சங்கீத டாக்டருடன் ஒரு நாள் - பகுதி 2
பல கலைஞர்களின் இசையைப் பற்றி அலசிய ரங்கராமானுஜ ஐயங்கார் தங்களின் இசையைப் பற்றி ஏதாவது கூறினாரா?
என்னைப் பாராட்டியோ, என் இசையை விமர்சித்தோ அவர் ஒரு போதும் எதுவும் கூறவில்லை. என் கச்சேரிகளை அவருடன் சேர்ந்தே கூட ரேடியோவில் கேட்டு இருக்கிறேன். எத்தனையோ பெரிய வித்வான்களை கேட்ட அவர் காதுகளை என் இசையா நிறைத்துவிடும் என்று நானும் இருந்துவிட்டேன். ஒரு முறை 'மஹாசுரம்' கிருதியை ரேடியோ கச்சேரியில் பாடி, 'குருகுஹ சாமர ப்ரணம்' என்ற இடத்தில் நிரவல் பாடினேன், அடுத்த நாள் ரங்கராமானுஜ ஐயங்காரைச் சந்தித்த போது, "கோனேரிராஜபுரம் வைத்தியநாத ஐயரே வந்து பாடியது போல உன் நிரவல் இருந்தது", என்றார். அதுதான் அவர் என்னைப் பாராட்டிய ஒரே தருணம். அந்த ஒரு பாராட்டே இந்தப் பிறவிக்குப் போதும். (என்று கண் கலங்குகிறார்).
ஆந்திரத்தில் சிறந்த இசைக் கலைஞராகத் திகழ்ந்த தங்களை தமிழ்நாட்டில் பெரும்பாலும் இசை ஆராய்ச்சியாளர் (musicologist) என்று முத்திரை குத்திவிட்டனரே. இது எப்படி நடந்தது?
நான் அடிப்படையில் ஒரு மருத்துவன். அதனால், கச்சேரிகளை வலிந்து சென்று பெருவது எனக்கு அவசியமில்லாத ஒன்று. சென்னை சபைகளில் கச்சேரி வாய்ப்புகள் பெற பலரை அணுக வேண்டும். அப்படி அணுக எனக்கு விருப்பமில்லாததால், கிடைத்த வாய்ப்புகளில் மட்டும் பாடி, அதில் நிறைவை அடைந்தேன். என் காலத்தில், படித்த இசைக் கலைஞர்கள் மிக மிகக் குறைவு. அழகாகப் பாடும் பலரால் இசையின் நுணுக்கங்களை தெளிவாக விளக்க முடியாது. இசை நுணுக்கங்களை ஆராய்ந்து விளக்கக் கூடியவர்கள் மேடைக் கச்சேரியில் ஈடுபடுபவர்களாக இல்லை. எனக்கு சங்கீதத்தின் கூறுகளை அலசி அதைப் பற்றி தெளிவாகவும் பேச முடிந்ததால் என்னை musicologist வகுப்பில் சேர்த்துவிட்டனர் என்று நினைக்கிறேன்.
அதனால்தான் தங்களை அலங்கரிக்கும் பட்டங்கள் பல தாமதமாக வந்தடைந்தனவோ என்னமோ.
இருக்கலாம். 1970-லேயே இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸின் இசை விழாவுக்கு தலைமை வகித்தேன். அவர்கள் கூட, என்னை 1992 வரை மீண்டும் கச்சேரி செய்ய அழைக்கவில்லை.
என் கச்சேரி ரேடியோ நேஷனல் ப்ரோக்ராமில் வர வேண்டும் என்று பலர் கேட்டுக் கொண்டதற்கு, "அவர் musicologist. கச்சேரி செய்யும் வித்வான் அல்ல.", என்றாராம் அன்று டெல்லியில் பொறுப்பில் இருந்த ஈமணி சங்கர சாஸ்திரி. இத்தனைக்கும் அவரும் ஆந்திரத்தைச் சேர்ந்தவர். பின்பு, 1972-ல் என்னை கச்சேரி செய்ய அவரே அழைப்பு விடுத்த போது, "If I was not fit twenty years before, my music has not become any better now", என்று பதிலெழுதி மறுத்துவிட்டேன். என்னை மீண்டும் ஒரு முறை பரிசீலிக்கச் சொன்ன போது, "My previous reply stands good for now and for ever", என்று எழுதினேன்.
1983-ல் எனக்கு சங்கீத கலாநிது பட்டம் வழங்கப்பட்டது. அந்த வருடம் கூட, கச்சேரி செய்யும் வாய்ப்பை எனக்கு சங்கீத வித்வத் சபை அளிக்கவில்லை. ஏனென்று சில கேட்டதற்கு, "பினாகபாணி போன்ற உயர்தரக் கலைஞரை, வெறும் மேடைக் கலைஞருள் ஒருவராகச் சேர்க்க வேண்டாம்", என்று சாமர்த்தியமாய் கூறினார்களாம். அந்த ஆண்டில் நடந்த காலை வேளை விரிவுரைகளுக்கு மட்டும் தலைமை ஏற்று வந்தேன். திடீர் என்று ஒருநாள், எம்.டி.ராமநாதனுக்கு உடல் நலமில்லை என்பதால், என்னை கச்சேரி செய்யச் சொன்னார்கள். "இப்போது மட்டும் எனது சங்கீதம் மேடைக் கலைஞரின் நிலைக்குத் தாழ்ந்துவிட்டதா", என்று கேட்டேன். அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் கச்சேரி செய்தேன்.
ஒரு கச்சேரியில் தாங்கள் பாடிய பல்லவியை, தங்களுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்கிய போது வாழ்த்திப் பேசிய லால்குடி ஜெயராமன் நினைவு கூர்ந்துப் பேசியதைப் பற்றி, அவரே என்னிடம் கூறியிருக்கிறார். அதைப் பற்றி கூறுங்களேன்.
கர்னூலில் ஒரு சபையை என் நண்பர் வெங்கடரங்கம் ஐயங்கார் நடத்தி வந்தார். அந்த சபையில் வோலேட்டி, நேதனூரி போன்றோரின் கச்சேரிகளை நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன். சபை தொடங்கிய மூன்றாம் ஆண்டு, "நீங்கள் ஏன் நம் சபையில் கச்சேரி செய்வதில்லை", என்று கேட்டார் வெங்கடரங்கம் ஐயங்கார். "உங்களுக்கு வேண்டுமானால் நான் வீட்டுக்கு வந்து பாடுகிறேன். அப்படி என் பாட்டு சபையில் ஒலிக்க வேண்டுமானால் நான் கேட்கும் பக்கவாத்தியங்களை எனக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும்", என்று கூறினேன். அதற்கு அவர் இசையவும், லால்குடி ஜெயராமனை வயலினுக்கும், நாகர்கோயில் கணேச ஐயரை மிருதங்கத்துக்கும் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டேன். சென்னை சென்று லால்குடியை சந்தித்த வெங்கடரங்கம் ஐயங்காரிடம், அது வரை என் பாட்டைக் கேட்டிராத லால்குடி, ஆந்திராவுக்கு வந்து எனக்கு பக்கவாத்தியம் வாசிக்க தயங்கினாராம். அவரை எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டார் சபா காரியதரிசி.
கர்னூலில் இருந்து 60 மைல் தூரத்தில் ஆதோனே என்றொரு ஊர் இருக்கிறது. அந்த நாளில் கர்னூலுக்கு கச்சேரி செய்ய யாரை அழைத்தாலும், அவரை ஆதோனேயில் இருந்த சபாவிலும் ஒரு கச்சேரி செய்யச் சொல்வோம். இதனால், செலவுகளை இரண்டு சபாக்களும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. லால்குடி ஜெயராமன், கணேச ஐயருடன் என் முதல் கச்சேரி அதோனேயில் நடந்தது.
அன்று கச்சேரியில் பல கிருதிகள் பாடி, பிரதான ராகமாக சங்கராபரணம் பாடி, "சரவணபவ குருகுஹ" என்ற பல்லவி பாடினேன். சதுஸ்ர நடை பல்லவியை மூன்று காலங்களில் பாடி த்ரிகாலம் செய்து அதன் பின் திஸ்ர நடையில் பாடி மறுபடியும் சதுஸ்ர நடைக்கு வருவது வழக்கமான ஒன்று. இந்தக் கச்சேரியில், திஸ்ர நடையில் பாடிய பின் கண்ட நடையிலும் அந்தப் பல்லவியைப் பாடினேன். இந்த நிகழ்ச்சியை எனது சங்கீத கலாநிதி பட்டமளிப்பு விழாவில் நினைவு கூர்ந்து, பாடியும் காண்பித்த லால்குடி ஜெயராமன், அதுவரை யாரும் அது போல பாடிக் கேட்டதில்லை என்றும் கூறுனார்.
நல்ல இசைக்கு எவையெல்லாம் அவசியம் என்று நினைக்கிறீர்கள்?
இது ஒரு முக்கியமான கேள்வி. இதில் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, நல்ல இசையின் கூறுகள். இன்னொன்று அவற்றிலன் சரியான கலவை. சரியான விஷயங்கள் சரியான அளவில் இருக்கும் போதே நல்ல இசை பிறக்க முடியும். ராகம் பாடும் போது, ஒவ்வொரு மூச்சிழுப்பிலும் ராக பாவம் சொட்ட வேண்டும். Every breath must contain melodious material. What is not melodious is not music. பாடும் போது ஒரு சங்கதிக்கும் அடுத்த சங்கதிக்கும் இடைப்பட்ட இடைவெளி சரியாக அமைவது மிக மிக முக்கியம். (சாவேரி ராகத்தை இடைவெளி இல்லாமலும், அளவான இடைவெளிகள் விட்டும் பாடுகிறார்.) இடைவெளி இல்லாமல் பாடும் போது ராக பாவம் அரவே நீங்கிவிடுகிறது. ஒவ்வொரு பிரயோகத்துக்கும் ஏதுவான காலப்ரமாணம் உண்டு. சில பிரயோகங்களை வேகமாகப் பாடும் போது நன்றாக ஒலிக்கும். அதே பிரயோகத்தை ஒரு இழை மெதுவாகப் பாடினால் பன் மடங்கு அதிகமாய் மெருகேறி ஒலிக்கும். அதீத வேகம் என்பது பாடகரின் திறமையை வேண்டுமானால் காட்டுமே தவிர, அழகுணர்ச்சியை வெளிப்படுத்த மெதுவான காலப்ரமாணமே சிறந்தது. நடனமாட வேண்டுமென்றால் முதலில் நிற்க வேண்டும். ஓடும் போது நடனமாடினால் பார்க்க நன்றாகவா இருக்கும்?
பாடும் ராகத்தின் தீர்க ஸ்வரங்கள் (நிற்கக் கூடிய ஸ்வரங்கள்), ரவை ஜாதி சங்கதி என்று கூறப்படும் துரிதமான பிரயோகங்கள், இந்திய இசையின் உயிரெனக் கருதப்படும் கமகங்கள், இவை அனைத்தும் சரியான அளவில் (right proportion), அவற்றுக்குரிய இடத்தில் (appropriate place), உரிய காலப்ரமாணத்தில் (correct kalapramana) அமைதல் வேண்டும். ராகம் பாடும் போது கேட்பவருக்கு குழப்பம் வரா வண்ணம் தெளிவான, பிரபலமான சங்கதிகள் பாடுவது மிக அவசியம். அதற்காக கற்பனையை பறை சாற்றும் புதிய சங்கதிகளை அரவே ஒதுக்கிவிடவும் கூடாது. ராகமோ, கீர்த்தனையோ, ஸ்வரமோ எதைப் பாடினாலும், சங்கதிகள் பாடலின் பொருள் அமைத்துள்ள பாவத்திலேயே இருத்தல் அவசியம். இவை அனைத்தும் நல்ல இசையின் முக்கியமான கூறுகள் எனலாம்.
தாங்கள் ஒரு சிறந்த இசைக் கலைஞராக உச்சங்களைத் தொட்டது போலவே, மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்கியுள்ளீர்கள். தங்களுக்கு இருந்த நேரத்தை இரண்டு துறையிலும் எவ்வாறு பங்கிட்டீர்கள்?
இறைவன் நமக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் கொடுத்துள்ளான். இந்த நேரத்தில் டி.வி பார்க்காமலோ, திரைப்படங்களுக்கு போகாமலோ இருந்தால், இரண்டு துறைகள் அல்ல, நான்கு ஐந்து துறைகளில் கூட சிறந்து விளங்குவது சாத்தியமாகும். என்னைப் பொறுத்த வரையில், மருத்துவத் துறையில் என்னை வளர்த்துக் கொள்ள ஒரு நாளைக்கு 6-7 மணி நேரம் செலவிட்டாலே போதுமானதாக இருந்தது. இசை மற்றும் மருத்துவம் தவிர, உடற் பயிற்சியிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. International Journal of Health and Sciences போன்ற இதழ்களுக்கு நான் பலமுறை கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒரு நண்பருடன் சேர்ந்து 'ஹனுமான் ஜிம்னேஷியம்' என்ற பயிற்சி கூடத்தைத் தொடங்கி ஆறேழு வருடங்கள் நடத்தியுள்ளேன். டென்னிஸ் விளையாடுவது என்றால் எனக்கு உயிர். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் இரண்டு மணி நேரமாவது நான் விளையாடாமல் இருந்ததில்லை. இதைத் தவிர, ஆன்மிகத்திலும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. சின்மயானந்தாவின் உரைகளை ஆழ்ந்து கேட்டதால் தோன்றிய ஈடுபாடு அது. கர்னூலில் சின்மயா மிஷனைத் துவக்கி அதன் தலைவர் பொறுப்பையும் பல காலம் வகித்துள்ளேன். இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் எனில், நமக்கு இருக்கும் நேரத்தை சரியாக உபயோகிப்போமெனில், பல துறைகளில் சிறந்து விளங்குவது அத்தனை கடினமான ஒன்றல்ல என்பதை அருதியிட்டுக் கூறத்தான்.
தாங்கள் இசையிலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்கியதால், Music Therapy-ஐப் பற்றிய தங்கள் கருத்து சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன். இசையால் வியாதிகளை குணப்படுத்த முடியுமா?
இசையால் வியாதிகளை நிவர்த்தி செய்ய முடியும் என்று நான் நம்பவில்லை. ஒருவன் குடித்து தன்னுடைய கல்லீரலை கெடுத்துக் கொண்டுவிட்டான் என்று வைத்துக் கொள்வோம், அவனுடைய பழுதான உடலை இசையைக் கொண்டு எப்படி சரி செய்ய முடியும்? இசையைக் கேட்பதன் மூலம், அவஸ்தையை வேண்டுமானால் சில நேரம் மறந்திருக்கலாமே ஒழிய, வியாதியை குணப்படுத்த முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை.
தாங்கள் மருத்துவராகவோ, இசைக் கலைஞராகவோ வர வேண்டும் என்று சிறு வயதிலேயே நினைத்தீர்களா?
அப்படி ஒன்றுமில்லை. பொறியியல், மருத்துவம் முதலான பல துறைகளுக்கு விண்ணப்பித்தேன். என் மதிப்பெண்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது அதனால் சேர்ந்தேன். என் இசைப் பயிற்சியும் விளையாட்டாகத்தான் தொடங்கியது. நாட்பட, அதன் போக்கிலேயே இரு துறைகளுமே என்னை ஆகர்ஷித்துக் கொண்டன.
தங்கள் எழுதிய புத்தகங்களைப் பற்றி கூறுங்களேன்.
எல்லோரும் ஒரு நாள் மரணமடையப் போவது என்பது உறுதி. இறக்கும் போது எதையும் கொண்டு செல்ல முடியாது. அதனால், என் மனதில் புதைந்து இருக்கும் சங்கீத விஷயங்களை ஒரு இம்மி அளவு கூட மிச்சமில்லாமல் இந்த உலகில் வைத்து விட்டுப் போய்விட வேண்டும் என்பது என் எண்ணம். இதுவே என்னைப் புத்தகங்கள் எழுதத் தூண்டின.
