இதழ்: 32    சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
திரைப்படம் எதிர் இலக்கியம் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் - தியடோர் பாஸ்கரன்
--------------------------------
உன்னைப் போல் ஒருவன் - அம்ஷன் குமார்
--------------------------------
சில நேரங்களில் சில மனிதர்கள் - B.லெனின்
--------------------------------
சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்
--------------------------------
வரலாற்றுக்கு எதிராக ஜெயகாந்தன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
ஜெயகாந்தனின் அறிவை செப்பனிட்ட சினிமா - அம்ஷன் குமார்
--------------------------------
‘யாருக்காகவோ அழுதான்...!’- B.லெனின்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் 2 - வருணன்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
 
 
   


   

 

 

சில நேரங்களில் சில மனிதர்கள்

- B.லெனின்


உண்மையான கலை, உண்மையான விஞ்ஞானம் தியாகத்தின் அடிப்படையில் தோன்றுபவை; மனிதகுலத்தை ஒன்றுப்படுத்தும் கலை முயற்சிகள் நல்லவை; அழகானவை. மனிதர்களுக்குள்ளே பேதம் உருவாக்கும் கலை தீயது; கோரமானது.

தீமையைத் தவிர்ப்பதும் நன்மையை நிலை நாடுவதுமே நல்ல விஞ்ஞானம்; நல்ல கலை.

-டால்ஸ்டாய், ரொமெய்ன் ரோலெந்துக்கு எழுதிய கடிதத்திலிருந்து.


‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கதையை திரைப்படமாக தயாரிக்க அனுமதிகேட்டு என் தம்பியும் தயாரிப்பாளருமான இருதயநாத், திரு. ஜெயகாந்தனை அணுகி அனுமதி கேட்டார். அதற்கு “சினிமாக்காரர்கள் எல்லாம் திருடர்களாயிற்றே. எல்லா கதைகளையும் திருடுவீர்களே... இதற்கெல்லாம் எதற்கு அனுமதி... போனால் போகிறது; போய் திருடிக்கொள்ளுங்கள்” என்றார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ சினிமா ஆன கதையைவிட, அது ‘கதை’யான கதையே தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.

தெரிந்தோ தெரியாமலோ ‘கலை’ இயக்கமாக மாறிய நிகழிச்சி அது!

‘ஒரு தத்துவம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் போது அதற்கு ஒரு ‘பௌதீக சக்தி’ கிடைத்துவிடுகிறது’ என்று சொல்லப்படுவது போல.

அந்த ‘பௌதீக சக்தி’, ‘ மக்கள், தங்களிடையே உள்ள சமுக உறவுகளை அழிக்கவோ’, ஆக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ, குறைந்தபட்சம் தங்களிடையே விமர்சனம் செய்து கொள்ளவோ இட்டுச் செல்கிறது. அதை ‘அக்னி பிரவேசம்’ தமிழகத்தில் முன் மாதிரியாக செய்து காண்பித்தது.

ஆசாரமான பிராமண குடும்பத்தில் பிறந்த இக்கதையின் நாயகி ‘கங்கா’, கல்லூரிவிட்டு வரும் வழியில் அவன் கயவனா... காமுகனா... என்று அறிந்து கொள்ள முடியாதவனும், ஊர்பேர் தெரியாதவனுமான ஒருவனால் தன்னை உணர்ந்தா...? உணராமலா...? என்ற கேள்விக்கு அப்பாற்பட்டு ‘தன்னை இழக்கிறாள்...!’
தன் மகளின் நிலைகண்ட தாய் பதறிப் போனவளாய் செய்வதறியாது திகைக்கிறாள், இங்கும் அங்கும் ஓடியவளாய், கடைசியில் ‘கங்க ஜலத்தால், கங்காவை கழுவுகிறாள், அதன் மூலம் அவள் ‘பாவத்தை’ கழுவி விட்டதாக கூறுகிறாள்.

“நீ சுத்தமாயிட்டேடி கொழந்தே... சுத்தமாயிட்டே...!”

ஒரு சமயம் ருஷ்யாவின் மாபெரும் எழுத்தாளர் மைக்கேல் ஷோலக்கேவ் தனக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்ட போது கூறினார்: ‘ஏற்கனவே இருக்கும் வாழ்க்கை நிலவரத்தை எனது எழுத்துகள் ஓரங்குலம் உயர்த்தினாலே எனது இலக்கிய பணியை ஆற்றியவனாவேன்.’

அது போல ஒவ்வொரு படைப்பு முயற்சியும், கலை முயற்சியும் ஏற்கனவே இருக்கும் தேங்கிய, விரக்தி தோய்ந்த, கடினமான வாழ்க்கையை மக்கள்பால் கொண்ட அன்பினால் ஒரு நூலிழை உயர்த்துவதற்காகவாவது உதவ வேண்டும்.”

