இதழ்: 15     வைகாசி - 2014 (May)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 10 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 9 - ராஜேஷ்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 1 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------

ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் 3 - பால் க்ரானின் - தமிழில்: ஆனந்த், கோணங்கள்

--------------------------------
விருப்பம் வேலையானால் 2 – பிலிம்நியூஸ்ஆனந்தன் - தினேஷ் குமார்

--------------------------------

பாலுமகேந்திரா நினைவுக்கூட்டம் - 2 - தினேஷ் குமார்

--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 1 - பி.கே. நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 1 - என்.சி.நாயுடு
--------------------------------
சந்திரபாபு - சித்ராலயா
--------------------------------
 
   
   

 

 

ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - 3

- பால் க்ரானின் :: தமிழில்: எஸ்.ஆனந்த்


உங்கள் திரைப்படங்கள் வழியே கதை சொல்லலைத் தாண்டி பார்வையாளரைச் சென்றடைய வேண்டும் என நீங்கள் விரும்பும் கொள்கைகள், கோட்பாடுகள் பற்றிச் சொல்ல முடியுமா ?

திரைப்படத்தில் கதை சொல்லல் ஒன்றே போதும். திரைக்கதையைக் கொள்கை, கோட்பாடுகளைச் சார்ந்த ஒன்றாக நான் அமைப்பதில்லை. கதைக்கான அடிப்படை விஷயங்கள் மனதினுள் ஏற்கெனவே இருப்பவைதான். மனதில் மெல்ல வளர்ந்து முழுக்கதையாக உருவாகிவிடும். எழுத்தில் அதை வடிப்பதுதான் நான் செய்வது. திரைக்கதையை விரைவாக எழுதி முடித்துவிடுவேன். தட்டச்சு இயந்திரம் அல்லது கணினி உதவி கொண்டு திரைக்கதையை எழுதி முடிப்பதற்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மேல் எடுத்துக்கொள்வதில்லை.

தனிப்பட்ட கொள்கை, கோட்பாடு எதையும் நான் பின்பற்றுவதில்லை. உலகை என்னுடைய பார்வையில் காண்பதின் வெளிப்பாடாக எனது திரைப்படங்கள் அமைகின்றன. இதனால் திரைப்படங்களைக் கட்டுடைத்து அலசுபவர்களுக்கு எனது படைப்புகள் பல நேரங்களில் சிரமத்தைக் கொடுப்பவையாக அமைந்து விடுகின்றன. ஜோசப் கோன்ராட், காஃப்கா, கோயா போன்ற மேதைகள் எந்தக் கோட்பாடுகளைப் பின்பற்றித் தங்கள் படைப்புகளை உருவாக்கினார்கள் ?

இன்றைய கலாச்சாரத்தில் காணப்படும் படிமங்களின் தரப் பற்றாக்குறை பற்றி அடிக்கடி பேசியிருக்கிறேன். நம்மைச் சுற்றியுள்ள படிமங்கள் படிப்படியாக வலிமையிழந்துகொண்டிருப்பதாகக் கருதுகிறேன். பிம்பங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு சக்தியிழந்தவையாக ஆகிவிட்டன, தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும், பெரிய அளவு உருவப்படங்களிலும் கிராண்ட் கன்யான் போன்ற இயறகைக் காட்சிகளையோ, பிற காட்சிகளையோ மீண்டும் மீண்டும் காணும்போது அவை பிம்பங்களை அபாயகரமான ஒரு நிலைக்கு இட்டுச் சென்றுகொண்டிருப்பதை உணர்கிறேன். நமது பார்வையைக் கெடுப்பவற்றில் மிகவும் அபாயகரமானதாக தொலைக்காட்சியைக் கருதுகிறேன். கைக்குண்டுகளை வீசித் தொலைக்காட்சி நிலையங்களைத் தகர்த்து அழிக்காமல் விட்டுவிட்ட குற்றத்திற்காக நம் பேரக் குழந்தைகள் பின்னாளில் நம்மீது குற்றம் சாட்டப்போவது நிச்சயம். பார்வையாளரின் கற்பனை வளத்தைத் தொலைக்காட்சி அதன் உயிரற்ற பிம்பங்களைக் கொண்டு கொன்றுவிடுகிறது.

பிம்பங்களின் உருவாக்கம் நமக்குள் நிறைவானதாக இல்லாவிடில் கூடிய விரைவில் டினோசார்கள் அடியோடு அழிந்தது போல அழிந்துவிடுவோம். இன்றும் மாற்றங்களின்றி துவக்க காலத்தில் இருந்தது போன்றே இயேசு கிறிஸ்துவின் படங்களை வரைந்துகொண்டிருக்கிறார்கள். கிறித்துவம் நீர்த்துப் பழையதாக ஆகிவிட்டது என்பதற்கு இது ஒன்றே சாட்சியம். இன்றைய கலாச்சாரத்தையும், நமது ஆழ்மன உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் பிம்பங்கள் உருவாகவேண்டியது அவசியம். அதனால்தான் எந்த இலக்கை நோக்கி எடுக்கப்பட்டவையாக இருந்தாலும், எத்தகைய கதைக் கருக்களைக் கொண்டிருந்தபோதிலும் முற்றிலும் புதிய முறையில் படிமங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் திரைப்படங்களை நான் அதிகமாக விரும்புகிறேன். புதிய படிமங்களைத் தேடி உருவாக்குவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. இருந்தும் இந்தக் கடினமான முயற்சியை மேற்கொள்ள சில படைப்பாளிகள் எப்போதும் தயாராக இருக்கின்றனர்.

முற்றிலும் புதிய, தெளிவான பிம்பங்களைப் பதிவு செய்வதற்கு எங்கு செல்லவேண்டுமென்றாலும் தயாராக இருக்கிறேன். ஒருமுறை நாசாவின் விண்வெளிப் பயணத்தில் சேர்ந்துகொள்ள விண்ணப்பிக்கலாம் என்றிருந்தேன். ஒரு காமெராவுடன் அப்படிப் பயணம் செய்யும்போது புதிய அற்புதமான பிம்பங்களைப் பதிவு செய்யலாம். இன்றுவரை விண்வெளிப்பயணம் எனக்குக் கிட்டாத ஒன்றாகவே இருக்கிறது.

பல வருடங்களாக வெளிவந்துள்ள உஙகள் படைப்புகளில் உள்ளோட்டமாகக் காணப்படும் அடிப்படைக் கருக்கள்(themes) என விமரிசகர்கள் சுட்டிக்காட்டுபவை பற்றி உங்கள் கருத்து என்ன ?

ஒரு திரைக்கதையை எழுதும்போது குறிப்பிட்ட அடிப்படைக் கருவை மனதில் கொண்டு எழுதுவதில்லை. கதையைக் கதையாகச் சொல்வதே நான் செய்வது. சில நேரங்களில் முந்தைய படத்திற்குத் தொடர்புடைய கருத்துகள் இப்போது எழுதும் திரைக்கதையில் கலந்துவிடலாம். இவற்றையெல்லாம் முன்கூட்டித் திட்டமிட்டுக்கொள்வதில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால் கதையின் அடிப்படைக் கருக்களைப் பற்றி நான் கவலைப்படுவதே இல்லை. சில விமரிசகர்கள் எனது திரைப்படங்களில் தொடர்ந்து காணப்படும் அடிப்படைக் கருக்கள் எனச் சிலவற்றைச் சொல்லியிருக்கலாம். குறிப்பிட்ட முறையில் திரைப்படங்களை அணுகவும் எழுதவும் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் கண்டறிந்ததாகக் குறிப்பிடுபவற்றைச் சரியென்றோ தவறென்றோ நான் சொல்வதில்லை. அவர்கள் அறிந்த முறையில் எனது படங்களை அணுகுகின்றனர். நான் என்னுடைய முறையில் எனது படைப்புகளை உருவாக்குகிறேன். ஒன்று மட்டும் நிச்சயம். எனது திரைப்படங்களை வழக்கமாகப் பார்ப்பவரால், அதுவரை பார்த்திராத எனது புதிய படைப்பு ஒன்றைப் பார்க்கும் போது, முதல் பத்து நிமிடங்களில் அது ஹெர்ஸாகின் படைப்பு என்று சொல்லிவிட முடியும்.
உங்களின் சில படைப்புகளாவது ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக இருக்கலாம் என நீங்கள் கருதலாம் அல்லவா?

என்னுடைய திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனும் உணர்வு எனக்கு எப்போதும் உண்டு. இருளிலிருந்து வெளிப்படும் அவர்களுக்கு நிழல்களோ, கடந்த காலங்களோ இல்லை. நாற்பது வருடங்களாக உருவாக்கியுள்ள அனைத்து படைப்புகளையும் எனது மன வெளிப்பாட்டின் மொத்தமான ஒரு பெரும் ஆக்கத்தின் பகுதிகளாகவே கருதுகிறேன். இப்பெருங்கதையின் பாத்திரங்கள் தங்களை வெளிப்படுத்த எந்த மொழியுமின்றி, நம்பிகையிழந்து தனியாகப் போராடுபவர்கள். அதனால் பாதிப்புகளுக்கு உள்ளாகும் அவர்களின் போராட்டங்களில் வெற்றிக்கான வாய்ப்புகளே இல்லை. காயங்களுடன் இருந்தும் எவ்வித உதவியுமற்ற நிலையில் சலிப்பின்றி தாங்களாகவே போராடிக்கொண்டிருக்கின்றனர்.

என்னுடைய முக்கிய பாத்திரங்கள் அனைவரும் விளிம்பு நிலையில் வாழும் அந்நியர்களே. இருந்தும் காஸ்ப்பர் ஹவுசர் போன்ற பாத்திரத்தை அவ்வாறு வகைப்படுத்துவதும் சிரமம். என்னை ஒரு முக்கியமற்ற விசித்திரமான இயக்குநர் எனச் சொல்வார்கள். என் திரைப்படங்களைக் காணும்போது அவை எவ்வகையிலும் விசித்திரமானவை அல்ல என்பதை உணருவீர்கள். மூன்றடி தள்ளி அமர்ந்திருக்கும் உங்களால் விசித்திரமாக என்னிடம் எதையாவது காண முடிகிறதா? என்னுடைய பாத்திரங்களும் எவ்வகையிலும் விசித்திரமானவர்கள் அல்ல.

கதாபாத்திரங்களுடன் உங்களை எந்த அளவு நெருக்கமாக உணர்கிறீர்கள்?

இந்தப் பாத்திரங்கள் மீது எனக்கிருக்கும் அனுதாபத்தைப் பார்த்து, நானே இப்பாத்திரங்களில் நடித்திருக்க வேண்டும் என நண்பர் ஒருவர் எப்போதும் விளையாட்டாகக் குறிப்பிடுவதுண்டு. என்னால் நன்றாக நடிக்க முடியும். அவசியமிருந்திருந்தால் எனது படங்களின் முக்கிய பாத்திரங்களில் நான் நடித்தும் இருந்திருக்கலாம். என் படங்களில் முக்கிய பாத்திரங்களாக பெண்களைக் குறைவாகவே பயன்படுத்தியிருப்பது ஏன் என என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கான விடையாகவும் இதைக் கொள்ளலாம். ஏனென்றால் பெண் வேடத்தில் என்னால் நடிக்க முடியாது. எனது படங்களின் முதன்மைக் கதாபாத்திரங்கள் வழியே என் வாழ்வின் பகுதிகள் வெளிப்படுகின்றன எனலாம்.
எனது அனுதாபத்திற்குளானவர், எனக்கு முக்கியமாகப்படுபவர் பற்றி மட்டுமே என்னால் திரைப்படமோ ஆவணப்படமோ எடுக்க முடியும். என்னுடைய திரைப்படங்களின் முக்கிய பாத்திரங்கள் அனைவரும் எனது வாழ்க்கையை இனம் காட்டுபவர்களே. இவர்களுக்கும் எனக்கும் ஏதோ ஒரு வகை தொடர்பு இருக்கிறது. நான் ஒரு குறிப்பிட்ட தத்துவப் பார்வையையோ, சமுதாயக் கட்டமைப்பையோ கொண்டு கதைகளைச் சொல்லும் அறிவாளி அல்ல. திரைப்படங்கள் நேராகப் பார்க்கப்பட வேண்டும். திரைப்படக்கலை அறிவாளிகளுக்கானதல்ல; பாமர மக்களுக்கானது. நானும் பாமரன் தான்; புத்தகங்களை அதிகமாகப் படிப்பவனோ, தத்துவார்த்தமான சிந்தனைகளை மேற்கொள்பவனோ அல்ல. தத்துவ சிந்தனைகளை விட அசலான நேரடி வாழ்க்கை எனக்கு முக்கியமானதாகப் படுகிறது.

கண்கள் குருடான, காது கேட்காத ஐம்பத்து ஆறு வயது பெண்மணி ஃபினி ஸ்ட்ராபிங்கர் பற்றி நீங்கள் எடுத்துள்ள Land of Silence and Darkness எனக்கு மிகவும் பிடித்த படம். திரையிடப்படும் ஒவ்வொருமுறையும் பார்வையாளரை அப்படம் வெகுவாகப் பாதிப்பதைக் காண்கிறேன். அது ஏன் என்று சொல்ல முடியுமா?

இப்படம் ஒருவரின் தனிமையைப் பற்றிய மென்மையான உனர்வுகளையும், அவர் அனுபவிக்கும் தாங்கொண்ணா சிரமங்களையும் பார்வையாளரை உணரச் செய்யும் படைப்பு; தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சிறிய காரியத்தையும் பற்றியது. வாழ்வின் துயரமும் வலியும் தோலுரித்துக் காட்டப்படுகின்றன. பார்வையும், கேட்கும் திறனுமற்ற ஃபினி ஸ்ட்ராபிங்கரைச் சந்தித்தது அதுவரை தனிமையை நான் நினைத்திராத அளவு என்னுள் உணரச் செய்தது. நமக்குக் கண்பார்வையும், கேட்கும் திறனும் இல்லையென்றால் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பதை இப்படம் பார்ப்பவர் ஒவ்வொருவரையும் உணரச் செய்யும். எனது திரைப்படம் Kaspar Hausar மனிதரின் இயலாமை பற்றிய மற்றொரு படைப்பு. மகிழ்ச்சியோ துக்கமோ தன் வாழ்க்கையை எவ்விதத்திலும் பாதிக்க ஸ்ட்ராபிங்கர் அனுமதிக்கவில்லை என நான் நம்புகிறேன். தனது வாழ்க்கை அர்த்தமுள்ளது எனபதை அவர் அறிந்திருந்தார். தன்னைப்போல் பார்க்க, கேட்க இயலாத பலரைச் சந்தித்து அவர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இப்படத்தின் முக்கியமான விஷயம், இதை உருவாக்கிய குழு வெறும் மூன்று பேர்கள் மட்டுமே கொண்டது என்பது. இது படம் எடுக்க ஆர்வமுள்ளோருக்கு உந்துதலை அளிக்கும் அற்புதமான செய்தி அல்லவா?

ஆம். அத்துடன் படெமெடுக்கப் பயன்படுத்திய பிலிமின் நீளமும், திரையில் காணும் படத்தின் நீளமும் இரண்டுக்கு ஒன்று என்ற விகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒன்றரை மணி நேரம் ஓடும் இப்படம் மூன்றுமணி நேரத்தில் படமாக்கப்பட்டது. மொத்த செலவும் முப்பதினாயிரம் டாலர்களில் முடிந்துவிட்டது. மொத்தம் மூன்று பேர்கள் – நான், காமெராவிற்கு ஷ்மிட் ரெய்ட்வான், எடிட்டிங்கிற்கு ஜெலிங்காஸ். எங்களிடம் வேறு ஒன்றும் கிடையாது. இருந்தும் முப்பது வருடங்கள் கழிந்து இன்றும் பார்க்கப்படும் தரமுடைய ஒரு படம் உருவானது. இது இன்றைய படைப்பாளிகளுக்கான ஒரு பாடம் எனலாம். தற்போது அதிக விலையில்லாத டிஜிட்டல் காமெராக்கள், எடிட்டிங் உபகரணங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. உங்கள் படைப்பை நீங்கள்தான் உருவாக்க வேண்டும் எனும் வைராகியம் இருந்தாலே போதும். படத்தை உருவாக்குவதற்காகத் தேவைப்படும் நிதிக்காக நிறுவனங்களை நம்பிக் காத்திருக்காதீர்கள். மிகக் குறைவான செலவில் Land Of Silence and Darkness போன்ற படைப்புகளை உங்களால் உருவாக்க முடியும்.

இதுவரை எடுத்த படங்களிலேயே இப்படத்திற்காக மேற்கொண்ட உழைப்பு சிறப்பானது என என்னால் சொல்ல முடியும். படத்தின் நகர்வு மென்மையான முறையில் பாதிரங்களின் உணர்வுகளைப் பதிவு செய்வதாக, காமெராவின் சுவாசத்தை உணர்த்துவதாக அமையவேண்டும் என்பதால் காமெராவை முழுவதும் கைகளில் எடுத்துப் படமாக்கினோம். ட்ரைபாட் (Tripod) உபயோகிக்கவில்லை. ஜூம் லென்ஸ் (Zoom lens) பயன்படுத்தவில்லை: மாறாகக் கூட்டதிற்குள் காமெராவை எடுத்துச்சென்று சென்று அருகாமைக் காட்சிகளை ஒளிப்பதிவாளர் ஷ்மிட் ரெய்ட்வான் படமாக்கினார். முப்பத்து மூன்று வயதில் பார்வை இழந்த, காது கேட்காத ஃபெயிஷ்மான், ஆறு வருடங்கள் ஒரு மாட்டுத் தொழுவத்தில் வாழ்ந்தவர். இப்படத்தின் இறுதியில் அவர் நடந்து சென்று ஒரு மரத்தைத் தொடும் காட்சி வருகிறது. அந்த இரண்டு நிமிடக் காட்சி, அவர் வாழ்க்கையின் உணர்வுகளை மொத்தமாக வெளிப்படுத்துவதாக அமைந்துவிடும் மறக்கமுடியாத காட்சி. அக்காட்சிக்கு முன் ஓடும் ஒன்றரை மணி நேரப் படப் பகுதி அந்த இரண்டு நிமிடக்காட்சியைப் பார்வையாளர் சரியாக உணர்ந்து உள்வாங்கும்படியான மனநிலையை அடைவதற்கு உதவுகிறது.

ஃபினியை (ஸ்ட்ராபிங்கர்) எப்படிச் சந்தித்தீர்கள்?hmj

மேற்கு ஜெர்மனியில் தாலிடொமைட்டினால் (Thalidomide - குழந்தைகள் ஊனமுடன் பிறக்கக் காரணமான மருந்து) பாதிக்கப்பட்டோர் பற்றி ஒரு ஆவணப்படம் தயரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது Handicapped Future உருவானது. ஊனமுற்றோரைப்பற்றி மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குவதற்கு உதவும் வகையில் எடுக்கப்பட்ட படம். ஊனமுற்றோருக்கு மிகவும் பழமையான முறையிலான மருத்துவ வசதிகளே புழக்கத்தில் இருந்த நேரம். அவர்களுக்கான இடங்கள், நடைபாதைகள். லிப்ட் வசதிகள் எதுவும் அப்போது இல்லை. அவற்றிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திய முக்கியமான படைப்பு இப்படம். நேரடியான அரசியல் படைப்பு எனச் சொல்லலாம். ஜெர்மனியிலும், பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஊனமுற்றோருக்கான வசதிகள் அமுலுக்கு வர இம்முயற்சிகள் வழிவகுத்தன. இப்படம் இன்றைய பார்வையில் வழக்கமான ஆவனப்படங்களை ஒத்திருப்பதாகவே தோன்றும். எனக்குப் பிடித்த படைப்பு என்று இப்போது இதைச் சொல்ல முடியாது.
Land of Silence and Darknessக்கு Handicapped Future முன்னோடி. அப்போதைய மேற்கு ஜெர்மனி குடியரசுத் தலைவர் பேசிக்கொண்டிருந்த ஒரு கூட்டத்திற்குப் படமெடுக்கச் சென்றிருந்த போது அங்கு வந்திருந்த ஃபினியைக் கண்டேன். ஃபினிக்கு அவருக்கான தொடுமொழி வழியே பேச்சை ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார். குடியரசுத் தலைவரைப் படமெடுத்துக்கொண்டிருந்த ஷ்மிட் ரெய்ட்வானிடம் அதைக் காட்டிய மறு நிமிடம் அவர் காமெராவைத் திருப்பி ஃபெனியைப் படம் பிடிக்கத் தொடங்கினார்.

என்னுடன் பணியாற்றும் ஒளிப்பதிவாளர்கள் பற்றி இங்கு நான் சொல்லியாகவேண்டும். எனக்கும் அவர்களுக்கும் இடையே நெருக்கமான உடல் மொழித் தொடர்பு உண்டு. அடுத்தவர் உடலின் ஒவ்வொரு அசைவின் அர்த்தம் என்ன என்று உணர முடியும். தொட்டாலோ, மிக மெதுவாக ஒரு வார்த்தை சொன்னாலோ கூடப் போதும் , அது என்னவென்று உணர்ந்து மிகச் சரியாக காமெரா நகர்த்தப்படும்; கோணங்கள் மாற்றப்படும். ஒளிப்பதிவாளர் தாமஸ் மாச்சின் (Thomas Mauch) உடலுடன் இணைந்து ஒவ்வொரு அடியாக நடக்கமுடியும் அளவு அவருக்கும் எனக்கும் உணர்வுத் தொடர்பு உண்டு. படைப்பு உருவாக்கதின் போது அந்த அளவு ஒளிப்பதிவாளரின் உணர்வுகள் எனது உணர்வுகளுடன் இணைந்து இயங்கும்.

ஃபினி தன்னைப் படமெடுக்க எளிதில் சம்மதித்தாரா?

தன்னைப்போன்று உடல் ஊனமுற்றோரைப் பற்றிய விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக எடுக்கப்படும் படம் என்பதைப் புரிந்திருந்ததால் அவரிடம் அனுமதி பெறுவது சிரமமானதாக இல்லை. எவ்வாறு படமெடுக்கப் போகிறோம் என்பதற்கான திட்டங்கள் எதுவுமில்லாமல் துவங்கினோம். விரைவில் ஃபினியுடன் தொடுமொழியில் பேசக் கற்றுக்கொண்டேன். ம்யூனிக்கில் வாழ்ந்த என் தாயார் ஃபினிக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். அவரும் ஃபினியுடன் தொடு மொழியில் பேசக் கற்றுக்கொண்டார். ஃபினிக்கு எதெல்லாம் முடியாது எனக் கருதப்பட்டதோ அதை எல்லாம் அவரை அனுபவிக்கச் செய்தேன். அவரை என் மோட்டார்பைக்கில் வேட்டைக்கு அழைத்துச் சென்றேன். என் ஒரு வயது மகனைப் பார்த்துக்கொள்ளச் செய்தேன். எல்லாவற்றையும் துணிவுடனும் மகிழ்ச்சியுடனும் செய்தார். அந்தப் படத்தை விட அவர் எனக்கு மிக முக்கியமானவர். படம் முடிந்து ஐந்து வருடங்களில் இறந்துவிட்டார்.

காது கேட்காத, பார்வையற்ற குழந்தைகளையும் படத்தில் காண்பிக்க வேண்டும் என்று ஏன் முடிவு செய்தீர்கள்?

ஃபினி தனது இளம் பருவத்தில் கண்பார்வையை இழந்தவர். உலகைத் தனது கண்களால் முதலில் பார்த்தவர். இக்குழந்தைகள் அப்படியல்ல. பிறப்பிலேயே பார்வையற்ற அவர்களுக்கு புற உலகைப்பற்றிய எந்தக் கற்பனைக்கும் வாய்ப்பில்லை. அந்த மறுபக்கத்தையும் காண்பிப்பது என்னுடைய நோக்கமாக இருந்தது. இது புத்தகம், இது உணவு என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. பிறப்பிலேயே குருடாகவும், செவிடாகவும் பிறந்த ஹெலென் கெல்லர் தத்துவம் பயின்றார். அவர் வாழ்க்கை பற்றி எண்ணும்போது, இம்மாதிரியான குழந்தைகளுக்குள் இருக்கும் அரூபமான சிந்தனைகள், உணர்வுகள் பற்றிய பல கேள்விகள் என்னுள் உருவாகின்றன. அவர்கள் மனதுள் அனாமதேயமாக ஓடிக்கொண்டிருக்கும் விவரிக்க முடியாத பயங்கள், உணர்ச்சிகள் வெளியுலகுக்கு வெளிப்பட என்றும் வாய்ப்பில்லை. இதை எல்லாம் நினைக்கும் போது அதிர்ந்து போகிறேன்.

Land of Silence and Darkness படத்திற்கு பார்வையாளரிடமிருந்து ஆதரவு கிடைத்ததா?

முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப மறுத்துவிட்டனர். அதற்கு இரண்டரை வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. முதல் முறையாக ஓளிபரப்பப்பட்டபோது அதைப் பின்னிரவில் இறுதியாக ஓளிபரப்பினார்கள். அப்படியும் அதற்கு ஏராளமான பாராட்டுகள் கிடைக்க, பார்வையாளர் வேண்டுகோளுக்கு இணங்கி மீண்டும் இருமுறை ஒளிபரப்பப்பட்டது. அனைவராலும் பாராட்டப்பட்டு வெற்றிப்படமாக ஆகிவிட்டது. ஜெர்மன் நாளிதழ்கள் சில உடல் ஊனமுற்றோரைத் தவறாகப் பயன்படுத்திப் பெயர் ஈட்டிக்கொள்கிறேன் எனச் சாட்டிய குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் புகழ்பெற்ற நரம்பியல் நிபுணர் ஆலிவர் சாக்ஸ் (Oliver Sacks ) உட்பட பலர் திரண்டெழ, குற்றச்சாட்டுகள் ஒன்றுமில்லாது போயின. விரைவில் இப்படம் முக்கியமான படைப்பு என அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

- தொடரும் -

பால் க்ரானினின் (Paul Cronin) கேள்விகளுக்கு தனது வாழ்க்கை, படைப்புகள், படைப்பாக்க முறைகள் பற்றி ஹெர்ஸாக் மனம் திறந்து சொல்லும் பதில்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘Herzog on Herzog’ நூலின் முக்கிய பகுதிகள் தமிழில் தொடராக அளிக்கப்படுகிறது.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </