வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


ஒரு மனிதனின் மன நிலையை அப்படியேப் புரட்டிப்போடும் வல்லமை படைத்தது இசை. இசையை நேசிக்கும், சுவாசிக்கும் சிலரின் வாழ்க்கை இந்த சமுதாயத்திற்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. இசையை தொடர்ந்து கேட்கும் மனிதர்களின் வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. இசையை உற்று கவனியுங்கள். சாதாரண சப்தங்கள் தான் உங்கள் நாடி நரம்பையே அசைத்து பார்க்கும் வல்லமை படைத்ததாக மாறுகிறது. எப்படி? எந்த ஒன்றையும் சரியான பாதையில் ஒருமுகப்படுத்தி செலுத்தினால் அதனால் இந்த உலகில் அனைத்தையும் வென்று விடலாம் என்பதே இசை நமக்கு சொல்லித்தரும் பாடமாகும்.

மனிதனிப் பொறுத்தவரை யோகா. சப்தங்களை பொறுத்தவரை இசை. மனிதன் செய்யும் யோகக்கலை மனிதனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் வாழவைக்கிறது. ஆனால் சப்தங்கள் செய்யும் யோகா இவ்வுலகின் ஆண்ட சராசரங்களையும் கட்டுக்குள் வைக்கிறது. இசையை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காக...

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இசைத்துறையை தமிழ் ஸ்டுடியோ தன்னால் இயன்ற வரை பெருமைப் படுத்த முயல்கிறது.

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
இசை
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


லலிதா ராம்

பெங்களூரில் பொறியாளராய்ப் பணியாற்றும் லலிதா ராம் - இசைத் துறையிலும் வரலாற்றுத் துறையிலும் ஆர்வலர், ஆய்வாளர். இவ்விரு துறைகளைப் பற்றியும் இங்கு தொடர்ந்து எழுதவுள்ளார். திரைப்பட இசையில் பொதிந்து இருக்கும் பாரம்பரிய இசை நுணுக்கங்களைப் பற்றி இணையத்தில் எழுதத் தொடங்கி விமர்சனங்கள், இசைக் கலைஞர்கள், இசைக் கருவிகள் பற்றி கட்டுரைகள் பல இணையத்தில் எழுதியுள்ளார். விகடன் பிரசுரம் வெளியிட்ட 'இசையுலக இளவரசர் ஜி.என்.பி' என்ற இவரது நூல், ஜி.என்.பாலசுப்ரமணியம் என்ற கலைஞனின் இசை வாழ்க்கையை விரிவாகப் படம்பிடித்துள்ளது. ஹிந்து, தினமணி, தினத் தந்தி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் இந் நூலைப் வெகுவாகப் பாராட்டியுள்ளன.

மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தில் ஆய்வாளராய் விளங்கும் இவர், நண்பர்களுடன் சேர்ந்து நான்கு வருடங்களாக வரலாறு.காம் என்ற இணைய மாத இதழை நடத்தி வருகிறார். கல்வெட்டுகள், கட்டிடக் கலை, சிற்பங்கள், ஓவியங்கள், பயணக் கட்டுரைகள் என பலதரப்பட்ட கட்டுரைகள் தென்னிந்திய வரலாற்றை இணையத்தில் உலவ விடுகின்றன. முனைவர் கலைக்கோவன் எழுதிய மூன்று வரலாற்று நூல்களையும், தொல்லியல் இமயம் ஐராவதம் மகாதேவனின் பணிப் பாராட்டு மலரையும் வரலாறு.காம் வெளியிட்டிருக்கிறது.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS இசை TS லலிதா ராம் தொடர்கள் வாயில்

டி.கே.பட்டம்மாள்

லலிதா ராம்  

"எங்க வீட்டு கமலா அற்புதமாப் பாடுவா."

"பெண் பிள்ளை எப்படிப் பாடினா என்ன? குடும்பத்துப் பெண் கச்சேரியா செய்யப் போறா? பெண் பார்க்க வரும் போது, "நான் ஊமை இல்லை"-னு காமிக்க ஒரு பாட்டு. நவராத்திரி கொலுவுல சும்மா சுண்டலை வாங்கிண்டு வராம இருக்க வேண்டி நாலு பாட்டு தெரிஞ்சாப் போறாதோ?"

மேலுள்ள சம்பாஷணையை இன்று படிக்க வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கும். 90 வருடங்கள் பின்னோக்கிப் போனோமெலில் இப்படிப்பட்ட பேச்சை நாம் தினம் தினம் கேட்டிருக்கக் கூடும்.பெண் கலைஞர்கள் என்றாலே மரபு வழிக் கலைஞர்கள் மட்டும்தான் என்றிருந்த நிலையை மாற்றியவர் இருவர். நடனத் துறைக்குள் குடும்பப் பெண்களும் நுழைய முடியும் என்று காட்டியவர் ருக்மணி தேவி. இதையே சங்கீதத் துறையில் சாதித்துக் காட்டியவர் டி.கே.பட்டம்மாள்.

காஞ்சியில், தாமல் கிருஷ்ணசாமி தீட்சிதருக்கும் ராஜம்மாளுக்கும் 1919 மார்ச் 28-ம் தேதி பிறந்தக் குழந்தையே பிற்காலத்தில் சங்கீத உயரங்களைத் தொட்ட டி.கே.பட்டம்மாள். பெற்றோர் இருவருமே இசையில் நாட்டமுடன் இருந்ததால் பட்டம்மாளுக்கு இசை இயற்கையாகவே வந்தது. கிருஷ்ண கருணாம்ருதம், சியாமளா தண்டகம், முகுந்த மாலை போன்ற ஸ்லோகங்களை தந்தையார்

அமைத்த ராகத்தில் தினமும் அதி காலையில் பட்டம்மாள் சாதகம் செய்வார். மகளின் இசை ஆற்றலைக் கண்ட தீட்சிதர், பட்டம்மாளைப் பெரிதும் உற்சாகப்படுத்தினார். பட்டம்மாளின் ஸ்லோகம் சொல்லும் ஆற்றல் உறவினரிடையே பிரபலமாய் விளங்கியது.

பட்டம்மாள் இசைத் துறைக்கு வர உதவியோரில் முக்கியமானோர் இருவர். ஒருவர் பட்டம்மாளின் முதல் குருவாக விளங்கிய 'தெலுங்கு வாத்தியார்'. மற்றவர் பட்டம்மாள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியை அம்முக்குட்டி அம்மாள்.

ஸ்ருதி பத்திரிக்கையில் வெளியான பட்டம்மாள் பற்றிய சிறப்பிதழில், தெலுங்கு வாத்தியாரைப் பற்றி பின் வருமாறு நினைவு கொள்கிறார் பட்டம்மாள், "எனக்கு ஏழு வயது இருக்கும் போது ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தோம். நான் அப்போதே அன்றைய பிரபல வித்வான்களைப் போலவே பாடுவேன். அதனால், உறவினர்கள் மத்தியில் என் பாடும் திறன் பிரபலமாகியிருந்தது. அன்றும் என்னைப் பாடச் சொன்ன போது, சற்றும் பயமில்லாமல் நானும் என் சகோதரர் ரங்கநாதனும் பாடினோம். அதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெரியவர் பெரிதும் மகிழ்ந்து, "இப்படிப் பட்ட பெண்ணுக்குப் பாட்டுச் சொல்லித் தரவல்லவா இத்தனை நாள் ஏங்கியிருந்தேன்", என்றார். அவர் பெயர் கூட எங்களுக்கு நினைவில்லை. அவர்தான் எனக்கு முறைப்படி சொல்லிக் கொடுத்த முதல் குரு. அவரைத் தெலுங்கு வாத்தியார் என்று அழைப்போம். 'துலஸி பில்வ', 'லேகனா', 'கொலுவமரகத' போன்ற பாடல்களை நான் அவரிடம்தான் கற்றேன்."

காஞ்சிபுரத்தில் நயினா பிள்ளை நடத்திய தியாகராஜ உத்சவத்தில் அனைத்து முன்னணி வித்வான்களும் பாட வந்தனர். அவர்களின் இசை பட்டம்மாளின் ஆர்வத்தையும் அறிவையும் வளர்த்தது. குறிப்பாக நயினா பிள்ளையின் கச்சேரிகள் பட்டம்மாளிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நயினா பிள்ளையின் 'full-bench' கச்சேரிகள் அந்தக் காலத்தில் வெகு பிரபலம். கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற தாள வகைகளில் கடினமான பல்லவிகளை பாடுவதில் வல்லவராக விளங்கியவர் நயினா பிள்ளை. அவர் கச்சேரிகளில் ராகம் தானம் பல்லவியை மட்டுமே பல மணி நேரம் பாடுவார். எத்தனை நெருடலான லய சமாசாரங்களில் ஈடுபட்ட போதும் ராக பாவம் சிறிதும் குறையாமல் பாடுவது நயினாப் பிள்ளையின் தனிச் சிறப்பு. அவரின் கம்பீரமான இசையைக் கேட்டு வளர்ந்த பட்டம்மாள், நயினாப் பிள்ளையை தன் மானசீக குருவாகவே கொண்டார். ஒரு இசைப் போட்டியில் பட்டம்மாள் 'ரக்ஷ பெட்டரே' பாடியதைக் கேட்ட நயினாப் பிள்ளை, தன் வீட்டில் நடந்த நவராத்திரி விழாவில் பட்டம்மாளைப் பாட வைத்து மகிழ்ந்தார்.

அம்முக்குட்டி அம்மாள் இல்லையெனில் தானொரு முழு நேரப் பாடகியாய் ஆகியிருக்க முடியாது என்று ஓர் நேர்காணலில் கூறுகிறார் பட்டம்மாள். பட்டம்மாளின் தந்தை மகளின் சங்கீத ஆர்வத்தை ரசித்த போதும், அக் கால நிலைக்கு ஏற்ப தன் மகளை மேடையில் பாட அனுமதிக்காமல் இருந்தார். கூட்டத்துக்கு நடுவில் தன் மகள் மேடை ஏறிப் பாடுவதென்பது தீட்சிதருக்கு உறுத்தலான விஷயமாகவே இருந்தது. தீட்சிதரின் மனதை மாற்றியதில் பெரும் பங்கு வகித்தவர் அம்முக்குட்டி அம்மாள்தான். தீட்சிதரிடம் வாதிட்டு பட்டம்மாள் பெற்றிருக்கும் ஆற்றல் அபூர்வமானது என்று உணர்ச் செய்தார். சென்னையில் நடை பெற்ற Government Polytechnical examination for music-ல் பட்டம்மாளும் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். பத்து வயது கூட நிரம்பிராது சிறுமியும் பரிட்சையில் கலந்து கொண்டார். பேராசிரியர் சாம்பமூர்த்தி, முத்துசாமி தீட்சிதரின் பரம்பரையைச் சேர்ந்த அம்பி தீட்சிதர், டைகர் வரதாச்சாரியார் போன்ற ஜாம்பவான்கள் பரிசீலனைக் குழுவில் அமர்ந்திருந்தனர். பட்டம்மாள் பாடிய பாடலைக் கேட்ட அம்பி தீட்சிதர், "முத்துசாமி தீட்சிதரின் கீர்த்தனை ஏதேனும் தெரியுமா" என்று கேட்க, "ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே" தெரியும் என்றார் பட்டம்மாள். "ஸ்ரீ சுப்ரமணியாய நமஸ்தே பாடலா! அதைப் போன்ற நுட்பமான நெடும் பாடலெல்லாம் உனக்குப் பாட வருமா!" என்று ஆச்சரியப்பட்டு பட்டம்மாளைப் பாடச் சொன்னார். பட்டம்மாளின் குரலிலிருந்து வெளிப்பட்ட இசையில் சொக்கிப் போனார். பட்டம்மாளின் தந்தையை அழைத்து, "இந்தக் குழந்தையை நாளை முதல் என் வீட்டுக்கு தினமும் அழைத்துக் கொண்டு வந்துவிடு. நான் இவளுக்கு நிறைய சொல்லித் தர வேண்டும்.", என்றார். சில நாள் விடுப்பில் வந்திருந்த பட்டம்மாளின் தந்தையோ செய்வதறியாமல் தவித்தார். "நீ என்ன செய்வாயோ தெரியாது. அவளை என் வீட்டுக்கு அழைத்து வரத்தான் வேண்டும்", என்று அம்பி தீட்சிதர் அடித்துக் கூறவும்., தன் விடுப்பை இன்னும் கொஞ்ச நாட்களுக்குன் நீட்டித்து பட்டம்மாள் பாடம் கேட்க வழி செய்தார் கிருஷ்ணசாமி தீட்சிதர். சென்னையில் அம்பி தீட்சிதரிடம் கற்ற சில நாட்களை தன் வாழ்வின் பொற்காலம் என்று கூறுகிறார் பட்டம்மாள்.

தொடரும்...

தொடர்ந்து இசைப்போம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.