‘அக்னி பிரவேசம்’ மக்களின் விரக்தி தோய்ந்த வாழ்க்கையை ஒரு நூலிழை உயர்த்தியதா... தாழ்த்தியதா... என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் சிலருக்கும், எழுத்தாளர்கள் மத்தியிலும், குறிப்பாக ‘பெண்’ எழுத்தாளர்கள் மத்தியிலும் அதிகமாக எழுப்பப்பட்டது, எதிர்ப்பு அறிக்கைகள் எழுதப்பட்டன.

ஒரு படி மேலே போய் சிறுகதை ஒன்று அன்றைய பெரிய எழுத்தாளர் ஒருவரால் எழுதப்பட்டதாம்.
அக்கதையில் ‘கற்பிழந்த...?’ கதாநாயகியை ‘தண்ணீர் விட்டு அணைப்பதற்கு பதிலாக தீயிட்டு எரிக்கப்பட்டதாக’ இருந்தது.

இப்படி ‘கதையால்’ இன்னொரு கதையை விமர்சித்த நிகழ்ச்சி இதற்கு முன் நிகழ்ந்ததாக தெரியவில்லை.
அப்படியானால் ‘கங்காவை’ என்னதான் செய்வது...?

ஜெயகாந்தன் தொடர்ந்தார்...

தன மகளின் நிலை கண்ட தாய், பதறிப் போனவளாய் செய்வதறியாது திகைக்கிறாள். இங்கும் அங்கும் ஓடியவளாய் கடைசியில் கூச்சலிடுகிறாள். குடும்பத்தை கூட்டுகிறாள்.

கங்கா திகைக்கிறாள்...!

கங்கா கற்பிழந்ததாகவும், முறை கெட்டதாகவும், நெரிகெட்டதாகவும், கூறி ஏராளமான முத்திரைகள் அவள் குடும்பத்தாராலேயே சரமாரியாக குத்தப்படுகின்றன.

கங்கா என்ன ஆனாள்...?

கங்கா காய்ந்து போன கதை தான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.

எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு மட்டும் தெரிந்த கங்காவை தமிழ் மக்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்க வேண்டுமானால், அது திரைப்படமாக வேண்டும்!

ஆனால் ஜெயகாந்தனோ...

சினிமாகாரர்கள் வியாபாரிகள், திருடர்கள் என்று ஏகமாய் திட்டியவராய், கடைசியில் இயக்கப் போவது பீம்சிங் என்று தெரிந்து திரைக்கதை எழுதித் தர ஒத்துக்கொண்டார். “சினிமா ஒரு வியாபாரம், இதில் லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. தரமான படம் எடுக்கிறோம் என்று நாங்கள் நஷ்டப்படக் கூடாதென்று ஜனரஞ்சகமான படத்தை தயாரிக்க வேண்டியிருக்கிறது. மேலும்; வெற்றி பெற்றவர்கள் பற்றிதான் பேசுவார்கள்; தேடி வருவார்கள், தோல்வி அடைவது வெகு சுலபம், தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் இவர்கள் எல்லோரையும் நான் திருப்தி படுத்த வேண்டியிருக்கிறது’ இது அரைத்த மாவையே அரைக்கும் அசட்டுத்தனமானவர்களின் கூற்று.

இந்த உலகத்தில் எல்லாம் வியாபாரமானது தான், வியாபாரம் ஒன்றும் குற்றமில்லை, அது ஒரு வாழ்க்கை முறை, ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு தர்மம் இருப்பது போலவே வியாபாரத்திற்கும் ஒரு தர்மம் இருக்கிறது. அது போல் கலை, இலக்கியம், அரசியல், சினிமாவுக்கும் ஒரு தர்மம் இருக்கிறது.

அவை மனிதர்களை மகிழ்விப்பதாகவும், அவர்களது ரசனையை வளர்ப்பதாகவும், அவர்களது பிரச்சனைகளை விளக்குவதாகவும் அவர்களது முன்னேற்றதிற்கு உதவுவதாகவும் இருத்தல் வேண்டும்.

மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றையாவது அது சரியாக பூர்த்தி செய்தது என்பதற்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’., அது கருப்பு வெள்ளை படம் என்பதையும் மீறி மாபெரும் வெற்றி பெற்றது என்பதே ஆதாரம்.
எதிலும் விடாப்பிடியானவரும், தன எழுத்துக்களில் சிறு திருத்தத்தைக் கூட எதிர்ப்பவருமான ஜெயகாந்தன், தான் எழுதிய திரைக்கதையின் ஒவ்வொரு காட்சியையும் குறைக்காமல் அப்படியே எடுக்கச் சொன்னார்.
சொன்னப்படி செய்யப்பட்டது. விளைவு... எடிட் செய்ததை போட்டுப் பார்த்தால் படம் 18000 அடி இருந்தது. பார்த்தவர்கள் முணுமுணுக்கத் தொடங்கினார்கள். வியாபாரம் ஆவதில் சிக்கல் ஏற்படும் போல் தெரிந்தது. சேலம் விநியோகஸ்தரான திரு. ஆறுமுகம் கூட “என்ன! படம் முழுக்க சமைப்பதும் சாப்பிடுவதும், போன் பேசுவதுமாக இருக்கிறதே என்றவர், பின் படத்தை திரையிட்டு நல்ல லாபத்தை ஈட்டியதை இன்றுவரை கூட சொல்லிக்கொண்டே இருப்பார்.

முடிவில் ஜெயகாந்தனின் அனுமதியுடன் திருத்தம் செய்ய அமர்ந்த இயக்குனர், தானே ஒரு எடிட்டராகவும் இருந்ததால் சிறிது சிறிதாக 5000 அடிகளை குறைத்து 13000 அடி படமாக ஆக்கி போட்டுக் காட்டியவுடன், ஜெயகாந்தன் சினிமா கலையின் நட்டத்தை, அதன் திறனை இன்னும் சற்று அதிகமாகப் புரிந்து கொண்டதாலோ என்னவோ, புத்தகமாக வெளியிடப்பட்ட ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ திரைக்கதையின் முன்னுரையில்.

இதனை இதனால் இவன்முடிப்பான் – என்றாய்ந்து,
அதனை அவன்கண் விடல்.

என்ற குரல் வரிகளை எழுதினர்.

கதையின் முடிவில் ‘கங்கா’வின் நடவடிக்கைகளில், சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று பெரும்பாலான தமிழ் ரசிகர்களின் சார்பில் சொன்ன இயக்குனருக்கு மறுப்பேதும் சொல்லாமல் இசைவு தந்தார்.

திரைக்கதை புத்தகத்தையும், திரைப்படத்தையும் ஒப்பிட்டு பார்ப்பவர்களுக்கு இது தெரியும்.
கதாசிரியரும், இயக்குனரும் தங்களுக்கென்று ஒவ்வொரு ‘இமேஜ்’ இருந்தாலும், ஒரு பொதுவான, புதிய முயற்சிக்கு தங்களை விட்டுக் கொடுத்துக் கொண்டு உழைத்ததை சொல்ல வேண்டும் என்பதற்காக மேற்கண்ட விவரங்களை சொல்லி வைக்கிறேன்.

புதிய புதிய முயற்சிகள் நடக்கும் போதெல்லாம் அதற்கு தடங்கல் வருவதும், முரண்பாடுகள் பெருகுவதும் என்றும் சினிமாத்துறையில் சாசுவதமாக உள்ளதை வெற்றி பெற்ற இயக்குனர்கள் கூட மறுக்க மாட்டார்கள்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ கதாநாயகி லட்சுமி, இந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான இவர் இதே படத்திற்காக மத்திய அரசின் ‘ஊர்வசி’ பட்டதையும் பெற்றார்.

இக்கதையின் ஆழத்தையும், கதாபாத்திரத்தின் பரிமாணத்தையும் மெருகூட்ட, நீண்ட நாட்களாக படப்பிடிப்பு நடந்ததால் ஏற்பட்ட பாதிப்பினால், படத்தின் கடைசி கட்ட வேளைகளில் ஒத்துழைப்பதை குறைத்துக் கொண்டார்.

“சில நேரங்களில் சில மனிதர்களில்” நீங்கள் பார்த்தது நடிகை லட்சுமியை தான், ஆனால் பெரும்பாலான காட்சிகளில் நீங்கள் கேட்டது லட்சுமியின் குரலை அல்ல, அது வேறொரு நடிகையின் குரல், அப்பெண்ணும் இதே படத்தில் ஒரு ‘ஆங்கிலோஇந்திய’ பெண்ணாக நடித்து இருந்தார்.

என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா...?

ஆனால் அதற்குப்பின் ‘ஊர்வசி லட்சுமி’ இதே திரைப்பட கலைஞர்களிடம் அதிக அன்பு பாராட்டியதையும், அடுத்த தயாரிப்புகளில் தன் முழு ஒத்துழைப்பை கொடுத்ததையும் இங்கே நினைவு படுத்தியே ஆக வேண்டும்.

நன்றி: நக்கீரன் பதிப்பகம்.

படத்தொகுப்பாளர் பீ.லெனின் எழுதிய சினிமா நிஜமா? என்கிற புத்தகத்தில் இருந்து இந்தக் கட்டுரை பயன்படுத்தப்பட்டுள்ளது.

தட்டச்சு உதவி: ஜெயகாந்தன் (படிமை மாணவர்)

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: https://www.facebook.com/ArunThamizhstudio

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </