கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - பொன். சுதா

ஆதவன்  

"எந்த வித விட்டுக் கொடுத்தல்களும் இல்லாமல் நமக்கான படைப்புகளை உருவாக்கலாம் என்ற குறும்படத் துறையின் சுதந்திரம் தான் குறும்படங்கள் மேல் ஆர்வமுண்டாகக் காரணம்". என்று குறும்படத் துறையில் எப்படி தனக்கு ஆர்வம் ஏற்பட்டது, என்பதை விவரிக்கும் பொன். சுதா திரைப்படத் துறையில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக களப் பணியாற்றி வருபவர். தான் நேசிக்கும் ஒருக் கலைக்கான தேடலும், தீராக்காதலும் தனக்குண்டு என்பதை தன்னுடைய ஒவ்வொரு படைப்பிலும் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பவர்.

தன்னுடைய முதல் குறும்படமான "மறைபொருளில்" பெண்ணியம் பற்றி பேசியவர், அடுத்த படைப்பான "நடந்த கதையில்" சாதிய அடக்கு முறைக்கு எதிராக சாட்டையை சுழட்டியுள்ளார், அழகிய பெரியவன் துணையோடு. இவரிடம் இருந்து விரைவில் ஒரு யதார்த்த திரைப்படத்தை எதிர்பார்க்கலாம். திரைப்படத் துறையிலும் தனக்கான அடையாளத்தை இழக்காமல் இதே வீரியத்தோடு செயல்பட தமிழ் ஸ்டுடியோவின் வாழ்த்துகள்.

இனி இயக்குனர் திரு. பொன். சுதா அவர்களுடன் ஒரு நேர்காணல்: 

1.முதலில் உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

நான் பொன்.சுதா. திரைப்படத் துறையில் 15 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டு இருக்கிறேன். ‘ ரகசிய போலீஸ்’ ‘அரவிந்தன்’ ‘ தை பொறந்தாச்சு ’ திரைப்படங்களில் உதவி இயக்குநராகவும், ‘பள்ளிக்கூடம்’ ‘கிரீடம்’ ‘களவாணி’ திரைப்படங்களின் கதை விவாதங்களிலும் பணியாற்றி உள்ளேன்.

‘மறைபொருள்’ ‘ நடந்த கதை’ என்ற குறும்படங்களை இயக்கியுள்ளேன். ‘கவிதை அல்ல காதல்’ ‘ நானும் நீயும் நாமான போது’ ‘ மழையின் சுவடுகள்’ என்று 3 கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறேன். தற்போது திரைப்படம் இயக்குவதற்கான முழு முயற்சியில் இருக்கிறேன்.

2. குறும்படத்துறையில் உங்களுக்கு ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?

எந்த வித விட்டுக் கொடுத்தல்களும் இல்லாமல் நமக்கான படைப்புகளை உருவாக்கலாம் என்ற குறும்படத் துறையின் சுதந்திரம் தான் குறும்படங்கள் மேல் ஆர்வமுண்டாகக் காரணம்.

திரைப்படம் என்கிற போது அதனுடைய அதிக முதலீடு காரணமாகவும் , வியாபார சாத்தியங்களுக்காவும், அதனுடைய வெற்றி தோல்விகள் பல்வேறு மனிதர்களின் வாழ்வைத் தீர்மானிக்கின்ற காரணத்தாலும் விட்டுக் கொடுத்தல் தவிர்க்க முடியாத அம்சமாகத் தொடர்கின்றது.

திரைப்படத் துறையில் எந்த இயக்குநரும் உதவி இயக்குநர்களுக்கு தொழில் நுட்ப அறிவை சொல்லிக் கொடுப்பதில்லை. படப்பிடிப்புத் தளத்தில் அதற்கான நேரமின்மை கூட அதன் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் சொல்லிக் கொடுக்கும் மனம் இல்லாதது, அது மட்டுமின்றி பெரும்பாலான இயக்குநர்களுக்கே கூட தொழில் நுட்பம் பற்றிய தெளிவின்மையும் கூட காரணம்.

உதவி இயக்குநர்கள் அனுபவம் காரணமாக பல படங்களுக்குப் பிறகு தானாகவே கற்றுக் கொள்கிறார்கள். அது சரியா , நம்மால் நாம் நினைகின்ற செய்தியை, கதையை சரியான திரைப்படமாக கொடுத்து விட முடியுமா என்று சோதித்துப் பாராமலே வெறும் நம்பிக்கைகளின் பெயரிலேயே திரைப்படங்கள் இங்கு உருவாகின்றன.

பெரிய இயக்குநரின் உதவியாளர், பெரிய வெற்றிப் படத்தில் வேலை செய்தவர், உணர்ச்சிகரமாக வாய் மொழியில் கதை சொல்பவர் என்றுதான் இயக்குநராக வாய்ப்புகள் கிடைக்கின்றன.

அதன் காரணமாகவே பெரும்பாலான திரைப்படங்கள் பெரும் தோல்விகளையே சந்திக்கின்றன.

பார்வையாளர்களிடம் நான் உணர்த்த விரும்புவதை என்னால் முழுமையாக காட்சி வடிவத்தில் அமைக்க முடிகிறதா என்று பரிசோதிக்கும் முயற்சியாகவும் தான் குறும்படங்களில் ஈடுபட்டேன்.

ஆனால் குறும்படங்களுக்கும், திரைப்படங்களுக்குமான ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்த பிறகே குறும்படம் இயக்கத் துவங்கினேன்.

3. குறும்படம் எடுக்க அது சார்ந்த தொழில் நுட்ப அறிவு தேவை என கருதுகிறீர்களா?

கட்டாயம் தேவை. அப்படி இல்லாதவர்கள் தொழில் நுட்ப அறிவுடையவர்களின் உதவியுடன் ஈடுபடலாம்.

முழுக்க முழுக்க கற்றுத் தேர்ந்த பிறகே ஈடுபட வேண்டும் என்று சொல்ல வரவில்லை. அப்படி ஒரு எல்லை எதற்கும் இல்லை. அடிப்படையான அம்சங்களை அறிந்து கொள்ள வேண்டும். அல்லது அறிந்து கொள்ளும் ஆர்வமும், அது அவசியம் என்ற புரிதலும் வேண்டும்.

4. நீங்கள் இதுவரை எடுத்துள்ள குறும்படங்கள் பற்றியும், அதில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றியும் கொஞ்சம் கூறுங்களேன்.

முதல் குறும்படம் ‘மறைபொருள்’. பெண்ணியம் பற்றிய ஒரு பார்வையை முன் வைக்கின்ற படம்.

இதில் நடித்தவர் ‘நிவேதா’. ஒளிப்பதிவாளர் ச.ஜெயக்குமார். படத்தொகுப்பு பீட்டர்பாபியா.

குறும்படம் போதும் என்ற நினைப்போடு இயங்கிக் கொண்டிருந்த போது அழகிய பெரியவனின் ‘ குறடு’ என்கிற கதையைப் படித்தேன்.

மிக முக்கியமான ஆவணப்படுத்த வேண்டிய கதை என்று தோன்றியது.

அந்தக் கதை என் மனதில் கனன்றபடியே இருந்தது. அதை குறும்படம் ஆக்கலாம் என்று தோன்றியது.

சரியாக அதே நேரத்தில் ஆர்குட்டில் மறைபொருள் பார்த்துவிட்டு எனக்கு நண்பராய் கிடைத்தவரும், ஹைதரபாத்தில் மென்பொருள் துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பவருமான நணபர் அருள்சங்கரை சந்திக்க நேர்ந்தது.

அப்போது குறடு கதையைச் சொன்ன போது இதை குறும்படமாக்கும் பட்சத்தில் தானே தாயாரிப்பதாய் சொன்னார்.

அப்படித் துவங்கியது நடந்த கதை.

மூன்று படங்களில் ஒளிப்பதிவாளராய் பணிபுரிந்த இராசாமதி இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உதவினார். எந்த பொருளாதார பலனையும் எதிர்பாராமல் என்பது முக்கியமானது.

நாடோடிகள் படத்தின் எடிட்டர் ஏ.எல்.ரமேஷ் நடந்த கதைக்கும் படத்தொகுப்பாளராய் கிடைத்தார்.

இசை மரியா மனோகர். கதை அழகிய பெரியவன். தயாரிப்பு அருள்சங்கர். கதை நாயகனாக கருணாகர் நடித்தார். அருள்சங்கர், தர்மா போன்ற நண்பர்கள் தவிர மற்றெல்லோருமே படப்பிடிப்பு நடந்த பேராணாம்பட்டைச் சேர்ந்தவர்கள்.

அழகிய பெரியவனின் பெரும் உதவியால் அவரது ஊரான பேராணம் பட்டிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் 2 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்தோம்.

5. மறைபொருள் குறும்படத்தில் இஸ்லாத்தின் பெண்கள் பர்தா அணியவேண்டும் என்கிற கட்டுப்பாடினால் அவர்கள் மனம் எப்படி புண்படும் என்பதினை பார்க்கும் பார்வையாளர்கள் வாயிலாக உணர வைத்தீர்கள்..குறிப்பாக இந்த கருவை தொடக் காரணம் என்ன?

நான் பெரியாரியல்வாதி. பெரியாரியல் வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவன்.

மதங்களும், சாதியமும் தான் சமூகத்தின் முதல் எதிரி என்று நம்புபவன்.

கோவையில் ஒருமுறை நண்பர் ஆனந்தகுமாருடன் கிராஸ்கட் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது பர்தா அணிந்த சில பெண்கள் ஒரு பெரிய துணிக்கடைக்குள் நுழைந்தார்கள்.

அதைக் கண்டதும் அது பற்றி பேசிக் கொண்டே நடந்தோம். பலமணிநேரம் செலவழித்து துணிகள் எடுத்து அதன் மீது கறுப்புத் துணியை மூடி மறைக்கும் போது அவர்களின் மனது வலிக்காதா என்ற கேள்வியிலிருந்து பிறந்தது தான் மறைபொருளுக்கான கரு.

எல்லா மாற்றங்களும் ஆணுக்கு எளிதாய் வந்துவிடுகின்றது. ஆனால் பெண்கள் மட்டும் தான் கலாச்சாரத்தை கட்டிக் காப்பாற்ற கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அதை நோக்கிய கேள்வியே மறைபொருள்.

இதை பெண்ணியப் பார்வையோடு புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாம் மதத்தை மட்டும் குறை சொல்லி மற்ற மதங்கள் உயர்வானவை என்று சொல்வது எனது நோக்கமல்ல.

எல்லா மதங்களிலும் இருக்கும் அர்தமற்ற சடங்குகளையும், அடக்குமுறைகளையும் நோக்கிய எதிர்வினை தான் இது என்பதை பெரும்பாலோனர் புரிந்து கொண்டார்கள்.

அதனால் தான் தமுஎச. கலை இலக்கியப் பெரும் மன்றம், பெரியார் திரவிடர் கழகம், திராவிடர் கழகம் போன்ற பொது அமைப்புகளின் திரையிடல்களில் தமிழகம் முழுக்க கணக்கற்ற முறை இன்னும் திரையிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றது மறைபொருள்.

6. நடந்த கதை.. பொதுவாக இலக்கியத்தில் இருந்து கதையை திரைப்படமாக்கும்போது அதன் ஓட்டமும், நேர்த்தியும் சிதையாமல் எடுப்பதென்பது மிகுந்த சிரத்தையானது? அழகிய பெரியவனின் குறடு சிறுகதையை நடந்த கதை என்கிற பெயரில் நீங்கள் குறும்படமாக்கும்போது அதற்கான சிரத்தை எடுத்தீர்களா? ஒரு எழுத்தாளரின் சிறுகதையை எடுத்துக் கொண்டு, அவர் அந்த சிறுகதைக்கு வைத்த பெயரை மட்டும் நீங்கள் மாற்றக் காரணம்?

சிறுகதையின் அடி நாதத்தை ஒரு துளியும் சிதைக்காமல் குறும்படம் எடுக்க வேண்டும் என்று பெரும் சிரத்தை எடுத்தேன்.

சிறுகதை என்பது வேறு, காட்சி ஊடகம் என்பது வேறு என்ற புரிதல் எனக்கும் அழகிய பெரியவனுக்கும் இருந்த காரணத்தால் எல்லாம் இயல்பாய் நடந்தது.

சிறுகதையின் எந்த பகுதியை பயன்படுத்துவது. எதை விடுவது. கதையின் உணர்வை வலுப்படுத்த இன்னும் என்ன சேர்ப்பது என்ற தெளிவோடே திரைக்கதையை அமைத்தேன்.

குறடு கதை முடிகிற இடம் வேறு. நடந்த கதை அதற்கு முன்பே முடிந்தது.

தாத்தா பேரனைப் பார்த்து நினைப்பதாய் சிறுகதையில் இல்லை.

காலகட்டத்தைக் காட்ட அந்த உத்தி பயன்படுத்தப்பட்டது.

கதாநாயகன் செருப்புகளை தூக்கி எறிகிறான் என்ற காட்சி கதைக்கு வலு சேர்க்க திரைக்கதையின் போது சேர்க்கப்பட்டது.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். காட்சி ஊடகம் குறித்த பார்வைத் தெளிவோடு அழகிய பெரியவன் மாற்றங்களுக்கு சம்மதித்ததால் மட்டுமே இது சாத்தியப்பட்டது.

அப்புறம் தலைப்பைப் பற்றி சொல்வதென்றால்...

இலக்கியம் என்பது படித்தவர்களுக்கான ஊடகம். திரை ஊடகம் என்பது பாமரர்களுக்கும் கூட சொந்தமானது.

குறடு என்கிற வார்த்தையின் பொருள் எத்தனை பேருக்குத் தெரியும் என்ற கேள்வி பிறந்தது.

தலைப்பு இன்னும் பொருள் படும் படி இருக்க வேண்டும் என்ற தேடலின் போது அழகிய பெரியவனே அளித்த அற்புதமான தலைப்புத் தான் ‘ நடந்த கதை’.

உண்மையிலேயே நடந்த கதை. ஒருவன் காலில் செருப்பணிந்து நடந்த கதை என்று அர்த்த முழுமை பெற்றது தலைப்பு.

7. மறைபொருள் குறும்படத்தில் இருந்த நேர்த்தியும், முடிவில் அது ஏற்படுத்திய தாக்கமும் நடந்த கதையில் ஏற்படுவதாக நீங்கள் நினைக்கிறீர்களா? மறைபொருள் குறும்படத்தை விட நடந்த கதை எடுத்த விதத்தில் கவர்கிறது. ஆனால் முடிவில் மனதை வருடும் ஒரு தாக்கத்தை அது ஏற்படுத்தியதாக கருதுகிறீர்களா?

அதை விடவும் தாக்கம் ஏற்படுத்தியதாக உணர்கிறேன்.

இரண்டு குறும்படங்களின் செய்தியும் வேறானவை. கதை சொல்லல் முறையும் வெவ்வேறானவை.

மறைபொருள் ஒரு சிறு நிகழ்வு. நடந்த கதை ஒரு கதையை மையமாகக் கொண்ட குறும்படம். அதுவும் 60 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை, ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமையும் சொல்கிற கதை.

மறைபொருளின் முடிவில் எதிர்பாராத திருப்பம் அது ஒரு அனுபவம்.

நடந்த கதையை அவனுக்கு செருப்பு கிடைத்ததோடு முடித்திருக்க முடியும்.

அப்போது அது வெறும் ஒரு கதையாக மட்டுமே முடிந்து போய் இருக்கும்.

அதன் பிறகான நகர்வுகளில் தான் அது ஒரு வரலாறாகவும் ஒரு போராட்ட குணத்தைச் சொல்கிற, அநீதிகளின் மீது காறி துப்புகின்ற நிகழ்வாக மாறுகின்றது.

ஒவ்வொரு திரையிடலின் போதும் வீரபத்திரன் ஆதிக்க சாதியினரின் நிழல்களின் மீது ஷூ கால்களை வைக்கும் போது எழுகின்ற கை தட்டல்கள் முடிவினை ஆமோதிப்பதாக அறிவிக்கின்றன.

இரண்டு குறும்படங்களிலும் மனதை வருடும் முடிவில்லை. மனதை வலியாய் நெருடும் முடிவுகள் என்று கருதுகிறேன்.

சாதிய உணர்வுள்ள ஒருவருக்கு இப்படத்தின் எந்த அம்சமும் பிடிக்காமல் போகலாம்.

அது போலவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு மறைபொருள் பிடிக்காமல் இருக்கும்.

படத்தில் கையாளப்பட்ட அரசியலை புரிந்து கொள்கிறவர்களுக்கும் ஆமோதிப்பவர்களுக்கும், மாற்றத்திற்கு தயாராக இருக்கின்ற நடுநிலைவாதிகளுக்கும் இப்படத்தின் முடிவுகள் பாதிக்கும் என்று நம்புகிறேன்.

மறைபொருளை இஸ்லாமிற்கு எதிரான இத்துவப் பார்வையோடு கொண்டாடுபவர்கள் கூட இருப்பார்கள்.

இந்து மதத்தின் சாதிய அநீதிகளை எதிர்ப்பதால் மறைபொருள் பிடித்த சிலருக்கு நடந்த கதையை ஏற்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகளும் உள்ளது.

இந்த மாதம் பிப்ரவரியில் திண்டுகல்லில் செருப்பணிந்து நடந்த தலித் ஒருவர் தாக்கப்பட்டார். அவர் வாயில் ....... என்ன செய்திருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் அனைவர் மனதையும் வருடுவது மட்டும் நமது வேலையாக இருக்க முடியாது.

8. இரண்டு குறும்படங்களுக்கும் நீங்கள் பெற்ற விருதுகள் மற்றும், வரவேற்பு குறித்து?

மறைபொருள் பாரதியார் பல்கலைக் கழகம் நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது. இலண்டனில் விம்பங்கள் நடத்திய போட்டியில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மல்டி விசுவல் அகடமியின் போட்டியில் 2 வது சிறந்த படத்திற்கான விருதும். கலைவழி மாற்று நடத்திய போட்டியில் 3வது சிறந்த படத்திற்கான விருதையும் பெற்றது.

இணையத்தில் யூ டுயூப்பில் ஒரு வருடத்திற்குள் கிட்டதட்ட மூன்று லட்சம் பார்வையாளர்கள் பார்வையிட்டு உள்ளார்கள்.

இலண்டன், கனடா, ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்டது.

மறை பொருள் சமீபத்தில் ஆந்திராவில் A தொலைக்காட்சியில் திரையிடப்பட்டது.

நடந்த கதை போளூர் கிராமிய குறும்பட போட்டியில், பெரியார் திரைப்போட்டியில், கூடல் தென்திசை போட்டியில், திருவள்ளுவர் கலைப்பட்டறையின் போட்டியில் சிறந்த படத்திற்கான முதல் பரிசைப் பெற்றிருக்கிறது.

வெளியாகி மிகக் குறுகிய காலத்திலேயே 30 க்கும் மேற்பட்ட முறை திரையிடப்பட்டுள்ளது.

கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் விரைவில் திரையிடப்படவுள்ளது.

தீபிகா நடத்தும் அகில நாடுகள் குறும்படப் போட்டியில் 28 நாடுகளில் இருந்து கலந்து கொண்ட 412 படங்களில் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 70 படங்களில் நடந்த கதையும் ஒன்று.

வரும் மார்ச் 20 தேதி ஆல்பர்ட் திரையரங்கத்தில் திரையிடப்படவுள்ளது.

இரண்டு படங்களும் பத்திரிகை, இணையம், தொலைக்காட்சி ஊடகங்களின் மாபெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

விருதுகளைத் தாண்டி சமூக பிரக்ஞையுடன் இயங்கும் அமைப்புகள் எனது இரு குறும்படங்களையும் போர்க் கருவிகள் போல் பயன்படுத்துவதில் மகிழ்ச்சி.

9. குறும்படத் துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டில் எப்படி உள்ளது? இதற்கான விழிப்புணர்வு மக்களிடையே காணப்படுகிறதா?

தமிழ்நாட்டின் குறும்படத் துறை தற்போது தான் வளர்ச்சி காலகட்டத்தில் இருக்கிறது. நிறைய படங்கள் வருகின்றன. கருத்தியல் மற்றும் கதை சொல்லல், தொழில் நுட்ப ரீதியாக நல்ல படங்கள் வரத் துவங்கியுள்ளன. முன்பு இருந்ததை விட குறும்படங்களுக்கான தளம் விரிந்துள்ளது. மறைபொருள் 2 வருடங்களில் பெற்ற கவனிப்பை நடந்த கதை ஓரிரு மாதங்களில் பெற்றுள்ளது. ஆனாலும் குறும்படத்துறை இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்.

உலகப் படங்களுக்கு எந்த விதத்திலும் குறையாமல் இருக்கின்றன உலக குறும்படங்கள். காரணம் அதற்கான முதலீடு, அதற்கான வியாபாரம், உலகம் முழுவதுமான போட்டிகளில் இருந்து கிடக்கும் விருதுகள்.

குறும்படம் எடுப்பதன் மூலம் ஒரு தயாரிப்பாளரும் இயக்குநரும் பொருளாதார ரீதியிலும் தன்னிறைவு அடைய முடியும் என்ற நிலை வர வேண்டும்.

பெரும்பாலான ஊடகங்களில் குறும்படங்களை அறிமுகப்படுத்தத் துவங்கியுள்ளனர். இது நல்ல மாற்றம்.

சாதாரண மக்களிடத்தில் குறும்படம் என்ற ஒன்று இருப்பது தெரிய வந்துள்ளது. அது பற்றிய விழிப்புணர்வெல்லாம் வரவில்லை. அது எதிர்காலத்தில் நிகழ வாய்ப்பிருக்கிறது.

10. குறும்படத் துறை வளர நீங்கள் மற்றவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் உதவி.. அல்லது இந்தத் துறையில் புதிதாக நுழைய விரும்புபவர்களுக்கு உங்களால் செய்ய முடிந்த உதவிகள் குறித்து...

நல்ல ஒரு குறும்படம் ஒரு நல்ல திரைப்படத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை.

திரைப்படத்துறை செய்ய மறந்ததை, சொல்ல மறந்ததைத் தான் குறும்படங்கள் முயற்சிக்கின்றன.

திரைப்படத் துறையில் மட்டமான படம் எடுத்த ஒருவரை, அத்துறையின் அறிவாளியாக அங்கீகரித்து, இளம் குறும்பட இயக்குநர்களுக்கு அறிவுரை வழங்க வைக்கிற போக்கை நிறுத்த வேண்டும்.

மாற்றுத் திரைப்படம், உலகத் திரைப்படங்கள் குறித்த பார்வையுள்ள இயக்குநர்களையே அதற்குத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல இலக்கியவாதிகளைக் கூட கருத்துச் சொல்ல பயன்படுத்தலாம் என்பது குறும்படத் துறை வளர மற்றவர்களிடம் நான் கேட்கும் உதவி.

புதிதாக குறும்படத்துறையில் வருபவர்களுக்கு என்னாலான உதவிகளை செய்து வருகிறேன்.

நல்ல குறும்படங்களைப் பார்க்க வைப்பதும். அவர்களின் கதை கருக்களைக் கேட்டு என் கருத்தைக் கூறுவதும். என்னாலான வழி காட்டுதல்களை வழங்குவதும் என் கடமை என உணர்ந்து செயல்படுகிறேன்.

எடுத்து முடித்த குறும்படங்களுக்கான திரையிடும் வாய்ப்பு, போட்டிகள், ஊடகத் தொடர்ப்பு போன்றவற்றை புதியவர்களோடு பகிந்து கொள்வதே என்னால் செய்ய முடிகிற, ஏற்கனவே செய்து வருகிற உதவியாகும்.

இவரது மறைபொருள் குறும்படத்தைக் காண:

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)