வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்

இறுதியாகச் சிலர்...

கிருஷ்ணன் வெங்கடாசலம்  

‘மாய லோகத்தில்’... தொடரின் இறுதிப் பகுதிக்கு இப்போது வந்திருக்கிறோம். இதுவரை 21 பழம்பெரும் இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் வெளிவந்தன. இவர்கள் அனைவரும் நமது நினைவில் வாழ்பவர்கள். இவர்களைத் தவிர மேலும் சிலரும் இலக்கியத்தோடு, திரைத்துறைக்கும் பங்களித்துள்ளனர். அவர்களைப் பற்றிய போதுமான தகவல்கள் முழுமையாகக் கைவசம் இல்லாத நிலையில், இந்தப் பகுதியில் அவர்களில் சிலரைப் பற்றிய மிகச்சிறிய குறிப்புக்களை வாசர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சாண்டில்யன்

பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். இவர் ஒரு தீவிர வைஷ்ணவ பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர்.

கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஏதே கற்பனையில் இருந்த சிலர் இவரைப் பார்க்கச் சென்று, பார்த்து வியந்திருக்கிறார்கள் எனும் குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன.

நெற்றியில் எப்போதும் துலங்கும் நாமம், பஞ்சக்கத்துடன் கூடிய உடை, வீர வைஷ்ணவத் தோற்றம் பலருக்கும் வியப்பை அளித்திருக்கிறது.

ஆரம்பத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் நிரூபராகவும், பின்பு செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறிது காலத்திற்குப் பிறகு அதிலிருந்து விலகிய ‘சாண்டில்யன்’ இந்துஸ்தான் எனும் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

இந்துஸ்தான் பத்திரிகையில் இருக்கும்போது தான் இவருக்கு சினிமா உலகுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. 1952ல் வெளிவந்த ‘அம்மா’ என்கிற படத்தின் திரைக்கதை வசனத்தை இவர் எழுதியிருக்கிறார். திக்குரிச்சி சுகுமாரன் நாயர், பி.எஸ். சரோஜா நடித்த இப்படம் நல்ல வெற்றிப் படமாக அமைந்தது.

இதற்கு முன் 1949ல் ‘லேனா’ செட்டியாரின் ‘கிருஷ்ணபக்தி’ என்கிற படத்தில் ச.து.சு.யோகியார், சுத்தானந்த பாரதி ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதிய அனுபவமும் உண்டு.

1953ல் சித்தூர் வி.நாகையா தயாரிதத ‘என்வீடு’ என்கிற படத்திற்கும் சாண்டில்யன் வசனம் எழுதியுள்ளார். இப்படம் ஒரு அருமையான படம். நல்ல பெயரையும் வாங்கிய படம்.

1955ல் ‘போர்ட்டர் கந்தன்’ என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. மிகவும் சோகமான படம். எம்.கே.ராதா மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். இப்படத்திற்கும் வேறு இரு எழுத்தாளர்களுடன் இவர் கூட்டாக வசனம் எழுதியிருக்கிறார்.

திரைப்பட உலகம் நிரந்தரமல்ல என்று அறிந்து வைத்திருந்த சாண்டில்யன் மறுபடியும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வேலையில் அமர்ந்தார். அதில் ‘ஞாயிறு மலர்’ பகுதியை முழுமையாகக் கவனித்துக் கொண்டார். ‘உதயபானு, ‘இளையராணி’ போன்ற தொடர்புதினங்கள் இந்த மலரில் வெளிவந்தன.

இவரது புகழ்பெற்ற ‘ஜீவபூமி’ நாவல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளிவந்தது.

பத்திரிகைத் தொழிலை தொழிற்சங்க அமைப்பினுள் கொண்டுவர வேண்டுமென்று குரல் கொடுத்த ஆரம்பப் பத்திரிகையாளர்களில் ‘சாண்டில்யன்’ மிகவும் முக்கியமானவர்.

அதேபோல் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்ததோடு சில முக்கிய நிர்வாகப் பொறுப்புக்களையும் வகித்திருக்கிறார்.

இவர் ஒரு கட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். இவரது சரித்திர புதினங்கள் பல ‘குமுதத்தில்’ தொடராக வெளிவந்தது. இவர் தொடர் வெளிவரும் காலத்தில் ‘குமுதத்தின்’ சர்குலேசன் மிக அதிகமாக இருக்குமாம்.

முக்கியமாக ‘குமுத’த்தில் இவர் எழுதிய கன்னிமாடம், யவனராணி, கடல்புறா போன்ற தொடர்கள் வெகுஜென வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

இவரது மேற்கூறிய தொடர்களில் பெண்கள் பற்றிய வருணைகள் இணைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சிலர் இதை ஆபாச எழுத்து எனவும் கூறினார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் ‘சாண்டில்யன்’ எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார்.

இவர் எழுதிய நூல்களைப் பட்டியலிடுவது சற்று சிரமம்தான். ஏராளமாகக் குப்பை கொட்டியிருக்கிறார். இவர் எழுதிய சில முக்கயி நூல்கள். ராஜ பேரிகை, மதுமலர், மனமோகம், செண்பகத் தோட்டம், ஜீவபூமி, நங்கூரம், புரட்சிப்பெண், ஜலதீபம், ராஜதிலகம், ராஜமுத்திரை, கன்னிமாடம், கடல்புறா, யவனராணி மற்றும் ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு.

இவரது சரித்திரப் புதினங்களுக்கு இலக்கிய ரீதியாக பெரிய மதப்பொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்ந்த இலக்கிய விமர்சனங்கள்தான் இதற்குச் சரியான பதிலைச் சொல்ல முடியும்.

மணியன்

‘இதயம் பேசுகிறது’ மணியன் என்றால் அனைவருக்கும் தெரியும். ஆனந்த விகடனில் துணை ஆசிரியராக ஆரம்பத்தில் பணிபுரிந்து அதிபர் எஸ் எஸ் வாசன் அவர்களின் நன்மதிப்புக்கு ஆளானவர். முதலில் பல புதிய தொடர் புதினங்களைத் தொடர்ந்து விகடனில் எழுதி வெகு ஜன வாசகர்களிடையே மிகுந்த பாராட்டுதல்களுக்கு உள்ளானார். அதோடு விகடனில் இவர் எழுதிய பயணக் கட்டுரைகளும் இவருக்கு மிகவும் புகழை ஏற்படுத்திக் கொடுத்தன. பல காலம் விகடனில் பணியாற்றிய மணியன், வாசனின் ஆசியுடன் அதிலிருந்து விலகி, தனியாக ஒரு பத்திரகை ஆரம்பித்தார். அப்பத்திரிகைதான் ‘இதயம் பேசுகிறது’ வாரப்பத்திரிகை. இப்பத்திரிகையை மிகவும் சிறப்பாக நடத்தி, மக்களிடையே மிகவும் பிரபலப்படுத்தினார்.

இவர் எழுதிய ‘இதயவீனை’ நாவல், உதயம் புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு, 1972ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. எம்ஜிஆர்-மஞ்சுளா ஜோடி நடித்திருந்த இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மணியனும், எம்ஜிஆரின் விசுவாசியுமான வித்வான் வே. லட்சுமணனும் ஆவார்கள். இவர்கள் இருவருமே உதயம் புரொடக்ஷன்சின் உரிமையாளர்கள். இசையமைப்பாளர்கள் சங்கர் - கணேஷ் ஜோடி இப்படத்தின் வாயிலாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர்கள்.

இதற்கிடையில், மணியனின் இன்னுமொரு புதினமான இலவு காத்த கிளியோ, நடிகை சந்திரகாந்தாவின் சிவகாமி கலை மன்றத்தாரால் நாடகமாக நடிக்கப்பட்டு, மிகவும் பிரபலமடைந்தது.

இதனைத் தங்களது இரண்டாவது தயாரிப்பாக உதயம் புரொடக்ஷன் தயாரிக்கத் தொடங்கினர். கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் இளம¢கமலஹாசன், சிவகுமார், ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். படம் பெரிய வெற்றியை அடைந்தது.

1976ல் ‘இதயமலர்’ என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. தயாரிப்பாளர்கள் ஜெயேந்திரா மூவிஸ். இரண்டு தயாரிப்பாளர்களில் ஒருவர் மணியனின் மாமனார் ஜி.எம். குளத்து ஐயர், இதுவும் உதயம் தயாரிப்புதான். ‘நினைவு நிலைக்கட்டும்’ என்னும் மணியனின் புதினம்தான் ‘இதயமலர்’ திரைப்படம். இப்படத்தை நடிகர் ஜெமினி கணேசனும் எழுத்தாளர் தாமரை மணாளனும் கூட்டாக இயக்கியிருந்தார்கள்.

இதே ஆண்டில் மணியனின் ‘மோகம் முப்பது வருஷம்’ நாவல் சொர்ணாம்பிகா தயாரிப்பில் வெளிவந்தது. மணியனின் கதைக்கு மகேந்திரன் திரைக்கதை வசனம் எழுத எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்.

உதயம் புரொக்ஷன்கள் 1974ல் சிரித்து வாழ வேண்டும் (எம்ஜிஆர்- லதா), 1975ல் பல்லாண்டு வாழ்க’ (எம்ஜிஆர் - லதா) ஆகிய படங்களையும் தயாரித்திருக்கிறார்கள். இந்த பல்லாண்டு வாழ்க திரைப்படம் சாந்தாராமின் ‘தோ ஆங்கேன் பாரா ஹாத்’ எனும் இந்திப்படக்கதை.

இதற்குப் பிறகு உதயம் தயாரிப்பில் திரைப்படங்கள் எதுவும் தயாரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

லட்சுமி

திரிபுரசுந்திர என்பது இவரது இயற்பெயர். இவர் ஒரு டாக்டர். கல்லூரி நாட்களிலேயே எழுதத்தொடங்கிவிட்டார். இவரது பெண்மனம், காஞ்சனையின் கனவு, நாயக்கர் மக்கள் போன்ற தொடர் புதினங்கள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன.

இவர் தனது பணி நிமித்தம், சில காலம் தென் ஆப்பிரிக்காவல் வசிக்க வேண்டிய தாயிற்று.

இவர் எழுதிய காஞ்சனையின் கனவு எனும் நாவல் ‘காஞ்சனா’ என்கிற பெயரில் பட்சிராஜா பிக்சர் தயாரிப்பில் 1953ல் வெளிவந்தது. கே.ஆர். ராமசாமி - லலிதா இணைந்து நடித்த இப்படம் வெற்றி பெறவில்லை.

‘பெண்மனம்’ நாவலை ‘இருவர் உள்ளம்’ என்கிற பெயரில் படமாகத் தயாரித்து அப்படம் 1963ல் வெளிவந்தது. சிவாஜி கணேசன் - சரோஜா தேவி ஜோடி. இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கலைஞர் கருணாநிதியின் ஆரவாரமில்லாத அழகான வசனங்கள், ஜாம்பவான் எல்.வி. பிரசாத் அவர்களின் பண்பட்ட இயக்கம், சிவாஜிகணேசனின் மிகைப்படாத இயல்பான நடிப்பு இப்படத்தின் வெற்றிக்கு வழிகோலின.

இந்த இரண்டு கதைகள் தவிர லட்சுமியின் வேறு கதைகள் எதுவும் திரைப்படமாகத் தயாரிக்கப்படவில்லை.

சுரதா

பாவேந்தர் பாரதிதாசன் பாசறையிலிருந்து உருவானவர் கவிஞர் சுரதா. உவமைக் கவிஞர் சுரதா என்பார்கள். சுப்புரத்தினம் என்பது பாரதிதாசனின் பெயர். அவரது தாசனான சுப்புரத்தின தாசனின் சுருக்கம் சுரதா. திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய கவிஞர்களில் ஒருவர்.

கடற்கரையில், கப்பலில், வான் வெளியில் என பல்வேறு இடங்களில் கவியரங்கம் நடத்தும் உத்தியைக் கையாண்டவர். இலக்கியத் தரத்தில் ஏராளமான கவிதைகள் இயற்றியுள்ளார்.

இவருக்கு 1949லிருந்தே திரைப்படத்துடன் தொடர்பிருந்திருக்கிறது. பி.யு. சின்னப்பா, அஞ்சலிதேவி, கண்ணாம்பா நடித்த மங்கையர்க்கரசி திரைப்படத்திற்கு வசனமெழுதியுள்ளார்.

மேலும் 1952ல் எம்.கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர். ராஜகுமாரி, நடித்த அமரகவி 1953ல் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த ‘ஜெனோவா’ பேன்ற படங்களுக்கும் வசனமெழுதியிருக்கிறார்.

பல்வேறு திரைப்படங்களுக்கும் இவர் எழுதிய பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அந்த வரிசையில் அம்மையப்பன் (1954), புதுவாழ்வு (1957) திருமணம் (1958), தை பிறந்தால் வழி பிறக்கும் (1958) நாடோடிமன்னன் (1958), அவலை அஞ்சுகம்(1959) நல்ல தீர்ப்பு (1959) போன்ற படங்கள் முக்கியமானவை.

தைபிறந்தால் வழி பிறக்கும் படத்தில் இவர் இயற்றி சீர்காழி கோவிந்த ராஜனால் பாடப்பட்ட ‘அமுதும் தேனும் எதற்கு’

அருகினில் இருக்கையிலே’ என்கிற பாடல் தமிழ்த்திரையுலகில் சாகாவரம் பெற்ற பாடல்களில் ஒன்று.

ஆரோக்கியமான நீண்டகாலம் வாழ்ந்த சுரதா சில ஆண்டுகளுக்கு முன்பு தான் காலமானார்.

கவியரசு கண்ணதாசன்

பாரதிக்குப் பிறகு தோன்றிய தமிழ்க்கவிஞன் கண்ணதாசன் ஒருவன் தான் என்பதற்கு மேலாக இவரைப் பற்றி வேறொன்றும் எழுத வேண்டியதில்லல. கண்ணதாசனின் வாழ்க்கை திறந்த புத்தகம். அவரைப் பற்றி அனைவரும் அறிவன.

(பகுதி ஒன்று நிறைவு பெறுகிறது)

தொடரும் ...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.