இதழ்: 32    சித்திரை (May), 2015
   
 
  உள்ளடக்கம்
 
திரைப்படம் எதிர் இலக்கியம் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் - தியடோர் பாஸ்கரன்
--------------------------------
உன்னைப் போல் ஒருவன் - அம்ஷன் குமார்
--------------------------------
சில நேரங்களில் சில மனிதர்கள் - B.லெனின்
--------------------------------
சினிமாவுக்குப் போன சித்தாளு - ஜெயகாந்தன்
--------------------------------
வரலாற்றுக்கு எதிராக ஜெயகாந்தன் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
ஜெயகாந்தனின் அறிவை செப்பனிட்ட சினிமா - அம்ஷன் குமார்
--------------------------------
‘யாருக்காகவோ அழுதான்...!’- B.லெனின்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் 2 - வருணன்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
 
 
   

   

 

 

பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும்...

பகுதி II

- வருணன்

சென்ற மாத இதழின் தொடர்ச்சி...

நாற்பதுகளின் ஹாலிவுட்டின் மற்றொரு முக்கியமான முகம் ஃபிலிம் நுவார் (Film Noir). பார்வையாளார்களின் உளவியலோடு இதற்கு நெருக்கமான தொடர்பு உண்டு. இதன் போக்கை அறிந்து கொள்ள நாம் மீண்டும் முப்பதுகளின் துவக்கத்திற்கு, அதாவது பொருளாதார நெருக்கடி அமேரிக்காவைப் ஆட்கொண்ட காலத்திற்குள் நுழைய வேண்டும். பொருளாதார மாற்றங்களும் சாமானியர்களை அழுத்திக் கொண்டிருந்த காலமது. முன்னர் சொன்னதைப் போல அவர்கள் தங்களின் நிச வாழ்வின் துயரங்களை தற்காலிகமாக மறக்க சினிமா காட்டும் கனவுலகை தரிசிக்க விழைந்ததை பார்த்தோம். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் பார்வையாளர்கள் எதனை ரசிக்கிறார்கள் என்பது அவர்களது மனோநிலையோடு பிணைக்கப்பட்டது. அவர்களது மனோநிலை அக்காலகட்டத்திய அன்றாடங்களின் நெருக்கடிகளால் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. எனவே. ஒவ்வொரு காலகட்டத்தின் சினிமாக்களில் மையம் கொள்ளும் பொதுவான சில அம்சங்கள் அந்த காலத்தில், அச்சமூகத்தின் மீதான புரிதலை நமக்குத் தர வல்லது. சினிமாவை இவ்விதமாக அணுகும் குறுக்குவெட்டுப் பார்வையினை நம்மால் பிரத்தியேகமான அக்காலகட்டத்திய வரலாற்றுப் பார்வையாக விரித்துக் கொள்ள முடியும்.

எல்லா காலகட்டத்திலும் மேலுலகிற்கு (வானுலகு அல்ல) இணையாக ஒரு கீழுலகு (Underworld) நம் பார்வைக்கு வராமல் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. இப்படியும் சொல்லலாம்- நாம் அந்த இருண்மை நிறைந்த உலகைப் பற்றி அறிய விரும்புவதில்லை. அப்படி ஒன்று இருக்கும் போதிலும் அது இல்லவே இல்லையென நம்பவே ஆசைப்டுகிறோம். முப்பதுகளில் தான் இந்த மறைத்துவைக்கப்பட்டிருந்த கீழுலகின் மாந்தர்கள் உலவும் கதைகள் திரைபடங்களாக உருப்பெற்றன. அது சினிமாவிற்கு ஒரு புதிய வகைமையை கொடுத்தது. கேங்ஸ்டர் திரைப்படங்கள் (Gangster Films) என்று அழைக்கப்படும் அவை பெரும்பாலும் சமகாலத்தில் வாழ்ந்த நிழல் உலகத்தினர் குறித்து செய்தித் தாள்களில் வெளியான முதல் பக்கச் செய்திகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தன. சொல்லப் போனால் சில திரைப்படங்களுக்கு கதை எழுதியவர்களே முன்னாள் பத்திரிக்கையாளர்களாக இருந்தனர். இயக்குனர் ஹாவர்ட் ஹாக்ஸின் (Howard Hawks) ‘Underworld’, ‘Scarface’ போன்ற திரைப்படங்கள் இவ்வகைத் திரைப்படங்களுள் முக்கியமான ஆரம்பகால கேங்ஸ்டர் பிரதிகளாக சுட்டப்படுபவை.

இவ்வகை திரைப்படங்கள் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதைகளைக் கொண்டிருந்தன. பல எந்த வித கலை அம்சங்களும் இல்லாமல் எடுத்துத் தள்ளப்பட்டிருந்தன. இருப்பினும் மக்களிடையே அவை பெற்ற வரவேற்பால் தொடர்ந்து வெளிவரத் துவங்கின. இதன் தொடர்ச்சியே ஃபிலிம் நுவார் திரைப்படங்கள். தற்போது நோயர் என்பதே பரவலாக தமிழில் பயன்படுத்தப்படும் போதிலும் மூல வார்த்தையான இது பிரஞ்சு மொழியிலிருந்து எடுக்கப்பட்டதால் அதன் உச்சரிப்பே பயன்படுத்தப் படுகிறது மேற்குலக விமர்சகர்களால்.

இவ்வகைத் திரைப்படங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன்னர் மேலும் ஒரு தகவலை நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அது ஹாலிவுட்டின் அப்போதைய ஸ்டுடியோ முறையிலான திரைப்பட வர்த்தகப் முறை. முப்பதுகளிலேயே சினிமாவின் அமோக வரவேற்பை நாம் அறிவோம். அக்காலகட்டத்தில் ஏறத்தாழ பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் அமேரிக்காவில் மட்டுமே இருந்தன. ஐந்து மாபெரும் ஸ்டுடியோக்களே மொத்த திரை வணிகத்தையும் கட்டுப் படுத்தும் சக்தி படைத்தவையாக இருந்தன.

தேவை அதிகமாக இருந்ததால் அதிவிரைவாக, குறைந்த நாட்களிலும் பொருட்செலவிலும் படங்கள் தயாரிக்க வேண்டிய தேவை அதிகரித்திருந்தது. எனவே பெரும் பொருட்செலவில் எடுக்கப்படும், நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களோடு கூடவே குறைந்த செலவில் எடுக்கப்படும் படங்களும் மிக அதிகமாக தயாரிக்கப்பட்டன. அவை இன்று பி-சினிமாக்கள் (B-Movies) என்று அடையாளப்படுத்தப்படுகின்றன. இவ்வகைப் படங்களில் மட்டுமே நடிப்பதற்கென பி-மூவி நடிகர்களும் இருந்தனர். அப்படங்களில் பெரிய கலை அம்சங்கள் இல்லாமல் நகலெடுப்பது போல கதைகள் வெறும் சுவாரசியம் கூட்டுவதற்கான உத்திகளுடன் எடுத்துத் தள்ளப்பட்டன. செலவு குறைவு என்பதால் சிறிது நாட்கள் ஓடினாலே நல்ல லாபத்தை தரும் வகையில் அப்படங்கள் இருந்தன. இது ஒரு வகைப்பாடு தான். ஆனால் இப்படங்களில் திகில் திரைப்படங்கள், சண்டைப் படங்கள், கொலை மற்றும் துப்பறியும் திரைப்படங்கள், அறிவியல் புனைக்கதைகள் என பலவகைத் திரைப்படங்களும் எடுக்கப்பட்டன.

பி-மூவீக்கள் என்றாலே குறைந்த செலவு அதிகம் லாபம் என்பதால், ஒரு பொதுவான வணிக யுக்தியை ஸ்டுடியோக்கள் கடைபிடித்தன. அதாவது எண்ணிக்கை அளவில் குறைவாகவே ஏ-சினிமா (முதல் தர கதை மற்றும் நடிகர்கள் கொண்ட திரைப்படஙள்) எடுப்பது. ஆனால் அவற்றை தனியாக திரையரங்க உரிமையாளர்கள் திரையிட வாங்க முடியாது. அவற்றோடு பல பி-மூவிக்களையும் சேர்த்து தொகுப்பாகத்தான் வாங்க முடியும். இதனை Block Booking என்பார்கள். ஒரு வகையில் இது திரையரங்க உரிமையாளர்களின் வணிகத்தை பாதிக்காததால் இதனை அவர்கள் கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்கத் துவங்கினர். இப்படிபட்ட சினிமாக்களில் இருந்துதான் ஒரு கட்டத்தில் சோதனை முயற்சியாக வெளியான சில திரைப்படங்கள் பின்னாட்களில் ஃபிலிம் நுவார் திரைப்படங்கள் என அழைக்கப்படத் துவங்கின. இன்னும் சொல்லப்போனால் இந்த வகைப்படே பின்னாட்களில் உருவாக்கப்பட்டதுதான்.

பிரெஞ்சு திரை விமர்சகர் நினோ ஃபிராங்க் 1946 இல் தான் Film Noir எனும் பதத்தை முதன்முதலாக (தனது விமர்சனமொன்றில்) பயன்படுத்தினார். அமேரிக்காவின் பல குற்றமைய திரைப்படங்கள் (Crime Films) இதன் கீழ் வந்தன. பிரெஞ்சு பதமான இந்த சொல்லுக்கு நேரடி அர்த்தம் கருப்பு படம் என்பதாகும் (Black Film) நுவார் படங்கள் எல்லாம் குற்றங்களை பின்னணியாகக் கொண்ட கதைக் கருக்களையே கொண்ட திரைப்பிரதிகளாகவும், குறை ஒளியில் (Low Key Lighting) ஒளிப்பதிவு செய்யப்பட்டவையாகவும் இருந்ததால் அப்படங்களுக்கு இப்பெயர் மிகப் பொருத்தமாக இருந்தது. அதுவே இன்றுவரை நிலைத்தும் விட்டது. முன்னரே சொன்னது போல ஸ்டுடியோக்களின் வணிக நடைமுறைகளே குறைந்த முதலீட்டில் பி-மூவிக்களை பெருமளவில் உருவாகக் காரணமாக அமைந்தது. அதில் ஒரு வகையினர் பிரிந்து நுவார் திரைப்படங்களை உருவாக்கத் துவங்கினர். பல திரை ஆய்வாளர்கள் சில நுவார் கூறுகள் கொண்ட திரைப்பிரதிகள் முப்பதுகள் முழுவதும் அவ்வப்போது வெளியானாலும் 1940 இல் போரிஸ் இங்ஸ்டரின் இயக்கித்தில் வெளியான Stranger on the Third Floor எனும் திரைப்பிரதியையே முதல் முழு நுவார் பிரதியாக அடையாளப்படுத்துகிறார்கள்.

இந்த இடத்தில் நமக்கு ஒரு நியாயமான சந்தேகம் வரும். பல குற்றப் பின்னணி கொண்ட படங்கள் இவை போல் உள்ளனவே? அப்படியென்றால் அவை எல்லாம் நுவார் வகைப் படங்களா? இதற்கு பதில் தேட நாம் சிறிது நுவார் படங்களின் பொது அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

நுவார் திரைப்படங்களின் கதைகள் நகரங்களிலோ, பெருநகரங்களிலோ நடப்பவையாக இருக்கும், கதைமாந்தர்களில் ஆண் பாத்திரங்கள் மனசஞ்சலத்தில் இருப்பவர்களாகவும், பெண் பாத்திரங்கள் வஞ்சிக்கும் இயல்புள்ளவர்களாகவும் இருப்பர். மற்ற கதைகளைப் போல முடிவை நோக்கி நகர்கின்ற அல்லது ஒரு தீர்க்கமான முடிவைத் தருகிற கதைகளாக இவை இருக்காது. எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மை கதையோட்டம் முழுவதும் இழையோடிக் கிடக்கும். கதாப்பாத்திரங்கள் கனவுகளுக்குள் தொலைந்து போனவர்களாகவும், தமது எதிர்காலம் குறித்து நிச்சயமற்றவர்களாகவும் இருப்பார்கள். கனவையும் நினைவையும் பிரிக்கும் கோடு மிக மெலிதானது. அவர்கள் பல நேரங்களில் பின்னணியில் தங்கள் கதைகளை தமது குரல் மூலமாகவே பார்வையாளர்களுக்கு சொல்வர். தாங்கள் பின்னிய கனவின் வலைக்குள் தங்களே சிக்கிக் கொள்பவர்களாகவும் இருப்பர். மனித குணங்களின் காணச் சகியாத இருண்ட பக்கங்கள் இங்கே மலிந்து கிடைக்கும். நகரங்களின், நாம் காண விரும்பாத இன்னொரு முகம் இங்கு காணக் கிடைக்கும். சுருங்கச் சொன்னால் நுவார் படங்களின் உளவியலின் மையம் வாழ்க்கையின் சகல நம்பிக்கைகளையும் மறுக்கும் சூனியவாதம் (Nihilism) தான். மிக சாமானியமான மனிதர்கள் ஒரு இக்கட்டினை மிக தற்செயலாக எதிர்கொள்வதன் பயனாக குற்ற செயலை புரிவதும், அதனைத் தொடரும் பின்விளைவுகளையும் எடுத்துக் காட்டும் கதைகள் அதிகமாக இவ்வகைத் திரைபடங்களில் காண முடிவதாக பிரபல அமெரிக்க இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசி தந்து அமெரிக்கப் படங்கள் குறித்த தனது அனுபவ பகிர்வில் கூறுகிறார்.

திரைப்படங்களைப் பொருத்தவரை பார்வை அனுபவம் என்பதே ஒரு வித மனகிளர்ச்சிக்கானது தான். பார்வையாளர்கள் தமது நிச வாழ்க்கையின் வலிகளை மறக்க புனைவுக்குள் தொலைய விரும்புவதாகவே நாம் பார்த்தோம். பின் எப்படி வாழ்க்கை குறித்தான தனது நம்பிக்கைகளை முற்றிலும் சிதைத்து அவநம்பிக்கையை விதைக்கும் கதைகளை ஒரு பார்வையாளன் பார்ப்பான்? அதற்கான உளவியற் தேவைகளும் காரணங்களும் என்ன? அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த சமூக கலாச்சார மாற்றங்கள் என்னென்ன?

முதல் பெரும் பொருளாதார தேக்க நிலைக்குப் (The First Great Depression) பிறகு உலகை உலுக்கிய இரண்டாம் உலகப் போர் மனித மனங்களில் வாழ்க்கை குறித்த நம்பிக்கைகளையும், அபிப்ராயங்களையும் அடியோடு புரட்டிப் போட்டு விட்டது. அமேரிக்கா 1942 முதல் போரில் பங்கெடுக்க ஆரம்பித்தது. ஆண்கள் போர்முனைக்கு சென்று சண்டையிட்டுக் கொண்டிருக்கிற வேளையில் குடும்பம் எனும் அமைப்பில் ஒரு ஆணின் இடத்தையும் அவன் நிறைவேற்றிக் கொண்டிருந்த பொறுப்புகளையும் பெண் எடுத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இது அமேரிக்கர்களின் வாழ்வியலை பெருமளவில் மாற்றியது. மேலும் போரின் விளைவாக மனிதர்கள் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளானார்கள். நம்பிக்கையின்மையும், வெறுமையுமே மனங்களை நிறைத்தன. வாழ்க்கையின் மீதான பிடிப்பு தளர்ந்து போய்க் கொண்டிருந்த காலமது. ஒரு பார்வையாளனை வியாபித்திருந்த இந்த மன சோர்வு மிகுந்த, மனநோய்மைக் கூறுகள் நிரம்பிய முற்றிலுமான எதிர்மறை மனோநிலை அதே அலைவரிசையில் இருந்த நுவார் திரைப்படங்களின் குணாம்சங்கள் ஈர்க்கத் துவங்கின.

உட்பொருளைத் தாண்டி இன்றைக்கு நுவார் திரைப்படங்கள் அழகியல் ரீதியிலான கருப்பு வெள்ளை ஒளிப்ப்பதிவினால் நம்மை ஈர்க்கின்றன. குறைந்த வெளிச்சம் கொண்ட சட்டகங்கள் நிறைக்கும் திரையில் ஒளிக்கும் நிழலுக்கும் ஒரு தொடர் விளையாட்டு நடந்து கொண்டே இருக்கும். கதை மாந்தர்களின் குணநலன்களை பிரதிபலிப்பது போல இருள் வியாபித்த சட்டகங்கள் மன இருண்மையின் வெளிப்பாடாகவே இருந்தன. ஒளிப்பதிவில் நுவார் திரைபிரதிகள் பெருமளவு இருபதுகளில் கோலொச்சிய ஜெர்மானிய எக்ஸ்பிரஷனிச (Expressionism) வகை திரைப்படங்களின் ஒளியமைப்புகளை அடியொற்றி அமைக்கப்பட்டன.

நாற்பதுகளில் போரின் தாக்கம் மக்களை மட்டுமல்ல ஹாலிவுட்டின் திரைத்துறையினரையும் பெருமளவில் மாற்றி இருந்தது. அமேரிக்க தேசமெங்கும் போருக்குகான முன்னேடுப்புகளும் ஆயத்தங்களும் மேலோங்கி இருந்த காலகட்டம். தேசப் பற்று அதன் உச்சத்தை தொட்டிருந்த தருணங்ளில் அது ஒன்றே போருக்கு அமெரிக்கர்களை பேதங்கள் துறந்து ஒன்றிணைக்கும் அம்சமாக இருந்தது. தேசபக்தியை நேரடியாகவோ மறைமுகமாகவோ முன்வைக்கும் எண்ணற்ற திரைப்படங்கள் போர் காலகட்டங்களில் வெளிவந்தன. போரின் போது திரைத் துறையினரும் தங்களால் ஆன பங்களிப்பை செய்ததை இவ்விடத்தில் நாம் நினைவுகூறவது அவசியம். பல ஹாலிவுட் இயக்குனர்கள் கருத்துப் பிரசார திரைப்படங்களையும், போர் குறித்த ஆவணப்படங்களையும் இயக்கினர். ஒளிப்பதிவாளர்களும் தங்களின் பங்களிப்பை சிறப்பான வகையில் செய்தனர்.

தேசப்பற்றை முன்வைத்திடும் பல திரைப்படங்கள் இக்காலகட்டத்தில் வெளியான போதிலும் 1942 இல் மைக்கில் கர்டிஸ் இயக்கத்தில் வெளியான காசப்ளான்கா (Casablanca) இன்றளவும் நினைவுகூறத்தக்க செவ்வியல் திரைப்படமாக விளாங்குகிறது. மேலோட்டமான பார்வைக்கு இது ஒரு அழியா காதல் காவியம் போல தோற்றம் தந்தாலும், அதன் ஊடிழையாக அமெரிக்க தேசப்பற்றே இருந்தது. போர்கால ஹாலிவுட் திரைப்படங்களை இரண்டு விதமாக நாம் பார்க்கலாம். ஒன்று, போர்க்களத்தில் அமெரிக்க ராணுவத்தின் சாகசங்கள் மற்றும் மேன்மைகள். இராணுவ வீரர்களின் தனிமனித வீரச் செயல்களும் தேசத்தின் பேரில் அவர்களது ஒப்பில்லா தியாகங்களையும் பேசிடும் படங்கள் மற்றொரு வகை.

வேறெப்போதையும் விட போர்காலங்களில் ஒரு ராணுவ வீரன் ஒரு சமூகத்தில் மிக முக்கியமான நபராகிறான். அவன் ஒட்டு மொத்த மக்களின் வாழ்வின் மீதான நம்பிக்கையின் குவிமையம் ஆகிறான். தேசப்பற்றையும் ஒரு போர்வீரனின் மீதான அன்பையும், நம்பிக்கையையும் நாம் பிரித்துப் பார்ப்பது அரிது. இக்கட்டான தருணங்களில் தேசங்கள் சிக்கித் தவிக்கிற போது ஒரு வீரனை முன்வைத்தே தேச உணர்வை குடிமக்களிடையே வளர்த்தெடுக்க முடியும். இதனை மிக நன்றாக புரிந்து கொண்டு இவ்வகையான படங்கள் நாற்பதுகளில் அதிகம் வெளிவந்தன. அதன் வழியாக மக்களுக்கு தங்களின் நிம்மதி கேள்விக்குள்ளாகும் போது போர் தவிர்க்கவியலாதது எனும் நிலைப்பாட்டை உருவாக்க முடியும். மேலும் போரின் விழைவாக சாமானியர்களின் மனதை அரிக்கும் பாதுக்காப்பின்மையை, ஒரு அமெரிக்க ராணுவ வீரனின் நாயக பிம்பத்தினை கட்டமைப்பதன் மூலம் போக்கி விடுதல் எளிதில் சாத்தியமானது.

ஒரு பக்கம் உலகப் போரின் நேரடி விழைவாக போர் சார்ந்த திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற அதே வேளையில் முற்றிலும் யதார்த்தத்திற்கு முரணான கற்பனாவாத திரைப்படங்களும், அமானுஷத் திரைபடங்களும் தொடர்ந்து விளியாகி மக்களின் ஆதரவைப் பெற்றன. போரின் போது வெளியான திரைப்படங்கள் இப்படியானவை என்றால் போருக்குப் பிறகான திரைப்படங்களின் களம் வேறு தளங்களுக்கு நகர ஆரம்பித்தது. அமெரிக்கா எனும் தேசம் குறித்த பிம்பம் போருக்கு முன்-பின் உலக அளவில் பெரிய மாற்றத்திற்கு உள்ளாகி இருந்தது. அமெரிக்கா மாபெரும் வல்லரசாக உலக நாடுகளால் பார்க்கப்பட்டது இந்தக் காலத்தில் இருந்து தான். ஆனால் வல்லரசு நாற்காலிக்கு ரஷ்யாவுடன் போட்டியிட்டே ஆக வேண்டிய நிர்பந்தம் அமெரிக்காவிற்கு.

ஒரு நாடு, சக நாட்டோடு/ மனிதன் சக மனிதனோடு அடிப்படைக் கருத்தியலில் முரண்பட்டால் அவர்கள் ஒன்றுபடுவதற்கான சாத்தியப்பாடே இருக்க முடியாது. அமெரிக்க கருத்தியலின் முதலாளித்துவம், ரஷ்யாவின் பொதுவுடமைக் சித்தாந்தத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. தெளிவாகச் சொன்னால் நேர் எதிரானது. இதனால் பெரும் எதிரிகளாக இந்த இரு பெரும் சக்திகள் இருந்ததில் ஆச்சரியமில்லை. அமெரிக்காவின் ரஷ்ய எதிர்ப்பு என்பது அடிப்படையில் கம்யூனிச எதிர்ப்பு தான். அதனால் அமெரிக்க எதிர்வினைகளை நாம் ஆராய்ந்தால் அது எதிர்த்த நாடுகள் பலவாயினும் அந்த நாடுகளில் விரவியிருந்த கம்யூனிசத்தையே பெரும் சிரத்தையோடு கடுமையாக எதிர்த்தது நமக்கு விளங்கும்.

ஐம்பதுகளின் ஹாலிவுட் திரை ஆக்கங்களில் நாம் கருத்தூன்றி கவனிக்க வேண்டிய முக்கியமான ஒரு கோணம் ரஷ்யாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ‘பனிப் போர்’ காலகட்ட(Cold War Era) பின்புலத்தில் திரைப்படங்கள் என்பதே. பனிப்போர் உருவாக்கியிருந்த சுழல் எப்படி அமெரிக்க திரைப்படங்களின் கதை மையங்களை நிர்மாணித்தன என்பதையும், அதன் வழியாக பார்வையாளர்களின் உளவியற்பூர்வமான கருத்து வலுவூட்டல் எவ்வாறெல்லாம் நிகழ்த்தப்பட்டது என்பதனை அடுத்த பகுதியில் பார்க்கலாம். இருப்பினும் இதனை மட்டும் ஒற்றை தளமாக எடுத்துக் கொள்ளாமல், ஐம்பதுகளில் நிகழ்ந்த அந்த தேசத்தின் கலாச்சார மாற்றங்கள், மற்றும் அதனோடு மிகநெருங்கிய தொடர்புடைய பண்பாட்டு மாற்றங்கள் என பார்வையை நாம் விரித்துக் கொள்ளலாம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamoli

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </