இதழ்: 13     பங்குனி -2014 (March)
   
 
  உள்ளடக்கம்
 
மராத்தி சினிமா - ஷாந்தா கோகலே

--------------------------------

கமல்ஹாசன் - நேர்காணல் - ஆர்.விஜய சங்கர் மற்றும் ஆர்.இளங்கோவன்

--------------------------------
தமிழ்ஸ்டூடியோவின் புகைப்படக்கண்காட்சி - தினேஷ் குமார்
--------------------------------
இனி அவன் : பின் முள்ளிவாய்க்கால் திரைப்படம் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
தமிழ் ஸ்டுடியோ ஆறாம் ஆண்டு தொடக்க விழா - தினேஷ் குமார்
--------------------------------
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 2 - S. ஆனந்த்
--------------------------------
கல்வித்துறை ஆய்வுகளும் ஜனரஞ்ஜக சினிமாவும் - யமுனா ராஜேந்திரன்
--------------------------------
young and beautiful - தமிழில்: தினேஷ் குமார்
--------------------------------
பாலு மஹேந்திரா சில ஞாபகக் குறிப்புகள் - ரவிசுப்பிரமணியன்
 
   

   

 

 

கல்வித்துறை ஆய்வுகளும் ஜனரஞ்ஜக சினிமாவும்

- யமுனா ராஜேந்திரன்

முகநூலில் யதேச்சையாக ஈழ இலக்கியமும் போராட்டங்களும் குறித்த ராஜன் குறையின் கருத்துக்களுக்கு நான் ஒரு அபிப்பிராயம் சொல்லத் துவங்கி அது ஜனரஞ்ஜக சினிமா தொடர்பான கருத்து விவாதமாக மாறியது. ராஜன் குறை 'காட்சிப் பிழை' பிப்ரவரி இதழில் எழுதிய 'ஜில்லாவும் வீரமும்' கட்டுரையையொட்டி கல்வித்துறை சார்ந்தவர்களான ராஜன் குறை, எம்.டி.முத்துக்குமாரசாமி, ரவி சீனிவாஸ் இவர்களோடு சுபகுணராஜன் போன்றவர்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். ராஜன் குறை, ஜனரஞ்ஜக சினிமா குறித்த ஆய்வுகளை எம்.எஸ்.எஸ்.பாண்டியன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, சுந்தர் காளி, சுபகுணராஜன் மற்றும் தான் போன்றவர்கள் செய்து வந்ததாகக் குறிப்பிட்டார். மறுபக்கத்தில் ஜனரஞ்ஜக சினிமா குறித்த ஆய்வுகளில் அதனது முக்கியத்துவத்தை மறுப்பவர்களாக மார்க்சியர்களும், ரசனை அழகியல்வாதிகளும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ராஜன் குறை ஆய்வாளர்கள் எனக் குறிப்பிடப்படுபவர்களின் பெரும்பாலான எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருப்பதாகவும் தமிழில் இவர்களில் ஒரு சிலரது எழுத்துக்கள் துப்புரவாகவே இல்லை என்றும், பிறரது ஒரு சில கட்டுரைகளே தமிழில் உள்ளன எனவும் நான் குறிப்பிட்டேன். மேலாக, தமிழ் ஜனரஞ்ஜக சினிமா குறித்த ஆக்கபூர்வமான ஆய்வுகளை இவர்கள் மட்டுமே மேற்கொண்டு வருவதான ராஜன் குறையின் கோருதலையும் நான் மறுதலித்தேன். இதனது தொடர்ச்சியாக ஜனரஞ்ஜக சினிமா குறித்த கல்வித்துறை ஆய்வுகளும் பரந்துபட்ட சமூகத்தில் அவற்றின் பொருத்தப்பாடும் குறித்து எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவை மட்டுமல்ல பொதுவாக சினிமா எனும் தொழில்நுட்ப ஊடகத்தையே நாம் இருவிதங்களிலேயே அணுகமுடியும். சமவேளையில் அது கிளர்ச்சியூட்டும் தன்மையையும் கலைத்தன்மையையும் கொண்டிருக்கிறது. அதிபெரும்பான்மையான சினிமா கிளர்ச்சியூட்டும் தன்மையை மட்டுமே அதனது அறுதிப்பண்பாக நிலைநாட்ட முற்படுகிறது. சினிமா இதனையும் தாண்டி ஒரு கலை, அதனை உருவாக்குபவன் ஒரு படைப்பாளி, ஒரு எழுத்தாளன்போல, ஒரு ஓவியன்போல, ஒரு சிற்பியைப்போல, ஒரு இசைக்கலைஞன்போல திரைப்பட இயக்குனரும் ஓரு கலைஞன், அவன் உருவாக்குவதும் ஒரு கலைப் படைப்பு எனும் கோட்பாட்டை பிரெஞ்சு 'ஆச்சூர் அல்லது ஆசிரியர் சினிமா' கோட்பாடு முன்வைத்தது. இவ்வாறு திரைக்கலைஞன் மற்றும் திரைக்கலை என்பதற்கான பண்புகளையும் அது கண்டடைய முயன்றது.

