கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் -  ஸ்ரீகணேஷ்

கதிர்வேல்

 

குறும்படம் என்றால் கூட அதிலும் பிரம்மாண்டம் காட்டி தன்னுடைய வெள்ளித்திரை வாயிலுக்கு நுழைவு சீட்டாக பயன்படுத்திக் கொள்ளும் கோடம்பாக்க ஆளுமைகளுக்கிடையில் இருக்கிற வசதிகளை வைத்துக் கூட, இந்த சமூகத்துக்கு தேவையான ஒரு விடயத்தை அதன் வழியே ஆவணப்படுத்த இயலும் என்று சாத்தியப்படுத்தி இருக்கிறார் குறும்பட இயக்குனர் ஸ்ரீகணேஷ். தன்னுடைய படைப்பின் மூலம் எளிய மக்களின் அன்பை, அவர்களின் வலியை, தன்னுடைய கேமெராக் கண்களால், குறும்படப் பேனாவால் கொஞ்சமாக செதுக்கி இருக்கிறார். சிற்சில தொழில்நுட்பக் குறைபாடுகள் இருந்தாலும், அதெல்லாம், இருப்பதை வைத்துக் கொண்டு அகப்பையில் ஆவின் பாலைத் தேடும் கண்மூடித்தனம்தான். தன்னளவில் சொல்ல வந்த கருத்தை அந்தப் படைப்புக்கு நேர்மையாய் சொல்லி இருக்கிறார். இருந்தாலும், அனைத்துக் காட்சிகளிலும், கதாப்பாத்திரத்தை விடுத்து அதன் பின்னணியை போகஸ் செய்து பார்வையாளர்களை கொஞ்சம் களைப்படையவே செய்கிறார். முதல் படைப்பு என்பதால் முற்றிலும் நிராகரிக்க முடியாத படைப்பாகவே "வீதி இலக்கியத்தை" கொடுத்திருக்கிறார் ஸ்ரீகணேஷ்.

இனி குறும்பட இயக்குனர் ஸ்ரீகணேஷ் அவர்களுடன் ஒரு நேர்காணல்: 

1) முதலில் உங்களின் சுயவிவரத்தைபற்றி கூறுங்களேன்?

சினிமாவை நேசிக்கும், சினிமாவே எல்லாமுமாக நினைக்கும் இளைஞர் கூட்டத்தில் நானும் ஒருவன். கும்பகோணத்தில் பிறந்து, சென்னையில் வளர்ந்தேன். டூரிங் டாகீசில் படம் பார்க்க துவங்கி, பின்பு மெல்ல சினிமாவை ஆழமாக புரிந்து கொள்ளத் துவங்கி இன்று சாப்ளினையும், ஜான் ஆபிரகாமையும் கொண்டாடும் அளவுக்குக் கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன். சாகும் வரை சினிமாவை நேசிக்கும் ஒருவனாகவே இருக்க ஆசைப்படுகிறேன். தமிழ் ஸ்டுடியோவின் படிமை வகுப்பில் தற்போது டைரக்ஷன் பயின்று வருகிறேன்.

2) வீதி இலக்கியமென்று தலைப்பு வைத்துள்ளீர்கள், ஆனால் குறும்படத்தில் அரசியலை நேரிடையாகவே விமர்சித்துள்ளீர்கள் இதுகுறித்து உங்கள் கருத்து?

அரசியல் இங்கு விமர்சிக்கப் பட வேண்டியதாக இருக்கிறது. 5 ஆண்டுகளுக்கான அறுவடை நேரம் தேர்தலால், அரசியல் சூழல் மிக மிக மோசமாக உள்ளது. அதை கொஞ்சம் கோபமாகவே பேச வேண்டியக் கட்டாயத்தில் இருக்கிறோம். எளிய மக்களுக்கு இதை எடுத்துச் சொல்ல வேண்டுமெனில் கொஞ்சம் நேரடியாகத் தான் பேச வேண்டும். மாற்று சினிமா பற்றி நிறையப் பேசி, விவாதித்து வருகிறோம். மாற்று அரசியலுக்கான விவாதமும், விழிப்புணர்வும் தற்போது மிக மிக அவசியமானது.

3) உங்கள் குறும்படத்தில் கொஞ்சம் தொழில்நுட்ப குறைகள் உள்ளதே ?

இந்த விமர்சனத்தை முழு மனதோடு ஏற்றுக் கொள்கிறேன். அதற்கான முழு பொறுப்பையும் இயக்குனர் என்ற முறையில் முழுமையாக ஏற்கிறேன். காரணம் என்னவெனில், இப்படத்தில் பணியாற்றிய அனைவருமே புதியவர்கள். இப்படத்தின் output -ஐ பார்த்து தான், எங்களை நாங்களே மதிப்பீடு செய்கிறோம். 'Wide angle ' ரவிஷங்கர் சார் மிகச் சிறந்த கலைஞர். அவர் இந்தக் குறையை குறும்பட வட்டத்தில் சுட்டிக் காட்டிய போதும் முழுமையாக பொறுபேற்றுக் கொண்டேன். அன்றிரவு முழுதும் சரியாகத் தூங்க முடியவில்லை. எங்கே தவறு செய்தோம் , எப்படி திருத்திக் கொள்வது என யோசித்துக் கொண்டே இருந்தேன். அடுத்த படத்தில் இக்குறை நிச்சயம் இருக்காது.

என் படத்தின் ஒளிப்பதிவாளர் திரு.பிரசாத் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவர் மட்டும் இலவசமாக கேமரா கொடுத்து, ஒளிப்பதிவும் செய்து தராவிட்டால் என்னால் இப்படத்தை எடுத்திருக்கவே முடியாது. இப்படத்தின் இசை என் நண்பன் நரேன். நிறைய குறும்படங்களுக்கும் விளம்பரப் படங்களுக்கும் இசை அமைத்திருக்கிறான். தற்போது ஒரு ஆல்பம் இசை அமைத்துக் கொண்டிருக்கிறான். மிகச் சிறந்த இசை அமைப்பாளராய் வருங்காலத்தில் வருவான்.

4) அரசியலையும், மனிதநேயத்தையும் ஒன்றாக சொல்வதனால் நீங்கள் சொல்லவரும் நோக்கம் தடைபடுவது போல் இல்லையா?

மக்கள் அனைவரின் மீதான மனிதநேயம் தானே அரசியல்!! மக்களை நேசிக்காத, மக்களைப் பற்றியே யோசிக்காத அரசியலால் தான் நாடே இப்படி இருக்கிறது. நான் இக்குறும்படத்தில் சொல்ல முயற்சிப்பதும் அது தான்.

அன்பும் மனிதமும் மட்டுமே இவ்வுலகத்தை வழி நடத்திச் செல்ல கூடியது. அது எளிய மக்களிடம் நிறைய உள்ளது. என் படைப்புகள் அனைத்தும் எளிய மக்களைப் பற்றிப் பேச வேண்டும் என உறுதியாய் இருக்கிறேன். நமது கல்வி முறை கூட சுயநலத்தை வளர்த்தெடுப்பதிலேயே குறியாய் இருக்கிறது. மக்களை சிந்திக்க விடாமல் செய்வதில், thinking space தராமல் இருப்பதில் ஊடகங்களும், முதலாளித்துவ சக்திகளும், அரசியல் கட்சிகளும் குறியாக இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் தான் நாம் மிகக் கடினமாக உழைத்து அன்பையும் மனிதத்தையும் பேச வேண்டியிருக்கிறது.

5) முதல் குறும்படத்திலேயே அரசியலை கருவாக எடுத்துள்ளீர்கள், காரணமேதும் உண்டா?

நாம் நிறையப் படிக்கிறோம், ஓரளவு சமூகத்தில் இயங்குகிறோம். நம்மைக் கலைஞர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறோம். அதற்கான நியாயத்தை நம் படைப்புகளில் செய்ய வேண்டும். பெரும்பான்மை சமூகம் தன்னுடைய அடிப்படைத் தேவைகளுக்காகவே ஓடிக் கொண்டிருக்கிறது. சிந்திப்பதற்கும், மனிதர்களை வைத்து உலகெங்கும் நடக்கும் முதலாளித்துவ வியாபாரமும் அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அதை சொல்ல முயற்சிக்க வேண்டும் இல்லையா? நான் அறிந்ததை, உணர்ந்ததை சொல்லியிருக்கிறேன், சில தொழில்நுட்பக் குறைகளுடன்.

6) குறும்படத்துறையில் உள்ளவர்கள் சினிமாவில் நுழைவதர்காகவே குறும்படம் இயக்குவதாக ஒரு கருத்து நிலவுகிறதே?

உண்மை தான். குறும்படம் எடுக்க வந்திருக்கும் எனது லட்சியமும் சினிமாவாகவே இருக்கிறதே... உண்மையில் தமிழ் ஸ்டுடியோவிற்கு வரும் வரை எனக்கு கூட குறும்படத் துறையின் அறம் பற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை. அஜயன் பாலா கூட சொன்னார்.. குறும்படத்தின் நோக்கம் சினிமா வாய்ப்பையும் தாண்டி மிக உன்னதமானது என்று. குறும்படம் பற்றி நிறைய விவாதிக்க வேண்டியிருக்கிறது. நிறைய நல்ல குறும்படங்கள் எடுக்க வேண்டியிருக்கிறது. நடந்த கதை, மறைபொருள், திற, விளையாட்டு, knock out , ராமையாவின் குடிசை போன்ற படங்களை பாருங்கள். பிறகு குறும்படத்தின் உன்னதமும் வீச்சும் புரியும்.

7) தமிழ் இலக்கியங்கள் மற்றும் உலக இலக்கியங்கள் குறித்து உங்கள் கருத்து?

தற்போது தான் நானும் வாசிப்பின் வாயிலில் இருக்கிறேன். இலக்கியத்தில் யாருமே எல்லாம் அறிந்தவர்கள் என சொல்லிக் கொள்ள முடியாது. முடிந்த வரைப் படியுங்கள். இலக்கிய வாசிப்பு சிந்தனையை ஆழமாக்குகிறது, மனதைப் பண்படுத்துகிறது. புத்தகங்கள் வாங்க காசில்லாத காலங்களில், நூலங்களிலும், லேண்ட்மார்க் போன்ற கடைகளில் பல மணி நேரம் நின்று கொண்டே வாசித்திருக்கிறேன். காசில்லாத காரணத்தால் என்னால் மிகச் சிறந்த புத்தகங்கள் அனைத்தையும் வாசிக்க முடியவில்லை. தற்போது படிமை நண்பர்களுடன் இணைந்து நிறைய வாசித்து வருகிறேன். படிமை நண்பர்களுக்கு இந்த இடத்தில் மனதார நன்றி தெரிவிக்கிறேன்.

8) கலைத்துறையில் உள்ளவர்களுக்கு இலக்கியவாசிப்பு அவசியமா, ஏன் எதற்கு?

நிச்சயம் அவசியம் என்பேன். வாசிப்பும் அறிவுமே சிறந்த படைப்புகளுக்கான எரிபொருள். என் முன்னோர்களின் படைப்பைப் படிக்காமல், அவர்களின் வாசனை இல்லாமல் நான் படம் எடுத்து என்ன செய்யப் போகிறேன். 100 ரூபாய் கொடுத்து படம் பார்க்கும் ரசிகனுக்கு சொல்ல என்னிடம் என்ன இருக்கிறது.. கலர் கலராய் பாட்டு, காது கிழியும் பைட்டு என மட்டுமே படமெடுப்பது நியாயம் அல்லவே... அழியா சுடர்கள், உலக இலக்கியம் (www. http://azhiyasudargal.blogspot.com)போன்ற இணையதளங்களை நேரம் கிடைக்கையில் வாசித்துப் பாருங்கள். எஸ்.ரா, புதுமைப்பித்தன், சுஜாதா, டால்ஸ்டாய் போன்றவர்களை அவசியம் படியுங்கள்.

9)அரசியலை குறும்படமாக்கிய உங்களுக்கு இன்றைய மத்திய மாநில அரசின் வாக்குறுதிகள் சாதாரண குடிமகனின் வாழ்வாதார பிரச்சினையை தீர்க்க பயன்படுமா?

தொலைக்காட்சியில் தேர்தல் பிரச்சாரங்களைக் காணும் போது வேதனையாக இருக்கிறது, சிரிப்பும் வருகிறது. இந்த மக்கள் மேல் இவர்களுக்கு துளியும் அக்கறை இல்லையே எனக் கோவமும் வருகிறது. தமிழக மக்கள் மிக்சியோ, fan -ஓ வாங்க முடியாத அளவு பரம ஏழைகளல்ல. ஆயினும் ஒரு மிக்சிகாகவும், கலர் டிவிகாகவும் ஓட்டு போடுவதைப் பார்க்கையில் வருத்தமாக இருக்கிறது. படித்த நடுத்தர வர்க்கமும் இதை செய்வது தான் மன்னிக்க முடியாத குற்றம். 'படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான், ஐயோன்னு போவான்' எனும் பாரதியின் வரி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

10) குறும்படம் இயக்கியதன் மூலம் பெற்றது, இழந்தது?

பெற்றது புதிய நண்பர்களும், நிறைய அனுபவங்களும். என்னைக் கேட்டால் இயக்குனராக நினைக்கும் அனைவரும் குறும்படங்கள் இயக்கிப் பழக வேண்டும். ஒரு குறும்படம் இயக்கி சில தவறுகள் செய்த பிறகு தான், என்னால் இயக்குனர் என்னும் ஆளுமையையே உணர முடிகிறது. எனவே நீங்களும் பயிற்சி செய்யுங்கள் தோழர்களே!!

இழந்தது என்னிடமிருந்த நிறைய அறியாமையை.. ஒரு படைப்பின் பின் இருக்கும் பெரிய உழைப்பை, அதன் பல்வேறு கூறுகளை புரிந்து கொண்டேன். கேமரா, எடிட்டிங், டப்பிங், இசை என எவ்வளவு பணிகள். ஒரு படத்தைப் பார்த்து விட்டு மிக எளிதாக விமர்சிக்கிறோமே எனப் புரிந்து கொண்டேன்.

11) குறும்படத்துறையில் உள்ளவர்களுக்கும் வருங்கால குறும்பட இயக்குனர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

உலகத்தில் எல்லா மாற்றங்களுமே கடின உழைப்பால் தான் சாத்தியபட்டிருக்கின்றன. பணம் மட்டுமே இங்கு வெற்றியை தீர்மானிபதில்லை. கடினமாக உழைப்போம் வாருங்கள் தோழர்களே.. நிறையப் படியுங்கள். மக்களை நேசியுங்கள். நல்ல படைப்புகள் நம்மிலிருந்து நிச்சயம் வெளிவரும்.

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)