கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - தினகரன் ஜெய்

ஆதவன்  

ரேகை, மருதிருவர் என்கிற இரு வரலாறு சம்பந்தமான ஆவணப்படங்களின் மூலம் பரவலான பாராட்டைப் பெற்று, மாற்று ஊடகத்தில் தனக்கான இருத்தலை உறுதிப் படுத்தியிருப்பவர் திரு. தினகரன் ஜெய் அவர்கள். மிக சவாலான, அதே சமயத்தில் அச்சுறுத்தலை தரக்கூடிய கதைக் களம் ரேகை ஆவணப்படத்திற்கான களம். ஆனால் அதனை மிக சிறப்பாக கையாண்டுள்ளார். இவர் இயக்கியுள்ள ரேகை தமிழ்நாட்டில் பிறப்பினால் குற்றப்பழி சுமந்த ஒரு பரம்பரையினரைப் பற்றியும் அதன் மீது பிரிட்டிஷ் அரசு நடத்திய அடக்குமுறைகளையும் அடுக்கடுக்காக விவரிக்கிறது.

மாற்று ரசனைக்கான சிந்தனையை வளப்படுத்த வாசிப்பு மட்டுமே படைப்பாளியை தயார் செய்யும் என்கிற கருத்தில் உறுதியாக இருக்கும் இவர் யதார்த்த திரைப்படங்கள் மற்றும் மாற்று ஊடகங்களை உருவாக்குவதில் மிகத் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டு வருகிறார். தமிழக கலாச்சார, மரபுரீதியிலான கலைகள் பற்றிய கல்விப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் இவர் அதனை சிறப்பாக செய்து முடிப்பார் என்பதனை திண்ணமாக தமிழ் ஸ்டுடியோ.காம் நம்புகிறது. அறியப் பல கருத்துகளை நம் முன் வைக்கும் அவரின் நேர்காணல் இனி உங்களுக்காக.

இனி இயக்குனர் திரு. தினகரன் ஜெய் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

1. முதலில் உங்களைப் பற்றி...

எனது அம்மாவின் சொந்த ஊர் மதுரைக்கு அருகில் உள்ள செம்பிலாங்குடி. அப்பா சிவகங்கை கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் சுபாஷ் சந்திரபோஸீன் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியவர். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின், ஒரு தெளிந்த நாடக கலைஞராக வாழ்ந்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்த புகழ்பெற்ற நடிகர். இயல்பிலேயே வசதிமிக்க கிராமத்து குடும்ப பின்னணி இருந்ததால் என்னுடைய தந்தை பெரும் செலவாளியாக இருந்தார். நாடகத்துறை சார்ந்தே அவரது பிற்பகுதி வாழ்வு கழிந்தது. லெளகீகத்தின் எந்தவித சாமர்த்தியமும் இல்லாமல் வாழ்ந்தார்.இதனால் குடும்ப சூழல் காரணமாக 20 வயதில் போலீசிலோ, இராணுவத்திலோ சேர வேண்டும் என்ற மனநிலை எங்களுக்கு இருந்தது. அதன் விளைவாகவே இரண்டு சகோதரர்களும் யூனிபார்ம் சர்வீஸில் சேர்ந்தார்கள்.

இதிலிருந்து நான் மாறுபட்ட சூழ்நிலையை தேர்ந்தெடுத்ததால் வழக்கமாக எதிர்கொள்ள வேண்டிய பல சிரமங்களை கடந்து செல்ல வேண்டி இருந்தது. மகிழ்ச்சி கொள்ளும் வகையில் எனது இளம் வயது வாழ்வு அமையவில்லை. சிரமங்களும், துன்பங்களும் நிறைந்த இளம் வயதை தான் எனது குடும்ப பின்னணி எனக்கு தந்தது. இப்பவும் என் நினைவோட்டத்தில் இன்னும் திடமாக ஞாபகத்திலிருப்பது சிரமங்கள் நிறைந்த அந்த வாழ்வுதான்.

அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு கிடைத்த நண்பர்கள் புத்தகங்கள் என என் வாழ்வு திசைமாறியது. அநேகமாக இந்த சூழ்நிலையில் தான் எனக்காக படைப்பாற்றலை உணர்ந்தேன் என்று சொல்லலாம். இலக்கியங்கள் மீது எனக்கு இருந்த ஆர்வம் இந்த சூழ்நிலையில் தான் அதிகமானது. குறிப்பாக ஜெயகாந்தன், லா.ச.ரா, மௌனி, ஜி. நாகராஜன், ஜெயமோகன் என வாசிப்பதில் ஆர்வமிருந்தது. ‘ எழுதுதல்’ என்ற மனநிலை எனக்கு அப்போது தான் உருவானது. என்னுடைய முதல் சிறுகதை 1997 இல் தாமரையில் வெளியானது. அதனை தொடர்ந்து அவ்வப்போது சிறுகதைகள் எனுதினேன். சொல் புதிது, பண்முகம், புதியகாற்று, காலம், செம்மலர், தாமரை என பல சஞ்சிகையில் எனது சிறுகதை வெளியானது.

வாழ்தலின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவேண்டிய சூழலால் தொடர்ந்து எழுதமுடியவில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் எனக்கான இருப்பை உணரும் தருணத்தை நான் நழுவவிடவில்லை. ‘எழுதுதல் என்ற மனநிலை தான் எனக்குள் மாற்று சினிமாவுக்கான ஈர்ப்பை அதிகப்படுத்தியது. இதனை ஒட்டி தேடிய புத்தங்களும் வாசிப்பும் இந்த துறை சார்ந்த நேர்மையை எனக்குள் ஆழமாய் விதைத்தது. மாற்று ரசனைக்கான சிந்தனையை வளப்படுத்த வாசிப்பு மட்டுமே படைப்பாளியை தயார் செய்யும். இந்த நம்பிக்கை மட்டும் தான் எனக்கான சிந்தனையாக இருந்தது. என் குடும்ப பின்னணி இந்த துறைக்கான மனநிலையையும் உற்சாகத்தையும் எனக்குள் எப்போதுமே உருவாக்கவில்லை. சராசரி தமிழ் குடும்பங்களில் உள்ள அனைத்து நெருக்கடியும் எனக்கு இருந்தது. குறிப்பாக எதன் காரணத்தை முன் வைத்தும் இத்துறையில் நான் பணியாற்றி கொண்டிருப்பதை எனது குடும்பம் அனுமதிக்கவில்லை.

என்ன காரணம்?

சமுகம் உருவாக்கி இருககிற பொது மதிப்பீடு காரணமாக இருக்கலாம். மேலும் இந்த சிந்தனையின் முரண் குறித்து இது வரை நான் வருத்தப்பட்டதேயில்லை. ஏனெனில் சினிமா சார்ந்த கலை உணர்வும், வாழ்வனுபவமும் சிதைவுற்று இருக்கும் தமிழ் சூழலில் இந்த ‘முரண்பாடு’ பற்றிய சுயபச்சாபத்தோடு எதிர்வாதம் செய்ய இயலுமா?

இதற்கான அரசியல் என்ன?

நீ கேட்கும் அனைத்து கேள்விக்கும் ஒரே பதில் பொருளாதாரம் என்றார் லெனின். இந்த மனநிலை சார்ந்த சமுக அமைப்புதான் எல்லா தளங்களிலும் தனது பாதிப்பை செலுத்துகிறதோ என்று எனக்கு ஐயமுண்டு. மேலும் ரசித்தல் குறித்து நமக்கு இருக்கிற அக்கறையும் இதற்கான காரணமாக இருக்கலாம். இயக்குனர், மகேந்திரனோடு பேசும் போது என்னிடம் ‘ஆட்டோகிராப், அழகி வெற்றி பெறுகிறது. அதே சமயம் ஜெயம், சாமி, திரைப்படமும் வெற்றி பெறுகிறது? என்ன காரணம்னு கேட்டார். மாற்று ரசனைக்கான அரசியலை நாம் சரியாக வளர்த்தெடுக்கவில்லையோ என்பதாக தான் நான் நினைக்கிறேன். மேலும் ரியாலிஸ்ட் சினிமா குறித்த பார்வை இங்கே வலுப்படவில்லை என்று பதில் சொன்னேன். அதற்கு மகேந்திரன் அவர்கள் ஒரே வரியில் "தீர்மானமில்லாத ரசனைகள் மலிவான படைப்புகளைத்தான் படைக்க காரணமாக இருக்கும்" என்றார். தீர்மானமில்லாத ரசனைக்கு யார் பொறுப்பு? இந்த விவாதத்துக்கான பதில்தான் இதற்கான அரசியலாகவும் இருக்கும்.

2. குறும்படங்கள் / ஆவணப்படங்கள் எப்ப்படி வித்தியாசப்படுத்தி பார்ப்பது?

முழுநீள கதைப்படத்தை Feature Film என்று கூறுகிறோம். Short Film என்று கூறுவது பட நீளத்தை பொறுத்துதான். சிறுகதைக்கும், நாவலுக்குமான வித்தியாசமே, Short Film, Feature Film க்கும பொருந்தும்.

கதைப்படங்கள் எல்லாமே குறும்படமாக நாம் வரையறுக்க முடியும். அது ஒரு நிமிட விளம்பர படமாகவும் இருக்கலாம். 18 நிமிட கதை படமாகவும் இருக்கலாம். ஆவணப்படம் என்பதற்கு பல உள்ளடக்க கூறுகளை வெளிகாட்ட பயன்படும் யுக்தி என அடையாளப்படுத்தலாம்.

ப்ளாஹார்டியின் படத்தை பற்றி கிரீன்ஸனால் எழுதப்பட்ட விமர்சனத்தில் டாகுமெண்டரி என்ற சொல் பயன்பட்டதை தொடர்ந்து கதையற்ற படங்களை வரையறுக்க அதே சொல் இன்று வரை பயன்படுகிறது. Presentation குறித்த விவாதத்தை வைத்தே இதற்கான வித்தியாசத்தை எளிமையாக பிரித்துணர முடியும்.

3. தன்னுடைய படைப்பாற்றலை வெளிக்காட்ட அனைவரும் குறும்படம் எடுக்க வேண்டும் என்றுதான் எண்ணுவார்கள். ஆனால் நீங்கள் ஆவணப்படங்களின் மீது அதிக ஆர்வம் கட்டக் காரணம் என்ன?

எனது முதல் முயற்சி ஆவணப்படத்தின் தயாரிப்பில் தொடங்கியது தான் இதற்கான காரணமாக இருந்தது. சுதந்திரப் போரில் தமிழகத்தின் பங்கு குறித்து தொடர் கட்டுரை எழுதும் முயற்சியில் ஈடுபட்ட போதுதான் தமிழர்களின் தியாகம் பற்றி பல உண்மைகளை அறிய நேர்ந்தது. அது யாவும் இந்திய தேசிய வரலாற்றில் பதிவு பெறாதது மேலும் அதிர்ச்சியளித்தது.

விடுதலை இயக்க போராட்ட வரலாற்றில் தமிழர்களின் அளப்பரிய சிந்தனை மிக்க தியாகங்கள் மறைக்கப்பட்டதால் அதன் அரசியலுக்கு எதிர் அரசியலாகவே மருதிருவர் ஆவணப்படத்தை அறிவுச்சூழலில் ஆவணப்படமாக வெளியிட்டோம். தமிழக ஆவணப்பட சூழலில் இந்த முயற்சி பல் துறைகளில் உள்ள உள்ளீட்டு நுண் அரசியலை எதிர்த்து கருத்தியல் சலனத்தை உருவாக்கும் என்றே நம்புகிறேன்.

4. இதுவரை நீங்கள் எடுத்துள்ள குறும்படங்கள் / ஆவணப்படங்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்? மேலும் இந்த ஆவணப்படங்களை எடுக்கும்போது உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி?

நீங்கள் குறிப்பிட்டதைப் போல மருதிருவர், ரேகை என்ற இரண்டு ஆவணப்படங்கள் தற்போது நான் இயக்கிய படங்கள்.

இந்த இரண்டு ஆவணப்படங்களை தயாரிக்க 3 வருடங்கள் ஆனது. இதற்கான வரலாற்று விஷயங்களை திரட்டுவதிலும், காட்சிப்படுத்துவதிலும் எனக்கு பல சிரமங்கள் இருந்தது. குறிப்பாக ஆவணப்பட உருவாக்கத்தில் இயக்குனர்கள் எதிர்கொள்கிற பல சிரமங்கள் இருக்கிறது. சாமான்யர்கள் புரிந்து கொள்ளும்படியான குறியீட்டுத்தன்மையை ஆவணப்படத்தில் உருவாக்க வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோளாகும். ஆவணப்படம் அறிவு ஜீவிகளுக்கான சமாச்சாரம் என்ற கண்ணோட்டம் மாறாத வரைக்கும் ரசித்தலின் மேன்மை மாறிவிடப்போவதில்லை. மருதிருவர் படத்திற்கான தயாரிப்பில் இருந்த போது நான் எதிர்கொண்ட தரிசனம் இதுதான். அதனால்தான் என் படங்களை Expository Form ல் உருவாக்கினேன்.

இந்த உருவாக்க முறைதான் நமது தமிழ்ச்சூழலில் எளிமையான பார்வையாளனுக்கும் அதன் மனோதத்துவ சாரங்களை உள்வாங்க உதவும். இதனை மனதில் கொண்டே அதன் திரை பிரதியை எழுதினேன். அதனை சாத்தியமாக்கும் போது படைப்பாளியாக பல அனுபவங்களை என்னால் பெற முடிந்தது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த இரண்டு ஆவணப்படங்களும் எனக்குள் யதார்த்தவாத சினிமா பற்றிய முழுமையான உருவாக்க முறையை கற்பித்தது.

தற்போது ‘காலம்’ என்ற ஆவணப்படத்தொடரை மக்கள் தொலைக்காட்சிக்காக இயக்கி கொண்டிருக்கிறேன். கி.பி. 1755 முதல் கி.பி. 1947 ஆகஸ்ட் 15 வரைக்குமான விடுதலைப்போர் நிகழ்வுகளை குறிப்பாக தமிழ்நாட்டில் நடந்ததைப் பற்றிய ஆவணங்களை தொகுத்து உருவாக்கி வருகிறேன். இந்த ‘காலம்’ ஆவணப்படத்தை ஜெகமதி கல்வி அறக்கட்டளை சார்பாக சி.தீனதயாள பாண்டியன் தயாரிக்கிறார். ஆதித்யன் இசையமைக்கிறார்.

ஆவணப்பட உருவாக்கத்தில் இசைக்கு பெரும் முக்கியத்துவம் உள்ளது. யதார்த்தவாத சினிமாவில் இசையின் மூலம் எழுத முடியாத சலனத்தை திரையில் உருவாக்க முடியும். அதே உருவாக்க முறைக்கான அனைத்து சலனங்களையும் இசையால் நாம் சாதிக்கலாம். அந்த வகையில் ஆதித்யன் என் திரை வடிவத்துக்கு உறுதுணையாக இருக்கிறார். ‘காலம்’ ஞாயிறுதோறும் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

5. ரேகை ஒரு வரலாற்றுப் பதிவு. இது போன்ற வரலாற்றுப் பதிவுகளை ஆவணப்படமாக்கும்போது பல சிக்கல்கள் தோன்றும். அதுவும் சமூகப் பிரச்சனைகள் பற்றி ஆவணப்படம் எடுக்கும்போது ஏற்படும் பிரச்சனைகள் பற்றி சொல்லவே தேவையில்லை. இந்த பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்ட விதம் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

இந்தியாவுக்கான அரசியல் விடுதலைக்கு தமிழர்களே மூல காரணமாக இருந்ததையும், அவர்களால் எழுச்சி பெற்ற ஜனநாயக அரசியலையும் அடையாளப் படுத்தவே மருதிருவரை உருவாக்கினோம். வரலாற்று குறிப்புகளை தேடும் சூழலில்தான் ‘ரேகை’ ஆவணப்படத்திற்கான குறிப்புகள் கிடைத்தது. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்திய பழங்குடியினரின் வாழ்வு காலனிய நிர்வாக மையத்திற்கு எங்ஙனம் இடையூறாக இருந்தது. என்பதான ஆய்வு தேடல்தான் ‘ரேகை’ ஆவணப்படம்.

