அரியக்குடி-3
ஒருவருக்கு எழுந்த ஆசை, கொஞ்சம் கொஞ்சமாய் எப்படியோ மேடை வரை பரவிவிட்டது. கோனேரிராஜபுரம் வைத்தியநாதரின் கச்சேரி முடிந்ததும், மேடையிலிருந்த பக்கவாத்யக்காரர்கள் இராமனுஜத்தைப் பார்த்து வா என்று அழைத்தனர். கூட்டத்தில் இருந்த மற்ற வித்வான்களும் பல உற்சாகமான சொற்கள் உதிர்த்தனர். பூச்சி ஐயங்காரும் உற்சாகப்படுத்தி இராமானுஜத்தைப் பாடச் சொல்ல, எத்தனையோ முறை 'follow' செய்து ஏறிய மேடைக்கு, முதல் முறையாய் 'solo' செய்ய இராமானுஜம் ஆயத்தமானார். மேடையின் நடுவே இருப்பினும், சற்றே உள்ளடங்கியபடி உட்கார்ந்திருந்த இராமானுஜத்தைப் பார்த்து திருக்கோடிக்காவல் கிருஷ்ணையர், 'முன்னுக்கு வா', என்று இரட்டை அர்த்தம் தொனிக்குமாறு கூறியதைக் கேட்டு சபையில் ஆரவாரம் எழுந்தது. அனைவரும் கொடுத்த உற்சாகத்தில், 'விடலனு கோதண்டபாணி' என்ற தோடி ராகக் கிருதியில் தொடங்கி கச்சேரியை சிறப்பாகச் செய்து முடித்தார். சோமசுந்தரம் செட்டியார் மட்டற்ற மகிழ்ச்சியுற்றார். புத்தாடை, தாம்புலம், பழம், ஐந்து தங்க சவரன்கள் எல்லாம் கொடுத்து மரியாதை செய்தார்.
அரியக்குடி இராமனுஜ ஐயங்கார் தன் முதல் கச்சேரியைத் தொடர்ந்து பல கச்சேரிகள் கொடுத்த பொழுதிலும், தனது குருக்குலவாசத்தை விடாமல் இருந்தார். குருவின் சங்கீதத்தைக் கேட்டதோடன்றி, மற்ற வித்வான்களின் கச்சேரிகளையும் கேட்டு, அவற்றில் உள்ள நல்ல விஷயங்களையெலலம் கிரஹித்து தன் கச்சேரிகளில் அவற்றை உபயோகப்படுத்திக் கொண்டார்.
பூச்சி ஐயங்காரிடம் சுமார் 10 வருடங்கள் குருக்குலவாசம் செய்ததன் பலனாய், பல தியாகராஜ கீர்த்தனங்கள், பட்டணம் சுப்ரமண்ய ஐயர் கீர்த்தனங்கள் மற்றும் பூச்சி ஐயங்காரின் கீர்த்தனங்கள் என்று தன் இசை வளத்தைப் பெருக்கிக் கொண்டார்.
இதைத் தவிர, வீணை தனம்மாளிடம் பல பதங்கள் மற்றும் ஜாவளிகளைக் கற்றுக் கொண்டார். இன்னும் சொல்லப் போனால், தன் வாழ்வின் கடைசி காலம் வரை தன்னை ஒரு மாணாக்கனாகவே கருதி, பல புதிய கீர்த்தனைக்களைக் கற்றோ அல்லது மெட்டமைத்தோ பாடி வந்தார்.
நாளடைவில் பல கச்சேரிகள் செய்யும் வாய்ப்பு அமையும் போது, தன் கச்சேரியை எப்படி அமைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட ஆரம்பித்தார். அரியக்குடி கச்சேரி செய்ய வந்த காலத்துக்கு முன் கோயில் விழாக்களிலும் அரசவைகளில் மட்டுமே கச்சேரிகள் நிகழ்ந்தன. சமஸ்தானங்கள், ஜமீன்கள், செல்வந்தர்கள் ஆதரவிலேயே சங்கீதம் திளைத்தது. அதன் பின், அரசவையில் இருந்து படிப் படியாய் மக்களவைக்குப் பிரவேசம் செய்ய ஆரம்பித்தது. பண்டிதர்கள் நிறைந்திருக்கும் அரசவையில் கச்சேரிகள் செய்தபோது, கேட்போரை மகிழ்விப்பதை விட, தன் இசையாற்றலை பறை சாற்றவே பாடகர்கள் எத்தனித்தனர். இந்நிலை மாறி, சபைகள் மூலம் மக்களை அடைந்த போது, அழகுணர்சசி, விறுவிறுப்பு, பாவங்கள் (bhavam), வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் ஆகியவையும் ஒரு சங்கீதக் கச்சேரியில் எதிபார்க்கப்பட்டன.
இதனால் பண்டிதர்க்கு மட்டுமென்று இருந்த இசை ஜன ரஞ்சகமாக மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்தத் தேவையை உணர்ந்து, அத்தேவைக்கு ஏற்ப ஓர் அற்புத பாணியை அரியக்குடி உருவாக்கினார். இசையைத் தமிழுக்கு ஒப்பிட்டோம் எனில், பல கலைஞர்களை காப்பியங்களுக்கு ஒப்பிடலாம். அப்படிப்பட்ட காப்பியங்களெல்லாம் அமைவதற்கு வேண்டிய இலக்கணத்தை அரியக்குடிக்கு ஒப்பிடலாம். இசைக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் கூட மத்யம காலமும், மத்ய ஸ்தாயியுமே ஆதாரமாக அமைவன. ஒரு காரியத்தை செய்யும் போது அவசரமும் கூடாது, அதீத நிதானமும் கூடாது. மத்யம காலப்ரமாணத்தில் செய்தாலே அது செம்மையாக நடக்கும். அதே போல, பேசும் போது உரக்கப் பேசினால் அது ஓலமாகிவிடும். ரொம்ப மெதுவாகப் பேசினால் ரகசியமாகிவிடும். மத்யம ஸ்தாயியில் பேசும் போது எல்லோரையும் தக்க முறையில் சென்றடையும்.
பொதுவாக இதைக் கூறினாலும், காலத்துக்கு ஏற்ப துரிதமும், நிதானமும் உபயோகப்படும். இதைத்தான் தன் கச்சேரிகளுக்கு ஆதாரமாகக் கொண்டார் அரியக்குடி. அவர் கச்சேரிகள் விறுவிறுப்பான மத்யம கால கிருதிகள் நிறைந்தனவாக இருக்கும். அவர் கச்சேரிகள் பெரும்பாலும் வர்ணத்திலேயே தொடங்கும். அதன் பின், பஞ்சரத்ன கீர்த்தனை ஒன்றைப் பாடுவார். அதற்குள் அவர் குரல் நன்கு பதப்பட்டு விடும். அதன் பின், பந்துவராளி, பூர்விகல்யாணி போன்ற ராகங்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து விஸ்தரிப்பார். அடுத்து உப பிரதான ராகமாய் ஒரு ராகத்தில் ஆலாபனை, நிரவல், கல்பனை ஸ்வரம் எல்லாம் பாடுவார். அடுத்து, துரித கதியில் ஒரு பாடல் பாடிய பின், கச்சேரியின் பிரதான ராகத்தை பாடுவார். அவர் சிறப்பு என்னவெனில், ஐந்து நிமிஷம் பாடினாலும், அரை நிமிடம் பாடினாலும். அரை மணி பாடினாலும் கேட்பவர் மனதில் ராகம் பூரணாமாய் சென்றடைந்து, இன்னும் பாடியிருக்கலாமே என்று தோன்றாதபடி அமைந்திருக்கும். பிரதான ராகத்துக்குப் பின், தனி ஆவர்த்தனம் நடக்கும். இன்றைய கச்சேரிகளில் கடைசியில் போனால் போவதென்று தனி ஆவர்த்தனம் விடும் போது, மக்கள் பாடகரைக் கேட்ட திருப்தியில், உடன் வாசிப்போரை சட்டை செய்யாமல் அரங்கை விட்டு சென்று விடுகின்றனர்.
அரியக்குடியின் கச்சேரி முறையை பின் பற்றி வெற்றி பெரும் இக்கால கலைஞர்கள், அவர் கச்சேரி நேரத்தின் மையத்தில் தனி ஆவர்த்தனம் விட்டு ரசிகர்களை கேட்க வைத்த உத்தியையும் கையாண்டால், சங்கீத உலகம் பெரும் பயனையடையும். உடன் வாசிப்போரும் சோர்ந்து போகாமல் இருப்பர். தனி ஆவர்த்தனத்துக்குப் பின், கச்சேரி நேரத்தைப் பொறுத்து ராகம் தானம் பல்லவி பாடுவார். அதன் பின், விருத்தங்கள், கனம் அதிகமில்லாப் பாடல்கள், திருப்பாவை போன்றவற்றை பாடிய பின், தில்லானாவுடன் நிறைவு செய்வார்.
அரியக்குடி அறிந்திருந்த கிருதிகள் கணக்கிலடங்கா. அவர் கச்சேரிகளில் பல வாக்யேயக்காரர்களின் கீர்த்தனைகளும், தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் அமைந்த பாடல்களும் நிறைந்திருக்கும். ஒரே ராகத்தையோ, ஒரே பாடலையோ நிறைய நேரம் பாடாமல், பல ராகங்களையும் பல கிருதிகளையும் பாடும்போது, கச்சேரிக்கு வந்த அனைவருமே அவர்தம் ரசனைக்கேற்ற ஏதோ ஒன்றினைக் கேட்குமாறு அமைந்துவிடும். கச்சேரியன்று அவர் குரலின் பதம், கச்சேரி நடக்கும் இடம், ரசிகர்களின் எண்ணங்கள் எல்லாவற்றையும் துல்லியமாய் எடை போட்டு சமயோச்சிதமாய் பாடுவதில் அவருக்கு நிகர் அவர்தான் என்று அவரைக் கேட்ட அனைவருமே கூறுகின்றனர்.
தமிழைச் சங்கம் அமைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழில் பாட வேண்டியதன் அவசியத்தை நன்குணர்ந்தவர் அரியக்குடி. அருணாச்சல கவியின் இராம நாடக கீர்த்தனைகள், ஆண்டாளின் திருப்பாவை, பல பாபநாசம் சிவன் பாடல்கள் என்று எத்தனையோ தமிழ்ப் பாடல்களை வெறும் துக்கடாவாக மட்டும் பாடாமல், அதற்கு உரிய அந்தஸ்தைக் கொடுத்துப் பாடிய முன்னோடி என்பதை பலர் மறந்தாலும், அதுதான் உண்மை. அவருக்கு சங்கீத கலாநிதி விருது வழக்ஙப்பட்ட போது, பாடல் வரிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் அவர் உரை அமைந்தது. கர்நாடக இசைப் பாடகர்கள் வேற்று மொழிப் பாடல்கள் பாடும் போது அவற்றின் அர்த்தத்தை உணர்ந்து பாட, அந்தந்த மொழிகளைக் கற்க வேண்டும் என்கிறது அவர் உரை.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் சங்கீத உலகின் அரசராய் விளங்கியவர் அரியக்குடி. அரியக்குடி-சௌடையா-வேணு நாயக்கர், அரியக்குடி-பாப்பா வெங்கடராமையா-மணி ஐயர், அரியக்குடி-டி.என்.கிருஷ்ணன் -மணி ஐயர் போன்ற கூட்டணிகள் புகழின் உச்சங்களைத் தொட்டன. 'சங்கீத ரத்னாகரா', 'சங்கீத கலாநிதி', 'இசைப் பேரறிஞர்', 'சங்கீத் நாடக் அகாடமி' போன்ற விருதுகள் அவரை அலங்கரித்ததன் மூலம் பெருமையடைந்தன. அரியக்குடி அற்புதமான கலைஞராக விளங்கியதோடன்றி நல்ல குருவாகவும் விளங்கினார். அவரது சிஷ்ய பரம்பரை கே.வி.நாராயணசாமி, பி.ராஜம் ஐயர் போன்ற 'சங்கீத கலாநிதி'-கள் கொண்டதாய் அமைந்து அவர் பாணியை என்றென்றும் நிலைக்கச் செய்தது.
1890-ல் தொடங்கிய சங்கீத சகாப்தமான அரியக்குடி, 1967-ல் மறைந்தாலும், இன்றளவும் கூட தொடரும் சகாப்தமாகவே விளங்குகிறார். அவரின் கச்சேரி முறையும், அவரது சிஹ்ய பரம்பரையும், அவர் காலத்தில் பதிவு செய்யப்பட்ட ஒலிநாடாக்களும் அவர் புகழை என்றென்றும் நிலைக்கச் செய்யும்.
தொடர்ந்து இசைப்போம்... |