பதிவுகள்
வணக்கம் நண்பர்களே...
பொதுவாகவே தமிழர்கள் மீது வைக்கப்படும் மிகப் பெரிய விமர்சனம், அவர்களுக்கு, தங்கள் வரலாற்றையோ, கலாச்சாரத்தையோ, தங்கள் மொழி சார்ந்த கூறுகளையோ ஆவணப்படுத்தி, பாதுகாக்கத் தெரியாது என்பது. இது எவ்வளவுப் பெரிய உண்மை என்பது பலருக்கும் தெரியாது. மிகவும் உணர்ச்சி வசப்பட்டவர்கள் தமிழர்கள் என்றால் அது மிகையாகாது. தன விரோதியே, மிகவும் சோகமாக ஒருக் கதையைக் கூறினால் அவனை மன்னித்து அவனுக்கு பெருவாழ்வு அளிக்கும் மனோபாவம் உடையவர்கள் தமிழர்கள். அவர்களில் பலருக்கும் ஆழமாக, நிதானமாக சிந்திக்க தெரியவில்லை. அல்லது சிந்திக்க நினைப்பதில்லை.
ஒருப் பிரச்சனையை திசைத் திருப்ப தன் மக்களை, கேளிக்கைகள் நோக்கியும், போதையை நோக்கியும் திருப்பிவிடும் மனோபாவம் கொண்ட மன்னர்கள் இங்கு அதிகம். ரஜ, கத, துராத படைகளோடு, ஆயிரம் யானைகள் சூழ எம் மன்னன் பவனி வருகிறார் என்று பல இலக்கியங்களில் நாம் படித்திருக்கலாம். இங்கே வரலாறு வரலாறாக இல்லாமல் புனையப்பட்டு, புனைவாக மாறிவிட்டது. எந்த அரசருக்கும் அவரது பலகீனம் இங்கேத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அவரை சுற்றியிருக்கும் கூட்டம் அதனைத் தெரிய விடுவதில்ல. அந்தக் கூட்டமே அந்த அரசரின் மிகப் பெரிய பலவீனம் என்பதுக் கூட அந்த அரசர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இப்படியாக தமிழர்கள் சார்ந்த எந்த வரலாரும், அதன் உண்மை மாறாமல் பதிவு செய்யப்படவில்லை என்பது நாம் அறியும் உண்மை. இன்னமும் கூட நமது வரலாற்றை நாம் அறிய வேறு சில மாநிலங்களில் இருக்கும் கல்வெட்டைக் கொண்டுதான் அறிய முடிகிறது. அவற்றை தமிழகத்திற்கு கொண்டு வந்து ஆய்வு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.
மொழி சார்ந்த, கல்வெட்டு சார்ந்த வரலாறு மட்டுமல்ல.. தமிழர்கள் மிகவும் நேசிக்கும் திரைப்படங்கள் சார்ந்த வரலாற்றுக் கூட முழுமையாக யாராலும் எழுதப்படவில்லை. அதற்கான முயற்சிகள் ஆங்காங்கே மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் அயர்ச்சியின் காரணமாக அவை கை விடப்படுகிறது. காரணம் இங்கே அவர்களுக்கெல்லாம் பொருளாதாரம் ஒத்துழைப்பதில்லை.
எந்த ஒரு இனம் தனக்கான வரலாறுகளை பற்றி கவலைப் படாமல் வாழ்கிறதோ, அந்த இனம் வாழ்ந்ததற்கான அறிகுறியே பிற்காலங்களில் இல்லாமல் போய் விடும் என்பது நாம் கண்கூடாக காணும் உண்மை. தமிழும், தமிழர்களும் எப்படி மாறப்போகிறோம்? சிந்திப்போம்.
ஆசிரியர் குழு. |