கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - ஜெய் வினோ

ஆதவன்  

பொதுவாக தமிழ்நாட்டில் கலையை நேசிப்பவர்கள் வேறு தொழில் செய்யாமல் கலையே வாழ்க்கை என்று வாழ்ந்து விடுவார்கள். தன் வீட்டு கதவை வறுமை வந்து தட்டும்போதும் வணக்கம் கூறி வரவேற்கும் குண நலவான்கள் இவர்கள். ஆனால் நமது குறும்பட இயக்குனர் திரு. ஜெய் வினோ அவர்கள் நாட்டியக் கலை, குறும்படக் கலை என கலைகளின் வழியே வாழ்ந்தாலும், நாட்டியக் கலை மூலம் குறைந்த பட்ச வருமானமாவது ஈட்டிக் கொள்கிறார். தனது குறும்படங்களுக்கு மற்றவர் கையை எதிர்பார்க்காமல் அவரே தயாரிக்கிறார். மேலும் தொழில்நுட்பம் பயின்று உள்ளதால் அவரே படத்தொகுப்பு செய்கிறார். அவரே ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆக செலவுகளை மட்டுப்படுத்தி சிறந்ததொரு ஆவணப்படத்தை நம்முன் கொண்டு வந்து நிற்கிறார். இவரது ஆர்வத்துக்கு இவரது தந்தையும் உறுதுணையாக நிற்கிறார். அவரும் களப் பனி செய்கிறார். எத்துனை பேருக்கு வாய்க்கும் இந்த வரம் .

இவர் இயக்கிய முதல் ஆவணப்படம் "வயலாரும் திருவள்ளுவரும்". "உலகில் உள்ள அரசன் முதல் ஆண்டிவரை யாராக இருப்பினும், உழவன் மட்டும் இல்லாமல் போனால் இவர்கள் யாருக்குமே இந்த உலகில் முக்கியத்துவம் இல்லை என்பதனையும், உழவன் உலகத்திற்கு அச்சாணி போன்றவன், உலகில் யார் யார் எந்தெந்தத் தொழில்கள் புரிந்தாலும் அது ஏர் உழவனுக்குப் பின்னால்தான் நிற்க வேண்டும் என்றும், முடிவாக உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்று அறுதியிட்டும் கூறியுள்ள உறைகள் என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தன", என்று கூறும் திரு. ஜெய் வினோ அவர்கள், வள்ளுவரின் குறள்களைக் கொண்டு தனது முதல் ஆவணப்படத்தை நேர்த்தியாக படைத்துள்ளார். இவரது இரண்டாவது ஆவணப்படம் "விளையாட மறந்ததென்ன?" இதில் பழந்தமிழர் விளையாட்டுகள் பற்றியும், அவை தற்போது அழிந்து வருவது பற்றியும் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்.

இனி குறும்பட இயக்குனர் திரு. ஜெய் வினோ அவர்களிடம் ஒரு நேர்காணல்:

1. உங்கள் பின்னணி பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

பெயர் மு. ஜெய்வினோ, தந்தை பெயர் கா.முருகன் பரத நாட்டியத்திற்காக புதுவை அரசின் கலைமாமணி விருதினைப்பெற்றுள்ளார். அம்மா மலர்விழி மூடத்தனமற்ற ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். மேலும் தங்கை ஒருத்தி என அளவானக் குடும்பம்; அழகானக் குடும்பம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.ஏ பரதநாட்டியம் முடித்துவிட்டு மறைந்துபோன பல நாட்டிய கலைவடிவங்களை அரங்கேற்றி வருகின்றேன்.

2. ஏற்கனவே கலைத் துறையில் இருக்கும் உங்களுக்கு குறும்படத் துறையில் ஆர்வம் ஏற்படக் காரணம் என்ன?

குறும்படம் என்பது நாட்டியத்துறையின் பரிணாம வளர்ச்சியில் பிறந்துள்ள புதுவரவு. நாட்டியத்தின் பேரக்குழந்தை என்றும் கூறலாம். நடனம், நாட்டியம், கூத்து, இவைகளின் பரிணாம வளர்ச்சியில் அறிவியல் கருவிகளின் உதவியோடு சினிமா என்றும், தொலைகாட்சி என்றும், அடுத்து குறும்படங்கள் என்றும் உருமாறி வந்துள்ளது.

அரங்கில் வெளிப்படுத்தும் கருத்தை இப்படிக் குறும்படங்கள் முலம் வெளிக்காட்டும் போது அது ஒரே ஒரு ஒளிபரப்பில் உலகமெங்கும் உள்ள கலை ஆர்வலர்களைச் சென்றடைகிறது. அதனால்தான் இந்தத்துறைக்குள் நுழைந்துள்ளேன்.

3. இன்றைய இளைஞர்கள் ஹை-டெக் படங்களாக எடுக்கும் நிலையில், வள்ளுவம் பற்றி படம் எடுக்கும் எண்ணம் உங்களுக்கு ஏற்படக் காரணம் என்ன? வயலாரும் திருவள்ளுவரும் குறும்படத்தின் கரு என்ன?

திருக்குறள் அது அரங்கேற்றம் செய்யப்பட்டக் காலத்தில் அதனை ஐந்தாவது பொது வேதம் என்றும் தமிழர்களின் புனித நூல் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அதன்பிறகு பல்வேறு முயற்சிகளால் திருக்குறள் இருட்டடிப்பு செய்யப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வந்துள்ளது. நான்கு வேதங்கள் மக்கள் மத்தியில் ஓதப்பட்டுள்ளது. வடவரின் ஐந்தாவது வேதமெனப் கூறப்பட்ட பரதரின் நாட்டிய சாத்திரங்கள் பிரபலபடுத்தப்பட்ட அளவில் கூட, ஏன் திருக்குறள் பிரபலப்படுத்தப்படவில்லை என்கின்ற வினா எனக்குள் எழுந்தது. அதன் காரணமாக வள்ளுவம் பற்றிய செய்திகளை முதலில் எனது நாட்டியத்தில் கொண்டுவந்தேன் பலகோணங்களில் நாட்டியப்பாடல்களில் குறளைப் பயன்படுத்தியபின் அந்த வெற்றியின் முடிவாக வள்ளுவம் பற்றிய சிந்தனைகளைப் படமாக்க முனைந்துள்ளேன்.

உலகில் உள்ள அரசன் முதல் ஆண்டிவரை யாராக இருப்பினும், உழவன் மட்டும் இல்லாமல் போனால் இவர்கள் யாருக்கும் இந்த உலகில் முக்கியத்துவம் இல்லை என்பதனையும், உழவன் உலகத்திற்கு அச்சாணி போன்றவன், உலகில் யார் யார் எந்தெந்தத் தொழில்கள் புரிந்தாலும் அது ஏர் உழவனுக்குப் பின்னால்தான் நிற்க வேண்டும் என்றும், முடிவாக உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்று அறுதியிட்டும் கூறியுள்ள உறைகள் என்னை ஆழ்ந்து சிந்திக்க வைத்தன. அவ்வாறு திருவள்ளுவரால் உயர்த்தபட்ட உழவுப்பெருமக்களின் வாழ்வு இன்றைக்கும் உயர்த்தபடவில்லை இது கண்கூடான உண்மை உழுபவனுக்கும் உழுவோர் பிள்ளைகளுக்கும் சமுதாயத்தில் உயர்நிலை அங்கிகாரம் அளிக்கபடவேண்டும் என்ற கருத்தில் "வயலாரும் திருவள்ளுவரும்" குறும்படத்தினைப் பதிவுசெய்து வெளியிட்டுள்ளேன்.

4. நீங்கள் சொல்ல வந்தக் கருத்து மற்றவர்களை சென்றடைந்தாக கருதுகிறீர்களா?

இரண்டாயிரம் ஆண்டுகளாக வள்ளுவன் சொல்லியுள்ள கருத்துக்களே இன்றும் செவிடன் காதில் ஊதிய சங்காக உள்ளது. இருப்பினும் ஏன் பங்கிற்கு நானும் ஒரு சங்கை ஊதியுள்ளேன் அவ்வளவுதான்.

5. நீங்கள் நாட்டியக் கலை சார்ந்தவர். நாட்டியக் கலை பற்றி குறும்படம் எடுக்கும் எண்ணம் உங்களுக்கு உண்டா?

உறுதியாக அப்படி ஒருபடம் எடுப்பேன் அதற்கான கரு, காட்சிஅமைப்பு அனைத்தும் யார் நிலையில் உள்ளது. ஆதி சக்தியின் அருந்தமிழ்க்கூத்து எனும் தலைப்பில் அது படமாக்கப்படவுள்ளது, பொருளாதார நிலைக்கேற்ப காலம் கூடுதலாகலாம். தமிழர் நாட்டிய கோட்பாடுகளை வெளிப்படுத்திய பஞ்சபரத நூல்கள், திட்டமிட்ட சதிவேலைகளால் எரியூட்டப்பட்டும், நீரில்போட்டும் அழிக்கப்பட்டுள்ளன. அவைகளைக் கூறும் முகமாக அந்தப்படம் அமையும்.

6. பொதுவாக தமிழர்கள் தாங்கள் சார்ந்த வரலாற்றை பாதுகாப்பதில் அக்கறை இல்லாதவர்களாக உள்ள இச்சூழ்நிலையில் நீங்கள் இயக்கிய "விளையாட மறந்ததென்ன? ஆவணப்படம் பழந்தமிழர் விளையாட்டுகளை நினைவுப்படுத்துகிறது. எனவே குறும்படங்கள் வரலாற்றை பாதுகாக்கும் பணிகளை செய்வதாக கருதுகிறீர்களா?

பழம்பெரும் திரைப்படங்கள் முற்காலத்தில் நடைபெற்ற வரலாற்றுப்பதிவுகளை வெளிக்காட்டுவதாகவே உள்ளன. இருப்பினும் அவைகள் வியாபார ரீதியாகவும் எடுக்கப்பட்டுள்ளதால் ஆங்காங்கே பலர் தமிழர் வரலாற்றுச் செய்திகளைப்படம் பிடித்துக் காட்டியுள்ளனர். ஆனால் தற்போது எழுந்துள்ள இக்குறும்பட புரட்சியால, பல வரலாறுகளை பாதுகாத்து தொகுத்து வழங்குவதோடு, எதிர்காலத் தோன்றல்களுக்கு பயனளிக்கும் விதமாக பாதுகாக்கப்படும் நிலையைப்பெரும். கலைக் கருவூலங்கள், அருங்காட்சியகங்கள் எல்லாம், அத்தகையக் குறும்படங்களைப் பாதுகாக்கும் இடங்களாக மாறும் இது உறுதி.

7. வயலாரும் திருவள்ளுவரும், இது ஒரு குறும்படம். ஆனால் பார்ப்பவர்களுக்கு ஓர் ஆவணப்படம் என்கிற எண்ணத்தையே உருவாக்குகிறது. இது நீங்கள் திட்டமிட்டே செய்த ஒன்றா? மேலும் இந்த குறும்படத்திற்கு கிடைத்த வரவேற்பு எப்படி?

வீராயி என்ற எனது நாட்டியத்தில் உழவர்கள் வயலை உழுது பக்குவப்படுத்துவது போன்ற காட்சியில், உழவுப்பெருங்குடிகள் பாடும் கிராமிய பண்னமைந்தப் பாடல்களில், திருவள்ளுவரின் உழவு எனும் அதிகாரத்தில் வரும் நான்குப் பாடல்களை மட்டும் எடுத்து இசைத்து காட்சியாகக் காட்டினேன். அதனைக் கண்னுற்ற சிலர் எனது கற்பணை நன்றாக உள்ளது, என்றும் மற்றப்பாடல்களையும் எடுத்துக் கொள்ளக் கூடாதா? என்றும் வினவினார்கள். அதன் அடிப்படையில் மற்றப்பாடல் வரிகளில் உள்ள கருத்திற்கேற்பக் காட்சிகளை சேர்க்கும் போது, புதிதாக உருவானதுதான் வயலாரும் திருவள்ளுவரும் என்ற இக்குறும்படம்.

எனவே ஆரம்பித்தது ஒன்று முடிவானது வேறு, படத்தின் காட்சிகள் அனைத்தும் ஒரேநாளில் காலை 7 மணி முதல் மாலை 6.30 வரையில் பதிவு செய்யப்பட்டவை, ஆரம்பத்தில் என்னை பலர் கிண்டலும் கேலியும் செய்தர்கள். காரணம் எனது கேமரா Sony Handy cam கிராமத்தில் கொண்டுபோய் ஸ்டான்டில் கேமராவை வைத்தவுடன் தெரிந்தும் தெரியாமலும் வெகுபேர் எங்களை நிலம் அளக்க வந்தவர்கள் என்றே கருதிவிட்டனர். முதல்காட்சியாக திருவள்ளுவரின் வசனமாக "இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்" என்ற பாடலுடன் கூடிய காட்சியைப் பதிவுசெய்து, அதனை அங்கே ஒருவரது வீட்டிலிருந்த தொலைகாட்சிப்பெட்டியில் இணைத்து படமாகப் பார்த்த போதுதான் அவர்களது கருத்து தவறு என அவர்களே உணரும்படியானது. அதன் பிறகு காட்சிகள் தொடர்ந்து பதிவுசெய்யப்பட்டன.

எந்தவித முன் அனுபவமோ, முறையான கேமரா ஒளிப்பதிவு பயிற்சியோ இல்லாமல் என் மனதில் பட்டவைகளைப் பதிவுசெய்து பின் எந்த Software பயன்படுத்தினால் சிறப்பான கனினி பதிவாக கிடைக்கும் என்பது கூடத்தெரியாமல்தான் படத்தை தொகுத்தேன் பிறகு எனது அரையிலேயே ஒலிபெருக்கி சாதனங்களை இயக்கி குரல்பதிவும், இசைப்பதிவுகளையும் செய்து, அவைகளையும் படத்தோடு இணைத்தேன், முன் பின் அறியாத ஒருசெயலில் இறங்கிப் பட்டறிவுப்பெற்றதுதான் எனக்குக்கிடைத்த வரவேற்பாகக் கருதுகிறேன், இக்குறும்படத்திற்கும் நல்லவரவேற்பு கிடைத்துள்ளது என்பது உண்மை, சிலர் அவர்களது கிராம இளைஞர் நற்பணிமன்றங்களில் திரையிட குறுந்தகடு பெற்றுச்சென்று வெளியிடுகிறார்கள, புதுவையில் உள்ள "நன்பர்கள் தோட்டம்" என்ற அமைப்பினர் இப்படத்தினை கிராமங்களில் திரையிடுகின்றனா, இளம் மாணவர்கள் பயன் பெறவேண்டி ஒருசில ஆசிரியர்கள் இப்படத்தினை வாங்கிச் சென்றுள்ளனர்.

8. உங்கள் இரண்டு குறும்படங்களிலும் பணியாற்றிய மாற்ற கலைஞர்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

திருவள்ளுவராக புதுவைக்கலைமாமணி கோவி. கலியபெருமாள் அவர்கள் நடித்துள்ளார், இவர் ஒரு பன்முகக் கவிஞா, இசைப்பாவலர், வேறுசில குறும்படங்களிலும் நடித்துள்ளார். இப்படத்தில, திருக்குறள் பாடல்களுக்கு அவரே இசையமைத்துப் பாடியும் உள்ளார், நிறைவாக வரும் பாடலையும் இவரே குரள்வெண்பாவில் இயற்றி இசையுடன் பாடியுள்ளார், புதுவைக் கலைமாமணி விருது நாடகத்துறையில் பணியாற்றியமைக்காகப் பெற்றவர். மேலும் கவித்துறையில் பல பட்டங்களைப் பெற்றவர். பல உரைநடை மற்றும் கவிதை நாடகங்களை இயற்றி அதில் முக்கிய வேடங்களையும் ஏற்று நடிப்பவர் அயராது கலைத்தொண்டு புரியும் அன்பா, உழவராக திரு வேனு ஞானமூர்த்தி, இவர் சுகாதாரத்துறையில் உடல் நல ஆய்வாளராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவா, கிராமத்திலிருந்து நகருக்குப் புலம் பெயர்ந்தாலும் இன்றைக்கும் மன்வாசணையை மறவாதவர், தமிழ் ஆர்வலர். பொது நோக்கும் சுயமரியாதை சிந்தணையையும் உடையவர். படத்தில் நகர்ப்புறவாசியாக வருபவர் டாக்டர் தமிழ்வாணன், இசைக்கவிஞா, நாற்று நடும் பாடலாக வரும் பாடலுக்கும் அதன் இசைக்கும் உரியவர்.

தாத்தாவாக வந்து சிறுமிக்கு கதைகூறுவதாகக் கூறி, நம்மை இரண்டாயிரமாண்டுகளுக்கு முன் அழைத்துச் செல்பவர் திரு தியாகராஜன். ஒய்வுபெற்ற தபால் நிலைய அதிகாரி தமிழ் புலமை அறிந்தவர் இசைமற்றும் நாட்டிய ஆர்வலர் சிறுமி சஜிதா என்னிடம் நாட்டியம் பயிலும் மாணவி சுறுசுறுப்பான புத்திகூர்மையான சிறுமி. திரு காளிதாஸ், 'மாப்ள ஊர்ல இருக்கறவங்க தலையத்தாண்டா எங்கலாள திருத்த முடியுது மூளைய திருத்தமுடியலையே" எனும் வசனத்திற்கு நாவிதராகவும் பறை இசைக் கலைஞராகவும் பங்கேற்றவர் வருமைக்கோட்டிற்கும் கீழே வாழும் நண்பர்.

ஜனார்த்தனன், பல்லிசைக் கலைஞர் மிருதங்கம், கஞ்சிரா, குழல் முகர்சிங் இப்படிப் பல இசைக்கருவிகளை இசைத்து படத்தின் இசைக்கு உதவியவர். பிரபாகரன், தவில் மற்றும் கடம் இசைக்கலைஞா, படத்தின் முகப்பிலேயே இவரது கடம் இசை வெளிப்பட்டு காட்சிகளைக் காண்போரையும் இசைதனை கேட்போரையும் பழையகாலத்திற்கே அழைத்துச்செல்பவர்.

9. உங்கள் அடுத்த திட்டங்கள் என்ன? குறும்படத் துறையில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன?

தமிழர்தம் வரலாற்றுச் சிறப்புகளை, அழகுறப் படம்பிடித்து தொகுத்து விருந்தாக்கல் தமிழர்கள் ஆதி நாள் முதலே சமூக சீர்திருத்தச் சிந்தனையாளர்கள் என்பதனை உலகறியச் செய்வது, அதற்கான படங்களைக் குறும்படங்களாக மட்டுமின்றி நெடுந்தொடர் படங்களாக பதிவுசெய்தல், சுயநிதிப்பொருளதார நிலைக்கேற்ப சிறிது காலதாமதமாகலாம். தன்ணார்வத்துடன் நிதிஉதவியும் செய்து ஊக்குவிப்போர் உண்டாயின் விரைவில் அவைகள் வெளிப்படும்.

10. புதிதாக குறும்படம் எடுக்க வருபவர்களுக்கு உங்களால் ஏதேனும் உதவிகள் செய்ய இயலுமா? அல்லது மற்றவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் உதவிகள் என்ன?

இவர்கள், இவர்களுடன்தான் சேர்வார்கள், என்று ஒரு பொதுவான விதி உள்ளது, அதன் அடிப்படையில்தான் நான் குறும்பட இயக்குநர் திரு. யாழ்நிலவன் அவர்களுடன் சேர்ந்துள்ளேன். அவர் முன்னதாகவேத் தமிழ் ஸ்டுடியோவுடன் சேர்ந்தவர் என்பதனால், இப்போது நாம் ஒரே குடும்பமாகியுள்ளோம். இக்குடும்பத்தில் யார்வந்து சேர்ந்தாலும் அதன் பயனை அடைவார்கள். குறும்படம் எடுக்க வருபவர்களுக்கு அவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நல்ல வழிகளை காட்டி துணை நிற்பேன், படத்தொகுப்பு மற்ற தொழில்நுட்ப பரிமாற்றங்களைப் பகிர்ந்து ஊக்கப் படுத்துவேன்.

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)