வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
-------------------------

தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்து எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 1931ல் முதன் முதல் பேசிய தமிழ்ப்படம் காளிதாஸ். அதன் பிறகு இதுவரை சுமார் ஐயாயிரம் படங்களுக்கு மேல் வெளிவந்துவிட்டன என்று எண்ணிக்கையைச் சொல்லி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். இன்றளவும் உலகத்தரமான படம் ஒன்றைக்கூட நம்மால் தயாரிக்க இயலாமல்போனது மிகப்பெரிய அவலம்தான்.

ஏதோ, கதை பண்ணிக்கொண்டு வந்திருக்கிறோம். சமீபகாலமாக சில நல்ல இலக்கியவாதிகள் திரைத்துறைக்கு வந்திருப்பது சற்று ஆறுதலை அளிக்கிறது. இன்றைய தமிழில் முக்கிய படைப்பாளிகள் -- ஜெயமோகன் (நான் கடவுள்) ச. தமிழ்ச்செல்வன் (பூ), நாஞ்சில் நாடன் (சொல்ல மறந்த கதை) எஸ். ராமகிருஷ்ணண் (சண்டக்கோழி) போன்றோரின் -- வருகை, இனி வரும் காலத்தில் உன்னதமான திரைப்படங்கள் உருவாவதற்கு ஒரு தளம் அமைத்துக்கொடுக்கும் என்கிறவிதத்தில் நம்பிக்கையை அளிக்கிறது. மேலும் சில சிறந்த இளம் இயக்குனர்கள் நவீன தமிழ் இலக்கியத்தின் பரிச்சயத்தோடு திரைத்துறைக்கு வர ஆரம்பித்திருப்பதும் ஒரு நல்ல அடையாளம். எனவே இந்த இலக்கியவாதிகளின் புதிய வரவு நம்மை நம்பிக்கை கொள்ள வைக்கும் அதே நேரம், தமிழ்த் திரையுலகின் ஆரம்ப காலங்களிலிருந்து இத்துறைக்கு பங்களிப்பு செய்த, செய்து வரும் இலக்கியவாதிகள் சிலரை இந்நேரம் நினைவு கூரத்தோன்றுகிறது. இந்த மாய உலகத்தில் உலவிய இவர்களில் சிலரை இப்போது நினைவு கூர்வோம்.

 
     
     
     
   
தொடர்கள்
1
 
மாயலோகத்தில்
ஆசிரியர் பற்றி

------------------------
 
 

 

 
 

என்னைப்பற்றி நான் என்ன சொல்ல? அடிப்படையில் நான் ஒரு எழுத்தாளனே அல்ல! ஒரு பொறியாளனாக இருந்தேன். அவ்வளவுதான். ஆனால் எழுத்துடன் தொடர்புடைய குடும்பப் பின்னணி எனக்கு உண்டு. என் அண்ணன் ஒரு எழுத்தாளனாக இருந்து, மிகக்குறைவாக எழுதி, மிகக்குறைந்த வயதிலேயே எங்களை விட்டுப்பிரிந்தார். கிருஷ்ணன் நம்பி என் சகோதரர். என்னை விட எட்டு வயது பெரியவர். தேவையானபோதெல்லாம் கிருஷ்ணணன் நம்பியின் தம்பி என்கிற முகமூடியை அணிந்து கொள்வது சற்று சௌகரியமாக இருக்கிறது. கிருஷ்ணன் நம்பியின் இக்கியப் பின்னணி என்னை ஒரு நல்ல வாசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. பணியிலிருந்து 1998ல் ஓய்வு பெறுவது வரை ஒரு வாசகனாக மாத்திரமே இருந்து வந்தேன்.

2002ல் கிருஷ்ணன் நம்பி மறைந்து 25வது வருட நினைவு தினக்கூட்டம் ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றபோது அதனை ஒட்டி நம்பியைப் பற்றி புத்தகம் ஒன்றைத் தொகுப்பும் வாய்ப்பும் கிடைத்தது. சொல்லப்போனால் உருப்படியான ஒரு முதல் இலக்கியப் பணியாக இதைச் சொல்லலாம்.

'அமுதசுரபி' எனது சில கட்டுரைகளை அவ்வப்போது வெளியிட்டு என்னை எழுதத் தூண்டியது. ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முன்னாள் ஆசிரியர் அண்ணா கண்ணன் ஆகியோருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். 'ஆடியகாலும், பாடிய வாயும் சும்மா இருக்காது' என்பார்கள். அது எழுத்துக்கும் பொருந்தும். எழுதி, ஒரு முறை அதை அச்சில் பார்த்துவிட்டால், அதன் பிறகு அந்த மோகம் குறைவதே இல்லை. எனவே, எழுதத்தெரியாத நான் எதையாவது எழுதிப்பார்த்துவிட வேண்டும் என்கிற விழைவில் மீண்டும் எழுத முயற்சி செய்தபோது, சிறு வயதிலிருந்தே சினிமா கிறுக்கனாக இருந்த எனக்கு திரைப்படம் சார்ந்த விஷயங்களின்பால் ஆர்வம் ஏற்பட்டது இயல்பானது. இதன் விளைவாக 1940 தொடங்கி 1960 வரையிலான காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு, நான் பார்த்த சில நல்ல தமிழ்ப்படங்கள் பற்றிய குறிப்புகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையில் அப்படங்கள் பற்றிய குறிப்புகளை எழுத, ஆரம்பித்தேன். அதில் ஒரு சிலக் கட்டுரைகள் 'உயிரோசையில்' வெளிவந்தது.

கிருஷ்ணன் வெங்கடாசலம்

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS மாயலோகத்தில் TS கிருஷ்ணன் வெங்கடாசலம் தொடர்கள் வாயில்


பி. எஸ். ராமையா

கிருஷ்ணன் வெங்கடாசலம்  

வத்தலகுண்டு: இந்த ஊர் முன்பு மதுரை மாவட்டத்தில் இருந்தது. இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. வத்தலகுண்டு என்பதை ஆங்கிலத்தில் பத்லகுண்டு என்பார்கள். இந்த பத்லகுண்டு ஊரிலிருந்து திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்த ஊர் ஆத்தூர் என்கிற கிராமம். இந்த ஊரைச் சார்ந்த சுப்ரமணிய அய்யரின் மகன்களில் ஒருவர் ராமையா. சுப்ரமணிய அய்யர் பிழைப்புக்காக வந்து கவர்ந்த ஊர் பத்லகுண்டு. எனவே பத்லகுண்டு நாளடைவில் இவர்களுக்கு சொந்த ஊராக மாறியது. எனவே ராமையாவுக்கு பத்லகுண்டு சுப்ரமணிய ராமையா என்கிற பெயர் நிலைத்து பின்பு சுருங்கி பி எஸ் ராமையாவாக மாறியது. மிகவும் ஏழ்மையான குடும்பம். வத்தலக்குண்டுவில் மூன்றாவது ஃபாரம் (8ம் வகுப்பு) வரை தான் படிக்க முடிந்தது. சிறு வயதிலேயே தாயை இழந்தவர் ராமையா. வறுமை கொடூரமாகத் தாக்கியது. பிழைப்பைத் தேடி தனது 16வது வயதில் மதராஸ் வந்து சேர்ந்தார்.

1921ல் மதராஸ் பட்டினம் வந்த ராமையா வந்த இடத்தில் திக்குத் தெரியாமல் தவிக்க நேரிட்டது. மதராசில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நாட்களில் ஊருக்கே திரும்பி விடுவது என முடிவெடுத்து, திரும்பும் வழியில் சில காலம் திருச்சியில் ஒரு ஜவுளிக்கடையில் கணக்கு எழுதுதல், துணி அளந்து கொடுத்தல் போன்ற சில்லறை வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். அங்கேயும் அவரால் வெகு நாட்கள் நீடிக்க முடியவில்லை.
பி எஸ் ராமையா  

வேலையை விட்டு விட்டு வேறு எங்கெங்கெல்லாமோ உதிரி உதிரியாக கிடைத்த வேலையைப் பார்த்து வந்தவருக்கு மதராஸ் (இனிமேல் சென்னை) செல்ல வேண்டுமென்ற ஆசை மட்டும் தீரவே இல்லை. எனவே மறுபடியும் சென்னை சென்றார். பிழைப்பிற்கும், சாப்பாட்டிற்குமாக ஓட்டல்களில் சர்வராகப் பணிபுரிந்திருக்கிறார். எங்கெங்கெல்லாமோ சில்லறை வேலைகள். வாழ்க்கை நரகமாகத் தானிருந்திருக்கிறது. விடுதலைப்போராட்டம் தீவிரமாக இருந்த காலம். அதிலும் முக்கியமாக உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம் அப்போது நாடெங்கும் தீவிரமாக நடைபெற்று வந்தது.

அனேக இளைஞர்களின் மனநிலை அக்கால கட்டங்களில் விடுதலை போராட்டங்களில் கலந்து கொண்டு நாட்டிற்காகப் போராடும் உத்வேகம் நிறைந்ததாகவே இருந்தது. அந்த உத்வேகம் ராமையாவின் மனதிலும் எழுந்ததன் விளைவாக 1930ல் சென்னையில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். போராட்டத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். தொடர்ந்து, வேதாரண்யம் உப்பு சத்யாகிரகத்தில் கலந்து கொள்ளச் சென்ற ராமையா, கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைச்சாலை இவருக்குப் பல்கலைக்கழகமாக விளங்கியது. ராமையாவுக்கு சிறு வயதிலிருந்தே தமிழில் ஒரு தீராத காதல் இருந்திருக்கிறது. அலிப்பூர் சிறைச்சாலையில் வ.ரா., ஏ.என். சிவராமன் போன்ற இலக்கியவாதிகள் இவருடன் சிறைக் கைதிகளாக இருந்தனர். இவர்களுடன் ஏற்பட்ட தொடர்பு, ராமையாவை இலக்கியத்தில் செழுமைப்படுத்தியது. விடுதலையான பிறகு 1930ன் இறுதியில் மீண்டும் விதேசித்துணி எரிப்புப் போராட்டத்திலும் பங்கு பெற்றார்.

ஒரு சமயம் ஆனந்தவிகடன் ஒரு சிறு கதைப் போட்டி ஒன்றை அறிவித்து நடத்தியது. வருடம் 1933. இந்தப்போட்டியில் ராமையா கலந்து கொண்டார். இவர் எழுதிய 'மலரும் மணமும்' என்கிற சிறுகதை இப்போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. இதற்கு முன்பே இவர் விதியின் விளையாட்டு கோமளா அல்லது கைலாச அய்யரின் கெடுமதி என இரு நாவல்கள் எழுதியிருந்தாலும் அவைகள் பொருட்படுத்தக்கவை அல்ல. எனவே, 'மலரும் மணமும்' சிறுகதை முயற்சியே ராமையாவின் இலக்கியப் பணியின் முதல் படி எனக் கொள்ளவேண்டும். 'மலரும் மணமும்' வெற்றியைத் தொடர்ந்து பல சிறு கதைகள் எழுதினார். அவைகள் காந்தி, ஜெயபாரதி, போன்ற அக்காலப் பத்திரிகைகளில் வெளிவந்திருப்பதாகப் பதிவுகள் உள்ளன. இவற்றிற்கெல்லாம் பிறகு தான் 'மணிக்கொடி'யில் இவரது பிரவேசம் நிகழ்ந்தது. ஒரு கட்டத்தில் 'மணிக்கொடி' நின்று போகும் சூழல் ஏற்பட்டபோது, அதன் பொறுப்பை ராமையா தாமே எடுத்துக்கொண்டார். பின்பு சில சிறிய கருத்து வேறுபாட்டினால் 'மணிக்கொடி'யை விட்டு விலக வேண்டியதாயிற்று.

ஆனந்தவிகடன் இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டியது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வர ஆரம்பித்தார். இக்காலக்கட்டத்தில் இவருக்கு திரைப்படத்துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டது. 1940ல் முதன் முதலாக 'பூலோக ரம்பை' என்கிற படத்திற்கு வசனம் எழுதினார். அதைத் தொடர்ந்து மணிமேகலை, மதனகாமராஜன், குபேர குசேலா, சாலிவாஹனன், பக்த நாரதர், விசித்திர வனிதா என பல படங்களில் தொடர்ந்து பணியாற்றினார். சிரிப்பு நடிகர் சந்திரபாபுவின் சினிமா பிரவேசம் ராமையாவின் 'தன அமராவதி' என்கிற படத்தின் மூலம் நிகழ்ந்தது. சந்திரபாபுவை திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை பி எஸ் ராமையாவுக்கே உரித்தானது. 1943ல் இவன் திரைப்படம் பற்றிய நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். இந்நூல் திரைப்படத்துறை பற்றிய மிகவும் முக்கியமான பதிவுகளை உள்ளடக்கியது. இவரது திரைப்பணி 1949-50 வரையிலும் நீடித்தது. பிறகு இத்துறையை அவர் வெறுக்கத் தொடங்கினார்.

எஸ் வி சகஸ்ரநாமத்தின் சேவா ஸ்டேஜ் நாடகக் குழுவிற்காக பி எஸ் ராமையா அற்புதமான சில நாடகங்களை எழுதிக் கொடுத்தார். அவற்றில் பிரசிடென்ட் பஞ்சாட்சரம், போலீஸ்காரன் மகள், மல்லியம் மங்களம் போன்ற நாடகங்கள் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு பெரும் வெற்றியைப் பெற்றன. இவைகள் தீவிர நாடகமாக நடிக்கப்பட்ட பூவிலங்கு, தேரோட்டி மகன், பாஞ்சாலி சபதம் போன்றவைகளும் மிகப்பெரிய பெயரை ராமையாவுக்கு அளித்தன.

பி எஸ் ராமையா சுமார் 300 சிறுகதைகள் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. இவரது சிறுகதைகள் அடைந்த வெற்றியை இவர் எழுதிய நாவல்கள் பெறவில்லை என்றே தோன்றுகிறது என்றாலும் பிரேமஹாரம், நந்தாவிளக்கு, தினை விதைத்தவன், சந்தைப்பேட்டை போன்ற நாவல்கள் கவனத்துக்குரியவைகளாகக் கருதப்பட்டன. இரண்டு முறை 'மணிக்கொடி' பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய ராமையா, 'மணிக்கொடி காலம்' எனும் நூலை எழுதியிருக்கிறார். இந்நூல் மிகவும் முக்கியமான நூல். இந்நூலுக்காக இவருக்கு 1982ல் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1983ல் இவர் காலமானார்.

பி. எஸ். ராமையா பணியாற்றிய திரைப்படங்கள்

1940 பூலோக ரம்பை வசனம்
1940 மணி மேகலை வசனம்
1941 மதனகாமராஜன் கதை வசனம்
1943 குபேர குசேலா வசனம் (கே எஸ் மணியுடன் சேர்ந்து இயக்கம்)
1945 சாலிவாஹனன் கதை
1945 பரஞ்சோதி கதை வசனம்
1945 பக்த நாரதர் வசனம்
1946 அர்த்த நாரி கதை வசனம்
1946 விசித்திர வனிதா திரைக்கதை வசனம்
1947 தன அமராவதி கதை வசனம் இயக்கம்
1947 மகாத்மா உதங்கர் கதை வசனம்
1948 தேவதாசி கதை வசனம்
1949 ரத்னகுமார் கதை
1952 மாய ரம்பை வசனம்
1959 பிரசிடென்ட் பஞ்சாட்சரம் கதை வசனம்
1960 ராஜ மகுடம் வசனம்
1962 போலீஸ் காரன் மகள் கதை
1963 பணத்தோட்டம் கதை
1963 மல்லியம் மங்களம் கதை

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.