கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
  காணொளி TS படைப்பாளிகள் TS கட்டுரைகள் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
   
     
 

 

 

 

 

 

 

 

 
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் -  அம்ஷன் குமார்

கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி  

வணிகம் சில நேரம் தன் கொடூர ரூபத்தை வெளிப்படுத்தி சில படைப்புகளையும் படைப்பாளிகளையும் மறைத்துவிடுகிறது. ஆனால் காலம், தன் பெருவெளியில் அவர்களை மீண்டும் கொண்டு வந்து இச்சமூகத்தின் முன் நிறுத்திவிடுகிறது. மக்களுக்கான படைப்புகளை மறைப்பது தன்னாலும் சாத்தியமில்லை என்று காலம் உணர்ந்தே இருக்கிறது.

ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் ஒரு குழந்தை ஒளிந்திருக்கிறான். தன் படைப்புகளை பற்றி மற்றவர்கள் பேச வரும்போது, அவன் குதூகலிக்கிறான். இயக்குநர் அம்ஷன் குமாரை நான் சந்திக்க சென்ற போது, அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே ‘என் படங்கள் ஏதேனும் பார்த்திருக்கிறீர்களா’ என்பதுதான். ‘பார்த்திருக்கிறேன்’ என்று நான் சொன்னவுடன் பெருமகிழ்ச்சியுடன் கேள்விகளை எதிர்கொண்டார். ஒருவரின் பதில்களின் மூலமே அவர்களது ஆளுமையை உணர முடியும். நான் உணர்ந்த அம்ஷன் குமாரின் ஆளுமையை நீங்களும் உணருங்கள்...

முதன்முதலில் எப்போது சினிமாவை நோக்கி ஈர்க்கப்பட்டீர்கள் ?

திருச்சியில் நேஷனல் கல்லூரியில் வணிகவியல் படித்தேன். கல்லூரி படிக்கும் போதே இலக்கியத்தில் ஆர்வம் இருந்தது. இலக்கியத்தைத் தாண்டி, திரைப்படங்கள் மேலும் அப்போது ஆர்வம் எழுந்தது. ஆனால் இலக்கியம் மற்றும் திரைப்படங்கள் குறித்த ஒரு குழு கல்லூரியில் அமையவில்லை. கல்லூரிக்கு வெளியே ஒத்த வயதுடைய ஒத்த ஆர்வமுடைய 10 நண்பர்கள் அனைவரும் இணைந்து, ‘திருச்சி வாசகர் அரங்கு’ என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தினோம். அந்த அரங்கில் அப்போது வரும் சிறுபத்திரிக்கைகளான கனையாழி, ஞானரதம் போன்றவற்றில் வரும் சிறுகதைகளை பற்றிய விவாதங்கள் நடைபெறும். ஒரு எழுத்தாளரின் சிறுகதை புரியவில்லையென்றால், அதையே மீண்டும் மீண்டும் படித்து விவாதிக்கும் பழக்கம் அங்கே இருந்தது. அதே போல், ஒரே எழுத்தாளரின் கதைகளை தொடர்ந்து நான்கைந்து வாரங்களும் படிப்போம், விவாதிப்போம். இந்த காலகட்டங்களில் எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் படிப்போம். புதுமைப்பித்தன், ஜானகிராமன், அசோகமித்திரன் என்று அனைவரின் எழுத்துக்களையும் படிப்போம். அப்போதிருந்தே அசோகமித்திரன்மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது.

பின்பு நாங்களே ‘இன்று’ என்று ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து அதில் கதைகளை எழுதினேன். அதன் பின், தினமலரில் என் கதைகளை வெளிவர ஆரம்பித்தன. பின் ஒரு நாள் அசோகமித்திரனை சந்தித்த போது அவர், ‘எழுத்து வேண்டாம். என் புத்தகங்களே வாங்குவதற்கு ஆள் இல்லாமல் எலி கடித்துக்கொண்டிருக்கின்றன. நீ சீக்கிரம் எழுதுறத விட்ருவ பாரு’ என்றார்.

பின்பு ‘திருச்சி சினி ஃபோரம்’ என்ற அமைப்பு துவங்கினோம். ‘மெட்ராஸ் பிலிம் சொசைட்டி’க்கு பிறகு, தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது திரை அமைப்பு இதுதான்.

இதன் மூலம் உலகின் பல மூலைகளில் எடுக்கப்பட்ட படங்களை பார்ப்போம். ஒவ்வோர் படங்களை பற்றியும் நான் ஒரு தாளில் குறிப்பு எழுதி வைத்துக் கொள்வேன். பின்பு நண்பர்கள் அந்த படங்களைப் பற்றியும் விவாதிப்போம். பின்பு இது போன்ற நல்ல திரைப்படங்களை விலைக்கு வாங்கி, திருச்சி ஜீபிடர் தியேட்டரில் திரையிட்டோம். டிக்கெட்டுகளை எல்லாம் நாங்களே மக்களிடம் கொண்டு சென்று விற்று, சில காலம் இது போன்ற நல்ல படங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டோம். ஆனால், மக்களிடம் இதற்கு ஆதரவு கிடைக்கவில்லை.

அதன் பிறகு நண்பர்கள் கூடி ஒரு படத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதைப் பற்றி பேசுவோம். அப்போது, திரைப்படங்களைப் பற்றியோ, முக்கியமாக திரைப்பட ரசனை பற்றியோ புத்தகங்கள் நிறைய வராது. நாங்களே திரைப்பட ரசனை குறித்து விவாதிப்போம்.

கல்லூரி காலத்திற்கு பிறகும் இது போன்ற முயற்சிகள் நடந்தனவா ?

ஆம். இதற்கிடையில் ஆங்கில இலக்கியம் பயின்று, கோவையில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கும் நண்பர்களோடு இணைந்து ‘தர்ஷனா பிலிம் சொசைட்டி’ என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். அங்கும் நல்ல படங்களை திரையிடுதல், விவாதித்தல் தொடர்ந்து நடைபெற்றது. அதன் பின் சென்னை வந்து எழுத ஆரம்பித்தேன். சினிமா மேல் இருந்த ஆர்வம் முதலில் எழுதுவதில்லை இல்லை.


சினிமா ரசனை குறித்த எந்த புத்தகமும் தமிழில் இல்லாதது கண்டு, ‘சினிமா ரசனை’ என்ற புத்தகத்தை எழுதினேன். இதற்கு கல்லூரி காலத்தில் உலக சினிமாக்களை பற்றி எழுதியிருந்த குறிப்புகள் மிகவும் உதவியாய் இருந்தது. திரைப்படம் எடுப்பதைக் காட்டிலும் திரைப்படத்தை புரிந்து கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும். மக்களுக்கும் அது வேண்டும் என்று நினைக்கிறேன். ரசனை வளர்ந்தால் தான் நல்ல படங்களுக்கு வரவேற்பு கிடைக்கும். அதனால் தான் இந்த புத்தகத்தையே எழுதினேன். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 80 இல் எழுதிய, ‘எழுத்தும் பிரக்ஞையும்’ என்ற புத்தகத்திற்கு பிறகு, 90 இல் தான் ‘சினிமா ரசனை’ எழுதினேன்.

மாற்று சினிமாவிற்கான முதல் விதை எப்போது விழுந்தது ?

மாற்று சினிமாவிற்கான முதல் விதை என்றால், மெயின்ஸ்ட்ரீம் படங்களை பார்த்துதான் வந்தது. அதுவும் ஆங்கிலப் படங்களை பார்த்துதான் வந்தது.திருச்சியில் ப்ளாசா, அருணா என்று இரண்டு தியேட்டர்கள் இருந்தது. இரண்டிலும் ஆங்கிலப் படங்கள் தான் போடுவார்கள். இதில் என்ன படங்கள் போட்டாலும் நான் பார்ப்பேன். குறிப்பாக காலைக்காட்சி தவறாமல் பார்ப்பேன். ஏனென்றால் மற்ற காட்சிகளை விட காலைக்காட்சிக்கு கட்டணம் குறைவு. அதனால் காலைக் காட்சியை தவற விடுவதே இல்லை. வாராவாரம் இதே போல் தொடர்ந்து ஏழெட்டு வருடங்கள் பார்த்திருக்கிறேன். அப்படி பார்த்த ஆங்கிலப் படங்கள் என்னை ஆச்சர்யப்படுத்தின. தமிழ் படங்கள் போல் கதாநாயக வழிபாடு இல்லாமல், ஒரே மாதிரியான கதைகளை எடுக்காமல் வெவ்வேறு விதமான களங்களில் அங்கே படங்கள் படைக்கப்பட்டன. நாயகன் இறப்பது, நாயகியின் சாகசங்கள் என்று தமிழ் சினிமாவில் காண முடியாத பல விஷயங்களை நான் ஆங்கிலப் படங்களில் கண்டேன்.

மிக முக்கியமாக இலக்கியங்கள் அங்கே அதிக அளவில் படமாக்கப்பட்டன.ஹாலிவுட்டைப் பற்றி நாம் எவ்வளவு குறைகள் சொன்னாலும் இந்த விஷயத்தில் நிச்சயம் அவர்களை பாராட்ட வேண்டும்.கதைகள்,நாவல்கள்,நாடகங்கள்,வாழ்க்கை வரலாறுகள் ஆகியவை அங்கே மெயின்ஸ்ட்ரீம் படமாக்கப்பட்டன.இவை எனக்கு அந்தப்படங்களின் மேல் இன்னும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. பிறகு வேறு சில உலக சினிமாக்களை பார்த்த போது, ஆங்கிலப் படங்களில் இருக்கும் சமரசங்கள் கூட இல்லாமல், சினிமாவை ஒரு மொழியாக, பார்த்து உணர்ந்து புரிந்துகொள்ளக்கூடிய ஒரு கலையாக கையாளப்பட்டிருந்தது புரிந்தது.ஆங்கிலப்படங்களில் சாகசங்களைப் பார்க்க முடிகிறது என்றால், குரேசேவா போன்றவர்களின் படங்களில் வாழ்க்கையை பார்க்க முடிந்தது. இங்குதான் மாற்று சினிமாவிற்கான விதை என்னுள் முதலில் விழுந்தது.

சினிமாவை நோக்கிய உங்கள் பயணம்?

அது மிகவும் தற்செயலாக நடந்தது. எப்படி எழுதுவதில் எனக்கு மிகுந்த ஈடுபாடு இல்லாமல் இருந்ததோ, அதே போல் படம் பார்ப்பதில் இருந்த ஆவல், படம் எடுப்பதில் இல்லை. ஆனால் படைப்பாளிகளைக் கண்டால் நிறைய விவாதிப்பேன், பேசுவேன். இக்காலத்தில் விளம்பரப் படங்கள் பெரிய அளவில் வளர்ந்து கொண்டிருந்தது. அப்போது நண்பர் ஒருவர் வேஷ்டி விளம்பரம் ஒன்றிற்கான கருவை சொன்னார். அப்போது நான்,‘இதில் காட்சி ரீதியாக ஒன்றும் இல்லையே. வேறு மாதிரி எடுக்கலாமே’ என்று சொன்னேன். ‘சரி நீங்களே ஒரு கருவை சொல்லுங்கள்’என்று சொல்லி அவர் சென்று விட்டார். நான் இரண்டு நாட்களுக்கு பிறகு ஒரு கருவை சொன்னேன். அது அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

இக்காலத்தில் ‘சினிமா ரசனை’ புத்தகமும் வெளியே வந்துவிட்டது. அப்போது நான் சினிமாவை பற்றி தியரிட்டிக்கலாக மிகவும் வலிமையாக இருந்தேன். பிரிட்டிஷ் கௌன்சில்,அமெரிக்கன் எம்பஸி,அலயன்ஸ் பிரான்சிஸ் இதில் இருக்கும் சினிமாவைப் பற்றிய அத்தனை புத்தகங்களையும் படித்திருந்தேன். சினிமாவை பற்றி ஆழமாக பேசக்கூடியவனாகவும் இருந்தேன். இதையெல்லாம் பார்த்த உடனே எனக்கு சினிமா எடுக்கத் தெரியும் என்று அவர்களாகவே நினைத்துக்கொண்டு நீங்களே படத்தை எடுத்துக்கொடுங்கள் என்று சொல்லிவிட்டனர்.

எனக்கும், சரி எடுத்துப் பார்ப்போம் என்று ஒரு ஆவல். உடனே ஒரு ஸ்டோரிபோர்டு தயார் செய்து கொண்டு படப்பிடிப்புக்கு கிளம்பிவிட்டேன். 1991 இல் என் முதல் விளம்பரப் படத்தை எடுத்தேன்.

முதல் நாள் ஷீட்டிங்கின் போது நடந்த சுவாரசியமான அனுபவம்?

சினிமாவில் டைரக்டர், ‘ஸ்டார்ட் கேமரா‘ என்று சொல்ல வேண்டும். அதற்கு ஒளிப்பதிவாளர் ‘ரன்னிங்’ என்று சொல்லுவார். பிறகுதான் டைரக்டர், ‘ஆக்சன்’ என்று சொல்ல வேண்டும். ஆனால் எனக்கு இதெல்லாம் தெரியாது. நான் வேகமாக ‘ஸ்டார்ட், கேமரா, ஆக்சன்’ என்று சொல்லி விட்டேன். எல்லாரும் முழிக்கிறார்கள். ஆனால் டைரக்டரிடம் எப்படி சொல்வது என்ற யோசனை. அப்போது ஒரு உதவி இயக்குநர் வந்து ‘சார் இப்படி சொல்லக்கூடாது’ என்று சொல்லிக் கொடுத்தார். ஒரு அரை நாளில் இதெல்லாம் பழக்கமாகி விட்டது. பின் எல்லாவற்றையும் நான் மனக்கணக்கின் படி நான் ப்ளான் செய்தேன். 30 வினாடி விளம்பரம் என்றால் ஒவ்வோர் நொடிக்கும் சிட்டிகை போட்டு படம் எடுத்தேன்.

பிறகு அந்த விளம்பரப் படம் வெளிவந்து பெரிய வரவேற்பு பெற்றது. அதன் பிறகு எனக்கு தொடர்ந்து விளம்பரப் படங்களை இயக்கும் வாய்ப்பு வந்தது. வங்கியில் வேலை செய்து கொண்டே விளம்பரப் படங்களை இயக்கி வந்தேன். பாம்பே உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று விளம்பரப் படங்களை இயக்கி வந்தேன். அனில் மேத்தா,விகாஸ் சிவராமன் போன்றவர்களெல்லாம் எனக்கு ஒளிப்பதிவாளர்களாக வந்தனர். இவர்களிடம் இருந்தும் நிறைய கற்றுக்கொண்டேன். இயக்குநர், ஒளிப்பதிவாளர் உறவு பரஸ்பர புரிதலோடும் அழகாகவும் இருந்தது.

வங்கியில் ஏதும் பிரச்சினை வரவில்லையா?

வந்தது. தொடர்ந்து அதிக அளவில் விடுமுறை எடுத்து வந்தேன். இடுப்பு வலி, காய்ச்சல் என்று சொல்லி அடிக்கடி விடுமுறை எடுப்பேன்.ஒரு முறை தொடர்ந்து 10 மாதங்கள் விடுமுறை எடுத்தவுடன் என்னை மருத்துவர்கள் கவுன்சிலிங்குக்கு அனுப்பி வைத்தனர். அங்கு என்னை விசாரித்து, பெரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல் மீண்டும் வேலைக்கு சேரச் சொன்னார்கள். நானும் சேர்ந்தேன். சில காலம் விளம்பரப் படம் எடுக்காமல் வங்கி வேலையில் மட்டும் கவனம் செலுத்தினேன். பின் எனக்கு வங்கி வேலையில் ஆர்வம் குறைந்தது. அடிக்கடி விடுமுறை எடுக்கவும் மனம் ஒப்பவில்லை. பின் ஒரு முடிவெடுத்து, வங்கி வேலையை உதறி விட்டு வந்து விட்டேன். ஆனால் அடுத்து என்ன செய்ய என்ற குழப்பம் வந்தது. விளம்பரப் படங்களில் எனக்கு இருந்த தொடர்பும் விட்டுப்போனது.

இந்த ஊடகத்தில் தொடர்புகள் தான் மிக முக்கியம். எனக்கு விளம்பரப்படம் எடுப்பதிலும் அப்போது பெரிய ஆர்வம் இல்லை. எத்தனை நாள்தான் சாக்லேட்டையும் மிட்டாயையும் மட்டும் படமெடுக்க முடியும். வேறு எதுவும் எனக்கு தெரியாது. எழுத மட்டும்தான் தெரியும். ஆனால் எழுதினால் சம்பாதிக்க முடியுமா என்ன?

உங்கள் முதல் ஆவணப்படம் உருவான சூழலைக் கூறுங்களேன் ?

1980 இல் நான் சென்னையில் நடைபெற்ற பாதல் சர்க்காரின் நாடகப்பட்டறையில் கலந்து கொண்டேன்.பத்து நாட்கள் நடைபெற்ற அந்த பட்டறையில் கலந்து கொண்டவர்களில் பலர் நடிப்புத்துறையை தேர்ந்தெடுத்தனர். ஆனால் நான் நடிகனாக முடியாது என்று எனக்கு தெரிந்திருந்தது. அது ஒரு தனிக்கலை. அவர்கள் வாய்மொழியை விட உடல்மொழியை மூலமாகக் கொண்டு நாடகம் போட்டனர். முக்கியமாக செலவில்லா நாடகங்கள். 100 ரூபாயில் ஒரு நாடகம் போட அவர்களால் முடிந்தது. இது போன்றதொரு நாடக முறைதான் நம்மூரிலும் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நாடகம் போடலாமா என்ற ஒரு ஆசையும் இருந்தது. ஆனால் அதற்கான சூழல் இங்கு இல்லை.
பிறகு திரைத்துறையில் யாரிடமும் உதவி இயக்குநராக சேரலாமா என்று யோசித்தேன். ஆனால் அப்போது இங்கு ஒரு இயக்குநரை பார்ப்பதே மிகுந்த சவாலாக இருந்தது. அப்படி சந்தித்து அவரிடம் சேர்ந்தாலும் அப்போது உதவி இயக்குநர்களின் நிலை மரியாதைக்குரியதாய் இல்லை. இயக்குநர்களின் கோபத்துக்கு ஆளானால் அவரிடம் அடி வாஙக வேண்டிய நிலையும் இருந்தது. அது எனக்கு சரிப்பட்டு வராது. என்னை யாராவது அடித்தால் நான் திருப்பி அடித்து விடுவேன். இப்படி பலவற்றை யோசித்து, ஆவணப்படம் எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன்.

எதைப் பற்றி ஆவணப்படம் எடுக்கலாம் என்று யோசிக்கையில், நமக்கு தெரியாத ஒரு விஷயத்தை விட நான் விரும்பும் ஒன்றையே எடுக்கலாம் என்ற யோசனையில் பாதல் சர்க்காரைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கலாம் என்று முடிவெடுத்தேன். உடனடியாக அவரைப் பற்றி வேறேதும் ஆவணப்படம் வந்திருக்கிறதா என்று ஆராய்ந்தேன். வேறு ஆவணப்படங்கள் எதுவும் வரவில்லை என்று அறிந்ததும், அவரைச் சந்தித்து என் எண்ணத்தை கூறினேன். ஆனால் முதலில் அவர் மறுத்து விட்டார். ‘நாடகம் என்பது கதையை பொறுத்து வடிவம் மாறும் தன்மையுடையது. நீங்கள் ஆவணப்படுத்தினால் அதன் ஒரு வடிவத்தைத் தான் படம்பிடிப்பீர்கள். அதுவே அந்த நாடகத்தின் வடிவமாக மக்கள் மனதில் பதிந்து விடக்கூடிய அபாயம் இருக்கிறது’ என்று ஒரு அழகியல்ரீதியான காரணத்தை அவர் கூறினார்.

பிறகு, நிறைய பேசி அவரை சம்மதிக்க வைத்து 1995 இல் ஜனவரி மாதம் அந்த ‘தேர்ட் தியேட்டர்’ என்ற அந்த ஆவணப்படத்தை எடுத்தேன்.

இந்த ஆவணப்படத்தின் சிறப்பம்சம் என்று எதை கருதுகிறீர்கள் ?

பொதுவாக ஆவணப்படுத்தப்படும் மனிதரை பாராட்டும் செய்திகள் மட்டுமே ஆவணப்படத்தில் இருக்கும். ஆனால், இந்த ஆவணப்படத்தில் அவரைப் பற்றிய சிறப்பான செய்திகளை பதிவு செய்த அதே நேரத்தில் அவர் மீது இருக்கும் விமர்சனத்தையும் சேர்த்து பதிவு செய்திருந்தேன். அவரது பல கோணங்களை அலசும் ஒரு ஆவணப்படமாக அப்படம் உருவாக இது காரணமாக இருந்தது.

அப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது ?

நல்ல வரவேற்பு இருந்தது. ஜெர்மனில் நடைபெற்ற ஒரு திரைவிழாவில் அப்படம் விருதுபெற்றது. 1996 இல் மும்பை சர்வதேச ஆவணப்பட விழாவில் திரையிடப்பட்டது. தூர்தர்ஷனில் அப்படம் ஒளிபரப்பாகியது.

அப்படத்திற்கான தயாரிப்பு செலவை எப்படி சமாளித்தீர்கள் ?

இது ஒரு முக்கியமான விஷயம். முதலில் நான் இவரைப் பற்றி படம் எடுக்க எந்ந நிறுவனமாவது நிச்சயம் நிதியுதவி அளிக்கும் என்று நினைத்தேன். ஆனால் இவர் ஒரு கலகக்காரர். எல்லா முதலாளிகளையும் தன் நாடகங்களின் மூலம் சாடியவர். மேலும், முதலாளிகளிடம் பணம் பெற்று படம் எடுத்தால், அவர்களுக்காக சமரசம் செய்ய வேண்டி இருக்கும் என்பது இவர் எண்ணம்.
மக்களுக்காக நாடகம் எடுப்பதால் மக்களிடமே பணம் பெற்றுக்கொள்ளலாம் என்பது இவர் கொள்கை. அவ்வளவு நேர்மையான மனிதர் அவர். மேலும் இவர் எடுத்தது எல்லாம், செலவில்லாத நாடகங்கள். தனியான உடை, அலங்காரம் இல்லாமல், இயல்பான தோற்றத்தில் நடத்தப்படும் நாடகங்கள். அதற்கான செலவுகளுக்கு மக்கள் தரும் பணமே போதுமானதாக இருந்தது. எனவே எந்த நிறுவனங்களையும் முதலாளிகளையும் சாராமல் அவர்களை எதிர்த்தே வந்திருக்கிறார். இதனால், யாரும் அவரை பற்றிய படமெடுக்க நிதியளிக்கவில்லை. இறுதியில், அவர் மீதும், அவர் கலை மீதும் கொண்டிருந்த ஈடுபாட்டால் நானே அப்படத்தை எடுத்தேன்.

ஆவணப்படங்களின் முக்கியத்துவம் என்ன ?

சினிமா என்று எடுத்துக்கொண்டால், அது எல்லாவகையான களங்களிலும் பயணிக்க வேண்டும். ஒரு சமூகம் சினிமாவை விரும்புகிறது என்றால் உண்மையில் எல்லா வகையான சினிமாவையையும் விரும்ப வேண்டும். அந்த ரசனையில் விருப்பமும் தேர்ச்சியும் இருக்க வேண்டும். ஆனால் சினிமாக்கள் பெரும்பாலும் கற்பனையையே மையமாகக் கொண்டுள்ளன. ஆனால் ஆவணப்படங்கள் உண்மையை, யதார்த்தத்தை பதிவு செய்கின்றன. ராபர்ட் ப்ளாகார்ட்டி ஆவணப்படுத்தும் வரை எஸ்கிமோக்களைப் பற்றி யாருக்கும் தெரியாது. அதே படத்தை திரைப்படமாக எடுத்திருந்தால், அந்த உண்மையையும் யதார்த்தத்தையும் கொண்டு வந்திருக்க முடியாது. இது போல் நிறைய சொல்லலாம். ஒரு தபால் நிலையம் இயங்கும் முறை, குகையில் வாழும் மனிதர்கள், இதைப் பற்றியெல்லாம் உண்மைக்கு அருகில் இருந்து யதார்த்தமாக சொல்ல ஆவணப்படங்களால் தான் முடியும்.

ஆவணப்படங்களின் இந்த முக்கியத்துவத்தை தமிழ்ச்சமூகம் உணர்ந்திருக்கிறதா ?

தனிப்பட்ட மனிதர்கள் அதை உணர்ந்திருக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் குறும்படங்களும் ஆவணப்படங்களும் தான் திரைப்படங்களுக்கான முன்னோடி. நம் சமூகத்திலும், திரைப்படங்கள் வருவதற்கு முன்னரே இங்கு குறும்படங்களும் ஆவணப்படங்களும் வந்துள்ளன. மக்களும் பார்த்திருக்கிறார்கள். ஏ.கே.செட்டியார் அந்த காலத்திலேயே ஆவணப்படங்கள் எடுத்திருக்கிறார். ஆனால் மிகுந்த இடைவெளியும், போதுமான வரவேற்பும் இல்லாததால் அவை வளராமல் போய்விட்டன.

ஆவணப்படங்கள் முக்கியத்துவம் பெறாததற்கு என்ன காரணம் ?

முதல் காரணம், மக்களுக்கு ஆரம்ப காலம் முதலே சினிமா ரசனை சரியான முறையில் இல்லை. இங்கு சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. சினிமாவின் தோற்றம், வளர்ச்சி பற்றிய விழிப்புணர்வு இல்லை. வெறும் கருவியாகவும் பொழுதுபோக்காகவும் மட்டுமே சினிமா பார்க்கப்பட்டதால் வந்த பிரச்சினை இது.

இரண்டாவது, பிரிட்டிஷ் அரசாங்கம். ஆவணப்படங்கள் வளர்வதற்கு ஒரு அரசாங்கத்தின் ஆதரவும் உதவியும் மிகவும் முக்கியம். அவர்கள் நாட்டில் ஆவணப்படங்களை ஊக்குவித்த பிரிட்டிஷ் அரசாங்கம், நம் நாட்டில் அதை ஊக்குவிக்கவில்லை. நம் அறிவு வளர வேண்டும் என்று அவர்கள் நினைக்கவேயில்லையே. நம்மை பற்றிய எந்த தகவலும் ஆவணப்படுத்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. இங்கு பாடலும் ஆடலும் வளர்ந்த அளவிற்கு, மனிதனை பற்றிய பதிவுகள் இல்லையே.

பிரிட்டிஷ் ஊக்கமளிக்காதது தான் காரணம் என்றால் சுதந்திரத்திற்கு பிறகும் ஆவணப்படங்கள் மீது போதிய வெளிச்சம் இல்லாதது ஏன்?

1947 வரை மக்கள் சினிமாவை ஒரு மாதிரியாக பார்த்து பழகி விட்டனர். அதன் பிறகு அதன் வடிவங்களில் மாற்றம் வருவதை அவர்களும் விரும்பவில்லை.அரசாங்கத்துக்கும் அதில் அக்கறை ஏதும் இருக்கவில்லை.

எந்த ஒரு கலைப்படைப்புக்கும் டார்கெட் ஆடியன்ஸ் என்று ஒன்று உண்டு. ஆனால் ஆவணப்படங்களுக்கு டார்கெட் ஆடியன்ஸ் இல்லாதும், அதன் வளர்ச்சியின்மைக்கு ஒரு காரணமா ?

அதையும் ஒரு காரணமாக சொல்லலாம். ஆவணப்படங்களுக்கு என்று தனியாக ஒரு பார்வையாளர் வட்டம் இல்லை. இப்போதுதான் அப்படியான பார்வையாளர்கள் உருவாகிக்கொண்டு வருகிறார்கள். நியூஸ் வேல்யூ என்பது இப்போதுதான் ஆவணப்படங்களுக்கு வளர்ந்து வருகின்றது. அதை எடுப்பவர்களும் இங்கே குறைவு. மும்பையில் ஆவணப்பட விழா நடந்த போது, தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஒரே ஆவணப்படம் என்னுடையது தான். இன்னொரு முக்கியக் காரணம், பட்ஜெட். அவ்வளவு செலவு செய்து ஆவணப்படம் எடுக்கவும் அப்போது யாரும் தயாராயில்லை. ஆவணப்படம் எடுப்பது, டிஜிட்டல் யுகம் வந்தவுடன் தான் வளர ஆரம்பித்தது.

ஆனால், அதற்காக விதை முன்பே வந்து விட்டது. லெனின், பிலிமில் தான் குறும்படங்கள் எடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார். பின்பு கல்லூரிகளில் காட்சித் தகவலியல் வந்தவுடன் மாணவர்களுக்கு ஆவணப்படம் எடுக்க வேண்டும் என்பது பாடமாகவே வந்தது.மெதுவாக அதைப் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்தது, வளர்ந்து வருகிறது.

மாற்று சினிமா என்றால் என்ன ? எதிலிருந்து அது மாறுபட வேண்டும் ? எதில் மாற்றம் வேண்டும் ?

மெயின்ஸ்ட்ரீம் சினிமா என்று சொல்கிறோம் இல்லையா. அதில் பரிசோதனை முயற்சிகள் செய்வது கடினம். அதற்கென்று ஒரு எல்லை இருக்கின்றது. சில புரட்சிகரமான செய்திகளை அதில் சொல்ல முடியாது, தணிக்கைக்காக சிலவற்றை நீக்க வேண்டி இருக்கும். சினிமாவை ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்லும் சில பரிசோதனை முயற்சிகளை எல்லாம் பெருவிளக்கு படங்களில் செய்ய முடியாது. இவற்றையெல்லாம் செய்வதற்கு ஒரு களம் வேண்டும். அந்த களம்தான் மாற்று சினிமா.

மாற்று சினிமாவின் நோக்கம் என்ன ? எதை நோக்கி அது பயணிக்கிறது ?

மக்கள் விரும்புகிறார்கள் என்று தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களை எடுத்துக்கொண்டிருந்தால் சினிமா தேங்கி விடும். இங்கு ஒரு விஷயம் வெற்றி பெற்றால் அதே போன்று பல படங்கள் வரும். இப்போது ஈ வெற்றி பெற்றால், தொடர்ந்து கொசுவைப் பற்றி, யானையை பற்றி படம் எடுப்பார்கள். அது தோற்கும் போது தான், வேறு வகைப் படங்களுக்கு செல்வார்கள். ஆனால் அந்த மாதிரி வட்டத்துக்குள் சினிமா சிக்கக் கூடாது. வெவ்வேறு தளங்களுக்கு செல்ல வேண்டும். ஆக, வெற்றியை மட்டும் நோக்காக கொள்ளாமல், பல்வகையான முயற்சிகளை செய்து பார்த்து சினிமாவை வெவ்வேறு தளங்களுக்கு கொண்டு செல்வது தான் மாற்று சினிமாவின் நோக்கம்.

சிறு வயதில் நீங்கள் வியந்து பார்த்த சினிமாவிற்கும், இப்போது பார்த்த சினிமாவிற்கும் என்ன
வித்தியாசம் உணருகிறீர்கள் ?

அப்போதும் சரி, இப்போதும் சரி, சினிமாவை நான் ஒரு ரசிகனாகத்தான் பார்க்கிறேன். ஒரு படைப்பாளியாக நான் படங்களை பார்ப்பதில்லை. ஒரு பார்வையாளனாக படத்தை பார்த்தால் தான் அவன் ஒரு படைப்பாளியாகவும் ஆக முடியும். நான் பார்வையாளனாகத்தான் படங்களைப் பார்க்கிறேன்.

தமிழ் சினிமாவில் எப்போதும் இரு வேறு துருவங்கள் இருக்கின்றன. ஒன்று, மக்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடும் கமர்ஷியல் படங்கள், மற்றொன்று ஆர்ட் பிலிம் எனப்படும் வகையறாக்கள். இந்த இடைவெளியை அழிக்கவோ குறைக்கவோ முடியாதா? நல்ல படங்களையே வெகுஜனம் விரும்புகிற வகையில் எடுக்க முடியாதா?

மக்களின் ரசனை மாறுபட்டுக்கொண்டே இருக்கும். எல்லா மக்களும் இலக்கியம் படிப்பதில்லை. எல்லா மக்களும் நல்ல சங்கீதம் படிப்பதில்லை. ஆக ரசனைகள் மாறுபட்டுக் கொண்டே தான் இருக்கும். எனவே நாம் கேட்பது என்னவென்றால், 50000 பேர் பார்த்தால் தான் அந்த சினிமாவிற்கு மரியாதை. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் மாற்று சினிமாவை மக்கள் பார்க்கிறார்கள். இந்த எண்ணிக்கை அதிகரித்து மாற்று சினிமாவை பார்க்கும் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் போதும். இதுவே ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாய் இருக்கும்.

அதே போல் விமர்சகர்களுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய இடைவெளி இருக்கின்றது. மக்களால் கொண்டாடப்படும் படங்கள் விமர்சகர்களால் தூற்றப்படுகிறது. விமர்சகர்களால் கொண்டாடப்படும் படங்கள் மக்களால் புறக்கணிக்கப்படுகின்றன. ஏன் இந்த இடைவெளி? மக்களிடம் இருந்து விமர்சகர்கள் விலகியிருக்கிறார்களா?

முதலில் இங்கு விமர்சகர்களின் சினிமா ரசனையை கேள்விக்குள்ளாக்க வேண்டும். ஒரு இசை விமர்சகர் இசையின் நுணுக்கங்களை நிச்சயம் அறிந்து வைத்திருப்பார். ஒரு நாடக விமர்சகர் நாடகத்தை பற்றி அக்குவேறு ஆணிவேறாக அறிந்து வைத்திருப்பார். நாடகம் போடுகிறாரோ இல்லையோ, அதன் நுணுக்கம் அத்தனையையும் அறிந்து வைத்திருப்பார். ஆனால் இங்கே சினிமா விமர்சனம் செய்பவர்கள் ஒருநாளும் படத்தொகுப்பையோ, இல்லை வேறு சில சினிமா நுணுக்கங்களையோ அறிந்திருப்பதில்லை, படிப்பதுமில்லை. ஏதோ கேள்வி ஞானத்தில் விமர்சனம் செய்கின்றனர். இது அவர்களின் விமர்சனங்களை பார்த்தாலே தெரியும். முதலில் அவர்களுக்கே எது மாற்று சினிமா என்பது தெரியவில்லை. கேமரா கோணங்களை பாராட்டுவது, இசையை பாராட்டுவது என்று சினிமாவை மேலோட்டமாகத்தான் அவர்கள் அணுகுகிறார்கள்.

அதனை மக்கள் புறக்கணித்தும் விடுகிறார்கள். விமர்சகர்கள், நிச்சயம் பாருங்கள் என்று பரிந்துரைக்கும் சினிமாவை மக்கள் பார்ப்பதில்லை, அதேபோல், பார்க்கவேண்டாம் என்று சொல்லும் படங்களை மக்கள் பார்க்காமலும் இருப்பதில்லை. மார்க்கை பார்த்தெல்லாம் மக்கள் படங்களுக்கு போவதில்லை. இதுவே விமர்சகர்களின் தோல்விதானே. இங்கு முதலில் விமர்சகர்களுக்கு சினிமா ரசனை குறித்த வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும்.

பாரதியார் பற்றிய ஆவணப்படம் பற்றி சொல்லுங்கள்...

நான் எடுக்க நினைக்கும் சமயத்தில் பாரதியார் பற்றிய நல்ல ஆவணம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதை எடுக்க நினைத்து, எழுத்து ஆவணங்களை சேர்த்தோம். ஆனால் புகைப்படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 5 புகைப்படங்கள் மட்டுமே கிடைத்தது. இதற்கு முக்கியக் காரணம், அவருக்கு போலீஸ் கண்காணிப்பு இருந்ததால், புகைப்படங்கள் எடுக்கவில்லை. 5 புகைப்படத்தை வைத்து ஒரு மணி நேர ஆவணப்படம் எடுக்க முடியாது. எனவே, இதில் வேறு ஒரு உத்தியை கையாண்டோம். அவர் வாழ்ந்த இடங்களுக்கே நேரில் சென்று, அந்த இடங்களிலேயே படமெடுத்தோம். இது ஒரு காட்சி ஆவணமாக பதிந்தது. அதிர்ஷ்டவசமாக, பாரதியாரோடு பழகிய இரண்டு பேர் கிடைத்தனர். அவர்களின் பேச்சு தான் அந்தப் படத்தின் உயிரென்று நான் சொல்லுவேன்.

பாரதியார் ஆவணப்படத்தில் சில சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இருக்கும். ஆவணப்படங்கள் உண்மையை பதிவு செய்பவை என்று சொன்னீர்கள். அப்படியான சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இடம்பெறுவது சரியா?

ஆவணப்படங்களில் அது அனுமதிக்கப்படும். சில முக்கியமான இடங்களில் அந்த உண்மையை மிக அழுத்தமாக பதிவு செய்ய, சித்தரிப்புகள் தேவைப்படும். ஆனால் அவை கற்பனை சித்தரிப்புகளாக இல்லாமல், உண்மையை சித்தரிக்கும் பட்சத்தில், அவை ஆவணப்படங்களில் பயன்படுத்தப்படலாம்.

ஆவணப்படங்கள் வேறு மொழி. திரைப்படங்கள் வேறு மொழி. ஆவணப்படங்கள் எடுத்துவிட்டு
திரைப்படம் எடுக்கும் போது இந்த வித்தியாசத்தை எப்படி சமாளித்தீர்கள் ?

முதலில் ஒருத்தி படத்தை ஒரு தலித்தை பற்றிய ஆவணப்படமாக எடுக்கத்தான் நினைத்தேன். தலித்தை பற்றிய ஆழமான பதிவு எதுவும் இல்லை என்று நினைத்தேன். ஆனால் அதில் பயணிக்கும் போது அதன் தீவிரத்தன்மையும் பிரச்சாரத்தன்மையும் மேலோங்கி இருந்தது. யாரேனும் ஒருவரை குறை சொல்லித்தான் அதனை எடுக்க வேண்டிய நிலைமை.

இங்கு யாரும் சாதியில் இருந்து முழுமையாக வெளியே வரவில்லை. நம் வீட்டில் இரண்டு டம்ளர் முறை இல்லாமல் இருக்கலாம். சுவர் கட்டப்படாமல் இருக்கலாம். ஆனால் வேறு வேறு வடிவங்களில் சாதி நம் அனைவருள்ளும் நுட்பமாக ஒளிந்து கொண்டே இருக்கிறது. இதனை களைய வேண்டுமானால் நம்மை நாமே கேள்விக்குள்ளாக்க வேண்டும். மற்றவரை குறை சொல்லும் போது, நாம் தப்பித்துக் கொள்கிறோம்.

எனவே அதை ஆவணப்படமாக எடுக்கவேண்டாம் என்று நினைத்தேன். மேலும் இது எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும் ஒரு களம். அதனால், இதை அப்படியே சொல்லாமல், ஒரு கதையாக எடுத்தால் தான் நம்மை நாமே சுய விமர்சனம் செய்ய முடியும் என்ற எண்ணத்தில் இதை படமாக எடுக்கும் முடிவுக்கு வந்தேன்.

இந்நிலையில் கி.ராஜநாராயணின் ‘கிடை’ படித்தேன். அதை படமாக எடுக்க முடிவு செய்தவுடன், அவரிடம் சென்று இதைச் சொல்லி, கதையில் நான் நிறைய மாறுதல் செய்வேன் என்றும் சொல்லி அனுமதி பெற்றுக் கொண்டேன். ஒரு தலித் பெண்ணால் ஊரே பயனடையும் போது, அவளை அனைவரும் தலித் ஆகத்தான் பார்க்கிறார்கள். அதிலிருந்து வெளியே வர அவள் என்ன செய்கிறார்கள் என்பதைச் சொல்ல எனக்கு ஒரு கதை தேவைப்பட்டது. அதுதான் ஒருத்தி. இதை நான் யதார்த்தமாக பதிவு செய்தேன்.

இறுதியில் நாயகி அந்த இறகை பிடிப்பதுபோல் காட்டியிருப்பது அவள் பிரச்சினைகளுக்கான
முடிவா?

முடிவல்ல. வழி. அந்த முடிவு கிடையில் கிடையாது. ஒருத்தியில் சேர்த்தேன். ஊர் மக்கள் அனைவரும் அவள் சாதியினால் அவளை புறக்கணிக்கையில், தனக்கும் தன் மக்களுக்குமான விடிவுகோல், கல்வி என்பதை அவள் உணர்கிறாள். எனவே, அந்த வெள்ளைக்காரன் இவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்த எழுதுகோலை பிடிக்கிறாள். உடனே அவள் கல்லூரிக்கு செல்வாள், படித்து பெரியாளாகி விட்டாள் என்று அர்த்தமில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை அவள் உணர்கிறாள் என்பதோடு படம் முடிகிறது.

‘கிடை’ ‘ஒருத்தியாக’ மாறியது. இலக்கியங்கள் படமாக்கப்படும் போது இருக்கும் சாதகங்கள் என்ன, பாதகங்கள் என்ன?

சாதகம் என்று பார்த்தால், அது ஏற்கனவே முழுமையாக்கப்பட்ட ஒரு கலைவடிவம். ஒரு செம்மையான வடிவம். ஒரு களம் இருக்கிறது, ஏகப்பட்ட சித்தரிப்புகள் இருக்கிறது, கதாப்பாத்திரங்கள் இருக்கிறது. எனவே ஒரு வழிகாட்டியாக அந்த இலக்கியம் இருக்கிறது. திரைக்கதை அமைக்கையில், ஒரு தெளிவான வழி நம்முன் இருக்கிறது. இது ஒரு சாதகம். இரண்டாவது, அது ஏற்கனவே ஜெயித்த ஒரு வடிவம். நம் படமும் அந்த அளவிற்கு உயர வேண்டும் என்று நாம் மெனக்கிடுவோம். இப்படி போட்டி போட்டு மெனக்கிடுதலே நம் படத்தை ஒரு உயரத்திற்கு கொண்டு போய் விடும்.

ஆனால், அந்த இலக்கியத்தை அப்படியே திரையில் கொண்டு வர நினைக்கும் போது, நிறைய பாதகங்கள் வரும். அது வேறு ஊடகம். இது வேறு ஊடகம். இந்த வித்தியாசத்தை புரிந்துகொள்ளாமல் படம் எடுக்கும் போது, அது பாதகம் ஏற்படுத்தும். புரிந்துகொண்டால் அது மிகப்பெரிய சாதகம்.

ஒருத்தி படத்திற்கான போராட்டங்கள் குறித்து...

ஒருத்தி 2003 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். இதுபோன்ற படங்கள் 10 வருடத்திற்கு ஒருமுறைதான் வரும். வந்து என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியும். அதேதான் இதற்கும் ஆனது. என் படமும் லெனினின் ‘றெக்கை’ படமும் ஒரே நாளில் தான் தணிக்கை செய்யப்பட்டது. இரண்டு படங்களும் ஒன்றாக இந்தியன் பனோரமாவிற்கு சென்றது. அவர்கள் லெனின் படத்தைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் நினைத்தேன். ஏனென்றால், அதற்கு முந்தைய வருடம் தான் அவர் ‘ஊருக்கு நூறு பேர்’ படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது வாங்கியிருந்தார். ஆனால் என் படம் தேர்வாகியது.

ஆங்கிலப்படங்களைப் பொறுத்த மட்டில் ஒரு படம் விருது வாங்கினால் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் வணிக வட்டமும் பெருகும். ஒரு படம் ஓடவில்லையென்றால் கூட விருது வாங்கியபின் நன்றாக ஓடும். ஆனால் இங்கே நிலைமை அப்படியே தலைகீழ். இங்கே ஒரு படம் விருது வாங்கிவிட்டால் அதன் தலைவிதி மோசமாகிவிடும். விருது வாங்கும் படங்களை, ஜனாதிபதி மட்டும் பார்க்கும் படம், என்பார்கள்.

மெயின்ஸ்ட்ரீம் படங்கள் விருது வாங்காத காலம் அது. அதனால் தான் சிவாஜியே விருது வாங்கவில்லை. மாற்றுப் படங்கள் மட்டும் விருது பெற்று வந்தன. இதுபோன்ற விமர்சனங்களுக்கு ஆளாயின. ஆனால் இப்போது நிலைமை மாறிவருகின்றது. மெயின்ஸ்ட்ரீம் படங்களுக்கும் விருது கிடைக்கின்றன. விருதுகளின் மீதான ஒரு மரியாதையும் எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.

ஒருத்தி படத்தை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூட முடியவில்லை. ஏனென்றால் அதில் பாட்டு இல்லை. அவர்களுக்கு ஒரு படத்தை ஒளிபரப்ப பாடல் ஒரு முக்கியமான விளம்பரமாக இருந்தது. என் படத்தில் பாட்டு இல்லை. அதனால் அவர்கள் அதைப் போட முன்வரவில்லை. ஆனால் இந்திய பனோரமாவில் தேர்வானவுடன் அனைத்து தொலைக்காட்சிகளும் என்னிடம் பேட்டி கேட்டு வந்தார்கள். என் படத்தை ஒளிபரப்புங்கள். உங்களுக்கு 2 மணி நேரம் கூட பேட்டி தருகிறேன் என்று சொன்னேன். படம் போட முடியாது. உங்கள் பேட்டி மட்டும் போடுகிறோம் என்றார்கள். நான் பேட்டி தர முடியாது என்று சொல்லி விட்டேன்.

நிறைய தொலைக்காட்சிகள் என்னிடம் என் படங்களை கேட்டு வந்தார்கள். என் படத்தை போட ஒரு தொகையை கொடுங்கள் என்றேன். அவர்கள் தரத்தயாராயில்லை. உங்கள் படத்தை நாங்கள் போட்டால் உங்களுக்கு பேர் வரும் என்றார்கள். எனக்கு பேர் இருக்கிறது. அப்படி பேர் வராவிட்டாலும் பரவாயில்லை. என் படத்தை வைத்து நீங்கள் வியாபாரம் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். நான் அவர்களிடம் பணம் கேட்டது கூட எனக்காக இல்லை. எப்படியும் என் படத்தை வைத்துக்கொண்டு சில மணி நேரம் அவர்கள் வியாபாரம் செய்ய போகிறார்கள். அதில் ஒரு தொகையை தந்தால், மாற்று சினிமா சம்பாதிக்கவும் செய்யும் என்று எனக்கு பின் வருபவர்களுக்கு ஒரு தைரியம் வரும், நிறைய பேர் மாற்று சினிமாவை நோக்கி வருவார்கள் அல்லவா, அதற்காகத்தான் பணம் கேட்டேன். ஆனால் நிறைய பேர் நம் படம் தொலைக்காட்சியில் வந்தால் போதும் என்ற எண்ணத்தில் படத்தை அவர்களுக்காக எடுக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள். படைப்பாளிகளை சுரண்டுகிறார்கள். அதற்கு நான் தயாராக இல்லை. என் படங்கள் மக்களுக்கானவை. மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் என் படங்களை கேட்கிறீர்களா, என் படங்களை இலவசமாகத் தருகிறேன். ஆனால் என் படத்தை வைத்து வணிகம் பண்ணும் இவர்கள் வியாபாரத்திற்கு நான் ஆளில்லை.என் படங்கள் மக்களிடம் போய் சேர வேண்டிய விதத்தில் நிச்சயம் போய் சேர்ந்து கொண்டே இருக்கும். தூர்தஷனுக்கு மட்டும் என் படங்களை தந்திருக்கிறேன். அவர்கள் படம் போடும் போது ஒரு குறிப்பிட்ட தொகை கொடுப்பார்கள். அவர்களுக்கு மட்டும் நான் பேட்டி அளித்திருக்கிறேன். என் படங்களுக்கு வந்த கடிதங்களைக் கொண்டு அதைப் பற்றிய ஒரு கலந்துரையாடல் வைத்தார்கள். அதில் கலந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி பெரும்தொலைக்காட்சிகளுக்கு, மாற்று சினிமா என்றால் என்ன என்று சொல்வதற்கு நான் செல்வேன். ஆனால் அவர்களுக்கு என் படங்களைத் தர மாட்டேன்.

ஒருத்தி படத்தை வெளியிட முடிந்ததா ?

முடியவில்லை. மிக கடினமாக இருந்தது. நானே சத்யம் தியேட்டரில் வெளியிட்டேன். பத்திரிக்கையில் ஒரு சிறிய பெட்டிச்செய்தியாக மட்டும் விளம்பரம் வந்தது. சத்யம் தியேட்டர் வாசலில் போஸ்டர் ஒட்டியிருந்தோம். அதை வைத்தே மக்கள் வந்தார்கள். அந்த படம் முதல் காட்சி எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது. அந்தப்படம் சுவாரசியமாகவும் இருக்கும். நன்றாகவே ஓடியது. ஆனால் விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் படத்தை ஓடவிடவில்லை.வேறு சில பெரிய படங்கள் வருகிறது, அதற்கு தியேட்டர்கள் வேண்டும் என்று இந்த படத்தை தூக்கி விட்டார்கள். ஆக, மக்கள் பார்க்க தயாராகத்தான் இருந்தார்கள். இவர்கள் தான் பார்க்கவிடவில்லை. இதுதான் அந்த படத்திற்கு ஏற்பட்ட நிலைமை.

ஒருத்தி படம் 1.30 மணி நேரம் தான். அது எந்த வகையில் பாதகமாக அமைந்தது?

ஆம். அதுவும் ஒரு வகையில் பாதமாக அமைந்தது. ஏனென்றால் இங்கே படம் என்றால் 2.30 மணி நேரம் இருக்க வேண்டும் என்று அர்த்தமாகி விட்டது. கொடுத்த காசுக்கு அவ்வளவு நேரம் படம் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். எனவே இதுவும் ஒரு பாதகமாக முடிந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் தமிழக அரசு விருதுக்கு இந்தப் படத்தை தேர்வு செய்யவில்லை.

படத்திற்கு மொத்தம் எவ்வளவு செலவாகியது ?

மொத்தம் 30 லட்சம் தான் ஆகியது. நானும் என் நண்பர் கோபால்ராஜாராமும் சேர்ந்துதான் எடுத்தோம். இயற்கை வெளியிலேயே எடுத்ததால், பெரும் செலவுகள் எதுவும் ஆகவில்லை. ஆனால் இந்த படத்திற்கு வரவேற்பு இல்லாததால், தொடர்ந்து தயாரிக்க ஆட்கள் வருவதில்லை.

மாற்று சினிமாவில் உங்கள் அடுத்த கட்டம் என்ன ?

தொடர்ந்து இதைப் போன்ற படங்கள் செய்து கொண்டு இருக்க வேண்டும். எனக்கு வணிகரீதியான படங்கள் எடுக்கக்கூடாது என்ற ஆசையெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால் அந்த மாதிரியான படங்கள் எடுக்க நிறைய பேர் இருக்கிறார்கள். இதுபோன்ற படங்கள் எடுக்க யாருமில்லை. அதனால்தான் நான் இங்கு வந்தேன். ஆனால் இன்று அதே போன்று 30 லட்சத்தில் ஒரு முழு படத்தையும் எடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

முழுக்க முழுக்க இந்த பாதையில் இயங்கி இருக்கிறீர்கள். உங்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்தீர்கள்?

அது எனக்கே தெரியவில்லை. என் படங்கள் வணிகரீதியான வெற்றிகளை பெறவில்லை. ஆனால் நான் வாழ்வில் கஷ்டப்படவில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். இத்தனைக்கும் நான் வங்கி வேலையை விடும்போது, என் விடுப்பு கடிதத்தை அடிக்க டைப்பிஸ்ட் மறுத்துவிட்டார். ‘நீங்கள் எடுக்கும் முடிவு தற்கொலைக்கு சமம்’ என்றார். அப்படியெல்லாம் ஒன்றும் நடந்து விடாது என்று அவரை சமாதானப்படுத்திதான் லெட்டரை அடிக்க வைத்தேன். இதுவரை எல்லாம் நல்லபடியாகவே செல்கிறது.

ஒரு படைப்பாளியாக, சினிமாவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

சினிமா என்பது பல பரிமாணங்களைக் கொண்ட ஒரு ஊடகம். நிறைய பேருக்கு அது ஒரு தொழில். சோறு போடும் தொழில். மாற்று படங்கள் என்பது வருடத்திற்கு ஒன்றிரண்டு படங்கள் வந்தாலும் அவர்களுக்கு சோறு போடுவது மெயின்ஸ்ட்ரீம் படங்கள் தான். எனவே அவர்கள், அதைத்தான் விரும்புவார்கள். எனவே, நான் விரும்புவது, மெயின்ஸ்ட்ரீம் படங்களின் தரம் உயர வேண்டும் என்பதுதான். இதற்கு ஒரு நல்ல வழி, மெயின்ஸ்ட்ரீம் படங்கள் எடுப்பவர்கள், குறும்படங்களும் ஆவணப்படங்களும் எடுக்க வேண்டும். அதே போல் குறும்படங்களும் ஆவணப்படங்களும் எடுப்பவர்கள், மெயின்ஸ்ட்ரீம் படங்கள் எடுக்க வேண்டும். அப்போதுதான் மெயின்ஸ்ட்ரீம் படங்களுக்கும் மாற்று சினிமாக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியும் விரோதப் போக்கும் குறையும்.

மாற்று சினிமாக்களை, மெயின்ஸ்ட்ரீம் படங்களுக்கான வரவேற்புடன், மக்கள் ஆதரவை பெற்று வெற்றியடையும் வகையில் எடுக்க முடியுமா ?

முதலில், மாற்று சினிமா படைப்பாளிகள், அவ்வளவு பூதாகரமான வெற்றியை நோக்கி செல்லக்கூடாது. மக்களை சென்றடைவதுதான் அவர்கள் நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வகையில் பார்த்தால், வெற்றியை மட்டும் நோக்காக கொள்ளாமல், மக்கள் விரும்பும் வகையில், நல்ல படங்களை எடுப்பது சாத்தியம் என்று தான் நினைக்கிறேன்.

இன்றைய நிலையில், தமிழ்சினிமாவில், மாற்று சினிமாவுக்கான வெளி எப்படி இருக்கிறது ?

மாற்று சினிமாவிற்கான ஒரு வெற்றிடம் இன்னும் நிரப்பப்படாமல் தான் இருக்கிறது. இப்போது, நாயகன் குளிக்காமல், தாடி வைத்துக்கொண்டு, குடித்துக்கொண்டு, இயற்கை சூழலில் எடுக்கப்படும் படங்களை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இது ஒருவகையில் நல்ல மாற்றம் தான். ஆனால் இந்த படங்கள், மாற்றுப் படங்களாக உருப்பெறுகிறதா என்றால் இல்லை. யதார்த்தப்படங்கள் என்ற பெயரில் வரும் இந்தபடங்கள் தோற்றங்களில், யதார்த்தத்தை கடைபிடித்தாலும், உட்கருவில், மரபார்ந்த சிந்தனைகளையே தாங்கி வருகின்றன. வெறும் ஆடை, தோற்றம், சூழல் இவற்றில் இருக்கும் யதார்த்தம், கருவிலும், சிந்தனைகளிலும் இல்லை என்பதே நிதர்சனம். உதாரணமாக பெண்கள், கற்பு போன்ற விஷயங்களில் இன்றும் பழமையைத்தான் இந்தப் படங்கள் கடைபிடிக்கின்றன. யதார்த்தப் போர்வையில், மரபார்ந்த சிந்தனைகள் வெளிப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன.

இன்றைய சூழலில் குறும்படங்களுக்கான முக்கியத்துவம் என்ன ?

முதலில், நேரம். முந்தியெல்லாம், ஒரு 10 நிமிடத்திற்கான கரு தோன்றினால் அதை திரைப்படமாகத் தான் எடுக்க வேண்டும் என்று, அதை 2.30 மணி நேர கதையாக இழுப்பார்கள். இப்போது அது தேவையில்லை. பத்து நிமிடத்தில் சொல்ல வேண்டியதை பத்து நிமிடத்திலேயே சொல்லிவிடலாம். இரண்டரை மணி நேரத்தில் சொல்ல வேறு விஷயங்கள் இருக்கின்றது என்ற எண்ணம் வந்துவிட்டது.

இரண்டாவது, பயிற்சி. திரைப்படத்திற்கான பயிற்சியாக எனக்கு விளம்பரப்படங்கள் அமைந்தது. அதுபோன்று குறும்படங்கள், திரைப்படம் எடுக்க பயிற்சி அளிக்கும். இந்த ஊடகத்தைப் பற்றி புரிந்துகொள்ள, அதைப் பற்றி இன்னும் பழகிக்கொள்ள குறும்படங்கள் உதவி செய்கின்றன.

மாற்று சினிமா பாதையில், குறும்படங்களின் பங்கு என்ன ?

மாற்று சினிமா என்பது மக்களின் வாழ்க்கையை தெரிவிக்கும் படமாகத்தான் இருக்கின்றன. அந்த வகையில் குறும்படங்கள் அந்த பாதையில் பெரும் பங்கு வகித்து வந்திருக்கின்றன். கடந்த பத்து வருடங்களாக, குறும்படங்கள் காண்பித்த வாழ்க்கையை 60, 70 வருடங்களாக திரைப்படங்களால் காட்ட முடியவில்லை. இதுவே குறும்படங்களின் வெற்றிதானே. குறும்படங்களில் நாயகன், நாயகி இல்லை. ஒரு வடிவத்தில் சிக்கிக் கொள்வதில்லை. நிறைய பரிசோதனை முயற்சிகள் செய்ய முடிகிறது. இது ஓடுமா ஓடாதா என்ற பயம் இல்லாமல், ஒரு புதிய விஷயத்தை முன்பயிற்சி இல்லாமல் இதில் செய்து பார்க்க முடிகிறது. அப்படி செய்யும் போது, எந்தவித சமரசங்களும் இல்லாமல், நேர்மையாக இருக்க முடிகிறது. ஆனால் சில பேர் குறும்படத்தைக் காட்டி பெரும்படங்களுக்கு செல்ல முயற்சிக்கும் போது, அந்த குறும்படத்திற்கான நேர்மை போய்விடுகின்றது. ஒரு கவிதை புத்தகத்தை எழுதி சினிமா பாட்டெழுத முயற்சிக்கும் நிலை போன்றது அது. அப்படிப்பட்ட சமரசங்கள் இல்லாமல், குறும்படங்களை ஒரு ஊடகமாக பயன்படுத்தி, அதில் நாம் சொல்ல நினைக்கிற செய்திகளை சரியாக சொல்ல முடிகிறதா, அது மக்களை சென்று சேர்கிறதா, என்று பார்க்கும்போது, அதில் நம் நேர்மை வெளிப்படுகின்றது. படம் எடுப்பதே நம் நேர்மை சம்பந்தப்பட்ட ஒரு விஷயம்தான். அது ஒரு போராட்டம். அந்த போராட்டத்தில் நேர்மையாய் இருந்து பெறுவதுதான் வெற்றி. அப்படி நேர்மையாக போராடாமலும் வெற்றி பெறலாம். ஆனால் அதையெல்லாம், வெற்றி என்று எடுத்துக்கொள்ள முடியாது.

இப்போது வரும் பெரும்பாலான குறும்படங்கள், சினிமாவில் இருப்பதைப் போன்ற மசாலாவை, குறைவான நேரத்தில் வெளிப்படுத்தும் படங்களாகவே வருகின்றன. அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆம். அவையெல்லாம் நேர்மை இல்லாத படங்கள். வாய்ப்பு கேட்பதற்காக பயன்படும் படங்கள். பத்து நிமிடத்திலேயே என்னால் இவ்வளவு மசாலா கொடுக்க முடிந்தால், இரண்டரை மணி நேரத்தில் எவ்வளவு மசாலா கொடுக்க முடியும் என்று காட்டுவதற்காக எடுக்கப்படும் நேர்மை இல்லாத படங்கள். அவை ஜெயிக்காது.

மாற்று சினிமாவை நோக்கி வந்து கொண்டிருக்கும் இளம் படைப்பாளிகளுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும். நாம் சிந்தித்து ஒரு விஷயத்தை மன உறுதியோடு மக்களுக்கு சொல்கிறோம். அதே மன உறுதியோடு மக்களும் அந்த விஷயத்தை பின்பற்ற வேண்டுமென்றால், முதலில் நாம் நேர்மையாக இருக்க வேண்டும். அதே போல், ஒரே களத்தில் இயங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. குறும்படங்கள் மட்டுமே, ஆவணப்படங்கள் மட்டுமே, மெயின்ஸ்ட்ரீம் படங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கக் கூடாது. இங்கிருப்பவர்கள் அங்கு வரவேண்டும், அங்கிருப்பவர்கள் இங்கு வர வேண்டும். லெனின், பாலுமகேந்திரா போன்றவர்கள் அப்படி செய்திருக்கிறார்கள். இது ஒரு ஒருவழிப் பாதையாக இருக்கக் கூடாது.

2012 லெனின் விருது உங்களுக்கு அளிக்கப்படுவது குறித்து ?

முதலில் என்னிடம் இதைச் சொன்னபோது, யாரேனும் புதிதாக வருபவர்களுக்கு இதைக் கொடுங்கள் என்று சொன்னேன். ஆனால், இது தொடர்ந்து மாற்று சினிமாவில் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்குத் தரப்படும் விருது என்று சொன்னார்கள். மேலும், லெனின் பெயரில் தரப்படும் விருது என்பதால் இதை ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த ஆட்சபேனையும் இல்லை. அதனால் ஏற்றுக்கொண்டேன்.

உங்களுடைய அடுத்த முயற்சிகள் ?

தொடர்ந்து ஆவணப்படங்கள் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஒரு திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளேன். தொடர்ந்து மக்களுக்கான சினிமா எடுக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்.

வெற்றி தோல்விகள் ஒரு கலைஞனை பாதிப்பதேயில்லை. முக்கியமாக வணிக வெற்றி தோல்விகள் அவனைச் சீண்டுவதில்லை. மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதிலேயே வெற்றியடைந்து விடுகிறது அவனது படைப்புகள். அதிகாரங்களும், வியாபாரிகளும் இக்கலைஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் முடக்க நினைத்தாலும், மீண்டும் மீண்டும் இந்த கலைஞர்கள் மக்களுக்கான படைப்புகளை படைத்துக்கொண்டே தான் இருப்பார்கள், மக்களுக்கு தம் படைப்புகள் போய் சேரும் என்ற அயரா நம்பிக்கையுடனும் அசுர வேகத்துடனும். மக்களுக்காக போராடிய படைப்பாளிகளை மக்கள் கைவிட்டதாய் சொல்லும் பக்கங்கள் சரித்திர புத்தகத்தில் இல்லை.

நேர்காணல்:  கு.ஜெயச்சந்திர ஹாஷ்மி

ஒளிப்படங்கள்: சோமசுந்தரம்

அம்ஷன் குமார் படைப்புலகம்

ஆவணப்படங்கள்

 தேர்ட் தியேட்டர் (ஆங்கிலம், 56 நிமிடங்கள்)
 அமெரிக்கன் ரெமடீஸ் (ஆங்கிலம், 15 நிமிடங்கள்)
 சாய் மீரா கெமிக்கல்ஸ் (ஆங்கிலம், 10 நிமிடங்கள்)
 சுப்ரமணிய பாரதி (ஆங்கிலம் & தமிழ், 60 நிமிடங்கள்)
 சுதந்திரத்திற்கு பிந்தைய தமிழ் நாடக உலகம் (தமிழ், 28 நிமிடங்கள்)
 ரீச்சிங் த அன்ரீச்ட்டு (ஆங்கிலம், 10 நிமிடங்கள்)
 விர்ட்டுவல் யூனிவர்சிட்டி (ஆங்கிலம், 18 நிமிடங்கள்)
 எக்கோ டெக்னாலஜி அன்ட் சஸ்டெயினபிள் டெவலப்மெண்ட் (ஆங்கிலம், 20 நிமிடங்கள்)
 அசோகமித்திரன் (தமிழ், 30 நிமிடங்கள்)
 சவுத் டூ சவுத் (ஆங்கிலம், 30 நிமிடங்கள்)
 சர் சி.வி.ராமன், வாழ்க்கை (ஆங்கிலம் & தமிழ், 45 நிமிடங்கள்)
 சர் சி.வி.ராமன், விஞ்ஞான உலகம் (ஆங்கிலம், 30 நிமிடங்கள்)
 உ.வே.சாமிநாக ஐய்யர் (ஆங்கிலம், 30 நிமிடங்கள்)
 பிச்சாவரம் (ஆங்கிலம், 20 நிமிடங்கள்)
 மாங்க்ரூவ்ஸ் ஆஃப் தமிழ்நாடு (30 நிமிடங்கள்)
 மாடர்ன் ஆர்ட் இன் தமிழ்நாடு, பகுதி 1 (ஆங்கிலம் & தமிழ், 28 நிமிடங்கள்)
 மாடர்ன் ஆர்ட் இன் தமிழ்நாடு, பகுதி 2 (ஆங்கிலம் & தமிழ், 28 நிமிடங்கள்)
 டோர்ஸ்டெப் ஸ்கூல், புனே (ஆங்கிலம், 15 நிமிடங்கள்)
 ஜன்மத்யம், புதுதில்லி (ஆங்கிலம், 15 நிமிடங்கள்)
 ஷிக்சனா, பெங்களூரு (ஆங்கிலம், 16 நிமிடங்கள்)
 எஸ்.எஸ்.வாசன் (ஆங்கிலம் & தமிழ், 28 நிமிடங்கள்)
 மணக்கல் எஸ்.ரங்கராஜன் (தமிழ், 75 நிமிடங்கள்)

திரைப்படம்
 ஒருத்தி (தமிழ், 91 நிமிடங்கள்)

புத்தகங்கள் (தமிழ்)
• எழுத்தும் பிரக்ஞையும்
• சினிமா ரசனை
• ஒருத்தி (திரைக்கதை)
• பேசும் பொற்சித்திரம்

 

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)