அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்-1
"பரம் பொருளை அடைய இராம பக்தி என்ற இராஜமார்க்கம் இருக்கையில், ஏன் வேறு சந்துகளில் சென்று உழல வேண்டும்?" என்றார் தியாகராஜர். "ஒரு கச்சேரி வெற்றியடைய, அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் அமைத்துக் கொடுத்த 'பத்ததி' எனும் ராஜமார்க்கம் இருக்கையில், ஏன் வேறு சந்துகளில் சென்று உழல வேண்டும்?" என்பது இன்றைய கர்நாடகயிசை உலகில் கோலோச்சும் வித்வான்களின் ஒருமித்த கருத்தாக இருக்கும்.
காரைக்குடிக்கும் தேவகோட்டைக்கும் இடையில் உள்ள ஒரு குக்கிராமமான அரியக்குடியில் 1890-ஆம் வருடம் மே மாதம் 19-ஆம் நாள், திருவேங்கடத்தையங்கார் - செல்லம்மாள் தம்பதியின் மூன்றாவது மகனாய் பிறந்தார் இராமானுஜ ஐயங்கார். பிரபல ஜோசியராக விளங்கிய திருவேங்கடத்தையங்காரின் புகழ் தேவகோட்டை எங்கும் பரவியிருந்ததால், இராமனுஜம் கவலையற்ற சுழலில் குறையின்றி வளர்ந்து வந்தார்.
தன் வயதை ஒத்த சிறுவர்களெல்லாம் விளையாட்டில் ஈடுபட்டிருக்கையில், இராமானுஜத்தின் மனம் பஜனையில் கலந்து கொள்வதையே அதிகம் விரும்பியது. இதன் விளைவாக, சதாசர்வ காலமும் எதாவது இசைத்துக் கொண்டே இருக்கும் பழக்கம் இராமானுஜத்திடம் ஏற்பட்டது. தனது மகனின் இசையார்வத்தைக் கண்ட திருவேங்கடத்தையங்காருக்கு அவரது மகனின் வாழ்க்கை இசையால் இசைவுரும் என்று தோன்றியது. அவரது ஊகத்துக்கு உரம் சேர்க்கும் வண்ணம் இராமனுஜத்தின் ஜாதகமும் அமைந்திருந்தது.
1901-ஆம் ஆண்டு வடபத்ரசாயியை தரிசனம் செய்ய, திருவேங்கடத்தையங்கார் இராமானுஜத்தை அழைத்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் செல்லும் பொழுதெல்லாம் தனது நண்பரான 'அரிகேசநல்லூர் முத்தையா பாகவதரைக்' காண்பது திருவேங்கடத்தைய்ங்காரின் வழக்கம். சுவாமி தரிசனத்துக்குப் பின் சேத்தூர் ஜமீன் மாளிகையில் தங்கியிருந்த முத்தையா பாகவதரைச் சந்திக்க இராமானுஜத்தை அழைத்துச் சென்றார். இராமனுஜத்தைப் பற்றி முத்தையா பாகவதர் விசாரிக்க, 'இவனுக்கு பாட்டில் அதி ஆர்வம். ஒரு விநாடி கூட வாய் ஓய்ந்திருப்பதில்லை; இசைத் துறையிலேயே இவனை ஈடுபடுத்தி விடலாமா என்று எண்ணி இருக்கிறேன். உங்கள் ஆசிர்வாதம் வேண்டும்' என்று வேண்டிக் கொண்டார். உடனே பாகவதர் இராமனுஜத்தை, " ஏதாவது பாடப்பா", என்றார். இராமனுஜமும் தயக்கமின்றி ஒரு பாடல் பாட, பாகவதருக்கு விளையும் பயிரின் உன்னத தரம் முளையிலேயே விளங்கியது. சிறுவன் இராமனுஜத்தை வாழ்த்தியதோடன்றி சேத்தூர் ஜமீந்தாரிடம் அழைத்துச் சென்று, இராமானுஜத்தின் திறைமையைப் பற்றி பிரஸ்தாபித்தார். கலையார்வம் மிக்க ஜமீந்தார், முத்தையா பாகவதரின் கூற்றைக் கேட்டு, இராமனுஜத்தின் பாட்டைக் கேட்க ஆர்வமடைந்தார். 11 வயதே நிரம்பிய இளம் இராமனுஜனும், ஜமீந்தாரின் விருப்பத்திற்கு இணங்க, ஒன்றின் பின் ஒன்றாய் பல பாடல்கள் பாடினான். பாடலில் மகிழ்ந்த ஜமீந்தார், நூறு ரூபாயை எடுத்து, "மிட்டாய் வாங்கிச் சாப்பிடு" என்றார். இப்பரிசே, பின்னாளில் அரியக்குடி இராமனுஜ ஐயங்கார் பல பரிசுகளுள் பட்டங்களும் வாங்கக் கட்டியம் கூறும் வகையில் அமைந்தது எனக் கொள்ளலாம்.
இந் நிகழ்ச்சிக்குப் பின் திருவேங்கடத்தையங்காருக்கு அவரது மகனை சங்கீதத் துறையில் ஆழ்த்துவதைப் பற்றி இருந்த தயக்கங்கள் அனைத்தும் அறவே நீங்கியது. இந்நிலையில், மிளகனூர் கிருஷ்ண சாஸ்த்ரிகள் என்பவரிடம் ரகுவம்சம், குமார சம்பவம் போன்ற காவியப் பயிற்சியும், வேத அப்பியாசமும் இராமனுஜம் பயின்று வந்தார். மகனின் சாஸ்திரப் பயிற்சியைக் கண்டு மகிழ்ந்தாலும், திருவேங்கடத்தையங்காரின் மனதில் மகனின் ஜாதக அமைப்புப் படி, அவனை எப்படி சங்கீதத் துறையில் சிறக்க வைப்பது என்ற எண்ணமே நிறைந்திருந்தது. தனது மகனின் இசைப் பயணத்தை தொடங்கி வைக்க தக்கதொரு குருவைத் தேடி ஆராயலானார்.
அக்காலத்தில், சிறந்த வித்வானாய் விளங்கிய புதுக்கோட்டை மலையப்பய்யர் என்பவரிடம் திருவேங்கடத்தையங்கார் தனது மகனுக்கு இசைப் பயிற்சி அளிக்குமாறு வேண்டினார். தனது வாசஸ்தலமான தேவகோட்டக்கே வந்து விட்டால், பேரன்பர்களின் ஆதரவுடன் தடையின்றி நாதோபானை செய்யலாம் என்றும் ஒழிந்த நேரத்தில் தன் மகனுக்கு போதனை செய்யலாம் என்றும் கூறினார். கர்நாடக சங்கீதத்தின் கலங்கரை விளக்கமாக இருக்கப் போகும் மகாவித்வானுக்கு சங்கீத அரிச்சுவடிகளை போதிக்கப் போகிறோம் என்பதை அவர் உணர்ந்தாரோ என்னமோ, திருவேங்கடத்தையங்காரின் வேண்டுகோளுக்கு ஒரு வார்த்தை கூட மறுத்தலிக்காமல் தேவகோட்டைக்கு வந்து இராமனுஜனுக்கு இசை பயில்வித்தார். சுமார் மூன்று வருட கால குருகுலவாசத்தின் விளைவால், செம்மையான சங்கீத அஸ்திவாரத்துடன் விளங்கிய இராமனுஜத்தைக் கண்ட திருவேங்கடத்தையங்கார், ஒரு பிரபல சங்கீத வித்வானிடம் மேற்பயிற்சிக்கு ஆனுப்ப எண்ணினார். அவ்வாறே, 1906-ஆம் வருடம், 'பல்லவி நரசிம்ம ஐயங்கார்' என்று புகழ் பெற்று விளங்கிய நாமக்கல் நரசிம்ம ஐயங்காரிடம் பயில இராமனுஜத்தை ஸ்ரீரங்கம் அழைத்துச் சென்றார்.
சங்கீத வித்வானாய் பரிமளிகக் ஒருவனுக்கு, நல்ல சங்கீத அஸ்திவாரமும், சாரீர சம்பத்தும், தேக பலமும், கற்பனா சக்தியும் மிக மிக அவசியம். இவையெல்லாம் இராமனுஜத்திடம் நிரம்பியிருக்கிறதா என்று சோதித்துப் பார்த்த நரசிம்ம ஐயங்கார், திருப்தியுற்ற பின்னே இராமானுஜத்தை சீடனாகச் சேர்த்துக் கொண்டார். பாடசாலை போல எப்பொழுதும் மாணக்கரின் நடமாட்டம் நிரம்பியிருந்த வீட்டில், நாமக்கல் சேஷ ஐயங்கார், சாத்தூர் கிருஷ்ண ஐயங்கார், உமையாள்புரம் கல்யாணராமைய்யர் போன்றவர்களுடன் பாடம் கேட்கும் பேறு இராமானுஜனுக்குக் கிடைத்தது.
சங்கீதம் கற்க நல்ல குரு கிடைத்துவிட்டால் மட்டும் போதுமா? என்னதான் பௌலர் ஃபுல் டாஸ் பால் போட்டாலும், அதை பவுண்டரிக்கு அனுப்பினால்தானே ஸ்கோர் ஏறும்? என்னதான் குரு பாடி காண்பித்தாலும், ஸ்ருதி சுத்தமாய், கமக சுத்தமாய், லய சுத்தயாய் சாரீரத்தில் கொண்டு வருவதற்கு எத்தனை அப்யாசம் செய்ய வேண்டும்? எத்தனையோ பேர் புழங்கிப் பாடம் பயின்று வரும் இடத்தில், நேற்று வந்தவன் சாதகம் செய்ய முடியுமா? மனம் செய்யும் கற்பனைகளையெலலாம் குரலில் கொண்டு வர சாதகமே ஒரே வழி என்பதை தெளிவாக உணர்ந்தான் இராமானுஜம். சாதகம் செய்ய மனம் படைத்தவருக்கு மார்க்கமா இல்லாமல் போய் விடும்? தனது சாதக பலத்தை விருத்தி செய்து கொள்ள, விடிவதற்கு முன்பே எழுந்து, ஸ்ரீரங்கம் கோயில் ஆயிரம் கால் மண்டபத்திற்கு இராமனுஜம் போய் விடுவார். 'பசி நோக்கார், கண் துஞ்சார், கருமமே கண்ணாயினார்', என்ற ஆன்றோர் சொல்லுக்கேற்ப, ஆயிரம் தூண்களுக்கு இசையமுது படைத்தவாறு அரியக்குடி சாதகம் செய்து கழித்த கணங்கள்தான் அவர் பிற்காலத்தில், ஆயிரம் ஆயிரம் ரசிகர்களை தன் இசையில் சொக்க வைக்க உதவியது.
நரசிம்ம ஐயங்காரின் கீழ் சுமார் இரண்டு வருட காலம் கழித்த இராமனுஜத்தின் ஆற்றல், விரிவாக ராகம் பாடுவதிலும் கல்பனை ஸ்வரம் பாடுவதிலும் பெரிய விருத்தியை அடைந்தது. 16 வயது சிறுவனாய் சேர்ந்த இராமனுஜத்தின் குரல், பலருக்கு நிகழ்வது போல உடைந்து கெட்டுவிடுமோ என்ற நரசிம்ம ஐயங்காரின் அச்சத்திற்கு மாறாக, நாளுக்கு நாள் வளம் பெற்று நல்ல பக்குவத்தையடைந்தது. அச்சமையத்தில், தியாகராஜரின் சிஷ்ய பரம்பரையில் வந்த 'மகா வித்வான் பட்டணம் சுப்ரமண்ய ஐயரிடம்' சிட்சை பெற்று, இராமநாதபுரத்தின் ஆஸ்தான வித்வானாக விளங்கி, சங்கீத உலகில் கோலோச்சி வந்த பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்காரின் கச்சேரியைக் கேட்ட இராமனுஜத்தின் மனதில் அவரிடம் சங்கீதம் கற்க வேண்டும் என்ற ஆசை கிளை விட்டு, நாளுக்கு நாள் பெருகிய வண்ணம் இருந்தது.
தொடரும்...
தொடர்ந்து இசைப்போம்... |