இதழ்: 10, நாள்: 15- புரட்டாசி -2013 (September)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 7 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திருத்தப்பட வேண்டிய பதிவுகள் - தியடோர் பாஸ்கரன்

--------------------------------

எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம் - யமுனா ராஜேந்திரன்

--------------------------------
தமிழ் ஸ்டுடியோ லெனின் விருது வழங்கும் விழா - 2013 - II - தினேஷ்
--------------------------------
மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
தமிழ் ஸ்டூடியோவின் 57ஆவது குறும்பட வட்டம் - தினேஷ்
--------------------------------
முதல் சிறகடிப்பு - கோவா சர்வதேசத் திரைப்படவிழா – 2004 - கார்த்தி
--------------------------------
மீதி வெள்ளித்திரையில்... - தியடோர் பாஸ்கரன் - அருண் மோ.
--------------------------------
மார்த்தாண்ட வர்மா (1933) - மௌனப்படம் - அருண் மோ.
--------------------------------
   

   


திருத்தப்பட வேண்டிய பதிவுகள்

- தியடோர் பாஸ்கரன், தட்டச்சு உதவி: தினேஷ்.

தியடோர் பாஸ்கரனின் "மீதி வெள்ளித் திரையில்" என்கிற நூலில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது. காலச்சுவடு பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த நூல் பற்றிய குறிப்பும், இந்த மாத பேசாமொழியில் வெளிவந்துள்ளது. வாசகர்கள் இந்த நூலின் முக்கியத் துவத்தை உணர அதில் இருந்து ஒரு கட்டுரை இங்கே பதிவேற்றப்படுகிறது.

திருத்தப்பட வேண்டிய பதிவுகள்

தமிழ் சினிமா வரலாறு பற்றிய ஓர் ஆர்வம் பரவுவதை இப்போது காண முடிகின்றது. இப்பொருள் பற்றி பல கட்டுரைகள் அச்சேறுகின்றன. பல கல்லூரிகளிலும் மாணவர்கள் தமிழ்த்திரை பற்றி ஆய்வு மேற்கொள்ளுகிறார்கள். இது நல்ல செய்திதான். ஆனால் சில தவறான தகவல்கள் – என்றோ ஒருமுறை அச்சில் வந்து விட்டது என்ற காரணத்தின் அடிப்படையில் மட்டுமே வெவ்வேறு உருவில், வெவ்வேறு இடத்தில் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. கையில் ஒட்டிக்கொண்ட ‘பபுள்கம்’ போல. இந்தத் தவறுகளைக் களைவதும் சிரமமாக உள்ளது. இந்த விபரங்களைப் பற்றி அறிய மூல ஆதாரத்தை ஒருமுறை பார்த்தால்தான் சரியான தகவல் கிடைக்கும். சில எடுத்துக்காட்டுகளை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

முதன்முதலாக ‘தமிழில் வந்த சமூகப்படம் எது? மேனகா (1935) தான் தமிழ்த்திரையின் முதல் சமூகப்படம் என்று டி.கே. சண்முகம் தனது வாழ்க்கை வரலாற்றில் எழுதியதிலிருந்து, மற்றவர்களும் பல நூல்களில் இதையே திரும்ப திரும்ப கூறியிருக்கின்றார்கள். ஆனால் முதலில் திரைக்கு வந்த சமூகப்படம், செளத் இண்டியன் பிலிம் கார்பொரேஷன் தயாரித்த பி.எஸ்.பி அய்யர் இயக்கிய கெளசல்யா என்ற திகில் படம்தான். ரிவால்வரும் கையுமாக கொடியவர்களைத் துரத்தி அடித்த ஒரு பெண்ணைப் பற்றிய கதை இது. மேனகா வெளி வந்த அதே ஆண்டில் 1935ல், வெளியிடப்பட்டாலும், ஆகஸ்டு மாதத்தில் வெளிவந்த கெளசல்யாவே முதல் சமூகப்படம். இரண்டாவது சமூகப்படம் செப்டம்பர் மாதத்தில் திரையிடப்பட்ட டம்பாச்சாரி. மூன்றாவதாக வந்ததுதான் டிசம்பரில் வெளியான மேனகா. இந்த தகவலை 1935ல் வந்த பத்திரிக்கைகளைப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். மற்றொரு விவரத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மெளனப்பட காலத்திலேயே சில சமூகப் படங்கள் தர்ம பத்தினி (1929) போன்றவை சென்னையில் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டன.

அடுத்த எடுத்துக்காட்டு தியாக பூமி படம் பற்றியது. அதாவது இப்படம் திரையிட்டு சில நாட்களிலேயே பிரிட்டீஷ் அரசால் தடை செய்யப்பட்டது என்பது. இது தவறான விவரம். 1935ல் இந்திய சட்டத்தைத் தொடர்ந்து சென்னை ராஜதானியில் 1937 முதல் 1939 வரை, இராஜாஜியை பிரதமராகக் கொண்ட (அப்போது ராஜதானியின் முதலமைச்சர் பிரதமர் எனக் குறிப்பிடப்பட்டார்). காங்கிரஸ் மந்திரிசபை ஆட்சியிலிருந்தது, அப்போது எல்லாவிதமான தணிக்கைகளும் தளர்த்தப்பட்டன; எடுக்கப்பட்டுவிட்டன. பத்திரிக்கை, நாடகம், சினிமா என எல்லா ஊடகங்கள் மேலிருந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி அரிதாகக்கிடைத்த கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி பலர் நாட்டுப்பற்றை அடிப்படையாகக் கொண்ட படங்களை எடுத்தனர். அந்தக் காலகட்டத்தில் நாட்டுப்பற்று, திரையில் ஒரு விலைபோகும் பொருளாகவும் அடையாளம் காணப்பட்டது.

ஆனந்தாஸ்ரமம், மாத்ரு பூமி, தியாக பூமி, ஹரிஜன சிங்கம் என பல தேசபக்திப் படங்கள் 1939ல் வெளிவந்தன. ஆனால், இத்தனை படங்களில் இன்று நம்மிடம் எஞ்சி இருப்பது தியாக பூமி மட்டும்தான். இந்த இரண்டு வருட காங்கிரஸ் ஆட்சியில் எந்தப் படமும் தடை செய்யப்படவில்லை. காங்கிரஸை ஆதரிக்கும் காட்சிகளும் வெட்டப்படவில்லை. தியாக பூமி பற்றிய சமகாலப்பத்திரிகை விமர்சனங்களும் இதைத் தெளிவாகக் காட்டுகின்றன. 1939 முடிவில், இந்தியாவை உலகப் போரில் ஈடுபடுத்தியது குறித்து பிரித்தானிய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் காங்கிரஸ் அரசு பதவி விலகியது. ஊடகங்களின் மீது தணிக்கை மறுபடியும் அமலாக்கப்பட்டது. அதன் பிறகு தியாக பூமி மறுபடியும் 1944ல் திரையிடப்பட்ட போதுதான் பிரித்தானிய அரசு அதைத் தடை செய்தது. இந்த அரசு ஆணை தமிழ்நாடு ஆவணக்களரியில் உள்ளது. (காண்க. G.O. No. 1378 – 79 Home, dt. 2.5. 1944). அன்று சினிமாவிற்கும் நாடகத்திற்கும் போலீஸ் கமிஷனர்தான் தணிக்கை அதிகாரி. பிரிட்டனில் 1945ல் தொழில் கட்சி வெற்றி பெற்று, இந்தியாவுக்கு சீக்கிரமே சுதந்திரம் கிடைக்கும் என்பது உறுதியான பிறகு தணிக்கை தளர்த்தப்பட்டன. மேலும் சில தேசப்பற்று படங்கள் வெளியாயின.

இந்தியாவில் பல படங்கள் காலனிய அரசால் தடை செய்யப்பட்டன. இது மெளனப்பட கால்த்திலேயே நடந்திருக்கின்றன. பம்பாயில் தயாரிக்கப்பட்ட ஷிலாஸ் எனும் படம் 1928ல் நாடெங்கும் தடை செய்யப்பட்டது. அனார்கலி (1928)என்ற சலனப்படம் நாடெங்கும் தடை செய்யப்பட்டது. பேசும் படம் வந்த பின்னர், 1934ல் ஆலை (Mill) என்ற ஹிந்திப்படம் நாடெங்கும் தடை செய்யப்பட்டது. அதே போல் ஹமாரா தேஷ் (1937) என்ற மராத்திப் படம் தடைசெய்யப்பட்டது. மிஸ்.சுகுணா (1937) என்ற தமிழ்ப்படம் வெளியிடப்படும் முன்பே தடை செய்யப்பட்டது. இவை சில உதாரணங்களே.
பிரித்தானிய அரசு காலத்தில், சினிமா மட்டுமல்ல, நாடகமும் அச்சுத்துறையும் பத்திரிக்கைகளும் தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டன. இதன் கடுமை அவ்வப்போது, அரசியல் நிலவரத்திற்கேற்ப வேறுபட்டது. ஆனால், அந்த நிலைமையிலும் ஏ.கே. செட்டியார் தயாரித்த மகாத்மா காந்தி படம், தண்டி யாத்திரை போன்ற காட்சியினையும் தேசபக்திப் பாடல்களையும் கொண்டிருந்தாலும், ஒரு வெட்டு கூட இல்லாமல் தணிக்கை அதிகாரிகளால் 1940ல் அனுமதிக்கப்பட்டது. ஆகவே தடை செய்யப்படும் ஆபத்தை எதிர்கொண்டு தேசப்பிதா பற்றிய படத்தை துணிந்து எடுத்தவர் செட்டியார்.
இதேபோல முதன்முதலாக இரட்டை வேடம் திரையில் தோன்றியது உத்தமபுத்திரன் (1940) படத்தில், பி.யூ. சின்னப்பா தோன்றினார் என்பது திரும்ப திரும்ப கூறப்படும் தகவல். ஆனால், அந்தப்படம் வருவதற்கு முன்பே துருவன் (1935) படத்தில், இரட்டை வேடம் என்ற திரைப்பட உத்தி பயன்படுத்தப்பட்டுவிட்டது. அதில் பி.எஸ். சிவபாக்கியம் என்ற நடிகை குறத்தியாகவும், அரசகுமாரியாகவும் நடித்தார். ஒரு காட்சியில் குறத்தி, அரசகுமாரிக்கு குறி சொல்வது போன்று தோன்றினார்கள். என்ன ஆதாரம்? ஆனந்த விகடனில் இந்தப் படத்தின் விமர்சனம் வெளியாகியிருந்தது. அதில் ‘இந்தப் படத்தில் ஒரு அதிசயம். திரையில் ஒரே சமயத்தில் இரண்டு வேஷங்களில் சிவபாக்கியம் தோன்றுகிறார். ‘ என்று எழுதப்பட்டிருந்தது. இரட்டை வேடம் என்ற பதம்கூட அப்போது புழக்கத்தில் இல்லை. (காண்க. ஆனந்த விகடன். 5.5.1935) துருவன் படம் பயனீர் பிலிம்ஸாரால் கல்கத்தாவில் தயாரிக்கப்பட்டு, ஃபிரேம் செத்னா என்ற வங்கத்துக்காரரால் இயக்கப்பட்டது. இந்தப் படம் வெளிவந்து, ஐந்து வருடங்கள் கழித்தே உத்தமபுத்திரன் தயாரிக்கப்பட்டது. அதாவது, ஏறக்குறைய நூற்று நாற்பது படங்களுக்குப் பின், இத்தனை படங்களில், சில படங்களிலாவது இரட்டை வேடம் உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று நம்பலாம். ஆனால், இந்தப்படங்கள் எல்லாமே, சில வற்றைத்தவிர அழிந்து போய்விட்டன. நிலைமை இப்படி இருக்கும்போது, உத்தமபுத்திரனில் தான் இரட்டை வேடம் முதலில் தோன்றியது என்று கூறுவது சரியில்லை.

இப்படிப்பட்ட தவறான தகவல்கள் எப்படி வெளியாகி நிலைபெறுகின்றன.? சினிமா வரலாறு பற்றிய பதிவுகள் மிகக்குறைவு. அது சாமான்யர்களின் பொழுதுபோக்குத்தானே என்ற நோக்கில் உதாசீனப்படுத்தி வைக்கவில்லை. ரோஜா முத்தையா செட்டியார் போன்ற வெகுசிலரைத் தவிர, முன்னோடிகளாக இருந்த ஸ்டூடியோக்களும் அதைச் சார்ந்த நிறுவனங்களும் இன்றில்லை. முன்னோடிகளின் குடும்பத்தாரும் இது பற்றி அக்கறை எடுப்பதில்லை. சிலரைத் தவிர, ஏழை படும் பாடு (1950,) மனிதன் (1953) போன்ற சீரிய படங்களை எடுத்த சினிமா மேதை ராம்நாத் மறக்கப்பட்டுவிட்டார். சினிமாத் துறையில் தொழிற்சங்க இயக்கத்திற்கு வித்திட்ட எம்.பி. ஸ்ரீனிவாசன் மற்றும் நிமாய்கோஷ் ஆற்றிய பணிகள் பற்றிய விவரங்கள் கிடைப்பது அரிதாயிருக்கின்றது. தமிழ்த்திரை பற்றி எழுதுபவர்களில் சிலரும் இத்தகைய விவரங்களுக்கு மதிப்புத் தருவதில்லை.

இலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதும்போது, இம்மாதிரியான விவரங்கள் சரிபார்க்கப்பட்டு ஆதாரத்துடன் வெளியிடப்படுகின்றன. அச்சேறும் புத்தகங்களின் விவரங்களுடன் ஒரு பிரதி அரசிடம் கொடுக்க வேண்டும். என்று 1897ல் ஒரு சட்டம் அமலுக்கு வந்தது. திரைப்படத்திற்கு அப்படி ஒரு சட்டமுமில்லை. அது மட்டுமல்ல. திரைப்படத் தகவல்களைப் பற்றி அன்மைக்காலம் வரை யாருமே ஆர்வம் காட்டவில்லை. 1967ல் தான் தேசிய திரைப்படக் காப்பகம் புனேயில் நிறுவப்பட்டது. அதற்குள் பல முக்கியப் படங்கள் அழிந்துபோய்விட்டன. இதுவரை 5500 தமிழ்ப்படங்களுக்கு மேல் வெளியாகியிருந்தாலும், முழு விபரங்களடங்கிய ஒரு பட்டியல் நம்மிடமில்லை. இருக்கும் பட்டியல்களில் பல படங்கள் விடப்பட்டிருக்கின்றன. தேசிய விருது பெற்ற இயக்குநர் டி.வி. சந்திரனின் படைப்பான ஹேமாவின் காதலர்கள் (1985) என்ற தமிழ்ப்படம் இப்பட்டியல்களில் இடம் பெறவில்லை.

தமிழ் சினிமா பற்றிய தரவுகள் பல இடங்களில் சிதறிக்கிடக்கின்றன. இவை பாதுகாக்கப்பட வேண்டும். சேகரித்து வைத்திருப்பவர்களின் ஒத்துழைப்பு இதற்குத் தேவை. பிலிம் நியூஸ் ஆனந்தன் போன்றோர் அரிதாகச் சேகரித்து வைத்திருக்கும் தரவுகள் ஆய்வாளர்களுக்குப் பயன்பட வழிசெய்யப்பட வேண்டும்.

- தீராநதி, ஏப்ரல் 2005
நன்றி: காலச்சுவடு

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </