கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் -  சங்கர் நாராயண் (கேபிள் சங்கர்)

கவிதா

 

குறும்படங்களில் அதன் குறிப்பிட்ட குறைந்த நொடிகளுக்குள் ஒரு மர்மத்தை பின்னுவது அவ்வளவு எளிதானதல்ல. மிகவும் தேர்ந்த இயக்குநராலேயே அதைச் சரியாகச் செய்திட இயலும். அத்தகைய ஒரு குறும்படம் "ஆக்சிடென்ட்" (accident). புதிதாக திருமணமான ஒருவன் தன் மனைவியுடன் சினிமா பார்க்க டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு விரைகிறான்.அப்பொழுது அவனுக்கு விபத்து நேரிடுகிறது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவனை ஒருவன் மருத்தவமனையில் சேர்க்கிறான்.

விபத்துக்குள்ளானவனை சேர்த்துவிட்டு அவனுக்கு வேண்டியவற்றைச் செய்துகொண்டு மருத்துவமனையில் இருக்கிறான். இந்த காட்சிகளின் ஊடாக புதிதாக திருமணமான பெண் ஒருத்தியின் உரையாடல் வருகிறது. அவளின் அம்மாவோடு பேசிக் கொண்டிருக்கிறாள். அன்றைய தினம் தானும் கணவனும் சினிமாவுக்கு செல்லப் போவதை மகிழ்வுடன் சொல்லிக் கொண்டுக்கிறாள். அடுத்து வரும் காட்சிகளில் வெளியில் சென்ற கணவன் வீடு திரும்பாததை எண்ணி கவலை கொள்ளத் தொடங்குகிறாள்.

கணவனுடைய செல்பேசி அலுவலகம் என தொடர்பு கொண்ட போதும் அவனைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. மிகவும் துயருற்றவளாக சோர்ந்து கணவனின் வருகைக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறாள்.பொழுது இரவாக மாறுகிறது. கணவன் பற்றிய எந்த செய்தியும் வரவில்லை. அந்த நேரத்தில் யாரோ காலிங் பெல்லை அடிக்கிறார்கள். வந்திருப்பது யார்? என்பதில் அவிழ்கிறது முடிச்சு.

மிகவும் நேர்த்தியாக கதை சொல்லப்பட்டிருக்கும் இதன் குறும்படத்தின் இயக்குநர் சங்கர நாராயணன். சங்கர நாராயண் புகழ்பெற்ற ப்ளாக்கர்களில் (blogger) ஒருவர்.

இனி குறும்பட இயக்குனர் திரு. சங்கர் நாராயண் அவர்களுடன் ஒரு நேர்காணல்: 

1. நீங்கள் குறும்ப‌டங்களிலும் சினிமாத் துறையிலும் பணியாற்றி வருகிறீர்கள். உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள். உங்கள் முயற்சிக்கு வீட்டில் எவ்வாறு ஆதரவு இருந்தது?

என் திரை துறை சார்ப்பான எல்லா முயற்சிகளுக்கும் மறைந்த என் தந்தையின் ஆதரவும், என் தாய் மற்றும் என் மனைவியின் ஆதரவும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. அது தவிர சொந்தமாக தொழில் செய்வதால் பொருளாதாரம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் கொஞ்சம் பிரச்சனையில்லாததாலும் மற்ற விஷயங்களுக்கான ஆதரவு இருக்கத்தான் செய்கிறது. என் தந்தை ஒரு நாடகக்காரர். சினிமாக்காரர். நடிகர் அவர் சாதிக்க முடியாததை என்னால் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அவர் ஆசியுடன்.

2. உங்கள் பல்வேறு அவதாரங்களைச் சொல்லுங்கள்.

