தத்துவங்களால் நிரப்பப் பட்டிருக்கிறது இவ்வுலகம். மனிதன் தன்னை உணர, இப் பிரபஞ்சத்தின் இயங்கியலை உணரத் தலைப்பட, மனித சமூகத்திற்கான மேன் நிலையை தேடத் தொடங்க, ஒட்டுமொத்த இருப்புக்கான காரண காரியங்களை சிந்திக்கத் தொடங்கியதும் பிறப்பெடுக்கத் தொடங்குகிறது தத்துவங்கள். தத்துவங்கள் இல்லாமல் நாம் நம் வாழ்வியலை அமைத்துக் கொள்வதில்லை. சித்தர்களும், யோகிகளும், புத்தரும், எண்ணற்றவர்களும் நம் நன்னிலத்தில் வாழ்வுக்கான அறத்தையும், இம்மைத் துன்பத்தை களையவும் பிராயத்தனம் செய்திருக்கிறார்கள். இதுவே ஆன்மீகத்தின் மொத்த புலமாக தமிழ் தேசியத்தை மாற்றியிருக்கும். தமிழ் நாட்டிற்கென தனித்துவமான கோயில் கட்டடக் கலை மரபும் நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த பக்தி இலக்கியங்களிலேயே புரிந்து கொள்ள இயலும். நாம் இன்றும் பொது மன நிலையாக ஒலைச் சுவடிகளுடம் சித்தர்கள் அலைவதாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.
ஆன்மிகமென்றும், தியானமென்றும் நம் வாழ்க்கை நெறியாக மேற்கொள்ள ஏற்பட்ட சிந்தனைகள் ஈடேற்ற மென்றும் மனதுக்குள் அமைதியை கொண்டுவரச் செய்தலும் மிகச் சிறந்த உடற்பயிற்சியாக இருத்தலுமே அதன் அடிப்படை. பெரும்பான்மையான இந்தியச் சிந்தனை முறைகளை கருந்து முதல்வாதத்திற்குள் அடக்கிவிடலாம். இதை நமக்குள் மெற்கொண்டிருக்கும் நாம் இச்சிந்தனை முறைகள் தனிமனிதனுக்கானதே அன்றி ஒட்டு மொத்தச் சமூகத்திற்கான மாற்றம் இதில் இல்லை என்பதே யதார்த்தம். ஆதியில் தொடங்கிய போர்கள் இன்றும் காட்டுமிராண்டி சமூகம் போல் உலகில் தொடர்வதற்கு மறைமுகமாக இருப்பவை மனிதனை நெறிப்படுத்துவாதாகச் சொன்ன மதங்களின் பின்னனியே.
சிங்களர்கள் அமைதி வேண்டி நடத்திய ஊர்வலத்திற்கு இடையில் புகுந்து நம்மூர் குண்டர்களைப் போல் தடுத்து நிறுத்திய புத்தபிக்குகளை என்சொல்வேன். ஆயிரமாயிரம் அப்பாவிகளைக் கொன்ற ராஜபக்சேவை பட்டங்கள் வழங்கி சிறப்பித்த புத்தனை என்சொல்வேன். இங்கே தான் வரலாறு தன் அழிகிய எதிர்புகளை கட்டமைத்து அதன் அபத்தங்களைக் காட்டிச் சிரிக்கிறது. புத்தமதம் ஈழத்தில் பரவ காரணமாக இருந்த நிகழ்வும் அது இன்று செயல்படுத்தும் துன்பியல் கொடுமைகளும் நகைப்புக்குரியவை. அசோக சக்கரவர்த்தி வென்ற போரில் தன்னால் கொல்லப்பட்ட மனித உயிர்களையும் அவை ஏற்படுத்திய அவலகுரல்களையும் சோகங்களையும் கண்டு மனம் வெதும்புகிறான். யுத்தங்கள் நடைபெறாமல் இருக்க அன்பு செழிக்க மனம் மாறி புத்த மதத்தை தழுவுகிறான். அன்பை போதித்த புத்த மதத்தை பரப்புவதை தன் நோக்காக கொள்கிறான். தன் மகனை ஈழத்திற்கு அனுப்பி புத்த மதத்தை பரவச் செய்கிறான். அன்பு செழித்ததால் புத்த மதம் தழைத்தது. தன் மதம் அல்லாத வேற்று மொழி பேசும் மதத்தை மக்களை அடிமையாக்க வைத்தது. வேற்றினம் எதிர்கலகம் செய்யவும் இரக்கம்மின்றி அழித்தது. புத்தம் சரணம் கச்சாமி.
நம் சமூகம் கட்டமைத்திருக்கிற அப்பழுக்கற்ற அரசியலில்(!), பொதுவெளியில் உலவித் திரியும் சாதிய அமைப்பு, சிந்திப்பதையே மழுங்கடிக்கும் வெகுசன ஊடகங்கள், சினிமா, பத்திரிகை இத்தியாதிகளை எந்த ஆன்மீகத் தத்துவங்களும், தியான முறைகளும், சிந்தனைகளும் மாற்றவில்லை. மாற்ற வருபவை என்று சொல்லுவதெல்லாம் இன்னொரு மதமாக, இன்னொரு இனமாக, இன்னொரு குழுவாகவே மாறும். அது தன்னை ஏற்காத பிற இனத்தை, பிற மதத்தை, பிற குழுவை அழிப்பதில் ஒரு நியதியை வைத்திருப்பவை. ஜெ.கிருஷ்ணமூர்த்தி உலகெங்கிலும் பரவியிருந்த இயக்கமான "த ஆர்டர் ஆஃப் த ஸ்டார் (the order of the star) கலைத்ததற்கு மேற்சொன்ன காரணமும் ஒன்று. நம் சிந்தனை முறைகளுக்கு நேர் எதிரான சிந்தனை முறைகளை மேற்குலகில் பார்க்கலாம். கருத்து முதல்வாதமும் பொருள்முதல்வாதமும் ஒன்றோடொன்று மோதி உருவான தத்துவங்களை உருவாக்கிய சிந்தனையாளர்களை பெற்றிருக்கிறார்கள். தனிமனித சிந்தனை தவிர்த்து ஒட்டு மொத்த சமூகத்திற்கான பார்வைகளை நிறுவியிருக்கிறார்கள். கம்யூனிச சித்தாந்தம் இதன் உச்ச வெளிப்பாடு.
தமிழில் மேற்கத்தியச் சிந்தனை முறைகளை அறிமுகப்படுத்தவும், அதனால் கிளர்ந்தெழும் கருத்து விவாதங்களும், இலக்கியப் படைப்பு முறைகளும் பொது வாசகனுக்கு கற்றுத் தர இங்கு வெகு சிலரே இருக்கின்றனர். பின்னவீனத்துவம், அமைப்பியல்வாதம், இருந்தலியம் போன்றவை தமிழில் பேசப்பட்டாலும் அதை முற்றாக வளர் சமூகத்துக்குச் எடுத்துச் சொல்வதற்கு இங்கு குறைவான ஆட்களே உள்ளனர். அதிலும் சிலர் தங்களை அறிவு ஜீவிகளாக உருமாற்றம் செய்து கொண்டார்கள். 'தொரை இங்கீலீசெல்லாம் பேசுது' என்பது போல் புதுவாசகன் இருக்க 'என் புத்தகங்களை படிச்சும் உனக்கு பின்னவீனத்துவம்னா என்னன்னு கூடத் தெரியாதா?' என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 'அந்த எழுத்தாளரின் எழுத்து பின் நவீனத்துவத்தைச் சார்ந்தா இல்லை பீலா விடுகிறாரா' என்று குழம்பிப் போய் நிற்கிறான் வாசகன். தத்துவங்களை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக இருப்பவர் எம்.ஜி.சுரேஷ். மேலும் அவர் எழுத்து இத்தத்துவங்களை குழப்பாமல் எளிய மொழியில் வாசகன் விளங்கக் கூடிய வகையில் இருக்கும்.
அம்பத்தூரில் இருந்த எம்.ஜி.சுரேஷின் வீட்டில் கதை சொல்லிக்காக சந்திக்கச் சென்றிருந்தோம். சாலையின் இருமங்கும் சிறுமுதலீட்டு தொழிற்சாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது போல் இருந்தது. கைக்குலுக்கள்களுடன் அவருடன் சிறிது உரையாடத் தொடங்கினோம். முதல் கேள்வி அவரிடம் தத்துவங்கள பற்றிய அவருடைய ஈடுபாடு பற்றிய கேள்வியாக இருந்தது. வரலாறு தனக்குப் பிடித்தமானதாக இருந்தது என்றும் அதன் தொடர்ச்சியே தத்துவங்களைப் பற்றி அவருடையாக எழுத்துக்கு அடிப்படையாகவும் இருந்தது என்றார். அவர் தயாரிப்பில் இருந்த கதைகளைத் தவிர்த்தும் மேலும் கதைகளைக் கேட்க அவரும் ஒப்புக் கொண்டார்.
எம்.ஜி.சுரேஷுடன் தற்கால எழுத்தாளர்களின் கதைகள் பற்றி கதைக்கத் தொடங்கினோம். ஜெயமோகனின் "டார்தீனியம்" சிறுகதை எனக்கு மிகப் பிடித்த கதைகளில் ஒன்று. அக்கதை ஏற்படுத்திய இறுக்கத்தாலும் வெறுமையாலும் நீண்ட நாட்கள் எதையும் வாசிக்காமல் மன அவதிக்கு ஆளானேன். இக்கதைக்கான பின்புல அரசியலைச் சொன்னார் எம்.ஜி.சுரேஷ். மேலும் இக்கதைக்கு பின்புலமான லத்தீன் அமெரிக்கச் சிறுகதையையும் சொன்னார். 'ஒரு அமெரிக்கச் செடியை ஒருவன் வாங்கி வந்து தன் வீட்டில் நடுகிறான். அச்செடி கிளைத்து தழைந்து வளரத் தொடங்குகிறது. அதன் கிளைகள் வீட்டின் ஒவ்வொரு இடங்களிலும் படரத் தொடங்குகிறது. வீட்டின் வரவேற்பறை, குசினி, படுக்கை அறையென எல்லா இடங்களிலும் படரத் தொடங்குகிறது. செடியை நட்டவன் செய்வதறியாது திகைக்கிறான். வீட்டிற்குள் எங்கும் இடமில்லாமல் போகவே கழிவறைக்குள் சென்று ஒளிந்து கொள்கிறான். அப்பொழுது அச்செடி கழிவறையின் கதவை தட்டுகிறது'.
'இன்றைய காலத்தில் பாலியல் (porno) பற்றி எழுதிவிட்டு பின்னவீனத்துவம் என்கிறார்கள். ஆனால் போர்னோ எழுத்து பின்னவீனத்துவத்தில் சேராது' என்றார் எம்.ஜி.சுரேஷ்.
எம்.ஜி.சுரேஷ் சொல்லிய கதைகள் குறியீடுகளால் நிறைந்திருந்தது. ஒவ்வொரு கதைகளுக்குள்ளும் ஆழ்ந்த அரசியல் நிறைந்து இருந்தது. கதைகள் அதன் அரசியல் தளத்தில் ஆழம் கொண்டதாலோ என்னவோ அவர் கூறிய கதைகள் குறுங்கதைகளின் வடிவமாகிப் போனது. ஒவ்வொரு கதைகளையும் முடித்த பின்னர் அதன் உள்ளுள் ஒளிந்திருக்கும் பன்முகத் தன்மையை விளக்கினார். ஒரு பிரதியின் கட்டுடைப்பு என்னவெல்லா சாத்தியங்களில் புரிந்து கொள்ளவியலும் என்பதை அவர் விளக்கிய விதம் அழகு.
(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)
----------------------------------------------------------------------------------------------------------------------------
சில முக்கியக் குறிப்புகள்:
* கதைகளை கேட்க கீழே உள்ள பச்சை நிற பொத்தானை (Click Green Color Button) சொடுக்கவும்.
* கதைகளை துல்லியமாக கேட்க Head Phone பயன்படுத்தவும்.
* கதைகள் Download ஆக சிறிது நேரம் பிடிக்கும். (236 KBPS) வரையே இந்த பிரச்சனை. அதையும் தாண்டி அதிகளவில் அகண்ட அலைவரிசை இருக்குமேயானால் கதைகளை எவ்வித இடையூறும் இன்றி கேட்கலாம்.
* கதைகளை தரவிரக்கம செய்துக் கொள்ளும் வசதி தற்போது இல்லை.
* இவைகளை தாண்டி கதைகளைக் கேட்பதில் உங்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருக்குமேயாயின் எங்களுக்கு தெரிவியுங்கள். thamizhstudio@gmail.com
---------------------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------------------------- |
கதைகள் அனைத்தும் அருமை. உங்கள் புத்தகங்கள் படிக்க ஆவல். அப்படி என்ன இருக்கிறது நவீனத்துவம் இசங்கள் என்று தெரிந்துக் கொள்ள.
அனுப்பியவர் கண்ணன் on Monday, 18.04.11 @ 12:41pm
கதைகளை கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் எல்லா கதைகளையும் ஏதோ ஒரு கோட்பாட்டில் அடைத்து ஏன் வதைக்கிறீர்கள். புரிகிறதா படிக்கிறோம், புரியலனா விட்டுடுறோம்.. ஆனால் எல்லாத்தையும் இப்படி பார்த்தா வாழ்க்கையை எப்படி வாழ முடியும்
அனுப்பியவர் சுரேஷ் குமார் on Monday, 18.04.11 @ 12:59pm
ஜெயகாந்தன் கதையாகட்டும், மரியாவின் கதையாகட்டும் உங்கள் குரலில், உங்கள் விவரணைகளோடு கேட்கும்போது மிக இனிமையாக இருக்கிறது. நிறைய விசயங்களை தெரிந்துக் கொள்ள முடிகிறது. மிக்க நன்றி சார்.
அனுப்பியவர் மாதவன் on Monday, 18.04.11 @ 13:01pm
கலைகளை இப்படியெலாம் வகைப்படுத்தி மனிதன் மேன்மையுற வழிகோலிய இந்த தொழில்நுட்பத்திற்கு மிக நன்றி. சுரேஷ் அவர்களின் கதைகள் நிச்சயமாக வேறொரு தளத்திற்கு எங்களை இட்டு செல்லும். அவரிடம் நிறைய பேச வேண்டும், நிறைய கேட்க வேண்டும் போல் இருக்கறது.
அனுப்பியவர் குகன் R on Monday, 18.04.11 @ 13:04pm
இது கதை சொல்லியின் அடுத்தக் கட்டம் என்றே நினைக்கிறேன். வெறும் கதைகளாக மட்டுமில்லாமல் அதன் கோட்பாடுகள் சார்ந்தும் கேப்பது மிகுந்த சுவாரசியமான ஒன்று. குழந்தைகள் கதையும் அருமைதான்.
அனுப்பியவர் வாசு on Monday, 18.04.11 @ 13:07pm
கதைகளை இப்படி கேட்பதும் மிக அருமையாக இருக்கிறது. உலகக் கதைகளை இனி அனைவரும் அதிகமாக சொல்ல வேண்டும். எல்லாக் கதைகளும் சிறியதாக இருந்தாலும் நன்றாகவே இருக்கிறது.
அனுப்பியவர் வசந்த் on Monday, 18.04.11 @ 13:34pm
குட்டிக் குட்டிக் கதைகள் என்றாலும் கதைசொல்லியின் ஆளுமை கதைகள் முழுவதிலும் பரவி கிடக்கிறது. மிக முக்கியமான பதிவுதான் இவை.
அனுப்பியவர் விக்ரம் on Monday, 18.04.11 @ 13:46pm
நிறைய பெதமைத்தனமும், அறியாமையும் தான் இந்த கட்டுரையாளர் கருத்தில் தெரிகிறது. மடத்தனமான இதுப் போன்ற கருத்துகளை எப்படி அருண் அனுமதித்தார். சர்ச்சைகள்தான் முக்கியம் என்று அவரும் நினைக்க ஆரம்பித்து விட்டாரோ, ? என்ன இருந்தாலும் கதை சொல்லி போன்ற பல லட்சம் வாசகர்களும் வந்து வாசித்துப் போகும் இடத்தில் இதுப் போல் அரை வேக்காட்டுத் தனமாய் ஒருவர் எழுதுவதை மனம் விரும்பவில்லை. ஆன்மிகமும், தியானமும் இந்த நாட்டின் மிக பெரிய சொத்து. அதனை யாரும் இப்படி ஏளனம் செய்வதை அனுமதிக்க முடியாது.
அனுப்பியவர் செழியன் on Monday, 18.04.11 @ 23:24pm
கதை சொல்லியை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து செல்லும் உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன். ஆனால் இங்கே கதைகள் சரியாக சொல்லப் படவில்லை என்பதை மறுப்பதற்கு இல்லை. கதையை நன்றாக சொல்லிவிட்டு அது பற்றிய கோட்பாடுகள், இசங்கள் என விளக்கி இருக்கலாம். கட்டுரை எழுதிய லிவி சிறப்பாக உள்வாங்கி எழுதுகிறார். அவரது எழுத்தில் நல்ல ஆளுமை தெரிகிறது. விரைவில் அவரது படைப்புகளையும் எதிர்பார்க்கிறேன். நன்றி. விமல் (துபாய்)
அனுப்பியவர் விமல் on Tuesday, 19.04.11 @ 00:38am
கதைகளும், கட்டுரையும் சொல்ல வேண்டியதை விடுத்து ஏதோ சொல்கிறது. தேவையே இல்லாமல் கட்டுரை எழுதிய லிவி எங்கெங்கோ செல்கிறார். கட்டுரை அதன் தனித் தன்மையை இழந்துவிடுகிறது. கதைகளும் அவ்விதமே.
அனுப்பியவர் பத்மராஜா on Tuesday, 19.04.11 @ 02:19am
கதைகள் சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம் அதிகம். குழந்தைகள் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அனுப்பியவர் சிவா on Tuesday, 19.04.11 @ 03:21am
நா. முத்துசாமியும், எம். ஜி. சுரேஷும், இந்திய அணிக்கு கிடைத்த ஸ்ரீ சாந்த் போல தமிழ் ஸ்டுடியோவிற்கு.. வேறொன்றும் சொல்வதற்கல்ல.
அனுப்பியவர் மதி சுதா on Tuesday, 19.04.11 @ 03:27am
சிங்களர்கள் அமைதி வேண்டி நடத்திய ஊர்வலத்திற்கு இடையில் புகுந்து நம்மூர் குண்டர்களைப் போல் தடுத்து நிறுத்திய புத்தபிக்குகளை என்சொல்வேன். ஆயிரமாயிரம் அப்பாவிகளைக் கொன்ற ராஜபக்சேவை பட்டங்கள் வழங்கி சிறப்பித்த புத்தனை என்சொல்வேன். இங்கே தான் வரலாறு தன் அழிகிய எதிர்புகளை கட்டமைத்து அதன் அபத்தங்களைக் காட்டிச் சிரிக்கிறது. /// இப்படி உணர்வு பூர்மாக நியாயம் பேசும் நீங்கள், //////தமிழ் நாட்டிற்கென தனித்துவமான கோயில் கட்டடக் கலை மரபும் நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த பக்தி இலக்கியங்களிலேயே புரிந்து கொள்ள இயலும். நாம் இன்றும் பொது மன நிலையாக ஒலைச் சுவடிகளுடம் சித்தர்கள் அலைவதாக நம்பிக் கொண்டிருக்கிறோம்.//// இப்படி உண்மைக்கு புறம்பான பொய்யை ஏன் எழுத்தில் பதிகிறீர்கள். சித்தர்களின் வாழ்க்கை பற்றி உங்களுக்கு என்ன பெரிதாக தெரிந்து விடும். தமிழ் ஸ்டுடியோ ஏன் தன்னுடைய மாணவர்கை திருவண்ணாமலை பயணம் செய்ய பணித்தது. திரைப்படம் எடுக்கும் மாணவர்களுக்கு அங்கே என்ன வேலை? அருணிடம் நீங்கள் எழுதியதை அருண் ஒப்புக் கொள்வாரே யானால் அவரைக் கேட்டு சொல்லுங்கள்?
அனுப்பியவர் பாண்டியன் on Tuesday, 19.04.11 @ 03:30am
கதைகளை விட அதுப் பற்றிய விவரணைகள் அதிகம். இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது.
அனுப்பியவர் மாலதி on Tuesday, 19.04.11 @ 04:04am
நிச்சயம் இசங்கள், கோட்பாடுகள் சார்ந்து தவிர்க்கப்பட முடியாத ஆளுமை எம். ஜி. சுரேஷ். ஆனால் கதை சொல்லியல் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது.
அனுப்பியவர் ராஜப்பாண்டி on Tuesday, 19.04.11 @ 04:38am
கதைகள் அருமை.சில இடங்களில் ஒன்றும் புரியவில்லை. குழந்தைகள் கதைகளை ரசித்துக் கேட்டேன்.
அனுப்பியவர் திலகவதி on Tuesday, 19.04.11 @ 05:26am
கதை மிக இனிமையாக இருக்கிறது என்று இப்போது சொல்ல முடியவில்லை. இது யாரோ அறிவு ஜீவிகளுக்கு சொன்ன கதை போல இருக்கிறது.
அனுப்பியவர் விஜய் on Tuesday, 19.04.11 @ 10:57am
கட்டுரை எழுதும் முன்னர் நிறைய யோசித்து எழுதுங்கள் நண்பரே.. நீங்கள் ஒன்றும் உங்கள் சுய புத்தகத்தில் எழுதவில்லை. பல லட்சக்கணக்கான வாசகர்கள், விபரம் தெரியாத புது வாசகர்கள் என பலப் பிரிவினர் வந்து வாசிக்கும் இடத்தில் எழுதுகிறீர்கள் அதற்கான சுயப் பொறுப்பு உங்களுக்கு உண்டு என்பதை உணர்ந்து எழுதுங்கள். மற்றபடி கதைகள் பரவா இல்லை. சுரேஷ் அவர்கள் இன்னும் கொஞ்சம் முயன்று நிறைய நல்ல கதைகளை சொல்லி இருக்கலாம்.
அனுப்பியவர் சத்தியன் on Tuesday, 19.04.11 @ 11:09am
என்னவோ பேசுறீங்க.. ஆனால் கதையை இன்னும் காணோமே பாஸ்..
அனுப்பியவர் கதிர் on Tuesday, 19.04.11 @ 11:33am
கதை சொல்லி எப்போதும் அருமையாக இருக்கிறது. எம். ஜி. சுரேஷ் மிக தெளிவாக விளக்கி சொல்லும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது.
அனுப்பியவர் செல்வேந்திரன் on Tuesday, 19.04.11 @ 11:45am
இப்போது ஏன் கதை சொல்லி வாரம் ஒரு முறை வருவதில்லை. கதை சொல்லிக்கும் எனக்குமான நெருக்கன் குறைந்தது போன்றே நான் உணர்கிறேன். என் போல் நிச்சயம் ஆயிரக்கணக்கான நண்பர்கள் உணர்வார்கள். யாரும் சொல்வதில்லை. நான் தான் சொல்கிறேன். தயவு செய்து வாரம் ஒரு முறை பதிவேற்ற முயற்சியுங்கள்.
அனுப்பியவர் ராமச்சந்திரன் on Tuesday, 19.04.11 @ 12:10pm
maadham mummaari mazhai peiyaavittaalum, engal kadhai solliyaai maadham naangu murai padhivetri vidungal. punniyamaaip pogum.
அனுப்பியவர் Velkumar on Tuesday, 19.04.11 @ 22:41pm
kadhaigal nanraaga irukkiradhu. thodarndhu vaaraa vaaram padhivetra seiyungal.
அனுப்பியவர் Selvam on Wednesday, 20.04.11 @ 03:13am
kadhaigal ketka nanraaga irukkiradhu. naan inayatthirku varuvadhe இந்த kadhai solliyaik ketka mattume. matrapadi enakkku inayatthil onrume theriyaadhu. en ponravargalukkaavaadhu vaaram oru murai கொண்டு vaarungal. en magan sonna piraguthaan naan vandhu kadhaik ketkiren.
அனுப்பியவர் Ramasami on Wednesday, 20.04.11 @ 03:44am
nalla kadhaigal vilakkangalum arumai. valthugal.
அனுப்பியவர் Danush on Wednesday, 20.04.11 @ 23:38pm