இதழ்: 33    வைகாசி (June), 2015
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 16 - டிராட்ஸ்கி மருது - ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்
--------------------------------
காணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது 2015 - தினேஷ்
--------------------------------
பேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - II - தினேஷ்
--------------------------------
ஹனா மெக்மல்பஃப் நேர்காணல் - தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------
டி.வி. விளம்பரப் படங்கள் - அம்ஷன்குமார்
--------------------------------
பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்
--------------------------------
வெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்
--------------------------------
 
   

   

 

 

இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை

12. ‘புதிய காற்று’

- தம்பிஐயா தேவதாஸ்

இலங்கையில் தயாரான ஆரம்ப காலத் திரைப்படங்கள் பல. ஏதோ காரணங்களுக்காகத் தோல்வியைத் தழுவி வந்தன. தொழில்நுட்ப ரீதியிலும், கலைத்துவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவை வெற்றிபெறவில்லை. ‘நான்கு லெட்சம்’, ‘கலியுக காலம்’ போன்ற மொழி மாற்றுப் படங்களும் தமிழ் ரசிகர்களை வெற்றி கொள்ளவில்லை. இத் தோல்விகளுக்கெல்லாம் காரணம் தென்னிந்தியத் தமிழ்ப்படங்களின் ஆக்கிரமிப்பே என்று கூறப்பட்டது.

சில வருடங்கள் மௌனமாகக் கழிந்தன. 1975ஆம் ஆண்டும் பிறந்தவிட்டது. அப்பொழுது மலையக இளைஞன் ஒருவனுக்கு 35 வயதாகியது. அவர் மலையகத் தொழிற்சங்கமொன்றின் செயலாளராகவும் விளங்கினார். மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார்.

இந்த இளைஞருக்கு இலங்கையில் தமிழ்ப் படமொன்றைத் தயாரிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. கண்ணீராலும் இரத்தத்தாலும் எழுதப்பட்ட மலையக மக்களின் வாழ்க்கையை மற்றவர்களும் அறிந்து கொள்ளவேண்டும். அத் திரைப்படத்தின் மூலம் மலையக மக்களிடையே ஒரு மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார்.

எண்ணம் செயலாக மாறியது. தொழிலதிபரான அவ்விளைஞன் ‘கணேஷ் பிலிம்ஸ்’ என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார். தனது முதலாவது தமிழ்ப் படத்துக்கு ‘புதிய காற்று’ என்று பெயர் சூட்டினார். பல்வேறு சாதனங்களின் மூலமும் விளம்பரம் செய்தார். அந்த இளைஞரின் பெயர்தான் வீ.பி. கணேசன்.

புதிய காற்றுக்கான மூலக்கதையை வீ.பி. கணேசனே எழுதினார். அதற்கான திரைக்கதை வசனங்களை பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பைக் கொண்டு எழுதுவித்தார். படத்தை இயக்க நல்ல நெறியாளர் வேண்டுமல்லவா! அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். பல சிங்களப் படங்களை நெறியாண்ட அனுபவசாலிதான் எஸ். ராமநாதன். மலையகத்தைச் சேர்ந்த இந்தக் கலைஞரே இப்படத்தின் இயக்குநராகத் தெரிவு செய்யப்பட்டார். ஒளிப்பதிவை லினிடி கொஸ்த்தா பொறுப்பேற்றார்.

பல சிங்களத் திரைப்படங்களில் நடித்து அனுபவம் பெற்றவர் பரினாலை என்ற நடிகை. இவரும் வீ.பி. கணேசனும் பிரதான பாத்திரங்களில் நடித்தார்கள். இரண்டாவது கதாநாயகனாக டீன்குமார் என்ற இளம் நடிகரும், அவருக்கு ஜோடியாக வீணாகுமாரி என்ற புதிய நடிகையும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இவர்களுடன் ஏற்கனவே சினிமா அனுபவமுள்ள எஸ்.என். தனரெத்தினம், சிலோன் சின்னையா, எஸ்.ராம்தாஸ், கே.ஏ. ஜவாஹர், ஜோபுநஸீர், செல்வம் பெர்னாண்டோ ஆகியோரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். விமல் சொக்கநாதன், ஏ.ஈ. மனோகரன், ஏ.ரகுநாதன், சிவலிங்கம், சந்திரகலா ஆகியோரும் கௌரவப் பாத்திரங்களுக்காகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.

‘புதியகாற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 1975-04-20 இல் மலையகத்தில் ஆரம்பமாகியது. தொடர்ந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, கொழும்பு என்று பல பகுதிகளிலும் படப்பிடிப்பு இடம்பெற்றது.

இசை அமைக்கும் பொறுப்பு ரீ. எப். லதீப்புக்கு வழங்கப்பட்டது. அதுவரை வானொலியில் பாடி வந்த வீ. முத்தழகுவும், சி. கலாவதியும் முக்கியப் பாடகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். இவர்களுடன் சுஜாதா அத்தநாயக்க, சுண்டிக்குளி பாலச்சந்திரன் புத்தூர் கனகாம்பாள் சதாசிவம், ஏ. ஈ மனோகரன் ஆகியோரும் பாடினார்கள். சாது, கௌரி ஆகியோர் பாடல்களை இயற்றினர். கவிஞர் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் ஆகியோர் பாடல்களை இயற்றுவதில் துணை செய்திருக்கிறார்கள். இசையமைப்பில் சங்கர் கணேஷ் உதவியிருக்கிறார்கள். ‘மே தினம்’ என்ற பாடலைக் கண்ணதாசனும் ‘ஓ என்னாசை’ என்ற பாடலைப் பூவை செங்குட்டுவனும் எழுதினார்கள். கே. பாலசிங்கமும் ஹரிஹரனும் ஒலிப்பதிவு செய்தார்கள். 5 மாதங்களுக்குள் படம் தயாரிக்கப்பட்டு விட்டது.

‘புதியகாற்று’ பலத்த விளம்பரத்தின் பின் 1975-10-03 இல் இலங்கை எங்கும் 7 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இந்தப் படம் திரையிடப்பட்ட பொழுது நல்ல வரவேற்பு கிடைத்தது. இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனமும், அந்நேரத்தில் வேறு தென்னிந்தியத் திரைப்படங்களைத் திரையிடாமல் நிறுத்தி வைத்து உதவி செய்தது.

ஒரு தோட்டத்துரைக்கு இரண்டு புதல்வர்கள், இளைய மகன் கண்ணன் இலண்டனில் படித்துவிட்டு இலங்கை திரும்புகிறான். அவன் மலையகத்தில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களை நேசிக்கிறான். தொழிலாளி ஒருவனின் மகள் ராதாவைக் காதலிக்கிறான். இதைக் கண்ட அயலவர்கள் ராதா கண்ணனால் ஏமாற்றப்படப்போகிறாள் என்று எள்ளி நகையாடினார்கள். ஆனால், கண்ணன், ராதாவின் பெற்றோரின் அனுமதி பெற்று அவளை மணமுடிக்க விரும்புகிறான். இவர்களின் தொடர்பை மூத்தவன் குமார் வெறுக்கிறான். தன் காதலி கீதாவும் தொழிலாளியின் மகள் என்பதை அறிந்து அவளையும் வெறுத்து ஒதுக்குகிறான். தன் காதலி கீதாவையும் தம்பியின் காதலி ராதாவையும் கடத்திச்சென்று கொலை செய்ய முயற்சிக்கிறான். கண்ணன் தன் அண்ணனுடன் சண்டை செய்து அவர்களை மீட்கிறான். கடைசியில் கண்ணனும் ராதாவும் திருமணத்தில் இணைகிறார்கள்.

இதுதான் ‘புதியகாற்று’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும் ‘புதியகாற்று’ திரைப்படம் மலையக மக்களின் சில பிரச்சினைகளை எடுத்துக் காட்டியது என்பது உண்மைதான். ஆனாலும், படம் தென்னிந்தியப் படங்களின் பாணியைப் பின்பற்றியது என்பதும் உண்மையே.

மலையக மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளான குடும்பக் கட்டுப்பாடின்மை, குடிப்பழக்கம், ஊதியக் குறைவு, குடியிருப்பு வசதியின்மை போன்ற சில பிரச்சினைகள் படத்தில் காட்டப்பட்டன. ஆனாலும், மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அதிகமாக எடுத்துக் காட்டப்படவில்லை என்று பலர் கூறினர்.

வழக்கமான படங்களைவிட, இத் திரைப்படம் ரசிகர்கள் பலரைக் கவர்ந்தது. மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 34 நாட்களும், தென்கொழும்பில் (பிளாசா) 21 நாட்களும் ஓடியது. யாழ்ப்பாணத்தில் (ராணி) 38 நாட்களும், மட்டக்களப்பில் (ராஜேஸ்வரா) 29 நாட்களும், திருகோணமலையில் 14 நாட்களும் தொடர்ந்து ஓடியது. மலையகத்திலும் (பதுளை-18 நாட்கள் ஹட்டன் -18 நாட்கள், நுவரெலியா 15 நாட்கள், மாத்தளை – 15 நாட்கள்) சுமாராக ஓடியது.

இலங்கையில் அதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களை வரிசைப்படுத்திப் பார்த்த பொழுது ‘புதியகாற்று’ புதிய நம்பிக்கையூட்டியது. இப்படத்தைப் பற்றிப் பலரும் விமர்சித்தனர். வீரகேசரி (05-10-1975) இதழில் மேகமூர்த்தி விமர்சனம் எழுதினார்.

‘.....தோட்டத் தொழிலாளர்களது வாழ்க்கையைக் கருவாகக்கொண்டு உருவான இப்படம் மலையகச் சூழலிலேயே எடுக்கப்பட்டமை யதார்த்தமாக உள்ளது. கணேஷ், டீன்குமார், பரீனாலை, வீணா ஆகியோர் தமது பாத்திரங்களை ஏற்ற வகையில் செய்திருக்கிறார்கள். சிறந்த நடிப்பை தனரெத்தினம், சின்னையா ஆகியோரிடம் காண முடிந்தது. வசனங்கள் சில இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ‘புதியகாற்று’ முன்னைய படங்களைவிடச் சிறந்தது என்று கூறலாம். இப்படம் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் முற்றிலும் உண்மையே’ என்று எழுதியிருந்தார்.

அப்பொழுது தினகரனில் ‘சித்திர தர்சனி’ என்ற பகுதியை விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் எழுதி வந்தார். அப் பகுதியிலும் ‘புதியகாற்று’ விமர்சனம் இடம்பெற்றது.

‘......புதியகாற்று நமது நாட்டுத் திரைப்படத் தயாரிப்பில் ஒரு படி முன்னேறியுள்ளது. தொழில்நுட்ப அம்சங்களில் நமது நாட்டுத் தமிழ்ப் படங்களும், தமிழ்நாட்டுப் படங்களின் தரத்துக்கு உயர்வது மகிழ்ச்சியைத் தருகிறது. லெனிடி கொஸ்தாவின் ஒளிப்பதிவு பாராட்டத்தக்கது. மே தின ஊர்வலக் காட்சி, மோட்டார் வண்டி வளைந்த பாதைகளில் ஓடும் காட்சி போன்றவை அவருடைய சினிமா நோக்குக்கு உதவுகின்றன. லத்தீபின் இசை அமைப்பில் உருவாகிய மெட்டுகளை அடிக்கடி முணுமுணுக்கத் தோன்றுகிறது. கதையின் அடிநாதம் மலைநாட்டில் ஒரு மாற்றம், புதிய காற்று வீசவேண்டும் என்பதே. வர்க்க பேதமற்ற சமுதாயம் மலைநாட்டில் உருவாகக் கூட்டுப் பண்ணை உருவாகி வருகிறது என்றும் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படும் என்றும் கதாநாயகன் கூறுவதுடன் படம் முடிவடைகிறது…..’ என்று எழுதியிருந்தார்.

இடைவழியில் மௌனமாகிப் போய்விட்ட தமிழ் படத்துறையை கலகலக்க வைத்த பெருமை வீ.பி. கணேசனையே சாரும். அதிக விளம்பரத்தின் மூலம் அதிக பலனைப் பெறலாம் என்பதையும் நிரூபித்தவர் வி.பி. கணேசனே.

இலங்கையில் தமிழ்ப்படம் தயாரித்தல் என்பது பிரச்சினைக்குரிய விஷயம் என்று கருதிய காலகட்டத்தில் ‘புதிய காற்று’ திரைப்படம் வெளிவந்திருக்கிறது. இப்படியான காலகட்டத்தில் இவ்வாறான பிரமாண்டமான தமிழ்ப்படத்தை உருவாக்கிய வீ.பி. கணேசன் பாராட்டப் படவேண்டியவரே.
----------------------------------------------------------------------------------------------------மின்னஞ்சல் முகவரி: thambytheva@gmail.com

இந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamoli

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </