கழுகுப் பார்வை
தமிழ்த் திரைப்படம் உயிர்த்தெழுமா? – ந. முருகேச பாண்டியன்
 |
முருகேசப் பாண்டியன், இலக்கிய உலகில் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருப்பவர். தனது வாசிப்பின் மூலமே பரவலாக அறியப்பட்டவர். என் இலக்கிய நண்பர்கள் எனும் இவரது நூல் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கிராமத்து நினைவுகளை உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதி வருபவர். கல்லூரிப் பணிகளுக்கிடையே தொடர்ந்து வாசித்தும், எழுதிக் கொண்டும் வரும் முருகேசப் பாண்டியன் அவர்கள் தனது |
திரைப்பட அனுபவத்தை , திரைப்படங்கள் சார்ந்த தனது கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
“தமிழ்த் திரைப்படம் இன்னும் சில பத்தாண்டுகளில் நசிவடைந்து போய் அழிந்து விடும்” என்று நண்பர் பிரேம் தனது பேச்சில் சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். எனக்குள் ஒருவிதமான சோகம் பொங்கியது. நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒளியின் வழியே உயிர் பெறும் பிம்பங்களுடன் எனக்குண்டான ஈடுபாடு அளவற்றது. சில நேரங்களில் சிரிக்க வைத்து, சில நேரங்களில் அழ வைத்து, சில நேரங்களில் பிரமிக்க வைத்துத் திரைப்படம் உருவாக்கிய மாய வலைக்குள் மீள முடியாமல் தவித்த காலகட்டம் எனக்குள் இப்பவும் பசுமையாக உள்ளது. சாகசம், தந்திரம், வீரம், நகைச்சுவை போன்றவற்றைப் பல்வேறு பாத்திரங்கள் மூலம் ஒவ்வொரு பார்வையாளரின் மனதிலும் ஆழமாகப் பதிக்கும் திரைப்படமே கனவு போன்றது தான். எனவே தான் திரையரங்கில் திரைப்படம் பார்த்துவிட்டு நூற்றுக்கணக்கில் கும்பலாக ஊரை நோக்கி இருட்டிற்குள் நடந்து வரும் மக்களிடையே பெரும் மவுனம் கவிந்திருக்கும். கூடப்போனால் காலடி ஓசையும் வியர்வை நாற்றமும் தான் வெளிப்படும். கலைந்து போன கனவு கண்ட மனநிலையில் யதார்த்த வெளியில் மன அழுத்தத்திற்குள் சிக்கிய கிராமத்தினர் பற்றி வேறு எப்படிச் சொல்லமுடியும். இப்படிப்பட்ட திரைப்படம் அழிந்து விடும் என்ற நினைப்பு என் மனதினுள் உறுத்தத் தொடங்கியது. அப்புறம் யோசித்துப் பார்த்தால் இந்தத் தமிழ்ச் சினிமா அழிந்து விட்டால் என்ன நட்டம்? ஏன்ற கேள்வியும் தோன்றியது.
 |
தமிழ் மரபில் இதுவரை அழிந்து போன நிகழ்வுகளின் பட்டியலைத் தயாரித்தால் அது நீளும். சிலப்பதிகாரம் குறிப்பிடும் கொடுகட்டி ஆடல் பேடிக் கூத்து, சாக்கைக் கூத்து உள்பட பதினெட்டு வகையான ஆடல்கள் போன இடம் தெரியவில்லை. தெருக்கூத்து, கனியான் கூத்து, தேவாராட்டம், பொம்மலாட்டம், பாவைக் கூத்து, சங்கீத நாடகம் என்ற பட்டியலில் பல கலைகள் மரணப் படுக்கையில் இருக்கின்றன. |
பல்வேறு கலைகளை அழித்தொழித்து விட்டு தொழில்நுட்பம் சார்ந்த நிலையில் வாமன வடிவெடுத்துத் தமிழர் உள்ளங்களை அடிமைப் படுத்திய திரைப்படம் மட்டும் என்றும் நிலைத்திருக்கும் என்று நம்புவது ஒருவகையில் நம்பிக்கை சார்ந்தது.