அடிப்படையில் நான் ஒரு சுய தொழிலதிபர் (இந்த புண்ணாக்கு விக்கிறவன், புழுக்கை விக்கிறவனெல்லாம் தொழிலதிபர் ஆயிட்டானுங்கோ.. என்று புலம்புவது தெரிகிறது), விநியோகஸ்தர், எக்ஸிபிடர், நடிகன், எழுத்தாளர், திரைக்கதை வசனம் எழுதுபவன், குறும்பட, விளம்பர பட இயக்குனர், என்று பல துறைகளில் இருப்பது போல் இருந்தாலும். எல்லாமே சினிமா மற்றும் கலை சம்மந்தப்பட்டதாகத்தான் இருக்கும். இது வரை நூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட சீரியல்களில் கேரக்டர் ஆர்டிஸ்டாகவும், என்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சிறு கேரக்டர்களிலும் நடித்திருக்கிறேன். அது மட்டுமில்லாமல் மூன்று தொலைக்காட்சி சீரியல்களுக்கு திரைக்கதை வசனமும், ஒரு திரைப்படத்திற்கு திரைக்கதையும், கடா என்கிற ஒரு படத்திற்கு வசனமும், எழுதியிருக்கிறேன்.

தற்போது ஒரு திரைப்படத்திற்கு இணை இயக்குனராக பணியாற்றி வருகிறேன். விரைவில் திரைப்படம் இயக்கவுள்ளேன். அது தவிர இணையத்தில் தமிழில் கேபிள் சங்கர் என்கிற பெயரில் பதிவுகள் எழுதி வருகிறேன். சங்கர் நாராயண் என்கிற பெயரில் விகடன், கல்கி போன்ற பத்திரிக்கைகளில் சிறுகதைகள், மற்றும் கட்டுரைகள் எழுதி வருகிறேன். "லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்" என்கிற சிறுகதை தொகுப்பும், "சினிமா வியாபாரம்" என்கிற சினிமா தயாரித்ததற்கு பிறகு நடைபெறும் வியாபாரங்களை பற்றிய ஒரு புத்தகமும் எழுதி வெளிவந்திருக்கிறது. விரைவில் இரண்டு புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரு குறுநாவல் மற்றும் சிறுகதைகள் அடங்கிய புத்தகமும், சினிமா வியாபாரத்தின் தொடர்ச்சியும், கேபிளின் கதை என்கிற ஒரு நான் பிக்‌ஷன் நூலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

3. இதுவரை எத்தனை குறும்படங்கள் எடுத்துள்ளீர்கள். அவற்றைப் பற்றி?.

இது வரை மூன்று குறும்படங்கள் இயக்கியிருக்கிறேன். முதலாவதாக நிதர்சனம் என்கிற குறும்படம். ஃப்ரான்ஸ் நாட்டிலிருந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த டான் தமிழ் என்கிற ஒரு தமிழ் சேனலுக்காக செய்தது. இரண்டாவது நானே ஒளிப்பதிவு, எடிட்டிங், மற்றும் கட்டிங்.. ஒட்டிங் எல்லாமே செய்து தயாரித்த 5 நிமிட குறும்படம் மெளனமே.. பாலகுமாரனின் கவிதைக்கான வீஷுவல் முயற்சி, மூன்றாவதாக ஆக்ஸிடெண்ட் என்கிற ஒரு குறும்படம். பின்பு நிறைய நண்பர்களுக்கு குறும்படத்துக்கான கதை திரைக்கதையில் உதவி செய்திருக்கிறேன். அப்படி சமீபத்தில் வெளிவந்த குறும்படம் நண்பர் ரவிகுமார் இயக்கத்தின் என் கதை, திரைக்கதை, வசனத்தில் வெளிவந்த போஸ்டர் என்கிற குறும்படம். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் அவ்வாரத்திற்கான சிறந்த படமாக தேர்வு பெற்ற படமாய் விளங்கியது.

4. உங்கள் குறும்படங்களில் பணியாற்றிய சக கலைஞர்கள் பற்றி. அவர்களின் இன்றைய நிலை ?.

எனது முதல் படமான நிதர்சனத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கணேஷ் இப்போது ஒரு முக்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முதன்மை ஒளிப்பதிவாளராக பணி புரிகிறார்.அதே போல் அதில் நடித்த காதல் படத்தில் நடித்திருந்த நண்பர்.. பின்பு பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். முக்கியமாய் ஈரம் படத்தில் ஆதியின் உடன் வரும் போலீஸ்காரர். இரண்டாவது குறும்படத்தின் நாயகன் என் உதவியாளர். இன்றளவும் என்னுடன் சேர்ந்து பணியாற்றுபவர். அப்படத்தின் எல்லா பொறுப்புகளையும் நான் எடுத்துச் செய்ததால் என் நிலை பற்றி என்ன சொல்வது?:). மூன்றாவது படமான ஆக்சிடெண்ட் படத்தின் ஒளிப்பதிவாளர் செந்தில் என்னுடய நெருங்கிய நண்பர். எம்.எஸ்.பிரபுவின் உதவியாளராக இருந்தவர்.

இப்படத்திற்கு பின்பு அவர் மூன்றுபடங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். இப்படத்தில் நடித்த நடிகை ஸ்ரீ.. ஏற்கனவே மாடலிங் உலகில் இருந்தவர். பின்பு நிறைய படங்களில் நல்ல கேரக்டரிலும், ஒரு படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்

5. குறும்படம் எடுக்க அது சார்ந்த தொழில் நுட்ப அறிவு தேவை என கருதுகிறீர்களா?. குறும்ப‌ட‌ங்க‌ள் அத‌ன் வடிவில் எத்த‌கைய‌ பாய்ச்சலை ஏற்ப‌டுத்தும்?

குறும்படமாக இருந்தாலும் பெரும் படமாக இருந்தாலும் அடிப்படையில் தொழில் நுட்ப அறிவில்லாமல் வேலை செய்தால் நிச்சயம் அது நல்ல அவுட்புட்டை கொடுக்காது. அப்படி எடுக்கப்படும் பல குறும்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் குறும்படங்கள் எடுக்க ஆரம்பிப்பது ஒரு நல்ல பயிற்சி களமாகவும் அமையும். நல்ல டெக்னிக்கல் ஆர்வமுள்ள நண்பர்களை இணைத்துக் கொண்டு, ஒருங்கிணைந்து பணியாற்றி ஒரு பத்து நிமிட படத்தை எடுக்கும் போது கிடைக்கும் அனுபவம்.

நிச்சயம் பின்னாளில் ஒரு நடிகராகவோ, இயக்குனராகவோ, ஒளிப்பதிவாளராகவோ பணியாற்றியவர்களுக்கு அவர்கள் திரைப்படத்துறையில் வரும் காலத்தில் அவர்கள் செய்த குறும்படங்கள் ஒரு சிறந்த விசிட்டிங் கார்டாக உபயோகமாகும். நிச்சயம் அவர்களுக்கான வாய்ப்பை வழங்கும். அட்லீஸ்ட் ஒரு பெரிய டெக்னீஷியன்களிடம் உதவியாளராக சேரவாவது உபயோகமாகும். ஆனால் குறும்படத்தில் நிச்சயம் ஒரு குவாலிட்டி இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்.

6. குறும்படங்கள் சார்ந்து தொடர்ந்து இயங்கி வருகிறீர்கள். அதன் முந்தைய நிலையும் இன்றைய நிலையிலும் என்ன வேறுபாடுகள் இருக்கிறது.

குறும்படங்களின் பரிணாமம் நிச்சயம் வளர்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும் ஒரு நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் குறும்படங்கள் எடுக்கிறோம் என்றால் என்ன கான்செப்ட் என்று கேட்பார்கள். ஏனென்றால் குறும்படம் எடுக்க வேண்டும் என்றால் ஏதாவது ஒரு பொது நோக்கு கான்செப்ட் இருந்தாக வேண்டும் என்ற ஒரு மாய விதி அன்றிலிருந்து இன்று வரை இருக்கத்தான் செய்கிறது. முக்கியமாய், அன்றைய காலகட்ட சமுதாய நோக்கு, ஊனம், கண் தானம், ஜாதிப் பிரச்சனை, தலித், கொஞ்சம் சீரியஸ் கலை, இலக்கியம், எய்ட்ஸ், பிச்சைக்காரன், வறுமை.. மற்றும் சமூகம் சார்ந்த படங்கள் தான் குறும்படங்களாக பாவிக்கப்பட்டன.. அதனால் என் குறும்படங்கள் அத்துனையும் ஏதாவது ஒரு குட்டி விஷயத்தை எடுத்துக் கொண்டு சுவாரஸ்யமான கதை சொல்ல முயற்சிப்பேனே தவிர கருத்தை சொல்வதற்காக படமெடுத்தது கிடையாது. கருத்து சொல்வதை நான் என்று சொல்ல வில்லை..

எனக்கு ப்ரீச்சிங் பிடிக்காது அவ்வளவுதான். சினிமாவில் சொல்ல முடியாததை குறும்படங்களின் மூலம் நிச்சயம் ஆணித்தரமாக சொல்ல முடியும். ஆனால் அதே வேளையில் குறுமபடங்கள் பொது மக்களிடையே பெரிய அளவில் ரீச்சாகாமல் இருப்பதற்கு இம்மாதிரியான ஒரு டாக்குமெண்டரி தனம் கூட காரணம். அப்புற்ம் ஒரு விஷயம் என்னதான் குறும்படம் என்றும் அதை சார்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டாலும் எல்லா குறும்பட இயக்குனர்களூக்கான களம் சினிமா தான். குறும்படம் வட்டம், அதன் சார்பு எல்லாம் சுமமா ஜல்லியடிப்பதற்காக உபயோகப்படும் வார்த்தை விஷயமாகத்தான் எனக்கு படுகிறது.

7. தமிழ் நாட்டில் குறும்படங்களுக்கான களம் உள்ளதா? அதற்கான வரவேற்பு எப்படி உள்ளது?

முன்பு இருந்ததை விட இப்போது மக்களிடம் குறும்படங்களை பார்ப்பதறகான ஒரு ஆர்வம் மிகவும் அதை எடுப்பதற்கான ஆர்வம் மிகுதியாகியிருக்கிறது. டிஜிட்டல் தொழில் நுட்பம் அதை இலகுவாக்கியிருக்கிறது என்றே சொல்லலாம். யார் வேண்டுமானாலும் ஒரு டிஜிட்டல் கேமராவை வைத்து படமெடுக்கலாம் என்கிற நிலை இப்போது இருக்கிறது. தொலைக்காட்சியில் குறும்படத்துக்கான ஒரு நிகழ்ச்சியே நடக்கிறது என்று பார்க்கும் போது நிச்சயம் அதற்கான வரவேற்பு கிடைக்க ஆர்ம்பித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஒரு விஷயம் குறுமபடமெடுத்து சம்பாதிக்க இன்றளவில் விரல் விட்டு எண்ணக்கூடிய அள்வில் தன ஆட்களிருக்கிறார்கள்.

அது எப்படி என்பதை சிந்துபாத் லைலா கதை போல அவர்களுக்கு மட்டுமே வைத்திருப்பது ஆரோக்கியமானது அல்ல. அது எப்படி என்று தெரிந்தாலும் அதற்காக மார்கெட்டிங் செலவு போட்டியில் பங்கு கொள்ளும் அனுமதி கட்ட்ணம் என்று கணக்கு பார்த்தால் பட்மெடுத்த செலவை விட ஒரு மடங்காவது மிகுதியாக செலவு செய்ய வேண்டும். அப்படம் நிகழ்ச்சி நடத்தும் ஆட்களின் பார்ஷியாலிட்டிக்கு ஏற்ப விருது பணம் கிடைத்தால் உண்டு. இது வருந்ததக்க விஷயமே.. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்கிறார்கள் குறும்படம் தயாரிக்கும் இயக்குனர்கள் ஒவ்வொரு குறும்படத்திற்கும் சுமார் 25000 செலவு செய்கிறார்கள். அவர்களுக்கு இதனால் கிடைக்கப் பெறும் விஷயம் ஒன்றுமில்லை. தொலைக்காட்சியில் ஒளீபரப்பாவதை தவிர.. அதனால் நான் கல்ந்து கொள்ள முடியாது என்று விலகி வந்துவிட்டேன்.

8. திரைப்படத் துறைக்கும், குறும்படத் துறைக்கும் எத்தகைய வேறுபாடுகளை நீங்கள் உணருகிறீர்கள்?

நிச்சயம் குறும்பட துறைக்கும் திரைப்படத்துறைக்கும் வேறுபாடுங்கள் நிச்சயம் இருக்கிறது. குறும்படம் என்பதில் நமக்கு எந்தவிதமான வியாபாரத்தை வைத்தோ அல்ல.. அதனால் நாம் நினைப்பதை செய்ய முடிகிற சுதந்திரம் அதில் இருக்கிறது. ஆனால் சினிமா எனபது அப்படியல்ல.. கோடிக்கணக்கான ரூபாய் முதல் போட்டு பணம் எடுக்கும் தொழில் அதில் நாம் நம் வித்யாசமான அணுகுமுறைகளையும் காட்ட வேண்டும், அதே நேரத்தில் வெகுஜன ரசிப்புக்கு ஏற்றார்ப்போலும் செயல் பட தெரிந்திருக்க வேண்டும்.

என்ன தான் நல்ல கருத்துக்களை சொன்னாலும், அப்படம் வியாபாரரீதியாய் வெற்றி பெறாவிட்டால் அந்த கலைஞனுக்கும் வாய்ப்பிருக்காது, அதே நேரத்தில் தயாரிப்பாளருக்கும் கடும் நிதி நிலை நெருக்கடியில் போய் மாட்டிவிடுவார்கள். காம்ரமைஸுக்கு உடன் படாமல் குறும்பட துறையிலிருந்து திரைத்துறையில் சர்வைவ் செய்வது கடினம்தான்.அதனால் அதறகான மனநிலையை நாம் தயார் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

9. உங்கள் வாசிப்பு பழக்கம் பற்றி. உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள். நீங்கள் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யும் சிறந்த படைப்பு.

நான் தமிழ், ஆங்கிலம் ரெண்டு மொழிகளிலுமே வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆங்கிலத்தில், இர்விங் வாலஸ், அயன் ராண்ட், சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்ச்சர், சேட்டன் பகத் போன்றவர்களின் எழுத்துக்களை விரும்பிப் படிப்பேன். தமிழில், ல.சா.ரா., தி.ஜா, சுஜாதா, பாலகுமாரன், ஆகியோர் என் ஆதர்ச எழுத்தாளர்கள், விருப்பத்திற்குரியவர்கள். நான் வெகுவாக இவர்களை படித்துத்தான் வளர்ந்திருக்கிறேன். இவர்களை தவிர தமிழில் சிறப்பாக எழுதும் அத்துனை எழுத்தாளர்களையும் விரும்பிப் படிப்பேன். சமீபத்தில் தமிழில் நான் படித்து மகிழ்ந்த நூலகள், தமிழ்மகனின் வெட்டுப்புலி, மற்றும் தஞ்சை பிரகாஷின் சிறுகதைகள். நிச்சயம் ஒரு வித்யாசமான வாசிப்பனுபவத்தை வாசகர்களுக்கு தரக்கூடிய புத்தகங்கள். அதே போல் ஆங்கிலத்தில் சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸும், ஜெப்ரி ஆர்சரின் சிறுகதை தொகுப்பும் " And thereby hags a tale" பரிந்துரைப்பேன்.

