Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
     
 
இரா. காளிமுத்து

 

எல்லாரையும் போல நானும் எனது கல்லூரி வாழ்வை முடித்தப்பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன். மேற்கொண்டு படிக்க குடும்ப சூழல் ஒத்து வரவில்லை, வேலை தேடுவதற்கும் ஆங்கிலம் தடையாக இருந்தது. நடக்க முடியாத அப்பாவின் ஆசை, அரசு பணியில் அமர வைப்பது. இப்படி இருந்த சூழலில் அரசு பணிக்காக படிப்பது என நண்பர்கள் எல்லாம் சேர்ந்து நூலகம் சென்றோம். ஏற்கனவே கல்லூரியில் வைரமுத்துவின் கவிதைகளை வாசித்ததால் நூலகம் சென்று தேர்வுக்கு தயாராவதைவிட புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். அப்போது வெகுசன பத்திரிக்கையான ஆனந்த விகடன் அறிமுகமானது. அதில் வரும் கட்டுரை, கவிதை, கதை, நேர்காணல் போன்றவற்றை ஆர்வமாக வாசிக்க ஆரம்பிதேன்.

எழுத்தாளர் எஸ்.ரா எழுதிய எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரை நூலான கதாவிலாசம் வாசித்த போது சிறந்த சிறுகதைகள் குறித்தும் எழுத்தாளர்கள் குறித்தும் தெரியவந்தது. பின்பு துணையெழுத்து என்ற கட்டுரை தொகுப்பு மனிதர்களையும், அவர்களின் பண்புகளையும், பயணங்களையும் அறிமுகப்படுத்தியது. செழியன் எழுதிய உலக சினிமா கட்டுரை தொகுப்பின் மூலம் வேற்று மொழி திரைப்படங்களும் அதன் கதைகளும் தெரியவந்தது. மகேந்திரனின் நானும் சினிமாவும் போன்ற புத்தங்கள் என்னை மிகவும் பாதித்தது. சினிமாவின் மீது ஏதோ ஒரு தாக்கம் ஏற்பட்டது. எங்கள் கல்லூரியின் வணிகவியல்துறை ஆசிரியர் திரு.முத்துக்கிருஷ்ணன், நாடோடிகள் திரைப்படத்தில் அப்பா வேடத்தில் நடித்து இருந்தார். அவரிடம் சென்று இயக்குனர் திரு.சமுத்திரக்கனியிடம் உதவியாளாராக சேர்த்துவிடுங்கள் என்றேன். சினிமா உனது வாழ்வை பாதித்து விடும் உனது குடும்பம் வேறு வறுமையில் உள்ளது, முதலில் வேலைக்கு போ சினிமா ஆசை உனக்கு வேண்டாம் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

மீண்டும் வேலை தேடும் முயற்சி தொடர்ந்தது. ஒரு நாள் செய்திதாளில் NFDC யின் விளம்பரம் பார்த்தேன், ஒரு மாதக்கால இலவச பயிற்சியாக எடிட்டிங், போட்டோக்கிராபி போன்றவை கற்றுத்தரப்படும் என அறிவிப்பு வந்தது. வீட்டில் சென்னைக்கு வேலை தேட போவாதாக சொல்லி 5௦௦௦ ரூபாய் கடன் வாங்கி தாருங்கள் என்றேன், எப்படியோ வாங்கி கொடுத்தார்கள். சென்னை வந்து மேன்சனில் ரூம் எடுத்து தினமும் NFDC சென்று போட்டோக்கிராப் படித்தேன், ஏதோ பாஸ்போர்ட் எடுக்க கற்று கொடுத்தார்கள் ஒரு மாதத்தில் 1௦ நாள் தான் வகுப்பு நடந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை யாரிடமாவது உதவியாளராக சேரலாம் என்று முடிவு எடுத்தேன். ஆனால் பொருளாதாரம் வேறு சிக்கலாக இருந்ததால் ஒரு மாதம் வேலைக்கு சென்றேன் பின்பு வேறு ஒரு வேலை என்று சென்னையில் திரிந்தேன்.

ஒரு நாள் முகநூலின் வாயிலாக தமிழ்ஸ்டுயோ அறிமுகமானது. பின்பு தமிழ் ஸ்டுடியோவின் விழாக்களில் என்னை இணைத்து கொண்டேன். இந்த விழாக்கள் அனைத்தும் ஒரு நிகழ்வாக இல்லாமல் வேறு ஒரு களமாக இருந்தது. பவா செல்லத்துரையின் ஆவணப்பட திரையிடல், புத்தக வெளியீடு, பாலுமகேந்திராவின் வீடு, சந்தியாராகம், திரையிடல், வெங்கட்சுவாமி நாதனுக்கு பாராட்டு விழா என பல வகையான நிகழ்வுகள் வியக்கும் படியாக இருந்தது. இந்த பணிகளில் என்னையும் இணைத்து கொண்டு தொடர்ந்து கலந்து கொண்டேன். சினிமா மீதான பல புரிதல்கள் ஏற்பட்டது, பின்பு படிமை மாணவர் இயக்கத்தில் இணைந்தேன். தொடர்ந்து வாசிப்பு, திரையிடல், பயணம், எழுத்து என்று இன்னும் பணிகள் தொடர்வதே இதன் சிறப்பு. 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio