அரியனவற்றை அறிந்தவையாக்கும் சம்பிரதாயா
வரவேற்பறைக்கு வீட்டின் மற்ற அம்சங்களை விட மவுசு கொஞ்சம் அதிகம்தான். இருப்பினும், வீட்டின் தாங்குதளமும், மேல்தளமும், வரவேற்பறையின் நகாசுகளை விட மிக முக்கியமானவை. இசைத் துறையில் கச்சேரி மேடை என்பது வீட்டின் வரவேற்பறையைப் போன்றது. அதன் மேல் கவனம் அதிகம் செலுத்தப்படும் என்றாலும், இசையின் வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் மேடைக் கச்சேரிகளைத் தாண்டி பல விஷயங்கள் தேவைப் படுகிறது. சென்னையில் தெருவுக்கு ஒரு சங்கீத சபை முளைத்திருப்பினும், கச்சேரிகளைத் தாண்டி இசையின் ஆழங்களுக்கு செல்ல நினைக்கும் அமைப்புகளைக் காண்பது அரிது. 1980-ல் லுட்விக் பெச் (Ludwig Pech) மைக்கேல் நிக்ஸன் (Michael Nixon) ஆகியோரின் துணையுடன் வைணிகை சாவித்ரி ராஜனால் ஒரு கார் ஷெட்டில் தொடங்கப்பட்டு, இன்று வரை அரியனவற்றை ஆவணப்படுத்துவதற்காகவே தன்னை அர்பணித்திருக்கும் அமைப்பே சம்பிரதாயா.
நமது பாரம்பரிய இசையில் பல வகையான பத்ததிகள் உண்டு. இவையெல்லாம் ஒரு சில கலைஞர்களின் இதயங்களில் மட்டுமே இருக்கக் கூடிய விஷயங்கள். இந்தக் கலைஞர்களுள் பலர் மேடைக் கச்சேரிகளில் அதிகம் கேட்க முடியாதவர். இப்படிப் பட்ட கலைஞர்கள் மறையும் போது, அவர்களுடன் சேர்ந்து அவர்கள் கட்டிக் காத்த பத்ததியும் அடுத்த சந்ததிக்குப் போய்ச் சேராமல் மறைந்துவிடுகிறது. இந்த வகையில், நாம் இழந்த பொக்கிஷங்களுக்கு அளவே இல்லை. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணமே சம்பிரதாயா உருவாகக் காரணம்.
1980-களில் பல கச்சேரிகளை ஏற்பாடு செய்து, அரிய ராகங்கள், அரிய கிருதிகள், அதிகம் கேட்க முடியாத ஆனால் அற்புதமான கலைஞர்கள் என்று எண்ணற்ற ஆவணங்களை ஏற்படுத்தி, அதை எல்லோரும் கேட்கும் வாய்ப்பையும் சம்பிரதாயா ஏற்படுத்திக் கொடுத்தது. கச்சேரிகள், கருத்தரங்குகள், பயிற்சி முகாம்கள் என்று சம்பிரதாயா ஆவணப்படுத்தியிருக்கும் 'ஒலி நூலகத்தை' முழுவதும் கேட்க குறைந்த பட்சம் 5000 மணி நேரமாவது தேவைப்படும். கர்நாடக சங்கீதம் மட்டுமின்றி, கிராமிய இசை, கோயிலில் ஒலிக்கும் இசை, பஜனைகள், நாடகத்துக்குரிய இசை, நாட்டிய இசை, தேவாரம் என்று பல தரப்பட்ட இசை வடிவங்களும் அற்புதமாய் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
படம்: டைகர் வர்தாச்சாரியா - சம்பிரதாயா வின் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
தனம்மாள் பாணி, ஓதுவார்களின் தேவார முறை, தவில் பயிற்சி முகாம், அன்னமாச்சாரியா கிருதிகள் என்று பல்வேறு தலைப்புகளில் பயிற்சி முகாம் அமைத்து, திறமையான இளம் கலைஞர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்ததன் மூலம் நம் சங்கீத விருட்சத்தின் வேர்களை இன்னும் உரமாக்கியது. காலப்போக்கில், பிரதி கிடைக்காத பல நூல்களைத் திரட்டி, 2000-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட களஞ்சியமாக மாறிய சம்பிரதாயாவுக்கு இந்தியாவின் அனைத்து மூலைகளில் இருந்தும் அறிஞர்கள் வருகை தந்து, தம் ஆய்வுகளை நெறிப்படுத்திக்
கொண்டனர்.
கலைஞர்களின் இசையைத் தவிர, அவர்களின் வரலாறு, இசை குறித்த கருத்துகள் எல்லாம் விரிவான நேர்காணல் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹரிகதையில் சிறந்து விளங்கிய பன்னி பாய், நாட்டியத்தில் புகழுச்சிகளைத் தொட்ட மயிலாப்பூர் கௌரி அம்மாள், சங்கீத கலாநிதி எம்.எல்.வசந்தகுமாரி, பாடகரும் வாக்கேயக்காரருமான தஞ்சாவூர் சங்கர ஐயர், பல மேதைகளை உருவாக்கிய சி.எஸ்.சங்கர சிவம், பல துறைகளில் இணையற்றவராய் விளங்கும் எஸ்.ராஜம் என்று சம்பிரதாயா பதிவு செய்திருக்கும் நேர்காணல்களின் பட்டியல் பல பக்கங்களுக்கு நீளுகிறது.
சம்பிரதாயாவே நடத்திய நிகழ்ச்சிகளின் பதிவைத் தவிர, 1930-களில் பதிவு செய்யப்பட்ட 78 rpm ரெக்கார்டுகளில் தொடங்கி டைகர் வர்தாச்சாரியார், அரியக்குடி, முசிறி, ஜி.என்.பி, மதுரை மணி என்று எண்ணற்ற இசை ஜாம்பவான்களின் கச்சேரிகளின் கருவூலமாகவும் சம்பிரதாயா மாறியது. இவ்வளவு நல்ல விஷயங்களுக்குப் பின்னால், தெளிவான திட்டமிடலும், அயராத உழைப்பும் இருந்ததே, சம்பிரதாயாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்.
சென்னையின் இசைப் பேட்டையான மயிலாப்பூரில் இருந்த சம்பிரதாயாவுக்கு புகழ் கிடைத்த அளவுக்குப் பொருள் கிடைக்க்வில்லை. லாப நோக்கில்லாத நிறுவனங்கள் எல்லாம் கொடைகளின் மூலம்தானே ஜீவிக்க முடியும். கொடைகள் அருகிப் போன நிலையில், மயிலாப்பூரில் இருந்த கட்டிடத்துக்கு வாடகை கூட செலுத்த முடியாத நிலைக்கு சம்பிரதாயா தள்ளப்பட்டது. இதனால், சம்பிரதாயாவுக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த பல தரப்பட்ட நடவடிக்கைகளும் முடங்கிப் போய், இருப்பதை மட்டுமாவது எப்படியாவது காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், கலாக்ஷேத்ராவின் இயக்குனர் லீலா சாம்சன் கை கொடுத்தார். ருக்மிணி தேவி உபயோகித்த அலுவலகத்தை சம்பிரதாயாவுக்காக அளித்தார். நூல்களைப் பாதுகாக்க வசதி, அரிய ஒலிப்பதிவுகள் அழியாமல் இருக்கத் தேவைப்படும் குளிர்பதன வசதியுள்ள அறைகள் என்று சம்பிரதாயா மீண்டும் சரியான பாதைக்கு திரும்ப ஆரம்பித்தது.
கடந்த இரண்டு வருடங்களில் தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்ட நிலையில், இன்று பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணாவின் தலைமையில் சம்பிரதாயாவின் நடவடிக்கைகளுக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது. "பாம்பே ஷண்முகாநந்த சபையின் உதவியுடன், சம்பிரதாயாவில் இருக்கும் அத்தனை ஒலிப்பதிவுகளும் டிஜிட்டல் பதிவுகளாக மாற்றப்பட்டு வருகின்றன. உலகின் எந்த மூலையில் இருந்தாலும், சம்பிரதாயாவின் உறுப்பினர்களால் இணையத்தின் வழியாக எந்த ஒரு ஒலிப்பதிவையும் கேட்கும் நிலையை உருவாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம்", என்கிறார் கிருஷ்ணா.
'சம்வாதா' என்ற பெயரில் மூத்த கலைஞர்களின் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் உரையாடல் நிகழ்ச்சிகள் பல திட்டமிடப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களில் ஆர்.கே.ஸ்ரீகண்டனும் சித்ரவீணை ரவிகிரணும் கலந்து கொண்ட நிகழ்ச்சியும், டி.கே.மூர்த்தியும் பாலக்காடு ராஜாமணியும் கலந்து கொண்ட நிகழ்ச்சியும் இனி வரப்போகும் பல நல்ல நிகழ்ச்சிகளுக்கு கட்டியம் கூறும் வகையில் அமைந்தன.
பல அரிய விஷயங்களை பலர் அறிய வைக்கும் நோக்குடன் நடத்தப்படும் சம்பிரதாயாவில் சில நூறு உறுப்பினர்களே இருப்பது வருத்தமளிக்கிறது. "உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அதிகம் வருத்தம் தரும் விஷயம் எங்கள் நடவடிக்கைகளில் பங்கு கொள்ள வெகு சிலரே முன் வருகின்றனர். நாங்கள் செய்வது சரியா, இப்போது செய்வதை விடச் சிறப்பாகச் செய்ய முடியுமா, என்று குறை நிறைகளைச் சுட்டக் கூட அதிகம் பேர் இல்லை. இருப்பினும், இந்த நிலை விரைவில் மாறும்.", என்று உற்சாகமாய் கூறுகிறார் சம்பிரதாயாவின் நிர்வாக இயக்குனர் கீதா ராஜகோபால்.
சம்பிரதாயா வின் இணையதளம்: http://sampradaya.org/
தொடர்ந்து இசைப்போம்...
|