழைகிற அளவுக்கு, சிறிய வாசல். வாசலின் இரு புறமும் திண்ணை போல இருக்கும். அதைதாண்டி உள்ளே போனால் இதற்குள் இவ்வளவு பெரிய இடமா என்று நினைக்கத் தோன்றும்.அதை கடை, ஆபீஸ் என்று எந்தப் பெயராலும் கூடச் சொல்ல முடியாது.வெறும் கல்தான் பாவியிருக்கும்.

நாற்காலி கிடையாது ஒருகாலை மடித்து ஒரு காலை தொங்கப் போட்டு, முன்னால் ஒரு கல்லாப்பெட்டி போட்டு அவன் அப்பா உட்கார்ந் திருப்பார். ஏதோ கோயிலில் அர்ச்சனைச் சீட்டுக் கொடுப்பவர்போல அமர்ந்திருப்பார். .சட்டை கூடப் போட்டிருக்க மாட்டார். ஆனால் ஹைரோடில் அவரைக் கடக்கிற யாரும் அவரை ஒரு கும்பிடு போடாமல்ப் போக மாட்டார்கள்.அவரும் மரியாதையாக இரண்டு கையாலும் கும்பிடுவார்.ஜப்பானில் இருந்து இரும்பு இறக்குமதி செய்கிறார் என்றும், செய்தவர் என்றும் பேசுவார்கள். ‘தருமர் அண்ட் கோ’என்று பாதி நியூஸ் பேப்பர் சைசில் ஒரு நீலக்கலர் எனாமல் போர்டு தொங்கும். அந்த இடம் அப்போதே கோடிக்கணக்கில் பெறும்.இரண்டு மூன்று தியேட்டர்கள் கட்டலாம்.அவ்வப்போது ஆனந்தன் அப்பாவின் இடத்தில் இருப்பான். அதே அமைதியுடன்.அப்போது எங்களுக்கு ஒரு கனவு இருந்தது.எம்.ஜி.ஆரின் நூறாவது படம் வெளியாவதை முன்னிட்டு ஹைரோடில் ஒரு இடத்தில் ஒரு பஸ் ஸ்டாப்பில் ஒரு நிழற்குடை கட்டுவது என்று.அதற்கு நிதி பிரிக்க ஆனந்தனிடம் போனோம்.வீட்டிலிருந்தான்.என்னைத்தான் முன்னால் தள்ளி விட்டார்கள். நான் முந்திரிக்கொட்டை என்பது எல்லோருக்கும் தெரியும்.புஷ்பாதான் வந்து என்ன வேண்டும் என்று கேட்டாள்.அவளைப் பார்த்ததுமே ஜிலீர் என்றது. இது ஆனந்தனுக்கு என்ன வேண்டும் என்று தோன்றியது. ஆனந்தன் சாரைப் பார்க்கவேண்டும் என்றோம்.ஆனந்தன் வந்தார்.அநேகமாக எல்லோரும் அந்த வீட்டின் முன்னாலும், தார்சாலிலுமாக நின்று கொண்டிருந்தோம்.ஆனந்தன் வந்ததும் எல்லோரும் தார்சாலை விட்டுக் கீழே இறங்கி, கிட்டத்தட்ட ஓடி விட ரெடியாயிருப்பது போல் வெளியே போய் நின்று கொண்டார்கள். என்னையும் அவனது கிளாஸ்மேட் மணியையும் தவிர, யாரும் அருகேயே இல்லை. விஷயத்தைச் சொன்னதும், “ அப்பாட்ட கேக்கணும்..அநேகமா கதை ஒப்பேறாது.. மணி...” என்றார்.

பொதுவாக “ஒளிவிளக்கு” (100வதுபடம்) பற்றிப் பேசிக் கொண்டிருந்துவிட்டு விட்டுக் கிளம்பினோம். எனக்கு ’ச்சை’ என்றிருந்தது. மணி இதெல்லாம் நடக்காது என்று ஏற்கெனவே சொல்லிக் கொண்டிருந்தான். அதற்கப்புறம் வேறு வகைகளில் அதற்கு முயன்றோம். கொஞ்சம் நிதி சேர்கிற மாதிரி இருந்தது. கலெகடரிடம் அனுமதி பெறவேண்டும் என்றார்கள். கலெக்டரோ, அந்த இடத்தில் பஸ் ஸ்டாப்பே கிடையாது என்று ஆர்.டி.ஓ சொல்றாரெ என்று அனுமதி வழங்கவே மறுத்து விட்டார்.

நம்ம ஆட்சிதானே என்று போன தோழர்களிடம், எம்.எல்.ஏவும் கை விரித்து விட்டார். கடைசியில் ஒரு மலர் மட்டும் வெளியிட்டோம்.ஏகக் கடுப்பில் இருந்தார்கள் ரசிகர்கள்.ஏற்கெனவே கட்சிக்கும் ரசிகர்களுக்கும் உரசல் ஆரம்பித்திருந்தது ”கட்சியை வச்சு தொண்டனா, தொண்டனை வச்சு கட்சியா...” என்று ரசிகர்களிடையே பேச்சு நடை பெற்றுக் கொண்டிருந்தது அப்போது. பழைய, அரசியல் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட மன்றங்கள் போலில்லாமல்,”என் அண்ணன் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம், நம்நாடு எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம், என ’ரசிகர் மன்ற’ங்களாகவே, அரசியல் சார்பில்லாமல் ஆரம்பிக்கப் பட்டன. அதற்கேற்றார்ப்போல் அண்ணாவின் உடல் நிலையும் சீராயில்லை. ஆனால் நடந்ததெல்லாம் வேறு. அது வேற கதை..

படத்தை பெரிதாகப் பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்

இன்னும் ஆச்சரியம் தீரவில்லை, என்னது, புஷ்பா, தாஸ் பின்னால் அலைகிறாளா..என்று ஆச்சரியம் தீரவில்ல்லை.சீக்கிரமே தாஸ் ஹாஸ்டலை விட்டு வெளியேற்றப் பட்டு விட்டான்.வாட்ச்மேனைப் பயமுறுத்தி நைட் ஷோ போவது ஃபாதருக்குத் தெரியவரவே, ”ஹாஸ்டலை விட்டுப் போயிர்ரா.. ராஜா...” என்று கெஞ்சலும் மிரட்டலுமாக அனுப்பி விட்டார்.நல்லதாப் போச்சு என்று தாஸ் வீடு எடுத்து தங்கினான்.சமையலுக்கு, வீட்டு பாதுகாப்புக்கு,என்று ஊரில் இருந்து ஆட்கள் புடை சூழ என்.ஜி.ஓ காலனியின் ஒதுக்குப் புறமான வீட்டில் தாஸின் ராஜ்யம் ஆரம்பமானது.ஆட்டத்திற்கு குறைவே கிடையாது, ஆனாலெப்படியோ மார்க் வாங்கி விடுவான். ”மார்க் போடலேன்னா...வாத்தியார் பாடுல்லா சங்கடம்” என்று கிண்டலடிப்பார்கள்.வீட்டில் மூன்று பைக் நிற்கும்.ஒன்றைக் கூட அவன் ஓட்ட மாட்டான். ஓட்டத்தெரியாது. இரண்டு பைக்குகள், அவனைக் கல்லூரியில் கொண்டுவிட, ஒன்று அவனுடன் தங்கியிருக்கும் அவனது மாமா பையன் ராஜேந்திரனுக்கு.அவனையும் வலுக்கட்டாயமாக ஹாஸ்டலில் இருந்து கூட்டி வந்து விட்டான்.அவன் உண்மையிலேயே நன்றாகப் படிப்பான்.

ஆனால் மச்சானைப் போலவே மன்மதராசந்தான் அவனும். நான், காலனி வீட்டிற்கு அதிகம் போனது கிடையாது. நிறைய நண்பர்கள் போவார்கள்.சனிக்கிழமையென்றால், சாட்டர்டே இல்லை வாட்டர்டே என்பார்கள்.ஊரிலிருந்து சாராயம் வந்து விடுமாம். கோழிக்கறியும் சோறும் ஒரே கொண்டாட்டமாய் இருக்கும் என்பார்கள். ராஜன் குடிக்க மாட்டான்.அப்போது பெரும்பாலும் யாருமே அதற்குப் பழகி இருக்கவில்லை.மதுவிலக்கு வேறு அமலில் இருந்தது.ராஜனின் வற்புறுத்தலின் பேரில் ஒரு நாள் நானும் போனேன். தாஸ், “பார்ட்னர் வாங்க” என்று வரவேற்றான்.இருந்தாலும் அதில் ஒரு புதிய தோரணை இருந்தது.வீட்டிற்குப் பின்னால் புதைத்து வைத்திருந்த சாராய டின்னை எடுத்து வந்தார்கள், அவனது உதவியாளர்கள். பனியன், பச்சைபெல்ட் அணிந்திருந்தார்கள் .பெல்ட்டில்,பிச்சுவா என்கிற வளைந்த கத்தி. என் முகம் போகிற போக்கைப் பார்த்தே, வழக்கமாக வருகிற ஒன்றிரண்டு பேர், ”செத்தான்...மாப்பிள்ளை” என்று கிண்டலடித்தார்கள்.அந்தப் பாதுகாவலர்களிடம், ”அண்ணாச்சியோவ் இந்தப் பய பக்கம் மட்டும் பாக்காதீங்க “ என்று கூறிச் சிரித்தார்கள்.அவர்களிடம் லேசான முறுவல் மட்டுமே வெளிப்பட்டது.எண்ணெய் டின்னில் ஒட்டியிருந்த சகதியையெல்லாம் அவர்கள் லுங்கியால் துடைத்துவிட்டு,டின்னின் ஒரு மூலையில் கொஞ்சம் தீக்கங்கை அள்ளிக் கொணர்ந்து வைத்தார்கள்.ஈயம் இழகும் வாசனை வந்தது. பட்டென்று கனலை கையாலேயே தள்ளினார்கள். டின்னை மூடியிருந்த சிறிய வட்ட மூடி தானாகவே டப்பென்று எழுந்தது. “ லே மக்கா பாத்துலே, கங்கு உள்ளே விழுந்துராம, பொறவு எல்லாம் பொகைஞ்சிரும்லே..” என்று இரண்டு ‘காவலர்களும்’ ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். கதவையெல்லாம் இறுகச் சாத்தியிருந்தார்கள்.தம்ளரில் இருப்பதே தெரியாத மாதிரி பன்னீர் போலிருந்தது சாராயம். ஏதோ கருப்புக்கலர் சேர்த்து, எனக்குக் கொஞ்சம் தந்தார்கள்.ஒரே உறிஞ்சில் குடித்துவிட்டு எதைத் தொட்டு நக்கினாலும் நாக்கில் மதமதர்ப்பு போகவில்லை. ஐந்து நிமிடம்தான் ஆகியிருக்கும்.என்ன நடக்கிறதென ஒன்றுமே தெரியவில்லை.ஒரே கும்மாளமும் கேலியாகவும் இருந்தது.தாஸ், “அண்ணன்மாருங்களா, ஜன்னலை தொறந்து போடுங்க, எவனாவது வந்து கேட்டான்னா, இன்னொரு டின் இருக்குல்லா, அதை அவன் தலையில ஏத்தி விடுங்க மக்கா...சவம் பொசமுட்டிக்கிட்டு வருது...”என்பதெல்லாம் கனகில் கேட்பது போல் கேட்டது.இன்னொரு தம்ளர் சாப்பிட்ட மாதிரியும், சோறும் கோழியும் சாப்பிட்ட மாதிரியும் இருந்தது. சப்பிட்டேனா என்றும் தெரியவில்லை.படுத்து விட்டேன். அதற்கப்புறம், எல்லோரும் வேட்டியை அவிழ்த்து தலையில் கட்டிக் கொண்டு திருவனந்தபுரம் ரோட்டில் நடந்து, பயங்கரக் கலாட்டா என்று காலையில் ராஜன் சொன்னான்.காலையில் எழுந்து எப்படியோ பஸ் பிடித்து, பதினோரு மணிக்கு வீட்டிற்குப் போன போதும் கூட நாக்கில் ருசியே வரவில்லை.

அதற்கப்புறம் அந்தப்பக்கமே திசை வைத்துப் படுக்கவில்லை.திடீரென்று ஒரு நாள் மாலை ராஜன் வீட்டுக்கு வந்து, ”வாடா..ஏதாவது சினிமாவுக்குப் போகலாம்..”என்று கட்டாயப்படுத்தினான்.”கூட்டமில்லாத சினிமாவுக்குப் போகனும்...” என்றான்.” தேடி வந்த மாப்பிள்ளை” என்று நினைவு. தியேட்டரில் கூட்டமே இல்லை. முதல் நாள் தவிர மற்ற நாளெல்லாம், தரை டிக்கெட்டிற்குப் போவதுதான் அப்பொழுதெல்லாம் வழக்கம்.கவுண்டரில் கொஞ்சம் கூட்டமிருந்தது. தெரிந்த தியேட்டர்தான்,சரி,உள்ளே போய் டிக்கெட் வாங்கலாம் என்று தியேட்டர் ஆஃபீஸுக்குப் போனோம்.நான் உள்ளே போயிருந்தேன்.வெளியே வந்தபோது ராஜன் யாரோ ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தான்.அவள் கையில் ஒரு சூட்கேஸ்.அவள் உடுத்தியிருந்த சேலையை எங்கோ பார்த்த ஞாபகம்.சட்டென்று தெரிந்தது. புஷ்பா. நான் தள்ளியே நின்று கொண்டேன்.ராஜன் ஏதோ திண்டாடிக்கொண்டிருந்தான்.இருவரும் பேசிக் கொண்டே அருகில் வந்தார்கள்.நான் பட ஸ்டில்கள் வைத்திருந்த போர்டைப் பராக்குப் பார்த்தபடி இருந்தேன்.அவள் ராஜனிடம் ஏதோ கெஞ்சிக் கொண்டிருந்தாள்.யாரையோ பார்த்தவள் என் காலருகே பெட்டியை வைத்துவிட்டு,சற்று மறைந்து நின்றாள்.ராஜனிடம் என்னடா இது என்றேன்.அவள் வீட்டைவிட்டு ஓடி வந்து விட்டாளாம். எப்படியாவது தாஸ் வீட்டிற்குக் கூட்டிப் போ, அங்கே வேலைக்காரியாகவாவது இருக்கிறேன் என்று டயலாக் பேசுகிறாள் என்றான்.இவள் வருவாள் என்று தெரிந்துதான் நான் சினிமாவுக்குப் போகணும்ன்னேன் என்றான்.அதான் வந்தாச்சே என்றேன். ”போடா, நீ இங்கேதான் வருவேன்னு தெரிஞ்சிருக்கும்..”என்றான்.

அது எப்படிடா என்றேன் நான் உன்னைப் பார்க்கப் போவதாக என் அம்மாட்ட சொல்லிட்டு வந்தேன்” என்றான். ”அந்த மயிரு எனக்கென்னடா தெரியும்” என்றேன்.அதற்குள் அவள் வந்து விட்டாள்.வந்ததும் பெட்டியை வேகமாக எடுத்தாள்.பெட்டி லேசாக திறந்தது.உள்ளே பூராவும் நகைகள்....கருப்பு கலிக்கோ பைண்டிங் செய்த பைபிள்.....எனக்கு வியர்த்து விட்டது.” தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,”இங்கே பாருங்க புஷ்பா,உங்க அண்ணனுக்குத் தெரிஞ்சா எங்க கதி என்ன ஆகும், வேணும்ன்னா நான் அவர்கிட்ட வந்து பேசறேன், நீங்க வீட்டுக்குப் போங்க...” என்றேன்.அவள் என்னிடம் முகமே கொடுக்கவில்லை.அவளை அவ்வளவு அருகில் பார்க்கையில் என்னவெல்லாமோ தோன்றியது.என்ன நினைத்தாளோ இருவரிடமும் ஒன்றும் சொல்லாமல்...பெட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.வேகமாகத் திரும்பும் போது அழுவது கேட்டது. அப்பொழுது கூட அவளது முடியலங்காரமும், இறுக்கமான ப்ராவும் கண்ணை உறுத்தியது.

படத்திற்குப் போகவில்லை..இந்தப் பிள்ளையவா வேண்டாங்கான், ஒங்க ஆளு, ரெண்டு பேருமே உங்க ஜாதிதானேடா” என்றேன். ராஜன் சொன்னான்,” அவங்க அப்பாவைப் பற்றி உனக்குத் தெரியாதுடா..அவனுக்கே ஏதோ செய்வினை வச்சுட்டார்டா..தாஸோட,துவைக்காத, வேர்வை வாசம் வீசற சட்டையக் கொண்டு போய் ஏதோ ஏர்வாடி பக்கத்தில தங்கள்ன்னு ஒருத்தராம், அவர்ட்ட கொடுத்து, என்னவோ மாய வேலையெல்லாம் பார்த்து இப்ப தாஸ் பெண்ணுன்னாலே திரும்பிக் கூடப் பாக்கமாட்டேங்கானாம்,அவனோட மச்சான் ராஜேந்திரன் சொன்னான், ”ஏல என்னடா இதெல்லாம்,....நீ... எப்படிடா... இதுல சம்பந்தப்பட்டே”என்றேன். ’’தாஸுக்கும் உண்மையில் இவ மேல இஷ்டம்தாண்டா...அதனால நாந்தான் லெட்டரெல்லாம் பரிமாற வழி பண்ணினேன்..” என்றான். சரி என்னன்னும் தொலையுங்க..எனக்கு நாளைக்கு டெஸ்ட் இருக்கு படிக்கப் போறேன் என்று கிளம்பினேன்.மனசுக்குள் ஆனந்தனைத் தேடிப் போய் சொல்லி விடலாமா என்றிருந்தது.என்னன்னும் தொலையுதாங்க என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டாலும், புஷ்பாவின் முகத்தை மறந்து தூங்க நெடுநேரம் ஆயிற்று.காலம் எல்லாவற்றையும் மறக்கவைத்தது, என்னுடைய ராட்சசியைத் தவிர.

ஆறு, ஏழு மாதம் கழிந்திருக்கும். அன்றைக்கு மறுநாள் முதுகலை முதலாம் ஆண்டின் இறுதி ரிவிஷன் டெஸ்ட். மாடர்ன் அல்ஜிப்ரா.நானும் ஒரு நண்பனும் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தோம்.படிப்பு ஓடவே இல்லை.மத்தியான நேரம், அந்த நண்பன் கேட்டான், ”நீரு பார்க்காம இதுவரை, தலைவர் படம் ஏதாவது ரிலீஸாகியிருக்கா” என்றான். இல்லையே என்றேன். அப்ப கிளம்பும், இன்னக்கி ‘நல்லநேரம்’ ரிலீஸ் என்றான். புத்தகத்தைக் கடாசி விட்டு படத்திற்குக் கிளம்பினோம்.எல்லா டிக்கெட்டும் தீர்ந்து ஏ.சி பாக்ஸ் டிக்கெட் இருந்தது.கடைசி வரிசை.இருளில் பக்கத்தில் யார் என்று சரியாகத் தெரியவில்லை. இடைவேளையில்தான் புரிந்தது. முகம் நிறையத் தாடியுடன் ஆனந்தன் உட்கார்ந்திருந்தார்.வழக்கமாக மெலிதாகச் சிரிப்பார்..இன்று பார்த்ததாகக் கூடக் காட்டிக் கொள்ளவில்லை.நானும் வெளியே வந்து பழைய ரசிக நண்பர்களைப்பர்த்து உற்சாகமாகப் பேசிக் கொண்டிருந்தேன்..”படம் எப்படி இருக்கு” என்று பஷீர் பாய் கேட்டார். அவர் படக்கம்பெனி ஒன்றின் ரெப்ரெசெண்டேடிவ். இது என்ன உங்க கம்பெனி ரிலீஸா என்றேன். இல்லை, ரொம்ப நாளைக்கி அப்புறம், தேவர்பிலிம்ஸ் படத்தை எங்களிடம் தராமல் புதுக் கம்பெனிக்கு டிஸ்ட்ரிபூஷன் கொடுத்திருக்காங்க...அதுதான்.... என்னை படம் பார்த்துட்டு வரச் சொல்லி எங்க கம்பெனி மேனேஜர் அனுப்பினாரு.....படம் எப்படி”, என்றார். ”ஏன், ஹாத்தி மேரா சாத்தி ரீமேக்குன்னு நீங்க வாஙக பயந்திட்டீங்களா” என்றேன். ” இல்லையில்லை..., அதுவே, முத்துராமன் சுந்தரராஜன் நடிச்ச ’தெய்வச்செயல்’ படத்தை இந்தியில எடுத்தது, அது எங்க ரிலீஸ்தானே, இதுக்கு ரேட் ஜாஸ்தி கேட்டாங்க...அதுதான் என்றார்.” ”தெய்வச்செயல், டப்பிங், ரீமேக் எல்லாக் கதையும் தெரியும் பாய், ஆனா இந்தப் படம் நூறுநாள்தான்” என்றேன். ”உண்மையாவாவே சொல்லுதீங்க, வே நீரு சொன்னா சரியா இருக்குமே வே” என்றார்.நாங்கள் பேசிக் கொண்டிருந்த இடம் சற்றுக் குறுகலானது.அப்போது எங்களை உரசியபடி ஆனந்தன் போனார். அவர் சற்று தாண்டியதும்,பசீர் சொன்னார்,”பாவம்..இவரு தங்கைப்பொண்ணு யாரு கூடவோ ஓடிட்டு..”.என்றார். ஆனந்தன் வீட்டிற்குப் பக்கத்தில்தான் பஷீரின் சினிமாக்கம்பெனி. மேல் விவரம் கேட்பதற்குள், படம் போட பெல் அடித்தார்கள். மீதிப்படம் பார்க்கவே தோன்றவில்லை.

முதல் வேலையாக சாயந்தரம் ராஜனைத் தேடிப் போனேன். அவன் இப்போது ஒரு மெடிக்கல் ஷாப் மேனேஜர். ”என்னடா புஷ்பா, தாசைக் கட்டிக்கிட்டாளா” என்றேன். “இல்லை, ராஜேந்திரனைக் கட்டிக்கிட்டா...”என்றான். ”அப்ப தாஸ்,” என்றேன். “அவன் விவசாயம் பாக்கான், சாராயக்கடை லைசன்ஸ் எடுத்திருக்கான், விஸ்கி குடிக்கான்....”என்றான். ராஜனாலும் நிறையப் பேச முடியவில்லை. மெடிக்கல் கடையில் கூட்டமிருந்தது. நான் நகர்ந்தேன். ராஜேந்திரனின் அருகே இருந்து ராமச்சந்திரன் என்கிற தாசைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாளோ புஷ்பா என்று தோன்றியது.

யார் எப்படிப் போனால் என்ன, மறுநாள் ரிவிஷன் தேர்வு சுழித்துவிட்டது. தேர்வில் நான் நூற்றி ஐம்பதுக்கு பதின்மூன்று வாங்கியிருந்தேன். வகுப்புத் தோழி வசுமதி, ”என்ன ஆச்சு உஙகளுக்கு...” என்று அதிசயித்தாள். நான் அதிசய ராகம் ஆனந்த ராகம் என்று முனுமுனுத்தேன், வசுவுக்கு கேட்டதோ என்னவோ.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.