என் புத்தகங்கள் பெரும்பாலும் தெலுங்கிலேயே வெளியாகியுள்ளன. 'சங்கீத சௌரபம்' என்ற பெயரில் நான்கு தொகுதிகள் வெளியிட்டுள்ளேன். அவற்றில் நானறிந்த பல கிருதிகள், பதங்கள், தில்லானாகள், திருப்புகழ் என்று ஆயிரத்துக்கு மேற்பட்ட பல வகைப் பாடல்களை ஸ்வரப் படுத்தி வெளியிட்டுள்ளேன். 'பல்லவி கான ஸுதா' என்ற புத்தகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பல்லவிகளை, திஸ்ரம், த்ரிகாலம் போன்ற வின்யாஸங்களையும் மனதில் கொண்டு விவரமாக ஸ்வரப் படுத்தி வெளியிட்டுள்ளேன். சிம்ஹநந்தனம், சரபநந்தனம் போன்ற அரிய தாளங்களில் அமைந்துள்ள பல்லவிகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இந்தப் புத்தகம் ஆங்கிலத்திலும் கிடைக்கிறது. 'மனோதர்ம சங்கீதம்' என்ற புத்தகத்தில் நமது சங்கீதத்தின் அடிப்படைகளுள் ஒன்றான கற்பனையைப் பற்றி எழுதியுள்ளேன். இந்தப் புத்தகம் சென்னையில் இருக்கும் ப்ருஹத்வனி வாயிலாக தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மஹா வைத்தியநாத சிவனின் மேள ராகமாலிகையை, 72 ராகங்களுக்கு உரிய சஞ்சாரி ஸ்வரங்களுடன் சேர்த்து மாணவர்களுக்கு எளிதாக விளங்கும் வகையில் வெளியிட்டுள்ளேன். இதைத் தவிர என் சங்கீத அனுபவங்களை நான் தொடராக எழுதியதும், இன்று தொகுப்பாகக் கிடைக்கிறது.
பல வருடங்கள் நான் திரட்டிய லய சம்பந்தமான விஷயங்கள் மட்டும் கையெழுத்துப் பிரதிகளாகவே உள்ளன. அவற்றையும் வெளியிட அந்திரப் பல்கலைக்கழக இசைத் துறையிலிருந்து சிலர் வருவதாகக் கூறியுள்ளனர். அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
97 வயதில், கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்க்கும் போது என்ன நினைக்கிறீர்கள்?
தஞ்சாவூர் பாணி என்ற உயர்ந்த வகை இசையைக் கேட்டு, அதனால் ஈர்க்கப் பட்டு, அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற ஆசையால் அயராது உழைத்து, இசையில் உயர்வானதையெல்லாம் திரட்டி, எனக்கென்று ஒரு பாணியை வகுத்து, ஓரளவு வெற்றியுடன் அதைக் கச்சேரிகளுலும் பாடியுள்ளேன். நான் அறிந்தவற்றை எல்லாம் தகுதியுள்ள மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, தஞ்சாவூர் பாணியை ஆந்திராவில் நிறுவ என்னால் இயன்றதைச் செய்துள்ளேன். இதைத் தவிர எனது திரட்டல்களையும், கருத்துகளையும் புத்தகங்களாக வெளியிட்டுள்ளேன். இதை எல்லாம் நினைத்துப் பார்க்கும் போது, மிகுந்த நிறைவே ஏற்படுகிறது.
ஒரு புன்னகையுடன் கண்களை மூடிக் கொண்ட டாக்டர் பினாகபாணியிடம் விடை பெற்று, அன்று முழுவதும் என்னை உபசரித்த அவ்ர் குடும்பத்தாரிடம் சில நேரம் பேசிவிட்டு கர்னூலை விட்டு நீங்க, அந்தக் கலைஞரின் அறையைக் கடந்தேன். ஒரு நாள் முழுதும் பேசிய களைப்பை அவர் முகம் காட்டினாலும், அவர் வாய் மோகன ராகத்தை முணுமுணுத்தபடி இருந்தது.
தொடர்ந்து இசைப்போம்...
|