வாயில் தொடர்புக்கு  
  நூல்வெளி TS ஒளியும் ஒலியும் TS கதை சொல்லி TS நேர்காணல்கள் TS தொடர்கள் TS கட்டுரைகள் TS எழுத்தாளர்கள்  TS சிற்றிதழ்கள் TS அயல் இலக்கியம் TS மற்றவை

வணக்கம்..தொடர்கள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. பல்வேறு எழுத்தாளர்களின் கட்டுரைத் தொடர்கள் இந்தப் பகுதியில் இடம்பெறும்
 
 
 

உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் தொடர்பற்றி

சதுரங்க ஆட்டத்தில் ஆடும் இரு நபர்களுக்கும் தெரியாத பல வழிமுறைகள் அங்கு நின்று வேடிக்கை பார்க்கும் நபர் நன்றாக அறிந்திருபார். அந்த வழிமுறைகளை, “இப்படி செய்திருக்கலாம் என அவர் சொல்லியதும்” சதுரங்க ஆட்டம் ஆடுபவர்களே சற்று ஆடித்தான் போவார்கள். பிரச்சனையில் இருப்பவர்கள் பிரச்சனையின் பிடியிலேயே இருப்பதால் அவர்களின் பார்வைக்கு சரியான பாதை தென்படாது. நம் வாழ்க்கையும் சதுரங்க ஆட்டம் போன்றதுதான். பல விதமான சிக்கல்களில் சிக்கியிருக்கும் நம்மை அதிலிருந்து விடுவிக்க ஆச்சரியப்படுத்தும் விதமான பல ஆலோசனைகளுடன் அந்த மூன்றாம் நபராக வருகிறார். டாக்டர் B. செல்வராஜ்.

 

 

 

 

 
     
     
     
   
தொடர்கள்
1
 
உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள்
ஆசிரியர் பற்றி
------------------------
 
 

 
 


முனைவர்.பா.செல்வராஜ்

முனைவர்.பா.செல்வராஜ், கோவை அரசு கலைக் கல்லூரி உளவியல் துறையில் உதவி பேராசிரியராகப் தற்போது பணிபுரிந்து வருகிறார்.

அத்துறையில் செயல்பட்டு வரும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் மையத்தில் மனநல ஆலோசகராக கடந்த 11 ஆண்டுகளாக பணிபுரிந்து மாணவர்கள், அவர்தம் பெற்றோர், ஆசிரியர்கள், அவர்தம் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கி வருகிறார். உணர்ச்சியறிவு, சாதனை ஊக்கம், புதுவித சிந்தனை ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்த இவர் கல்லூரிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் தொழிற்சாலைகளில் இக்கருத்துக்கள் பற்றிய பயிற்சிகளை நடத்தி வருகிறார். மக்களுக்குப் பயனக்களிக்கக்கூடிய உளவியல் விசயங்களைப் பற்றி அவ்வப்போது பத்திரிக்கைகளில் கட்டுரை, பேட்டி ஆகியவை மூலமாக தெரிவித்து வருகிறார். மனதை மேம்படுத்தும் மனோதத்துவம் என்னும் இவரின் நூல் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பினைப் பெற்றதாகும்.

கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரி, போலீஸ் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றில் கௌரவ பேராசிரியாரான இவர் பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உளவியல் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். உளவியல் தொடர்பான அறிவியல் ஆய்வு கட்டுரை ஒன்றினைப் பதிப்பித்துள்ளார். இவரின் வலைப் பூ உளவியல் கருத்துக்கள் நிறைந்த சிறந்த வலைப் பூவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

 

 
  ---------------------------------  
 

 

 
  ---------------------------------  
     
     
   
   
  வகைப்பாடு
   
  கூடு எழுத்தாளர்கள்
  வகைகள்
  எழுத்தாளர்கள்
   
 

 

 
 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.

