கூகிள் குழுமம் Facebook Twitter     தொடர்புக்கு வாயில்  
காணொளி TS படைப்பாளிகள் TS தொழில்நுட்பம் TS போட்டிகள் TS தொடர்கள் TS குறும்பட சேமிப்பகம் TS குறும்பட வழிகாட்டி TS குறும்பட திறனாய்வு TS மற்றவை

படைப்பாளிகள் பகுதியில் குறும்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் இடம்பெறும்.
 
 

 

 

 

 

 
     
     
     
   
படைப்பாளிகள்
1
 
 
     
   
  ---------------------------------  
 

 

 

 
  ---------------------------------  
     
     
  ---------------------------------  
     
     
     
   
  வகைப்பாடு
   
  வகைகள்
  எழுத்தாளர்கள்
 
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 வாயில் TS  படைப்பாளிகள் படைப்பாளிகள் வாயில்

படைப்பாளிகள் - V.R.P. மனோகர்

ஆதவன்  

விளம்பரத் துறைதான் இவருக்கு அறிமுக சீட்டு. ஆயினும் குறும்படங்களின் மீது இவருக்கு உள்ள காதலால் தொடர்ந்து குறும்படங்கள் எடுக்கும் முயற்சியிலும், அதனை சந்தைபடுத்துதளிலும் முனைப்பை காட்டிவரும் திரு. V.R.P. மனோகர் அவர்களின் முதல் குறும்படம் "யாரோ செய்த தவறு". இன்றளவிலும் இந்த தேசம் ஒதுக்கி வைக்கும் எய்ட்ஸ் நோயாளியை அரவணைத்து அன்பு செலுத்த சொல்லும் இந்தக் குறும்படம் உண்மையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஒருவித ஆறுதலை கொடுக்கும். எய்ட்ஸ் நோயும் சாதாராண காய்ச்சல், தலைவலி போன்று ஒரு நோய்தானே என்று அறிவுறுத்தும் விதம்

எய்ட்ஸ் நோயாளிகளின் இதயத்தில் மயிலிறகால் வருடிய இதத்தைக் கொடுக்கும்.

இவரது இரண்டாவது குறும்படம் "அப்பா". ஒவ்வொரு தகப்பனும் தன் குழந்தைகள் மீது மாசற்ற அன்புடன்தான் இருக்கின்றான். ஆனால் பொருளாதார ரீதியிலான சிக்கல்களில் மாட்டித் தவிக்கும் பொழுது அந்த அன்பை, அக்கறையை வெளிப்படுத்த இயலாது போய்விடுகின்றான் என்று தனது இரண்டாவது படத்தை பற்றி குறிப்பிடும் திரு. மனோகர் இந்த படத்தில் நல்ல நடிகராகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இவரது குறும்படங்கள் குறிப்பாக பெண்களுக்கு பிடிக்கும் வகையில் சென்டிமென்டாக அமைத்துள்ளது குறுப்பிடத்தக்கது.

இனி இயக்குனர் திரு. V.R.P. மனோகர் அவர்களுடன் ஒரு நேர்காணல்:

1. உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பப் பின்னணி பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்?

முதலில் தமிழில், தமிழ் குறும்பட ஆர்வலர்களுக்கான இணைய தளம் துவங்கி, அதனை சரியாக வளர்த்துச் செல்கின்ற குணா மற்றும் அருண் ஆகிய உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

இனி என் பின்புலம்

விருதுநகரில் கோடீஸ்வர வீட்டில் 1954 ல் பிறந்தது ஒரு வரம். காலச்சுழற்சியில் செல்வங்கள் கரைந்து 1978ல் பிழைப்புத் தேடி சிவகாசி வந்தது மற்றுமொரு வரம்.

நிறைய சம்பாதிக்காவிட்டாலும், நிறைவாய் சம்பாதித்த திருப்தி, நிறைவான குடும்பம். மகனும் மருமகளும் அமெரிக்காவில் கணினிப் பொறியாளர்கள், பெண் திருமணம் ஆகி மதுரையில். மருமகன் திரு.ஜெகதீஷ்குமார் மதுரை THE HINDU வில் உதவி மேலாளர். 2 1/2 வயதில் அற்புதமான மகள்வழிப் பேரன் கிருஷ். அச்சுத்துறையில் ஆரம்பித்து, விளம்பரத்துறையில் கால் பதித்து, குறும்படங்களில் தற்பொழுது என் நிலைப்பாடு.

2. விளம்பரத் துறை ஓரளவுக்கு பணம் ஈட்டிக்கொடுக்கும் துறை. ஆனால் குறும்படத் துறை அப்படியல்ல? பிறகு ஏன் உங்கள் கவனம் குறும்படத் துறை மீது திரும்பியது?

விளம்பரத்துறை பணம் ஈட்டிக் கொடுக்கும், அதை விடுத்து ஏன் குறும்படத் துறை என்பது உங்கள் கேள்வி. பணம் சம்பாதிப்பது மட்டுமே குறிக்கோளாய் என்னால் வாழ இயலாது. அது என்மீது, என் குடும்பத்தாரும், நண்பர்களும் சுமத்தும் குற்றச்சாட்டும் கூட. விளம்பரத் துறையிலும் ஆரோக்கியமற்ற போட்டிகள். அலுத்துவிட்டது. வாய்ப்புக்காக யார் கதவையும் என்றும் தட்டுவதில்லை. தேடி வருபவர்களுக்கு நிறைவான சேவை. நியாயமான லாபம். இதுவே ஒரு சுகம்.

சோரம் போய்விட்ட தமிழ் சின்னத்திரையினால் உறுதியாகிவிட்ட சமுதாயச் சீரழிவுகளை குறும்படங்கள் என்ற அழகான ஆயுதத்தால் நிர்மூலமாக்க இயலும் என்ற அழுத்தமான நம்பிக்கை.

அதனால்தான் உங்கள் இணையதளத்தின் மீது அளவற்ற காதல்.

எனினும் குறும்படத் துறையையும் இன்னும் சீர்படுத்த வேண்டும். நல்லதைச் சொல்வோம். நல்லதை மட்டுமே சொல்வோம். இதுவே நம் எண்ண ஓட்டமாக இருக்கட்டும். இருக்கவேண்டும்.

3. எய்ட்ஸ் நோயும் மாற்ற நோய்களைப் போலவே சாதாரண நோயாகத்தான் பார்க்கப் படவேண்டும் என்கிற கருத்தை இந்தக் குறும்படம் உணர்த்துகிறது. குறும்படங்கள் இது போன்ற கருத்துகளை வலியுறுத்தி பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்கிறீர்கள? அல்லது எதிர்கால இயக்குனாராகும் ஆசையில் தங்களை சோதித்துக் கொள்ளும் முயற்சியாகக் கருதுகிரீர்கள?

இந்தப் படத்தை ஆழ்ந்து பார்த்தால் - எய்ட்ஸ் நோய்க்கு அப்பாற்பட்டு வேறு சில நல்ல கருத்துக்களையும் ஆழமாக பதிவு செய்துள்ளதாக நம்புகின்றேன். எல்லோரையும் நேசிக்கும், எல்லோருக்கும் நல்லது செய்யும் மனோபாவம். மனைவி மீது ஆழமான காதல். யாரோ ஒரு பெண், அதுவும் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணை மகளாய் ஏற்றுக் கொள்ளும் உயர்ந்த பண்பு. நடந்து முடிந்ததைத் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை என்ற பாடம். வாழ்க்கையை எப்பொழுதுமே ஆக்கபூர்வமாக எதிர் கொள்ள வேண்டும் என்ற மனோபலம்.

இந்தப்படம் சமுதாயத்தில் ஒரே ஒரு சதவிகிதம் அதிர்வை ஏற்படுத்தியிருந்தால் கூட அதுவே போதுமானது. அந்த இலக்கை நோக்கி அனைத்து படைப்பாளிகளும் பயணப்பட வேண்டும் என்பதே என் அவா. நான் எதிர்கால இயக்குநரா, நிகழ்கால இயக்குநரா என்பதல்ல கேள்வி. நல்ல விஷயங்களைச் சொல்லத் தகுதி உள்ள இயக்குநரா என்பது மட்டுமே கேள்வியாக இருந்திருக்க வேண்டும். ஆம் என்பது பதிலாக அமைந்தால் அதைவிட வேறு மனநிறைவு இருக்க இயலாது.

4. இது போன்று படங்கள் எடுக்கும் போது பிரச்சார நெடியும், நாடகத் தன்மையும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்குமே? அதை எப்படி சமாளித்தீர்கள்?

பிரச்சார நெடி, நாடகத் தன்மை இந்த குறும்படத்தில் தவிர்க்கப்பட்டிருப்பதாக தாங்கள் கருதியதற்கு நன்றி. எந்த ஒரு கருத்தையும் இயல்பாய் சொல்ல முயன்றாலே நீங்கள் சொன்ன இரண்டையும் எளிதாய் தவிர்த்து விடலாம்.

5. உங்களின் இரண்டாவது குறும்படம் ("அப்பா") பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

“அப்பா” - குறும்படம் - என் வாழ்வில் நான் சந்தித்த எதிர் விளைவுகளின் தாக்கம். ஒவ்வொரு தகப்பனும் தன் குழந்தைகள் மீது மாசற்ற அன்புடன்தான் இருக்கின்றான். ஆனால் பொருளாதார ரீதியிலான சிக்கல்களில் மாட்டித் தவிக்கும் பொழுது அந்த அன்பை, அக்கறையை வெளிப்படுத்த இயலாது போய்விடுகின்றான். ஒரு கல்லூரி மாணவி தன் தந்தையின் உண்மையான அன்பை உணர்ந்து உருகுவதுதான் கரு.

6. குறும்படத் துறையை மாற்று ஊடகமாக கருதுகிறீர்களா? தொடர்ந்து குறும்படங்கள் எடுக்கும் நீங்கள் அதற்கான செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்? குறும்படங்கள் விற்பனையாகும் வாய்ப்பு ஏதேனும் உள்ளதா?

சரியான வார்த்தைப் பிரயோகம். வாழ்த்துக்கள். குறும்படங்கள் மாற்று ஊடகம் தான். தொடர்ந்து குறும்படங்கள் இயக்குவதாகத் தான் உள்ளேன். குறும்படங்களை விற்பனை செய்வது குறித்து, மிகுந்த ஆழமாக யோசித்து வருகின்றேன். அது குறித்த முயற்சிகள் துவங்கி விட்டேன். நல்ல விஷயங்களை மட்டுமே சொல்ல வேண்டும் என்ற எண்ணமுள்ள விளம்பரதாரர்களிடம் தொடர்ந்து பேசி வருகின்றேன். விரைவில் குறும்பட படைப்பாளிகள் அனைவருக்கும் நல்ல செய்தி சொல்வேன்.

7. தமிழகத்தில் தற்போது குறும்படங்கள் குறித்து விழிப்புணர்வு எப்படி உள்ளது? குறும்பட இயக்கங்கள் அந்த வேலையே சரியாக செய்கிறது என்று நினைக்கிறீர்களா?

மன்னிக்கவும். குறும்படங்கள் குறித்த விழிப்புணர்வு சரியாக வளர்க்கப்படவில்லை. குறும்பட இயக்கங்கள் அவர்களுக்கான பணியைச் சரியாகச் செய்யவில்லை என்பதே என்னுடைய கருத்து.

நான் சொல்வது, செய்வது சரி-நீ சொல்வது செய்வது தவறு என்ற மனோபாவம்தான் இங்கு உள்ளது. அது மிகவும் வருந்தத்தக்கது.

8. இலக்கியம் சார்ந்தோ அல்லது ஒரு வரலாற்றுப் பதிவையோ குறும்படம் அல்லது ஆவணப்படமாக்கும் எண்ணம் உள்ளதா?

வரலாற்றுப் பதிவை குறும்படம் ஆக்கும் எண்ணம் உறுதியாக உள்ளது. காலம் கனியும்.

9. உங்கள் குறும்படங்களுக்கு கிடைத்த வரவேற்பு எப்படி? அது போதும் என்று கருதுகிறீர்களா? உங்கள் குறும்படத்தில் உங்களுடன் பணியாற்றிய சகக் கலைஞர்கள் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

என் குறும்படங்களுக்குக் கிடைத்த வரவேற்பு என்னை நெகிழச் செய்கின்றது. “அப்பா” என்ற என்னுடைய குறும்படத்தை சமீபத்தில் என் நண்பர்களுக்குத் திரையிட்டுக் காண்பித்தேன். ஒருவர் BSNL நிறுவனத்தில் இணை பொது மேலாளர், கல்லூரி விரிவுரையாளர்கள், வங்கி அதிகாரிகள், அவர்கள் துணைவியர் என பலர். படம் முடிந்ததும் அனைவர் கண்களிலும் கண்ணீர் துளிர்த்து இருந்ததைக் காண முடிந்தது. அந்த ஆத்ம திருப்திக்கு விலையேது?

என்னுடைய குறும்படங்கள் என்பதே தவறான வார்த்தைப் பிரயோகம் என்றுதான் சொல்வேன். எங்களுடைய குறும்படங்கள் என்றுதான் எப்பொழுதும் சொல்வேன். இணை, துணை இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், ஒப்பனைக் கலைஞர், படப்பிடிப்பு ஒருங்கிணைப்பாளர், ஏன் எனக்கு சரியான சமயத்தில் சூடான காபி கொடுத்த அந்த சமையல் கலைஞருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டவன்.

10. புதிதாக குறும்படம் எடுக்க வருபவர்களுக்கு உங்களால் ஏதேனும் உதவிகள் செய்ய இயலுமா? அல்லது உங்களுக்கு ஏதேனும் உதவிகள் பிறரிடம் இருந்து தேவைப்படுகிறதா?

புதிதாக குறும்படம் எடுக்க வருபவர்களை இருகரம் நீட்டி வரவேற்கின்றேன். நான் கற்ற இந்த வித்தையை, இறைவன் எனக்குத் தந்த வரத்தை ஆத்மார்த்தமாய் குரு என்ற நிலைப்பாட்டில் இருந்து அனைத்து இளைஞர்களுக்கும், இளைஞிகளுக்கும் கற்பிக்க ஆர்வமாய் உள்ளேன்.

பிறரிடம் இருந்து எனக்கு உதவிகள் என்று சொல்வதாய் இருந்தால்-பொருளாதார ரீதியாக உதவி செய்யக்கூடிய நல்ல மனம் கொண்ட தயாரிப்பாளர்கள் தான் இப்போதைய தேவை.

சற்று நீளமாய் பதில் சொல்லிவிட்டேன் என்று எண்ணுகின்றேன்.

மீண்டும் ஒருமுறை உங்கள் இருவருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.

படைப்பாளிகள் பயணிப்பார்கள்...


 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

I cannot connect to the database because: Can't connect to local MySQL server through socket '/var/run/mysqld/mysqld.sock' (2)