கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - விஜிக்குமார்

ஆதவன்  

"குப்பை மனசெல்லாம்" எனும் குறும்படம் மூலம் நமது கவனத்தை ஈர்த்துள்ளார், குறும்பட இயக்குனர் திரு. விஜிக்குமார் அவர்கள். சமூதாயாத்தில் தந்தை மற்றும் மகனுக்கும் இடையிலான உறவு, மேலும் இந்த சமூகத்தில் வயோதிகர்கள் நடத்தப் படும் முறையை தன்னுடைய குறும்படம் மூலம் பதிவு செய்துள்ளார். தொழில்நுட்ப ரீதியில் நல்ல கவனம் செலுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தக் குறும்படம் குறும்பட உலகிற்கு நல்லதொரு வரவு. பத்திரிக்கை துறையில் பணியாற்றி விட்டு திரைப்படத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். எனவே சமூதயாத்தை சாட்டையால் விளாசும் பல படைப்புகளை நமக்களிப்பார் என்று நம்புவோமாக...

குறும்படத் துறையில் இவர் போன்ற இளைஞர்கள் வரலாறுகளை பதிவு செய்வதில் ஆர்வம் காட்டினால் தமிழில் நல்ல வரலாற்றுப் பதிவுகள் வெளிவரும் என்பது திண்ணம்.

இனி இயக்குனர் திரு. விஜிக்குமார் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

1. பொதுவாக கிராமங்களில் மொட்டாக இருக்கும் பலரது கனவு பூக்கும் இடம் சென்னையாகத்தான் இருக்கும். உங்கள் சென்னை வருகை பற்றியும் உங்களின் பூர்வீகம் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்?

மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நிச்சயம் கனவு இருந்தே தீர வேண்டும். நிஜங்களை விட கனவு அழகானது. அற்புதமானது. கனவு காண்பது எளிதானது. சாதனையாளர்களின் நிஜமான வாழ்க்கை ஒரு காலத்தில், அவர்களின் கனவு வாயிலாகத்தான் சாத்தியப்பட்டிருக்கும். அழகான கனவுகள் கிராமத்திலிருந்துதான் தோன்றுகின்றன. அங்குதான் கனவுகளும், கற்பனைகளும் முகமூடியின்றி உலவுகின்றன. பொய்முகங்களும், செயற்கைத் தனமும் நிரம்பி வழியும் நகர வாழ்க்கை கனவுகளை தொலைத்து நிற்கிறது. கிராமத்தில் பிறந்த எல்லோருக்கும் சென்னை ஒரு கனவு நகரம் என்பது தவறான கருத்து. சென்னையை காட்டி குறுக்கி விடாமல், அதை விட கனவுகளை விஸ்தாரப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். அப்படித்தான் எனது கனவும், எனது நிஜமும்.

எனது பூர்வீகம் என்பது சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்து பதினான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மல்லியகரை எனும் அழகான ஊர். அழகான, பசுமையான மலைப் பகுதியை கொண்டுள்ள அந்த ஊரில் பள்ளிப் படிப்பை படித்தேன். அப்போது நான் இலக்கிய தாகம் கொண்டு கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். தொடர்ந்து கல்லூரி செல்லாமல் அஞ்சல் வழியில் பட்டப் படிப்பை முடித்தேன். எனது கவிதைகளையும், கட்டுரைகளையும் வைத்து தினமலர் நாளிதழில் பணி கிடைத்தது. தொடர்ந்து தினமலரில் ஐந்து வருடங்கள் சேலம், ஈரோடு மாவட்டங்களில் நிரூபராக பணியாற்றினேன்.

நான் பணியாற்றிய களம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அங்கிருந்து சினிமாவின் மாற்றுக் களமான குறும்படம் மற்றும் ஆவணப்படங்களின் மீது எனது கவனத்தை செலுத்தினேன். அப்போது நானும் எனது நண்பனும் சேர்ந்து ஈரோடு, கரூர் மாவட்டங்களின் நொய்யல் ஆறு மாசுபட்டதையும், சாயப்பட்டறை அதிபர்களின் மோசடியையும், விவசாயிகளின் கண்ணீர் நிலைமையையும் ஆவணமாக்கினோம். இதனையடுத்து சினிமாவை கற்றுக் கொள்ளும் நோக்கில் இரண்டு வருடங்களுக்கு முன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய குறும்படப் பயிற்சி பட்டறையில் கலந்துக் கொண்டேன். தொடர்ந்து எனக்கு ஒரு திரைப்பட இயக்குனரின் தொடர்பும் கிடைத்து, அவரிடம் பணியாற்ற சென்னை வர வேண்டிய நிலைமை இருந்தது. இதையடுத்து பத்திரிகையாளராக இருந்த நான் முழு நேர சினிமாக்காரனாக என்னை மாற்றிக் கொண்டேன்.

2. திரைப்படத் துறையில் நுழைய வேண்டும் என்கிறக் கனவால் குறும்படத் துறையை நுழைவு சீட்டாக நினைத்து இத்துறைக்கு வந்துள்ளீர்களா?

என்னைப் பொறுத்தவரை குறும்படம் என்பது சினிமாவுக்கான மாற்றுக் களம். இது ஒரு உலகம். சினிமா வேறொரு உலகம். சினிமா ஒரு மாய உலகம். அங்கு ஒரு பார்வையாளனை எப்படி ஈர்க்க முடியும் என்ற கருத்தோடுதான் சினிமா தயாரிக்கப்படுகிறது. அது ஒரு இளம்பெண்ணின் விரசமான பார்வை போன்றது. வெறும் பார்வையை வீசியே பணம் சம்பாதிக்கும் சினிமா ஒரு மாய வலை. இங்கிருந்து கொண்டு நல்ல சினிமாவை இயக்குவதும், தயாரிப்பது இரண்டாம்தனமான வாதம். அதற்காக யாரும் இங்கு தயாராக இல்லை. நல்ல சினிமாவை தேடித் போய் அவமானங்களை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியும். அதிலும் வணிகத்துக்கும், கதைக்கும் ஈடுகட்டி ஒன்றிரண்டு படங்கள் இயக்கம் நமது இயக்குனர்களை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

இங்குள்ள குறும்பட இயக்குனர்கள் பெரும்பாலும், தனது குறும்படத்தை சினிமாவில் நுழைவதற்கான நுழைவு சீட்டாக தான் பயன்படுத்துகிறார்கள். அது ஒரு நுழைவு சீட்டல்ல. அது ஒரு மாற்றுக் களம். குறும்படங்களில் தனது கருத்துகளை எந்த வித சமரசமும் இன்றி சொல்லிவிட முடியும். தற்போது இந்தக் களம் முழுக்க முழுக்க இளைஞர்களின் கையில் உள்ளது. தமிழில் தரமான, கருத்துள்ள படங்களை இயக்கவும், தயாரிக்கவும் இலக்கியத் துறையில் உள்ள இளைஞர்கள், ஊடகத் துறை சம்பந்தமான படித்த இளைஞர்கள் முன் வர வேண்டும். பத்திரிக்கையாளனாக இருந்த நான் திரைப்படத் துறையில் இருந்த நான் திரைப்படத் துரியாயில் கால் பதித்தது பெரிய விசயமாகத் தெரியவில்லை. நான் இயக்கிய "குப்பை மனசெல்லாம்" குறும்படம் திரைப்படத் துறைக்குள் வந்துதான் இயக்கினேன். நான் இதை ஒரு நுழைவு சீட்டாக பயன்படுத்த வில்லை.

3. குறும்படத் துறையை மாற்று ஊடகமாக நினைக்கிறீர்களா? அல்லது இது திரைப்படத் துறைக்கு போகும் பலருக்கு ஏணியாக மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறீர்களா?

கண்டிப்பாக இது ஒரு மாற்று ஊடகம்தான். காலப் போக்கில் இதுவும் தியேட்டர், மல்டிப்லேக்சிகளில் ஒழி பரப்பு செய்யப்பட வேண்டிய நிலைமை வரும். விடுமுறை நாட்களில் சேனல்களில் கொண்டாடப்படும் சினிமா போல குறும்படமும் ஒரு நாளில் கொண்டடாடப்படும். இந்த மாற்று ஊடகம் வெகுஜன ஊடகமாக மாற சாத்தியம் இருக்கிறது என்றே கருதுகிறேன். திரைப்படத்துறைக்கு செல்ல குறும்படத் துறையை பலரும் ஏணியாகத்தான் கருதுகின்றனர். சிலர் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்வதற்காக கூட இந்தப் படங்களை எடுக்கின்றனர். குறும்படத்தில் தன்னை வளர்த்துக் கொண்டு வணிக ரீதியான திரைப்படங்கள் எடுக்க சென்றுவிட்டால் குறும்படத்தின் தர வளர்ச்சி நிச்சயம் பாதிக்கப்படும். இது குறும்பட இயக்குனர்களின் என்னத்தை பொருத்தது.

4. குறும்படம் எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் உங்களுக்கு ஏற்பட என்ன காரணம்? அது சார்ந்த படிப்பு ஏதும் படித்துள்ளீர்களா?

உலக சினிமாக்களையும், தமிழில் நல்ல படங்களையும் பார்த்த தாகம்தான் என்னை இது மாதிரி ஒரு படம் எடுக்க வைத்தது. இதற்காக தனியாக படிக்க வில்லை. ஆனால் சினிமா தொடர்புள்ள புத்தகங்களை தேடித் தேடி படித்தேன். ஒரு படத்தை இயக்க படங்களை மட்டும் பார்த்துக் கொடிருந்ததால் மட்டும் போதாது. நிறைய புத்தக வாசிப்பும் ஒவ்வொருவருக்கும் கட்டாயம் தேவை.

5. உங்கள் முதல் குறும்படம் பற்றி சில வார்த்தைகள்?

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நகர மயமாக்கல் வாழ்க்கையில் உறவுகளை தொலைந்தும், தொலைத்தும் நிற்கிறோம். மனிதாபிமானம் இங்கு கொஞ்சம் இருக்கிறதா, இல்லை மங்கி வருகிறதா என்று ஒவ்வொரு நகர மனிதனையும் பார்க்கும்போதெல்லாம் நான் என்னைக் கேட்டுக் கொள்கிறேன். எதிர் வீட்டு முகத்தை கூட ஏறிட்டு கூட பார்க்காத பிளாட்வாசிகள் தங்கள் சேமித்த பணத்தை தங்களுக்குள்ளே போட்டு புதைத்துக் கொண்டு வெறுமை உணர்வைத்தான் சம்பாதிக்கின்றனர்.

எனது குப்பை மனசெல்லாம் குறும்படத்தின் கரு, மனிதனின் வாழும்போது மனிதாபிமானத்தோடு நடத்தப் படவில்லை. இறந்த பிறகும் அவனது சடலமும் மனிதம் தொலைத்து குப்பையோடு நாறுகிறது. இந்த படம் எனது முதல் படைப்பென்றாலும் சமூக கருத்தை முன் வைத்ததால் பார்த்தவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். தற்போது வாரத்திற்கு பத்திற்கும் மேற்பட்ட குறும்படங்கள் கூட தயாரிக்கப்படுகின்றன. குறும்படங்கள் எல்லாமும் மக்களின் பிரச்சனைகள் முன் வைத்து எடுக்கப்பட வேண்டும்.

6. ."குப்பை மனசெல்லாம்" தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவை சித்தரித்து படமாக்கியுள்ளீர்கள்.. பொதுவாக குறும்படத் துறையில் அணைவரும் செண்டிமெண்ட் படங்களாக மட்டுமே எடுக்கிறீர்கள்? ஏன் மற்ற களங்களை (நகைச்சுவை, த்ரில்லர்) என யாரும் முயல்வதில்லை?

குப்பை மனசெல்லாம் குறும்படம் அப்பாவுக்கும், மகனுக்கும் உள்ள உறவை மட்டும் சித்தரிப்பதாக புரிந்துக் கொண்டது தவறானது. அதையும் தாண்டி இதில் ஒரு வயோதிகனுக்கும், சமூதாயத்திற்குமான உறவு, அவன் இறந்த பிறகு அவனது சைவத்திற்கும், சமூதாயத்திற்குமான உறவு போன்றவையும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை உறவுகள் தாண்டிய ஒரு சமூதாய அடையாளமாக காண வேண்டும். முன்னே சொன்ன மாதிரி மக்கள் பிரச்சனைகளையும், இலக்கியத்தையும் கொண்டு குறும்படம் தயாரிக்கப்பட வேண்டும். மற்ற படங்களில் எல்லா அம்சங்களும் நிறைந்து இருந்தாலும், என்னைப் பொருத்த வரை அது இரண்டாம் தரமானதுதான்.

7. பொதுவாக தற்கால சூழலில் குறும்படங்களுக்கான வரவேற்பு எப்படி உள்ளது? உங்கள குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பு எப்படி?

தற்போது குறும்படத்திற்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதை எடுத்த பிறகு எனது குடும்பத்திலும், எனது நண்பர்கள் வட்டாரத்திலும் எனக்கு மதிப்பு அதிகரித்திருக்கிறது. இதை விட அடுத்த படைப்பு சிறந்ததாக அமைய முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

8. தமிழர்களின் பாரம்பரியம், வரலாறு போன்றவற்றை குறும்படங்களாக எடுக்கும் எண்ணம் உள்ளதா? அல்லது உங்களின் அடுத்த கட்ட முயற்சிகளின் பற்றி கூறுங்கள்?

கண்டிப்பாக தமிழர்களின் பாரம்பரியம், வரலாறுகளை ஆவணப்படுத்துவதும், அதை மக்களிடம் கொண்டு செல்வதும் ஒவ்வொரு இயக்குனரும் முன் வர வேண்டும். நம் நமக்கு தெரிந்த நம்ம ஊரின் வரலாற்றையாவது படம் பிடிக்க வேண்டும். நமது மூதாதையர்கள் விட்டு சென்ற சொத்துகள் ஏராளம். பாரம்பரியமும், கலாச்சாரமும் நவீன உலகத்தின் இளைஞர்களுக்கு படத்தின் வாயிலாக சொல்ல வேண்டும். நாம் பெரிய வரலாறுகளை எடுக்க வில்லைஎன்றாலும், நம்ம ஊர் அய்யனார் சாமி வாழ்ந்து, செத்த வரலாறுகளையாவது ஆவணப்படுத்த வேண்டும்.

9. உங்கள் குறும்படத்தில் பணிபுரிந்த மற்றக் கலைஞர்கள் பற்றி சில வரிகள்?

நிச்சயம் எனது படத்தில் பணியாற்றிய பலரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தனர். இதில் நடித்தவர்கள் யாரும் நடிகர்கள் இல்லாதாதால் அவர்களையும் வைத்து வேலை வாங்குவதும், அவர்களை ஒருங்கிணைப்பு செய்வதிலும் சில தவறுகள் நடந்தன. இதன் தயாரிப்பாளர் திரு. மணிகிரிஷ்னாவை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். செலவை பற்றி கவலையின்றி முழு ஒத்துழைப்பும் கொடுத்தது அவர்தான். இதற்கடுத்து ஒளிப்பதிவு செய்த திரு. ராஜா எடிட்டர், திரு. முருகன் மேலும் இதில் நடித்திருந்த சிற்பி சரவணன் எல்லோரும் என் நன்றிக்குரியவர்கள்.

10. உங்களுக்கு மற்றவர்களிடம் ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா? அல்லது இந்தத் துறையில் புதிதாக வருபவர்களுக்கு உங்களால் ஏதேனும் உதவிகள் செய்ய இயலுமா?

கண்டிப்பாக சமூக அக்கறையுள்ளவர்கள் நல்ல கருத்துகளை மக்களிடம் எடுத்து சொல்ல விரும்புவார்கள். நல்ல சினிமா தயாரிக்க விரும்புபவர்கள் எனக்கு மட்டுமல்ல. நல்லப்படங்களை இயக்கும் புது இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களை ஆதரிக்க வேண்டும். இப்படி இருந்தால் மட்டுமே தரமான படங்கள் வெளிவரும். தரமான புது சமூதாயம் உருவெடுக்கும்.


படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)