முத்துத் தாண்டவர்
தமிழ்நாட்டை ஆண்ட சேர-சோழ-பாண்டியரை மூவேந்தர் என்று அழைப்பது போல், கர்நாடக இசையில் மூவேந்தர்களாக வழங்கப்படுபவர்கள், தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷதர், ஷ்யாமா சாஸ்த்ரி. இந்த மூவரும் பிறப்பதற்கு முன்பே, பல கீர்த்தனைகளைப் பாடி, இந்த மூவருக்கே முன்னோடிகளாய் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்களுள், 'தமிழ் மூவர்' என்று முத்துத்தாண்டவர், அருணாசலக் கவியராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோரைச் சொல்லுவார்கள்.
தியாகராஜர், தீக்ஷதர், ஷ்யாமா சாஸ்த்ரி, மூவரும் அவதரித்த புண்ணிய பூமி திருவாரூர். அதே போல, தமிழ் மூவருக்கும் ஒரு common-link உண்டு. மூவரும் ஒரே ஊரில் பிறக்கவில்லையெனினும், அவர்கள் வாழ்வின் பெரும் பகுதியை சீர்காழியிலேயே கழித்தனர். இதனால் இவர்களை 'சீர்காழி மூவர்' என்றும் அழைப்பர்.
இவர்களுள் பிரபலமானவர் அருணாசலக் கவி. அருணாசலக் கவி பிறப்பதற்கு கிட்டத்தட்ட 150 வருடம் முன்பே தோன்றி பல அற்புதமான பாடல்களைப் புனைந்தவர் முத்துத்தாண்டவர். இவர் சரித்திரம் மிகவும் சுவாரஸ்யமானது.
திருஞானசம்பந்தர் லோகநாயகியிடம் ஞானப்பால் அருந்திய சீர்காழியில், பரம்பரை பரம்பரையாய், பாடல்கள் புனைந்தும், பாடியும், இசைக் கருவிகள் செய்தும், இசைத்தும் வந்த ஒரு இசை வேளாளர் குடும்பத்தில், 1560-ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தில்லை அம்பலத்தில் ஆடிய நடராஜப் பெருமானைக் குறிக்கும் வகையில், அந்த குழந்தைக்கு 'தாண்டவன்' என்று நாமகரணம் செய்தனர்.
எல்லோரையும் போல வளர்ந்து வந்த தாண்டவரை வாலிபப் பிராயத்தில் திடீரென என்னவென்றே அறியமுடியாத நோய் ஒன்று தாக்கியது. அந்த நோய் அவர் உடல் நலத்தையும், தோற்றத்தையும் வெகுவாகப் பாதித்தது. இதனால், குடும்பத் தொழிலான இசையை அவரால் மேற்கொள்ள முடியவில்லை. அவரது நோயையும், தோற்றத்தையும் கண்டு அருவருப்படைந்த அவர் சுற்றத்தினர், அவரை வெறுத்தொதுக்கினர்.
இதனால் மனம் தளர்ந்து, ஆதரவுக்காய் ஏங்கித் தவிக்கையில், சிவபாக்யம் என்ற தேவதாசிக் குலத்தில் பிறந்த பெண்ணின் பரிச்சயம் அவருக்குக் கிட்டியது. சிவபெருமானின் புகழைப் பாடல்களாய்ப் பாடிய சிவபாக்யத்தின் குரலின் இனிமை அவரது துக்கத்தை பெரிதும் தணித்தது. நாளடைவில், சிவபாக்யத்தின் வீட்டிற்கு செல்வது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. அவரது குடும்பத்தினர் எத்தனையோ எடுத்துக் கூறியும், தாண்டவர் தன் பழக்கத்தை விடுவதாக இல்லை.
இதனால் கோபமுற்ற அவர் குடும்பத்தினர், அவருக்கு உணவு அளிக்கக் கூட மறுத்தனர். அப்பொழுது, ஒரு வேளை உணவை மட்டும் சிவன் கோயில் பிரசாதத்தின் மூலம் உண்டு விட்டு, மற்ற நேரங்களில் பட்டினியாகவே கிடந்தார். இதனால் ஏற்கெனெவே நலிவுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது.
ஒரு நாள், சீர்காழி கோயிலில், சிவனை வழிபட்டுத் திரும்புகையில், உடல் தளர்ந்து, சிவபெருமானின் வாகனங்கள் வைத்திருந்த அறைக்கு அருகில் தள்ளாடி விழுந்தார். மெல்ல அந்த அறைக்குள் தவழ்ந்து சென்றவர் சற்றைக்கெல்லாம் நினைவிழந்தார்.
இவர் மயங்கிக் கிடப்பதை கவனியாமல், விளக்கை அணைத்துவிட்டு கோயில் குருக்கள் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து அறிவுற்ற தாண்டவர், தன் நிலையை உணர்ந்து கலங்கினார். உள்ளே கொலுவிருந்த பிரும்மபுரீஸ்வரரை நோக்கிக் கதறினார். தனக்கு ஆதரவளிக்கும்படி இரைஞ்சினார்.
அழுது அழுது சோர்ந்து படுத்தவரை, சற்றைக்கெல்லாம் ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்த தாண்டவர், அவள் குருக்களின் மகள் என்பதைக் கண்டு கொண்டார். தன் கையில் இருந்த பாத்திரத்தில் கொணர்ந்த உணவை தாண்டவருக்கு அளித்து, அவர் உண்டு முடித்ததும், அவருக்கு என்ன குறை என்று வினவினாள்.
தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவனைத் தேற்றி, சிதம்பரத்துக்குச் சென்று, அங்கி வீற்றிருந்த நடராஜப் பெருமானை நோக்கி, ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் புனையுமாறு பணித்தாள்.
"பாடலாவது? புனைவதாவது? சரியாப் போச்சு. ஒரு பாடல் புனைவதே பிரும்ம பிரயத்தனம். இதில் நாளுக்கு ஒரு பாடல் என்றால்? பாடல் வார்த்தைகளுக்கெல்லாம் நான் எங்கே போவது?" என்று புலம்பினார் தாண்டவர்.
கோயிலில் அவர் பார்க்கும் முதல் பக்தர் வாயில் இருந்து வரும் வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு பாடல் புனையுமாறு ஆலோசனை கூறி மாயமாய் மறைந்துவிட்டாள் அச்சிறுமி.
பொழுது புலர்ந்தது. காலையில் கோவிலைத் திறந்து கொண்டு காவலர்களும், அர்ச்சகர்களும், ஓதுவார்களும் நுழைந்தனர். அங்கு அவர்களுக்கு யாரென்றே அடையாளம் தெரியாத ஒருவன் படுத்துக் கிடந்தான். அவன் முகத்தில் கண்டவரையெல்லாம் மயக்கும் ஒரு தேஜஸ் பரவியிருந்தது. அந்த மனிதன் வேறு யாருமில்லை, நம் தாண்டவர்தான். முந்தைய இரவு வந்த சிறுமி சாக்ஷாத் லோகநாயகிதான். அன்னையின் அருளால் நல் முத்தின் சுடரொளி போலத் தோற்றப்பொலிவைப் பெற்ற தாண்டவருக்கு 'முத்துத்தாண்டவர்' என்று பெயரளித்தனர்.
முத்துத்தாண்டவர், அன்னையின் அருள்வாக்குப்படி சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார்.
சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில், 'பூலோக கைலாயகிரி சிதம்பரம்' என்ற சொற்கள் விழுந்தது. அதையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் ஐந்து பொற்காசுகள், அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. ஈசன் மனம் கனிந்து அளித்ததை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு, ஒவ்வொருநாளும் அவர் கேட்ட முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தவாறு காலம் தள்ளினார் முத்துத்தாண்டவர்.
ஒரு நாள், அவர் பாடல் புனைய வார்த்தைகளே கிட்டாத வண்ணம், மயான அமைதி அங்கு நிலவியது. என்ன செய்வதென்று அறியாத தாண்டவர், மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தார். ஒரு கட்டத்துக்கு மேல், 'சீ! சும்மா இருக்க மாட்ட! பாழாப் போன மனசே! கொஞ்சம் பேசாம இரு' என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார். அந்த வார்த்தைகள் அவர் உள்ளத்தில் ஒரு மின்னலை வெட்டியது. "பேசாதே நெஞ்சமே" என்ற வார்த்தைகளை தொடக்கமாகக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தார். தன் பாடல் வரிகளுக்கு இனி அடுத்தவரை நம்ப வேண்டாம் என்பதை உணர்த்த இறைவன் செய்த விளையாட்டு இது என்பதை உணர்ந்து கொண்டார்.
ஒருமுறை கோயிலுக்குச் செல்கையில், பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது. "அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே" என்று தில்லை ஈசனை நோக்கிப் பாட, விஷம் இருந்த இடம் தெரியாதபடி உடலை விட்டு நீங்கியது.
ஒருநாள் கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோட, சிதம்பரம் செல்ல முடியாமல் தவித்துப் போனார். "காணாமல் வீணிலே காலம் கழித்தோமே" என்று மனமுறுகப் பாடியதைக் கேட்டு மனமிரங்கி, ஆறு அவருக்கு இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும், 'தரிசனம் செய்வேனே" என்ற பாடலைப் பாடியபடி குதூகலித்தார்.
1640-ஆம் வருடம், ஆவணிப் பூச நாளில், "மாணிக்க வாசகர் பேர் எனக்குத் தரவல்லாயோ அறியேன்" என்று நடராஜரை நோக்கிப் பாட, ஒரு பெரிய ஜோதிப்பிழம்பு வந்து அவரை ஆட்கொண்டது.
நாள் தவறாது பல பாடல்கள் புனைந்தவரின் வெகு சில பாடல்களே இன்று நம்மிடம் இருக்கிறது. கிட்டத்தட்ட 60 கீர்த்தனங்களும் 20 பதங்களும் இன்று நம்மிடம் உள்லது. அவற்றுள், "ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ", "தெருவில் வாரானோ", "சேவிக்க வேண்டும் ஐயா" போன்ற பாடல்கள் இன்று பலர் பாடக் கேட்க முடிகிறது.
தொடர்ந்து இசைப்போம்... |