இது கதையல்ல (கொஞ்சம் கற்பனை கலந்த) நிஜம்
"தினமும்தான் ப்ரெண்ட்ஸ்கூட ஊர் சுத்தயாறதே, ஒரு நா கொஞ்சம் ஒத்தாசை செஞ்சா ஆகாதா? உபகாரம்னா அப்பாவும் பிள்ளையும் ஊரை விட்டு ஒழிஞ்சுடுவேள், எல்லாம் என் ப்ராரப்த கர்மா..." என்று முதல்15 ஓவர் ஜெயசூரியா ஆட்டம் போல் பொரிந்து தள்ள ஆரம்பித்தாள் அம்மா.
"அநியாயமா பேசாதம்மா.... எனக்கு யாருன்னே தெரியாதவாளுக்கு நடக்கிற கல்யாணத்துல நான் வந்து என்னம்மா செய்ய... ஒரே போர்மா... அதுவும் பெரம்பூர்ல இருந்து தாம்பரம் போறதுக்குள்ள தாவு தீர்ந்துடும்... என்னைப் படுத்தாத... வேணுமானா இரயில்வே ஸ்டேஷன்ல ட்ராப் பண்றேன்" என்று என் பக்க நியாயத்தை அடுக்கினேன், ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தும்,
"யாரோ கல்யாணம் இல்லைடா... உன் ஒண்ணு விட்ட அத்தை இந்துவோட பையன் கல்யாணம். உன் தம்பி பூணலுக்கு நங்கநல்லூர்ல இருந்து கொட்டற மழைல வந்தா... நம்ப ரிசெப்ஷனுக்கானும் போகாம இருந்தா நன்னா இருக்குமா?"
"அம்மா! ஒரு பத்திரிகைல படிச்சேன் (நமக்கு எதாவது சொல்லி அதுக்கு எதிர்வாதம் வரக்கூடாதுன்னா எங்கையாவது படிச்சேன்னு சொல்லிடறது நம்ப பண்பாட்டுல ஊறின விஷயம் இல்லையா. Facts-ஐத் தூக்கி குப்பைல போடு)... அது ஒண்ணு விட்ட அத்தை இல்லையாம், உன்னை விட்ட அத்தையாம்... அதாவது ஒரு ஸ்டேஜ்க்கு மேல அந்த உறவு எல்லாம் உன்னை விட்டுப் போச்சுன்னு சொல்லியிருக்கா... நீ என்னடானா..." என்று சொல்லி முடிப்பதற்குள் அம்மா முறைத்த முறைப்பைப் பார்த்து, "சரி சரி, வந்து தொலையறேன், எங்க மண்டபம்?" என்று ஜகா வாங்கினேன்.
"டேபிள் மேல பத்திரிகை இருக்குப் பாரு. அதுல இருக்கு அட்ரெஸ்"
பத்திரிகையைப் பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி. கல்யாண ரிசெப்ஷனில் கிருஷ்ணராஜபுரம் வாசுதேவனின் கச்சேரி ஏற்பாடு செய்திருந்தார்கள். எப்படியும் நமக்குப் பொழுது போய்விடும் என்ற நம்பிக்கையில் தாம்பரம் கிளம்பினோம்.
ஏழெட்டு வயதிருக்கும் 3 பட்டுப்பாவாடைகள் போட்டி போட்டபடி அளித்த உபசரிப்பைத் தாண்டி ரெசெப்ஷன் ஹாலை அடைந்தோம். அந்த மிகச்சிறிய ஹாலுக்குள் 150 நாற்காலிகள். நாற்காலி இல்லாத இடத்தை எல்லாம் மக்கள் நின்று நிரப்பினர். ஹாலின் நடுநாயகமாக ஒரு அலங்கரிக்கப்பட்ட மேடை. அதன் மேல் இரண்டு பெரிய நாற்காலிகள்.
ஹாலின் ஓரத்திலும், மணமக்களுக்காக இருந்த மேடைக்கு ஏதோ திருஷ்டிப் பரிகாரம் போல, ஐந்தடிக்கு ஐந்தடியில் மருந்துக்குக் கூட காற்று வராத இடத்தில் ஒரு மேடை. அந்த சின்ன இடத்தில்தான் பாடகர், மிருதங்க வித்வான், வயலின்காரர், பாடகரின் சிஷ்யர், ஸ்ருதிப்பொட்டி, 4 ஒலிபெருக்கிகள் எல்லாம் புளி மூட்டையைப்போல் அடைந்திருந்ததைப் பார்த்தால், இத்தனை இடர்களுக்கிடையில் இவர்களிடமிருந்து எப்படி சங்கீதம் வரப்போகிறது என்று சந்தேகமாகவே இருந்தது.
"இப்போ ஆரம்பிச்சாதாண்ணா 3-ஆவது பந்திக்காவது முடிக்க முடியும்" என்று சங்கீத வாரிசு சொல்ல, அதில் இருந்த நியாயத்தை உணர்ந்து சுனாதவினோதினி வர்ணத்தை ஆரம்பித்தார் வாசுதேவன்.
கச்சேரி ஆரம்பித்த 3-ஆவது நிமிடத்திற்குள் ஹாலின் எல்லாத் திசையிலிருந்தும் வயசான வெட்டி ஜம்பத் தலைகளின் பயங்கரமான ஆட்டமும், அவர்கள் வாயிலிருந்து வந்த பிறந்து அறை முழுதும் நிரப்பிய ஆஹாகாரமும் என்னை எரிச்சலுறச் செய்தன. என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த மாமா, பாடகர் என்ன தாளத்தில் பாடினாலும், தனக்குத் தெரிந்த ஆதி தாளம் ஒன்றையே எல்லா பாட்டிற்கும் போட்ட ரசிகசிகாமணி. பொறுக்கமுடியாமல் ஒரு பாடலுக்கு மிஸ்ரசாபு தாளத்தை, தொடை நான்கு நாட்களுக்கு வலிக்கும் வகையில் நான் நான்கு முறை போட்டு அவர் தப்புத்தாளத்தை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.
வர்ணம் முடிந்து கொஞ்சம் உருப்படிகள் பாடியவுடன் வாசுதேவனின் குரல் நன்றாகப் பதமடைய, சுத்த தன்யாசி ராகத்தை ஆலாபனை செய்ய எடுத்துக் கொண்டார். தன் கற்பனையில் ஒரு அபூர்வப் பிரயோகம் ஒன்று தோன்ற, அதில் கவனம் செலுத்தி வளர்க்கலாம் என்று யத்தனிக்கும் பொழுது, வீடியோ காமிராவின் ஃபோக்கஸ் லைட் அவர் கண்களில் விழுந்து கற்பனையைப் பதம் பார்த்தது. கெஞ்சாத குறையாய் லைட்டை அணைக்கச் சொல்லி அவர் அபிநயம் பிடிக்க, "இப்பொதான் சார் உங்களை எடுக்க முடியும். அப்புறம் பொண்ணு மாப்பிள்ளையை எடுக்கறதா, உங்களை எடுக்கிறதா? உங்க தொழிலுக்கு நான் இடைஞ்சல் பண்றேனா, என் தொழிலுக்கு நீங்க குறுக்க வரீங்களே" என்று உபன்யாசம் செய்தான் வீடியோக்கார மஹானுபாவன்.
அவ்வளவுதான்! அத்துடன் சட்டுபுட்டென்று ஆலாபனையை ஒப்பேத்தி வயலினுக்குச் சான்ஸ் கொடுத்தார் வாசு. பிறகு காலம் காலமாய் பாடி வரும் "என்ன தவம் செய்தனை", "அலைபாயுதே" என்று கொஞ்சம் ஓபி அடித்து, அன்றைய மெயின் ஐட்டமாகக் கல்யாணியைப் பாட ஆரம்பித்தார்.
வாசு "அலைபாயுதே" பாடியவுடன் அதனைத் தொடர்ந்து பல சினிமாப் பாடல்கள் பாடுவார் என்றெண்ணி ஏமாந்த இளவட்டங்களின் எண்ணிக்கையை எண்ணி மாளாது.
கல்யாணி ஆரம்பிப்பதற்கும் மணி 7.30 அடிப்பதற்கும் சரியாக இருந்தது. வந்த கூட்டம் இப்பொழுது ஒரு சம்பிரதாய கைகுலுக்கல் மணமக்களிடம் குலுக்கினால்தான் சாப்பிட்டுக் காலாகாலத்தில் வீடு போய் சேரத் தோதாய் இருக்கும் என்பதை நன்குணர்ந்திருந்தது.
கொஞ்ச கொஞ்சமாய் ஆரம்பித்த லைன், மணமேடை தாண்டி, பாடகர் இருந்த மேடைவரை வந்து சேர்ந்தது. சற்றைக்கெல்லாம் பாடகர் குரல் மட்டும் ஸ்பீக்கரில் கேட்டது, ஆள்தான் அந்த ஜன சமுத்திரத்தில் எங்கென்றே தெரியவில்லை. ஏற்கெனவே காற்று புகமுடியா இடம். இதில் ஜன நெரிசல் வேறு சேர்ந்து கொண்டால் கேட்க வேண்டுமா. பாடகர் இசையில் நனைந்தாரோ இல்லை, நிச்சயம் வியர்வையில் நனைந்தார்.
லைனில் நின்ற மக்களெல்லாம், என்னடா யாரோ ஒருவர் பாடுகிறாரே என்று சும்மாவாயிருக்கும். தெரிந்தவரோ தெரியாதவரோ பக்கத்தில் இருப்பவரோடு பலத்த குரலில் அரட்டைக் கச்சேரி பாட்டுக் கச்சேரியோடு போட்டி போட்டது.
"டீ கோமு, சீக்கிரம் வாடி ஃபோட்டோ எடுத்துக்க வேண்டாமா", "டெண்டுல்கர் என்னமா ஆடினான் சார்", "எங்காத்து சீனு கூட நியூ ஜெர்ஸிலதான் இருக்கான்" என்ற குரல்களுக்கிடையில் கனம் கிருஷ்ணையரின் கல்யாணி கிருதி, நிரவல் ஸ்வர அலங்காரங்களுடன் பவனி வந்தது.
சபா கச்சேரியிலேயே தனி ஆவர்த்தனத்துக்கு போண்டா தின்னச் செல்லும் கோஷ்டி, கல்யாண கச்சேரியிலா உட்கார்ந்து கொண்டிருக்கும்.
இந்தத் தொல்லையெல்லாம் பொறுத்துக் கொண்டு பாடிய வாசுதேவனின் கச்சேரியை எனக்குத் தெரிந்து நானும் இன்னும் இரண்டு மூன்று பெரியவர்களும்தான் கடைசிவரைக் கேட்டோம்.
இந்த கூத்தெல்லாம் நான் வியப்புடன் பார்த்துக்கொண்டிருக்கையில் ஏதோ ஒரு பரிச்சியமான குரல் பக்கத்தில் கேட்க, திரும்பிப் பார்த்தால் அம்மா.
"வரலை வரலைன்ன, இப்பொ என்னடான்னா மணி 8.30 ஆச்சு. இனிமே எப்போ சாப்பிட்டு எப்போ வீடு போய் சேரறது?" என்றாள் பொய்க்கோபத்துடன்.
ஒரு வழியாய் சாப்பிடப் போக, பாடகர் வாசுதேவனுக்கு அருகிலேயே உட்காரக் கடவது என்று விதிக்கப்பட்டிருந்தது.
தயங்கித் தயங்கி, "நீங்க முதல்ல பாடின வர்ணம் சுனாதவினோதினி ராகம்தானே?" என்று நான் கேட்க, வாசுதேவன் கண்களில் ஆனந்த பாஷ்பம் வராததுதான் குறை. அந்தக் கூட்டத்தில் தான் பாடியதையும் கேட்ட ஜீவன் ஒன்று இருந்ததா என்றெண்ணி அவர் ஜென்மம் சாபல்யம் அடைந்திருக்கும்.
மிகவும் உற்சாகமாக என்னிடம் வாசு பேசிக்கொண்டிருக்கையில், "எத்தனை பெரியவனாய்ட்டாண்டி உன் பிள்ளை" என்றபடி என் அம்மாவுடன் வந்தாள் என் ஒண்ணு விட்ட (ஆனால் என்னை விடாத) அத்தை.
"என்னடா, கச்சேரி எல்லாம் நன்னா ரசிச்சயா. சார் என் கூடதான் வேலை பார்க்கறார். நீங்கதான் சார் நம்பாத்து கல்யாணத்துக்குப் பாடணும்னு சொன்னேன். அதுக்கென்ன தாராளமான்னு பைசா காசு வாங்காம ஜமாய்ச்சுட்டார்" என்றாள்.
எனக்கு மயக்கமே வந்துவிட்டது.
தொடர்ந்து இசைப்போம்... |