 
     
 

 

 

 

 



வாயில் TS  தொடர்கள் TS உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் தொடர்கள் வாயில்


உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் –6

பா.செல்வராஜ்  

சுந்தரேசன் தனக்கும் தன் மகளுக்கும் சரியான உறவு இல்லை. எப்போதும் தகராறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அதுவும் கடந்த ஒரு மாதமாக நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. அதனால் உளவியல் ஆலோசனை பெற்றால் பரவாயில்லை என வந்தேன் எனக் கூறிக் கொண்டு ஆலோசனை மையத்திற்கு வந்தார். அவருக்கு ஒரே மகள். மகளுக்கு தற்போது பதினைந்து வயதாகிறது. பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அப்பெண்ணுக்கென தனியாக ஒரு செல்போன் இருக்கிறது. சமீப காலமாக செல்போனில் பேசுவது, செய்தி அனுப்புவது ஆகியவை அதிகமாகி விட்டது. வகுப்பில் பயிலும் பல மாணவ, மாணவிகளும் செல்போனில் பேசிக் கொண்டும், செய்தி அனுப்பிக் கொண்டும் இருப்பதால், வகுப்பாசிரியரே அனைவர் பெற்றோரையும் வரவழைத்து கண்டித்து இருக்கிறார்.

உங்கள் பிள்ளைகளிடத்தில் கொடுத்திருக்கும் செல்போன்களை பிடுங்கி வைத்துக் கொள்ளுங்கள் அல்லது பள்ளியிலிருந்து அவர்கள் நீக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். வகுப்பாசிரியரின் அறிவுரைப்படி செல்போனை வாங்கிவிடலாம் என நினைத்துத்தான் சுந்தரேசன் ஒரு மாதத்திற்கு முன்பு தன் மகளிடம் ’செல்போனை கொடுத்து விடு’ என கேட்டிருக்கிறார். உடனே மிகுந்த ஆத்திரத்திற்கு உள்ளாகிய சுந்தரேசனின் மகள் ‘செல்போன் இல்லாமல் என்னால் இருக்க இயலாது, யாராவது எனது செல்போனை பறித்தால் என்னை உயிருடன் பார்க்க முடியாது’ என கத்தியிருக்கிறார். சண்டை முற்றி அப்பாவும் மகளும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டுள்ளனர். ஒரு சமயத்தில் வெறிபிடித்த மகள் தந்தை எனவும் பார்க்காமல் சுந்தரேசனை கன்னத்தில் பல அறைகள் கொடுத்திருக்கிறார். இருபது வருடங்களுக்கு முன்பே தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் தன் இடது கையின் உள்ளங்கையை இழந்த சுந்தரேசன் ஒரு கையைக் கொண்டு திருப்பி அடிக்க முடியாமல் தன் மகளிடம் அடியை வாங்கிக் கொண்டார். அடிதடி தகராறுக்குப் பின் வீட்டில் மயான அமைதி. தன் மகளிடமே அடிவாங்கிய அவமானத்தை தாங்க இயலாத சுந்தரேசன் கண் கலங்கியபடி என்ன செய்யலாம் என வினவினார்.

உங்களை உங்கள் மகள் அடித்ததை உங்கள் மனைவி தட்டிக் கேட்க வில்லையா? என சுந்தரேசனைக் கேட்டேன்.

'என் மனைவி தட்டிக் கேட்டாள். அவளையும் எட்டி உதைத்தாள் என் மகள். நான்கு மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்தாள் என் மனைவி. சண்டையில் என் மகள் எட்டி உதைத்ததில் தையல் பிரிந்து ரத்தம் கொட்டி மயக்கமடைந்தாள். பின்னர் இரண்டு நாள் மருத்துவ மனையில் இருந்து உடல் நிலை தேறி வந்திருக்கிறாள்’ என சுந்தரேசன் கூறினார்.

அப்பாவையும் அம்மாவையும் அடிக்குமளவுக்கு ஓர் பெண்ணுக்கு எப்படி வெறி பிடித்தது? எங்கிருந்து தைரியம் வந்தது? இவற்றைத் தெரிந்து கொள்ள சுந்தரேசனின் வாழ்க்கைப் பின்னனியை தெரிந்து கொள்ள வேண்டியதாயிற்று.

சுந்தரேசன் 20 வருடங்களுக்கு முன்பு தான் பணியில் இருக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தனது இடது கையின் உள்ளங்கையை இழந்தார். அதைப் பார்த்து பரிதாபப் பட்ட அவரின் முறைப்பெண் ராணி தானாகவே தன் குடும்பத்தினரிடம் சுந்தரேசனை மணக்க விரும்புவதாக கூறி தன் முறைமாமனையே மணந்து கொண்டார். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மாமியார்-மருமகள் தகராறு தொடங்கிவிட்டது. சுந்தரேசன் மிகுந்த கண்டிப்புக்காரர். தன் மனைவியை அடக்கி வைத்திருக்கிறார். இதற்கிடையில் இரண்டாமாண்டில் ராணிக்கு மின்சார வாரியத்தில் பொறியாளராக அரசு வேலை கிடைத்து பணிக்குச் செல்ல ஆரம்பித்து விட்டார். அதுமுதல் கணவன் – மனைவி தகராறு தீவிரமாகிவிட்டது. குழந்தையின் முன்பே சண்டை தொடங்கி நடக்கும். இதுபோன்ற தகராறுகள் இவர்களின் மகள் ஒரு வயதாக இருக்கும் போது இருந்து நடந்து வருகிறது. தொடர்ந்து தன் பெற்றோரின் தகராறுகளை பார்த்துப் பார்த்து மனமுடைந்து போன மகள் ஒரு கட்டத்தில் இவர்களின் சண்டையை கண்டு கொள்வதில்லை. பெற்றோரை கண்டு எதற்கும் பயப்படுவதில்லை. அவர்களை மதிப்பதுமில்லை. சுந்தரேசன் மிகவும் ஒழுங்கை விரும்பும் ஆசாமி. சாப்பிடும் போது கூட சுத்தமாக நேர்த்தியாக சாப்பிட வேண்டும். குழந்தை எனக் கூட பாராமல் தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருப்பார். அதனால் இவர் மகள் பெற்றோருடன் அமர்ந்து உணவருந்துவது கூட கிடையாது. தனியாகவே அமர்ந்து சாப்பிட்டுக் கொள்வாள்.

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் உறவு நிலை சரியில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அதைப் பற்றி சற்றே கூறுங்கள் என வினவினேன்.

எனக்கும் என் மனைவிக்கும் திருமணம் ஆன சில மாதங்களிலேயே பிரச்ச்சனை தொடங்கிவிட்டது. அவள் அடிக்கடி என் தாய்தந்தையரைப் பற்றி ஏதாவது குறை கூறுவாள். உடனே பிரச்சனை தொடங்கிவிடும். பிரச்சனை முற்றினால் நான் அவளை அடித்து விடுவேன். அவள் எப்போதும் அடங்கிப் போய் விடுவாள். ஆனால் 6 மாதத்திற்கு முன்பு ஒருநாள் சண்டை வந்தபோது கோபம் கொண்ட என் மனைவி என் கன்னத்தில் அறைந்து விட்டாள். ‘உன்னால் என்னை என்ன செய்ய முடியும்?’ என கேட்டு என்னை அடித்து அவமானப் படுத்திவிட்டாள். இத்தனையும் எனது மகள் முன்பே நடந்தது.

ஆயினும் எனக்கு ஏற்பட்ட அவமானம் பற்றி நான் கவலைப் படவில்லை. என் மகள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறாள்? அவளை திருத்த நான் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்தால் நன்றாயிருக்கும் என சுந்தரேசன் கூறினார்.

குடும்பத் தலைவர் என்ற முறையில் உங்கள் மனைவி மற்றும் மகள் மீது இருக்க வேண்டிய கட்டுப்பாடு சுத்தமாக இல்லாமல் போய்விட்டது. எனவே தான் இது போன்றவைகளெல்லாம் நடந்து இருக்கின்றன. எதற்கும் உங்கள் மனைவியும் ஒருமுறை ஆலோசனை பெற வந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினேன். அவர் மனைவியும் ஆலோசனை பெற தயாராக இருப்பதாகவும் ஒரு சில நாட்களிலேயே அவரை அழைத்து வருவதாகவும் கூறி விட்டுச் சென்றார் சுந்தரேசன்.

அவர் சென்ற நான்காவது நாளிலேயே சுந்தரேசனின் மனைவியும் ஆலோசனை மையத்திற்கு வந்தார். தன் கணவனை தானே விரும்பி திருமணம் செய்து கொண்டதையும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மாமியார் – மருமகள் பிரச்சனைகளையும் சொன்னார். தனக்கும் தன் கணவருக்கும் எவ்வித பிரச்சனையும் எப்போதும் இருந்ததில்லை எனவும், பிறரின் பிரச்சனைகளே தங்கள் பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்தன என்பதையும் கூறினார். அவர் வேலைக்கு சென்றவுடன் பிரச்சனை இன்னும் அதிகமாகி இருக்கிறது. வீட்டு வேலைகள், அலுவலக் பணி, குழந்தையைக் கவனித்தல் என பணிபழு ராணியின் மனதில் அழுத்தத்தை உண்டாக்கி கணவன் மனைவி இடையே கடும் பிளவை ஏற்படுத்தி விட்டது. தன் கணவர் மிகவும் நல்லவர், ஆனால் மனைவி மற்றும் மகளிடம் எப்படி பழக வேண்டும் என்ற முதிர்ச்சி அவரிடம் இல்லை என்பது ராணியின் கருத்து. தான் தன் கணவரை அடித்தது கடுமையான ஆத்திரத்தின் காரணமாகத் தான் என்பதையும் அதற்காக தான் தற்போது மிகவும் வருந்திக் கொண்டிருப்பதாகவும் வெளிப்படையாக தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் இருவரையும் ஒருசேர அமரவைத்து பிரச்சனைக்கான காரணங்களை விளக்கினேன். கணவன் – மனைவி இருவரும் எப்போதும் தகராறு செய்து கொண்டே இருந்தது வளரும் குழந்தைக்கு கடுமையான மன அழுத்தத்தை உண்டாக்கி விட்டது. பொதுவாக மகள் தன் தாயைப் பார்த்தே தன் நடத்தைகளை ஏற்படுத்திக் கொள்கிறாள். ராணி தன் கணவனை மதிக்காமல் நடந்து கொண்டதும் அவரை அடித்ததும், சுந்தரேசன் தன் மனைவியை மதிக்காமல் அவரை அடித்து அடக்கியதும் அவர் பெண்ணுக்கு மாதிரியாக அமைந்து விட்டது. உளவியலில் Organ Inferiority அல்லது உறுப்பு குறைபாட்டினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை என்ற ஒன்று உண்டு. தனது உடலில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளாமல் சாதாரண மனிதர்களை விட சற்று அதிகமாகவே உடல் குறைபாடுள்ளவர்கள் செயல்படுவார்கள். அதனால் தான் கண் தெரியாதவர்கள் கண் பார்வை உள்ளவர்களை விட மிக தெளிவாக நடமாடுவர். பார்வை இன்றியும் தன்னால் பிறரைவிட நன்றாக செயல்பட முடியும் என நிரூபிப்பர். சுந்தரேசனுக்கு ஏற்பட்டிருப்பதும் அதைப் போன்ற organ inferiority தான்.

தனக்கு கையில் ஊணம் என்பதை அவர் ஏற்றுக் கொள்ளாமல் கையின்றியே பல வேலைகளை செய்து வந்திருக்கிறார். ஒரு கை கொண்டு பைக் ஓட்டுவார். ஒற்றைக் கையுடன் மனைவியை நையப் புடைப்பார். தன் ஆழ்மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மையை மறைக்க வேண்டியும், தான் இரு கையுள்ளாவர்களுக்கு எவ்விதத்திலும் குறைந்தவன் அல்ல என நிரூபிப்பதற்காகவுமே தன் மனைவி மற்றும் மகளிடம் முரட்டுத் தனமாக நடந்து கொண்டுள்ளார். அதைப் போன்று வீட்டில் இருந்த வரை அடங்கி அடங்கிப் போன ராணிக்கும் வேலைக்குப் போனவுடன் நான்கு பேரைப் பார்த்து மனப் பொறுமல் ஆரம்பித்து விட்டது. எல்லா ஆண்களும் எப்படி அன்பாக இருக்கிறார்கள், ஏன் என் கணவர் மட்டும் இப்படி இருக்கிறார் என்ற எண்ணம் மிதமிஞ்சிய கோபத்தை அவர் மனதில் கொழுந்து விட்டு எரியச் செய்திருக்கிறது. வீட்டில் மனைவியாக, தாயாக தன் கடமையை செய்ய வேண்டும், அலுவலக் பணிச்சுமை, சமீபத்தில் செய்து கொண்ட கர்ப்பப்பை அறுவை சிகிச்சையினால் ஏற்பட்ட மன உளைச்சல் என எல்லாமுமாக சேர்ந்து ஒருநாள் பொங்கிப் புடைத்தெடுத்திருக்கிறது. சமயம் கிடைத்தவுடன் தன் கணவனை அடித்து துவம்சம் செய்து விட்டார் ராணி. இவ்வாறெல்லாம் மனப்பிரச்சனைகளின் காரணமாக பெற்றோர் நடந்து கொண்டது அவர்களின் மகள் மனதில் தந்தை, தாய் இருவர் மீதும் மரியாதை இல்லாமல் செய்துவிட்டது.

வீடு மகிழ்ச்சியாக இல்லாத போது பள்ளிக்கூடமும், நண்பர்களும், அந்நண்பர்களை தொடர்பு கொள்ள உதவும் செல்போனும் மகிழ்ச்சி தரக்கூடியவையாக மாறி விட்டன. இதேநிலை தொடர்ந்தால் அவர்களின் மகள் காதல் திருமணம் புரியவும் வாய்ப்புள்ளது. ஏனெனில் வீட்டில் அன்பான அப்பா இல்லாத சூழ்நிலையில் வளரும் இளம்பெண்களே காதல் திருமணம் செய்துகொள்ளும் வாய்ப்பு அதிகம். நல்ல வேளையாக சுதாரித்துக் கொண்ட சுந்தரேசன் தற்போது உளவியல் ஆலோசனை நாடி வந்து விட்டார். ஆயினும் தற்போதைய நிலையில் சுந்தரேசனின் மகளுக்கு ஆலோசனை கூறுவது இயலாது. கணவன் மனைவி இருவரும் தங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, அடிதடி தகராறுகளை மறந்து ஒருவரை ஒருவர் மதித்து வீட்டில் நடந்து கொள்ள வேண்டும். நிச்சயமாக அந்நடத்தை மகளின் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு சிறிது காலம் பிடிக்கலாம். அதன் பின் மகளும் தன் தாய்-தந்தையரை மதிக்கத் தொடங்குவார். அப்போது தான் ஆலோசனை கூற சரியான நேரம் என கூறினேன்.

இருவரும் ஏற்றுக் கொண்டு நடப்பதாக உறுதி அளித்துவிட்டு சென்றிருக்கிறார்கள். மூன்று முதல் ஆறு மாத காலம் சரியான நடத்தையின் மூலம் தன் மகளின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த இயலும். அதுவரை இவர்களின் மகள் கையில் உள்ள செல்போனை யாராலும் பிடுங்க இயலாது. பிடுங்காமல் இருப்பதும் நல்லது.

 

வாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

படைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.