இவ்வாறு முழு மொத்த சினிமாவையும் அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். திரும்பத் திரும்பச் சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் படங்களுக்கும், தனித்துவம் வாய்ந்த கலைப் படைப்புகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் வரையறுக்க வேண்டியிருந்தது. ஹிட்ச்காக், சத்யஜித் ரே, நிகலஸ் ரே, அகிரா குரசோவா, கிதராஸ் அலியா, கிளாபர் ரோச்சா போன்றவர்களை அவர்கள் ஆச்சூர் இயக்குனர்கள் என்றனர். அறுபது எழுபதுகளில் மாவோயிசத்தின் பாதிப்பினால் ஆச்சூர் என்பதனை அரசியல் கருத்தியல் என்பதன் அடிப்படையிலும் வரையறை செய்வது எனும் போக்கும் தோன்றியது. அரசியல் கடந்த ஆச்சூர், அரசியல் உள்ளடக்கம் கொண்ட ஆச்சூர் எனும் இரு சிந்தனைப் போக்குகள் இன்று வரையிலும் இந்த விமர்சனப் பார்வையில் இருந்து வருகிறது.

நாம் இங்கு குறிப்பாகப் புரிந்துகொள்ள வேண்டிய விடயம் ஒன்று உண்டு : 'ஆசிரியர் சினிமாக் கோட்பாட்டை' உருவாக்கிய ஆய்வாளர்களும் விமர்சகர்களும் கல்வித்துறை ஆய்வாளர்கள் அல்ல. அவர்கள் சினிமா விமர்சகர்கள், பத்திரிக்கையாளர்கள், பின்னாளில் ட்ரூபோ, கோதார்த் போன்று இவர்களில் இருந்து மகத்தான படைப்பாளிகளும் தோன்றினர். இவர்கள் விமர்சனத்திற்குப் பாவித்த மொழியும் கல்வித்துறைசார் மொழி இல்லை. ஆரம்ப சினிமா தொடர்பான கல்வித்துறைப் படிப்புகளையும் சினிமா தொடர்பான பல்கலைக் கழக கல்வித்துறை ஆய்வுகளையும் நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.

உலகில் முதன்முதலாக சினிமாவைக் கற்பிப்பதற்கான கல்லூரியை அக்டோபர் புரட்சியை அடுத்து 1919 ஆம் ஆண்டு லெனின் தலைமையிலான போல்ஷ்விக் அரசு துவங்கியது. கியூபா 1958 புரட்சியை அடுத்து திரைப்படக் கல்லூரியைக் கொண்டிருந்தது. இன்று பல்வேறு நாடுகள் திரைப்படக் கல்லூரிகளைப் கொண்டிருக்கின்றன. புனே திரைப்படக் கல்லூரியும் சென்னைத் திரைப்படக் கல்லூரியும் இத்தகையவைகள். திரைப்பட உருவாக்கம் தொடர்பான கல்வியே இவற்றில் கற்பிக்கப்படுகிறது. இன்று தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் திரைப்பட உருவாக்கப் படிப்புத்துறை இல்லாத கல்லூரிகளே இல்லை எனலாம். ஆனாலும் கூட திரைப்படம் குறித்த குறிப்பான, விமர்சனபூர்வமான ஆய்வுகள் என்பது இந்தக் கல்லூரிகளில் முன்னெடுக்கப்படுவது இல்லை.

இச்சூழலில், ஜனரஞ்ஜக சினிமா தொடர்பான விமர்சனச் செயல்பாடுகள் அல்லது ஆய்வுகள் தமிழ்ச் சூழலில் நடக்கவே இல்லையா? ஆய்வுகள் என்பது கல்வித்துறை சார்ந்தவர்களால் செய்யப்படுபவை மட்டும்தானா? இது அடிப்படையாகக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. எனில், இன்று ஐரோப்பிய சினிமா ஆய்வுகளில் முக்கியமான எடுத்துக் காட்டுக்களை 'ஆசிரியர் சினிமா' சம்பந்தமான விவாதங்களை முன்னெடுத்தவர்களின் எழுத்துக்களையும் 'காஹியர் சினிமா' மற்றும் அதற்குப் பின் வந்த 'டிராபிக்' போன்ற சினிமா சஞ்சிகைகளையும்தான் தேடிப் போகிறார்களே ஏன்? இவர்கள் கல்வித்துறை சார்ந்த ஆய்வாளர்கள் இல்லையே, இது எப்படி நேர்கிறது? ராஜன் குறை 'அறிவுலகத்தில்' நேர்ந்த தரவுகளை முன்வைத்ததாக தனது பூர்வாங்கக் கட்டுரையில் சொல்கிறார். இந்த அணுகுறையையே நான் மறுக்கிறேன்.

ஜனரஞ்ஜக சினிமா தொடர்பான ஆய்வுகள் என்பது, 'திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதில் திரைப்படத்தின் பங்கு' எனத்துவங்கி ஆய்வு செய்த அமெரிக்கக் கல்வித்துறை ஆய்வாளர்கள் மற்றும் அதனது அழகியல் அடிப்படைகளை உருவாக்கியதாக ராஜன் குறை முன்வைக்கும் எம்.எஸ்.எஸ்.பாண்டியன், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, சுந்தர் காளி, ராஜன்குறை போன்றவர்களால் மட்டும் முன்னெடுக்கப்பட்டது அல்ல. ஜனரஞ்ஜக சினிமா தொடர்பான ஆய்வு மதிப்புக் கொண்ட எழுத்துக்களை ராஜன் குறை சுட்டுகிறவர்கள் அல்லாத ஏராளமானவர்கள் தமிழ் மொழியிலேயே விட்டுச் சென்றிருக்கிறார்கள். தியோடர் பாஸ்கரன் தமிழ் சினிமா வரலாற்றை எழுதியது போலவே 'ஜனசக்தி' பத்திரிக்கையின் எழுத்தாளரான தோழர்.அறந்தை நாராயணன் 'தமிழ் சினிமாவின் கதை' என்ற மகத்தான நூலை எழுதியிருக்கிறார். 'பொம்மை', 'பேசும் படம்', 'கல்பனா' போன்ற திரைப்பட சஞ்சிகைகள் ஜனரஞ்ஜக சினிமா ஆய்வுக்கு ஆவணப்படுத்தலுக்கு மாபெரும் பங்காற்றியிருக்கின்றன. அ.ராமசாமி, தியோடர் பாஸ்கரன், விட்டல்ராவ், திருநாவுக்கரசு, சொர்ணவேல், அம்ஷன் குமார், பசுமைக்குமார், விஸ்வாமித்திரன், ஆர்.சிவக்குமார், கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிற யமுனா ராஜேந்திரன் என பலர் ஜனரஞ்ஜக தமிழ் சினிமாவைக் குறித்து 'அக்கறையுடன்' எழுதிக் குவித்திருக்கிறார்கள்.

ஆக, தமி;ழ் வெகுஜன சினிமா ஆய்வுகளும் ஆய்வாளர்களும் குறித்துப் புரிந்து கொள்ளவே நாம் ராஜன் குறை பட்டியலிடுபவர்களுக்கு அப்பால் வெகுதூரம் செல்லவேண்டியிருக்கிறது. ஜனரஞ்ஜக தமிழ் சினிமா குறித்த 'அறிவுலகம்' என்பது இவர்களும் உள்ளிட்டதுதான். இங்கு இன்னுமொரு முக்கியான விஷயத்தையும் பதிவு செய்து விடுவோம் : ஆசிரியர் சினிமா கோட்பாட்டாளர்களும் அவர்களது 'காஹியர் சினிமா'வும், 'டிராபிக்' சஞ்சிகையும் ஒரு வகையில் 'அருவமாக்கப்பட்ட' கல்வித்துறை ஆய்வுகளுக்குச் சவாலாகவே இருந்தார்கள்/இருந்தன.

இங்கு, கல்வித்துறைசார் சினிமா ஆய்வுகளின் நேர்மறை, எதிர்மறைப் பண்புகள் தொடர்பான ஒரு புரிதலுக்கு வருவது பொருத்தமாக இருக்கும் : ஓரு குறிப்பிட்ட சினிமாவின வரலாறு, அதில் நேர்ந்த படிநிலை மாற்றங்கள், நிராகரிக்கப்பபட்ட படைப்பாளிகள் மற்றும் படைப்புக்களைத் தேடிக் கண்டெடுத்தது, ஆவணக் காப்பகம் உருவாக்குதல், சினிமாவின் பொருளியல் சமூகப் பரிமாணங்களை ஆய்வு செய்தல் போன்றன இதனது பங்களிப்புகள். இதனது எதிர்றைப் பக்கங்கள் : நடைமுறை சினிமாவுக்கு வெளியில் புதிதுபுதிதான அருவமான கருத்தாக்கங்களை உருவாக்கி, படைப்பு முயற்சிகளில் ஈடுபட்டோர், ஜனரஞ்ஜக சினிமா விமர்சகர்கள், ஆர்வலர்கள் போன்றவர்களை உள்வாங்காது தனியொரு புலத்தை உருவாக்கிக் கொண்டு, மானுட வாழ்வுக்கு இதனால் என்ன பயன் என்கிற கேள்விகளைப் புறக்கணித்துச் செல்வது என்று சொல்லலாம். ராஜன் குறை முன்வைக்கும் தரவுகளில் இருந்து சொல்வதானால், ஜனரஞ்ஜக சினிமா குறித்து ராஜன் குறை முன்வைக்கும் ஆய்வாளர்களின் பெரும்பாலுமான எழுத்துக்கள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன என்பது தமிழ் மனத்திலிருந்து இவர்கள் எத்துனை தூரம் அந்நியமாக இருக்கிறார்கள் என்பதற்கான சான்றாக இருக்கிறது. குறிப்பாக எம்.ஜி.ஆர். குறித்து எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதிய புத்தகம் ஆங்கிலத்தில் வெளியாகி ஏறக்குறைய கால்நூற்றாண்டின் பின்னும் தமிழில் வெளியாகவில்லை!

ரவி சீனிவாஸ் இந்திய, தமிழ் வெகுஜன சினிமா தொடர்பான ஆங்கில ஆய்வுகள் தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலுக்குத் தெரியாது என்கிறார். நிலவும் தமிழ் ஜனரஞ்ஜக சினிமா தொடர்பான இவர்களின் வெறுப்புக் காரணம் திராவிட அரசியலின் மீதும், திராவிட சினிமாவின் மீதும் இவர்கள் கொண்டிருந்த வெறுப்பு என்கிறார். இன்று இந்த ஆய்வாளர்கள் ஜனரஞ்ஜக சினிமாவை வெறுப்பதில்லை என்கிறார். பிரச்சினை அதுவல்ல. ரவி சீனிவாசும் ராஜன் குறையும் குறிப்பிடுகிற பெரும்பாலுமான ஜனரஞ்ஜக சினிமா ஆய்வுகளை ஆங்கிலத்திலேயே நான் படித்திருக்கிறேன். அசிஸ் ராஜாதிக்ஸ்யா, அசிஸ் நாந்தி, எம்.எஸ்.எஸ்.பாண்டியன். செல்வராஜ் வேலாயுதம் போன்றவர்களின் பார்வைகள் ஒரு படித்தானவையல்ல. அவர்களிடம் சார்புநிலைகளும் வேறுபட்ட பார்வைகளும் உண்டு. குறிப்பாக, எம்.ஜி.ராமச்சந்திரன் தொடர்பான கா.சிவத்தம்பி, எம்.எஸ்.எஸ்.பாண்டியன், சுந்தர் காளி போன்றவர்களின் கருத்தை தமிழ் சினிமாவும் வரலாறும் அறிந்தவன் எனும் அளவில் என்னால் ஏற்க முடியாது. தியோடர் பாஸ்கரனின் 'தி ஐ ஆப் த செர்பன்ட்' நூலுக்கு 'கனவு' இதழில் நான் எழுதிய விமர்சனத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் தொடர்பாக ஒரு அத்தியாயத்தைக் கொணராமல் தமிழ் சினிமா வரலாற்றாய்வு முற்றப்பெறாது என்று எழுதினேன்.

தமிழ் ஜனரஞ்ஜக சினிமா ஆய்வு அல்லது விமர்சனத்தின் மையமான பிரச்சினை இதுதான் : கல்வித்துறைசார் ஆய்வாளர்கள் பகுப்பாய்வு எனும் கட்டத்தில் முன்வைப்பவை தமிழ் சினிமா வரலாறு தொடர்பான பதிவுகள் எனும் அளவில் முக்கியமானவை என்று ஏற்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை; ஆனால், அவர்கள் 'தொகுத்துக் கொண்ட வகையில் எழுதும் முடிவுகளுக்கும்', ஏற்கனவே ஜனரஞ்ஜக சினிமா குறித்து எழுதிக் கொண்டிருக்கும் குமுதம், ஆனந்தவிகடன், தினந்தந்தி, தினகரன், ரசிகர் மன்ற இதழ்கள், தற்கொலை செய்துகொள்ளும் அப்பாவி ரசிகர்கள், திரைப்படக் கம்பெனிகளின் முழுப்பக்க விளம்பரங்கள் போன்றவற்றுக்கும், தமிழகத் திரைப்பட முதலாளிகளின் பார்வைக்கும், தமிழ் 'ஜனரஞ்ஜக சினிமாவை அணுகுவதில் என்ன வித்தியாசம் இருக்கிறது?' என்பதுதான் பிரச்சினை.

தெலூசும், கோதார்த்தும் கடைசியில் 'பெண்சிங்கம்' திரைப்படம் எடுத்த கலைஞர் கருணாநிதியையும், 'ஜென்டில்மேன்' எடுத்த ஷங்கரையும் 'ஆச்சூர்' என்று மகுடம் சூட்டுவதற்குத்தான் பயன்படுவார்கள் எனில், என்னைப் போன்றவர்கள் அதனைக் கடுமையாக மறுதலிப்போம்.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </