நான்கு வருடத் தேடல்
சங்கீத கலாநிதி ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் சங்கீதத்தில் ஆகர்ஷிக்கப்பட்டு, ஐம்பது வயதைத் தாண்டிய எவரைக் கண்டாலும், "ஜி.என்.பி-யை நேரில் பார்த்ததுண்டா?", என்று கேட்பேன். அவர் இசையின் மேல் காதல் கொண்டிருந்த எனக்கு, 2003-ல் ஜி.என்.பி-யின் கடைக் குட்டியான திரு.ஜி.பி.இராஜசேகரின் அறிமுகம் கிடைத்தது. எண்ணற்ற வார இறுதிகளை அவர் இல்லத்தில் ஜி.என்.பி-யைப் பற்றி பேசியும், இசையைக் கேட்டும், ஜி.என்.பி தொடர்பாக அவர் குடும்பத்தாரிடம் இருந்த தொகுப்புகளைப் புரட்டியபடியும் கழித்திருக்கிறேன்.
அப்போதுதான், ஸ்ருதி ·பௌண்டேஷன் ஜி.என்.பி-யைப் பற்றி நடத்திய இரண்டு நாள் கருத்தரங்கின் விடியோ பதிவுகளைப் பார்க்க நேரிட்டது. பல மணி நேரம் செல்லக் கூடிய அந்த விடியோவில் எங்கோ ஒரு மூலையில், 1964-ல் கிருஷ்ண கான சபா வெளியிட்ட மலரைப் பற்றிய குறிப்பினை திரு. சஞ்சய் சுப்ரமணியத்தின் பேச்சு பதிவு செய்திருந்தது. அன்று தொடங்கி எங்காவது இந்தப் பாராட்டு மலர் கிடைக்குமா என்று சல்லடை போட்டுத் தேடத் தொடங்கினேன்.
வெளியிட்ட கிருஷ்ண கான சபையை அணுகியதும், அவர்களிடமும் ஒரு பிரதி கூட இல்லாததை அறிந்தேன். பல நாட்கள் தேடிய பின், ஜி.என்.பி-யின் குடும்பத்தினரின் சேகரிப்பிலேயே பிரதியின் xerox copy இருந்ததை அறிந்து நானும் ஒரு பிரதி பெற்றுக் கொண்டேன். திரு. ராஜமாணிக்கம் பிள்ளை, திரு. லால்குடி ஜெயராமன் போன்ற அரிய கலைஞர்களும், ஜி.என்.பி-யுடன் நெருங்கிப் பழகியர்கள் பலரும் எழுதியிருக்கும் கட்டுரைகளை படித்து மகிழ அந்த பிரதியே போதுமானதாக இருந்தது. இருப்பினும், பொக்கிஷமாய்ப் போற்றத் தக்க பல அரிய புகைப்படங்களை ரசிக்க என் பிரதி போதுமானதாக இல்லை. எங்கேனும் நல்ல பிரதி கிடைக்குமா என்ற தேடல் தொடர்கதையாகவே மூன்று ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.
2006-ல் விகடன் பிரசுரத்தார் அளித்த வாய்ப்பால் ஜி.என்.பி-யைப் பற்றி புத்தகம் எழுதத் தொடங்கினேன். பழைய இதழ் படிகளிலிருந்தும், நேர்காணல்கள் மூலமாகவும், ஜி.என்.பி-யின் பதிவு செய்யப்பட்ட இசைக் கச்சேரிகளில் இருந்தும், எழுத ஏராளமாய் விஷயங்கள் கிடைத்தன. இருப்பினும், புகைப்படங்கள் இல்லா புத்தகம், நெய்யில்லா சர்க்கரைப் பொங்கல் போன்றல்லவா மணமற்று இருக்கும்? 1965-ல் மறைந்துவிட்ட மாமேதையின் புகைப்படங்களோ அதிகம் கிடைக்காத நிலையில், கிருஷ்ண கான சபை வெளியிட்ட பாராட்டு மலரில் உள்ள படங்களையே நம்ப வேண்டிய நிலைக்கு ஆளானோம்.
சென்னை, பெங்களூர், ஐரோப்பா, அமெரிக்கா என்று உலகம் முழுவதும், இசையில் இருந்த ஈடுபாட்டால் உருவான எனது நண்பர் கூட்டமே இந்த மலரின் பிரதியைத் தேடத் தொடங்கியது. பல நாட்களுக்குப் பின், ஜி.என்.பி பக்தர் என்று கொள்ளக் கூடிய திரு.சிவராமகிருஷ்ணனை புத்தகத்துக்காக பேட்டி காணச் சென்றேன். பேட்டி முடிந்து கிளம்பும் தருவாயில், தன்னிடம் 1964-ல் வெளியான மலரின் பிரதி இருப்பதை திரு.சிவராமகிருஷ்ணன் தெரிவித்த போது என் கால்கள் தரையில் இல்லை.
ஒரு வழியாய் பிரதி கிடைத்த போதும், பல கை மாறி இருந்த புத்தகத்தின் பக்கங்கள் வெகுவாய் கசங்கியிருந்தன. நூல் அச்சாக சில வாரங்களே எஞ்சியிருந்த தருணத்தில், திரு.அதியமான் தொலை பேசினார். அவருடைய உறவினர் வாடகைக்கு தங்கி இருக்கும் வீட்டின் ஒரு பகுதியில், வீட்டுக்கு சொந்தக்காரர் பல புத்தகங்கள் வைத்திருப்பதாகவும், அவற்றுள் இந்த மலரின் படியும் இருப்பதாகவும் கூறினார். வீட்டுக்காரர் இந்தியாவிலேயே இல்லாததால், வீட்டை நிர்வகித்து வந்தவர்களிடம் மன்றாடிப் படிகளைப் பெற்றுத் தந்தார். அப்படிக் கிடைத்த பிரதியிலிருந்தே என் புத்தகத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் எடுக்கப்பட்டன. மலரில் இருந்த படங்களை அச்சில் ஏற்றுவதற்கு முன் நகாசு வேலை செய்து பரிமளிக்க வைத்த விகடன் பிரசுர்த்தாரை எவ்வளவு புகழ்ந்தாலும் தகும். நூல் வெளியான பின், பல முதிய ஜி.என்.பி ரசிகர்கள் நூலில் இடம் பெற்ற படங்களை சிலாகித்துப் பேசினர். அவர்களின் பாராட்டுகள் அனைத்தும் கிருஷ்ண கான சபைக்கும், 1964-ல் மலர் வெளியிடக் காரணமாயிருந்த திரு.யக்ஜராமன் அவர்களையுமே சேரும்.
புத்தகம் நல்ல முறையில் வெளி வந்துவிட்ட போதும், எனக்கே எனக்கென்று மலரின் ஒரு பிரதி கூட இல்லையே என்ற ஏக்கம் என்னை மீண்டும் தேட வைத்தது.
நூல் வெளியாகி ஓராண்டு கழித்து, 2007-ம் ஆண்டு மே மாதம், சென்னை மூர் மார்கெட்டில் ஒரு பழைய புத்தகக் கடையில், அட்டைகள் இல்லாத நிலையில், மலர் எனக்குக் காட்சியளித்தது. அன்று அந்தக் கடைக்காரர் எவ்வளவு விலை கேட்டிருப்பினும் கொடுத்திருப்பேனெனினும், விலை மதிக்க முடியாத பொக்கிஷத்தை, அதன் மதிப்பு உணராது சொற்ப விலைக்குச் சொன்ன கடைக்காரரிடம், பிடுங்காத குறையாய் மலரைப் பெற்ற பொது ஏற்பட்ட மன நிறைவை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. முனைந்து செய்யும் முயற்சி, எத்தனை வருடங்களானாலும், மெய் வருத்தக் கூலி தரும் என்ற வாக்கின் உண்மைத் தன்மை எனக்குத் தெள்ளெனப் புரிந்தது.
உலகமே ஜி.என்.பி என்ற மாமனிதரின் நூற்றாண்டை கொண்டாடும் வேளையில், நூற்றாண்டு மலரினைத் தொகுக்கும் பேறு எனக்குக் வாய்த்துள்ளது. அந்த மலரை அலங்கரிக்க திரு. லால்குடி ஜெயராமனிடமிருந்த கட்டுரை பெற அவர் வீட்டுக்குச் சென்ற போது, என்னுடைய ஜி.என்.பி புத்தகத்தின் பிரதி ஒன்றைக் கொடுத்தேன். அடுத்த நாள், திரு.பிரபு தொலைபேசியில் அழைத்து, லால்குடி அவர்கள் கிருஷ்ண கான சபை வெளியிட்ட மலரைப் பற்றி என் புத்தகத்தில் இருப்பதாகக் கூறியதாகவும், அதனை மறுபதிப்பு செய்ய விழைவதாகவும் தெரிவித்து, என்னுடைய பிரத்யைக் கொடுக்க முடியுமா என்று கேட்டார்.
அரிய பொக்கிஷங்கள் அனைவரின் பார்வைக்கும் கிடைத்தல் அரிது. அப்படிப் பட்ட ஒரு புதையலாக இருந்து வந்த இந்த மலரை குன்றின் மேலிட்ட விளக்கு போல, அனைவரையும் சென்றடையும் எண்ணத்தை திரு.பிரபு வெளியிட்ட போது பெரிதும் மகிழ்ந்தேன். ஜி.என்.பி நூற்றாண்டில், அவரை நினைவு கூறும் வகையில் நடக்கும் எண்ணற்ற நிகழ்வுகளுள் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான முயற்சியாக இந்த மலரின் மறுபதிப்பு அமையும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை.
அக்டோபர் 24-ம் தேதி, கிருஷ்ண கான சபை அரங்கில், மலரின் மறுபதிப்பு வெளியிடப்படுகிரது. இசை ரசிகர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு மலரைப் பெற்றுக் கொள்ளும் அரிய வாய்ப்பை தவற விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து இசைப்போம்...
|