ஒரே ஒரு நாள்
வற்றாத நதிக்கரையினிலே.. தீராத துன்பங்களுடன்… - சயந்தன்
ஆங்கிலேயரிடமிருந்து 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றுக்கொண்டது. அதே போல 1948ஆம் ஆண்டு இலங்கையும் சுதந்திரம் பெற்றுக்கொண்டது.
இலங்கையின் சுதந்திரத்தை நாம் இரண்டு விதமாக நோக்கலாம். அதாவது ஐந்து நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட தமிழினத்தின் உரிமைகளை, சிங்கள இனத்திடம் ஆங்கிலேயர் கொடுத்துவிட்டுச் சென்றது. அடுத்தது, அங்கு வாழும் பெரும்பான்மை இனமான சிங்கள இனத்திற்கு கொடுத்த சுதந்திரம் என இரண்டு வகையாகக் கொள்ளலாம்.
சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இந்த இரண்டு இனங்களுக்கிடையிலும் ஏற்பட்ட முரண்பாடுகளும், திட்டமிட்டு பல சதிகள் செய்து தமிழர்களின் உரிமைகளை அறுபது ஆண்டுகளாக மறுத்துவரும் சிங்கள அரசுகளின் போக்குகளையும் இலங்கையின் உண்மையான வரலாற்றினை நாம் உற்றுநோக்கினால் கண்டுகொள்ளலாம். ஆக எந்த காலத்திலும், எந்த காரணத்திற்காகவும், யாருக்காகவும் தமிழினத்திற்கு உரிமைகளை கொடுக்க சிங்கள பௌத்த அரசுகள் தயாராக இல்லை. 1980களின் ஆரம்பங்களில் வன்முறைகள் உச்சக்கட்டதை அடைந்ததை தொடர்ந்து சிங்களவர்களின் எண்ணம் போலவே இனி அங்கே வாழ்வது முடியாத காரியம் என எண்ணி பெருமளவிலான குடும்பங்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.
இவற்றில் பணம் படைத்தவர்கள், ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் தஞ்சமடைந்து, தற்போது அங்கே அந்த நாட்டு குடியுரிமைகளும் வழங்கப்பட்டு, அந்த நாட்டவர்களுக்கு சமமானவர்களாக அவர்கள் வாழ்ந்தும் வரகின்றனர். பண நெருக்கடியாலும், மண்ணை விட்டு அதிக தூரம் செல்ல முடியாத காரணத்தினாலும், எம் தாய்பூமி தமிழகம் என்ற உணர்வினாலும், தம் தாய் மடியாக தமிழகத்தை நினைத்து தமிழகத்தின் கோடிக்கரைகளை அடைந்து, இன்று 20 வருடங்களுக்கும் மேலாக சொந்த இனத்தின் மண்ணிலேயே அகதிகள் என்ற அவலத்துடன் வாழ்பவர்கள் ஒருபகுதியினர்.
இந்தியாவுக்கு பல நாடுகளில் இருந்தும் பல்வேறு கட்டங்களில் அகதிகளாக மக்கள் வந்திருந்தார்கள்தான், அவர்கள் அனைவரும் சுதந்திரமாக நடமாடவும், சுதந்திரமாக விரும்பிய இடத்திற்கு செல்லவும், சுதந்திரமாக தொழில் செய்யவும் அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால் தொப்புள் கொடி உறவு, எம் இனம், தாய்த்தமிழ்நாடு என்று சொல்லிக்கொள்பவர்கள்தான் இன்றுவரை திறந்தவெளி சிறைகளில் வைத்து அகதி என்ற பெயருடன் 20 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் (நடைமுறையில் இப்படி இருக்கையில் ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து தாய்த்தமிழகம் வந்த மக்கள் என பொய் வார்த்தைகளை எழுத நான் விரும்பவில்லை) தங்கவைக்கப்பட்டுள்ள பதினைந்திற்கும் அதிகமான முகாம்கள் உள்ளன. அவற்றில் அந்த மக்கள் கௌரவமாகவும், சுதந்திரமாகவும், மரியாதையாகவும் நடத்தப்படுகின்றார்களா என்றால் இல்லை என்று பச்சை குழந்தை கூடச் சொல்லும் என்பதால் அது பற்றிய விரிவான பார்வைக்கு நான் வரவில்லை.
ஓர் ஊர் சுற்றியான நான் இத்தகைய முகாம்கள் பற்றி அறிய எனக்கு கிடைத்த குறுகிய நாட்களில் ஈழ அகதிகள் முகாம் ஒன்றில் அவர்கள் படும் கஷ்டங்கள், அவர்களின் ஏக்கங்கள் என்பவற்றை அவதானித்திருந்தேன். ஒரே ஒரு நாள் பகுதிக்காக அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் வற்றாத நதியான தாமிரபரணி ஆற்றங்கரையின் அருகாமையில், சுற்றிவர கள்ளிக்காட்டு புதர்களின் நடுவே தெரியும் இந்த ஈழ அகதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் குடிசைகள். திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருக்கும் ஒரு கிராமத்தின் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்ட முகாம் இது.
பக்கத்து குடிசை வானொலிப்பெட்டியின் சத்தம் காலையில் என் தூக்கத்தை கலைக்கின்றது. எழுந்து ஒரு குடிசையில் தந்த தேனிரை வாங்கி அருந்திவிட்டு, சில இளைஞர்கள் அழைக்கவே ஒரு துண்டை எடுத்துக்கொண்டு, காலைக்கடனை முடிக்கப்போக ஆயத்தமாகி அவர்களுடன் கிளம்பினேன். இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை கொணடு வந்தார். அதில் நான் உட்பட மூவர் ஏறிக்கொண்டு, சிறிது தூரத்தில் உள்ள நீரோடைக்கு சென்றோம்.
பாறைகள்தான் அங்கே கழிவிடம். பாதங்களை முட்கள் பதம் பார்க்கும். அவர்கள் இதனை பழக்கப்படுத்திக்கொண்டு விட்டார்கள் போலும். எனக்கு சிரமமாகவே இருந்தது. அதை முடித்து கழுவிவிட்டு. அருகில் தெரியும் நீரோடையில் மூழ்கி எழுந்துவிட்டு, திரும்பி குடிசையினை அடைய இரண்டு மணிநேரமாவது ஆகும்.
அங்குள்ள மக்களுக்கு காலைக்கடன் என்பதை முடிக்கவே இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஆகும். அதிலும் பெண்கள் பாடு பரிதாபம். இதற்காக அவர்கள் வெளிச்சம் வருமுன்னமே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எம் நகர்ப்புறங்களில் ஒரு 15 நிமிடத்தில் நாம் முடிக்கும் செயற்பாடுகள் அல்லவா இது!
அங்கிருக்கும் படித்த இளைஞர்கள் கூட உரிய வேலைகள் கிடைக்காமல் அருகில் இருக்கும் குவாரி, அதாவது கல் உடைக்கும் இடத்திலும், வாடகை வண்டி ஓட்டுவதிலும், குடிசைகள், பந்தல்கள் போடப்போவது, பாரம்தூக்க செல்வது போன்ற வேலைகளுக்கும் கிளம்புகிறார்கள். பெண்களில் அதிகமானவர்கள் தையல் போன்ற கைவேலைகள் தெரிந்தவர்களாகவும், பலர் படித்தவர்களாகவும் உள்ளனர்.
இதில் குறிப்பிட்டளவில் அங்கு இருப்பவர்களில் பலர் கைவசம் உள்ள தொழிலாக காய்ந்துவிழும் தென்னை ஓலையினை பின்னி விற்பதாகத்தான் உள்ளது. இந்த வேலையினை ஆண்களும், பெண்களும் இணைந்து செய்துவருகின்றனர்.
ஏன் அவர்கள் இந்த வேலைகள் மட்டும்தான் தெரிந்தவர்களா? வேறு வேலைகள் தெரியாதவர்களா? படிக்காதவர்களா? நாட்டு நடப்பு உலக நடப்புக்களை அறியாதவர்களா என்றால் இல்லை.
அவர்களுக்கு குறிப்பிட்ட இடத்தினை விட்டு செல்ல அனுமதி மறுக்கப்படுகின்றது.
ஒருவருடமாக அல்ல கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இப்படி ஒரு இடத்திலேயே அடைபட்டு இருப்பவர்கள் பலர். அங்குள்ள மக்களிடம் நான் பேச முற்பட்டபோது எத்தனையோ தடவைகள் பலருக்கு எங்கள் நிலைபற்றியும். எங்கள் வேதனைகள் பற்றியும் சொல்லியாச்சு என்பனபோன்ற விரக்தியான பார்வைகளே பதில்களாக கிடைகின்றது. அங்குள்ள மக்கள் தங்களுக்கு கிடைத்த அன்றாட வேலைகளுக்கு தயாராகி நிற்கும்போது, அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள தலைவர் அந்த குடிசைகளின் மத்தியில் அமைந்துள்ள மாதா கோவிலில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் ஒரு முக்கிய அறிவிப்பை விடுக்கின்றார். அதாவது இன்று பணக்கொடை வழங்கப்பட இருப்பதால் யாரும் வெளியே செல்லக்கூடாது அத்துடன் அவர்களுக்கான கணக்கெடுப்பு நடைபெறவுள்ளதாகவும் அறிவித்தார்.
வேலைக்கு செல்லும் அந்த மக்களை முன்னறிவிப்பு இல்லாமல் திடீர் என ஒரு இடத்திற்கும் செல்லக்கூடாது என்று அறிவித்து கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது என்றால், அவர்கள் மனம் எப்படி இருக்கும் என என்னால் அவதானிக்கமுடிந்தது.
தொழில் புரியும் இடத்தில் திடீர் என விடுப்பு எடுத்தால் அவர்களின் இந்த தொழில் பறிக்கப்படும் அபாயம் உண்டல்லவா?
ஆனால் என்ன செய்வது? தங்கள் தொழில் இடத்திற்கு போன் போட்டு நிலைமையினை சொல்லி, கெஞ்சி விடுப்பு எடுத்து அன்று வேலைக்கு செல்லாமல் இருப்பார்கள்.
பணக்கெடை என அறிவிப்பு விடுக்கப்பட்டது என்னமோ காலையில்தான். ஆனால் அரசாங்க அதிகாரிகள் வந்து பணக்கொடை வழங்கும்போது மதியத்திற்கு மேலாகி விடும். அங்குள்ள 250 குடும்பங்களையும் ஒன்று சேர்ப்பது இந்த பணக்கொடையும் (மாதம் ஒன்றுக்கு வெறும் 400 ரூபா) அடிக்கடி நடக்கும் கணக்கெடுப்பும்தான். இந்த கணக்கெடுப்பு நேரத்தில் பிறந்த குழந்தையில் இருந்து 80 வயது பெரியவர்கள் வரை அங்கு வரிசையில் நின்றே ஆகவேண்டும்.
பிறந்ததிலிருந்து பணம் கிடைக்காதவனுக்கு இவர்கள் இந்தப்பிச்சை பணத்தினை கொடுத்தால் அவன் சந்தோசமாக வாங்கிக்கொள்வான், ஆனால் சகல வசதிகளுடன் வாழ்ந்து, பிறர்க்கும் கொடுத்து, செல்வச்செழிப்புடன் வாழ்ந்த இவர்கள் விதிவசத்தால் தாக்கப்பட்டு. நாடு விட்டு நாடு வந்து குறிப்பிட்ட இடமொன்றில் அடைத்து வைத்து, இந்தக்காசை வாங்க வரிசையில் நிற்கும்போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று அன்று புரிந்துகொண்டேன்.
500கோடி, 1000கோடி என ஊழல்புரிந்து பகட்டாகத் திரியும், அரசியல்வாதிகளுக்கு நடுவே இந்த அப்பாவி மக்கள் மாதம் ஒன்றுக்கு இந்த 400 ரூபாயைப் பெற வரிசையில் நிற்கவைக்கப்பட்டிருந்தது என் கண்களை நனைத்தது. நான் தமிழ்நாட்டை சேர்ந்த தமிழன் என்ற பதத்திற்காக முதல் தடவையாக வெட்கப்பட்டேன். அந்த மக்கள்முன் கூனிக்குறுகி நின்றேன்.
திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழும் அந்த மக்களின் மனநிலை எப்போதும் கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப்போலத்தான். ஆனால் எபபோதும் உழைத்து உண்டு, நேர்மையின் வழி நிற்கப் பழக்கப்பட்ட அவர்கள் இவற்றுக்காக சளைத்துவிடவில்லை. ஏனென்றால் சுற்றுமுள்ள கிராம மக்கள் பார்த்து பொறாமை கொள்ளும் அளவுக்கு நேர்த்தியான வேலையாளர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள்.
தொழிலுக்காக (அதுவும் குறிப்பிட்ட தூரம் வரைதான்) செல்ல அனுமதிக்கப்படும் நபர்களும் முகாமிலிருந்து புறப்படும்போது கையெழுத்து வைத்துவிட்டு செல்லவேண்டும. இருட்டுவதன் முன்னர் வந்து தங்கள் வருகையினை உறுதிப்படுத்தி மீண்டும் கையொப்பமிடவேண்டும். இரவு பகலாக இவர்கள் காவற்துறையினரின் காவலிலும் கண்காணிப்பிலும் உள்ளனர். குடிநீர் வசதி பெரும் பற்றாக்குறையாகவே உள்ளது.
அத்தனை குடும்பங்களுக்கும் ஒரே ஒரு "வாட்டர் பம்ப்"பே உள்ளது. மின்சாரம் கூட சீரற்று, விட்டு விட்டே வழங்கப்படுகின்றது.
இப்படி நான் அங்கே இருந்த இரண்டு தினங்களிலேயே ஆயிரம் குறைபாடுகளை கண்டுகொண்டேன். அவர்கள் இடம் பெயர்ந்து சென்ற வேற்றுமொழி நாடுகளெல்லாம் வெறும் நான்கு ஐந்து வருடங்களிலேயே அவர்களை தம் நாட்டவர்களாக இணைத்து சமமாக நடத்துகின்றனர், சுதந்திரமாக நடமாட முழு உரிமையும் கொடுக்கின்றனர். ஆனால் தம் சொந்த இனத்தினை நம்பி வந்த மக்கள் இன்றும் அகதி என்ற பெயருடன் அதே இனத்தவர்களின் மத்தியில் வாழ்ந்துவருகின்றனர். ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் தங்கள் குடும்பங்கள் என்னதான் கஷ்டங்களை அனுபவித்தாலும், தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கவேண்டும், கல்விமட்டும்தான் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்ற விடயத்தில் மிகுந்த உறுதியுடையவர்களாக உள்ளவர்கள்.
அனேகமாக இங்கிருந்து கல்வி பயில பாடசாலை செல்லும் பிள்ளைகள் அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கல்வி பயில்வது இல்லை. குழந்தைகள் இந்த கஷ்டங்களுக்கு மத்திலும் பட்டணத்தில் உள்ள தனியார் பாடசாலைகளில் படிப்பதை என்னால் காணமுடிந்தது.
மாணவர்கள் உட்பட இந்த முகாமில் உள்ளவர்கள் அனுமதி பெற்று பட்டணத்திற்கு செல்வதானால் பேருந்தில்தான் செல்லவேண்டும். அதுவும் இந்த இடத்தில் பேருந்து சேவைகள் பெரிய அளவில் இல்லை. அப்படி வரும் பேருந்துக்களும் அதிக கூட்டமுள்ளதாகத்தான் இந்த இடத்தை அடைகின்றது.
இங்குள்ள மக்கள் தங்கள் முகாம் அருகில் ஒரு பேருந்து நிறுத்தத்தை தாங்களே கிடுகுகளினால் அமைத்து ஒரு பேருந்து தரிப்பிடத்தை நிறுவியுள்ளார்கள். காலை எட்டுமணி முதல் பட்டணத்திற்கு வேலைக்குச் செல்பவர்கள், மாணவர்கள், சந்தைக்குச் செல்பவர்கள் என ஒரு பெருங்கூட்டமே அங்கு கூடி நிற்கும்.
இதேபோல் எல்.கே.ஜி, யூ.கே.ஜி, படிக்கும் குழந்தைகளுக்கு முகாமின் மத்தியில் ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தினால் கட்டிக்கொடுக்கப்பட்ட சிறிய சமுதாயக்கூடம் ஒன்று உள்ளது. அதில் முகாமிலிருந்து படித்து வேலை கிடைக்காமல் உள்ள பெண்கள் இருவர் கல்வி கற்பித்து வருகின்றார்கள். 10 மணியினை தாண்டியவுடன் இங்கு ஒரு அமைதியான சூழ்நிலை நிலவுகின்றது.
ஓவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்கள் தங்கள் மதியத்துக்கான உணவுகளை தயார் செய்யத் தொடங்குகின்றனர். இந்த நேரங்களில் சில வயதானவர்கள் தாங்கள் வளர்க்கும் ஆடுகளை அருகில் உள்ள குளக்கரைகளில் மேயவிட அழைத்துச்செல்வார்கள். அடுத்து இங்குள்ள மக்களுக்கு தங்கள் அழுக்கான ஆடைகளை அலம்புவது மிகவும் பெரிய பிரச்சினையாகவே உள்ளது. அங்குள்ள பெண்கள் தங்கள் வீட்டில் சேர்ந்துள்ள உடுப்பு மூட்டைகளை எடுத்துக்கொண்டு தொட்டி ஆட்டோ எனச் சொல்லப்படும் ஒரு வாகனத்தில் ஒவ்வொரு மூட்டைக்கும் 10 ரூபா வரை கொடுத்து அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுக்கு சென்று உடுப்புகளை அலம்பிவிட்டு மதியம் திரும்புகின்றனர்.
இங்குள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து ஒரு இளைஞர் அணியினை ஏற்படுத்தியுள்ளனர். இவர்கள் அருகில் உள்ள புற் தரை வெளியினை சுத்தம் செய்து அதை மைதானமாக்கி, பிற்பகல் வேளைகளில் துடுப்பாட்டம். காற்பந்து போன்ற விளையாட்டுக்களை விளையாடுகின்றனர்.
அதே நேரம் இந்த விளையாட்டு மைதானத்தில் அன்று, அந்த மாவட்டத்தில் உள்ள மற்ற முகாம்களில் இருந்து வரும் துடுப்பாட்ட அணிகளுடன் போட்டிகள் நடைபெற்றது. இதற்கும் அதிகாரிகளிடம் அனுமதி பெறத்தான் வேண்டும். இங்கு விளையாட வந்தவர்களுக்கும் இங்குள்ள மக்கள் உணவுகள் சிற்றுண்டிகள் கொடுத்து உபசரிப்பார்கள். அங்குள்ள இளைஞர்களுக்கு இந்த ஒரு பொழுதுபோக்கும் இல்லாது விட்டால் அவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாகிவிடுவார்கள். ஏனென்றால் எத்தனையோ வருடங்களாக ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்துவருவது கஷ்டம் என்பது எமக்கும் புரியும்.
தாங்கள் பல காலமாக இந்த நரக வாழ்க்கையினை அனுபவித்துக்கொண்டிருப்பது, என்றோ ஒருநாள் தாங்கள் சுதந்திரமாக வாழ்வோம் என்ற நம்பிக்கையில்தான் என்று கூறினார்கள். இந்த அவலம் இன்னும் எத்தனை வருடங்கள்தான் தொடருமோ தெரியாது.
மாலையானதும் வீடுகளில் இருந்து மாணவர்கள் கல்வி கற்க முடியாது. ஏன் என்றால் அங்கு எரியும் மின்குமிழ்களின் வெளிச்சம் ஒரு வரியினை எழுத்துக்கூட்டி உச்சரிக்கக்கூட முடியாத வெளிச்சத்தில் இருக்கும்.
இரவு ஆகியவுடன் இந்த மக்களை கண்காணிப்பதற்காக போலீசார் இந்த முகாமுக்குள் வருகின்றனர். அங்குள்ள மக்களை கண்காணித்தபடியே இரவு முழுவதும் இருப்பார்கள். குறுகிய இடத்திலும் அவர்கள் சுதந்திரம் பறிக்கப்படுகின்றது. இரவு பத்துமணிக்கு முன்னதாகவே அங்கு அமைதி நிலவுகின்றது.
இதில் இன்னுமொரு விடயத்தினை குறிப்பட்டு சொல்லவேண்டியுள்ளது. அங்குள்ள மக்கள் அனுமதிபெற்று வெளியில் செல்வதாகினும், முகாம் மாறுவதாகினும், அல்லது இலங்கைக்கே திரும்பி செல்வதாகினும், பெரும் அலைச்சலை சந்திக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதாவது கியூ பிரிவு, ரெவென்யூ இன்ஸ்பெக்டர், தாசில்தாரர், கலக்டர் ஆபிஸ், காவற்துறை நிலையம் என இவர்கள் அனுமதி பெறவேண்டி உள்ளது. தொப்புள்கொடி உறவுகள் என்ற வெறும் வாய்ஜாலம் பேசும் நமக்கு மத்தியில் அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளுக்கு சிங்களவன் எவ்வளவோ மேல்.
|
idhayam kanakkiradhu.. veranna solla.
அனுப்பியவர் Kumaran on Saturday, 28.11.09 @ 21:47pm
யானை கட்டி, போரடித்து செல்வத்துடன் வாழ்ந்த இனம். தன் இனத்தின் தாய் நாட்டிலேயே படும் அவலங்களுக்கு யார் காரணம்? நாங்களே தான். நம்முள் 17 மானமுள்ள தமிழர்கள் தீக்குளித்தும் மானங்கட்ட மனிதராக அல்லவா நாங்களும் உள்ளோம். அகதி என வரும் தமிழனுக்கு வெள்ளைக்காரன்கூட 5 வருடத்தில் குடியுரிமை கொடுத்து கௌரவமாக நடத்துகின்றான். சொந்த இனம் நாங்கள்???? ஒரு ஈழத்தமிழன் வந்து எங்கள் மகத்தில் காறித்துப்பினாலும் அதில் தவறில்லை.
அனுப்பியவர் Nivetha on Sunday, 29.11.09 @ 00:26am