வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

தொடர் பற்றி
---------------------


ஒரு மனிதனின் மன நிலையை அப்படியேப் புரட்டிப்போடும் வல்லமை படைத்தது இசை. இசையை நேசிக்கும், சுவாசிக்கும் சிலரின் வாழ்க்கை இந்த சமுதாயத்திற்கு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. இசையை தொடர்ந்து கேட்கும் மனிதர்களின் வாழ்நாள் அதிகரிப்பதாக ஆய்வு கூறுகிறது. இசையை உற்று கவனியுங்கள். சாதாரண சப்தங்கள் தான் உங்கள் நாடி நரம்பையே அசைத்து பார்க்கும் வல்லமை படைத்ததாக மாறுகிறது. எப்படி? எந்த ஒன்றையும் சரியான பாதையில் ஒருமுகப்படுத்தி செலுத்தினால் அதனால் இந்த உலகில் அனைத்தையும் வென்று விடலாம் என்பதே இசை நமக்கு சொல்லித்தரும் பாடமாகும்.

மனிதனிப் பொறுத்தவரை யோகா. சப்தங்களை பொறுத்தவரை இசை. மனிதன் செய்யும் யோகக்கலை மனிதனையும் அவன் சார்ந்த சமூகத்தையும் வாழவைக்கிறது. ஆனால் சப்தங்கள் செய்யும் யோகா இவ்வுலகின் ஆண்ட சராசரங்களையும் கட்டுக்குள் வைக்கிறது. இசையை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்காக...

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இசைத்துறையை தமிழ் ஸ்டுடியோ தன்னால் இயன்ற வரை பெருமைப் படுத்த முயல்கிறது.

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
இசை
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


லலிதா ராம்

பெங்களூரில் பொறியாளராய்ப் பணியாற்றும் லலிதா ராம் - இசைத் துறையிலும் வரலாற்றுத் துறையிலும் ஆர்வலர், ஆய்வாளர். இவ்விரு துறைகளைப் பற்றியும் இங்கு தொடர்ந்து எழுதவுள்ளார். திரைப்பட இசையில் பொதிந்து இருக்கும் பாரம்பரிய இசை நுணுக்கங்களைப் பற்றி இணையத்தில் எழுதத் தொடங்கி விமர்சனங்கள், இசைக் கலைஞர்கள், இசைக் கருவிகள் பற்றி கட்டுரைகள் பல இணையத்தில் எழுதியுள்ளார். விகடன் பிரசுரம் வெளியிட்ட 'இசையுலக இளவரசர் ஜி.என்.பி' என்ற இவரது நூல், ஜி.என்.பாலசுப்ரமணியம் என்ற கலைஞனின் இசை வாழ்க்கையை விரிவாகப் படம்பிடித்துள்ளது. ஹிந்து, தினமணி, தினத் தந்தி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்கள் இந் நூலைப் வெகுவாகப் பாராட்டியுள்ளன.

மா.இராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தில் ஆய்வாளராய் விளங்கும் இவர், நண்பர்களுடன் சேர்ந்து நான்கு வருடங்களாக வரலாறு.காம் என்ற இணைய மாத இதழை நடத்தி வருகிறார். கல்வெட்டுகள், கட்டிடக் கலை, சிற்பங்கள், ஓவியங்கள், பயணக் கட்டுரைகள் என பலதரப்பட்ட கட்டுரைகள் தென்னிந்திய வரலாற்றை இணையத்தில் உலவ விடுகின்றன. முனைவர் கலைக்கோவன் எழுதிய மூன்று வரலாற்று நூல்களையும், தொல்லியல் இமயம் ஐராவதம் மகாதேவனின் பணிப் பாராட்டு மலரையும் வரலாறு.காம் வெளியிட்டிருக்கிறது.

 

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS இசை TS லலிதா ராம் தொடர்கள் வாயில்

சங்கீத டாக்டருடன் ஒரு நாள் - பகுதி 1

லலிதா ராம்  

சங்கீத கலாநிதி ஸ்ரீபாத பினாகபாணி இசைத் துறையின் உச்சங்களைத் தொட்டவர். பத்ம பூஷண் விருதினைப் பெற்ற இவர், தஞ்சாவூர் பாணியை ஆந்திரத்தில் நிறுவியவர். இன்று பிரபலமாய் விளங்கும் பல அன்னமாச்சாரியா கிருதிகளுக்கு மெட்டமைத்தவர். தான் கற்றவற்றை பரப்புவதை ஒரு தவமாகவே செய்து நேதனூரி கிருஷ்ணமூர்த்தி, வோலேட்டி வெங்கடேஸ்வருலு, ஸ்ரீரங்கம் கோபால்ரத்னம், நூகல சத்யநாராயணா போன்ற சங்கீத ஜாம்பவான்களை உருவாக்கியவர். இவரது பாணியைப் பற்றி முனைவர் பட்ட ஆய்வு வெளியாகும் அளவிற்கு சாதனைகள் புரிந்தவர். முதுமை உடலைத் தாக்கி ஐந்து வருடமாய் படுக்கையில் தள்ளிவிட்ட போதும், இசையில் ஊறிப் போன மனது, 97-ஆவது வயதிலும் இளமையாகத்தான் இருக்கிறது.

1930-களில் நடந்ததை கூட நேற்று நடந்தது போல நினைவு கூறும் பினாகபாணி ஓர் அதிசய மனிதர். கடந்த மாதம் கர்னூலில் அவரைச் சந்தித்து ஒரு நாள் முழுதும் அவருடன் கழிக்கும் பேறு கிடைத்தது. அன்று கிடைத்த பல முத்துகளின் சில சிதறல்களை இந்த நேர்காணலில் காணலாம்.

தங்கள் இளமைக் காலத்திலிருந்து பேட்டியைத் தொடங்கலாமே.

நான் 1913-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுலம் ஜில்லாவில் உள்ள பிரியாக்ரஹாரத்தில் பிறந்தேன். என் அப்பா, ஸ்ரீபாத காமேஸ்வர ராவ், ராஜமுந்திரியில் இருந்த கவர்மெண்ட் ட்ரெயினிங் காலேஜில் ஜூனியர் ப்ரொபசராக பணியாற்றினார். அவர் ஐந்திற்கும் மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பெங்காலியிலிருந்து தெலுங்கிற்கும், தெலுங்கிலிருந்து பெங்காலிக்கும் பல நாடகங்களை அவர் மொழி பெயர்த்துள்ளார். மேடை நாடகங்களில் ஆழ்ந்த ஞானம் கொண்டிருந்த அவரைக் காண அக் கால முன்னணி நடிகர்கள் பலர் வந்த வண்ணம் இருப்பர். அக் கால நாடகங்களில் இசை இன்றியமையாததாக இருந்ததால், எங்கள் வீட்டில் இசை ஒலித்த வண்ணம் இருக்கும். நான் சிறுவனாக இருந்த போது, பி.எஸ்.லட்சுமண ராவ் என்பவர் எங்கள் வீட்டிற்கு வந்து என் தமக்கைக்குப் பாட்டு கற்றுக் கொடுத்தார். அதைக் கேட்டுக் கேட்டு நானும் அவ்வழியே பாடுவேன். ஒரு முறை என் தமக்கை ஒரு சங்கதியைத் தவறாகப் பாடிய போது, வேறேதோ வேலையாக இருந்த நான் அந்தத் தவறைச் சுட்டிக் காட்டினேன். இதனைக் கண்டு மகிழ்ந்த லட்சுமண ராவ், என் பெற்றோரிடம் எனக்கு சங்கீத சிட்சை அளிக்க விரும்புவதாகக் கூறினார். அப்போது நான், சங்கீதமெல்லாம் பெண்களுக்குத்தான் என்று தட்டிக் கழித்தேன்.

பி.எஸ்.லட்சுமண ராவ் என் பள்ளியிலும் வாத்தியாராக இருந்தார். நான் முதல் ஃபாரத்தில் படித்த போது, எங்கள் தெலுங்கு வாத்தியார் வராத போதெல்லாம் இவர் பாடம் நடத்த வருவார். அவர் எப்போதுமே செய்யுள் பகுதிகளைத்தான் நடத்துவார். அப்படி நடத்தும் போது, ஒவ்வொரு பாடலையும் ராகத்துடன் பாடுவார். இப்படி ஒரு முறை, இரண்டு நாட்கள் நடத்திய பின், மூன்றாம் நாள் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு என்னைத் தொடர்ந்து பாடச் சொன்னார். அவர் பாடிய பைரவி ராகத்திலேயே நானும் தொடர்ந்து பாடினேன். இதனால் ஆச்சரியமடைந்த அவர், என் தந்தையாரிடம் வற்புறுத்தி, எனக்கு சங்கீத சிட்சை அளிக்குமாறு பரிந்துரைத்தார். 9 நவம்பர் 1924 எனது சங்கீதப் பயிற்சி தொடங்கியது.

உங்கள் குருநாதரின் சிட்சை முறையைப் பற்றிக் கூறுங்களேன்.

இசையின் பெருமைகளை நான் உணராத போதும், இசை என்னை காந்தமாய்க் கவர்ந்தது. ஒவ்வொரு நாளும் என் குருவின் வீட்டுக்குச் செல்வேன். எனக்கு சொல்லிக் கொடுப்பதை உள் வாங்கிய பின், மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதையெல்லாம் கூர்ந்து கவனிப்பேன். நாளடைவில், என் குரு யாருக்கு எதைச் சொல்லிக் கொடுத்தாலும், அதை அவர் புத்தகங்களில் ஸ்வரப்படுத்தி எழுதும் வேலை எனதானது. நான் என்ன செய்கிறேன் என்று அறியாமலே என்னுடைய சங்கீத அடித்தளம் பலமாக அமைந்தது.

எனது குரு மைசூரில் இசை பயின்றவர். அவர் ஆலாபனை, ஸ்வரப்ரஸ்தாரம் போன்றவற்றில் சிறந்து விளங்கவில்லை என்ற போதும் நிறைய அரிய கிருதிகளை நன்கறிந்திருந்தார். எது நல்ல இசை, எது நல்ல இசை அல்ல என்று நிர்மாணிப்பதில் அவர் சிறந்து விளங்கினார். ஒவ்வொரு கிருதியின் சங்கதிகளையும் முழுமையாகப் பாடும் வரை விட மாட்டார். 'சக்கனி ராஜமார்கமு' போன்ற கிருதிகளை மாதக் கணக்கில் நான் அவரிடம் கற்றதுண்டு.

இப்படியாக 1924-லிருந்து 1929-க்குள் கிட்டத்தட்ட நூறு கிருதிகள் பாடம் செய்தேன். 1930-ல் காக்கிநாடாவில் எனது இண்டர்மீடியெட் படிப்பைத் தொடர்ந்தேன்.

காக்கிநாடாவில் சரஸ்வதி கான சபை அன்றே வெகு பிரபலமாய் விளங்கியதே.

ஆமாம். 1928-லிருந்து காக்கிநாடாவிலும், அதற்கு முன் ராஜமுந்திரியிலும் நிறைய கச்சேரிகள் கேட்டுள்ளேன். காக்கிநாடாவில் ஓவ்வொரு வருடமும் இசை விழா பத்து நாட்களுக்கு நடக்கும். முதல் ஐந்து நாட்களுக்கு ஆந்திரக் கலைஞர்களும், அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர்களும் கச்சேரி செய்வார்கள். இந்த விழாவில்தான் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை, மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை, கும்பகோணம் இராஜமாணிக்கம் பிள்ளை போன்றோரின் அற்புத இசையை முதன் முதலில் கேட்டேன். 'ரா ரா மா இண்டி', 'ஸ்வர ராக ஸ¤தா', 'கிரி பை' போன்ற கிருதிகளை தமிழ்நாட்டு வித்வான்கள் பாடிய முறை நான் கற்றிருந்த விதத்தில் அமையவில்லை. ஆந்திர வித்வான்களில் கச்சேரிகளை விட தமிழ்நாட்டு வித்வான்களின் கச்சேரிகள், கேட்பதற்கு நன்றாக இருந்தது. ஆந்திர வித்வான்கள் பாடும் போது சுமாராக வந்த கூட்டம், தமிழ்நாட்டு வித்வான்கள் பாடும் போது அரங்கை நிறைத்தது. இதனால், இள வயதிலேயே எனக்கு தஞ்சாவூர் பாணி என்றழைக்கப்படும் தென்னாட்டு இசை முறையே என்னை வெகுவாகக் கவர்ந்தது.

தஞ்சாவூர் பாணியை ஆந்திராவில் நிறுவியவர் என்று பலராலும் புகழப்படுபவர் நீங்கள். இன்று கேட்கும் போது, ஆந்திர வழி, தமிழ்நாடு வழி என்று இரண்டு வழிகள் இருப்பதாகவே தெரியவில்லை. தாங்கள் சங்கீதம் கற்க ஆரம்பித்த காலத்தில் ஆந்திர சங்கீதம் எந்த நிலையில் இருந்தது?

முதலில், தஞ்சாவூர் பாணியை ஆந்திராவில் நிறுவியவன் என்று யாரும் என்னைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பின் நான் என் வாழ்வின் பொருளை அடைந்துவிட்டதாக நினைத்துக் கொள்வேன்.

அந்தக் காலத்தில், இசையில் ஆர்வமுள்ள ஆந்திர தேசத்தவர், நல்ல தேர்ச்சியைப் பெற வேண்டுமெனில், தமிழ்நாட்டின் காவிரி கரையிலிருந்த கலைஞர்களிடன் சென்றே கற்க வேண்டிய நிலை இருந்தது. பயணங்கள் கடினமாய் இருந்த காலத்தில் அவ்வாறு இசை பயில்வதென்பது கடினமான காரியம். அப்படியும் சிலர் தமிழ்நாட்டில் தங்கி இசை பயின்று, அவர்களால் முடிந்த வரை ஆந்திராவில் பரப்பிய போதும், தஞ்சாவூர் பாணி அளவிற்கு அதிகம் வளர்ந்திராத பாணியாகவே ஆந்திர பாணி இருந்தது. என் இளமைக் காலத்தில், நிரவல் செய்தல், பல்லவி பாடுதல் போன்ற சமாசாரங்களில் ஆந்திர கலைஞர்கள் ஈடுபடமாட்டார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில், பயண வசதிகள், ரேடியோ போன்ற தொலை தொடர்பு வசதிகளும் தகவல் பரிமாற்றத்தை சுலபமாக்கியுள்ளன.

இதனால் தமிழ்நாட்டு கலைஞர்களின் இசையை ஆந்திராவில் அதிகம் கேட்கவும், ஆந்திராவில் இருந்து கலைஞர்கள் தமிழ்நாட்டில் பாடி பெயர் வாங்கவும் வசதிகள் பெருகியுள்ளன. இதனால்தான் இன்று ஆந்திர இசையை தமிழ்நாட்டு இசையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன், நீங்கள் சொன்ன வசதிகள் இல்லாத போதும் கூட, தாங்கள் தஞ்சாவூர் பாணியில் எப்படி தேர்ச்சியைப் பெற்றீர்கள்?

எங்கள் வீட்டருகில் தெலுங்கு வாத்தியாராக ஒருவர் இருந்தார். அவர் நல்ல பாடகர். அவர் என்னிடம் நான் கேட்ட கச்சேரிகளைப் பற்றி விசாரித்து, யார் யார் எப்படியெல்லாம் இசைத்தனர் என்று என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார். நாயினாப் பிள்ளை, கோவிந்தசாமி பிள்ளை, அரியக்குடி போன்றோரைப் போலவே நானும் பாட முயற்சி செய்வேன். குறிப்பாக அரியக்குடியின் இசைக்கு நான் அடிமையானேன். அவர் கிருதிகள் பாடிய அழகும், ராகம் பாடும் போது அவர் குரலில் பேசிய சங்கதிகளும், கமகமும், நிரவல், கல்பனை ஸ்வரங்களில் இருந்த நளினமும், அவர் கச்சேரியில் இருந்த கச்சிதமும் என்னை பெரிதும் பாதித்தன.

எனது பள்ளி நாட்களில் கிராமஃபோன் தட்டுகள் பிரபலமாக ஆரம்பித்தன. என் சகோதரனின் நண்பன் வீட்டில் ஒரு கிராம·போன் ப்ளேயர் இருந்தது. இசையில் ஆர்வமிருந்து அவர் வீட்டுக்கு அடிக்கடிச் சென்று பல இசைத் தட்டுகளைக் கேட்டு என் சங்கீதத்தை வளர்த்துக் கொண்டேன். இசைத் தட்டுகள் மூலம் வட நாட்டில் பிரபலமாயிருந்த பால கந்தர்வா (ஷ்யாம சுந்தர என்ற பால கந்தர்வா ரிக்கார்டைப் பாடிக் காட்டுகிறார்), அப்துல் கரீம் கான் போன்றோரின் இசையைக் கேட்டு, கேட்டவற்றை அப்படியே பாடவும் பழகிக் கொண்டேன்.

எனக்கு இயற்கையாகவே ஸ்வர ஞானம் அமைந்ததால், கிராமஃபோன் ரிக்கார்டில் கேட்ட ஒவ்வொரு சங்கதியையும் ஸ்வரப்படுத்தி எழுதிக் கொள்வேன். எந்த ஒரு கச்சேரிக்குச் சென்றாலும், கேட்பவற்றை விவரமாக குறிப்பெடுத்துக் கொள்வேன். கேட்டவற்றில் உள்ள நல்ல விஷயங்களை எல்லாம் குறித்துக் கொண்டு, அவற்றை என் இசையில் சேர்த்துக் கொண்டேன். நான் கேட்டதில் நல்லதையும் அல்லதையும் சீர் துக்கிப் பார்க்கும் ஆற்றல் எனக்கு இறைவன் கொடுத்த வரம். சரியானது என்று எனக்குத் தோன்றியதை நான் பாடுவதற்கு ஒரு போதும் திணறியதில்லை. கேட்டதை உடனே கிரஹிக்கும் திறனும், கிரஹித்ததை உடனே பாடக் கூடிய ஆற்றலும் எனக்கு இயற்கையிலேயே அமைந்திருந்தன.

லட்சுமண ராவைத் தொடர்ந்து வேறு யாரிடம் சங்கீதம் கற்றீர்கள்?

ஒரு முறை துவாரம் வெங்கடசாமி நாயுடுவின் கச்சேரிக்குச் என் குருவுடன் சென்றிருந்தேன். நாயுடு காருவை என் குரு அறிந்திருந்ததால் அவரிடம் சென்று பேசினோம். அப்போது என்னைப் பற்றி விசாரித்தார். நூறு கிருதிகளுக்கு மேல் நான் அறிந்து வைத்திருந்ததை என் குரு சொன்னதும் ஆச்சரியம் அடைந்த துவாரத்திடம், ராக ஆலாபனை, ஸ்வர கல்பனை முதலியவற்றைக் கற்றுத் தருமாரு என் குருநாதர் வேண்டிக் கொண்டார். அதற்கு சம்மதித்த துவாரம், அடுத்த கோடை விடுமுறையில் விஜயநகரம் வந்துவிடுமாறு என்னிடம் கூறினார்.

1932-ல் எனது இண்டர்மீடியட் படிப்பு முடிந்ததும், விஜயநகரம் சென்று மூன்று மாதங்கள் நாயுடுகாருவின் வீட்டில் தங்கினேன். ஒரு நாள் இரவு, உணவருந்திய பின் 'ஆரகிம்பவே' கிருதியைப் பாடி நிரவல் செய்ய ஆரம்பித்தார், அவர் சில ஆவர்த்தங்கள் பாடிய பின், நான் தொடர்ந்தேன். அவர் நினைத்ததை உள்வாங்கி நான் பாடியதைக் கேட்டு மகிழ்ந்த துவாரம், தினமும் பலப் பல ராகங்களை வாசித்து, என்னை கூர்ந்து கவனிக்கச் சொன்னார். விஜயநகரம் இசைக் கல்லூரியில் முதல்வராக இருந்த துவாரம் தினமும் கல்லூரியில் இரு முறை, வீட்டில் இரு முறை தவறாமல் சாதகம் செய்வார். அவர் பயிற்சியில் ஈடுபடும் போது அவரிடம் கற்றவர்களை அருகிலிருந்து கேட்க அனுமதிப்பார். அவர் சாயங்கால வேளையில் செய்யும் பயிற்சி ஒரு முழு கச்சேரியை சபையில் வாசிப்பது போலவே அமைந்திருக்கும்.

ஒரு முறை அவர் வீட்டில் வாசிக்கும் போது, என்னையறியாமல் 'சபாஷ்' என்றேன். அவர் வாசிப்பதை நிறுத்தி, 'பாணி, நீ ஒரு மாணவன். சாதாரண ரசிகனைப் போல சபாஷ் என்ற்படி ரசிக்காமல், கூர்ந்து கவனி', என்று தொடர்ந்தார். சற்றைக்கெல்லாம் என்னையும் அறியாமல் இன்னொரு சபாஷ் என் உதட்டிலிருந்து வெளிப்பட்டது. நாயுடு காரு என்னைப் பார்த்து, நான் வாசித்ததைப் பாடு என்றார். நான் அதைச் சரியாகப் பாடியதும், ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு வாசிப்பைத் தொடர்ந்தார். அவர் வீட்டுல் இருந்த மூன்று மாதங்களில், எனக்கு பல வருடங்களுக்கு தேவையான விஷயங்கள் கிடைத்தன. குறிப்பாக ராகம் பாடும் போது தேவையான punctuation-ஐ அவரிடம்தான் கற்றேன். (துவாரம் தோடி ராகத்தைக் கையாள்வதைப் பாடிக் காண்பிக்கிறார்.)

சென்னையின் பெருமையாய் விளங்கும் இசை விழாவிற்கு தாங்கள் வந்ததுண்டா?

1930-ல் என் பெற்றோர் ராமேஸ்வரம் சென்றனர். அது டிசம்பர் மாதம் என்பதால், என்னை சென்னையில் என் அத்தை வீட்டில் விட்டுவிடுமாறு வேண்டிக் கொண்டேன். அரியக்குடி, ஃப்ளூட் சாமிநாத பிள்ளை, காரைக்குடி சகோதரகள் போன்றவர்களின் கச்சேரிகள் என் செவிகளுக்குத் தீனி போட்டன. முசிறி 'எந்த வேடுகோ' பாடலில் பாடிய நிரவல் என்னை பல நாட்களுக்கு ஆட்கொண்டது. அவர் இசையிலிருந்துதான் விளம்ப கால கிருதிகள் பாடவும், நிரவல் பாடவும் கற்றுக் கொண்டேன். செம்பை நாலு களை பல்லவியில் ஒவ்வொரு முறையும் லாவகமாய் எடுப்பைப் பிடிப்பதைக் கேட்டுச் சொக்கிப் போனேன். நான் ஊருக்குக் கிளம்புவதற்கு முன் வெங்கடசாமி நாயுடுவிடம் விடைபெறச் சென்றேன். அவர், "இன்னம் ஒரு நாள் இருந்துவிட்டுப் போக முடியாதா? நாளை வீணை தனம்மாளின் கச்சேரி இருக்கிறது. அதைக் கேட்டுவிட்டுப் போ.", என்றார். இசையின் மொத்த அழகையும் கொட்டிச் சேர்த்த தனம்மாளின் வீணை இசையை நான் தங்கிக் கேட்டேன். அதன் பாதிப்பு இன்று வரைத் தொடர்கிறது.

தங்கள் முதல் கச்சேரி எப்போது நடந்தது?

நான் சிறு வயதிலேயே கல்யாணங்களிலும் சிறு சிறு விழாக்களிலும் பாடிக் கொண்டிருந்தேன். கல்லூரி நாட்களில் ரேடியோவில் கச்சேரி செய்துள்ளேன். கடைசி வருட படிப்பின் போது, சென்னைக்குச் சென்று கச்சேரி செய்வதை அறிந்தால் காலேஜில் பிரச்னை வருமோ என்று எண்ணி, 'வஸந்த்' என்ற பெயரில் ரேடியோ கச்சேரி செய்துள்ளேன். ஒரு சபாவில் முதன் முதலில் பாடியது என்பது 1939-ல்தான். எனது கடைசி வருட மருத்துவப் படிப்பை முடிக்கும் தருவாயில் விசாகப்பட்டினத்தில் அந்தக் கச்சேரி நிகழ்ந்தது.

அந்தக் கச்சேரிக்கு, அடுத்த நாள் கச்சேரி செய்யவிருந்த மைசூர் சௌடையா வந்திருந்தார். முன் வரிசையில் அமர்ந்து முழு மனதுடன் உற்சாகப்படுத்திய அந்த மாமேதையைக் கண்டதும், நானும் மிகவும் உழைத்துப் பாடினேன். கச்சேரி முடிந்ததும் சௌடையாவை அணுகி வணங்கினேன். அங்கு குழுமியிருந்த பலருக்கு சௌடையா என்ன சொல்லப் போகிறார் என்று அறிய ஆவலாக இருந்ததால், ஒரு கூட்டமே எங்களைச் சூழ்ந்தது. என்னை அணுகி, "நாங்கள் பல வருடம் உழைத்துப் பெற்ற விஷயங்கள் பல உனக்கு இள வயதிலேயே வாய்த்திருக்கின்றன. துவாரம் வெங்கடசாமி நாயுடுவால் ஆந்திராவுக்கு நிறைய பெருமை கிடைத்துள்ளது. அதே போல உன்னாலும் கிடைக்கும்", என்று வாழ்த்தி என்னை மைசூருக்கு வருமாறு அழைத்தார் சௌடையா.

அவர் அழைப்பை சம்ப்ரதாயமான ஒன்றாகத்தான் நான் எண்ணினேன். இரண்டு நாள் கழித்து நடந்த செம்மங்குடியின் கச்சேரிக்கும் சௌடையாவே பக்கவாத்தியம் வாசித்தார். அந்தக் கச்சேரியைக் கேட்கச் சென்ற என்னைச் சுட்டிக் காட்டி, "நான் தங்களிடம் இந்த இளைஞனைப் பற்றித்தான் சொன்னேன்", என்றார் செம்மங்குடியிடம். அடுத்த நாள், என் உணவை முடித்துத் திரும்புகையில், ஒரு கார் என்னைக் கடந்தது. அதிலிருந்த சௌடையா, என்னைக் கண்டதும் காரை நிறுத்தி, "நான் சொன்னது நினைவிருக்கட்டும். அவசியம் மைசூருக்கு வா.", என்றார். அப்போதுதான் அவர் உண்மையிலேயே மைசூருக்கு அழைத்தார் என்று உணர்ந்தேன்.

அவர் அழைப்பைத் தாங்கள் ஏற்றீர்களா?

ஆமாம். மைசூருக்குச் சென்று சௌடையாவின் வீட்டிலேயே தங்கினேன். நிறைந்த அரங்கில் என்னை மைசூருக்கு அறிமுகப்படுத்தி எனக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தார் சௌடையா. கச்சேரி முடிந்து வீடு திரும்புகையில், "கச்சேரி நன்றாக இருந்தது. ஆனால் நான் ஒரு தவறு செய்துவிட்டேன். கச்சேரியில் நானே பக்கவாத்தியம் வாசித்திருக்க வேண்டும்", என்றார். எந்த ஒரு விஷயத்திலும் உள்ள நல்லவற்றை மனதாறப் பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான். ஒவ்வொரு நாளும் அவர் என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார். ஒரு முறை 'இந்த சௌக்ய' கிருதியை, சேலம் கிருஷ்ண ஐயங்காரின் கிராம·போனைக் கேட்டறிந்த விதத்தில் பாடினேன். பொதுவாகப் பாடும் முறையை விட அது வித்தியாசமாக இருந்ததால் என்னை தினமும் பாடச் சொல்லி, தானும் உடன் வாசிப்பார்.

ஒரு நாள், நான் மாடியில் குளித்துக் கொண்டிருந்த போது யாரோ பாடுவது என் காதில் விழுந்தது. கீழே இறங்கிப் பார்த்த போது, இரு பெண்கள் பாடிக் கொண்டிருந்தனர். பெற்றோருடன் வந்திருந்த பெண்கள் சௌடையா மூலம் சபாக்களின் அறிமுகம் பெற்று கச்சேரி வாய்ப்பு பெற வந்திருந்தனர். அவர்களுக்கு கச்சேரி வாய்ப்புகள் அதிகம் கிடைக்காவிடினும், அந்தப் பெண்களுள் ஒருவருக்கு கணவன் கிடைத்தார். அவர்களும் தெலுங்கர் என்பதால் சௌடையாவின் பரிந்துரையில் என் திருமணம் 1940-ல் நடைபெற்றது.

ரங்கராமானுஜ ஐயங்காரையும், டி.எஸ்.வாசுதேவனையும் தங்களுக்கு சங்கீதம் கற்றுக் கொடுத்தவர்கள் என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளீர்கள். சென்னையில் இருந்த அவ்விருவரிடம் எப்படி கற்றுக் கொண்டீர்கள்?

முன் சொன்ன ஆசிரியர்களிடம் நான் பள்ளிப் படிப்பு படித்தேன் என்று வைத்துக் கொண்டால், பட்டப்படிப்பைப் படித்துத் தேறியது என்பது ரங்கராமானுஜ ஐயங்காரின் வழிக்காட்டலில்தான். நான் கடைசி வருட எம்.பி.பி.எஸ் படிக்கும் போது, மகப்பேற்றில் பயிற்சி பெற சென்னைக்கு வந்தேன். எனது குரு லட்சுமண ராவ் என்னை டி.எஸ்.வாசுதேவனை சந்தித்து பயன்பெறும் படிக் கூறியிருந்தார். எனது மருத்துவப் படிப்புக்குப் போக எஞ்சிய வேளையில் வாசுதேவனிடம் கிருதிகள் கற்கப் போவேன். தவறாமல் வீணை தனம்மாளின் வெள்ளிக் கிழமைக் கச்சேரிகளுக்குச் செல்வேன். ஒரு நாள், இரவுச் சாப்பாட்டை முடித்து திரும்புகையில் சைக்கிளில் இருந்தபடி ஒருவர் என்னை கதட்டி அழைத்தார். அவரை அணுகிய போது, தன்னை ரங்க ராமானுஜ ஐயங்கார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, எனக்கு தியாகராஜரின் ஆஹிரி ராகக் கிருதி தெரியுமென்று கேள்விப்பட்டதாகவும், அதைத் தான் அறிய விரும்புவதாகவும் கூறினார்.

எனக்கு ஆஹிரியில் 'தீன ரக்ஷகா' என்ற கிருதி தெரியும். ஆனால் அது தியாகராஜரின் கிருதி அல்ல என்று கூறினேன். அந்தக் கிருதியை தான் அறிய விரும்புவதாகவும், அதற்காக தன் வீட்டிற்கு வர முடியுமா என்றும் கேட்டார். அவர் வீட்டில் சென்று கிருதியை நான் பாட, அவர் ஸ்வரப்படுத்தி எழுதிக் கொண்டார். அதன் பின், எனக்குத் தெரிந்த கிருதிகளை எல்லாம் பட்டியலிட்டு எழுதிக் கொண்டார். அவருக்குத் தெரியாத கிருதிகளை என்னிடம் கேட்டுக் கொள்வதாகவும், பதிலுக்கு அவருக்குத் தெரிந்த கிருதிகளை எனக்குச் சொல்லித் தருவதாகவும் கூறினார்.

தனம்மாளின் சிஷ்யரான அவரிடம் பல கிருதிகள், பதங்கள் போன்ற அரிய பொக்கிஷங்களைப் பெற்றேன். அதைத் தவிர எங்களுக்கு முன்னிருந்த இசைக் கலைஞர்களைப் பற்றியும், அவர்கள் இசைக்கும் முறைகளைப் பற்றியும் விரிவாக அவர் பேசுவார். அப்படித்தான் கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயர், சிமிழி சுந்தரம் ஐயர் போன்றோரின் இசையின் நுணுக்கங்களை அறிந்து கொண்டேன். நல்ல இசையின் பரிமாணங்களை நேறிப்படுத்திக் கொள்ள எனக்கு ரங்கராமானுஜ ஐயங்கார் பெரிதும் உதவினார்.

தொடரும்...

தொடர்ந்து இசைப்போம்...

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.