இதழ்: 32    சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
திரைப்படம் எதிர் இலக்கியம் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் - தியடோர் பாஸ்கரன்
--------------------------------
உன்னைப் போல் ஒருவன் - அம்ஷன் குமார்
--------------------------------
சில நேரங்களில் சில மனிதர்கள் - B.லெனின்
--------------------------------
சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்
--------------------------------
வரலாற்றுக்கு எதிராக ஜெயகாந்தன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
ஜெயகாந்தனின் அறிவை செப்பனிட்ட சினிமா - அம்ஷன் குமார்
--------------------------------
‘யாருக்காகவோ அழுதான்...!’- B.லெனின்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் 2 - வருணன்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
 
 
   


   

 

 

வரலாற்றுக்கு எதிராக ஜெயகாந்தன்

- யமுனா ராஜேந்திரன்


ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் பிறந்து எழுபதுகளில் வாலிபப் பருவம் எய்திய வாசிப்புப் பழக்கமுள்ள எவரையும் தம்மை நோக்கி வளைத்தவர்கள் ஜெயகாந்தனும் தி.ஜானகிராமனும். மோகமுள், அம்மா வந்தாள், மரப்பசு என தி.ஜானகிராமனின் நாவல்கள் இக்காலத்திய இலக்கிய வாசகர்களின் ஆதர்சப் பெண்களை உருவாக்கின. பாரிசுக்குப் போ, சில நேரங்களில் சிலமனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஒருவீடு ஒரு மனிதன் ஒரு உலகம் போன்ற ஜெகேவின் நாவல்கள் தன் சுதந்திரம் குறித்து உரத்துச் சிந்திப்பவனாக இலக்கிய வாசகனை வார்த்தன. நா.பாவின் குறிஞ்சி மலர், பொன்விலங்கு போன்ற நாவல்கள் இறக்கை கட்டாத தேவதைகளை சங்ககாலத்தலிருந்து எமது அறைகளுக்குள் கொண்டு வந்து எம்மைக் கொண்டாட வைத்தன.

ஜெயகாந்தனது படைப்புகளை அவரது (1). சிறுகதைகளின் காலம், (2).நாவல்களின் காலம், (3). அவரது ஆன்மீகக் குறுநாவல்களின் காலம் என வரையறுக்கலாம் என நினைக்கிறேன். இதனை முறையே அவரது (1). கம்யூனிஸ்ட் கட்சிக் காலகட்டமான 1952-1964 தாமரை, சரஸ்வதி, சமரன், சாந்தி என கம்யூனிஸ்ட் பத்திரிக்கை எழுத்துக்களின் காலம் எனவும், (2). ஆனந்தவிகடன்-தினமணிக்கதிர் காலம் எனவும், (3). பத்திரிக்கைகள் தாண்டி நேரடியாகக் குறுநாவல்களாகவும் கல்பனா மாத இதழ் நாவல்களாகவும் வெளிவந்த காலம் எனவும் சமாந்தரமாக வரையறுத்துக் கொள்ளலாம்.

அவருடைய மாஸ்டர் பீஸ்கள் அனைத்தும் அவரது ஆன்மீக நாவல்கள் அல்லாத காலத்தவைதான். அடித்தட்டு மக்களின் வாழ்வைச் சொன்னது அவரது சிறுகதைக்காலம். அதிலிருந்து நகர்ந்து மத்தியதரவர்க்க வாழ்வைச் சொன்னது அவரது நாவல்களின் காலம். அடித்தட்டு மக்களின் துயரமான வாழ்வினிடையிலும் அவர்தம் மேன்மையை வலியுறுத்தின அவரது சிறுகதைகள். அவரது 13 வயது முதல் 30 வயது வரையிலான விளிம்புநிலை மாந்தருடனான அவரது வாழ்வின் அனுபவத்தகிப்பு நிறைந்தவை அவரது அக்காலகட்டக்கதைகள். உன்னைப் போல் ஒருவன், இலக்கணம் மீறிய கவிதை, கோகிலா என்ன செய்துவிட்டாள், ரிஷிமூலம், விழுதுகள் போன்றன இவ்வகை கிளாசிக்குகள்.

நாவல் எனும் வடிவமே மத்தியதரவர்க்கம் தனது தனிமனித சுதந்திரத்தை நிலவும் சமூக நெறிகளுக்குச் சவாலாக முன்வைத்துப் பேசுவதுதான். ஆண் பெண்கள் இடையிலான பிணக்குகளில் பரஸ்பரமான சுதந்திரம், பாலுறவு மீறல்கள், உடமை மறுப்பு, சுதந்திர வாழ்வு போன்றன இத்தகைய அவரது நாவல்களின் கருவாக இருந்தன. இதுவும் அவரது அனுபவத்தகிப்பு நிறைந்த காலகட்டம். பாரிசுக்குப் போ, ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் மூன்றும் இந்த வகை கிளாசிக்குகள்.

ஜய ஜய சங்கர எழுதிபின் வெளியான அவரது நாவல்களான ஊருக்கு நூறு பேர், ஆயுதப்பசி என ஹர ஹர சங்கர வரை அவரது அனுபவத் தகிப்பும் தேடலும் நீர்த்துப்போன நிலவும் வாழ்வினின்று முற்றிலும் விலகிய அப்பாலை உலகில் சஞ்சரிக்கிற பிரதிமைகள் நடமாடுகிற எழுத்துக்களாகவே இருந்தன. சமதர்ம இலட்சியவாதமும் விளிம்பு நிலை மக்களின் காதலனாகவும் இருந்த ஜெயகாந்தன் அதனை மண்ணில் சாதிப்பதற்கான கருத்துலக வடிவமாகச் சனாதனத்தைக் கண்டடைந்த வடிவமே அவரது பிற்கால ஆன்மீக விசார நாவல்கள் எனலாம்.

எனது இந்தக் காலவகுப்பும் இலக்கிய வடிவம் சமபந்தமான வகுப்பும் ஓரிரு ஆண்டுகள் முன்பின்னாக இருக்கலாம். கருத்துலக மாற்றங்கள் ஒரு படைப்பாளியிடம் ஒரு நள்ளிரவில் துவங்கி அடுத்த நள்ளிரவில் தெரிந்துவிடுவதில்லை. இந்த மாற்றம் காலஅளவில் வெகுதுல்லியமாகவும் அளவிடப்பட முடியாதது. அது போலவே, இலட்சிய மனிதனுக்கான தேடல் ஒரு படைப்பாளியின் படைப்புகளில் துவக்கம் முதல் இறுதி வரை தொடர்ச்சியாக இருக்க, தேர்ந்து கொள்ளும் கருத்துலகானது மெல்ல மெல்ல மாறமுடியும். ஜெயகாந்தனை தொடர்ச்சியாக வாசித்து வந்திருப்பவர்கள் அவருள் நேர்ந்த இந்த மாற்றத்தின் சாய்வுகளை வாசிப்பில் அறிய முடியும்..

விளிம்புநிலை மனிதர்கள் பற்றி எழுதிய ஜெகேவுக்கும், ஜெய ஜெய சங்கர எழுதிய ஜெகேவுக்கும் கருத்தியல் நிலையிலும் படைப்பு வகையிலும் வேறுபாடுகள் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நகர்ந்து இந்திய தேசியப் பெருமிதம் கொண்ட காங்கிரஸ்காரராக அவர் வளர்ந்த காலமும் விளிம்புநிலை மனிதனாக இருந்து ஆச்சாரமான பிராமண வாழ்க்கையாக அவரது சொந்த வாழ்வு பரிமாணம் பெற்ற காலமும் இதுவெனவே சொல்லலாம். குடும்பச் சூழல் என்பது ஒரு கலைஞனின் வாழ்வில் கொள்ளும் சார்பு நிலைகளை வைத்து மதிப்பிடுவதன் தேவை இப்போது அவசியம் எனவே நான் கருதுகிறேன். சுட்சி சார்பு கருத்தியல் சார்பாகவும் கருத்தியல் சார்பு வாழ்வுச் சார்பாகவும் மாறியதை நாம் ஜெகேவின் படைப்பையும் வாழ்வையும் அரசியலையம் வைத்துப் பார்க்கிறபோது விளங்கிக் கொள்ள முடியும்.

அவரது இந்திய தேசிய பெருமிதம் ஜவஹர்லால் நேருவை அடியொற்றிய சோசலிச பெருமிதம். அவரது ஞானப் பெருமிதம் விவேகானந்தரை அடியொற்றிய ஆன்மீகப் பெருமிதம். இயேசுவைப் போன்ற ஹென்றியைப் படைத்த அவர் மேற்கத்திய ஹிப்பி போல அழுக்கும் போதைப் பழக்கமும் எல்லையற்ற அன்பையும் கொண்ட ஓங்கூர் சாமியையும் படைத்தார். அதனது நீட்சியாக ஜெய ஜெய சங்கராவையும் அவர் படைத்தார். நியூடிஸ்ட் காலனி வாழ்வை நிஜத்தில் வாழ்ந்து போற்றியவர் அவர். அவர் படைத்த மனிதர்கள் அனைவரும் அவரது கனவு மனிதர்கள. வண்ண நிலவன் மதிப்பிட்டது போல அவரது மனிதர்கள் யதார்த்த மனிதர்கள் என்பதனை விடவும் தரப்பட்ட கால இடத்தின் தத்ரூப மனிதர்கள் எனலாம்.

ஜெயகாந்தன் தொடர்பாக கம்யூனிஸ்ட்டுகளிடம் எப்போதுமே இருவகையிலான கருத்துக்கள் இருந்து வருகின்றன. கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் இயங்கிய மேதைகள் சிலருடனான எனது நெருக்கம் போன்றவற்றை தனிப்பட்ட வகையில் நினைவுகூர்ந்து பார்க்கிறபோது ஜெகே பாலான இன்று வரையிலுமான கம்யூஸ்ட்டுகளின் அணுகுமுறையை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஆர்.கே. கண்ணன், அறந்தை நாராயணன், மதுரையைச் சேர்ந்த நண்பர்கள் நவபாரதி, பரிணாமன், பொன்மணி, சந்திரபோஸ் போன்றவர்களே ஜெயகாந்தன் சார்பு நிலைப்பாட்டை கலை இலக்கியப் பெருமன்ற தளத்தில் கொண்டிருந்தவர்கள். குறிப்பிட்ட அனைவருமே படைப்பாளிகள். ஆர்கே. கண்ணன் ஆழ்ந்த இசைப் புலமையும் கோட்பாட்டுப் படிப்பும் கொண்டவர். இவர்களில் அறந்தை நாராயணன் தவிர பிற அனைவரும் ஜெகேவை முழுக்கவும் ஆதரிக்கக் கருத்தியல் காரணங்கள் இருந்தன.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளவுன்ட பின் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பு எதிர்ப்பு எனும் இரு கருத்துநிலைகள் மோதியே வந்திருக்கின்றன. தேசியப் பாரம்பர்யத்தின் இரு தாரைகளாக கம்யூனிஸ்ட் கட்சியையும் காங்கிரஸையும் பாரத்தவர்கள் இவர்கள். இவர்களே ஜெகேவை ஆதரித்தவர்கள். இன்று வரையிலும் சகலவிதத்திலும் ஜெகேவை ஆதரித்து நிற்பவர்கள் இவர்கள்தான்.

அறந்தை நாராயணன் ஜெகேவின் மிக நெருங்கிய இலக்கிய நண்பராகவே இருந்த போதிலும் காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே இருந்தார். தீவிரமான சினிமா விமர்சகரும் தமிழ் சினிமா வலாற்றாசிரியருமான அவர் ஜெகே தொடர்பாக ஆர்.கே.கண்ணனோடு உடன்பட்ட தருணங்களும, சினிமா விமர்சனம் தொடர்பாக ஆர்கே.கேயினோடு முரண்பட்ட தருணங்களும் உண்டு. ஏவிஎம் நிறுவனம் தமிழில் தயாரித்த சிவப்பு மல்லி படத்தை வரவேற்று எழுதினார் ஆர்.கே.கே. தேசபக்திப் படங்களை எடுத்த ஏவிஎம் நிறுவனம் வர்க்கப் போராட்டம் தொடர்பாகவும் சிவப்பு மல்லியை எடுத்திருப்பது பொறுத்தமானதே என்றார் அவர். அறந்தை நாராயணன் சிவப்பு மல்லி படம் எம்.ஜி.ஆர்.வகை கனவு நிறைவேற்றச் சினிமா என அதனைச் சாடினார்.

ஜெகேவுடன் அதீத உடன்பாடு காட்டியவராக இருந்த மற்றொருவர் மு.பழனியப்பன். ஜனசக்தி சாந்தி போன்ற பத்திரிக்கைகளில் நீண்ட காலம் பணியாற்றியவர் அவர். கம்யூனிஸ்ட் கட்சியிலுள்ளர்கள் இன்றளவம் ஜெகேவுடன் நட்பும் தோழமையும் பாராட்டுவதிலுள்ள கருத்தியல் சார்புகள் இவையேயாகும். நல்லக்கண்ணுவும் தாபாண்டியனும் தன்னைக் காணவந்தபோது தானே கீழே சென்று அவர்களை எதிர்கொள்ள ஜெகே நினைத்ததை மகேந்திரன் எழுதுகிற அதே காலத்தில்தான் மு. கருணாநிதியைச் சந்திக்க அவர் மறுத்ததாகச் செய்திகள் வருகின்றன.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த திகசி, தொமுசி.ரகுநாதன், பொன்னீலன் போன்றவர்கள் ஜெகேவை விமர்சித்த போக்குக் கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்களை ஒத்த கருத்துள்ள காங்கிரஸ் எதிர்ப்புக் கம்யூனிஸ்ட்டுகளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்தே வந்திருக்கிறார்கள். ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இடையிலான இணக்கமான உறவில் இன்னொரு பரிமாணமும் உண்டு. அரைவேக்காட்டுத்தனமாக கம்யூனிச எதிர்ப்பாளர்களின் அணிக்குப் போய்ச் சேர்ந்தவரல்ல அவர். சோவியத் யூனியின் வீழந்தபோது தனது நம்பிக்கை வீழச்சியை மனவேதனையுடன் எதிர் கொண்டவர் அவர். கம்யூனிஸ்ட் கட்சியினரின் பொதுவாழ்க்கை தனிவாழ்க்கை குறித்து அவமானப்படுத்துகிற விதத்தில் வக்கிரப்படுத்தியவர் அல்ல அவர். மேலாக அவரது தேசியம் நேருவகையிலான சோசலிச இந்திய தேசியமேயல்லாது இந்து மத வகையிலான பிஜேபி வகை இந்து தேசியம் அல்ல. இன்றளவும் காங்கிரஸ் சார்பாளராக அவர் இருக்கிறாரேயல்லாது பிஜேபி சார்பாளராக அல்ல. கம்யூனிசம் எனும் இலட்சியக் கனவில் இன்றும் நம்பிக்கை கொண்ட மனிதர்தான் அவர்.

ஜெயமோகனை அவர் ஆசான் என்று சொல்கிறபோது ஜெமோவின் விஸ்ணுபுரத்திற்குள் அவர் நுழையமுடியவில்லை என்பதனையும் சேர்த்துத்தான் இந்த முரணைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலாக ஜெமோவின் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எதிரான விஷமத்தனமான எழுத்துக்களை அவர் வாசித்திருக்கிறார் என்றும் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் ஜெயகாந்தன் அநேகமாக வாசிப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டார் என்பதனை பல தருணங்களில் அவரே குறிப்பிட்டிருக்கிறார். சுரா-ஜெகே விவாதத்தில் ஜெகேவை ஜெமோ ஒரு துருப்புச் சீட்டாகப் பாவிக்கிறார் என்றே சொல்லத் தோன்றுகிறது.

ஜெயகாந்தனை நான் இரண்டு முறை அருகிருந்து அனுபவம் கொண்டிருக்கிறேன். கல்லூரி நாட்கள் அவை. முதல் முறையாக மதுரையிலிருந்த அவரது நண்பர்களான நவபாரதி பரிணாமன் போன்றவர்கள் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே சென்று அவர் தங்கியிருந்த விடுதியிலேயே தங்கிய அனுபவம். இரண்டாவது அனுபவம் கோவையில் நண்பர் ஸாகுல் அமீதுவினோடு ஜெகே தங்கியிருந்த விடுதியில் தங்கியிருந்து அவரை அனுபவம் கொண்டது. அவருடன் நேரடியாகப் பேசுமளவு நெருக்கமோ வயதோ எனக்கு அப்போது இருக்கவில்லை. ஜேகே தனது தலைமுடிக்கு சாயம் தோய்த்துக் கொண்டிருந்தது, தனது அத்யந்த நண்பர்களுடன் வட்டமாக அமர்ந்து கஞ்ஜா குடித்துக்கொண்டிருந்தது, தனக்கெனவே தேர்ந்த சாராயத்தை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டிருந்தது, மீசையை அடிக்கடி நீவி விட்டுக்கொண்டு தானே ஒரு ராஜகுமாரன் போல இடைவிடாது பேசிக்கொண்டிருந்தது என மதுரைச் சம்பவங்களின் காட்சிகள் இப்போதும் மனதில் நிழலாடுகிறது. சங்கோஜத்தில் அன்று அந்த ஜமாவில் எனக்கு வழங்கப்பட்ட மதுவையும் கஞ்ஜாவையும் மரியாதையின் நிமித்தம் நான் மறுத்ததும் ஞாபகம் வருகிறது. நான் ஜெகேவினது நண்பர்களோடு ஒப்பிடுகையில் அவ்விடத்தில் ஒரு இன்மையாக மட்டுமே இருந்தேன்.

நான் அன்று கண்ட ஜெகே மேடைகளில் சிங்கம் போல் கர்ஜித்த நாவில் உன்னதத் தமிழ் நடனமாடிய ஜெகே அல்ல. நிறைய கெட்ட வாரத்தைகளை ஜெகே சாதாரணமாகப் பேசினார். விளிம்புநிலை மனிதனாகத் தன் அந்தரங்கத்தில் வாழ்கிற அவர்தான் மேடையில் ஒரு பொறுப்புள்ள பிரஜையாக முகம் காட்டுகிறார் என்பதனை நான் அன்றுதான் கண்டேன். இரண்டாவது முறை நண்பன் ஸாகுல் அமீதுவுடன் கோவையில் சந்தித்தது இன்னும் ஞாபகமிருக்கிறது. நீண்ட திரைச்சீலைகள் தொங்கிய அந்த அறையில் மதியம் நடந்த ஜெகேயின் கூட்டத்தின் பின் அயற்சியுடன் தோழர்கள் புரண்டு கொண்டிருந்தார்கள். ஒரு விவாத தருணத்தில் ஜெகே தூசனம் பாவித்த நிலையில் தனது குரல் உயர்த்தி ஸாகுல் அமீதுவும் கடுமையான தொனியில் தூசனத்தைப் பாவித்தார். விவாதம் அத்துடன் நின்றது. அறை நிசப்தத்தில் உறைந்தது. சிறிது நேரத்திலேயே உரையாடல் மறுபடி நட்புணர்வுடன் தொடர்ந்தது.

ஜெயகாந்தன் ஒரு வகையிலான பய உணர்வை வாசகனுக்கும் சகமனிதனுக்கும் உருவாக்கவே செய்கிறார். அப்படியான அதிரடி அணுகுமுறை இன்றும் என்னால் ஒப்புக்கொள்ள முடியாததாகவே இருக்கிறது. அதிகாரம் கொண்டவர்களிடம் எழுதுகிறவன் பெருமிதத்துடன் இருக்கவே வேண்டியிருக்கிறது. ஆனால் தன்னைத்தேடி வரும் அறியாத நிலையிலுள்ள மனிதனிடம் இத்தகையை அணுகுமுறையை எழுத்தாளன் மேற்கொள்வது ஒரு வகையில் அம்மனிதனின் இருத்தலையும் சுயபெருமிதத்தையும் எள்ளலுக்கு உரியதாக ஆக்குவதாகும். எழுத்தாளன் எனும் அளவில் சுந்தர ராமசாமியுடன் இலண்டனில் பத்மநாப ஐயர் வீட்டில் நான் கழித்த நாட்கள் கனிவும் அன்பும் கொண்ட நாட்களாகும்.

ஜெயகாந்தனின் அரசியல் பொருட்படுத்தத் தக்கதாக இல்லை என்பதை அவர் பலமுறை மெய்ப்பித்திருக்கிறார். அவருடைய அரசியல் நம்பிக்கைகளும் சரி ஆன்மீக நம்பிக்கைகளும் சரி ஒரு இலக்கியவாதியின் இலட்சியவயமான உணர்ச்சி சார்ந்தவை. தர்க்கபூர்வமான கோட்பாடு சார்ந்தவை அல்ல அவரது அரசியல் அபிப்பிராயங்கள். இலக்கியத்தின் வழி வாழ்வைப் பயின்றவர் அவர். கோட்பாடுகளின் வழியிலும் உலக வரலாற்றின் வழியிலும் வாழ்வையும் சமகாலத்தையம் அவர் பயில்வதை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிய தருணத்திலேயெ அவர் கைவிட்டு விட்டார் எனலாம். அவருடைய சோசலிசம் கோட்பாட்டுத் தன்மை கொண்டதல்ல, மாறாக இலட்சியபூர்வமான அவரது கனவு. அவரது ஆன்மீகமும் அத்தகயைதுதான். வரலாற்று நிலைமைகளைக் கணக்கிலெடுத்துக்கொள்ளாத ஒரு உணரச்சிவசமான மனிதனின் சன்னதம் என்பதற்கு மேல் அவரது அரசியல் ஆன்மீக நம்பிக்கைகளுக்குப் காலப் பெறுமானமில்லை. சில உதாரணங்களின் மூலம் இவற்றைச் சுட்டலாம்.

ஈழத்தில் இந்திய அமைதிகாப்புப் படை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது எனும் தரவுகளை அவர் இந்திய தேசியப் பெருதேசிய உணர்வு அதனது ஆன்மீகப் பெருமிதம் எனும் வகையில் மறுத்தார். ‘எனது இந்திய தேசத்தின் அமைதிப்படை கற்பழிப்பில் ஈடுபடுமா?’ எனப் பகுத்தறிவுக்குப் புறம்பான இலட்சியவாத தொனியில் கேள்வியெழுப்பினார் அவர். அவரது இலட்சியவாத்திற்கு மாறாக இந்திய அமைதி காப்புப்படை ஈழத்தில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டது என்கிற உண்மைகளை ரஜினி திரணகாமா போன்றவர்களும் மனித உரிமை அமைப்புகளும் ஆவணப்படுத்தியிருக்கின்றன.

அவரது அமெரிக்க விஜயத்தின் போது அமெரிக்க சமூகம் தான் கனவு கண்ட இலட்சிய சமூகம் என்றார் அவர். நிறவாதம், மதப் பழமைவாதிகளின் பெண்ணெதிர்ப்பு, அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை, நோம்சாம்ஸ்க்கயின் அமெரிக்க எதிர்ப்புச் செயல்பாடுகள் போன்றவற்றை அறிந்த எவரும் சொல்லக் கூசும் மதிப்பீட்டுச்சொற்கள் ஜெகே வெளிப்படுத்திய சொற்கள்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சி தொடர்பான ஜெகேவின் கருத்துக்கள் தரவுகள் சாராதவை. அவருடைய கருத்துக்களை வேறு விதத்தில் மலையாளப் படைப்பாளியான பால் ஜக்கரியா மறுத்திருக்கிறார். திமுகவின் பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான புள்ளிவிவரங்களில் அமைந்ததல்ல ஜெகேவின் மதிப்பீடுகள். காமராஜரின் பொற்காலம் என்று இன்றளவும் சொல்லிவரும் இலட்சியவாதத்தின் அடிப்படையிலேயே ஜெகே தனது மறுப்புகளை முன்வைத்து வருகிறார். திராவிடப் பாரம்பர்யத்தினர் தொடர்பான ஜெகேவின் கருத்துக்களுக்கும் அவரது தனிப்பட்ட வாழ்வுசார்ந்த ஜெயேந்திரர் மீதான நம்பிக்கை சந்திப்பு தொடர்பான அவரது நம்பிக்கைளுக்கும் இடையிலான உறவை ஒருவர் விசாரித்துப் பார்ப்பது நிலைமையை விளங்கிக்கொள்ள உதவும்.

ஜெயேந்திரர் பிரச்சினை ஒரு சட்டவிவகாரம் என்பதைக் காணக் கூட ஜெகேயினால் முடியவில்லை. அணுராதா ரமணன் போன்ற பெண் எழுத்தாளர்களின் அபிப்பிராயங்களின் தன்மையைக் கூட யோசித்துப் பாரப்பவராக அவர் இல்லை. தனது நம்பிக்கைகளின் வீழ்ச்சி என்பதாக மட்டுமே அபிப்பிராயங்களை முன்வைத்து வருகிறார் ஜெகே. இதன் பின்னுள்ள பிஜேபியினரின் அரசியல் கூட அவருக்குத் தெரியாமல் போகிறது.

ஜெயகாந்தனின் அரசியல் அபிப்பிராயங்கள் ஒரு உணர்ச்சிவசமான இலட்சியவாதம் கொண்ட மனிதனின் பகுத்தறிவுக்கும் தரவுகளுக்கும் புறம்பான பார்வைகள் என ஒதுக்கிவிடுவதே நல்லது. ஜெயகாந்தன் தொடர்பான இவ்விவகாரங்களிலான தமது கருத்துக்களை கம்யூனிஸ்ட்டுகள் வெளிப்படையாக முன் வைத்திருக்க வேண்டும். விளிம்புநிலை மனிதர்கள் குறித்ததாகப் படைப்புகளை முன்வைத்த முன்னாள் தோழனாக அவர்மீது பாராட்டுணர்வு கொண்ட அவரது கம்யூனிஸ்ட் நண்பர்கள் ஜெகேவின் அரசியல் தொடர்பாகவும் தெளிவாகக் கருத்துச்சொல்வது பல பிரச்சினைகளுக்குத் திறவுகோலாக அமையும்.

திராவிடமுன்னேற்றக் கழகத்தைக் கடுமையாக விமர்சித்து வந்த ஜெயகாந்தன் அறந்தை நாராயணன் முன்னின்று நடத்திய கல்பனா மாத நாவல் இதழுக்காக கலைஞர் கருணாநிதியைச் சென்று சந்தித்து உரையாடினார் என்று ஞாபகம். ஜெயகாந்தன் தன் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறபோதெல்லாம் தான் அவரது படைப்புகளைத் தேடிச்சென்று படிப்பேன் எனக் கலைஞர் பதிலிறுத்ததாகவும் ஞாபகம். கலைஞரைச் ஜெயகாந்தன் சந்திக்க மறுத்தமை குறித்து வந்த செய்திகளைக் கண்டு புளகாங்கிதம் கொண்ட பிஜேபி வாண்டுகளுக்காக இதனைச் சொல்ல வேண்டியிருக்கிறது. பிற்பாடு கலைஞர் கருணாநிதி அவரது புதல்வி கனிமொழி போன்றவர்களுக்கு ஜெகே அணுக்கமானவராகவும் ஆகினார்.

ஜெயகாந்தனின் படைப்புகளுக்கும் அவரது அரசியல் சார்புகளுக்கும் கருத்தியல் நம்பிக்கைகளுக்கும் இடையில் நேரடியலான தொடர்புகள் காண்பது சாத்தியம்தானா? நேரடியிலான தொடர்புகள் நிச்சயமாகவே சாத்தியமில்லை. ஆனால் கருத்தியல் சாய்வுகளை நாம் இனம் காணமுடியும். விளிம்புநிலை மனிதனாகவும் கம்யூனிஸ்ட் கட்சியோடு உறவு கொண்டிருந்த காலத்தவராகவும் அவரது சிறுகதைக் காலகட்டத்தைக் குறிப்பிடலாம். உயர் மத்தியதர வர்க்கத்தவராகவும் காங்கிரஸ் சார்பாளராகவும் இந்திய தேசியவாதியாகவும் பரிமாணமெய்தியமையை அவரது நாவல்களின் காலகட்டம் எனலாம். அனுபவத் தகிப்பு நிறைந்த காலக்கட்டங்கள் இவை. இலட்சியத்தினால் உந்தப்பட்ட கற்பனைத் தோய்வு மட்டுமே நிறைந்த அனுபவம் அற்ற அவரது ஆன்மீக எழுத்துக்கள் வெளிப்பட்ட காலகட்டம் என அவரது பிற்காலத்திய எழுத்துக்களை ஜெய ஜெய சங்கர முதல் ஊருக்கு நூறுபேர் ஈராக ஹர ஹர சங்கர வரையிலான அவரது வாசிப்பனுபவமற்ற காலத்தைக் குறிப்பிடலாம்.

இந்த எல்லா நிலைமைகளிலும் ஜெயகாந்தன் வரலாற்றுக்கு எதிராகவே செயல்பட்டிருக்கிறார். விளிம்பு நிலை மனிதர்கள் குறித்த அக்கரையற்ற பிராமண மேட்டுக்குடி இலக்கிய வலாற்றுக்கு எதிராக அவரது சிறுகதைகள் இருந்தன. தனிமனிதர்களின் பாலுறவு சுதந்திரம் பேசப்படாத ஒரு வரலாற்று திசைக்கு எதிராக அவரது நாவல்கள் வெளியாகின. ஆன்மீகம் அரசியல் தந்திரமாகவும் பாசிசமாகவும் இந்திய தேசிய அரசியலில் முகம் காட்டியது போது இந்த வரலாற்றுக்கு எதிர்திசையில் அவரது பிற்காலத்திய ஆன்மீகப் படைப்புகள் வெளியாகியிருக்கின்றன.

திராவிட மரபு, ஈழப் பிரச்சினை, அமெரிக்க சமூகம், ஜெயேந்திரர் பிரச்சினை போன்ற அனைத்து வரலாற்றுச் சம்பவங்கள் குறித்தும் அவர் எதிர்நிலைபாடுகளே எடுத்திருக்கிறார். வரலாற்றுக்கு எதிராக இருப்பவர்கள் எல்லாத் தருணங்களிலும் கொண்டாடப்படுவதில்லை என்பதற்கு நம்காலத்தின் உதாரணமாக இருப்பவர் ஜெயகாந்தன். ஜெயகாந்தன் ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகத்தையும் ஹென்றியையும் படைத்தது மட்டுமே போதும் அவரது ஞானபீட விருது பெற்றிருக்கும் தகைமையைச் சொல்வதற்கு என்று சொல்வது மிகையில்லை.

ஜெயகாந்தனின் அரசியல் நிச்சயம் நிராகரித்துவிடத் தக்கது. படைப்புகளை ஏற்பதும் கொள்வதும் அவரவர் கருத்தியல் நிலைக்கு உட்பட்டது. இந்துத்துவவாதிகளுக்கு ஹரஹர சங்கர பிடிக்கலாம். பிறருக்கு இலக்கணம் மீறிய கவிதையைப் பிடிக்கலாம். நிராகரிப்பின் மூலம்தான் நாம் நமது முழுமையைச் சேகரித்துக்கொள்கிறோம். முரண்களை தன்னுள் இயல்பாகவே கொண்ட கலைஞன்தான் அதற்குச் சரியான தொடக்கப் புள்ளி என நினைக்கிறேன்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: https://www.facebook.com/ArunThamizhstudio

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </