இலங்கையின் கொலைக்களம் - யமுனா ராஜேந்திரன், 130/-

 




பேசாமொழி பதிப்பக நூல்களை இணையத்தில் பெற: http://cms.vidhaiorganicstore.com/onlineshop/index.php?cPath=72

இலங்கையின் கொலைக் களம் - ஒரு மதிப்பீடு - மு.புஷ்பராஜன்

யமுனா ராஜேந்திரனின் ‘இலங்கையின் கொலைக் களம்:ஆவணப்படசாட்சியம்’ என்ற நூல் என்முன் விரிந்திருக்கின்றது. மனமோ துயர நினைவுகளால் சூழ்ந்துகொள்ளப்படுகின்றது. கடந்துவந்த அந்தத் துயர நாட்கள் மீண்டும் நினைவில். முள்ளிவாய்க்காலில் தமிழருக்கான இனப் படுகொலைகள் திட்டமிட்ட வகையில் வேகமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றவேளை. சூழ இறங்கியிருந்த கடும் குளிரையும் கவனத்தில் கொள்ளாத தமிழ் மக்கள், இரவும் பகலுமாய் பிரித்தானிய பாராளுமன்ற முற்றத்தில் பெரும் துயருடன் திரண்டுகொண்டிருந்தனர். அதுவரை அவர்கள் கேட்டிராத தாயகக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க திரண்டுகொண்டிருந்த மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொள்கின்றது. தங்களின் திரட்சியின் மூலம் ஒரு சடுதிமாற்றம் நிகழ்ந்துவிடும் என்ற நம்பிக்கை அவர்களது மனங்களின் மூலையில் துளிர்த்திருந்தது. அரியாசனங்களில் அப்போது அமர்ந்திருந்தவர்களிடமிருந்து எந்த ஆறுதல் குரலும் எழவில்லை. நம்பிக்கை குறைந்துகொண்டே போயின. முள்ளிவாய்க்காலில் எல்லாம் முடிந்தது. போரைப்போல் மக்களது நம்பிக்கையும் முடிந்தது. கொல்லப்பட்டோரின் அஞ்சலிக்காக அந்த முற்றத்தின் மூலையில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. மலர்களாலும் மெழுகுவர்த்திகளாலும் சுட்டிகளாலும் நிறைந்திருந்த அச்சிறய இடம் பெருமூச்சுக்களைத் தாங்கிக்கொண்டிருந்தது. எல்லோராலும் கைவிடப்பட்டுவிட்டோம். ‘ஏனென்று கேட்க நாங்கள் யார்’ எனN;ற நினைக்கலானோம். நியாயங்களைக் கல்லறைக்குள் புதைத்து ஆதாயங்கொள்பவர்களாலேயே இந்த உலகம் தொடர்ந்தும் ஆளப்படுகிறது. எல்லாப் பெரும் துயரங்களிடையில் எழும் கேள்வி எம் நெஞ்சில் எழுந்தன. இறைவன் எங்கே போனான்? இறைவன் இறந்துவிட்டானா? எம்மைச் சுற்றி இறங்கியிருந்த இருளில், ‘இலங்கையின் கொலைக்களம்’ ஆவணப் படம் ஒரு சிறு பொறியை ஏற்றியது. அந்தச் சிறு பொறி எங்கள் இரத்தத்தைக் குறியீடாக்கி கழுத்தில் சுற்றி, வெள்ளை வேட்டியும் சட்டையுமாய் வருபவர்களுக்கு ஒரு பெரும் காட்டுத் தீயாய் மாறும் என்ற உணர்வை ஏற்படுத்தியது. சாட்சியமற்று புதைந்தவாகளின் ஆன்மை ஆறுதல் கொள்ளும் சாட்சியங்கள் அற்ற இந்தப் பேரழிவின் எதிர்விளைவுகளை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பதிலும் அரசு திட்டமிட்டே இருந்தது. தான் கட்டமைக்கும் பிம்பத்தை உலகம் நம்பவேண்டும் அல்லது ராஜதந்திர நகர்வகளுக்கூடாக நம்பவைக்கப்படவேண்டும் என்பதிலெல்லாம் அரசும் அதனை கூடநின்று இயக்கியவர்களும் தெளிவாகவேயிருந்தனர். இந்த யுத்தம் எவ்வளவு கேரமாகவும் சர்வதேச சட்டவிதிகளுக்கு மாறாகவும் முடித்துவைக்கப்பட்டது என்பதையும் அவற்றை மறைக்க மேடையேறும் நாடகங்களையும் இந்த ஆவணப்படங்கள் தவிடுபொடியாக்கியிருக்கின்றது. உலகிலுள்ள அனைத்துப் பொய்களையும் அரசு துணையாக போகுமிடமெல்லாம் கொண்டுசெல்கிறது. அனைவரும் இலங்கை மாதாவின் புதல்வர்கள் என்பதும் சிங்களர் தமிழர் பேதம் இல்லை என்பதும் இத்தகையதே. இலங்கை அரசியல் வரலாற்றில் அரசு எதை வெளிப்படையாகச் சொல்கிறதே அதற்கு எதிரானதுதான் அதன் நடைமுறையாக இருக்கும். இலங்கை மாதாவின் புதல்வர்களாகவா தமிழர்கள் கருதப்பட்டார்களா?

1971இல் இலங்கை அரசுக்கு எதிரான ஜே.வி.பி.இன் போராட்டம் புலிகளின் போராட்டம்போலதான்; இரத்தத்தில் மூழ்கடிக்கப்பட்டது. தோல்வியின் பின்னர் தலைவர் ரோகண விஜயவீரவின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அரசு எந்தத் தீங்கும் இழைக்கவில்லை.. இந்த நியாயம் பிரபாகரனது மகன் பாலச்சந்திரனுக்கு ஏன் கிடைக்கவில்லை. பிரபாகரன் பெற்றோர்கள் ஏன் சிறையில் வைக்கப்பட்டனர். ஜே.வி.பி. இன் வலுவான ஆதரவுக் கிராம மக்களுக்கு திறந்தவெளிச் சிறை உருவாக்கப்படவில்லை.. தமிழர்களுக்கு மட்டும்தான் முள்ளிவாக்காலுக்குப்பின் திறந்தவெளிச் சிறைச்சாலை. ‘போர் நடந்த பின்னும் தமிழர்கள் அழிக்கப்படுகிறார்கள்’ என மனச்சாட்சியுள்ள ஊடகவியலாளர் பாஷன அபயவர்த்தன எதற்காகக் கூறுகிறார்? அவர் குறிப்பிடும் ‘போர் நடந்த பின்னும்’ என்ற வார்த்தைகள் எதை அழுத்துகிறது?

இந்தக் கேள்விகளுக்கான தெளிவான பதிலை வெளிவந்த இனப்படுகொலை பற்றிய ஆவணப்படங்கள் வெளிப்படுத்துகிறது. மேலதிக பன்முகத் தரவுகளுடன் யமுனா ராஜேந்திரனின் இந்த நூல் வெளிப்படுத்துகிறது. அரசியல்வாதிகளும் நாடுகளும் நீதி வழங்கும் மன்றுகளும் பொருளாதார நலன்களுக்காக, புவிசார் முக்கியத்துவத்திற்காக, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அரசியல் கோட்பாட்டிற்காக, கடந்த நான்கு வருடங்களாக பிரிந்து நின்று கச்சைகட்டி கயிறு இழுக்கும் போட்டியில் இறங்கியுள்ளனர். மேற்குறிப்பிட்ட நலன்சார்ந்த காரணங்களுக்காக தமிழர்கள் ஏமாற்றப்படலாம் அல்லது அரைகுறைத் தீர்வோடு ஒழிந்துபோவென்று ஒதுக்கப்படலாம். ஆனால், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இந்த மாபெரும் அநீதியையும் அதற்கு ஆதரவாக நின்ற நாடுகளையும் அரங்கேறிக்கொண்டிருக்கும் திரைமறைவு நாடகங்களையும் மனச்சாட்சியுள்ள ஊடகவியலாளர்களால் எழுத்தாளர்களால் உலகின்முன் பச்சையாக வைக்கப்பட்டிருக்கிறது. மூடிப்புதைத்த குழியில் வெள்ளர மரம் நாட்டும் பேரவா உலகின் முன் அம்பலப்பட்டு நிற்கிறது. இனி வரலாறு இதை என்றும் மறந்துவிடாது.

உலகத்தை இரு கூறாகப் பிழந்த இந்த ஆவணப்படங்கள் வெளிவந்த காலங்களிலெல்லாம் அதுபற்றிய உள்ளார்ந்த தன்மைகளோடும் ஆய்வுகளோடும் பொதுவெளியில் முன்வைத்தவர் யமுனா ராஜேந்திரன். இந்த நூல் அதற்கான சாட்சியமே. ஏட்டுத்திக்கும் இருந்து எழும் நீதியின் குரல்களை நிராகரித்து, இலங்கை அரசு தனது குரலாக வெளியிட்ட மூன்று திரைப்படங்கள் பற்றியும் இந்நூல் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளது. ‘இலங்கையின் ஆவணப்படங்கள் ஆதாரமான இனப்பிரச்சனைகளில் எதையுமே தனது எல்லைக்குள் கொண்டிருக்கவில்லை’, என்ற முடிவை முன்வைக்கிறார். புலிகள் பலவந்தமாக சிறுவர்களைப் படையில் சேர்த்தார்கள். தமது கட்டுப்பாட்டுப்பகுதியில் இருந்து வெளியேற முயன்ற பொதுமக்களைச் சுட்டுக்கொண்றார்கள் என்ற அரசின் பதில்களை ஒப்புக்கொண்டு, உண்மையாக பதிலளிக்க வேண்டிய கேள்விகளை பிரியம்வதையின் ஆவணப்படம் பற்றிய கட்டுரையில் அழுத்துகிறார். அரசு சொல்லும் தமிழ் மக்களின் சுதந்தரம் பற்றி ‘சொல்வதைச் செய் என்னும் ஆணையுடன் துப்பாக்கி முனைகள் அவர்கள் முதுகுக்குப் பின்னால் இருப்பது சுதந்தரம் அல்ல அடிமைத்தனம்’ என்கிறார். இறுதியில் ‘நம்முன்னே உள்ள தேர்வு காட்டுமிராண்டித் தனத்திற்கும் நாகரீகத்திற்கும் இடையிலானது. கூச்சமற்று முக்கியத்துவமற்ற பொய்களைத் திரும்பத்திரும்ப உதிர்க்கின்ற காட்டுமிராண்டிகளின் காலத்திலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்’ என்கிறார். அரசின் பதில்களால் மிகுந்த அறச் சீற்றம் கொண்டுள்ளார் என்பதற்கான தரவுகள் அதிகம் இந்நூலில் காணப்படுகிறது இந்த ஆவணப் படங்களின்மூலம் பிரபாகரன் எப்படி இறந்தார் என்பதைத் தனது நூலில் முன்வைத்ததுள்ளார். கடும் புலி ஆதரவாளர்களிடமிருந்து இதற்கான எதிர்வினையை இவர் எதிர்கௌ;ளவேண்டியிருக்கும். நமது நம்பிக்கைகள் சிதைகையில் பரிசீலித்து ஏற்பதற்குப் பதிலாக சீற்றம் கெண்டு எழுவதே தமிழ் மனத்தின் பொது இயல்பு. பிரபாகரன் மரணத்தை ஏற்றுக்கொள்ள தமிழ் மக்களில் பலர் இன்னமும் தயாராக இல்லை. தமது நம்பிக்கையின் அடிப்படையில் ‘இவைகள் இட்டுக்கட்டப்பட்டவை என விமர்சிப்பவர்கள் தவிர்க்கமுடியாதவகையில் இலங்கை அரசின் அலைவரிசைக்கே சென்றுவிடுகிறார்கள்,’ என நூலாசிரியர் கூறுவதை தர்க்கரீதியாகத் தமிழ் மக்கள் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.

விடுதலைப் புலிகளை விமர்சித்துவரும் இடதுசாரிகள் தலித்தியர்கள், பெண்ணிலைவாதிகள், கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் ஜனநாயகவாதிகள் போன்றவர்களது கனத்த மௌனம் பற்றிக் கூறுகையில் ‘இவர்கள் நடத்துகின்ற இலக்கியச் சந்திப்புக்கள், பெண்ணிலைவாத அரங்குகள், தலித்திய விவாத அரங்குகள் போன்றவற்றில் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் வல்லுறவுகள் மனித உரிமை மீறல்கள் போன்றவை குறித்த கருத்துக்கள் எதுவுமே பேசப் படுவதில்லை. இவர்களது குறிப்பிட்ட எல்லை அமர்வுகளிலும் விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்களும் படுகொலைகளும் போர்க் குற்றங்களும் சிறுவர் போராளிகள் குறித்த பிரச்சனைகளும் சக இயக்கப் படுகொலைகளும் குறித்து திரும்பத் திரும்ப பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஒரு கருத்து விவாதம் என்கிற அளவிலேகூட தமது முன்னைய நிலைப்பாட்டிற்கு நோர்மையாக இருக்கவில்லை’ என்கிறார். விடுதலைப் புலிகளை விமர்சித்துவருபவர்களென மேலே வகைப்படுத்தப்பட்டவர்கள் இருவகையினர். போராட்டத்தினை ஆதரித்தபடி புலிகளின் தவறுகளை விமர்சிப்பவர்கள். மறுதரப்பினர் புலிகளை எதிர்ப்பதற்காகவே போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்கள். எனவே பொதுவாக எல்லோரையும் இக் குற்றச்சாட்டிற்குள் உள்ளிணைப்பது பொருத்தமானதுதானா? இவர்களில் ஒரு பிரிவினர் என வகைப்படுத்துவதே பொருத்தமாக இருக்கும். ‘மனித உரிமைப் பிரச்சனை என்பதே ஏகாதிபத்;திய முதலாளித்துவப் பிரச்சனை என்பதும்’ ஒரு பகுதி உண்மையே. ஆனால் மூடி மறைக்கப்பட்டவை அரசியல் அரங்கில் வெளிக்கொண்டுவரப்பட்டதே ஏகாதிபத்தியத்தாலும் முதவாளித்துவத்தாலும்தான். புலிகள் அழிக்கப்பட்டபின் எதுவுமற்ற நிலையிலிருந்த தமிழர்கள் இதை ஏகாதிபத்தியமாக முதலாளித்துவுமாக பார்ப்பது தமிழர்க்கு எதையும் கொண்டுவரப்போவதில்லை. வரலாற்றுச் சூழலில் எந்த கருத்துநிலை முற்போக்குப் பாத்திரம் வகிக்கிறதோ அதைத்தான் தேர்ந்துகொள்ளமுடியும். அதுவே விவேகமானது. இந்தப் பாத்திரத்தை யமுனா ராஜேந்திரனால் வகைப்படுத்தப்பட்டவர்கள் தேர்ந்துகொள்ளாதது அவர்களது முரண்பாட்டையே தெளிவுபடுத்தும். ஆயுதங்கள் அளித்து உதவிய அமெரிக்க,ஐரோப்பிய நாடுகள், படுகொலைகளுக்கு உதவிய இந்தியா, தன் கடமை தவறிய ஐ.நா.சபையை ஆகியவைகளைத்தான் நம்பியிருக்கவேண்டிய நிலையில் இலங்கைத் தமிழர்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் இந்நூலின் பின்னிணைப்பு ஆவணப்படங்கள் மூலம்;@ விடுதலைப் போராளிகள் உருவாகும் சூழல் அவர்கள் இயல்பு வாழ்வின் எதிர்காலக் கனவுகள் புறநிலை அதிர்ச்சியால் மாற்றமடைய, புதிய தீர்மானங்கள் உருவாகின்றது. தமது தீர்மானத்திற்காக மரணத்தையும் ஏற்கிறார்கள். தாம் தேர்வுகொண்ட போராட்டத்தில் நம்பிக்தை ஏற்படுவதற்கு அவர்கள் சார்ந்த வலுவான காரணங்களும் உண்டு. சிலவேளை போராளிகள் தமது விவேகமற்ற முடிவினால் போராட்ட இலக்கிலிருந்து விலகிப்போய்விடுகிறார்கள். தமது போராட்டப் பதையின் கிளைவழிகளில்கூட குறுக்கீடுசெய்பவர்களை கொலைமூலம் ஆகற்றுகிறார்கள். கொல்லப்படுபவரின் வாழ்வின் அவலத்துடன் தமிழ் சூழலின் அறிவு வளமும் வற்றிப் போகிறது. ஒரு போராட்டத்தை பயங்கரவாதமாகக் கருதலாமா? கருதுகையில் எவ்வாறு பிழையான ஒப்பீடுகளை மேற்கொள்ள நேரிடுகிறது. என்பவைகளை ஆராய்கிறார்.

காலத்தின் தேவையான இந்நூல் புல்வேறு கால இடைவெளிகளில் உடனடிச் சூழ்நிலை கருதி எழுதப்பட்ட கட்டுரைகள் தொகுப்பேஆகும். அத்துடன் தொகுப்பின் உள்ளார்ந்த முழுமையும் முக்கியமானதே. திரும்பத் திரும்ப சொல்லப்படும் விடயங்கள் தொகுப்பின் முழுமையைச் சிதைப்பதுடன் மனதில் ஆயாசத்தை ஏற்படுத்துபவை. இவற்றைத் தவிர்ப்பதில் அதிக கவனம் செலுத்திருக்கவேண்டும். அத்துடன் யமுனா ராஜேந்திரன் மொழியை விரயம் செய்யாதிருக்க விரும்புகிறேன்.
------- 11- 02- 2014

பேசாமொழி பதிப்பக நூல்களை இணையத்தில் பெற: http://cms.vidhaiorganicstore.com/onlineshop/index.php?cPath=72

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamoli

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </