கடவுளின் பெயரால்....
ஆனந்த் பட்வர்தனுடன் நேர்காணல்
இரண்டாவது சர்வதேச டாக்குமெண்டரி திரைப்பட விழாவில் ஆனந்த் பட்வர்தனின் புதிய படமான (கடவுளின் பெயரால், Ram Ke Naam) காட்டப்பட்டது. ஆனந்த் படக்காட்சிகள் மற்றெல்லாவற்றையும் போலவே, இப்படக் காட்சி நடந்த டாடா தியேட்டர் நிரம்பிவழிந்தது. இதுவரை ஆனந்த் சமகால எரிகிற பிரச்னைகள் மீது படம் எடுத்திருக்கிறார். நேரடியான எதிர்கொள்ளலும், பார்வையாளர் முன் தன் திரைப்பட விவாதத்தைச் சார்ந்த மறுக்கமுடியாத உண்மைகளை வைத்தலுமே அவரது அணுகுமுறை. இம்முறையும் அயோத்தி – பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் அயோத்தியிலேயே நிகழ்த்திய நேர்முகங்கள் மற்றும் படம்பிடித்தல் மூலம் அந்தப் பாணியையே பின்பற்றுகிறார். படத்தில் அவர் காட்சியளிக்கப்படாத நேர்முகக் கேள்வியாளரையும் விசாரணைப்பாணித் திரைப்படத் தயாரிப்பாளராயும் இருந்து , மக்களைப் பேசத் தூண்டி, அவர்கள் பேச்சின் மூலம் மேலெழுந்தவாரிப் பார்வைக்கும் வெளிப்படையாய்த் தெரிபவைகளுக்கும் பின்னால் தளம் தளமாய் ஒளிந்திருக்கும் உள்ளர்த்தங்களை வெளிக்கொணருகிறார். உண்மைத் திரைப்படப் பாணியில் அவரது கேமிராவும் ஒலிவாங்கியும் மக்களை, அவர்களின் உடலசைவுகளை, அவர்களின் உரையாடல்களை, அழகிய காட்சிகளை, ஓசைகளைத் தேடிச்சென்று கையகப்படுத்துகின்றன. இதை அவர் மிகத்திறமையோடு வெட்டி ஒட்டித் தன்பரப்பு வாதமாய்த் தருகிறார். பார்வையாளர்கள் அவர் சொல்ல வருவதை ஏற்கலாம். மறுக்கலாம், திரைப்பட விமரிசகர்கள், அழகியலாளர்கள், இலக்கண ஆசிரியர்கள் இவர்களெல்லாம் அவரது விழைவுகளை, பாணியை, அழகியலை, தர்மத்தை விமரிசிக்கலாம்.
ஆனால் அவர் தனக்கும், தான் நம்பிக்கை வைக்கின்றவர்களுக்கும், ஒரு புத்திக் கூர்மையும் பிரக்ஞையும் மிக்க சமுதாய உறுப்பினராகத் தான் சிரமேற்கொள்கிற உந்துதல்களுக்கும் உண்மையானவராய் இருக்கிறார். தான் கற்றுக் கைதேர்ந்த சாதனமானத் திரைப்படத்தைத் தான் உந்துதலை, தன் நம்பிக்கையை, தன் வாழ்வின் காரணத்தை விவரிக்கப்பயன்படுத்துகிறார். மொத்த விழாவிலும் பார்வையாளர்கள் திரைப்படங்களுக்கிடையேயான பத்து நிமிட இடைவேளையைப் புறக்கணித்து அந்த நேரத்தையும் தயாரிப்பாளருடனே அளவளாவுவதில் செலவழித்தது இவர் ஒருவருக்காகத்தான். ஆனந்த் பட்வர்தன் என்ற தயாரிப்பாளருக்கு மக்கள் தம்மைப் பற்றியும், தம் படங்கள் மூலம் தாம் சொல்லவருபவை பற்றியும் பிரக்ஞை கொள்வது முக்கியமானதாகிறது. திரைப்படத்தை அவர் ஒரு முடிவுப் பொருளாய்ப் பார்ப்பதில்லை. அவரைப் பொறுத்தவரைத் திரைப்படம் என்பது தன் கொள்கைகளை வெளிப்படுத்தவும், நிகழ்ச்சிகளையும் மக்களையும் பகுத்துப் பார்க்கவும், நியாயமின்மையையும் பாகுபாடுகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டவும், மக்களை விழிப்படையச் செய்யவும் ஒரு சாதனம். மென்மையான எதிர்ப்பொருள் கொண்ட கணங்கள் இருந்தாலும், பெரும்பாலும் மக்களை அவர்களுடைய வார்த்தைகளாலும் செயல்களாலுமே வெளிக்கொணர்வதற்கான தொடர்முயற்சியாகவே இவர் படங்கள் இருக்கின்றன.
 |
ஆனந்த், உங்கள் படத்தைப் பற்றி இந்த நேர்முகத்தில் உங்களிடம் எந்த வினாக்களை நான் தொடுக்க வேண்டும் என்றே எனக்குப் புலனாகவில்லை. ஏனெனில் வழக்கம்போல், நீங்கள் சொல்ல விரும்பியவற்றைத் தெளிவான, ஆரவாரமற்ற சத்யமிக்க வகையில் உங்களால் சொல்லமுடிந்திருக்கிறது.
என் திரைப்படத்திற்கு மிகச்சிறந்த பாராட்டை நீங்கள் நல்கியிருக்கிறீர்கள் தெரியுமா? குழப்பமான, தெளிவற்ற, புரிந்துகொள்ள முடியாத படங்கள் எடுப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் படம் எடுப்பது மக்கள் பார்க்க, புரிந்துகொள்ள, பாராட்ட. நான் ‘மக்கள்’ என்று குறிப்பிடும்போது இதுபோன்ற திரைப்படவிழாக்களுக்கு வரும் நூறுசதம் பணக்கார அல்லது மேல் மத்தியதரவர்க்க மக்களை மட்டும் குறிப்பிடவில்லை. அங்கே வெளியே குறுநகர்களிலும், கிராமங்களிலும் வாழ்ந்துகொண்டு வயல்களிலும் ஆலைகளிலும் உழைத்து, நாம் இப்படி விழாக்கள் நடத்திக் குளிர்பதனச் சொகுசில் படங்கள் பார்க்க வழி செய்யும் அந்தப் பெருவாரியான மக்களுக்காகத் தான்., என் படங்கள். என் குறிக்கோளும் களனும் அவர்கள்தான். ஆக, அவர்களால் என் படங்களைப் புரிந்துகொள்ளவோ பாராட்டவோ இயலவில்லை என்றால் நான் படங்கள் எடுப்பதில் என் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறேன்.
உங்கள் உடனுழைப்பவர்களில் பலரும், விமரிசகர்கள் பலரும் நீங்கள் மக்களையும் நிகழ்ச்சிகளையும் பயன்படுத்திப் ‘பரபரப்பான’ படங்கள் எடுப்பதாய் நினைக்கிறார்களே?
என் படங்கள் பலதரப்பட்ட மக்கள் மேல் கொள்ளும் கவர்ச்சி மீது பொறாமை கொள்பவர்களாய் அவர்கள் இருக்க கூடும். ஒரு மணி நேரத் தகவல்படம் முழுவதும் உட்காரும் பொறுமை பொதுவாக இல்லாத மக்கள் கூட என் படங்களை ஆழ்ந்த கவனத்துடன் பார்க்கிறார்கள். நான் மக்களையும் நிகழ்ச்சிகளையும் பயன்படுத்துகிறேன் என்று விமரிசகர்கள் எந்த அர்த்தத்தில் சொல்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. என் படங்கள் எப்போதும் தற்போதைய கருத்து வேறுபாடுகளைத் தூண்டும் நிகழ்வுகளைச் சார்ந்தே இருக்கின்றன. என் படங்களை நான் மக்களோடு நேர்முகங்கள், உரைகளையும் படம்பிடித்தல், நிகழ்ச்சிகளை நிகழ்ந்தவாறே காட்டுதல் இவற்றைச் சார்ந்தே எடுக்கிறேன், என்ற இவற்றைத்தான் அவர்கள் குறிக்கிறார்கள் என்றால், அவர்கள் சொல்வது சரி, ஆனால் அதில் தவறென்ன இருக்கிறது? செய்தித்தாள் நிருபர்கள், விசாரணைப்பாணி இதழாளர்கள், மற்ற சாதனங்களைச் சார்ந்த மக்கள் இவர்களெல்லாம் இதையே செய்வதில்லையா? இந்த விமரிசனத்திற்கு நான் மட்டும் ஏன் தனித்தொதுக்கப்படுகிறேன்?
‘கடவுள் பெயரில்’ஐ உருவாக்குவதால் நீங்கள் எதைச் சாதிக்க விழைந்தீர்கள்?
இந்தியாவின் ஒரு கடமையுணர்வுள்ள குடிமகனாக என்னை நான் கருதுகிறேன். நமது அரசியல் சாசனத்திலும் அரசியலிலுமே கூட மதச் சார்பின்னை மிக இன்றியமையாத ஒரு அங்கம். மதவாதிகள் மதச் சார்பின்மையைக் குலைத்து ஹிம்சையையும் வெறுப்பையும் கட்டவிழ்த்து விட முயற்சி செய்வதை நான் பார்க்கும்போது, அதை விமர்சிப்பதும், குற்றவாளிகளை வெளிச்சம்போட்டுக் காட்டுவதும், இத்தகைய அபாயகரமான பாதையைத் தொடர்வதிலும் நம்புவதிலும் உள்ள பெருங்குழிகளைப் பற்றி மக்களை உணரவைப்பதும் என் கடமை என நான் உணர்கிறேன். அதனால்தான் இந்துத் தீவிரவாதிகள் இந்து மறுமலர்ச்சியின் ஒரு எடுத்துக்காட்டு எனக்கட்டாயமாக இராமர்கோயில் கட்ட முயல்வதையும், மதச்சார்பற்ற இந்தியர்கள், அவர்களில் பெரும்பாலோர் இந்துக்கள் என்ற போதும், கடவுள் பெயரில் மதச்சகிப்புத்தன்மையும் வெறுப்பும் பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளையும் தகவலாக்கி ‘கடவுள் பெயரில்’ஐ படைத்தேன்.
இந்தப் படப்பின்போது ஏதும் கஷ்டங்களைச் சந்தித்தீர்களா?
என் மற்றப் படங்களைவிட அதிகமென்று சொல்லும்படி எதுவுமில்லை. பத்திரிகைகளிலுமிருந்தும் மற்ற சாதனங்களிலிருந்தும் அயோத்தியிலும் சுற்றுப் புறங்களிலும் படங்கள் பிடிக்க முயற்சிகள் செய்துகொண்டிருந்தனர். காவல்துறையின் வழக்கமான பந்தோபஸ்தும் இருந்தது, எப்படியிருந்தாலுமே, கருத்துவேறுபாடுகளைத் தூண்டும் விஷயங்களைப் படமாக்க ஒருவர் முயலும்போது அதில் அபாயத்தின் உடனுழைவு இருக்கவே செய்கிறது; அதுவே அதை மேலும் ஒரு சவாலாக்குகிறது.
இப்படம் இதற்கு முன்னால் திரையிடப்பட்டுள்ளதா?
ஆம்! முதல் திரையிடல் லக்னோவில் இருந்தது.
அது எப்படி எதிர்கொள்ளப்பட்டது?
மிக நன்றாகவே! திரையிடலுக்குப் பிறகு பலனுள்ள ஒரு விவாதமும் இருந்தது.
உங்கள் முந்தையப் படங்களில் கூட நீங்கள் மக்களைப் பேசவைத்து அவர்களையே அவர்களுக்கே எதிரான சிறந்த, சந்தேகமின்றி மாட்டுவிக்கின்ற ஆதாரங்களாக்குவதில் எப்படி வெற்றிபெறுகிறீர்கள் என்று பார்த்திருக்கிறேன். இதை ஒரு ஏமாற்றுவித்தைப் பாணி என அழைக்க முடியாதா?
நான் மக்களைப் பேசுமாறு வற்புறுத்துவதில்லை. பேசவேண்டிய பலவந்தத்தின்கீழ் அவர்கள் இல்லை. ஒரு நேர்முகம், அதனைப் படமாக்கல் இவற்றின் உண்மையான காரணத்தை நான் வெளிப்படுத்தாமலிருக்கலாம். நான் அதைச்செய்தால், உரையாடலே புகட்டப்பட்ட, ஜாக்கிரதையாகச் செறுகப்பட்ட செயற்கையான ஒரு அங்கமாகத் தரம் தாழ்ந்து அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிற என் காரியத்திற்கு ஏற்பில்லாது போய்விடும் ஆனால், பத்திரிகைகளாகட்டும், சட்டத்தின் காவலர்களாகட்டும், எந்தவகை விசாரணைப்பாணி வேலையிலும் எவரும் தன் உண்மையான விழைவுகளை வெளிப்படுத்தவோ, தன் துருப்புக்களை மேடையில் திறந்து வைக்கவோ முடியாது. நான் மக்களைப் பேச வைக்கிறேனென்றால் அது உண்மையை வெளிக்கொணரும் ஒரு விழைவோடேயே. நான் மக்களை வேண்டுமென்றே திசைதிருப்புவதோ, ஆக்கப்பூர்வமான விசாரணைப் பாணிப் பத்திரிக்கைச்செயல் தர்மத்தை மீறுவதோ கிடையாது.
நீங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிய அரசு ஆணையங்கள், மக்கட்பிரிவுகள் இவற்றிடமிருந்து எத்தகைய எதிர்விளைவு இருக்கிறது?
சாதகமான எதிர்விளைவு நிச்சயமாக இல்லை. ஆனால் நான் படங்களை எடுக்கும்போது இதைப்பற்றி யோசிப்பதில்லை. என் படங்கள் விமர்சனம், தூண்டுதல், விவாதம் மற்றும் கலந்துரையாடல் இவற்றை ஒற்றிவைத்தல் இவற்றையே விழைகின்றன.
விமர்சகர்களில் ஒரு அணியினர் உங்கள் படங்களின் மூலம் நீங்கள் இடதுசாரி அரசியலை உய்விக்க முயற்சி செய்வதாயும், அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்வதாயும் எண்ணுகின்றனரே! ஒரு பொறுப்புமிக்க திரைப்படத்தயாரிப்பாளர் என்ற வகையில் இந்தக் கண்ணோட்டத்திற்கு உங்கள் எதிர்விளைவு என்ன?
ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பாளருக்கும் ஒரு கொள்கை வேண்டும் என்பதையும் அந்தக்கொள்கை அவரது கலை கலாச்சார வெளிப்பாடுகள் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாதது என்பதனையும் நான் நம்பவே செய்கிறேன். தற்போதைய நிகழ்காலத்திய விஷயங்களைச் சார்ந்து நீங்கள் அரசியல் படங்கள் எடுக்கும் போது இது இன்னும் அதிகமாகிறது. ஒரு அரசியல் படம் எடுக்கும்போது நீங்கள் மதில்மேல் பூனை மனப்போக்கைக் கொண்டால் படம் சுவாரசியமற்று எந்தத் தாக்கத்தையும் உருவாக்காது. அவர்கள் பெரிதும் மதச்சார்பற்றும், மனிதநேயத்தோடும், மக்களை மையங்கொண்டும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு உறுதுனையாயும், இருப்பதாகவும் பழம்போக்கு எண்ணங்கள் குறைந்தவர்களென்றும் நான் மனப்பூர்வமாக நம்புவதால் நான் இடதுசாரி அரசியலை ஆதரிக்கிறேன். இந்தக் குறிப்பிட்ட படத்தைப் பொறுத்தவரை இடதுசாரிக் கொள்கையைப் பிரதிபலிப்பது தவிர்க்க முடியாதது. படமெடுப்பது வெறுமே ஒரு கலை வெளிப்பாடு என்ற எண்ணப்பாட்டுக்கு நான் ஒத்துப்போவதில்லை. தனித்துவப்பட்டு, வெறுமே ஒருவரது சுய கலாவேட்கைகளைத் திருப்திப் படுத்தவென்று திரைப்படமெடுத்தல் நிகழமுடியாது. என்னைப் பொறுத்தவரை அது வாழ்க்கையோடு, தான் நிலைபெறுகின்ற சமூக அரசியல் கலாச்சாரச் சூழலோடு பிணைக்கப்படவேண்டும். அதற்கு ஒரு சமுதாய, அரசியல் மற்றும் விழிப்பூட்டும் பணி இருக்கிறது.
அயோத்தி கோவிலின் ஒரு பூசாரியான லால் வாஸ் பூசாரியுடன் உங்கள் நேர்முகம் குறிப்பாக இருளகற்றுவதாக இருந்தது. அவர் இராமரின் தத்துவத்தை உயர்த்திப்பிடித்தபோதும் ஹிம்சையையும் சகிப்பின்மையையும் கண்டித்தார்.
சரியாக இதைத்தான் நான் என்படத்தின் மூலம் செய்ய விரும்பினேன். இந்துத்துவத்தின் பிரமுகர்கள் தாங்கள் என்று உரிமைகோரும் பழமைவாதிகள் இந்துத்துவத்தை ஒரு குறுகிய, வரையறைக்குட்பட்ட மதமாகச் சுருக்குகிறார்கள். சகிப்பு, அகிம்சை, மதச்சார்பின்மை என்ற இந்துத்துவத்தின் மிகப்பிரதானமான உயிர்நாடிகளையே புறக்கணிக்கிறார்கள். இந்தியாவின் ஒரு உண்மையான குடிமகன் என்ற முறையில் இந்தப் பிரிவினரின் போலித்தனத்தையும் சுற்றி வளைத்தலையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவது என் கடமை என உணர்கிறேன்.
பழைமை வாதத்தை அது எந்த வகையானதாய் இருந்தாலும் எதிர்க்கும் நீங்கள், சிறுபான்மைப் பழமைவாதத்தை இதுவரை தொடாதது ஏன்?
பழமைவாதம், அது எந்தவகையானதாய் இருந்தாலும் அது வெறுத்து ஒதுக்கப்படவேண்டியது என்பதை நான் ஏற்றுக்கொள்ளும் போதிலும், இந்திய அரசியலின் இந்த நிலையில் 85% சதவிகிதமுள்ள பெரும்பான்மைப் பழமைவாதம் மேலும் அச்சுறுத்துவது என்பதால் விமரிசிக்கப்பட்டு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட வேண்டியது என்று நான் தீவிரமாக உணர்கிறேன்.
திரைப்படத் தயாரிப்பு மீதான உங்கள் எண்ணப்பாடு பற்றி ஒரு கடைசி வார்த்தை?
என்னைப் பொறுத்தவரை படமெடுப்பது வாழ்விலும் அதன் நிகழ்வுகளிலும் வேறோடிருப்பது. ஒரு சமூக அரசியல் கலாச்சாரச் செயலான அது. மிகப்பெருவாரியான மக்களை படைப்பாளிகளாகவோ பார்வையாளர்களகவோ பாதிக்கிறது.
நன்றி: சலனம்
சலனம் இதழில் வெளியான இந்த நேர்காணலை "பேசாமொழியின்" ஆனந்த் பட்வர்தன் சிறப்பிதழுக்காக மறுபிரசுரம் செய்கிறோம். சலனம் நிர்வாகத்திற்கும், ஆசிரியர் குழுவினருக்கும் பேசாமொழியின் நன்றி.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |