Facebook         தொடர்புக்கு வாயில்  
 
 

 

 

 

 
     
     
     
     
 
சரவணன். M

 

வீட்டில் ஆண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியவுடன் பொதுவாக கேட்கும் கேள்வி இதுதான் “நீ டாக்டராக போகிறாயா இல்லை இன்ஜினியராக போகிறாயா”, இன்ஜினியரிங் என்றால் என்னவென்றே தெரியாமல் நான் இன்ஜினியராக போகிறேன் என்று கூறியிருக்கிறேன். இரண்டாம் வகுப்பு படிக்கும் போது கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகமாக இருந்தமையால் எப்படியும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாக வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருந்தேன். இந்தியாவில் விடலை பருவத்தில் நிறைய குழந்தைகளுக்கு இருந்த ஆசையை போலதான் எனக்கும் இருந்தது. பின்பு நாளடைவில் வெறுமனே ஆசை மட்டும் இருந்தால் போதாது, அதற்கான திறமையும், பொருளாதார சூழலும் இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொண்டேன். நடைமுறைக்கு ஏற்றவாறு ஏதாவது ஆசைப்பட வேண்டும் என்று எண்ணினேன்.

ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருந்தபோது, நான் வசிக்கும் சுற்று வட்டாரத்தில் அதிகமாக தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் வரத்தொடங்கின. அதனால் தகவல் தொழில்நுட்பம் சார்ந்து ஏதாவது படித்தால் கட்டாயம் வேலை கிடைக்கும், அதிகமாக சம்பாதிக்கலாம் என்று தோன்றியது. பதினோராம் வகுப்பில் கணினி பாடப்பிரிவை தேர்வு செய்தேன். நான் அதுவரையிலும் கணினியை அதிகமாக உபயோகித்ததில்லை, அதனால் பள்ளி விடுமுறையின்போது அண்ணன் வீட்டுக்கு சென்று கணினி கற்போம் என்று முடிவுசெய்தேன். படம் பார்ப்பதும், கேம்ஸ் விளையாடியதும் தவிற பெரிதாக ஒன்றும் கற்றுக்கொள்ளவில்லை. கணினியின் மீது இருந்த மோகம் மெல்ல குறையத் தொடங்கியது. நான், நாள் முழுவதும் தொலைகாட்சியில் கேம்ஸ் விளையாடியிருக்கிறேன், ஆனால் என்னால் தொடர்ந்து ஒருமணி நேரம் கூட கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாட முடியவில்லை. இந்த சூழலில் எப்படி கணினியில் நாள் முழுக்க வேலை செய்வது என்று எண்ணினேன். என்னுடைய சிந்தனையை மறு பரிசீலனை செய்தேன். இம்முறை திட்டவட்டமாக முடிவு செய்துவிட்டேன், தகவல் தொழில்நுட்பம் மட்டும் அல்ல கணினி சார்ந்து இருக்கும் எந்த ஒரு வேலையையும் செய்ய கூடாதென்று. நான் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் வெறுமென உட்கார்ந்து மூளையை உபயோகிப்பது மட்டும் அல்லாமல் உடலலவிலும் உழைக்கும் வேலைதான் எனக்கு சரியாக இருக்கும் என்று தோன்றியது.

பனிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வு நெருங்கி கொண்டிருந்தது. மேற்கொண்டு என்ன படிப்பதென்று துளியும் சிந்தனை இல்லாமல் இருந்தேன். எனக்கு என்ன பிடிக்கும், இயல்பாக எனக்கு என்ன வரும் என்று யோசித்தேன். சினிமா எனக்கு பிடித்திருந்தது, என் அண்ணன் வீட்டில் நிறைய ஹாலிவுட் படங்களை பார்க்க வாய்ப்பு கிடைத்தது, அப்படங்களின் கதையை சிந்தித்து பார்த்தால் பிரமிப்பாக இருக்கும், ஏன் இம்மாதிரியான கதைகள் தமிழில் வருவதில்லை என்று யோசித்திருக்கிறேன். நான் சில கதை கருக்களை உருவாக்கி இதை தமிழில் படமாக எடுத்தால் எப்படியிருக்கும் என்று சிந்தித்து இருக்கிறேன். இக்காரணங்களால் எதிர்காலத்தில் பெரிய இயக்குனராக வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் யோசிக்கவில்லை, சினிமாவை திரையில் பார்த்ததோடு சரி திரைக்கு பின் நடக்கும் விஷயம் ஏதும் எனக்கு தெரியாது, சினிமாவுக்கு என்று ஒரு படிப்பு இருப்பதும் தெரியாது, தெரிந்து இருந்தாலும் அதை வீட்டில் சொல்லும் தைரியம் அப்போது இல்லை, சினிமா ஒரு படிப்பு கிடையாது மற்றும் அது ஒரு தொழிலும் இல்லை எனற அறிவுதான் அப்போது எனக்கு இருந்தது.

சினிமா இயக்குனர் எனற ஆசை, சிறு வயதில் கிரிக்கெட் வீரன் எனற ஆசையை போல் தெரிந்தது, அதாவது நடைமுறைக்கு சம்மந்தம் இல்லாத ஒன்று. இப்போது இன்டர்நெட் பயன்படுத்துவது போல அப்போது பயன் படுத்த தெரிந்திருந்தால் எனக்கான தேடலை தேடி அதன் சாத்திய கூறுகளை கண்டடைந்திருப்பேன் அல்லது நாளைய இயக்குனர் போன்ற நிகழ்சிகள் அப்போது வந்திருந்தால், எனது முடிவில் எதாவது மாற்றம் இருந்திருக்கும். என் ஆசையை தெரிவிக்கவும் என்னை வழி நடத்தவும் யாரும் இல்லை. சரி எனக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க முடியாது என்பது தெளிவாக தெறிந்துவிட்டது, பதினோராம் வகுப்பில் முதல் பாட பிரிவை எடுத்தால் பொதுவாக பொறியியலில் தான் சேருவார்கள் அதனால் அதில் என்ன படிக்கலாம் என்று யோசித்தேன். நான் creativeஆக இருக்கிறேன் என்று தோன்றியது. அதனால் சிவில் பொறியியல் எனக்கு சரியாக இருக்கும் என்று பட்டது. நண்பர்களிடம் ஆலோசனை கேட்டபோது அத்துறையில் வேலை வாய்ப்பு குறைவு எனவும் அதை விட கடல்சார் பொறியியலில் நிறைய நன்மைகள் இருபதாக கூறினார்கள். அதை பற்றிய தகவல்களை தேடத் தொடங்கினேன். தகவல்கள் அனைத்தும் எனக்கு ஏற்றவாரும், பிடித்தவாறும் இருந்தது. இது மிகவும் கடினமான படிப்பு, சராசரி மாணவர்கள் இதனை தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்று பலர் அறிவுரை வழங்கினார். பள்ளியில் சக மாணவர்கள் இத்துறையின் நன்மைகள் அறிந்தும் யாருமே தேர்ந்தேடுக்க முன்வரவில்லை. பெற்றோர்கள் அதிகமாக செலவாகும் என்பதால் வேண்டாம் என்றார்கள். எல்லோரையும் போன்று இருக்ககூடாது, நான் தனியாக தெரியவேண்டும் என்று எண்ணினேன். கல்வி கடன் இருப்பதை தெளிவுபடுத்தி பெற்றோர்களிடம் சம்மதம் வாங்கினேன். பல தடைகளை மீறி கல்லூரியில் சேர்ந்தேன்.

முதலாம் ஆண்டு மிகவும் சவாலாக இருந்தது, அரசு பள்ளில் படித்ததை மட்டும் என்னால் குறையாக சொல்ல முடியாது, எங்கு படித்தாலும் நான் இப்படித்தான் இருந்திருப்பேன், தமிழ்நாட்டில் கல்விமுறை சரியாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். மனப்பாடம் செய்து மார்க் எடுக்கும் முறையினால் பனிரெண்டு வருடம் நான் படித்தது எந்த வகையிலும் கல்லூரியில் உதவவில்லை. பள்ளியில் படிப்பதுபோன்று, ஒருபாடத்தில் இறுதியாக இருக்கும் கேள்விகளை மட்டும் படித்து, நல்ல மதிப்பெண் எடுப்பதேல்லாம் இங்கு செல்லுபடி ஆகாது என்பது புரிந்தது. கல்லூரியில் நான்கு ஆண்டு படிப்பதை வைத்துதான் வேலை செய்யவேண்டும் என்பதால் பள்ளியில் செய்த தவறை இங்கும் செய்ய கூடாது என்று முடிவுசெய்தேன்.

கட்டிடத்தை எவ்வளவு உறுதியாக கட்டினாலும் கடைகால் சரியில்லை என்றால் சிறிய நடுக்கத்துகே கட்டிடம் ஆட்டம் கண்டுவிடும், அதனால் அடிப்படையில் இருந்து படித்தேன். எவ்வளவோ முயன்றும் முதலாம் ஆண்டில் கணித தேர்வில் தோல்வியுற்றேன். அதை அடுத்த தேர்விலேயே எழுதி தேர்ச்சியடைந்தேன். அந்த ஒரு சிறு சருக்கல் தவிற நான்கு ஆண்டுகளில் வேறு எந்த தவறும் செய்யவில்லை, கவனமாக படித்து ஒட்டுமொத்தமாக 76.% தேர்சிவிகிதம் எடுத்தேன். எப்படியும் எண்பது பேர் பயிலும் எனது பிரிவில், முதல் 15 மாணவர்களில் நான் ஒருவனாக இருபேன். இருந்தும் முதலாம் ஆண்டு அறியர் வைத்ததால் என்னால் campus interview நுழைய முடியவில்லை.

நான் கல்லூரியில் சேரும்போது 100 சதவிதம் வேலை வாய்ப்பு இருந்த எனது துறையில் படிப்படியாக 50% ,20 சதவிதம் என்று குறைந்து எனது batchல் வெறும் மூன்றே பேருக்குதான் கல்லூரியால் வேலை வாங்கித்தர முடிந்தது. கல்லூரியை விட்டு வெளி வரும் போதுதான் இந்தியாவில் இத்துறை சம்மந்தமான அரசியலை புரிந்து கொள்ள முடிந்தது. அதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அதுவே முன்று பக்கத்துக்கு நீளும். இத்துறையில் சுலபமாக வேலையில் சேர இரண்டு வழிகள் தான் இருந்தது. பணம் கொடுத்து வேலையில் சேருவது (சுமார் மூன்றில் இருந்து ஐந்து லட்சம் வரை செலவாகும்) அல்லது இத்துறையில் உயர் பதவியில் இருப்பவரிடமிருந்து கிடைக்கும் சிபாரிசு மூலம் வேலையில் சேருவது. சிபாரிசு இருந்தும் ஒன்றரை லட்சம் வரை பணம் தேவைப்படும். கல்வி கடன் போக வீட்டில் படிப்பதற்கே அதிகம் செலவு செய்து விட்டார்கள் இனியும் அவர்களால் உதவமுடியாது, பணம் கொடுத்து வேலையில் சேருவது என்பது என் கல்வி தகுதியை நானே சந்தேகிப்பது போல் இருந்தது. அதனால் பணம் கொடுப்பதை தவிர்த்து கல்வித்தகுதியை மட்டும் வைத்து வேலையில் சேர ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன். வெகு சில நிறுவனங்கள் நுழைவுதேர்வின் மூலம் வேலையில் சேர்ப்பதை அறிந்தேன். அதில் முக்கால்வாசி நிறுவனங்கள் மும்பையில் இருந்தது, சென்னையில் இரண்டு நிறுவனங்கள், அதில் ஒன்றில் பெயருக்கென நுழைவுதேர்வு, அதனால் எனக்கு இருந்தது ஒரே வாய்ப்பு தான். அந்நிறுவனத்தின் தேர்வுக்கான நாளுக்கு ஐந்து மாதம் இருந்தது, தேர்வுக்காக என்னை தயார் செய்துக்கொண்டு இருந்தேன். தேர்வுக்கான நாள் வந்தது. நான் மிகவும் தன்னம்பிக்கையுடன் இருந்தேன், சுமார் நானுறுக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத வந்திருந்தனர், எனது கல்லூரியிலே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படித்த மானவர்களை எல்லாம் பார்க்க நேர்ந்தது.

கெட்ட நேரம் என்னவென்பது தெரியும், அதை உணர்வதர்க்கான தருணம் வந்தது. அகர வரிசையில் மாணவர்களை பிரித்து தேர்வறைகள் நிரப்பப்பட்டது. நான் இருக்கும் அறையில் தேர்வு நேரம் துவங்கி பத்து நிமிடம் ஆகியும் ஆசிரியர் யாரும் வரவில்லை. ஏன் தாமதம் என்று மற்ற அறைகளில் சென்று பார்த்தால் அங்கெல்லாம் வினாத்தாள் கொடுக்க பட்டிருந்தது, நான் இருக்கும் அறைக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் வரவில்லை என்று ஒரு ஆசிரியர் தெரிவித்தார் , அவர்களிடம் கூடுதலாக யாரும் இல்லை அதனால் நான் இருந்த அறையில், இருந்த மாணவர்களை பிரித்து மற்ற அறைகளில் நிரப்ப தீர்மானித்தனர், இதனை செய்து முடிக்க அவர்கள் இருபத்தி ஐந்து நிமிடம் எடுத்து கொண்டனர். ஆகமொத்தம் முப்பத்தியைந்து நிமிடம் காலதாமதத்துக்கு பின்புதான் என் கையில் வினாதாள் கொடுக்கப்பட்டது. எங்களுக்கு கூடுதலாக நேரம் கொடுக்கபடுமா என்று கேட்டபோது “இல்லை அனைவருக்கும் ஒரே நேரத்தில்தான் விடைத்தாள் கொடுக்கபட்டது” என்று கூறிவிட்டனர். objective வீனாகளுக்கு அவர்கள் கூரிய லாஜிக் எனக்கு புறியவில்லை. இம்மாதிரியான தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது முக்கியம் இல்லை, அதிகம் மதிப்பெண்கள் எடுத்திருக்கும் மாணவர்களை மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைப்பார்கள். தேர்வு ஒழுங்கற்ற முறையில் நடந்தாலும், நான் தகுதி உடையவனாக இருந்தால், அவர்கள் என்னை அழைப்பார்கள் என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

நேர்முகதேர்வுகான பட்டியல் வெளியிட்டார்கள் அதில் என்னுடைய பெயரில்லை, இது மனதளவில் என்னை பெரிதும் பாதித்தது. மேற்கொண்டு என்னால் ஒன்றும் சிந்திக்க முடியவில்லை. மும்பையில் தங்கி வேலை தேடலாம் என்று பார்த்தல் நண்பர்கள் பலரும் அங்கு அவதி பட்டுக்கொண்டு இருந்தனர் வீட்டிலும் அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. இந்த முறை இல்லையேன்றால் அடுத்த முறை பார்த்துகொள்ளலாம் கல்லூரி முடிந்து ஆறு மாதகாலம் ஆயிற்று இன்னும் ஆறு மாதத்தில் கல்வி கடனை திருப்பி செலுத்துத ஆரம்பிக்கவேண்டும் எதாவது ஒரு வேளைக்கு செல் என்று வீட்டில் வற்புறுத்தினர். அடுத்த முறைக்கு ஒரு ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும். அவ்வளவு பொறுமை என்னிடத்தில் இல்லை. நான் படித்ததுக்கு தொடர்பான வேலைதான் செய்ய வேண்டும் அதை தவிர்த்து வேறு எந்த வேலைக்கும் செல்ல கூடாது என்று வைராகியத்துடன் இருந்தேன். ஆனால் அதற்கான வழி எதுவும் தெரியாமல் இரண்டு மாதம் வீட்டில் பித்து பிடித்தவன் போல் இருந்தேன், எதிர்காலத்தை எண்ணி பல கனவுகள் என்னிடம் இருந்தது அனைத்தும் தகர்ந்தது போல் தோன்றியது, எதற்காக நான் பிறந்தேன், எனக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்கையில் நான் என்ன சாதிக்கப்போகிறேன் எனற கேள்விகளுடனே ஒவ்வொரு நாளும் விடியும்.

ஒரு நாள் ஒரு சம்பவம் எனக்கு தோன்றியது அதை அப்படியே ஆங்கில படத்துக்கு நிகரான ஒரு காட்சியாக மாற்றினேன். இந்த இரண்டு மாதத்தில் நூற்றுக்கும் அதிகமான ஆங்கில படங்களை பார்த்த பாதிபினால் உருவானது அந்த காட்சி. ஏன் இந்த சிந்தனை தோன்றியது என்று தெரியவில்லை. அந்த காட்சியை உருவாக்கிய பின், என்னுள் புதைந்திருந்த இயக்குனர் ஆகவேண்டும் எனற ஆசை மீண்டும் வெளிவந்தது. கல்லூரி காலங்களில் சினிமாமைவை பற்றிய புரிதல் நன்கு இருந்தது. பள்ளி காலங்களில் சினிமா ரசிகனாக இருந்த நான் கல்லூரியில் விமர்சகனாக மாறினேன். ஒரு படத்தை பார்த்த பிறகு எத்தனை மணிநேரம் அந்த திரைப்படம் என்னை சிந்தைனைக்கு உள்ளாக்குகிறது என்பதை வைத்தே படத்தின் தரத்தை முடிவு செய்வேன். இவ்வாறு செய்யும் போது தமிழில் வரும் பெரும்பாலான படங்கள் வெறுப்பையே தந்தது. அரசியல் சார்ந்தும், வடிவம் சார்ந்தும் படத்தை விமர்சிக்கும் அறிவெல்லாம் அப்போது இல்லை. படம் நம்பகத் தன்மையோடு இருக்கிறதா என்பதை மட்டுமே பார்ப்பேன். இவ்வாறு பார்க்கும்போது தமிழில் ஆக சிறந்த இயக்குனர் படத்திலும் குறை கண்டுபிடிப்பது எனக்குள் சினிமா அறிவு இருக்கிறது என்பதை நம்ப வைத்தது. இது எதுவும் வீண்போவதில்லை. பத்து வருடம் நான் படித்த துறையில் வேலை செய்து நன்கு சம்பாதித்துவிட்டு, எதிர்காலத்தில் வாய்ப்பு இருந்தால் இயகுனராகலாம் என்று முன்பே யோசித்து வைத்திருந்தேன். (பாலாஜி சக்திவேல் போல) தற்போது படித்ததுக்கு வேலை இல்லை என்றபோது ஏன் இப்போதே இதில் முயற்சிக்க கூடாது என்று சிந்தித்து என் அண்ணனிடம் என்னுள் உருவான அந்த காட்சியை பற்றி கூறி நான் ஏன் இயக்குனர் ஆவதுக்கு முயற்சிக்க கூடாது என்று கேட்டேன். ஒரு காட்சியை பலராலும் சொல்ல முடியும் ஒரு முழு படத்துக்கு கதை, திரைக்கதை எழுதுவது என்பது சுலபம் அல்ல என்றார்.

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது நானும் என் நண்பனும் குறும்படம் இயக்கலாம் என்று சில கதைகளை உருவாகினோம் ஆனால் எதையும் படமாக எடுக்க முடியவில்லை. அந்த அனுபவத்தை வைத்துகொண்டு எனக்கு தோன்றிய காட்சியை ஒரு முழு திரைப்படத்துக்கான கதையாக உருவாக்கினேன், திரைக்கதை எழுதுவது எல்லாம் எப்படியென்று எனக்கு தெரியாது நான் நினைத்த காட்சியை அப்படியே நோட்டு புத்தகத்தில் எனக்கு தெரிந்த மொழியில் எழுதினேன், ஒவ்வொரு காட்சியையும் சிந்தித்து அதை கோர்வையாக இணைக்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது, நான் உருவாக்கிய அந்த கதைக்கு நிறைய ஆராய்ச்சி செய்ய வேண்டும், நிறைய தகவல்கள் பெற வேண்டும் என்று தோன்றியது. என்னால் முயன்ற அளவு இன்டர்நெட்டில் தகவல்களை சேகரித்து இரண்டு வாரத்தில் அந்த கதையை முழுமையாக முடித்துவிட்டேன்.

கதை எழுத சிந்தனையில் மூழ்கியிருந்த அந்த இரண்டு வாரம் வேறொரு உலகத்தில் இருந்தது போல் இருந்தது. நான் உருவாக்கிய அந்த கதை என்னை தூங்க விடவில்லை, என் சோகத்தை எல்லாம் தவிடுபொடி ஆக்கியது, என் வாழ்கைக்கான அர்த்தத்தை அறிந்தது போல் உணர்தேன். வாழ்கையில் வெற்றி தோல்வியை விட சந்தோஷமாக இருப்பதுதான் முக்கியம் என்று பட்டது, அந்த சந்தோஷம் ஒரு படைப்பை உருவாகும்போது கிடைத்ததால் இனி இதை சார்த்து தான் நான் இயங்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். இதற்காக என்னவேண்டுமானாலும் இழக்கலாம் என்று பட்டது, என்னுடைய கதையை அண்ணனிடம் கூறினேன். அவர் எனக்குள் ஏதோ திறமை இருப்பதை உணர்ந்தார், இருந்தும் முழுமையாக என்னை நம்பவில்லை. நான் சொன்ன கதையை படமாக எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு, இத்துறையில் நிலைத்து நிற்க நிறைய கதைகளை எழுத வேண்டும், ஒருகதை தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை என்றால் மற்றொரு கதையை சொல்லவேண்டும் மற்றும் இத்துறையில் வெற்றி பெறுவதெல்லாம் மிகக்கடினம், எந்த ஒரு சினிமா பின்னனியும் இல்லாதலால், அதிகமான திறமையும் அதிர்ஷ்டமும் வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

அதிர்ஷ்டம் இருகிறதா என்று தெரியவில்லை, திறமை இருகிறதா என்பதை சோதித்து பார்க்க, நாளைய இயக்குனர் போட்டியில் கொடுக்கபடும் தலைப்பின்கீழ் குறும்படத்துக்கான கதைகள் எழுதினேன், மற்றும் குறைந்த பொருட்செலவில் உருவாக்ககூடிய feature பிலிம் கதை ஒன்றையும் யோசித்துவைத்திருந்தேன், அவ்வபோது நான் யோசித்தவற்றை அண்ணனிடம் கூறி கொண்டேயிருந்தேன். இதன்முலம் என்மேல் எனக்கு இருந்த நம்பிக்கை அதிகமாகிகொண்டிருந்தது. எந்தமாதிரியான பின்னணியில் இருந்து இயக்குனர்கள் உருவாகிறார்கள் என்று ஆராய்ந்தேன் christopher nolan யில் இருந்து முருகதாஸ் வரை பலரும் ஸெல்ப் thought பிலிம் மேக்கர்ஸ்ராகதான் இருந்தார்கள். உதவி இயக்குனராக பணி புரிந்துக்கொண்டு சினிமாவை நாமே கற்றுகொள்ளலாம் இதற்கென்று தனியாக பணம் செலவு செய்து படிக்கும் அவசியம் இல்லை என்று நினைத்தேன். எனது ஆசையை வீட்டில் தெரிவித்தேன், வீட்டிலே முன்று மாதம் பித்து பிடித்தது போல் இருந்ததால், எங்காவது சென்று எதையாவது செய் என்றார்கள், அவர்களால் முழுமையாக எப்படி சம்மதிக்க முடியும். இந்த சம்மதமே போதும் என்று அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கினேன்.

இயக்குனரிடம் சென்று நம் திறமைகளை கூறி உதவி இயக்குனராக சேர்ந்துவிடலாம் என்று வலைதளத்தில் முகவரி தேடினால், நூற்றுகணக்கான பெயர் என்னை போன்றே இருகிறார்கள் என்பது தெரியவந்தது. இது சரியான முறையல்ல வேறு வழியில் ஏதாவது முயற்சிக்க வேண்டும் என்று இருந்தபோதுதான். தமிழ்ஸ்டுடியோவின் இயக்குனர் பயிற்சி பட்டறைக்கான மாணவர்கள் சேர்ப்பு பதிவை என் அண்ணன் கண்டுள்ளார். என் அண்ணனும் தமிழ் ஸ்டுடியோ அருணும் ஆறு வருடங்களுக்கு முன்னால் ஒன்றாக பணிபுறிந்து உள்ளனர். அவர்களுடைய நட்பு facebookயில் தொடர்து இருந்தமையால், அந்த பதிவினை என் அண்ணன் எனக்கு ஷேர் செய்தார். பயிற்சிக்கு கட்டணம் ஏதேனும் விதித்திருந்தால் கண்டிப்பாக சேர முடியாது, நல்ல விஷயம் என்னவென்றால் பயிற்சி இலவசம் சினிமா மீது தீராத ஆசையும் ஆர்வமும் இருந்தால் மட்டும் போதும் என்று இருந்தது. அதை தவிர்த்து வேறெதுவும் இல்லை என்பதால், நானும் என்னுடைய அண்ணனும் அருணை பார்க்க சென்றோம். என்னை பற்றிய தகவல்களை எல்லாம் கூறினேன். நான் அந்த பயிற்சி பட்டறைக்கு ஏற்ற மாணவன் இல்லை என்று கூறினார். அவர் கூறியது, marine engineering படித்திருக்கிறாய், நான்கு லட்சம் கல்வி கடன் இருக்கிறது அதுமட்டும் இல்லாமல் வேலையில்லாத இம்மாதிரியான நேரங்களில்தான் சினிமா ஆசைகள் வரும். மனதை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். முதலில் கல்விகடனை அடைக்க பார் என்று அறிவுரை வழங்கினார். என்னால் ஒன்றும் பேச முடியவில்லை என் ஆசையை எப்படி இவருக்கு புரியவைப்பது என்று எனக்கு தெரியவில்லை. அவர் என்னை போன்று நிறைய மாணவர்களை பார்திருக்ககூடும் அதனால் அவர் சொல்வதிலும் அர்த்தம் உள்ளது என்று தோன்றியது.

வேறு எந்த வழியும் தெரியாமல் வெட்டியாக வீட்டில் இருந்தேன். நான்கு மாதங்களுக்கு முன் நான் தேர்வு எழுதிருந்த நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கு அழைப்பு வந்தது. என்ன வென்று தொலைபேசியில் விசாரித்தேன். தகுதியான மாணவர்களை இரண்டு கட்டமாக பிரித்து நேர்முகத்தேர்வை நடத்துகிறோம் என்றனர். பெரும் குழபத்துக்கு இடையே என்னை தயார்செய்துகொண்டு நேர்காணலுக்கு சென்றேன். அவர்கள் கேட்கும் கேள்விக்கு சரியான முறையில் பதில் கூறவில்லை . ரிசல்ட் அப்போதே தெறிந்துவிட்டது. சில கேள்விகளுக்கு பதில் தெறிந்தும் ஏன் சொல்லவில்லை என்று எனக்கு தெரியவில்லை. மேற்கொண்டு எதை நோக்கி நான் செல்ல வேண்டும் என்பதை உறுதிபடுத்தியது அந்த தேர்வுக்கான ரிசல்ட்.

எப்போதும் positiveவான முடிவை எதிர்பார்ப்பதே எனது பலவினம் என்று நினைத்தேன். இனி நான் எடுக்கும் முடிவுக்காக எந்த வகையிலும் எதிகாலத்தில் வருந்தகூடாது என்று நினைத்தேன். இம்முறை ஏன் நான் இயக்குனராக வேண்டும் என்று நூற்றுக்கும் அதிகமான கேள்விகள் எனக்குள் கேட்டு விடையை ஆராய்ந்து கொண்டிருந்தேன், சினிமா என்றால் என்ன?, இதில் என்ன என்ன கலைகள் அடங்கியுள்ளது? சினிமாவில் என்ன செய்யமுடியும் ? சினிமா மக்களுகாக என்ன செய்தது? சினிமாவின் வீரியம் தமிழ்நாட்டில் எப்படியுள்ளது? என் வாழ்நாளில் எத்தனை மணி நேரம் சினிமாவுக்காக செலவுசெய்திருபேன்? இயக்குனருக்கான தகுதி என்ன? பத்து வருடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தால் வாழ்கை எப்படி இருக்கும்? யாருக்காக படம் எடுக்க வேண்டும்? எதற்காக படம் எடுக்க வேண்டும்? முதல் படம் தோல்வியானால் அடுத்து என்ன செய்வது ? சினிமா என்ற ஆசையில் இருந்தால், நான்கு வருடம் கழித்து என்னுடன் படித்தவர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள், நான் எப்படி இருப்பேன் என்று யோசித்தேன்? அவர்களை போல் என்னால் சம்பாதிக்க முடியாது, அவ்வளுவுதான்? பணம் சம்பாதிபதைவிட கனவுகளை தேடி வாழ்கையில் பயணித்தால் சந்தோஷமாக இருக்கும் என்று முடிவுசெய்துவிட்டேன். தோல்வி அடைந்தாலும் மகிழ்ச்சி, வாழ்கையை சினிமாவுக்காக அற்பனிப்பது என்று முடிவு செய்தேன். மறுபடியும் படிமையில் சேர எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது, படிமை துவங்கி நான்கு மாதங்களுக்கு பிறகு அருணிடம் இருந்து ஒரு போஸ்ட். “படிமையில் இன்னம் இரண்டு மாணவர்கள் தேவை வேலை செய்து கொண்டே படிக்கலாம்” என்று அறிவித்திருந்தார். போனமுறை என்னிடம் கேட்ட கேள்விக்கான பதிலுடன் சென்றிருந்தேன். முழுமையாக என்னை பற்றிகூற வாய்ப்பு கிடைத்தது , படிமையில் சேர்பதாக ஒப்புக்கொண்டார் , ஆனால் வேலைக்காக வேறுறொரு மாணவனை தேர்ந்தெடுதுவிட்டதாக கூறினார். ஒரே வாரத்தில் கால் செனட்டர்ரில் வேலை தேடிக்கொண்டு படிமையில் இணைந்தேன்.

 

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.


 
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 

© காப்புரிமை: படிமை (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.

Best viewed in Windows 2000/XP | Resolution: 1024X768 | I.E. v5 to latest | Mozilla Latest Version | Chrome

Concept, design, development & maintenance by Thamizhstudio