இதழ்: 31    பங்குனி (April), 2015
   
 
  உள்ளடக்கம்
 
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
பேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - தினேஷ்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்
--------------------------------
வெட்கத்தினால் உடைந்தழிந்து போனார் புத்தர் - - எம்.ரிஷான் ஷெரீப்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
மலையாள சினிமாவின் 75 ஆண்டுகள் - சுகுமாரன்
--------------------------------
டாக்குமெண்டரி படங்களின் தந்தை ராபர்ட் ஃப்ளஹர்ட்டி - ரவி இளங்கோவன்
--------------------------------
குறும்படங்களின் பத்தாண்டுகள் – 1900 – 1909 - லதா ராமகிருஷ்ணன்
--------------------------------
”கண்ணீர் வேண்டாம் சகோதரி” – தான்யா
--------------------------------
 
   

   

 

 

”கண்ணீர் வேண்டாம் சகோதரி”

- தான்யா :: நன்றி: திரை

‘என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படுவதாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும், இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்.’

1989.09.15 அன்று ராஜனி தன் நண்பர் ஒருவருக்கு இறுதியாக எழுதிய கடிதத்திலிருந்து

வருடா வருடம் கொற் டொக் (Hot Does) என்கிற உலகளாவிய விவரணப்பட (Documentary) விழா ரொறன்ரோவில் நடைபெற்று வருகிறது. இவ்வருடம் இவ்விழாவில் ராஜனியின் (கண்ணீர் வேண்டாம் சகோதரி’ (No more Tears, sister) என்கிற விவரணப்படம் திரையிடப்பட்டது. உலகளாவிய யுத்தம் பெண்களின் வாழ்வில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது என்று தேடியபோது மனித உரிமையாளர் ராஜனி திரானகம் பற்றி அறிந்துகொண்டதாக ஹெலன் (Helene Klowdawsky) விவரணப்பட அறிமுகத்தில் குறிப்பிட்டார். திறமையான உடற்கூற்றியலாளர் (Anatomist), பெண்ணியவாதி, அரசியல் விமர்சகர், புரட்சிகர சிந்தனாவாதி, இரண்டு பெண் பிள்ளைகளின் தாய் 1989 ஆம் ஆண்டு அவரது 35ஆவது வயதில் பல்கலைக் கழகம் விட்டு சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். இவருடைய மரணம் இவருடைய செயற்பாடுகளுக்கும் அரசியல் பங்களிப்புகளுக்கும் எதிரானதாகவே பார்க்கப்படுகிறது. இன்றும் இலங்கை மற்றும் தமிழ்ப்பெண்களின் மிகப்பெரிய ஆதர்சமாக, அரசியல் செயற்பாட்டளராக (Political activist) ராஜனி திரானகம திகழ்கிறார்.

ஈழத்தைப் பொறுத்தவரை நிர்மலா – ராஜனி சகோதரிகளின் பங்களிப்பு, விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பில் முக்கியமானது. யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்களான ராஜனி திரானகம, ராஜன் கூல், தயா சோமசுந்தரம் மற்றும் கே.சிறீதரன் போன்றவர்களால் ‘முறிந்த பனை’ என்கிற ஆவணம் தேசிய விடுதலைப் போராட்டம் பற்றிய விமர்சனங்களை முன்வைக்க சேகரிக்கப்பட்டது. இந்நூல் ஈழப் போராட்ட வரலாற்றையும், போக்கையும், அதன் நீட்சியையும், இயக்கங்களுள் ஏற்பட்ட பிளவுகளையும் பேசியிருந்தது. இன்று ராஜனியை ‘முறிந்த பனை’ எழுத்தாளராய் மட்டுமே முன்னிறுத்திவிடுகிறார்கள். அவருடைய அரசியல் சமூக நோக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. கவிதையோ புனைவுகளோ எழுதாத சமூக சிந்தனைவாதியை, பெண்ணியவாதியைப் பரவலான வாசகர்கள் அறிந்துகொள்ள முனைவதில்லை. பூரணி என்கிற அமைப்பை இங்கிலாந்தைச் சேர்ந்த பற் என்கிற பெண்மணியுடன் ஆரம்பித்தவர். அதன் மூலமாய் இலங்கை, இந்திய அரச பயங்கரவாதங்களாலும் போராட்ட அமைப்புக்களாலும் போர்ச்சூழலில் பாதிக்கப்பட்ட பெண்களைச் சேர்த்து அவர்களுக்கு வாழ்வதற்கான வெளியையும் எதிர்த்து நிற்பதற்கான மன உறுதியையும் கொடுத்தவர். யாழ் மருத்துவபீட ஆசிரியர்.

உலகளாவிய அளவில் அரசியலில் பெண்கள் என்று பார்க்கையில் மிகக் குறைவான அளவே பெண்கள் பங்களிப்பாற்றியுள்ளார்கள். தமிழ்ப்பெண்களில் ராஜனி போன்று அரசியல் விமர்சகர் இலங்கையிலோ இந்தியாவிலோ, ராஜனிக்கு முன்னோ பின்னோ தீவிர விமர்சகத் துறையில், பெண்கள் வரவேயில்லை என்பதே உண்மை. இவருடைய மரணத்தின் பின்னேயே சிவரமணி தற்கொலை செய்து கொண்டார். தாங்கள் நம்புகிற கொள்கை உடையவர்கள் எல்லாம் அழித்தொழிக்கப்பட்ட பின் எழும் வெறுமையையே சிவரமணி போன்றவர்களின் தற்கொலைக்கான காரணமாயும் பார்க்கலாம்.

வெளியில், சிறு மழைத்தூறலுடன் கூடிய குளிரில், நீண்ட வரிசையில், பார்வையாளர்கள்,- பலவிதமான மக்கள் இவ்விவரணப் படத்திற்காக்க் கால நிலையைப் பொருட்படுத்தாது காத்திருந்தார்கள். போராட்ட வரலாற்றில் சுயாதீனமானதொரு பெண்ணியவாதியைப் பற்றிய ஒரு விவரணப் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்கிற முனைப்பே பலரிடம் இருந்தது.
* * * *

மெல்லிய இருள் பிரிகிற நேரம் ஒரு இளம் பெண் சேலை, உடுத்திக்கொண்டிருக்கிறார், ‘சகோதரி கண்ணீர் வேண்டாம்’ விவரணப்படம் ஆரம்பிக்கிறது. அடுத்த காட்சியில் ராஜனி சைக்கிளில் போய்க்கொண்டிருக்கையில் சுட்டுக்கொல்லப்படுகிறார். அதிலிருந்து படம் பின்னோக்கிப் போகிறது. ராஜனியின் சகோதரிகள் நிர்மலா – சுமதி – வாசகி, பெற்றோர் திரு. திருமதி ராஜசிங்கம் மற்றும் ராஜனியின் கணவர் தயபால (திரானகம) ராஜனியைப் பற்றிய தங்களுடைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள். சிங்களவரான ராஜனியின் கணவர் திரானகம ஜனதா விமுக்தி பெரமுன (JVP)வில் இருந்தவர், அவர் கொழும்பில் தலைமறைவாய் இருந்தபோது, ராஜனி யாழ்ப்பாணத்தில் தமது இரண்டு குழந்தைகளுடன் தனியே வாழ்ந்தவர். தாய் கொல்லப்பட்ட அந்த நாட்களை எவ்வாறு அந்தக் குழந்தைகள் எதிர்கொண்டார்கள் என்பதைக் கூறி அவருடைய மகள்கள் அழுதபோது அவர்கள் அந்தக் காலத்திலே வாழ்வது போன்ற உணர்வு ஏற்பட்டது.

இவ்விவரணப் படத்தைப் பொறுத்தவரையில் இது ராஜனியை அவருடைய பெற்றோர், சகோதரிகள், கணவன், குழந்தைகள் என்று அவரைக் குடும்பத்துக்குள் மட்டுமே நிறுத்திவிடுகிறது. ராஜனி இந்த குடும்பத்துக்குள் மட்டுமே அறியப்பட்டவர் இல்லை. அவரை ஒரு மருத்துவபீட ஆசிரியராய் இன்றும் ஆகர்சிக்கும் மாணவர்கள் இருக்கிறார்கள். இந்திய இராணுவ அட்டூழியங்களையும் அவர்களுடய அத்துமீறல்களையும் ராஜனி ‘முறிந்த பனை’நூலில் கவனப்படுத்தியுள்ளார். அதே போல் பூரணி அமைப்பை நிறுவி அத்தகைய போர்க்கால அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு உதவிகள் வழங்கினார். பூரணி அமைப்பைச் சேர்ந்த பெண்கள் என்ன ஆனார்கள்? என்றோ, அதன் நோக்கம் பற்றியோ இப்படத்தில் பேசப்படவில்லை. பூரணி அமைப்பால் கைத்தொழில்கள் மூலம் பெண்கள் சுயமாக வாழ்வதற்கான பயிற்சிகள், செயற்பாடுகள் நடத்தப்பட்டிருந்தன. எதுவுமே விவரணப் படத்தில் இடம்பெறவில்லை. இதை எடுத்த ஹெலன் (Helen Klowdawsky) ஆங்கிலப் பெண் என்பதால் அவருக்கு ராஜனி பற்றிய பல விடயங்கள் தெரிந்திருக்கவில்லை. ஆதலால் அவர் நிர்மலாவையே சார்ந்து இருக்க வேண்டியதிருந்திருக்கிறது என்பதை விவரணப் படத்தில் உணர முடிந்தது. பலரும் அறிந்திருந்த ராஜனியின் கோபமும், திமிரும், இந்திய ராணுவத்துடனும் மனித உரிமை மீறல்களுக்காய் சண்டையிட்ட அவருடைய போராட்ட குணங்களும் காட்டப்படவில்லை. மாறாய், அவர் பல்கலைக்கழகம் போவதற்கு முன் கண்ணுக்கு மஸ்காரா (Mascara) இடுவதாய் காட்டப்படுகிறது. அப்போர்க்காலத்தில், யாழ்ப்பாணத்தில் ஒருவர் மஸ்காரா போடுவாரா அல்லது ராஜனி போன்ற சமூக சேவகி போடுவாரா போன்ற விவாதங்கள் அவசியமில்லை. ஆனால், இவை படப்பிடிப்பாளர்கள் வெளிநாட்டவர் என்கிற எண்ணத்தை உண்டுபண்ணியது. இதில் ராஜனியாக நடித்த அவரது மகள் சரிகா நன்றாக நடித்த போதும் பல இடங்களில் அவர் ஒரு யாழ்ப்பாணப் பெண் என்கிற உணர்வின்றி வெளியாள் (Outsider) போன்ற உணர்வையே தருகிறார். (பல்கலைக்கழகத்தில் அடித்து உடைத்த பொருட்களை ராஜனி அடுக்குவதாகக் காட்டும்போது ஜீன்ஸ் போட்டிருந்தார்). தயபால அவர்கள் ‘என் மக்களின் விடுதலை’ என்றே ராஜனி அடிக்கடி சொல்வதாகவும் அவருடைய அரசியல் மற்றும் பெண்ணியச் சிந்தனைகள் ராஜனியைத் தன்னிடமிருந்து விலக்கியதாகவும், தான் ஒரு கணவனாய் பிரச்சினைகளுக்கு மத்தியில் இணைந்த போதும், வாழ்க்கைக் காலத்தில் அவரிடமிருந்து பிரிந்தே வாழ்ந்ததை வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.

தயபால மிக வறிய குடும்பத்தில் பிறந்து JVP உடன் இணைந்து, குடும்ப வாழ்வின் பெரும் பகுதியை Undergroundஇல் கழித்தவர்., ராஜனியுடைய காதல், குடும்ப உறவுகள் மற்றும் மரணம் என்று ஒரு வட்டத்தை சமன்படுத்தியது போன்ற உணர்வையே இந்த விவரணப் படம் தந்தது. ஈழத்துப் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை இது பூர்த்தி செய்யாதபோதும் கனடியப் பார்வையாளர்களை ராஜனியின் விவரணப் படம் பாதித்ததை வெளியில் அவர்களுடைய பேச்சைக் கேட்டபோது உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருந்தது.

***

ராஜனி தீவிர விடுதலைப் புலிகளின் ஆதரவாளராய் இலண்டன் சென்று பிரச்சாரங்களில் ஈடுபட்டவர், அங்கு அவர் சந்தித்த, கேள்வியுற்ற விடயங்களை அவரை விடுதலைப் புலிகளின் செயற்பாட்டில் அதிருப்தி உறச்செய்கிறது. பின் அவர் விடுதலைப் புலிகளின் இயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார். இலண்டனிலிருந்து ராஜனியைத் திரும்பிப்போக வேண்டாம் என்று பலரும் சொன்னபோதும் மருத்துவபீட மாணவர்களின் மூன்றாம் ஆண்டு சோதனைகள் ஒரு வருடம் தடைபடக் கூடாது என்பதால், ராஜனி தான் போயே ஆக வேண்டும் என்று போனதாகவும், இந்தச் சூழலில் குழந்தைகளை விட்டுவிட்டுப் போகச் சொல்லி நிர்மலா கேட்டபோது ‘அங்கு எத்தனையாயிரம் குழந்தைகள் யுத்தத்திலும் செல் அடியிலும் தான் வாழ்கிறார்கள். என் பிள்ளைகளும் அதுக்குள்தான் வாழ வேண்டும்’ என்று கூறி கூட்டிச் சென்றதாயும் நிர்மலா குறிப்பிட்டார். தன்னுடைய கல்விக்கும் திறமைக்கும் உலகில் எந்த மூலையிலும் வாழக்கூடிய ராஜனி தன் மக்களுடன் யாழ்ப்பாணத்தில் வாழ்வதைத் தேர்ந்தெடுத்துக்கொண்டார். தனக்கு நேரக்கூடிய அனர்த்தங்களைத் தெரிந்தும் அந்த மண்ணில் வாழ்ந்து இறந்துபோனவர் ராஜனி. ‘முறிந்த பனை’ நூலிலுள்ள, யுத்த காலத்தில் ஏற்பட்ட பெண்களின் பிரச்சினைகளைப் பற்றிய அவருடைய கட்டுரைக்கான தலைப்பு ‘அக்கா அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை’. அதிலிருந்தே இவ்விவரணப் படத்திற்கு, ‘கண்ணீர் வேண்டாம் சகோதரி’ என தலைப்பிடப்பட்டிருக்கிறது.

விவரணப் படத்தில் ராஜனியின் கணவரை தயபால என்றே குறிப்பிடுகையில் , ராஜனி திரானகம என்று அறிந்திருந்தவர்கள் குழப்பத்துக்கு உள்ளானார்கள், தயபால திரானகம் என்று உபயோகித்திருந்தால் குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம். தயபால அவர்களின் இளமைப் பிராயம், வறுமை, செருப்புகூட இல்லாமல் பாடசாலை போனது, பல்கலைக்கழகம் சென்றது, அங்கு ராஜனியைச் சந்தித்தது. அவர்களுக்கிடையிலான காதல், இவர் சார்ந்த ஜேவிபி இயக்கம். அவரது கொள்கைகள், தலைமறைவு வாழ்க்கை, அரசாங்கத்தால் கொல்லப்பட்ட ஜேவிபி மக்கள் என்று அவரைப் பற்றியும் நிர்மலாவைப் பற்றியும் அதிகமான அறிமுகம் கிடைத்தது. இதுபோல ராஜனியின் கொள்கைகள், கல்வி, செயற்பாடுகள் குறித்த எந்த தகவல்களும் விவரணப்படத்தில் இடம்பெறவில்லை. ராஜனி – ‘முறிந்த பனை’ எழுதியற்காக கொலை செய்யப்பட்டார்., இரண்டு பெண் குழந்தைகளின் தாய், கணவர் சிங்களவர், இவருக்கு மூன்று ஆளுமையான சகோதரிகள் இவையே ‘சகோதரி கண்ணீர் வேண்டாம்’ விவரணப் படத்தின் சாரம். இவ்விவரணப் படத்தை ராஜனி பற்றிய சிறிய அறிமுகமாகவே பார்க்க முடிந்தது. ராஜனி கொல்லப்பட்டு 14 வருடங்கள் முடிந்துவிட்ட நிலையில் அவரைப் பற்றி ஒரு சிறுபுத்தகமாகவோ விவரணப் படமோ இலங்கையில் எடுக்கப்படாத ஒரு சூழலில், ஹெலன் அவர்களின் முயற்சியால் ராஜனி பற்றிய ஒரு விவரணப் படத்தை கனடிய நிறுவனங்களால் எடுக்கப்பட்டது பாராட்டப்பட வேண்டியது. ஆகர்சமான, முன் மாதிரியாக எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒரு பெண்ணின் சமூக நோக்கும் அரசியல் விமர்சனங்களும் மறக்கடிக்கப்பட்டே வந்திருக்கிறது. குறைபாடுகளிருப்பினும் இவ்விவரணப் படம் ராஜனி பற்றிய சிறிய அறிமுகத்தையேனும் கொடுக்கிறது என்ற வகையில் வரவேற்கப்பட வேண்டியது. இவர் பற்றிய முழுமையான பிம்பத்தை விவரணப் படமாய் எடுக்க முடியாத சூழலில் படமாகவேனும் எடுக்கப்படவேண்டும்.

***
படம்: No more tears sister : Anatomy of hope and betrayal
இயக்குநர்: D.Helene Klowdawsky

நேரம் : 80 நிமிடங்கள்

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </