இதழ்: 32    சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
திரைப்படம் எதிர் இலக்கியம் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் - தியடோர் பாஸ்கரன்
--------------------------------
உன்னைப் போல் ஒருவன் - அம்ஷன் குமார்
--------------------------------
சில நேரங்களில் சில மனிதர்கள் - B.லெனின்
--------------------------------
சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்
--------------------------------
வரலாற்றுக்கு எதிராக ஜெயகாந்தன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
ஜெயகாந்தனின் அறிவை செப்பனிட்ட சினிமா - அம்ஷன் குமார்
--------------------------------
‘யாருக்காகவோ அழுதான்...!’- B.லெனின்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் 2 - வருணன்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
 
 
   
   

 

 

சினிமாவுக்குப் போன சித்தாளு

- ஜெயகாந்தன்


இந்த ‘சினிமாவுக்கு போன சித்தாளு’ கதையை ஒரு சிறுகதையாக ஒரே இதழில் எழுதவேண்டும் என்று தான் திட்டம் போட்டேன். இப்போதும்கூட இது ஒரு சிறுகதை தான். ஆனால் இதைக் கண்ணதாசன் மாத இதழில் ஐந்தாறு இதழ்களுக்கு மேல் தொடர்ச்சியாக எழுதினேன். இது வெளி வந்தபோது இதைப் பலரும் பாராட்டினார்கள். பாராட்டியவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தக் கதையின் நோக்கத்தைச் சந்தேகித்தார்கள். இப்படிச் சந்தேகித்தவர்களே இந்தக் கதையை எழுதி யாரையோ தனிப்பட்ட முறையில் நான் தரம் தாழ்த்திவிட்டதாகக் குறை கூறினார்கள்.

இவை இலக்கிய சம்பந்தமுடைய கருத்துக்கள் அல்ல என்பதால் அவற்றுக்குச் சமாதானமோ பதிலோ கூற வேண்டுவது என் பொறுப்பில் இல்லை.

இந்த கதையை புத்தகமாக வெளியிட நான் மிகுதியும் தாமதித்தேன். காரணம், இதனை பாராட்டியவர்களும், இதனை குறை கூறியவர்களும்-பெரும்பாலோர் – தவறான காரணம் கொண்டிருந்தமையே. யாரையோ எதிர்த்து அந்த யாருக்கோ சமதையான இன்னும் யார் யாரோ எனது எழுத்தை ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதா என்றும் நான் தயங்கினேன்.

இன்று நமது சமுகத்தில் சினிமாவுக்கும் சினிமா நடிகை-நடிகர்களுக்கும் இருக்கிற இடம் குறித்து நான் எப்போதுமே பகிங்கரமாகக் கருத்துத் தெரிவித்திருக்கிறேன். இவர்களுக்கிடையே இருக்கும் எந்தக் கோஷ்டியிலும் பங்கு பெறாதிருப்பதே இவர்களை மறுக்கிற முதல் குணாம்சம்.

அறியாமையும், பேதமையும் கொண்ட மக்கள் இவர்களால் சுயாபிமானமிழந்து திரிகிறார்கள். அவர்களின் அறிவும், மனமும், ரசனையும், ஒழுக்கமும் சிதைந்து போவதற்கு நமது சினிமாக்களும் அது சம்மந்தப்பட்ட நடிக, டைரக்டர், தயாரிப்பாளர்களும் பெரும் பொறுப்பு வகிக்கிறார்கள். சொல்லப் போனால் அவர்கள் கூட அவர்கள் வகிக்கிற அந்தப் பொறுப்புக்குக் காரணமாக மாட்டார்கள். அவர்களும் அதற்குப் பலியாகி விட்டவர்களே ஆவர்.

பொய்யொழுக்கமும் போலிப் பண்புகளும் அங்கே ஒரு நிர்ப்பந்தமாக ஒவ்வொருவர் மீதும் திணிக்கப்பட்டிருக்கிறது. எனவே தான் அவர்களின் செயல் ஒன்றாகவும் சொல் மற்றொன்றாகவும், நோக்கம் வேறொன்றாகவும் சுய முரண்பாடு கொண்டிருக்கின்றன. வெறும் வர்த்தகச் சூதாடிகள் கருத்துச் சுதந்திரம் என்பதன் பேரால் இந்த மக்களின் நல்லுணர்வுகளை நாசப்படுத்தி அவர்களின் சொந்த வாழ்க்கையையே சினிமாதனப்படுத்திப் பொய்மையில் மூழ்க்கடிக்கிற கொடுமை நாளும் இங்கு வளர்ந்து வருகிறது. தங்கள் சொந்த மக்களின் மனமும், தரமும், குணமும், பண்பும் சீரழிவது குறித்து இந்த பணவேட்டைக்காரர்களுக்குக் கொஞ்சமும் உறுத்தல் இல்லை. அப்படிப்பட்ட உள்-உறுத்தல்அவர்களறியாமல் அவர்களிடம் ஏற்படுகிறபோது, புராணம், தமிழ்மொழி, கற்பு, பெண்மை, கடமை, தியாகம், தர்க்கம், கலை போன்ற ஆர்ப்பாட்டமான பெரிய வார்த்தை கலை லாப வேட்டை கருதிப் பொய்யாய்ப் பிதற்றிக் கொண்டு இருக்கிற கேவலத்திலேயே அவர்கள் மேலும் அமிழ்ந்து போகிறார்கள். ஆனால் இவற்றின் ஊடாகவும் அடிப்படையாகவும் அவர்கள் தீர்த்துக்கொள்கிற ஒரே வேட்கை கேவலமான இச்சைகளேயாகும். இந்த Erotic Pleasuresக்காகத்தான் நமது சமுகத்தின் எல்லாத் துறைகளும் செயல்படுகின்றனவோ என்று தோன்றுகிறது.

இந்த கேவலமான சினிமாத்தனம் பத்திரிக்கைகளையும், எழுத்தாளர்களின் படைப்புகளையும், படித்த நகரத்து இளைஞர்களையும் சமுகத்தின் மேல் தரத்து மனிதர்களையும் முற்றாகப் பீடித்திருக்கிறது என்ற காரணத்தினாலேயே குறையான நாசத்துக்கு ஆளாகியிருக்கும் நகரத்துக் கூலிக்கார வர்க்கத்திலிருந்து ஒருத்தியை நான் தேர்ந்தெடுத்தேன்.

இந்த தன்மைகளினால் அறியாத மக்கள் பாதிக்கப்பட்டு அதை உணரும்பொது எவ்வளவு அவமானமுறுவார்கள் என்று எத்தனையோ சந்தர்ப்பங்களில் எண்ணி இருக்கிறேன் நான்.

நான் சிறுவயதில் ‘பக்த மீரா’ படத்தை பார்த்த போது மீராவை மணந்துக்கொள்ளும் அந்த ரானாவுக்காக மிகவும் பரிதாபப்பட்டு மனம் உருகியிருக்கிறேன். அது பற்றிய ஜீவாத்மா – பரமாத்மா விளக்கங்கள் எல்லாம் அறிய நேர்ந்த பின் சமாதானமடைந்திருக்கிறேன். கண்ணன் என்கிற மகா சமுத்திரம் போன்ற ஒரு தத்துவப் பின்னணிஇல்லாவிடில் மீராவின் கதையில் அவள் தன் புருஷனையும் விட்டு அவன் காதலையும் காலில் மிதித்துவிட்டு, திறந்த கூண்டிலிருந்து விடுதலையாகிப் போவது எவ்வளவு கொடுமையான, நெறிகேடான நிகழ்ச்சியாக இருக்கும்! ஆனால் மீராவின் கதை உடம்பிலிருந்து உயிர்ப்பறவை பிரிகிற இயற்கையான சோகம் போன்றது.

குடும்ப வாழ்க்கையையும், கணவன்-மனைவி காதலையும் துறப்பதற்கு அதைவிடவும் அர்த்தமுள்ள உயர்வான இன்னொரு நிலை அமைவது எவ்வளவு சோகம்தரினும் அது சம்மந்தப்பட்டவர்களின் வீழ்ச்சியோ, துரோகமோ, ஒழுக்கக் கேடோ ஆகாது. அதுவே உயர்வு; அதுவே மனித வாழ்வின் மேல் நிலையாகும்.
ஆனால் கேவலம் பிழைப்புக்காகக் கிருஷ்ணன் மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு தெருவில் திரிகிற பகல் வேஷக்காரனைக் கண்டு மயங்கி விடுகிற பேதைகளுக்கு மீராவுக்குக் கொடுத்த ஸ்தானத்தைத் தருவது ஒரு சமுதாய வீழ்ச்சிக்கு அடையாளம். இப்படிப்பட்ட வீழ்ச்சியினால் கலைக்கோ, அது சம்மந்தப்பட்ட மனிதர்க்கோ, வாழ்க்கைக்கோ ஒரு நற்பயனும் கிட்டாது.

சினிமா சம்மந்தப்பட்டவர்களும் மனிதர்களே, எனவே உன்னதமான நோக்கத்துடன் ஒரு வீழ்ச்சியைக் குறித்து நிதர்சனமான வாழ்க்கை ஆதாரத்துடன் நான் காட்டிய இக்கதையைப் பெருந்தன்மையோடாவது இவர்கள் பார்த்திருக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையோ நான் ஏதோ சொல்லிவிட்டதாக அங்கலாய்ப்பவர்களுக்கு உள்ள தனிப்பட்ட நலன்களை நான் புரிந்து கொள்கிறேன்.

அவர்கள் தயாரிக்கிற கதையிலும், நாடகத்திலும், சினிமாவிலும் வாழ்க்கையில் உள்ள மனிதர்களைக் காட்ட அவர்களும் தானே முயல்கிறார்கள்? ஒரு செட்டியார் அல்லது வக்கீல், ஓர் எழுத்தாளன் என்றெல்லாம் இவர்களால் கேலியாகவும், கொடுமையாகவும் சித்தரிக்கப்படும் சம்பந்தப்பட்டவர்கள் யாரேனும் தமக்கு மிகவும் பொருந்தி வருகிற காரணத்தால் தங்களைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்துவிட்டார்கள் என்று கொள்வது சரியா?

தொப்பி சரியாயிருந்தால் அணிந்து கொள்ளட்டும். நான் தடுத்துச் சமாதானம் கூற முடியாது. எனது இந்தக் கதை மட்டுமல்ல; எனது எழுத்துக்கள் எல்லாமே எவர் எவர் மனத்தையோ உறுத்தும். அந்த உறுத்தல் நல்லது. அதற்கு நானா பொறுப்பு?

“பொழுதுபோக்கு, கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தல்” என்ற ஓட்டை வாதங்களையே இவர்கள் ஓயாமல் பதிலாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய ‘பொழுதுபோக்கும்’ ‘கொஞ்சம் நேரம் மகிழ்ந்திருத்தலும்’ ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்றும், இதில் சிக்காமல் உயர்வு காண வேண்டும் என்றும் ஒரு சிலருக்கேனும் தோன்றுகிற போது அதற்காவது மரியாதை தர வேண்டாமா? என்கிற பதைப்புத்தான் இக்கதை எழுதத் தூண்டியது.

சினிமா உலகை சீர்திருத்துகிற நோக்கமோ, சினிமா நடிகர்களைப் பழிக்கிற நோக்கமோ எனக்கில்லை. நமது சினிமா உலகமும், அது சம்பந்தப்பட்டவர்களும் அப்படி ஒரு நோக்கமின்றியே பழிக்கும் பாவத்துக்கும் இலக்காகி சீரழிந்துவருவதை நான் எவ்வளவு பரிதாபத்தோடு பார்கிறேன் என்று இக்கதையின் மூலம் எனக்கே தெரிகிறது கதையின் களமும் பாத்திரங்களின் பாஷையும் பிரச்சனையின் தரமும் தாழ்ந்து கிடப்பதால் ஒரு படைப்பின் நோக்கம் தாழ்ந்து விடாது.

இந்த புத்தகத்தில் உள்ள ஓரங்க நாடகம் ‘பலவீனங்கள்’ தினமணி கதிரில் வெளிவந்தது.

‘”நாடகம் நடிப்பதற்காக மட்டும் எழுதப்படுவதில்லை” நாவல் மாதிரி, சிறுகதை மாதிரி படிப்பதற்காகவே, பிறமொழியிலும் பல ஆன்றோர்கள் அது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். அந்த மரபில் தான் இதை எழுதினேன். இன்றைய நவீன இலக்கிய உலகில் இந்த முயற்சி குறைந்து காணப்படுகிறது. இதற்கு ஓர் அமைதியான, அந்தரங்கமான ரசனை தேவை. அந்தப் பழக்கமின்மையால் சிலருக்கு இது புதுமையாகவும், விநோதமாகவும் ஆரம்பத்தில் தோன்றலாம்.இந்த உத்தியும் நயமும் சிறப்பாக அமைந்து காணுமிடத்து நமது வாசகர்கள் இம்முயற்சிகளை வரவேற்பர் என்பதிலே எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்த ஓரங்க நாடகத்தின் முதற் பகுதியில் நான் ஆங்கில உரையாடல்களை அப்படியே தமிழ் எழுத்தில் எழுதியுள்ளேன். நான் படித்த மேலை நாட்டு (ஆங்கில) நாடகங்களில் அவர்கள் இப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்கையில் அது பிரெஞ்சு, ஜெர்மன், அல்லது ஸ்பானிஷ் ஆகிய எந்த மொழியாயினும் அதை அப்படியே எழுதி விடும் மரபைக் கைக்கொண்டு இருக்கிறார்கள். அதில் அவர்களுக்கு இருக்கும் வசதி என்னவெனில் இந்த மொழிகளுக்குப் பொதுவாக ரோமன் லிபி இருப்பதே. நமக்கு அந்த வசதி இல்லாததால் நான் ஆங்கிலத்தைத் தமிழ் லிபியில் எழுதியுள்ளேன். எல்லா வாசகர்களின் சௌகரியத்துக்காக அந்த உரையாடல்களை மொழிப்பெயர்த்தும் தந்துள்ளேன். ஏனெனில், ஆங்கிலம் நன்கு அறிந்தோர்கூட தமிழில் அப்பதங்களுக்குச் சரியான உச்சரிப்புக் கிட்டாமல் மயங்க நேரிடும்.

இதன் முதல் பகுதியில் தான் இந்நிலை இருக்கும். பின் வரும் காட்சிகளில் உரையாடல்கள் தமிழிலேயே இருக்கும் என்பதால் வாசகர்கள் இந்தச் சிரமத்தைச் சகித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இவற்றை வெளியிட்ட கண்ணதாசன், தினமணி கதிர் ஆகிய பத்திரிக்கைகளுக்கும் புத்தகமாக வெளியிடும் மீனாட்சி புத்தக நிலையத்தாருக்கும் எனது நன்றி உரியது.

20.9.72
சென்னை-31 த.ஜெயகாந்தன்

நன்றி: மீனாக்ஷி புத்தக நிலையம்.

சினிமாவிற்கு போன சித்தாளு புத்தகத்தில் ஜெயகாந்தன் எழுதிய முன்னுரையை ஜெயகாந்தன் சிறப்பிதழுக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.

தட்டச்சு உதவி: ஜெயகாந்தன் (படிமை மாணவர்)

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: https://www.facebook.com/ArunThamizhstudio

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </