கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் -  அமுதா மேரி

யாழ்

 

பெண்க‌ளின் ம‌ன‌ உல‌க‌த்தையும் அவர்க‌ளிட‌ம் தலைமுறை தலைமுறைகளாக‌ உறைந்து போயிருக்கும் இயல்பான உளவியல் உள் அர்த்தங்களையும் எந்த ஒரு ஆணைக் காட்டிலும் மிக இயல்பாக பெண்களால் படம் பிடிக்க இயலும். த‌மிழ் இல‌க்கிய‌த்தில் குறிப்பிட‌த்த‌க்க‌ இட‌த்தை இன்று பெண்க‌ளால் அடைய‌ முடிந்திருக்கிற‌து.ஆனால் குறும்பட‌த்தில் இன்று பெண‌க‌ள் மிக குறைவாக‌வே உள்ள‌ன‌ர்.அதற்கான‌ ச‌மூக அமைப்பும் அத‌ன் இறுகிய‌ உள்க‌ட்ட‌மைப்பும் காரணிக‌ளாக‌ உள்ள‌ போதிலும் எந்த‌ பின்ன‌ணியும் இல்லாம‌ல் குறுப்ப‌ட‌த்தை எடுக்க‌ துணிவு உள்ள‌வ‌ர்க‌ள் சில‌ரே.அவர்க‌ளில் ஒருவ‌ர் அமுதா மேரி.

அமுதா மேரி ஒரு க‌விஞ‌ர்,ஒரு கல்லூரிப் பேராசிரியை ஒரு குறும்ப‌ட‌ இய‌க்குந‌ர் என‌ ப‌ல்வேறு அவதார‌ங்க‌ள் உடைய‌வ‌ர்.அவ‌ரின் முந்தைய குறும்படங்களுக்கும் அதற்கு பிறகான குறுப‌ட‌ங்களிலும் படைப்பு ரீதியிலானவொரு ப‌ரிமாண‌ வ‌ள‌ர்ச்சியை காண‌ முடியும். நாளைய‌ த‌மிழ்ச் ச‌மூக‌த்தின் நட்ச‌த்திர குறும்பட இயக்குநர்களில் அமுதா மேரியும் நிச்ச‌ய‌ம் இட‌ம் பிடிப்பார்.

இனி இயக்குனர் திருமிகு. அமுதா அவர்களுடன் ஒரு நேர்காணல்: 

1. தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட பெண்களின் வெற்றிடத்தை நிரப்ப இன்று நிறைய எழுத்தாளர்கள் வந்துவிட்டார்க‌ள். சினிமாவிலும் குறும்படத்திலும் இந்த வெற்றிடம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த வெற்றிடத்திற்கு எதைக் காரணமாக சொல்வீர்கள். உங்கள் பார்வையில் இன்றைய பெண்களின் நிலை என்ன?

எழுத்து உலகத்தில் பெண்கள் தங்களில் இன்றைய இடத்தை அடைவதற்கு பல சவால்களையும் பல போராட்டங்களையும் சந்திக்க நேர்ந்த பின்னே அது சாத்தியப்பட்டது. ஆங்கிலத்தில் ‘History’ என்பதை நாம் பிரித்துப் பார்த்தால் His+Story என்றும் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம். எழுத்து உலகம் ஒரு காலகட்டத்தில் ஆண்களின் உணர்வுகளை அவர்களின் வரலாறை மட்டும் பதிவு செய்கின்ற களமாக இருந்தது. பெண்களுக்காகவும் ஆண்களே மெனக்கெட்டு சிந்தித்ததையே பெண் சிந்தனையாக பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையை மாற்றி அமைக்க, தங்களின் உணர்வுகளை தங்கள் கதைகளை பெண் மொழில் சொல்ல ஒரு நீண்ட பயணம் தேவைப்பட்டது. அந்த பயணம் தொடர்ந்து கொண்டும் இருக்கிறது. இன்றைய நவீன தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பெண் படைப்பாளிகளில் கருத்து சுதந்திரம் புறையோடிப்போன சமூக கட்டமைப்பில் கேள்வி குறியாக்கப்படுவதும், கேலியாக்காப்படுவதும் அவர்களின் படைப்புகள் கடும் விமர்ச்சனத்திற்கு ஆளாக்கப்படுவதும் இன்றும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இதனையும் தாண்டி பல பெண் படைப்பாளிகள் துணிவோடு இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதே சூழ்நிலை பெண்களுக்கு ஊடக துறையில் (சினிமா, குறும்படம்) இருக்கின்றதா? என்றால் இருக்கின்றது. சற்று குறைவாக இருக்கின்றது. நீங்கள் கூறுவது போல் ஊடகத்துறையில் பெண்களுக்கான வெற்றிடம் தொடர்ந்து கொண்டிருப்பதற்கான மிக முக்கியமான காரணம் ஊடகத்துறைப் பற்றிய புரிதல், இன்னும் சொல்லப்போனால் தவறான புரிதல். ஊடகத்துறை பெண்களுக்கு ஒவ்வாத துறைபோல் கட்டமைக்கப்படுவது பெண்கள் ஊடகத்துறையில் நுழைய தடைச்செய்யும் உத்தியாகவும் இருக்கலாம். இந்த அரசியலை கட்டுடைத்தே எழுத்து துறையில் பெண்கள் சாதித்துள்ளனர். இதே நிலை ஊடகத்திலும் விரைவில் சாத்தியப்படும். லீனா மனிமேகலை, மீரா நாயர் போன்ற பல பெண்கள் ஊடகத்திலும் ஜெயித்துள்ளனர்.

ஊடக துறைக்கு எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லாத நானே குறுப்படங்கள் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கும் போது, ஊடக துறை சம்மந்தமான படிப்புகள் இன்று நிரம்ப இருக்கின்றன. அத்தகைய படிப்புகளை நிறைய பெண்களும் ஆர்வத்தோடு இன்று தேர்தெடுக்கின்றனர். அவர்களால் இன்னும் நல்ல செழுமையான படைப்புகளை தர இயலும்.

2. உங்கள் குடும்பப் பின்னனியை பற்றிச் சொல்லுங்கள். உங்கள் குறும்பட ஆர்வத்திற்கு வீட்டில் ஆதரவு அல்லது எதிர்ப்பு எவ்வாறு இருந்தது. அவர்கள் எதிர் கொண்ட நிலை என்ன?.

ஊடக துறை சார்ந்த எந்த பின்புலமும் இல்லாத குடும்பம் என்னுடையது அம்மா அரசு துவக்க பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியை, அப்பா சமூக சேவை அமைப்பின் திட்ட அலுவலர். நான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, பணிபுரிவது, வாழ்ந்து கொண்டிருப்பது வேலூரில் என் பெற்றோருக்கு நான் ஒரே மகள், நான் நானாக இருக்க நான் நினைப்பதை செயல்படுத்த இயல்பானதொரு சுதந்திர சூழல் கொண்டது என் குடும்பம், என் மீது எனக்கிருக்கும் நம்பிக்கையை விட என் பெற்றோருக்கு என் மீது நம்பிக்கை அதிகம். இதுவரை என் குறும்படங்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி வருவதும், உணர்வு சார்ந்து என்னுடனிருந்து ஊக்கப்படுத்துவதும் என் பெற்றோர் தான்.