1967 ஆம் ஆண்டு முதலாகத் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அனைவரும் திரைப்படத்துடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என்பது திரைப்படத்திற்கும் அரசியலுக்குமான நெருங்கிய உறவினைக் காட்டுகின்றது. சங்ககாலம் முதலாக இரண்டாயிரமாண்டு, பாரம்பரியம் மிக்கத் தமிழ்ப் பண்பாட்டில் பிரமாண்டமான மாற்றங்களைத் திரைப்படம் செய்து கொண்டிருக்கிறது. எனவே யதார்தத்ததில் இன்று தமிழரின் மனங்களை ஒப்பற்ற கலையாக ஆக்கிரமித்திருப்பது திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தமிழரின் சமூக வாழ்க்கை, அரசியல், பண்பாடு ஆகியவற்றில் ஆழமாக ஊடுருவியுள்ள தமிழ்த் திரைப்படம் அழிந்துப் போவதனால் யாருக்கு என்ன இழப்பு ஏற்படும்? இதுகுறித்து இன்னும் பரிசீலிக்க வேண்டியுள்ளது.
ஒரே மாதிரியான விசயங்களையே பல்லாண்டுகளாக அரைத்துப் பண்டமாக்கிக் கொண்டிருக்கும் தமிழ்த் திரைப்படங்களைச் சகிப்பது மிகவும் சிரமமானது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. கிராமத்து மொழியில் சொன்னால் கைத்தண்டி பயலுகக் கூடப் போனால் இருபது வயசிருக்கும் - ஏ.... ஏ...” எனக்கத்தி அடாவடியாகப் பேசும் வசனத்தை எந்தத் தர்க்கத்தினுள் அடக்குவது என்று புரியவில்லை. கல்லூரியில் படிக்கும் ஒல்லிக்குச்சியான இளைஞன், வானில் பறந்து பறந்து பத்துக் குண்டர்களை அடித்து வீழ்த்துவது கூடப் பரவாயில்லை, என விட்டுவிடலாம். காவல்துறைக் கண்காணிப்பாளரின் சட்டையைப் பிடித்து ஒல்லிக்குச்சி பேசும் அனல் பறக்கும் வசனத்தைக் கேட்கும்போது, அட கூதறப் பயலுகளா என்று சொல்லுவதைத் தவிர வேறு வழியில்லை. தெருவில் எதிர்ப்படும் கீழ்மட்டத்திலிருக்கும் போலீசுகாரரின் அதிகாரத்தையே தாங்கமுடியாது என்பதுதான் யதார்த்தம். வீரம் என்ற பெயரில் பத்துப் பேரின் உருட்டுக்கட்டை அடிகளைத் தாங்கிக் கொண்டு இளம் கதாநாயகன் விண்ணில் பாயும் சாகசக் காட்சிகள் அடங்கிய திரைப்படம் ஒரு வாரத்திற்குள்ளேயே திரையரங்கை விட்டு ஓடாமல் என்ன செய்யும்? என்ன சாகச நாயகனுக்குச் சம்பளம் இரண்டு கோடி ரூபாய்கள். போலியான அடி உதைக்குப் பயந்து கீழே விழும் ஸ்டண்ட் நடிகரின் தினசரி சம்பளம் கூடப் போனால் ஆயிரம் ரூபாயாக இருக்கலாம். அவருக்கு அந்த வேலையும் அடுத்த நாள் கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதம் எதுவுமில்லை என்பதுதான் வேதனையான விசயம். ஆனால் அதுதான் சினிமா.
பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் கதாநாயகனை மையமிட்டே சுழல்கின்றன. நான்கு பாடல்கள் நான்கு சண்டைகள், உணர்ச்சிகரமான அசட்டு வசனங்கள், நகைச்சுவைக்கெனத் தனி டிராக் இவற்றுடன் ஒரு கதையின் வழியாகத் திரைப்படம் உயிர் பெறுகின்றது. கேட்டால் சனங்களுக்கு மசாலா தான் பிடிக்கிறது. அதைத்தான் நாங்கள் தருகிறோம் என்று திரைப்படத் துறையினர் தொடர்ந்து ஒரே பொய்யைச் சொல்லி வருகின்றனர். ஏதோ பேருந்து ஓட்டுநர் ராமசாமியும், கல்லுடைக்கும் மணிமேகலையும், குடும்பத் தலைவி விமலாவும், பள்ளி மாணவன் சுரேசும் கேட்டதன் அடிப்படையில்தான் திரைப்படம் தயாரிக்கிறோம் என்பது ரீல் அன்றி வேறு என்ன? ஒரு காலத்தில் சோதிலட்சுமி, செயமாலினி போன்ற ஆட்ட நடிகையர் அணிந்திருந்த ஆடையினை இன்று கதாநாயகிக்குத் தந்து ஆட்டம் போடச் சொல்வது யாரைத் திருப்தி படுத்த? நல்ல கதையின் மீது நம்பிக்கை வைக்கும் ஆசாமிகளால் திரைப்படம் வெறும் நுகர்வுச் சரக்காகிப்போகிறது. கலையாவது கண்றாவியாவது மூச். சில திரைப்படப் பாடல்களில் கதாநாயகியின் உடலசைவுகளைப் பார்க்கும்போது நாம் பார்ப்பது தமிழ்ப்படம் தானா என்ற சந்தேகம் தோன்றுகின்றது. உடலில் ஆடைகளை அணிந்து கொண்டு ஆடும் பெண்ணும் பாடல் காட்சிகளில் சித்திரிக்க முயலும் காட்சிகள் நீலப் படங்களுக்குச் சவால் விடுகின்றன. அந்த வகையில் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் கில்லாடிகள் தான்.
திரைப்படம் என்பது காட்சியின் வெளிப்பாட்டு ஊடகம் என்ற புரிதல் இன்றி பஞ்ச் வசனங்கள் பேசும் ஹீரோக்களின் அபத்தங்களை எப்படிச் சகிப்பது? ஒரு பாடல் காட்சிக்காக சுவிட்சர்லாந்து இன்னொரு பாடல் காட்சிக்காக ஆஸ்திரேலியா என்று பயணமாகும் காட்சிகள் மூலம் என்ன சொல்ல முயலுகின்றனர் என்பது முக்கியமான கேள்வி. பிரம்மாண்டமான அரங்கினுக்காக 3 கோடி ரூபாய்கள் செலவு. ஒரு பாடல் காட்சியில் குத்தாட்டம் ஆடிய பிரபலமான நடிகைக்கு பத்து லட்சம் ரூபாய். கதாநாயகனுக்கு ஐந்து கோடி ரூபாய் கதாநாயகிக்கு ஒரு கோடி ரூபாய் எனக் காசை கானகத் தண்ணீராக இறைத்துவிட்டு திரையரங்கில் ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் இரு நூறு, என்றால் தமிழர்கள் எல்லாம் கேணையர்களா? இளிச்சவாயர்களா? கதை விவாதத்திற்காகப் பெங்களுருக்குப் பெரிய குழுவினர் போய் நட்சத்திர ஓட்டலில் இருபது நாட்கள் தங்கி, ஸ்காட்ச் விஸ்கி குடித்து முடிவு செய்யப்படும் செலவினம் வெறுமனே ஐம்பது லட்சங்கள் தான்!. சரி அந்தக் கதைதான் என்ன என்று பார்த்தால் நாலைந்து வெளிநாட்டுப் படங்களில் திருடிய காட்சிகளின் தொகுப்பு. இப்படியான குப்பைத் தமிழ்ப் படங்களினால் யாருக்கு என்ன லாபம்? சிலரின் குடிக்கும், வேறு வகைப்பட்ட ஆசைக்கும் ஊடுபொருளாகத் திரைப்படம் தயாரிக்கப் படுகின்றது. மற்றபடி தமிழ்ச் சமூகத்திற்குள் ஆழமாக ஊடுருவியுள்ள புற்றுநோயாகப் பெரும்பாலான திரைப்படங்களைக் கருதுவதில் தவறில்லை.
நூறு ரூபாய் கொடுத்து கன்றாவிக் காட்சிகள் அடங்கிய அபத்தக் களஞ்சியமாக விளங்கும் தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்திட மக்களுக்கு என்ன தலையெழுத்தா? குடும்பத்துடன் தியேட்டருக்குப் போனால் போக வர ஆட்டோ செலவுடன் குறைந்தபட்சம் ரூ500 தேவை. எனவே பெரும்பாலான மக்கள் திரையரங்குகளைப் புறக்கணிக்கின்றனர். தமிழகமெங்கும் பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகமாக வடிவெடுத்துக் கொண்டிருக்கின்றன. |
 |
இந்தச் சூழலில் வழக்கமான மசாலா படம்தான் தயாரிப்பேன் என்று சபதமெடுத்து அழிந்து போகும் தயாரிப்பாளர்களின் நிலை குறித்து இரக்கப்பட வேண்டியது இல்லை. ஏனெனில் அவர்கள் என்ன செய்கிறோம், என்பதை நன்கு அறிந்தே அதனைச் செய்கின்றனர். எனவே அவர்களின் வீழ்ச்சியானது, இடிக்கப்படும் திரையரங்கின் இடிபாட்டிற்குள் புதைந்துள்ளது. அதை யாராலும் தடுக்க முடியாது.
தமிழ்த் திரைப்படத்தைச் சீர்திருத்தப் போகிறேன் என்று போன இலக்கியவாதிகளின் செயல் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. சூதாட்டம் போல லம்பாகப் பணத்தை அள்ளிட திரைப்படத்தை பயன்படுத்த முயலும் சூதாடிகளின் கையில் சினிமா சிக்கி உள்ளபோது அதில் பங்கேற்கும் இலக்கிய வாதிகள் அதற்கேற்ப வேடமும் குரலும் கொடுக்க வேண்டியது நியதியாகின்றது. குளிக்கப் போய் உடலெங்கும் சேற்றைப் புசிக் கொண்டு வந்தவர்களுக்கும் சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகளுக்கும் பெரிய வேறுபாடு எதுவுமிலலை.
நவீன நாடகத்தைத் தூக்கி நிறுத்திய பிதாமகன்களில் நானும் ஒருவன் என மார் தட்டிய நிஜ நாடக இயக்கத்தின் நிறவனரான மு. ராமசாமி ஒரு சினிமாவில் பெரிய தாதாவின் பின்னால் மௌனமாகப் படம் முழுக்க நிற்கின்றார். இல்லாவிடில் அழகி, சொல்ல மறந்த கதை போன்ற ஆண் மேலாதிக்க படங்களை இயக்கிவிட்டுத் தமிழ்ப் பண்பாட்டின் காவலன் நான்தான் என்று வெட்கமில்லாமல் மேடை தோறும் முழங்கும் அரைவேக்காட்டு தங்கர்பச்சான் தான் தமிழ் சினிமா அரசியலின் நாயகர்.
மத அடிப்படைவாதமும் பிற்போக்குத்தனமும் நிலவும் ஈரான் போன்ற நாடுகளில் கூட மக்களின் வாழ்க்கைக்கு நெருக்கமான திரைப்படங்கள் வெளியாகின்றன. மனித இருப்பினை ஆழமான விசாரணைக்குட்படுத்தும் இத்தகைய படங்கள் எழுப்பும் கேள்விகள் அசாதாரணமான திரைப்பட ஊடகத்தின் மூலம் உலகமெங்கும் நிகழும் முக்கியமான மாற்றங்களை எதுவும் கணக்கிலெடுக்காமல். மசாலா படம் தான் தமிழுருக்குப் பிடிக்கும் என்று எடுக்கப்படும் திரைப்படங்கள் சர்வதேசத் தமிழர்களையும் சீரழிப்பது இன்று துரிதமாக நடைபெறுகிறது. திரைப்படம் என்ற கலை வடிவம் 2000 ஆண்டுகள் தமிழ்ப் பாரம்பரியத்துடனும் பண்பாட்டுடனும் தொடர்ச்சியானது என்ற புரிதல் வேண்டும்.
ஆனால் தமிழ்த் திரைப்படத்துறையினரின் கால்கள் தரையில் பரவாமல் விண்ணில் மிதந்து கொண்டிருக்கின்றன. அவர்களே ஒரு பொறியை உருவாக்கி அதற்குள் அவர்களாகவே விழுந்து கொள்கின்றனர். எவ்விதமான கூச்சமும் இல்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசயங்களில் தமிழ்க் கதாநாயகி தேர்வுமுக்கியமானது. வெளி மாநிலங்களிலிருந்து வேற்று மொழி பேசும் பெண்கள் நடிக்க வருவதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. ஆனால் எல்லா நடிகைகளுக்கும் இரண்டு அல்லது 3 பெண்கள் மட்டும் டப்பிங் தருவது அந்த நடிகைகளின் நடிப்பை விரயமாக்குகிறது. அந்த நடிகையர் முகத்தில் காட்டும் பாவனையும் உடல் அசைவிற்கும், பேசுகின்ற மொழிக்கும் யாதொரு சம்பந்தமில்லாமல் காட்சிகள் திரையில் நகர்கின்றன. சிவந்த தோலுடைய பெண்களின் உடலை முழுக்கப் பாலியல் தன்மையுடையதாக மாற்றும் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் வெறுமனே கேளிக்கைக்கானதாகக் கூட லாயக்கில்லை. சாவி கொடுத்த பொம்மைக்கும் தமிழ்ப் பேசத் தெரியாத நடிகையரின் நடிப்பினுக்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லை. பார்வையாளனுக்கு எரிச்சல்தான் மிஞ்சுகிறது.
கடந்த 70 ஆண்டுகளில் வெளியாகியுள்ள சுமார் 6000க்கும் மேற்பட்ட தமிழ்; திரைப்படங்கள் சர்வதேச ரீதியில் பெற்றுள்ள அங்கீகாரம்தான் என்ன? தமிழர் வாழ்க்கையில் ரத்தமும் சதையுமான விசயங்கள் ஏதும் இல்லையா? வெறுமனெ மொன்னைத்தனமும் கூறியது கூறலான காட்சிச் சித்திரிப்பும் இன்னும் எத்தனை நாளைக்கு?
உன்னைத் தொட்டுத் தாலி கட்டின புருசன் சொல்றேன். உன்னைப் பத்துமாசம் சுமந்து பெத்த அம்மா சொல்றேன். இப்படியான வசனங்கள் ஒருபுறம் என்றால் ஸ்டீரியோ டைப் ஒரே மாதிரியான காட்சியமைப்புகள் இன்னொருபுறம் என மீண்டும் மீண்டும் நகல் பண்ணுவதில் தமிழ்ப் படங்களுடன் வேற்று மொழிப் படங்கள் போட்டி போட முடியாது.
தமிழர்களுடைய அசலான வாழ்க்கையின் மேன்மை இழிவுகளையும் சித்திரிக்கத் தவறுகின்ற திரைப்படங்கள் அபத்தக் குவியலாக உருமாறி உள்ளன. சிகினா கனவுகளில் தொடர்ந்து மக்களை மூழ்கடித்திடும் போதை பொருளாக தமிழ் சினிமா மாறி உள்ளது. அதிலும் மூளையின் செயல்திறனை மழுங்கடிக்கும் கஞ்சா, அபின் போன்ற லாகிரிப் பொருட்களுக்கும், தமிழ்த்திரைப்படத்திற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. ஒட்டுமொத்த தமிழர்களின் மனதில் சினிமா உருவாக்கியிருக்கும் போலியான நம்பிக்கை தான், அதில் நடிக்கும் நடிகர்கள் முன்வைக்கும் அரசியல் மீது நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துகிறது.
சோழர் காலத்தில் ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கங்கை கொண்டசோழபுரம் தாராசுரம் கோவில்களின் சிதைவுகளைக் காணும்போது யாரும் கண் கலங்குவதில்லை. கலையில் இழந்ததின் சோகத்தைக் கூட அறிய முடியாதவர்களாகப் பன்னெடுங்காலமாகத் தமிழர்களின் வாழ்க்கை இருக்கிறது. மேம்போக்கான பொழுதுபோக்கு அம்சங்களுக்குத் தீனி போடும் வகையில் உருவாக்கப்படும் கேளிக்கைகளைக் கலைப்படைப்பு என்று மயங்கும் நிலை இன்று ஆழமாக ஊடுருவி உள்ளது. இத்தகு சூழலில் தமிழர் வாழ்க்கைக்கு முற்றிலும் அந்நியமாக வெளிவரும் தமிழ்த்திரைப்படத்தின் நசிவான நிலை பலருக்கும் உறுத்தாமலிருப்பது வியப்பில்லை. தொடர்ந்து மோசமான திரைப்படங்களுக்கான பார்வையாளர் கடந்த பத்தாண்டுகளாகத் தயாரித்து விட்டு அவர்களின் ரசனையைப் சரி செய்யும் வகையில் தொடர்ந்து சீரழிவான படங்களைத் தயாரிப்பது மோசமான விசவட்டம். அந்த வட்டத்திலிருந்து வெளியெ வர வேண்டுமெனக் காலந்தோறும் முயலுகின்ற இளைஞர்களின் கனவுகளும் கற்பனைகளும் தொடர்ந்து பண முதலைகளால் சிதைக்கப்படுகின்றன. உலகத்துத் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு அதுபோலத் தமிழிலும் நல்ல திரைப்படம் தயாரிக்க வேண்டுமென முயன்று கோடம்பாக்கத்துத் தெருக்களில் வேகாத வெயிலில் கற்பனையுடன் அலையும் இளைஞர்களைப் பார்க்கும்போது வேதனைப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. கைக்காசைப் போட்டுக் குறும்படம் அல்லது ஆவணப்படம் தயாரித்துவிட்டு அதுபோலத் திரைப்படத்திலும் சாதித்துவிடலாமென்ற இளைஞர்களின் முயற்சியில் நம்பிக்கை மட்டும்தான் மிச்சமாக உள்ளது ஆயிரத்தில் பத்துப்பேர் வணிக சினிமா தயாரிப்பில் பங்கேற்று லட்சங்களில் புரளலாம். மற்றபடி உன்னத சினிமா என்பது தமிழைப் பொறுத்தவரையில் கானல்நீராக விலகிப் போய்க் கொண்டேயிருக்கிறது.
பசங்க, வெண்ணிலா கபடிக்குழு போன்ற தமிழ்ப்படங்களைப் பார்க்கும்போது பூமியிலே ஏதாவது அதிசயம் நிகழலாம் என்று தோன்றுகிறது. ஆனால் பல கோடிகளை விழுங்கிவிட்டு வெளியெ வரும் ஆதவன், கந்தசாமி உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களுக்கான சந்தையையும் விளம்பரத்தையும் ஒப்பிடும்போது சொல்ல எதுவும் சொற்கள் இல்லை. அப்புறம் தமிழ்ப் பேசும் சாக்கிசான் படங்களும் தமிழ் டப்பிங்கில் வெளியாகும் ஆலிவுட் படங்களும் இன்று பெரிய கிராமத்து திரையரங்குகளின் உரிமையாளர்க்கு சின்ன ஆசுவாசத்தைத்தந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து பல்லாண்டுகளாக மூளைச் சலவை செய்யும் தமிழ்ப்படங்களுடன் ஒப்பிடும்போது ஆலிவுட் டப்பிங் தமிழ்ப் படங்களே தேவலாம் என்று தோன்றுகின்றது.
தமிழரின் அடையாளச் சிக்கல்கள் பண்பாட்டுப் பிரச்சினையில் பொருளியல் நெருக்கடிகள் போன்றன குறித்துப் பன்முகத்தன்மையுடையதாகத் தமிழ்ச் சினிமா விரிவடைய நேர்ந்தால் உலகமயமாக்கல் காலகட்டத்தில் அது மரணப்படுக்கையிலிருந்து உயிர்த்தெழ வாய்ப்புள்ளது. இல்லாவிடில் தமிழ்ச்சினிமாவின் நலத்திற்காகச் செய்திட என்ன இருக்கிறது? என்றாலும் ஒரு விசயம் திரைப்படத்தையே நம்பி வாழும் ஆயிரக்கணக்கான தொழில் நுட்பக் கலைஞர்கள், துணை நடிகர்கள், உதவியாளர்கள் போன்றொரின் எதிர்காலத்தை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது. புல்லுக்கு கசிவது போல கசிந்திடும் பணத்தின் மூலம் குடும்பத்தை நடத்திச் செல்கின்ற சினிமாவை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கானோர் என்ன ஆவர் என்று நினைக்கவே முடியவில்லை. மற்றபடி தமிழர் வாழ்க்கைக்கு எவ்விதமான தொடர்புமற்ற தமிழ்ச் சினிமாவின் நசிவு குறித்து வருத்தப்பட என்ன இருக்கிறது? ஏதும் இல்லை என்பதுதான் உண்மை.
ungalukku irukkum kobangal miga niyayam than sir. tamilil nalla padangal varuvadhe aridhaagi vidugiradhu. iniyaavadhu tamil cinema nalla padhai nokki sella vendum.
அனுப்பியவர் Senthil on Saturday, 28.11.09 @ 00:09am
excellent. its really true. tamil cinemaa nichayam thirundha vendum. ungal aadhangam sariye.
அனுப்பியவர் Vivek on Sunday, 29.11.09 @ 02:09am
Murugesap pandiyan avargal eluthugal en manathil pattadhai appadiye pirathi balikkinrana. miga aruamiyana katturai. idhanai thamizh cinema aalumaigalidam kondu sellungal. koodu miga sirappaga irukkiradhu. valthugal.
அனுப்பியவர் Charles on Tuesday, 1.12.09 @ 02:38am
tamil cinema nalla padhai nokki sella vendum engira ungal aadhangam miga sari sir. nalla katturai.
அனுப்பியவர் Chandru on Friday, 4.12.09 @ 07:34am