10. நீங்கள் சிறந்த‌ blogger ஆக‌ இருக்கிறீர்க‌ள். இன்றைய‌ ந‌வீன கால‌க‌ட்ட‌த்தின் அத‌ன் முக்கிய‌த்துவ‌த்தை எவ்வாறு பார்க்கிறீர்க‌ள் ?

ப்ளாக் எனும் பதிவுலகம் எழுத நினைக்கும் அத்துனை பேருக்கும் ஒரு புதிய கதவை திறந்துவிட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சினிமாவுக்கான எழுத்தை தவிர நான் இது வரை எதையும் எழுதியதில்லை, எழுத முயற்சித்ததும் இல்லை. கடந்த இரண்ட்டரை ஆண்டுகளில் நான் பதிவுலகில் எழுத ஆரம்பித்து, பத்திரிக்கைகளில் எழுதும் அளவுக்கு என்னை வளர்த்தது இந்த ப்ளாக் உலகமும் வாசகர்களும் தான். என்னை பல இடங்களுக்கு கொண்டு போய் சேர்த்தது ப்ளாக் தான் என்பதில் சந்தேகமில்லை. ஒரு காலத்தில் ஒரு கதையோ, கட்டுரையோ எழுதிவிட்டு, அதை பத்திரிக்கைக்கு அனுப்பி, அவர்கள் பார்த்து தேர்வு செய்து அது வெளிவருமா? வராதா? என்று தெரிவதற்குள் மூன்றிலிருந்து ஆறுமாதம் ஆகிவிடும். ஆனால் பதிவுலகில் அப்படியில்லை.

நீங்கள் எழுதி அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உங்களுக்கான பாராட்டுதலகளோ, குட்டோ,, இரண்டும் அடுத்த சில நிமிடங்களில் கிடைக்கப் பெற்றுவிடுவீர்கள். இது உங்களது அடுத்த கட்ட வளர்ச்சிக்கு நிச்சயம் துணையாக இருக்கும். எதிர்காலத்தில் ப்ளாக் உலகம் ஒரு பத்திரிக்கைகளுக்கான முக்கியத்துவத்தை பெறும் என்று மனதுள் குருவி சொல்கிறது. ஏனென்றால் இதில் இருக்கும் உண்மை. இதில் எழுதுபவர்கள் அவர்கள் மனசாட்சிக்கு பிடித்த, அல்லது பிடிக்காத விஷயஙக்ளை தெளிவாக சொல்ல இடமிருக்கிறது. ஆனால் ஒரு ஆபத்தும் இருக்கிறது. கமர்ஷியலாக போனால்.. அடுத்த மீடியா மேலோங்கி வரத்தான் செய்யும்.

11. உங்கள் "accident" குறும்படம் சர்சைகள் குறித்து. அது சுஜாதாவின் சிறுகதையை அடியொற்றி எடுக்கப்பட்டிருக்கிறது என்ற விமர்சனத்திற்கு உங்கள் பதில் என்ன?.

இதில் ஏதும் பெரிய சர்சசை இருப்பதாக தெரியவில்லை. அப்படி சர்ச்சையிருந்தாலும் அதுவும் ஒரு வகையில் உண்மைதான். இரண்டுக்குமான சிமிலாரிட்டி தற்செயலாக இருக்கத்தான் செய்கிறது. நான் அந்த கதையை எழுதியது ஒரு உண்மை சம்பவத்தை, நான் சம்மந்தப்பட்ட ஒரு விபத்தை அடிப்படையாக வைத்து, அதை வைத்து நான் எழுதிய மூன்று வர்ஷன் திரைக்கதைகள் இன்றைக்கு கூட இருக்கிறது. நான் அந்த உண்மைக்கதைக்கு நல்ல சுவையான முடிவு கொடுக்க வேண்டும் என்று நினைத்த போது நிஜமாகவே சொல்வதானால் ஜெப்ரிஆர்சரின் கதை முடிக்கும் ஸ்டைலைத்தான் உபயோகப்படுத்தினேன். ஒரு திடுக்கிடும் ஸ்வீட்டான திருப்பம். அதற்கு இன்ஸ்பிரேஷன் ஜெப்ரி ஆர்சர் தான். அப்புறம் இன்னொரு விஷயம் புதிதாய் ஏதும் கதை சொல்ல முடியாது.. நானே மல்லாந்து படுத்துதான் ஒரு கதையை பிடித்தேன் என்று சொன்னால் அதை போன்ற ஒரு பம்மாத்து வேலை கிடையவே கிடையாது. எல்லோருக்கும் தனக்கோ, அல்லது கேள்விப்பட்ட, சந்தித்த நபர்களிடையே பேசும் விஷயங்கள், பார்த்த, கேட்ட, படங்கள், படித்த விஷயங்களின் பாதிப்பிலிருந்து தான் இன்னொரு விஷயம் உருவாகும். அப்படி உருவானதுதான் என்னுடய் அந்த குறும்படம்.முதலில் ஒரு வயதான தாய்க்கும், மகனுக்குமான விஷயமாய்தான் அக்கதையை திரைகக்தை எழுதியிருந்தேன். பின்பு கொஞ்சம் ஓவராக நெஞ்சை நக்கும் விதமாய் இருந்ததால் புது மனைவி என்று மாற்றினேன்.

நான் ஏற்கனவே நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், ஒரு குறுநாவல், மற்றும் இரண்டு புத்தகங்களை எழுதியவன். நான் எடுத்த மெளனமே குறுமபடத்திற்கான இன்ஸ்பிரேஷன் பாலகுமாரனின் கவிதை ஆதலால் அவருடய பெயரை அக்குறும்படத்தில் மென்ஷன் செய்திருப்பேன். அப்படியிருக்க என் ஆதர்ச எழுத்தாளரான சுஜாதாவிடம் ஏற்கனவே ஒரு சிறுகதையை குறும்படமெடுக்க அனுமதி வாங்கி இதுவரை எடுக்கவேயில்லை. எந்தவிதமான கேள்வியும் இல்லாமல் குறுமபடமா? நல்லா எடுங்க.. அந்த கதையை எடுக்கறதுக்கு ஏதாவது ஐடியா வேண்டுமென்றால் சொல்லுங்க என்று ஆத்மார்த்தமாக பேசி அனுப்பியவர். அப்படியிருக்க தெரிந்தே அவரின் கதையை அடியொற்ற எனக்கு அவசியமேயில்லை.

12. நீங்க‌ள் ஒரு சிறுக‌தை எழுத்தாள‌ரும் கூட‌ . உங்க‌ள் க‌தை மாந்த‌ர்க‌ளின் உள‌விய‌ற் கூறுக‌ளை எவ்வாறு க‌ட்ட‌மைக்கிறீர்க‌ள். உங்க‌ளைச் சுற்றி உள்ள‌வ‌ர்க‌ள் க‌தை மாந்த‌ர்க‌ளா இல்லை உங்க‌ள்
க‌ற்ப‌னைக் க‌தாபாத்திர‌ங்க‌ளா ?

என் கதை மாந்தர்களின் உளவியர் கூறுகளை என்னை சுற்றியுள்ள, அல்லது கேள்விப்பட்ட கேரக்டர்களை வைத்துத்தான் கதை மாந்தர்களை சித்தரிக்கிறேன்.என்னை பாதிக்காத எந்த விஷயத்தையும் என்னால் எழுத முடியாது. ஏன் யாருமே எழுதவும் மாட்டார்கள். அப்படி எழுதினால் அது அவர்களின் சிறந்த படைப்பாக வராது. என்னை பொறுத்த வரை கதைக்காக எங்கும் அலைய வேண்டாம் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களை, அல்லது கேட்கும் சம்பவங்களோடு கொஞ்சம் கற்பனை கலந்தால் நிச்சயம் ஒரு சிறந்த கதைகள் உருவாக்க முடியும். என்பது என் எண்ணம். அதைத்தான் நானும் முயற்சித்து கொண்டிருக்கிறேன். வெற்றி பெற்றுள்ளேனா? இலலையா என்பதை வாசகர்கள் தான் சொல்ல வேண்டும்.

13. நீங்க‌ள் சினிமா ச‌ம்ப‌ந்த‌மாக‌ இரு புத்த‌க‌ங்க‌ள் எழுதியிருக்கிறீர்க‌ள். குறும்ப‌ட‌ங்க‌ள் சினிமா துறைக‌‌ளில் நுழைய‌ விரும்புப‌வ‌ர்க‌ளுக்கு சில‌ துணுக்குக‌ள் கொடுங்க‌ளேன்?

சினிமா துறை சம்பந்தமாக ஒரு புத்தகம் தான் எழுதியிருக்கிறேன். அது சினிமா வியாபாரம். ஒரு சினிமா தயாரித்ததற்கு பிறகு எப்படி வியாபாரம் ஆகிறது எனபதை பற்றிய புத்தகம். வெளியான ஒரே மாதத்தில் அடுத்த ரீபிரிண்டுக்கு வந்த புத்தகம். நிச்சயம் சினிமாவின் வியாபாரங்களை புரிந்து கொள்ள ஆர்வமிருப்பவர்களும் சரி.. வெளியிலிருந்து ஆர்வத்துடன் பார்பவர்களுக்கும் சரி ஒரு சுவையான புத்தகமாய் அமையும். இன்னொரு புத்தகம் என் சிறுகதை தொகுப்பு. மிகவும் காண்டர்வர்ஸியலான விஷயஙக்ளை முக்கியமாய் உளவியல் சார்நத, பாலியல் சார்ந்த கதைகள் அவை.

பெரும்பாலும் குறும்படம் எடுக்க விருப்பப்படும் நபர்கள் சினிமாவில் நுழைய துடிப்பவர்கள்தான். அப்படியிருக்கும் பட்சத்தில் நிச்சயம் ஒரு ஐந்து பத்து நிமிடங்களில் ஒரு சுவாரஸ்யமான கதையை நிச்சயமாய் கருத்து சொல்ல வேண்டும் என்பதற்காக கதையை அமைக்காமல், ஒரு குட்டி ஹைக்கூவாகக் கூட இருக்கலாம். சுவையான திரைக்கதையமைத்து சொல்ல பழக வேண்டும். அதற்கு நிறைய திரைப்படஙக்ளை பார்த்தும், அதை பற்றி விவாதித்தும், நிறைய கதைகளை திரைக்கதைகளாய் எழுதியும், நிறைய படிக்கவும் கற்றுக் கொண்டால் அதன் கட்டமைப்பு புரிய ஆரம்பிக்கும் என்பது என் நம்பிக்கை. குறும்படமோ.. சினிமாவோ.. எல்லாவற்றிலும் என்னதான் டெக்னாலஜி அது இது என்று சொன்னாலும், குறும்படம் ஆரம்பித்த அடுத்த சில நொடிகளில் கதைக்குள் பார்க்கும் ஆடியன்சை இழுக்க வேண்டும், சினிமாவுக்கு முதல் அரை மணிக்குள் என்பது என் நம்பிக்கை அதைத்தான் நான்பின்பற்ற நினைக்கிறேன்.

இவரது குறும்படத்தைக் காண:

http://cablesankar.blogspot.com/2007/12/blog-post.html


இந்த குறும்படத்தின் திறனாய்வைக் காண:

http://thamizhstudio.com/shortfilm_review_7.php


படைப்பாளிகள் பயணிப்பார்கள்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)