தமிழ்நாட்டில் இச்சட்டத்திற்கு சுமார் 90 சாதியினர் உட்படுத்தப்பட்டனர். அதன் காரணத்தால் ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசியலின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக இந்த ஆய்வை முன் வைக்க நேர்ந்தது. இச்சட்டத்தின் வழி சீர்த்திருத்தம் நடந்ததா? என்ற கேள்வியின் தேடலாகவே காலனிய அரசியலின் வன்மையான முகத்தை அடையாளப்படுத்த இப்படத்தின் வாயிலாக முயற்சித்தோம். குறிப்பாக கள்ளர் சாதியினரின் ‘தன்னரசு கிராம அமைப்பும் சமூக வாழ்வும்’ பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நிர்வாக அரசுக்கு எதிராக இருந்ததால் தான் இச்சட்டத்தின் வழி பல கொடுமைக்கு ஆளாக்கினார்கள்.

ஆசிய கண்டத்தில் இந்த ஐரோப்பிய கருத்தியலால் உயிர்பலியானவர்கள் கள்ளர்கள் மட்டும்தான். பிரிட்டிஷாரின் சார்பு அரசியல் நலன் சார்ந்த எதார்த்தங்களை விவாதத்தின் அடிப்படையில் புரிந்து கொண்டதால், குற்றப்பழங்குடிகள் என்ற கருத்தியலின் மேற்கத்திய வன்முறையை அடையாளம் காண முடிந்தது. இந்த பழங்குடி சட்டம் பற்றி சமூகவியல் ரீதியான ஆய்வுகள் எதுவும் இதுவரை தமிழ் சூழலில் நடத்தப்படாததால் இதனை ஆவணப்படமாக எடுக்க நேர்ந்தது. இந்த ஆவணப்படத்தை டாக்டர் ராமதாஸ் வெளியிட, ட்ராட்ஸ்கி மருது பெற்றுக்கொண்டார். சென்னை ஃபோர் பிரேம் திரையரங்கில் சிறப்புக் காட்சியாக திரையிட்டு, விவாதம் நடந்தது.

திரைப்பட இயக்குனர் சீமான், தங்கர்பச்சன், கவிஞர் அறிவுமதி, வ. கௌதமன், பாலமுரளிவர்மன், தோழர் தியாகு போன்றவர்கள் இதனை பாராட்டினர்.

புதிய காற்று இதழ் இப்படத்தை சாதிய கண்ணோட்டத்தில் விமர்சனம் எழுதியிருந்தது. விமர்சனத்திற்கான எந்தவித நேர்மையும் இல்லாமல் முதுகளத்தூரில் நடந்த கலவர பின்னணியை இப்படத்தோடு ஒப்பிட்டு எழுதியது அபத்தம்.

மறுகாலனியாதிக்க அரசியலுக்கு எதிராகவே எனது படங்களை அடையாளப் படுத்தலாம். இந்திய சாதிய அமைப்பு விமர்சனத்துக்குள்ளானது என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை. அதே தருணத்தில் இடைநிலை சாதியில் பிறந்த போராளிகளின் தியாக மரபை கொச்சைப்படுத்துவது அறிவார்ந்த தளத்திற்கு அனுகூலமானதல்ல. வரலாற்றின் தத்துவம் உண்மை என்ற ஆரோக்கியமான விவாதம் தொடரட்டும். அப்போதுதான் வரலாறு தன்னுடைய உன்னதமான முடிவை வெளிப்படுத்தும்.

6. இதுப் போன்று யாரும் கவனிக்காத பிரச்சனைகளை வெளிக்கொண்டு வரும்போது நீங்கள் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்ததா? இதுப் போன்ற ஆவணப்படங்கள் எடுக்கும்போது பொருளாதார ரீதியில் உங்களால் வெற்றி பெற முடிந்ததா?

‘மருதிருவர்’ படத்தை தமிழக ஆளுநர், சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்டார். ஆனாலும் மருதிருவரை விட ரேகைக்கு தான் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

அதற்கு அதனோட உருவாக்க முறைதான் காரணம்னு நினைக்கிறேன். முக்கியமாக ரேகையில் பல சம்பவங்கள் நடிகர்களை கொண்டு படமாக்கிய விதம் அப்படத்திற்கு வலுவான தர்க்க பார்வையை கொடுத்தது.

‘Docu-Drama’ முறையில் நிகழ்வுகளை படமாக்கியது அச்சட்டத்தின் வன்கொடுமையை சித்தரிக்க உதவியது. பொதுவாக ஆவணப்படத்தில் ‘Drama’ முறையை உருவாக்கம்போது உண்மையின் உள்ளுணர்வோடு திரைமொழிக்கு காட்சியை மாற்ற வேண்டும். ரேகையில் அதை சாத்தியப்படுத்தினேன் என்றுதான் நம்புகிறேன். உருத்தோற்றம் பற்றிய விளக்க முறைக்காகவே ரஷ்யா, டென்மார்க், இத்தாலி என பல நாட்டில் திரையிடப்பட்டது. 2007ல் ஐதராபாத்தில் நடந்த உலக பட விழாவில் தமிழகத்திலிருந்து ஆவணப்பட பிரிவில் ‘ரேகை’ மட்டுமே தேர்வு செய்யப்பட்டது.

பல திரைப்பட இயக்குநர்கள் ரேகையின் ‘Attempt Style’ பற்றி பாராட்டும், விவாதமும் செய்தது எனக்கு உற்சாகம் அளித்தது. ஓசூர் திரைப்படவிழாவில் மருதிருவரை சிறந்த படமாக தேர்வு செய்து, பாலுமகேந்திரா அவர்களால் எனக்கு விருது வழங்கப்பட்டது.

இந்த ஆவணப்படத்தில் இயக்குனராக என் பணி குறித்து வெகுநேரம் என்னை பாலுமகேந்திரா பாராட்டி பேசினார்.

தென்னிந்தியர்கள் விடுதலை இயக்கத்துக்கு அளித்த ஆதரவும், தியாகமும் தேசிய அரங்கில் மறைக்கப்பட்ட அரசியலுக்கு எதிராகவே இப்படம் எனது தயாரிப்பாளர் தீனதயாள பாண்டியன் அவர்களால் தயாரிக்கப்பட்டது. மேலும் ஆவணப்படத்திற்கு கல்வி சார்ந்த பிரச்சார குணம் இருப்பதை அறிந்ததால்தான் கலாச்சார மரபு மற்றும் அரசியல் போராட்ட வரலாற்றை தனது கல்வி அறக்கட்டளை சார்பாக தயாரிக்க முன் வந்தார்.

என்னை இத்துறையில் அறிமுகப்படுத்திய அவருக்கு நான் நன்றி கடன் பட்டிருக்கிறேன்.

7. இன்று இளைஞர்கள் கையில் கிடைத்திருக்கும் இந்த டிஜிட்டல் புரட்சியை வைத்துக் கொண்டு இன்னும் இது போன்ற பல பிரச்சனைகளை, சமூக அவலங்களை மக்கள் மன்றம் முன் நிறுத்த முடியும். ஒரு காலத்தில் பத்திரிக்கைகளால் சாதிக்க முடிந்தவற்றை இன்று இது போன்ற ஆவணப்படங்களால் சாதிக்க முடியும். ஆனால் பெரும்பாலான இளைஞர்கள் அத்தகைய முயற்சிகளை மேற்கொள்வதில்லையே? இதற்கு காரணம் என்ன?

ஆவணப்படத்திற்கென ‘சந்தை’ இல்லாததுதான் காரணம். இதனால் இதற்கான தயாரிப்பு முயற்சியும் அரிதாகத்தான் இருக்கிறது. இந்நிலை மாற உங்களைப் போன்ற இயக்கம் மக்களிடையே ஆவணப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அப்போதுதான் இந்த இயக்கத்துக்கான நோக்கம் நிறைவேறும்.

8. குறும்பட / ஆவணப்படத் துறைக்கு தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் வரவேற்பு அளிக்கின்றவா? இல்லையென்றால் எப்படிப்பட்ட வரவேற்பை நீங்கள் எதிபார்க்கிறீர்கள்?

பத்திரிகைகள் மட்டும்தான் பெரிதான வரவேற்பு அளிக்கிறது. என்னுடைய படங்களை பற்றி எல்லா பத்திரிகைகளும் விமர்சனம் வெளியிட்டு பாராட்டியது. குறிப்பாக 'வடக்கு வாசல்' இதழ்தான் என் இரண்டு படங்களை பற்றி தீர்மானமான தர்க்க பார்வைக்கு வலுசேர்த்தது.

தமிழக தொலைக்காட்சி சூழலில் குறும்பட ஆவணப்படத்திற்கான புரிதலை இனிமேல்தான் உருவாக்க வேண்டிய துரதிர்ஷ்டத்தில் இருக்கிறோம். மக்கள் தொலைக்காட்சி இந்த விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு தற்போதைய சூழலில் கடமையாற்றி வருகிறது.

‘அரசு பயங்கரவாதத்தை’ சித்தரித்த முதல் இந்திய தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சிதான். ‘சந்தனக்காடு’ என்ற தொடரில் அரசின் வன்முறையை அம்பலப்படுத்தியதற்காக இயக்குனரையும், தொலைக்காட்சியையும் பாராட்ட வேண்டும்.

இந்த முயற்சியின் தொடர் பலனாக மாற்று ஊடக சிந்தனை வலுப்பெற சாத்தியமிருக்கிறது.

9. உங்களின் அடுத்தக் கட்ட முயற்சி என்ன? தொடர்ந்து இதுப் போன்று வரலாற்றுப் பதிவுகளை ஆவணப்படமாக்கும் எண்ணம் உள்ளதா?

நமது தமிழக கலாச்சார, மரபுரீதியிலான கலைகள் பற்றிய கல்விப்படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறேன்.

நமது மரபு சார்ந்த சமூக வாழ்வு சிதைந்து வருகிறது. இந்த சிதைவுக்கு தொலைக்காட்சி பெரும் காரணமாக இருக்கிறது. குறிப்பாக கூட்டு குடும்ப வாழ்வின் மரபு சார்ந்த எதார்த்தங்கள் சிதைக்கப்படும் அளவுக்கு டி.வி. தொடர்கள் ஒளிபரப்பப்படுகிறது. இந்த நச்சு கருத்துக்கு மாறாக மாற்று ஊடக ரசனையை வளர்த்தாலொழிய இதனை வெல்ல முடியாது. அதற்கான சாத்தியத்தை நோக்கியே நான் நகர விரும்புகிறேன்.

10. உங்களுக்கு பொதுமக்கள் அல்லது ஆர்வலர்களிடம் இருந்து தேவைப்படும் உதவிகள் என்ன? அல்லது இந்தத் துறைக்கு புதிதாக வர விரும்பும் இளைஞர்களுக்கு உங்களால் என்னென்ன உதவிகள் செய்ய இயலும்?

படைப்பாக்க திறனுடன் வருபவர்களுக்கு துறைசார்ந்த விஷயங்களில் உதவ தயாராக இருக்கிறேன்.

‘தமிழ்த்திரைப்படத்தின் வளர்ச்சி மற்றும் விளைவு’ குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்று நீண்ட நாள் முயற்சியில் இருக்கிறேன். இதை தயாரிக்க ஆர்வலர்களின் ஒத்துழைப்பு தேவை. முயற்சி அதற்கான சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையோடு இயங்குகிறேன்.

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)