3. உங்கள் குறும்படத்தில் பெண்களின் மன நிலையே கருப்பொருளாக உள்ளது. அவர்கள் வாழ்கை ஒரு வித சோகம் படர்ந்ததாகவே இருக்கிறது. இன்றைய நவீனத்துவ வாழ்வு ஒரு வித சுதந்திர வெளியை அவர்களுக்கு அளித்திருக்கவே செய்கிறது.உங்கள் குறும்படத்தில் வரும் பெண் குடிகாரக் கணவன் போதையில் அடிப்பதை எந்த எதிர்வினையும் இல்லாமல் வாங்கிக் கொள்கிறாள்.இன்றைய பெண்கள் அப்படி ஒரு கணவன் செய்தால் திமிராக‌ "போடா" கூடவே சிறு கெட்ட வார்த்தைகளையும் பிரயோகிப்பதையும் வலு கொண்ட மட்டும் திருப்பி அடிப்பதுமாகத் தான் நிலை உள்ள‌து.நீங்கள் காலத்தால் பின் தங்கியது போல் தெரிகிறது. இந்த விமர்சனத்திற்கான் உங்கள் பதில் என்ன?

என்னுடைய படைப்பு குறித்த உங்கள் விமர்சன பார்வை, உங்கள் கேள்வி - இதனை முழுமையாக நிராகரிக்கவும் அதே நேரத்தில் முழுமையாக ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை.

என்னுடைய படைப்புகள் நான் பார்த்து பழகிய, என்னை சுற்றியுள்ள பெண்களின் வாழ்நிலையில் என்னை அதிகம் பாதிதத்தை சராசரியாக பதவி செய்து உள்ளேன்.

முற்றிலும் நவீன நகரமும் அல்லது முழுக்க கிராமம் இல்லாத இதற்கு இடைப்பட்ட ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருப்பவள். இங்கே பல பெண்கள் நிலை இதுதான். கிராம புரத்திலும், இந்த நிலை தான் நீடிக்கின்றது. ஒருவேலை நிங்கள் குறிப்படும் சுதந்திர வெளி, நகர்புற பெண்களில் எத்தனை சதவீகிதம் இருக்கின்றது என்பதும் கேள்விகுறி.

பெண்களுக்கான சமூக அமைப்புகளோடு களப்பணியில் என்னால் இயன்றவரை இயக்கிக் கொண்டிருப்பவள் என்ற அடிப்படையில் பலதரப்பட்ட பெண்களை சந்தித்த கலந்துரையாடிய அனுபவத்தில் பெண்கள் ஆண்களுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற மனப்போக்கே இருந்து வருகின்றது. குடிகார கணவனோடு அடிப்பட்டு வாழ்ந்தாலும், கணவனோடு வாழ்வதே சமூக கௌரவம் என்ற எண்ணமும். கணவனை அதாவது ஒரு ஆண் துணையின்றி பிரிந்து வாழ்தல் பாதுகாப்பற்றது. தங்களால் இயலாதது என்ற அச்ச உணர்வோடு வாழ்கின்ற பெண்கள் நம் தமிழ் சமூகத்தில் பெரும்பளவில் உள்ளனர் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஆண்களுக்கு இயல்பாக கிடைக்கிற எதுவும் பெண்களுக்கு எவ்வளவு இயல்பாய் கிடைப்பதில்லை. இதற்கு பல தரப்பட்ட உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

தன் நிலை உணராதவர்களாய், தங்கள் நிலை நிலை உணரும் போது செயலிழந்து போகிறவர்களாய் இருக்கின்ற பெண்களின் விலிநிறைந்த எதார்த்த வாழ்வினை மிகைபடுத்தாது சொல்ல என் படைப்புகளில் முயற்சித்திருக்கிறேன்.

என் படைப்புகளில் பதிவு செய்யப்பட்ட பெண்களில் வாழ்நிலை காலத்தால் பின்தங்கியது என்று விவாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும், அப்படி ஒரு நிலை இன்றைய சூழலில் இல்லவே இல்லை என்று மறுத்து சொல்லிவிட முடியுமா?.

4. "இப்படிக்கு பேய்" குறும்படத்தில் ஒரு பெண் தன் பால்ய காலத்தின் நிகழ்ந்த வன் புணர்ச்சியாலும் திருமணமான பின் கண‌வன் கொடுமையாலும் பேய் பிடிப்பது போன்ற பிரமைக்கு ஆட்படுகிறாள். உங்கள் உளவியல் பார்வையில் அந்த மனநிலையை எவ்வாறு விவரிப்பீர்கள்?

பெண்கள் இயல்பாகவே அதிக பகிர்வு இல்லாதவர்கள் இந்த பகிர்வு இன்மையே அவர்களின் மன அழுத்தத்திற்கு காரணமாகிவிடுகின்றது. சொல்லப்படாத பாலியில் வன்கொடுமைகளுக்கும் பல தரப்பட்ட பெண்கள் பல சூழ்நிலைகளின் ஆளாகிறார்கள். குடும்ப சூழல், சமூக சிக்கல் இவர்களை பல நேரங்களில் மௌனமாக்கி விடுகிறது.

நம்முடைய சமூக அமைப்பு பெண்களின் பாலுணர்வுகளை ஒரு வித பய உணர்வை தருவதாகவே கட்டமைக்கின்றது. இந்த பய உணர்வோடு தான் பெண்கள் தங்கள் வாழ்வை கடக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய இறுக்கமானதொரு சூழலில் தங்களின் வருத்தம், பயம், கோபம் எதிர்பார்ப்பை வெளிப்படுத்த ஒரு கடத்தி தேவைப்படுகிறது. அதனை அதிகம் படித்திராத பிற்போக்கு சூழலில் வாழும் பெண்கள் பேய் பிடித்தாகவும், சாமி ஆடுவது போலவும் வெளிபடுத்த முயற்சிக்கின்றனர். இது ஒருவகையான உளவியல் சிக்கல். மனச் சிதைவு இதற்கு நிச்சியம் சமூகம் பொறுப்பேற்க வேண்டும் இதன் அடிப்படையில் உருவானது தான் இப்படிக்கு பேய்.

5. உங்கள் குறுப்படமான "திருகாணி"யில் ஒரு நடுத்தர வர்கத்தைச் சார்ந்த பெண்ணையும் "இப்படிக்கு பேய்" குறும்படத்தில் ஒரு அடிநிலை பெண்ணையும் கதாபாத்திரமாக படைத்திருக்கிறீர்கள். இக் கதைகளின் உருவாக்கப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்?

நான் பெண்கள் கல்லூரியில் வேலை பார்க்கிறேன். தினமும் 200 மாணவிகளை சந்திக்க கூடிய வாய்ப்பு. அவர்களின் சிலர் கல்லூரி படிப்பு முடியும் முன் தன் திருமண பத்திரிக்கையை கொண்டு வந்து தரும்போது, மகிழ்ச்சியோடு அவர்களின் படிப்பை குறித்த கனவு கேள்வி குறியாகும் வலியும் இருக்கும். திருகாணி உருவான காரணம் இது மேலும் 'அயிஷா' என்னும் குறு நாவலின் இறுதி வரிகளின் பாதிப்பும் திருகாணியில் இருக்கும்.

6. "இப்படிக்கு பேய்" குறும்படத்தின் ஒளிப்பதிவு மிகச் சிறிப்பாக உள்ளது. இரவு நேரக் காட்சிகளை உருவாக்கும் பொழுது நீங்கள் தொழிற்நுட்ப ரீதியாகச் சந்தித்த பிரச்சனைகள் என்னென்ன?

ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக உள்ளது என்ற தங்களின் பாராட்டிற்கு உரியர் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் மகேஷ் அவரின் முழு ஒத்தழைப்பு தான் படத்தின் சிறந்த ஒளிப்பதிவிற்கு காரணம்.

அதுமட்டுமன்றி அந்த படத்தில் அமைந்த பேய் ஒட்டும் பகுதிகள், நிஜத்தில் பேய் ஒட்டுபவர்களை வைத்து, பேய் ஒட்டும் முனி கோயிலில் சுமார் 10.00 மணிக்கு துவக்கப்பட்டு நள்ளிரவு 2.00 மணிவரை நடத்தப்பட்டது. படப்பிடிப்பின் போது என்னையும் நதியா (படத்தின் நடித்தவர்) தவிர திருமணம் ஆகாத பெண்கள் யாரும் இல்லை. அய்தீகப்படி திருமணம் ஆகாத பெண்கள் இப்படிப்பட்ட இடங்களுக்கு வருவது ஆபத்து என்று பலர் எச்சரித்தனர்.

பின்குறிப்பு : இன்று வரை எனக்கும் நதியாவிற்கும் பேய் எதும் பிடிக்கவில்லை.

7. நீங்கள் ஆங்கில இலக்கியம் கற்பிக்கும் கல்லூரிப் பேராசிரியராக இருக்கிறீர்கள். குறும்படங்களில் ஆர்வமுள்ள மாணவர்களைச் அடையாளம் காண முடிகிறதா?அவர்களின் வாசிப்புப் பழ‌க்கம் எவ்வாறு இருக்கிறது?

மாணவர்கள் வாசிப்பு பழக்கம் சொல்லும் படியாக இல்லை என்றபோதும் அவர்களிடம் புதிய தேடல் உள்ளதை மறுக்க முடியாது. எனது குறும்படங்களில் நடித்தவர்கள் அனைவருமே எனது மாணவர்கள். படப்பிடிப்பில் எனக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்ததும் எனது மாணவன் கலைவாணன் (அவருக்கும் ஊடகத்தில் அதிக ஆர்வம் உண்டு, தானும் ஒரு குறும்படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார்.) திருகாணி, இப்படிக்கு பேய் குறும்படங்களில் நடித்த நதியா எனது மாணவி, தற்போது எங்கள் கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நதியா கராத்தே, சிலம்பம் பயிற்சியும் பெற்றவர்.

8. இன்றைக்கு தமிழின் நவீன இலக்கியத்தில் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்கள் யார்?அவர்கள் படைப்புகளையும் சேர்த்து பட்டியலிடுங்கள்.

நிறைய சொல்லலாம் சமீபத்தில் படித்ததில் பிடித்தது தமிழச்சியின் ‘மஞ்சனத்தி’ வெண்ணிலா தொகுத்த திரிசடை கவிதைகள், அம்பையின் ‘காட்டில் மானி ‘அரங்க மல்லிகா, பாமா முன்வைக்கிற தலீத் பெண்ணிய அரசியலும் சுகிர்த்தராணி, குட்டிரேவதி, சல்மா முன் வைகின்ற பெண் உடல்மொழி அரசியலும் என்னை ஆச்சிரியப்படுத்தியிருக்கின்றன.

9. நீங்கள் தமிழின் பெண்ணியக் கவிஞர்களை தீவிரமாக வாசிக்கிறீர்கள். உங்கள் பெண்ணியம் சார்ந்த பார்வைகள் என்ன?வரும் காலங்களில் எடுக்கும் குறும்படங்களில் அவர்களைப் போல் துணிச்சலுடன் எதிர் அரசியலை முன் வைப்பீர்களா?

நான் பெண் என்ற காரணத்தினால் தடைகள் பல இருப்பதாய் நினைப்பதை விட நான் பெண்ணாக இருப்பதும் பெண் என்ற ஆளுமையுமே நான் ஜெயிப்பதற்கு காரணமாக உணர்கிறேன். ‘Stereotype’ பெண்களாகவே வாழ்ந்து பழகிய வாழ்நிலையை மாற்றிய சுய சிந்தனை கொண்ட பெண்களாக மாறுவதே பெண் விடுதலைக்கான வித்தாக அமையும் என நம்புகிறேன். தொடாந்து பெண் நிலை குறித்த பதிவுகளை எனக்கு தெரிந்த ஊடகமொழியில் நிச்சயம் பதிவுகளாக்க முயற்சித்துக் கொண்டிருப்பேன்.

10. இன்று சினிமாவில் சில பெண் இயக்குநர்கள் திரைப்பட‌ங்களை இயக்கினாலும் மாற்று சினிமாவை முன் வைக்காமல் மசாலாச் சினிமாவையே பிரதிநிதத்துவப் படுத்துகிறார்கள். இதை எவ்வாறு புரிந்து கொள்கிறீர்கள்?

சினிமா ஒரு கனவு குதிரை இந்த கனவு குதிரையில் பயணித்து ஜெயிக்க, அதற்கு வெற்றி என்னும் தீனி போட வேண்டியிருக்கிறது. அந்த வெற்றியை நிர்ணயப்பது ‘மசாலா’ சினிமா என்று நம்படுகின்றது. அதில் நல்ல படைப்புகள் தர நினைக்கும் படைப்பாளிகள் கூட இந்த மசாலாவில் கரைந்து விடுகின்றனர். இந்நிலையில் பெண் படைப்பாளிகள் மட்டும் மாற்று சினிமாவை முன்வைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி?

அதுமட்டுமன்று, பெண்கள் இப்படி செய்யவேண்டும்! அப்படி செய்திருக்க வேண்டும்! ஏன் அப்படி செய்தார்கள்? ஏன் இப்படி செய்யவில்லை? என்ற கேள்விகள் பெண் படைப்பாளிகள் மேல் தினிக்கப்படுவதும் பெண்கள் இதை தான், இப்படி தான் செய்ய வேண்டும் என்று நிர்ணயப்பதும், பெண் படைப்பாளிகளிடம் மட்டும் ஏன்? ஏன்று கேட்க தோன்றுகின்றது.

மாற்று சினிமாவை முன்வைக்க, நல்ல படைப்புகள் தர பெண் படைப்பாளிகள் முன்வர வேண்டும் என்ற ஆவல் ஆதங்கம் உங்களை போல் எனக்கும் உள்ளது.

11. குறும்பட‌ங்களோடு கவிதை எழுதுபவராகவும் இருக்கிறீர்கள். உங்கள் கவிதைகளில் பெரும்பான்மையாக நீங்கள் முன்வைக்கும் அழகியலும் அரசியலும் எவையெவை?

சரிநிகர் சமத்துவ சமூகம் குறித்த தேடல், சக மனுஷிக்கான சுய மரியாதை, வாழ்வை முழுமையாய் எந்த வித நிர்பந்தமின்றி வாழ்வதற்கான தனிமனிதச் சுதந்திரம். ஒரு பெண்ணாய் எனக்கான உலகம், எனக்கான அனுபவம் சமூக அக்கரை –என் வாழ்க்கை பயணத்திலும், படைப்புகளிலும் தொடர வேண்டுமென விரும்புகிறேன்.

12. இங்கு சினிமா எடுப்பவர்களின் பயிற்சி ஊடகமே குறும்படம்.உங்களுக்கும் சினிமா எடுக்கும் ஆர்வம் உள்ளதா?இல்லையென்றால் எதனால்? ஆம் என்றால் அதற்கான முயற்சிகள் எடுக்கிறீர்களா?

என்னை பொருத்த அளவில் நான் குறும்படம் எடுக்கவே எந்த பயிற்சியும் இல்லாமல் தான் முயற்சித்திருக்கிறேன். தற்போது சினிமா குறித்த தேடல் இல்லை. மாற்று ஊடகத்தில் எனக்கான இடத்தை, அங்கீகாரத்தை, இலக்கை அடைவதற்கு நான் இன்னும் அதிகமாய் தெரிந்து கொள்ளவும், உழைக்கவும், போராடவும் வேண்டியிருக்கிறது.

இவரது 'இப்படிக்கு பேய்' குறும்படத்தை காண:

http://thamizhstudio.com/shortfilms_pei.php

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)