வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

 

 

 
     
     
     
   
அன்பிலதனை அறம்
1
 
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


குட்டி ரேவதி

குட்டி ரேவதி (ரேவதி சுயம்புலிங்கம்) சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் கவிஞர். மிகவும் அற்புதமான கவித்துவமும் சிந்தனைத் தெளிவும் நிறைந்தவர். எழுத்து, பெண்ணியம் போன்றவற்றில் முனைப்புடன் இயங்கிவருகிறார்.

இவர் பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போது எழுதிவரும் பெண் படைப்பாளிகளுள் கவனிக்கத்தக்க ஒருவராக இயங்கிவருகிறார்.

தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதும் தாம் இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர். சாதிய மறுப்பும் ஒழிப்பும் தாம் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருபவர்.

இதற்கு தமிழகத்தில் உருவெடுத்த பெண் கவிஞர்களின் ’உடல் அரசியல்’ மொழியும் எழுச்சியும் முக்கியமான பங்களிப்பு என்கிறார். சிற்றிதழ் இயக்கம் மற்றும் நவீனத் தமிழ் இலக்கியம் வழி உருவெடுத்தவர்.
இந்நூற்றாண்டின் முக்கியமான பெண்ணியச்செயல்பாடு என்பது தனித்த பெண்ணியச் சிந்தனைகளைக் கட்புல படிமங்களாக பரிணமிக்கச்செய்தலே என்ற தன் தீவிர நம்பிக்கையின் படி முழுமூச்சாக ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் இயங்கிவருபவர்.
கவிதை நூல்கள்

பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)

முலைகள் (2002)

தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)

உடலின் கதவு (2006)

கட்டுரை நூல்

காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS அன்பிலதனை அறம் தொடர்கள் வாயில்


அன்பிலதனை அறம்

ஆசியாவின் சூரியன் - 1


குட்டி ரேவதி  

மனித வாழ்வின் மகத்துவத்தையும் முழுமையையும் சிலர் வாழ்ந்து காட்டி மறைகின்றனர். சிலர் அதன் பொருட்டு நீண்ட நெடிய போராட்டத்தை நிகழ்த்தியிருக்கின்றனர். மனித இனத்தின் சமூகச் சிக்கல்களை ஆராயும் மனப்பக்குவத்தையும் முதிர்ச்சியையும் கொண்டவர்கள் எப்பொழுதும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தச் சிக்கல்களுக்குக் காரணமான அடிப்படைப் பேதங்களை களைய போராடியிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் போராட்டங்கள் நிலைத்த தொடர்ச்சியையும் மனிதர்களின் மீது பெருத்த அக்கறையையும் நீண்ட கால தரிசனங்களையும் கொண்டிருந்தன. இன்றும் அவர்களின் சித்தாந்தங்களும் இயக்கங்களும் தேவைப்படுவதும், அவர்களின் கருத்துப்பாதையைச் செப்பனிடுவதும் அவசியமாகப் படுகிறது. இலக்கியத்தில் மட்டுமல்லாது, அரசியல், விளையாட்டு, கல்வி, விவசாயம், ஆரோக்கியம் என எல்லா வெளிகளிலும் மனிதர்களை மனிதர்கள் பாராட்டும் பேதங்களால் நிறைந்து போயிருக்கிறார்கள். இப்பேதங்களைச் சுட்டுக் காட்டுவதும் அவற்றைக் களைந்தெறிவதும் நமது முதன்மையான நோக்கமாக இருக்கவேண்டும். அதற்கு நம்மிடையே இருக்கும் ஒரே சிந்தனையாளர் அம்பேத்கர் தான்.

அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே தலைவராகப் பார்க்கப்படும் ஓர் அவலநிலைக்குக் காரணம். மற்றெல்லோரும், ஏதோ உயர்த்தப்பட்டவர்களாகத் தம்மைக் கருதுவதும், அம்பேத்கரின் பிம்பம் தமக்கு தேவையில்லை என்று பார்ப்பதும் தான். ஆனால், அம்பேத்கர் எல்லோருக்குமே தனிமனித அளவிலும், சமூக அளவிலும் சமூகச் சிக்கல்கள் மீது வெளிச்சம் பாய்ச்சக் கூடியவர். அம்பேத்கர், இம்மண்ணில் மனிதனைப் பிரித்தாளும் சூழ்ச்சிகளை அடிப்படையான தரவுகளுடன் ஆராய்வதுடன், அவற்றை வெல்லும் கருவிகளையும் நமக்குத் தருகிறார். மனித உளைச்சலை வெல்லும் நிரந்தர வழிகளை நோக்கிய அவரது தனிமையான பயணம், என்றென்றைக்குமான மனித எழுச்சிக்கான கருவிகளைக் கண்டுபிடித்துத் தந்துள்ளது. அப்படித்தான் அவரது நவீனப் பெளத்தமும்!

நவீன மனிதனின் வாழ்வு, சமூக ஒடுக்குமுறை இந்த இரண்டையும் கருத்தில் கொண்டு இன்றும் பெளத்தத்தை அணுகுவது மிக அவசியமாக இருக்கிறது. பெளத்தத்தின் மீது திணிக்கப்பட்ட மதப்போர்வைகளை அகற்றி அதன் உண்மையான வடிவில் அதைக் காணும் முயற்சியை நாம் செய்வதற்கு இதை விட பொருத்தமான, அவசியமான தருணம் ஏதுமில்லை.

இந்து மதத்தின் கட்டுமானங்கள் முன் பெளத்தம் ஒரு சாகரம் போல விரிந்து கிடக்கிறது. அது தரவிழையும் சிந்தனை மூலங்கள், மிகவும் எளிமையானதாகவும் எளியவருக்கானதாகவும் இருக்கிறது. தனிமனிதனுக்கு அவன் வாழ்வின் இருட்டிலும் கொடுமையிலும் ஒரு தீப்பந்தம் போல வெளிச்சம் தரக்கூடியது. மனிதர்கள் தம் கொடுமையான எண்ணங்களால் ஒருவரையொருவர் சுட்டுக் கொல்லும் போது நீரூற்றி அணைக்கும் வல்லமை கொண்டது. மனித பரிணாம வளர்ச்சியில் மனிதன் தான் கண்டடையும் நவீனங்களை அவற்றின் நன்மை குறையாது பேணக்கூடியது. மனிதனின் வாழ்க்கையை நெறிப்படுத்துவதில் தீவிரமான முனைப்பை உயிர்ப்புடன் தன்னில் கொண்டிருக்கிறது. ஆனால், பெளத்தம் என்பதை ஒரு புத்தகத்தொகுதியாகவோ, அல்லது புத்தரை மையமாகக் கொண்ட ஒரு வழிபாட்டு முறையாகவோ அல்லது சமூக இயக்கங்கள் சொல்வது போன்ற ஒரு போராட்டத் தலைவராகவோ எடுத்துக் கொள்ளவேண்டாம் என்று சொல்லிக் கொள்கிறேன்.

வாழ்வின் பெருங்காட்டில் மனிதன் தன் சிந்தனைகளையும் நோக்கங்களையும் ஒருவழிப்படுத்தும் நவீனக் கருவிகள் என்று ஏதும் இல்லை. தீவிர நுகர்வுக் கலாச்சாரத்தின் பின்னே அவன் மனம் பேதலித்து அலைகிறது. எதையும் தீண்டி, சுவைத்து, அனுபவித்துப் பார்க்கும் பேராசை நாக்கு தீய விழைவுடன் அலைகிறது. அது அவனை எந்த எல்லைக்கும் அலைத்துச் செல்கிறது. இதனால், மனிதன் தன் சுயச் சிந்தனையை, அவரவர் வாழ்வில் இருக்கும் பெரும்பங்கை மறக்கிறான். உலகம் இழுத்துச் செல்லும் அலுப்பான, சலிப்பூட்டும் பாதையில் எல்லோருடன் தானும் ஓடுகிறான். தன் வேதனையையும், தன் சுயம் எனும் அரும்பெருஞ்ச்சொத்தையும் இழக்கத் தயாராகிறான். அது அவனை தீரா வாதைக்கு இழுத்துச் செல்கிறது. பெளத்தம் இதை மூர்க்கமாக எதிர்க்கிறது.

நம் மண்ணின் அரிய விதை, 'பகுத்தறிவுச் சிந்தனை'. அது அதன் முழு வீச்சிலும் இயங்கிக் கொண்டே இருக்கிறது. அதன் பரிமாணங்கள் தெள்ளத் தெளிவாக நம் கண் முன்னே இருக்கின்றன என்றாலும், உறைக்குள் இருக்கும் கூர்மையான வாளை கையில் எடுத்துக் கையாளும் தயக்கம் மனிதமனத்தைச் சூழ்ந்திருக்கிறது. அல்லது, அது மனித கைகளுக்கு எட்டாத தொலைவுக்குத் தள்ளித் தள்ளி வைக்கப்படுகிறது. மனித மனம் சூழ்ச்சிகளின் போர்க்களமாக உணரப்பட்ட நாளிலிருந்து இது தொடர்கிறது.

ஆகவே, பெளத்தம், அம்பேத்கர், சமூக எழுச்சி, தீண்டாமை, மனித இனவரைவியல் என எல்லாவற்றையும் இணைத்துப்பார்த்தும் தொகுத்துப் பார்த்தும் அந்தக் கத்தியை உறைவாளிலிருந்து எடுக்கத் துணிந்திருக்கிறேன். அந்த விழைவின் முதல் முயற்சி இந்தக் கட்டுரைத் தொடர். மனிதனின் கண் முன்னே வியப்புடனும், புதிதாகவும் காட்டப்படும் பொருள் மீது கொண்ட ஆர்வத்தைப் போல, 'பார்ப்பனீயம்' விதைக்கப்பட்டிருக்கிறது. ஒரு பார்ப்பனீய மனம் எப்படி இயங்கும், சிந்திக்கும் என்பதன் தெளிவான வடிவமுறை எல்லோருக்குள்ளும் புகுத்தப்பட்டிருக்கிறதது. இயந்திர மனிதனை வடிவமைப்பது போல ஒவ்வொருவரும் 'பார்ப்பனச் சிந்தனைகளால்' வடிவமைக்கப்பட்டிருக்கின்றனர். கலைஞர்களும் அத்தகைய விழிப்புணர்வின்றி, அல்லது அந்தக் கவலையின்றி, அச்சிந்தனைகளின் அடிப்படையான கூறுகளுடன் கலைப்படைப்புகளைத் தயாரிக்கின்றனர். அரசியல் தலைவர்கள், தம் தொண்டர்களின் மனதிலும் உடலிலும் ஓர் இயந்திர மனிதனைப் புகுத்தி விடும் வெறியுடன் கூட்டம் சேர்க்கின்றனர். அறிவியல் அறிஞர்கள் இன்னும் மோசமானவர்கள். அவர்கள் அறிவியல் சொல்பவை, பழங்கதைகளை விட, மூடப்பழக்கங்களை விட மடமையானவையாக இருக்கின்றன. வரலாற்றுப் பேராசிரியர்கள், முன் சொன்னவர்களையெல்லாம் மிஞ்சியவர்கள். தம் கைக்குக் கிடைத்த ஆதாயங்களை எல்லாம், சமூகத்தில் உயர்ந்ததாகவும் உன்னதாகவும் கருதப்படும், 'பார்ப்பனீயச் சிந்தனையுடன்' பொருத்தி நோக்கி, அதை சந்தையில் எளிதாக விற்றுவிடக் கூடியவர்கள். ஆனால், இவற்றிலிருந்து இவர்களையும் நம்மையும் காக்கும் பெரும்பொறுப்பு இருப்பதை நாம் உணரவேண்டும்.

அதற்கு புத்தரை அவர் மீது திணிக்கப்படும் கட்டுக்கதைகளிலிருந்து விடுவித்து அவரை அறிந்து கொள்ளவேண்டும். அதன் தொடக்கத்தை மட்டுமே இங்கு செய்யப்போகிறேன். புத்தரின் வாழ்வைச் சொல்லிச் செல்வது என்பது ஒரு சாக்கு தான். ஆனால், புத்தரின் அடிப்படையான கருத்தாங்களைப் புரிந்து கொள்ள முயல்வது தான் முதன்மையான காரணம். வெவ்வேறு திசைகளிலிருந்து புத்தரை நோக்குவது, அவரது சிந்தனைப் புள்ளிகளைத் தொட்டுப்பார்த்து விளங்கிக் கொள்வதும் இன்றைய நமது சமூக அநீதிகளைப் புரிந்து கொள்ள உதவும். அவற்றை எதிர்க்கும் நெஞ்சுரத்தைத் தரும். அவற்றின் கொடுமையிலிருந்து நம்மை விடுவிக்க உதவும். புத்தரை இன்றைய நவீன வாழ்விற்கு ஏற்றவாறு உள்வாங்கிக் கொள்ள இந்தப் பயணம் உதவலாம்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் சமூகப் போராட்டங்களும் அரசியலும் பல விதங்களில் வீறு கொண்டுள்ளன. எல்லா மாநிலங்களிலும் சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மக்கள் ஒன்று திரண்டிருக்கின்றார்கள். தமது போராட்டத்துக்குத் தேவையான பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கூர்தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள். உயிரைத் துச்சமாக மதித்து உணர்ச்சிப் பூர்வமான முடிவுகளை எடுத்திருக்கின்றனர். சக மனிதன் மீதான கொடுமையைப் பார்க்கத் துணியாதவர்களாய், தன்னலத்தை இழந்து போராளிக் குடும்பங்களாக மாறியிருக்கின்றனர். தனித்தனியே பிரிந்து சிதைந்து நலிவுற்றுக் கிடந்த கலை, இலக்கியம், அரசியல், சமூகம் ஆகியவற்றை ஒன்றிணைத்துப் பார்க்கும் புதிய அணுகுமுறையை உருவாக்கியிருக்கின்றனர். தனிமனிதன் விரும்பும் குடும்பம், திருமணம் போன்றவற்றை மறுத்து சமூக வாழ்வைக் கட்டமைத்திருக்கின்றனர். ஆனால், அரசாங்கம் என்பது எப்பொழுதும் ஒரு பாரதப் போரை நிகழ்த்தும் முனைப்புடனேயே இயங்கிக் கொண்டிருக்கிறது. அதாவது, எப்பொழுது, ஒரு 'பார்ப்பனீய மனம்' எப்படிச் சிந்திக்குமோ அவ்வாறே அரசும் சிந்திக்கிறது.

நீங்கள் கேட்கலாம், அதென்ன, 'பார்ப்பனீய மனம்' என்று. அதற்கு தனித்த ஒரு கட்டுரை எழுத வேண்டும். இந்தத் தொடரில் அதையும் எழுதவேண்டும் என்று இருக்கிறேன். அதன் வழி, நம் தனித்த மனங்களும் பார்ப்பனீய மனமா இல்லையா என்பதை நாம் பரிசோதித்துக் கொள்ளலாம் வேடிக்கையாகவே சொல்லிக் கொள்கிறேன். நமக்குக் கையளிக்கப்பட்ட மனத்தை, நாம் அப்படியே இயங்கப் பணிக்கிறோம் என்பதால் நம்மைச் சூழ்ந்து இவ்வளவு கொடுமைகளும், வேதனைகளும்! அந்த மனத்தை நாம் நகர்ந்து சென்று சீர்திருத்துவதில்லை. அதற்குத் தேவைப்படும் கடும் உழைப்பைச் செலுத்துவதில் இருக்கும் சோம்பேறித்தனமாக இருக்கலாம். அல்லது, அது புண்ணுக்குச் சொறிந்து கொடுக்கும் தற்காலிக சுகத்தில் ஈடுபட்டு புறக்கணித்திருக்கலாம். கடந்த கால மனித வாழ்வுகளில், இம்மனதைக் கொண்டு அரிய சாதனைகளை மனிதன் நிகழ்த்தியிருக்கிறான் என்பதை நாம் மறந்திருக்கலாம். ஆனால், நிறைந்த ஊக்கத்துடன் 'பார்ப்பனீய மனம்' நம்முள் இயங்கிக் கொண்டிருப்பதை நாம் உணராமல் சமூக நீதியும் சமுக உரிமைகளும் சாத்தியப்படாது என்று சொல்லிக் கொள்கிறேன். ஏதோ மனம் பற்றிய ஊக்கத்தொடர் எழுத வந்து விட்டதாக நீங்கள் அவரசப்பட்டு ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டாம்.

எப்பொழுதும் கேள்விகளால் நிறைந்த பெண்ணாகவும் அவற்றிற்கான பதில்களைத் தேடும் வேட்கையும் நிறைந்த வேட்டைக்காரியாகவும் தான் இருந்திருக்கிறேன். இது பல சமயங்களில், போராட்டங்களை நோக்கித் தள்ளியிருக்கிறது. அப்பொழுது அந்தப் போராட்டங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது கிடைத்த அரும்பெரும் செல்வம் தான் அம்பேத்கர். உங்களின் தனி மனித வாழ்வை எல்லா வகையிலும் சமூக வாழ்வுடன் பொருத்திப் பார்த்துப் புரிந்து கொள்ளவும் கற்றுக் கொடுக்கவும் அம்பேத்கரால் மட்டுமே இயலும். அத்தகைய முழுமையான பலம் வேறு எந்தத் தலைவருக்கும் இந்தியாவில் இல்லை என்று ஆணித்தரமாகவே சொல்வேன். அம்பேத்கர் என்பவர் இனியும் ஒரு தனிமனிதர் அல்ல. அவர் சமூக விடுதலைக்கான சிந்தனைக் களத்தை ஏற்படுத்தி, அதற்கான செம்மையான பாதையையும் ஏற்படுத்திக் கொடுத்தவர். இந்தியாவின் சாதியக் கட்டுமானத்தின் அடிப்படையான கட்டுக்கதைகளையும் தர்க்கங்களையும் உடைத்தெறியும், அழித்தொழிக்கும் சிந்தனைகளை இம்மண்ணில் அவருக்கு முன்பாகத் தோன்றி, அவர் விதமே போராடிய புத்தனிடமிருந்தும் எடுத்துக் கொண்டார். இயற்கையுடன் கூரிய உறவையும் உரையாடலையும் கொண்டு வாழும் மனித இனத்தின் தொடர்ச்சியான பகுத்தறிவு விதையை, சற்றும் அக்கறை குலையாது வளர்த்து மரமாக்கினார் புத்தர்.

இந்தியத் திருநாட்டில் மனித வாழ்வின் அடியில் கசியும் நஞ்சை, மையப் பொருளாக்கி அதன் வழியாக நாம் எம்மாதிரியான சமூகச் சூழலில் வாழ்கிறோம் என்பதை அம்பலப்படுத்த ஓர் இனிய பயணமாக இக்கட்டுரைத் தொடர் இருக்கும் என்று நம்புகிறேன். 'அறம்' என்பதன் அர்த்தங்கள் சலித்து அரிக்கப்படும் முன் அதைக் காப்ப்பாற்றி விடும் அவசரமும் அக்கறையும் கூட எனக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது. பாரத நாட்டின் ஓலங்களும் இரத்த ஆறுகளும் இன்று வரலாறு என்ற வடிவில் நமக்கு ஆவணப்படுத்தப்பட்டு காலந்தோறும் ஸ்பூனில் ஊட்டப்படுகின்றன. அவை மனிதனிடம் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய பெருங்கருணையைப் பற்றிப் பேசுவது இல்லை என்பது தற்பொழுதைய இணைய வெளி புரட்சிக்குப் பின் சிறு குழந்தையாலும் கண்டறிய முடியும். ஆனால், எப்படி இந்த இருட்டடிப்பை வெல்வது என்ற ஆதங்கத்தைப் பதிவுசெய்வதும், அந்த இருட்டடிப்பை வெல்லும் வழிகளை, ஆசியாவின் சூரியனான புத்தன் வழியாக வெல்வது தான் என் நோக்கம்.

'புத்தன்' இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு செவ்வியல் குறியீடு ஆகிவிட்டார். இன்று மனிதன் சிந்திக்கும் முறைகள் தெளிவாக உற்பத்திசெய்யப்படுகின்றன. ஆனால், இயல்பில் மனிதன் பரிணாம வளர்ச்சியில் எட்டியிருக்கும் சிந்தனை முறைகளை மனிதன் பயிலவோ செயல்படுத்தவோ அனுமதிக்கப்படுவதில்லை. ஆகவே அவன் மிருகம் ஆகவும் கொலைகளைப்புரியவும் மனதை வன்முறையின் கிடங்குகளாக்கவும் நிர்ப்பந்திக்கப்படுகிறான். 'புத்தனிடம்' எனக்கு எந்த ஆன்மீக எழுச்சியும் இல்லை. ஆனால், அவன் சில நடைபாதைகளை தயார்செய்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான் என்று தோன்றுகிறது. அவன் வாழ்ந்த காலத்தில் நாட்டில் நிலவிய பேதங்களைப் பார்த்துக் கொந்தளித்து தான் அவன் நாட்டையும் குடும்பத்தையும் இன்பம் என்று சொலப்பட்டவைகளையும் துறந்திருக்கவேண்டும். அவன் வேட்கை, எல்லோரும் சொல்வதற்கு எதிராக, மனிதனுக்கு இடையே கற்பிக்கப்படும் பேதங்களை அகற்றுவதற்கான கனவாக இருந்தது. அவன் அதைத் தான் தன் ஆயுளுக்குள் அதைக் கண்டும்பிடித்துவிட்டான்.

பூமி என்னும் மனித வாழிடம் இரண்டு துண்டங்களாகக் கிடக்கின்றது. கீழை மேலை என்ற இரண்டு சிந்தனை வெளிகளையும் கொண்டுள்ளதையும் உணரமுடிகிறது. மலைக்கும் மடுவிற்குமான இடைவெளி இரண்டிற்கும் இடையே உள்ளது, என்பதை இவ்விருவகையான சிந்தனை முறைகள் ஏற்படுத்தும் விளைவுகளிலிருந்தும் தாக்கங்களிலிருந்தும் உணரலாம். ஆகவே, தான், 'புத்தனை' ஆசியாவின் சூரியன் என்று உரிமை கொண்டாட விரும்புகின்றனர் சான்றோர்கள். கிழக்கு நிலப்பரப்புகளின் சிந்தனை ஊற்றாகவும் அவற்றின் உச்சப்பட்ச எழுச்சியாகவும் புத்தர் இருக்கிறார். அவை நம் அனைத்து சிந்தனையோட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. நம் சிந்தனைப் பரப்பின் அடிநீரோட்டங்கள் அத்தனையும் புத்தனுடையவை. மேலைதேயத்துச்சிந்தனைகளுக்கும் கிழக்குத் தேயத்து சிந்தனைகளுக்கும் இடையிலான முரண்பாட்டை புத்தரின் சிந்தனை வழி தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ள இயலும். புத்தனை இடது கையில் வைத்துக்கொண்டு நம் முன்னே விரியும் பாதையில் கண்வைத்து நடக்கவேண்டும்.

இந்தியத் திருநாட்டில் மனித வாழ்வின் அடியில் கசியும் நஞ்சை, மையப் பொருளாக்கி அதன் வழியாக நாம் எம்மாதிரியான சமூகச் சூழலில் வாழ்கிறோம் என்பதை அம்பலப்படுத்த ஓர் இனிய பயணமாக இக்கட்டுரைத் தொடர் இருக்கும் என்று நம்புகிறேன். 'அறம்' என்பதன் அர்த்தங்கள் சலித்து அரிக்கப்படும் முன் அதைக் காப்ப்பாற்றி விடும் அவசரமும் அக்கறையும் கூட எனக்கு இருக்கிறது என்று தோன்றுகிறது. பாரத நாட்டின் ஓலங்களும் இரத்த ஆறுகளும் இன்று வரலாறு என்ற வடிவில் நமக்கு ஆவணப்படுத்தப்பட்டு காலந்தோறும் ஸ்பூனில் ஊட்டப்படுகின்றன. அவை மனிதனிடம் அத்தியாவசியமாக இருக்க வேண்டிய பெருங்கருணையைப் பற்றிப் பேசுவது இல்லை என்பது இணைய வெளி புரட்சிக்குப் பின் சிறு குழந்தையாலும் கண்டறிய முடியும். ஆனால், எப்படி இந்த இருட்டடிப்பை வெல்வது என்ற ஆதங்கத்தைப் பதிவுசெய்வதும், அந்த இருட்டடிப்பை வெல்லும் வழிகளை, ஆசியாவின் சூரியனான புத்தன் வழியாக வெல்வது தான் என் நோக்கம்.

இத்தொடரில், பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு கட்டுரையைப் பதிவுசெய்யலாம் என்று இருக்கிறேன். புத்தனின் சிந்தனை சம்பந்தமான பல நூல்களை வாசித்து அதைத் தொடர்புப் படுத்தி இங்கு உங்கள் வசதிக்கேற்பக் கொடுப்பது தான் என் நோக்கம். இதற்கிடையில், என் சுயத்துவப் பயணங்கள், அச்சிந்தனைகளை என்னளவில் தெளிவுபடுத்திக் கொள்ள உதவிகரமாக இருந்திருக்கின்றன என்பதால் என் தனிப்பட்ட, அந்தரங்கமான பகிர்தலையும் நிகழ்த்தப்போகிறேன். ஒவ்வொரு சிந்தனையும் அதன் நுட்பமான அளவிற்கும் சென்று மென்று தின்றுச் செரிப்பதும் அசைபோடுவதும் நம்மைச் செப்பமாக்கும் என்று திடமாக நம்புகிறேன்.

இத்தொடருக்கு 'அன்பிலதனை அறம்' என்று பெயரிட்டிருக்கிறேன், அன்பும் அறமும் புத்தனின் இரண்டு கண்கள் என்ற அடிப்படையில்! என்றாலும் இதன் அர்த்தங்கள் விரிந்த எல்லைகளைக் கொண்டவை புத்தனின் பார்வையில் என்பதையும் நாம் அறிந்து கொள்ளலாம். 'தமிழ் ஸ்டுடியோ' வாசகர்களை எனது இந்தப் பயணத்தில் உடன் வரும்படிக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த கால என் எழுத்துப்பயணத்தில் தம் உரையாடலை நிகழ்த்தியது போலவே இப்பொழுதும், முழுமையான தயக்கமற்ற உரையாடலில் ஈடுபட வேண்டிக் கொள்கிறேன். நண்பன் அருண், எப்பொழுதும் போல உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் தான் அம்பேத்கர் பிறந்த நாளில் இக்கட்டுரையை நாம் தொடங்குவது அவசியம் என்று வலியுறுத்தினார். அவருக்கு என் நன்றிகள். சிந்தனைகளில் செயல்பாடுகளில் நம்மைப்பீடித்திருக்கும் ஆதிக்கச் சிந்தனைகளையும் நம்மையே குறுக்கிக்கொள்ளும் சிந்தனைகளையும், பிறரை ஒடுக்கும் சிந்தனைகளையும் களைந்தெறிய வேண்டும். 2500 வருடங்களுக்கு முன் வாழ்ந்து இறந்த புத்தருக்கும் நமக்குமான தொடர்பு கொஞ்சமும் அற்றுப் போகவில்லை. நான் புத்தமதத்தைப் பற்றியோ அவரை வழிபாட்டுக்குரியவராக்கி சடங்குகள் செய்யும் முறைகள் பற்றியோ எழுதப்போவதில்லை. நான் சொல்ல விரும்பும் விஷயங்களை நிறுவதற்கான சிந்தனைகளை மட்டும் புத்தரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்போகிறேன். அதே சமயம் அவரைப் பற்றிப் புனையப்பட்ட பழங்கதைகளிலுருந்தும் புதிர்களிலிருந்தும் நாம் வெளியேறவேண்டும். புத்தன் எனும் 'வெள்ளை யானை' நாம் அறிந்து கொள்வதின் வழி நம்முள்ளும் ஒரு வெள்ளை யானை வளர்வதை உணரமுடியும் இல்லையா?

--------------------------------------------------------------------------------------

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 

  எங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர
         
  கருத்துகள் இலக்கியம் குறும்பட வட்டம்

Google Thamizhstudio
 
Facebook
Picasa Web Albums
Twitter
YouTube
   
  பத்திரிகை செய்திகள் குறும்படம் பௌர்ணமி இரவு
  நிர்வாகம் நாடகம் குறுந்திரைப் பயணம்
  தொடர்புக்கு களம் படிமை
    திரைப்பட இதழ்கள் குறும்பட உதவிகள்

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ.காம் - All rights reserved.

Best viewed in Windows 2000/XP |  Resolution: 1024X768  |  I.E. v5 to latest  |  Mozilla Latest Version  |  Chrome


Concept, design, development & maintenance by thamizhstudio.com


</