இதழ்: 31    பங்குனி (April), 2015
   
 
  உள்ளடக்கம்
 
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
பேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - தினேஷ்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்
--------------------------------
வெட்கத்தினால் உடைந்தழிந்து போனார் புத்தர் - - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
மலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - சுகுமாரன்
--------------------------------
டாக்குமெண்டரி படங்களின் தந்தை ராபர்ட் ஃப்ளஹர்ட்டி - ரவி இளங்கோவன்
--------------------------------
குறும்படங்களின் பத்தாண்டுகள் – 1900 – 1909 - லதா ராமகிருஷ்ணன்
--------------------------------
”கண்ணீர் வேண்டாம் சகோதரி” – தான்யா
--------------------------------
 
   

   

 

 

பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும்...

பகுதி I

- வருணன்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் வணிகமாகப் பிறந்து பின் கலையாக பரிணமித்த சினிமாவை நிரந்தரமாக, முற்றிலும் வணிகமயமாக்கபட்ட நுகர்வுச் சரக்காகவே வைத்திருக்க பெரும் பிரயத்தனங்கள் செய்வதில் அமெரிக்க திரையுலகமான ஹாலிவுட்டை மிஞ்சவே முடியாது. சினிமா மெல்ல மெல்ல ஒரு கலையாக இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்களில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் உருக்கொள்ள ஆரம்பித்து வளரத் துவங்கியது. இப்புதிய கலையின் வீச்சு, வேறெந்த கலை வடிவத்தை விடவும் அதிகமானதாகவும், அதிவசீகரமானதாகவும் இருந்ததாலும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தங்களுடைய சினிமாவை சந்தைப்படுத்துவதில் இதே காலகட்டத்திலேயே மிக மும்முரமாக இறங்கியது. உலகின் சினிமா வரலாற்றின் முதல் பத்தாண்டுகளில் கோலொச்சிய ஐரோப்பிய திரையுலகோடு அமெரிக்க திரையுலகம் கடும் போட்டியாக விளங்கியதென்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதனால் முந்திச் செல்ல முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 1914 -இல் துவங்கிய முதல் உலகப் பெரும்போர் இந்த சூழலை முற்றிலும் புரட்டிப் போட்டது. போர் மேகம் சூழ்ந்த ஐரோப்பா முழுவதும் மக்களை போரின் பதற்றமும், அதற்கான ஆயத்துமுமாக வெகுவாக ஆக்கிரமித்தது. இதில் சினிமா அடியோடு படுத்தது. இந்த இடைவெளியை மிகச் சரியாக ஹாலிவுட் தனக்கு சாதகமாக்கிக் கொண்டது. தனது ஸ்டுடியோ முறை சினிமாக்களை தொழிற்சாலை உற்பத்தி போல துரித கதியில் எடுத்துத் தள்ளியது. கலையிலிருந்து சினிமாவை வெகுவாக நகர்த்தி அதனை ஒரு நுகர்வுப் பண்டமாக மாற்றியது. தொழிற்நுட்பக் கலைஞர்களையும், நடிகர் நடிகையரையும் ஐரோப்பாவிலிருந்து வரவழைத்து தனது பொருள் பலத்தால் தமதாக்கிக் கொண்டு தன்னை வெகுவாக வளப்படுத்திக் கொண்டது.

அமெரிக்க சினிமாவின் மிக ஆரம்பகால வரலாற்றை புரட்டினால் நாம் இன்று அறிவியல் அறிஞர், தலைசிறந்த கண்டுபிடிப்பாளர் என வியந்தோதும் தாமஸ் ஆல்வா எடிசனின்- நமக்கு அறிமுகமே இல்லாத- முதலாலித்துவ முகம் தெரிய வரும். அந்த அளவிற்கு சகலரும் உலக சந்தையை தம்வயப்படுத்த இயன்றவரை சினிமாவை வணிகப்படுத்த முயற்சித்தனர். போர், திரைப்படங்கள் எடுக்கும் சாத்தியத்தைத் தான் ஐரோப்பிய பிராந்தியத்தில் முடக்கியிருந்ததேயொழிய சினிமாவைப் பார்க்க விரும்பும் மக்களின் ஆவலை அல்ல. ஒரு வகையில் சொல்லப் போனால் மனிதனுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் நிலையில், அந்த இக்கட்டான சூழலில் இருந்து ஒரு தற்காலிக விடுதலை மிக அவசியமானதாக இருக்கும். சினிமாவை விட வேறு எதும் சிறந்த மாற்றுவழியாக இந்த தருணங்களில் இருந்திட முடியாதென்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதனால் தாங்கள் கடன் கொடுத்த காலம் போய், ஹாலிவுட்டின் கனவுகளை வாங்க ஆரம்பித்தனர் மக்கள். ஐரோப்பிய சினிமா சந்தையை ஆக்கிரமித்தது அமெரிக்க சினிமா. முதல் உலகப் போர் வரையிலும் ஐரோப்பிய கண்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தியது, ஃபிரென்ச்சு நாட்டின் பதே (Pathe) திரைப்பட தயாரிப்பு நிறுவனம தான். சார்லஸ் பதே என்பவருக்கு சொந்தமான இந்த பட நிறுவனம் தனிப்பெரும் சாம்ராஞ்சியமாக இருந்தது. உலக அளவில் ஃபிரென்ச்சு படங்களை எடுத்துச் சென்றதில் மிக முக்கிய பங்கு பதேவிற்கு உண்டு.

துவக்க கால கட்டத்தில் வெளியான படங்கள் எல்லாமே மௌனப் படங்களாக இருந்த படியால் மொழி ஒரு பெரிய தடை கல்லாக இருந்திருக்கவில்லை. 1920களில் முற்றிலுமாக மேற்குலக சந்தையை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்திருந்தது அமெரிக்கத் திரையுலகம். சினிமாவை கலையாக பாவித்து முன்னெடுக்கப்பட்ட பரிச்சார்த்த முயற்சிகள் அத்திப் பூத்தார்போல நிகழ்ந்தது உண்மையேயானாலும் வணிகத்தை மட்டுமே முன்னிறுத்தி எடுக்கப்பட்ட சினிமாக்கள் தான் கோலோச்சின.

ஹாலிவுட் சினிமாவின் துவக்க வரலாற்றை புரட்டுகையில் நாம் நிச்சயம் சந்திக்கக் கூடிய ஒரு ஆளுமையாக இருப்பவர் D.W. Griffith. படம் இயக்கும் ஆசையில் சினிமாவிற்குள் நுழைந்த அவரை காலம் எட்வின் எஸ். போர்ட்டரின் இயக்கத்தில் 1908 இல் வெளியான ‘Rescued from an Eagle’s Nest’ மூலமாக ஒரு நடிகராக மாற்றியது. நடிகராக தனது கலைப் பயணத்தை துவக்கிய போதிலும் தனது கனவில் இருந்து விலகாது இயக்குனராகவும் பரிணமித்தார் கிரிபிஃத். அசையும் படங்களை மட்டுமே காட்டுவதில் ஆர்வம் மிகுந்திருந்த லூமியர் சகோதரர்களின் படைப்புகளில் இருந்து கதை சொல்லும் ஊடகமாக வளர்ந்து விட்டிருந்தது சினிமா, முதல் பத்தாண்டுகளிலேயே. அமெரிக்காவின் முக்கியமான துவக்க கால திரைப்படங்களில் ஒன்றாக அறியப்படும் The Great Train Robbery (1903) படத்தில் கூட பின்னாளைய ஹாலிவுட் திரைப்படங்கள் முன்னிருத்திய சாகசத் தன்மை மேலோங்கி இருப்பதை நாம் பார்க்க முடியும். 1912 இல் ஃபிரென்ச்சு நடிகை சராபன்ஹார்ட் நடிப்பில் வெளியான Queen Elizabeth திரைப்படமே அமெரிக்காவிற்கு முதல் முழுநீள திரைப்படத்தினை (Feature film) அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்தே கிரிஃபித்தின்- அமெரிக்க மண்ணின் முதல் முழுநீள திரைப்படமாக அறியப்படும்- இயக்கத்தில் வெளியான The Birth of Nations (1915) வெளியானது ஒரு நடிகராகத் துவங்கி இயக்குனராக வளர்ந்திருந்த கிரிஃபித் இந்த படத்திற்கு முன்னரே, ஒரு ஐந்து ஆண்டு இடைவெளியில் ஏறத்தாழ 450 ஒரு ரீல் திரைப்படங்களை பயோகிராஃப் கம்பெனிக்காக இயக்கி முடித்திருந்தார். இவரைப் பற்றி மட்டுமே நாம் அமெரிக்க சினிமா வரலாற்றில் இவ்விடத்தில் பார்ப்பது ஒரு காரணத்திற்காக மட்டுமே. இவர் தான் சினிமாவிற்கு அந்த தேசத்தில் கலை அந்தஸ்த்தை தந்தவர்களுள் முதன்மையான படைப்பாளியாக இருந்தவர் என்பதே அது. (மற்றவர் சார்லி சாப்ளின் என்று நான் சொல்லத் தேவையில்லை. அவரும் அவரது படைப்புகளும் இக்கட்டுரையின் மையக் கருத்தியலுக்கு மிக அந்நியமானவை என்பதால் நாம் அவரை இங்கே கவனமாக தவிர்த்திருக்கிறோம்.)

இவ்வளவு சொன்ன போதிலும் தி பெர்த் ஆப் நேஷன்ஸ் திரைப்படத்தை பரப்புரை திரைப்படமாக (Propaganda Film) முன் வைக்கும் விமர்சனங்கள் தான் அதிகம் உண்டு. ஆனால் இப்படத்தை என்றில்லை, வேறு எந்த தேசத்தையும் விட அமெரிக்கத் திரைப்படங்கள் தங்களது அரசியலை பெரும்பாலான மைய நீரோட்ட திரைப்படங்களில் பொதிந்து வைக்கிறது என்பது மறுக்க முடியாதது.மேலும் உலகமெங்கும் தமக்கென பார்வையாளர்களை உருவாக்கி வைத்திருந்தாலும் ஹாலிவுட் சினிமா அடிப்படையில் அமெரிக்க பார்வையாளர்களின் உளவியலோடு தான் பிணைந்திருக்கிறது. இந்த கட்டுரையின் நோக்கம் எப்படி அமெரிக்க சமகால வரலாற்று நிகழ்வுகளின் பிண்ணனியில் திரைப்படங்களுக்கு எப்படி பார்வையாளர்களின் கூட்டு உளவியல் எதிரிவ்னையாற்றுகிறது என்பதை முக்கிய நிகழ்வுகள் நடந்த காலங்களை எடுத்துக் கொண்டு அவதானிப்பதே.

சினிமாவின் முதல் இருபது ஆண்டுகளில் ஹாலிவுட் உலக சந்தையை பிடித்துக் கொண்டதை தவிர அது தனது வணிக சினிமா உற்பத்தி இலக்கணங்களை செழுமையாக்கி சினிமா வெறும் பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமே தக்க வைத்துக் கொள்வதற்கான முன்னெடுப்புகளை ஏராளமாக செய்திருந்தது. இதே கால கட்டத்தில் ஃபிரென்ச், ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி போன்ற தேசங்களில் பல குறிப்பிடத்தக்க பரிமாணங்களை சினிமா அடைந்திருந்ததை நாம் இங்கு நினைவுகூற வேண்டியது அவசியம். இந்த தேசங்களில் எல்லாம் சினிமா அந்தந்த சமூகங்களின் சுயப்பரிச்சோதனைக் களமாகவும், பிராந்திய அரசியலின் விமர்சன முன்வைப்பாகவும், தனது தேசத்தின் வரலாற்றை ஆய்ந்து நோக்கி ஆவணப்படுத்தும் கலைப் பிரதியாகவும் உருமாறி இருந்தது. இந்த தேசங்களில் பொழுதுபோக்கிற்கான சினிமா எடுக்கப்படவே இல்லை என்று சொல்ல முடியாது. ஆயினும் பரிச்சார்த்த முயற்சிகளும் கூடவே நடந்து வந்தன என்பதே நாம் சொல்ல வருவது. ஜெர்மனியின் முர்னோ துவங்கி, ரஷ்யாவின் ஐஸன்ஸ்டைன் வரையிலும் நாம் இதற்கு எடுத்துக்காட்டுகளை சுட்ட முடியும்.

முதல் உலகப்போர் நேரடியாகவோ மறைமுகமகவோ மேற்குலகினை வெகுவாக பாதித்திருந்தது. அரசியல் சூழலில் இருந்த நிலையாமை, பொருளாதர மந்த நிலை என மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் நெருக்கடிகளை சந்தித்துக் கொண்டிருந்த காலமாக இருந்தது 1920 மற்றும் 1930கள். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல 1929 துவக்கி சில வருடங்கள் நீடித்த பெரும் பொருளாதார தேக்க நிலை (The Great Depression) மேற்கிலகை புரட்டிப் போட்டது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய தேசங்களுக்கு முதல் உலகப் போரின் நெருக்கடிகளில் இருந்து மீண்டு வருவதற்குள்ளாகவே விழுந்த இந்த அடி தாங்க முடியாததாக இருந்தது. கூடவே இந்த பிராந்தியத்தில் ஹிட்லர் தலைமையிலான நாஜிக்களின் கட்டுப்படுத்தமுடியாத வளர்ச்சியும், இத்தாலியில் முசோலினி தலைமையிலான பாசிஸ்டுகளின் வளர்ச்சியும் கடும் ஆரசியல் நெருக்கடிகளை வேறு எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

வால் ஸ்ட்ரீட் பொருளாதார மந்த நிலையின் நதிமூலமாக இருந்த போதிலும், பங்குச் சந்தைக்கு சம்பந்தமே இல்லாத சாமானிய குடிமக்கள் தான் இதில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டனர். பெரும் அக குழப்பங்களால் மனித மனங்கள் நிறைந்திருந்த நேரத்தில் மனிதர்கள் எதிலாவது தம்மைத் தொலைத்து அதன் மூலமாக இந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள முனைப்புடன் இருந்தனர். யதார்த்தத்திலிருந்து சில மணிநேரமாவது தப்பிச் செல்லும் சாளரமாக சினிமாவே அவர்களுக்கு இருந்தது. இன்றளவும் அர்த்தமற்ற பல வணிக சினிமாக்கள் பெரு வெற்றி பெருவதன் உளவியல் காரணம் இதுதான் முப்பதுகளில் ஹாலியுட்டின் ஸ்டுடியோ முறை (Studio System) மிக பலம் பொருந்திய ஒரு கேந்திரமாக வளர்ச்சி அடைந்திருந்தது. மேலும் ஸ்டுடியோக்களின் கதை இலாக்காவினர் மக்களின் மனவோட்டங்களை சிறப்பாக அனுமானித்து அதனை தங்களது வியாபாரத்திற்கு சாதகமாக மிக நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்வதில் தேர்ந்திருந்தனர்.

அமெரிக்கத் திரைப்பட வரலாற்றில் முப்பதுகள் முழுக்க வியாபித்து ஆதிக்கம் செலுத்தியது மிகுபுனைவுகளான ஃபேன்டசி திரைபடங்கள் தான். கற்பனை விலங்குகளில் அட்டகாசங்களும், செவ்வியல் புதினங்கள் மற்றும் கதைகளின் பேய்களுமே திரைகளை ஆக்கிரமித்திருந்தன. Dracula (1931), Frankenstein (1931) Dr.Jekyll and Mr.Hyde(1931) போன்றத் திரைப்படங்கள் மக்களிடையே பெருத்த வரவேற்பைப் பெற்றன. பொதுவாக மான்ஸ்டர் திரைப்படங்கள் (Monster Movies) என வகைப்படுத்தப்படும் இவற்றுள், நிஜ வாழ்க்கையின் நெருக்கடிகளில் இருந்து தப்பித்து இன்னுமொரு புனைவு உலகம் செயற்கையாக உருவாக்கும் நெருக்கடிகளுக்குள் தம்மை தொலைக்க பார்வையாளர்கள் முயன்றனர். மேற் சொன்ன இரண்டு திரைப்படங்களும் ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே சொல்லப்பட்டவை. இவை தவிர எண்ணற்ற திரைப்படங்களை- கிங் காங் (1933), ஸோம்பி (zombie)திரைப்படங்கள், மௌனயுகத்தின் அற்புத உலகில் ஆலீஸ் போன்ற திரைப்படங்கள் பேசும் படங்களாக மறுவுருவாக்கம் பெற்றது- சொல்லிக் கொண்டே போகலாம்.

முப்பதுகளின் துவக்கத்தில் அமெரிக்கா தவிர்த்து நாம் கவனத்தில் இவ்விடத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விடயம், ஜெர்மனி சினிமாவில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம் தான். பிரிட்ஸ் லாங், F.W. முர்னோ போன்ற திரைமேதைகளின் படைப்புகளால் வளமடைந்த ஜெர்மானிய சினிமா, நாஜிக்களின் அதிகாரக் கைகளில் சிக்கி சின்னாபின்னமானது. மெல்ல சினிமாவின் வீச்சினை கச்சிதமாக புரிந்துக் கொண்ட ஹிட்லர் தனது தேசத்தின் சினிமா ஊடகத்தை மொத்தமாக இந்த காலகட்டத்தில் தனதாக்கிக் கொண்டார். அவரது வலதுகரமாக இருந்த கோயபல்ஸின் முழு கட்டுப்பாட்டிற்குள் ஜெர்மானிய திரைத்துறை வந்தது. சில வருடங்கள் அங்கே ஏராளமான கருத்துப் படங்களே சினிமா எனும் பெயரில் எடுக்கப்பட்டன. அனைத்துமே ஹிட்லரின் புகழ் பாடும் அல்லது நாஜிக்களின் பராகிரமங்களை பறைசாற்றும் பிரசாரப் படங்களே (Propaganda Cinema). பிற்காலத்தில் அமெரிக்கா எப்படி சாதுர்யமாக தனது வெகுசன திரைப்படங்களையே தந்து தேசிய கருத்துருவாக்கத்திற்கு சாதகமாக, மறைமுகமாக பிராசரப் படங்களாக ஆக்கிக் கொண்டது என்பதை பின்னால் தெளிவான சில எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கலாம்,

அக்காலகட்டத்திய ஹாலிவுட்டின் பெருவெற்றியாக கருதப்படும் Gone with the Wind (1939) வகை திரைப்படங்கள் திரையில் ஒருவித பகட்டுத் தன்மையையும், ஆடம்பரத்தையும் முன்வைத்தன. மேலும் நாடகத்தனம் நிரம்பிய காதலை அழகியல் ரீதியாக முன்வைத்தன. இதுவும் ஒரு வகையில் பார்வையாளர்களின் தப்பித்துக் கொள்ளலுக்கு வகை செய்தது என்றே சொல்ல வேண்டும். இது தவிர இதே காலகட்டத்தில் (1920களின் பிரபாதி துவங்கி) தொடர்ந்து வெளியான வால் டிஸ்னியின் கார்ட்டூன் திரைப்படங்களும் அவற்றுக்குக் கிடைத்த மக்களின் அமோக ஆதரவும், கூடவே பெருவாரியாக் கிடைத்த ஆஸ்கர் அகதமி விருது அங்கீகாரங்களுக்குமான உளவியல் காரணத்தை நாம் இதே கோணத்தில் அணுக முடியும். டிஸ்னியின் மேதைமை விவாதத்திற்கு அப்பாற்பட்டது என்ற போதிலும், அவரது படைப்புகள் பார்வையாளர்களை மீது, அவை வெளியான காலங்களில் இருந்த அரசியல் பொருளாதார நெருக்கடிகள் அல்லாத வேறு எந்த கால கட்டத்தில் வெளியாகிக் இருப்பினும் இதே அளவிற்கான தாக்கம் இருந்திருக்குமென உறுதியாக சொல்ல முடியாது. இன்றளவும் திரைப்பட வரலாற்று அறிஞர்கள் (Film Historians) ஹாலிவுட்டின் பொற்காலமாக சுட்டுவது 1930களின் பிற்பாதியில் இருந்து 1940கள் முழுவதுமாக, ஏறத்தாழ ஒரு பதினைந்து ஆண்டுகளைத்தான்.

முதல் உலகப் போர் ஐரோப்பிய சினிமா உலகிற்குத் தந்த தொய்வை தனக்கு சாதகமானதாகவும், லாபகரமானதாகவும் மாற்றிக் கொண்டது அமெரிக்க ஹாலிவுட் திரையுலகம் என்பதைப் பார்த்தோம். தவிர முதல் உலகப் போரில் அமெரிக்கா நேரடியாக கலந்து கொள்ளாத காரணத்தால் அதன் திரைப்பட உள்ளடக்கங்களை பெரிதாக போர் ஆக்கிரமிக்கவில்லை என்பதைப் பார்க்கலாம். இரண்டாம் உலகப் போரில் கூட அமெரிக்கா மிகத் தாமதமாகவே பங்கெடுத்தது நாம் அறிந்ததே. இருப்பினும் இப்போர் சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் இடத்தையும் அதன் பிம்பத்தை மேன்மையும் சர்வ வல்லமையும் படைத்த ஒரு வீழ்த்த முடியாத ஒரு வல்லரசாகவும் கட்டமைப்பதற்கு பிரதானமான காரணமாக இருந்தது. இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிந்தைய ஹாலிவுட் படைப்புகளை நாம் அவசியம் ஆராய வேண்டும். தனது பிம்பத்தை ஊதிப் பெரிதாக்கி சர்வதேச அரங்கில் தன்னை ஒரு நிகரற்ற வல்லரசாக காட்டிக் கொள்வதற்கு சினிமா எனும் ஊடகத்தை முன் எப்போதையும் விட மிக அதிகமாக அமெரிக்கா பயன்படுத்த துவங்கியது அப்போது இருந்துதான். மேலும் அமெரிக்க மக்கள் அந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல்,கலாச்சார, பண்பாட்டு மாற்றங்கள் எப்படி அவர்களது சினிமா பார்வையை பாதித்தது என்பதன் வழியாக அவர்களின் கூட்டு உளவியல் மாற்றத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். அதனை தொடர்ந்து பார்க்கலாம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </