சங்கீத லெட்டர் பேட்
திரு. எஸ்.ராஜம் ஒரு பல் துறை வல்லுனர். அற்புதமான பாடகர், சிறந்த ஓவியர், அட்டகாசமான ஃபோட்டோகிராபர். இதைத் தவிர இன்று உயிரோடு இருக்கும் தமிழ்த் திரைப்பட கதாநாயகர்களுள் மூத்தவர். இதில் ஆச்சரியம் என்னவெனில், இவரை ஓவியராய் அறிந்தவர் பலருக்கு இவரின் சங்கீத ஆளுமை தெரியாது. சங்கீதத்தில் பரிச்சயம் உள்ளவர்கள், பாடகரான எஸ்.ராஜம்தான் ஓவியமும் தீட்டுகிறார் என்று அறிந்திருப்பதில்லை.
இவ்விரண்டு துறைகளிலும், தனித் தனியாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பல இருப்பினும், இவரின் இரு துறை ஆளுமைகளும் இணைந்து உருவாகியுள்ள படைப்புகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை.
இவர் வரைந்திருக்கும் சங்கீத மும்மூர்த்திகள் படம் இல்லாத கர்நாடக இசைக் கலைஞர் இல்லமோ, இசை ரசிகர் வீடோ கிடையவே கிடையாது என்றே கூறலாம். பிரபலமான இந்த மூவரைத் தவிர சீர்காழி மூவர், கோபால கிருஷ்ண பாரதி, புரந்தரர் என்று எத்தனையோ வாக்கேயக்காரர்களை வண்ணங்களால் மிளிர வைத்துள்ளார். ஆர்.டி.சாரி என்பவருக்காக பல மாதங்கள் பாடு பட்டு, மிகப் பிரம்மாண்டமான அளவில், அறுபதுக்கும் மேற்பட்ட வாக்கேயக்காரர்களைத் தீட்டியிருப்பது இவரின் சாதனைகளின் உச்சகளுள் ஒன்று. இது தவிர, எத்தனையோ பாடல்களை ஓவியமாய் தீட்டியிருக்கிறார். கல்கி, கலைமகள் தீபாவளி மலர்களில் இந்த வகை ஓவியங்கள் பல வெளியாகியுள்ளன. ராஜத்தின் water colour fresco ஓவியங்கள் போலவே அவருடைய line-drawing-ம் நளினமானவை. இந்த வகை ஓவியங்கள் கொண்டு அவர் உருவாக்கியிருக்கும் musical letter pads தனித்துவம் வாய்ந்த படைப்பாகும்.
நூறு பக்கங்கள் கொண்ட இந்த பேட்-களில் ஒவ்வொரு பக்கத்திலும் பெரும்பாலும் ஒரு கிருதியைப் பற்றிய சிறு விளக்கமும், அதனைச் சித்தரிக்கும் கோட்டோவியமும் இடம் பெற்றுள்ளன.
தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர், ஸ்யாமா சாஸ்திரி மற்றும் புரந்தரதாஸரின் கிருதிகளே இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. ஏன், தமிழ்ப் பாடல்களை விட்டு விட்டீர்கள் என்று கேட்டதற்கு, "நான் தமிழுக்கு எதிரி இல்லை. கோபால கிருஷ்ண பாரதியின் பாடல்களை நான் மற்ற வாக்கேயக்காரர்களின் பாடல்களை விட உயர்வாக நினைக்கிறேன். இந்த தொகுப்பின் நோக்கும் தெரியாதவற்றை எடுத்துச் சொல்வதுதான். தெரிந்த பாஷையான தமிழில் இருக்கும் பாடல்களை விளக்குவதை விட, தெரியாத பாஷைகளில் உள்ள பாடல்களை தீட்டினால், பாடலோடு சேர்த்து அதன் பொருளையும் பார்ப்பவர்கள் உணர்ந்து இன்னும் அதிகமாக ரசிக்க முடியும், என்பதால்தான் வேற்று மொழிப் பாடல்களை விளக்கியுள்ளேன்.", என்றார். அவர் கூற்றிலிருக்கும் உண்மையை நான் 'வினநாசகொனி' பாடலைச் சித்தரிக்கும் ஓவியத்தைக் கண்டபோது உணர்ந்தேன். அந்தப் பாடல் ப்ரதாபவராளி ராகத்தில் அமைந்தது என்று நான் அறிந்ததே. மதுரை மணி பிரபலப்படுத்திய இந்தப் பாடலில், ராமரும் சீதையும் பல்லாங்குழி ஆடும் காட்சி வர்ணிக்கப்பட்டுள்ளது என்ற விஷயம் ராஜத்தின் ஓவியத்தைப் பார்த்த பின்புதான் எனக்குத் தெரிய வந்தது. அதுவே என்னை அந்தப் பாடலை இன்னும் ஆழமாய் ரசிக்க உதவியது.
'ஸ்ரீ கணபதி' என்ற தியாகராஜரின் சௌராஷ்டிரப் பாடல் கூறும் கணபதியாரின் எழில் நடனத்தைக் காட்டும் ஓவியத்துடன் லெட்டர் பேட் தொடங்குகிறது. தியாகராஜரின் மகளின் கல்யாணத்தின் போது அவரின் சிஷ்யர் தலையில் ராமர் படத்தை வைத்து எடுத்து வந்ததைக் கண்ட போது, ராமரே நடந்து வந்தது போல உணர்ந்து, 'நன்னு பாலிம்ப' கிருதியை தியாகராஜர் பாடினார் என்று குறிப்புகள் கிடைக்கின்றன. இந்தக் காட்சி எழிலுற தீட்டப்பட்டுள்ளது. இதே போல தீட்சிதரின் வாழ்வில் நடந்த சம்பவங்களைச் சித்தரிக்கும், 'ஸ்ரீ நாதாதி குருகுஹோ', 'ஆனந்தாம்ருதகர்ஷிணி' 'மீனாட்சி மேமுதம்', போன்ற கிருதிகளும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. தீட்சிதர் அவரது கிருதிகளில் 27 வகையான கணபதிகளைக் குறிக்கிறார். இந்தச் செய்தி ஒரு ஓவியத்திலும், தீட்சிதர் குறிப்பிட்டிருக்கும் கணபதிகள் தனித் தனி ஓவியங்களிலும் நேர்த்தியாக இடம் பெற்றுள்ளன. ராஜம் வரைந்திருக்கும் நவகிரக ஓவியங்கள் அவருக்கு 'நவகிரக ராஜம்' என்றே பெயர் வாங்கிக் கொடுத்துள்ளன. இந்தத் தொகுப்பிலும் நவகிரகங்கள், தீட்சிதர் பாடியிருக்கும் நவகிரக கிருதிகளைச் சித்தரிக்கின்றன.
இந்தத் தொகுப்பில் என்னை வெகுவாகக் கவர்ந்த ஓவியம் 'ஸ்ரீ பார்த்தசாரதி' கிருதியைக் குறிக்கும் ஓவியம். தோள்களில் புரளும் முடி, தோளில் காண்டீபம், காலுக்கருகில் அம்புகள், கை வளை, தோள் வளை, சரப்பளி,
அலங்காரமான தேர் என்று அமர்க்களமாய் இருக்கும் அர்ஜுனன் மணிடியிட்ட படி உபதேசம் கேட்க, அவனுக்கு கீதையைச் சொல்லும் கண்ணனோ தேர் பாகனாய் அமர்ந்திருக்கிறான். கண்ணனின் ஒரு கை கடிவாளத்தைப் பற்ற மறு கை அபய முத்திரையில் உள்ளது. அழகிய கிரீடம், அதன் மேல் மிளிரும் மயில் பீலி, செவிகளில் குண்டலங்கள் என்றிருக்கும் கண்ணனின் சற்றே திரும்பிய அமர்வு நிலை வெகு யதார்த்தமாய் அமைந்துள்ளது. இருவரும் அணிந்திர்க்கும் ஆடைகள், அவற்றில் உள்ள வேலைப்பாடுகள், அணியும் போது ஏற்படும் மடிப்பு என்று நுட்பமான விஷயங்கள், தீர்க்கமான கோடுகள் மூலம் காட்டப்பட்டுள்ளன.
கலைக் களஞ்சியமான இந்தத் தொகுப்பை எல்லோரும் சுலபமாய் பெற வேண்டுமென்பது ஓவியர் ராஜத்தின் எண்ணம் என்பதால், இதன் விலை முப்பது ரூபாய் மட்டுமே. இசையில் நாட்டம் உள்ளவர்களுக்கு 'தேசிய தோடி', 'குமுதக்ரியா', 'பூர்ண லலிதா', 'மனோஹரி', போன்ற அரிய ராகங்களில் அமைந்துள்ள கிருதிகளுக்குக் கிடைக்கும் நல்ல அறிமுகமாக இந்தத் தொகுப்பு விளங்கக் கூடும். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு rough note book ஆக வாங்கிக் கொடுக்கலாம். என் அலுவலகத்தில் நடக்கும் சில மீட்டிங்குகளுக்கு லெட்டர் பேட் வைப்பது வழக்கம். அந்த சமயங்களில் லெட்டர் பேட்டாக இந்தத் தொகுப்பை வைக்கலாமே என்று சொல்லலாம் என்று இருக்கிறேன். லாண்ட்ரி லிஸ்ட், மளிகை சாமான் போன்ற சமாசாரங்களுக்குக் கூட இதைப் பயன் படுத்தலாம் என்று இருக்கிறேன். இதனால் இந்த ஓவியங்கள் பல கை மாறி, தகவல்கள் அதிகம் பேருக்குச் சென்றடையக் கூடும். இது பேராசை என்று நீங்கள் கூறுவது தெரிகிறது. குறைந்த பட்சம் தமிழ்ஸ்டுடியோ வாசகர்களாவது வாங்குவார்கள் என்று நம்புகிறேன். அது பேராசை இல்லைதானே?:-)
தொகுப்பு கிடைக்கும் இடம்:
ஓவியர் எஸ்.ராஜம்
41, நடுத் தெரு,
மயிலாப்பூர்
சென்னை 600004
ramchi@gmail.com என்ற எனது முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் இந்தத் தொகுப்பைப் பெறலாம்.
தொடர்ந்து இசைப்போம்...
|