புதிய தொடர்...
Herzog on Herzog - Paul Cronin
ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் - பால் க்ரானின்
- தமிழில்: ஆனந்த், கோணங்கள். |
உலகத் திரையரங்கில் வெர்னர் ஹெர்ஸாக் எனும் பெயர் தனித்து நிற்பது. ஜெர்மனிய புதிய அலை படைப்பாளிகளில் ஒருவராக பதினேழு வயதில் திரையுலக வாழ்க்கையைத் துவங்கிய ஹெர்ஸாக், தற்கால இயக்குநர்களில் மிக முக்கியமானவராக மதிக்கப்படுபவர். நிறுவப்பட்ட திரையுலக விதி முறைகளை எப்போதும் மீறிக்கொண்டிருக்கும் இந்தப் படைப்பாளி பற்றியும் அவரது படைப்பாக்க முறைகள் பற்றியும் சொல்லப்படும் விசித்திரமான கதைகள் ஏராளம்.
ஹெர்ஸாக் பிறந்தது 1942 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் ம்யூனிக் (Munich) நகரில். ஜெர்மனியின் ஆஸ்திரிய எல்லையை ஒட்டியிருக்கும் மலைப்பகுதியிலுள்ள சச்ரங் கிராமத்தில் அவரின் குழந்தைப்பருவம் கழிந்தது. இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலம். கடுமையான சிரமங்கள் நிறைந்த வாழ்க்கை. சிறுவனாக, பதினான்கு வயதிலேயே நெடுந்தூர கால்நடை பயணங்களை மேற்கொண்டார். பதினேழு வயதில் திரைப்படங்களைத் தயாரிக்க தொடங்கினார். அதற்குத் தேவையான பணத்திற்காக உருக்குத் தொழிற்சாலை ஒன்றில் வெல்டராக இரவு நேரங்களில் பணிபுரிந்தார். பத்தொனபது வயதில் அவர் அளித்த முதல் படைப்பு Herakles. (1961).
வற்றாத கற்பனை வளத்துடனும் இளைஞனுக்குரிய உற்சாகத்துடனும் இன்றுவரை திரைப்படங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த எழுபது வயது படைப்பாளியின் கைவண்ணத்தில் இதுவரை அறுபத்து மூன்று படைப்புகள் - முழு நீளத் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும் படங்கள் - உருவாகியுள்ளன. பால் க்ரானினின் (Paul Cronin) கேள்விகளுக்கு தனது வாழ்க்கை, படைப்புகள், படைப்பாக்க முறைகள் பற்றி ஹெர்ஸாக் மனம் திறந்து சொல்லும் பதில்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கும் ‘Herzog on Herzog’ நூலின் முக்கிய பகுதிகள் இப்பகுதியில் தொடர்ந்து அளிக்கப்ப்டும்..
 |
பால் க்ரானின் |
----------------------------------------------------------------------------------------------------------
ஒன்று
திரைப்படங்களை உருவாக்குவதுதான் உங்கள் வாழ்க்கை என்பதை நீங்கள் எப்போது முடிவு செய்தீர்கள்?
சுதந்திரமாக எண்ணத் துவங்கிய கணத்திலிருந்து திரைப்படங்களை உருவாக்கப் போகிறேன் என்பது நான் உளமாற உணர்ந்த ஒன்று. பதினான்கு வயதில் கால்நடையாக பயணம் செய்யத் துவங்கினேன். கத்தோலிக்க கிறித்துவ மதத்தில் சேர்ந்தேன். அந்த சில வாரங்களில் திரைப்படங்களை உருவாக்குவது பற்றிய என் முடிவு மேலும் வலுவுற்றது. இன்றுவரை நான் இதை ஒரு தொழிலாக எண்னியதில்லை.
உலகில் தொலைதூரங்களிலுள்ள பகுதிகளுக்குப் பயணம் செய்து திரைப்படங்களை உருவாக்கியிருப்பவர் என அறியப்படும் நீங்கள் பயணம் செய்வதை எப்போது தொடங்கினீர்கள் ?
பள்ளிப்படிப்பு முடிவதற்கு முன்பே ஒரு பெண்ணுக்காக மான்செஸ்டரில் சில மாதங்கள் தங்கியிருந்தேன். சிதிலமடைந்த பழைய வீட்டை வாங்கி அதில் நானும் நான்கு வங்காளிகளும், மூன்று நைஜீரியர்களும் தங்கியிருந்தோம். எப்போதும் எலிகள் ஓடிக்கொண்டிருக்கும். புறக்கடை முழுவதும் குப்பைகள் நிறைந்திருக்கும். அங்கிருக்கும்போது ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். இறுதித் தேர்வுகள் முடிந்த உடன் ம்யூனிக்கிலிருந்து கிரீஸ் பயணம். டிரைவராக ஒரு ட்ரக்கை ஓட்டிக்கொண்டு ஏதென்ஸ் நகரை அடைந்தேன். அடுத்து கிரீட் (Crete) தீவுக்கு சென்று வேலை செய்து சிறிது பணம் சம்பாதித்தபின் எகிப்திலிருக்கும் அலெக்ஸாந்திரியாவிற்கு படகில் பயணம்.
அலெக்ஸாந்திரியா வழியாக பெல்ஜிய காங்கோவை அடைவது நோக்கமாக இருந்தது. அப்போதுதான் விடுதலை பெற்றிருந்த காங்கோ முழுவதும் வன்முறையும் அராஜகமும் மிகுந்திருந்தது. நைல் நதி வழியாக சூடானுக்கு படகில் சென்றுகொண்டிருந்தேன். நல்லவேளையாக கிழக்கு காங்கோ எல்லையை அடையும் முன் உடல்நலம் குன்றியதால் எகிப்திலிருக்கும் அஸ்வானுக்கு திரும்ப வேண்டியதாயிற்று. அந்நேரம் காங்கோ சென்ற எவரும் உயிர் பிழைக்கவில்லை என்பது பின்னர் தெரிய வந்தது. அஸ்வான் அணை கட்டப்பட்டுக்கொண்டிருந்த நேரம். ரஷ்யர்கள் அதன் கட்டிடப்பகுதியை பார்த்துக்கொள்ள, ஜெர்மனிய பொறியியலாளர்கள் மின்சார இணைப்புகளுக்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர்.
உடல் நிலை மிகவும் மோசமானது. அணை கட்டுவதற்கான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கொட்டடி ஒன்றில் என் நிலை அறியாது படுத்திருந்தேன். எலிகள் என்னைக் கடித்துவிட்டு நான் அணிந்திருந்த கம்பளி உடையை தங்கள் கூட்டிற்காக பிய்த்து எடுத்துச் சென்றுகொண்டிருந்தன. இந்த நிலையில் ஒரு ஜெர்மன் பொறியியலாளர் கண்களில் பட்டேன். ஒருவழியாக ஜெர்மனிக்கு திரும்பி வந்தேன். கன்னத்தில் எலி கடித்த காயம் ஆற பல நாட்கள் ஆயிற்று. இன்றும் அந்த வடு இருக்கிறது.
ஜெர்மனி திரும்பியபின் என் முதல் திரைப்படங்கள் சிலவற்றை எடுத்து முடித்தேன். அந்நேரம் நான் இலக்கியமும், சரித்திரமும் பயின்றுகொண்டிருந்த ம்யூனிக் பல்கலைக் கழகத்தில் அவ்வப்போது தலையைக் காட்டிவிட்டு வருவது வழக்கம்.
திரைப்படங்கள் எடுப்பது என்ற உங்கள் முடிவை பெற்றோர் எவ்வாறு எதிர்கொண்டனர்?
என் வாழ்க்கை நிகழ்வுகள் எதிலும் தந்தை பங்கு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. அவருக்கு நான் திரைப்பட இயக்குநராக ஆவதில் விருப்பமில்லை. அதற்கான திறமையும், பலமும், வியாபார உத்திகளும் இல்லாதவனாக என்னைக் கருதினார். பதினான்கு வயதிலிருந்தே தயாரிப்பாளர்களுக்கும், தொலைக்காட்சி நிலையங்களுக்கும் திரைக்கதைகளை அனுப்பத் துவங்கியிருந்தேன்.
என் தாய் எனது முடிவுகளை சரியான பார்வைகொண்டு அணுகியவர். எப்போதும் எனக்கு ஆதரவாக இருந்தார். மேற்கு ஜெர்மனியின் அன்றைய பொருளாதார நிலை பற்றி எனக்கு தெளிவாக்கியவர் அவர்தான். அவ்வப்போது யாரிடமும் சொல்லாமல் எங்காவது சென்றுவிடுவேன். எங்கு சென்றிருக்கிறேன் என்று தெரியாவிட்டாலும் என் பழக்கவழக்கங்களை நன்கு அறிந்திருந்ததால் பொறுமையோடு எனக்காக காத்திருப்பார். நிமோனியா காய்ச்சலில் நான் படுத்திருப்பதாக விடுப்பு கேட்டு பள்ளிக்கு கடிதம் எழுதிவிடுவார். நான் பள்ளியின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவன் அல்ல எனபதை அறிந்திருந்தார். பல முறைகள் நடந்தோ, ஏதாவது வாகனங்களில் இலவசமாகவோ வடக்கு ஜெர்மனிக்கு சென்றிருக்கிறேன். அங்கு காலியாக இருந்த ஆளற்ற வீடுகளில் எவருக்கும் தெரியாமல் தங்குவது எனக்கு கைவந்த கலை.
வேலை வாய்ப்பு அதிகாரி ஒருவரின் அறிவுரை பெயரில் என் தாய் புகைப்படங்களை டெவலப் செய்யும் இடத்தில் எனக்காக வேலைக்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். உயர்நிலைப் பள்ளிப் படிப்பு மட்டும் முடித்திருந்த எனக்கு, புகைப்படங்கள் தொடர்பான வேலையிலிருந்து அடுத்து திரைப்பட பிலிம் டெவலப் செய்யும் வேலை கிடைத்து அப்படியே திரைப்படத் துறைக்குள் உதவி இயக்குநராக நுழைய முடிவது எளிது என அவருக்குச் சொல்லப்பட்டிருந்தது. இதற்கு நேர் மாறாக எண்ணிக்கொண்டிருந்த என்னை அவரால் வற்புறுத்த முடியவில்லை.
1942 இல் பவேரியாவின் (Bavaria) மிகப் பெரிய நகரமான ம்யூனிக்கில் பிறந்தீர்கள். போர் முடிந்திருந்த நேரத்தில் அங்கு வாழ்ந்தது எப்படி இருந்தது?
நான் பிறந்து சில நாட்களில் நாங்கள் இருந்த இடம் குண்டுவீச்சால் சேதமடைந்தது. தெய்வாதீனமாக உயிர் தப்பினோம். ஜெர்மனியின் ஆஸ்திரிய எல்லையில் உள்ள மலைப்பகுதி கிராமம் சச்ரங்கிற்கு குடி பெயர்ந்தோம். ஜெர்மனியின் எஸ் எஸ் படையினர் தப்பி ஓடிக்கொண்டிருந்த நேரம். அமெரிக்க படையினர் வந்துகொண்டிருந்தனர். சிறுவர்களான என்னையும் என் சகோதரர்களையும் கொண்டு இங்கு கிடைக்காத பல பொருட்களை என் தாய் ஆஸ்திரியாவிலிருந்து கடத்தியிருக்கிறார். போர் முடிந்த அந்நேரம் கடத்தல் என்பது ஏறக்குறைய அனுமதிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.
 |
குழந்தையாக இருந்த நாட்களில் சினிமா என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நாகரிகத்தை விட்டு எங்கோ தொலைவில் தனிமையில் வாழ்ந்ததைப் போன்ற நிலையில் சச்ரங் கிராமத்தில் வாழ்ந்தோம். இத்தனைக்கும் ம்யூனிக் ஒன்றரை மனி நேர கார் பயண நேரத்தில் தான் இருந்தது. வாழைப்பழத்தை நான் முதலில் கண்டது எனது பன்னிரண்டு வயதில்; தொலைபேசியில் முதலில் பேசியது பதினேழு வயதில். குழாய் தண்ணீர் வசதியோ தண்ணீர் ஊற்றி சுத்தப்படுத்தப்படும் கழிப்பறையோ கிடையாது. படுப்பதற்கு மெத்தைகள் கிடையது; பதிலாக காய்ந்த இலைகள் நிரப்பப்பட்ட துணிப்பைகள். காலைகளில் எழும்பொழுது மூடியிருக்கும் போர்வை மீது மெல்லிய அடுக்காக பனி உறைந்திருக்கும். ஆனால் அந்நேரம் வாழ்க்கை அற்புதமாக இருந்தது. பல விளையாட்டுகளை நாங்களே கற்பனையில் உருவாக்கிக்கொண்டோம். படையினர் விட்டுச் சென்ற துப்பாக்கிகளும் குண்டுகளும் எங்கள் சொத்தாகின. எங்களைச் சுற்றி ஒரு புது உலகை உருவாக்கிக் கொண்டோம்.
இன்று என்னைச் சுற்றியுள்ள பலவற்றிற்கு நான் இன்னும் சரியாக பழக்கமாகவில்லை. தொலைபேசி மணியடிப்பது திடீரென அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.
போரின் போது மக்கள் வசிக்கும் இடங்களில் குண்டுகளால் கட்டிடங்கள் பாழானது வேதனையான விஷயம். ஆனால் சிறுவர்களுக்கு அந்த நேரம் மிகுந்த சுவராஸ்யமானதாகவே இருந்தது. உடைந்த கட்டிடங்களை தங்கள் உலகமாக சுவீகரித்துக் கொண்டு புதிய அனுபவங்கள் அளித்த கறபனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர். கட்டுப்பாடுகளும், கட்டுப்படுத்துபவர்களும் முற்றிலுமாக இல்லாதிருந்த நேரம் அது.
உங்கள் முதல் நினைவுகள் பற்றிக் கூற முடியுமா ?
இரண்டு முக்கிய சம்பவங்கள் நினைவிலிருக்கின்றன. ஒரு இரவில் என் தாயார் என்னையும், சகோதரனையும் படுக்கையிலிருந்து எழுப்பி போர்வைகளைச் சுற்றி தூக்கிக்கொண்டு வீட்டின் பின் பக்கத்திலிருந்த சரிவான பகுதிக்கு கொண்டு சென்றார். வானம் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த நிறத்தில் இருந்தது. விமானக் குண்டுவீச்சில் பன்னிரண்டு கிலோ மீட்டர்கள் தொலைவில் இருந்த ஆஷ்ச்சூவை தாண்டி இருந்த ரோசென்ஹெம் நகரம் எரிந்துகொண்டிருந்ததைக் காண்பித்தார். அப்போதைய எனது உலகின் எல்லை அந்த இடம் வரைதான். ரோசென்ஹெம் வரை கூட நான் சென்றிருந்ததில்லை.
இரண்டாவது நினைவு, கடவுளை நேரில் கண்டது. சாந்தா க்ளாஸ்(Santa Claus) நாள் டிசம்பர் ஆறு அன்று. அந்த வருடத்தில் ஒவ்வொருவரும் செய்த தவறுகளைப் பட்டியலிட்டு அவ்ர் கையில் எடுத்துவரும் நாள். எனக்கு மூன்று வயது இருக்கும். கதவு திறந்து திடீரென ஒரு உருவம் உள்ளே வர, பயந்து கட்டிலுக்கு அடியில் பதுங்கிக் கொண்டேன். என்னை அந்த உருவம் கருணையோடு அன்பாக பார்த்த்தது. அப்போதே தெரியும் அது கடவுள் தான் என்று. மின்சார நிறுவனத்திலிருந்து வந்த ஊழியர் அது என்பது பிற்பாடு தெரிந்தது.
 |
நான் ஐந்து அல்லது ஆறு வயதாக இருக்கும் போது நிகழ்ந்ததாக என் தாய் சொன்ன ஒரு சம்பவம் உண்டு. கடுமையாக பனி பெய்துகொண்டிருந்த காலம். உடல்நலமின்றி இருந்த என்னை அவசரமாக மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பனி அதிகமானதால் ஆம்புலன்ஸ் வருவதற்கு வழியில்லை. ஒரு சறுக்கு ஸ்லெட்ஜ்ஜில் என்னை போர்வைகளைப் போர்த்தி வைத்து, ஆஷ்ச்சூவிலிருந்த மருத்துவனைக்கு அந்த பனியில் இழுத்துச் சென்று சேர்த்தார். மீண்டும் எட்டு நாட்கள் கழித்து கனமாக பனிமூடியிருந்த பாதையில் நடந்து வந்து என்னை மருத்துவமனையில் பார்த்தார். நான் எந்த பிரச்சினைகளும் இன்றி அங்கு இருந்தது பற்றி அவருக்கு மிகுந்த ஆச்சரியம். ஒரு போர்வையிலிருந்து பிரித்தெடுத்த நூல் ஒன்று அந்த எட்டுநாட்களும் எனக்குத் துணையாக, விளையாட்டுப் பொருளாக இருந்தது. அந்த நூலில் எனக்கான பல கதைகளும் பல அற்புதங்களும் இருந்தன.
நீங்கள் வாழ்ந்த பவேரியப் பகுதி அமெரிக்க படையின் கட்டுப்பாட்டில் இருந்த்தது. அமெரிக்க படையினரைப் பார்த்த நினைவுகள் உண்டா?
அறுபத்து ஐந்து பேர்கள் இருந்தார்கள் சூயிங் கம் மென்றபடி ஜீப்புகளில் போய்க்கொண்டிருந்தார்கள். ஒரு கருப்பு படைவீரரை என்னால் மறக்கவே முடியாது. கருப்பு வண்ண மனிதர்களை தேவதைக்கதைகளில்தான் படித்திருந்தேன். கம்பீரமான உடல்வாகுடன் ஆழமான குரலோடு பேசிய அந்த கறுப்பு படைவீரருடன் பேசிக்கொண்டிருப்பேன். எனக்கு அவர் கொடுத்த சூயிங் கம்மை ஒரு வருடம் மீண்டும் மீண்டும் சவைத்துக்கொண்டிருந்தேன். நாங்கள் எப்போதும் பசியுடனே இருந்தோம். ஒருமுறை ஒரு பசுவை கொன்று சமைத்துக்கொண்டிருந்த பணியாளர்களை கண்டேன்.
கண்டெடுத்த தானியங்கி துப்பாக்கி கொண்டு ஒரு காக்கையை சுட்டேன். சுடும்பொழுது ஏற்பட்ட அதன் உந்து விசையில் பின்னால் வீசப்பட்டேன். என் தாய் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பதிலாக, அந்த துப்பாக்கியைக் கொண்டு சுடுவது எப்படி என்று கற்றுத் தந்தார். துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு ஒரு கனத்தமரத்தை மரத் துண்டுகள் சிதறிப்பறக்க, துளைத்துச் சென்றது. ‘துப்பாக்கியிலிருந்து இதைத்தான் எதிர்பார்க்கமுடியும். விளையட்டுத் துப்பாக்கியைக் கூட ஒருவர் முன்னும் உயர்தலாகாது‘ என்று என் தாய் அப்போது சொன்னதை இன்றுவரை நான் மறக்கவில்லை. விரலைக்கூட எவரையும் நோக்கி உயர்த்துவதில்லை.
சிறு வயதில் எவ்வாறு இருந்தீர்கள்?
சிறுவயதிலிருந்தே நான் ஒரு தனிமை விரும்பி. ஒரே அறையில் தான் அனைவரும் வசித்தோம். சுற்றி யார் இருக்கிறார்கள் என்ற நினைவு இன்றி மணிக்கணக்காக புத்தகம் படித்துக்கொண்டிருப்பேன். மூத்த சகோதரன் டில்பெர்ட் படிப்பை விட்டுவிட்டு வியாபரத்தில் இறங்கி வெகு விரைவில் நல்ல நிலையை அடைந்தான். பதினாறு வயதில் குடும்பத்தைப் பர்த்துக்கொண்டவன் அவன் தான். இளைய சகோதரன் இசையில் வல்லவன். ஆசிய நாடுகளில் இந்தியா. பர்மா, நேபாளம் என சுற்றிக் கொண்டிருந்தான். Aguirre: The Wrath of God (1972) படமெடுக்கும்போது உதவி கேட்டிருந்தேன். படமெடுத்துக்கொண்டிருந்த பெரு (Peru) நாட்டிற்கு வந்து வேண்டிய உதவிகளைச் செய்தான். அன்றிலிருந்து என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை அவன் தான் கவனித்துக் கொள்கிறான்.
நீங்கள் முதலில் பார்த்த திரைப்படங்கள்?
பள்ளியில் கண்ட 16 எம் எம் படங்கள். பிறகு ஜோரோ, டர்ஜான், டக்டர் ஃபூ மன்ச்சூ, இன்னும் பல சாதாரண அமெரிக்க திரைப்படங்கள். இந்த திரைப்படஙகளை எடுக்கப் பயன் படுத்தப்பட்டிருந்த நுட்பங்கள் என்னை கவர்ந்தன. கதை சொல்லல். படத்தொகுப்பு போன்றவற்றைப் பற்றிய அறிமுகத்தை தந்தன.
அந்நேரம் உருவாகிக் கொண்டிருந்த நவீன (Avant-garde) திரைப் படைப்பு களைக் கண்டதுண்டா?
F.W. முர்னவ் போன்ற இயக்குநர்களின் எகஸ்பிரஷனிச திரைப்படங்களை பின்னர் தான் கண்டேன். என்னுடைய இருபதாவது வயதில் ஜெர்மனிக்கு வந்த ஒருவர் பல திரைப்பட சுருள்களை கொண்டுவந்திருந்தார். வித்தியாசமாக படமெடுப்பதில் ஆர்வம் கொண்டிருந்த என்னை அவரிடமிருந்த ஸ்டான் பிராக்கேஜ் (Stan Brakhage) , கென்னத் ஆங்கர்(Kenneth Anger) போன்றோரின் படைப்புகள் கவர்ந்தன. துணிவுடன் புதிய பாதைகளில் படமெடுப்பவர்கள் என்று இவர்களைப் பற்றி ஒரு திரைப்பட இதழில் கட்டுரை எழுதினேன்.
நான் திரைப்படங்கள் அதிகம் பார்ப்பவனில்லை. மாதம் ஒரு படம் அல்லது திரைப்பட விழாக்களில் ஒர மூச்சாக பல படங்கள் எனப் பார்ப்பது வழக்கம். பார்க்கும் ஒவ்வொரு படமும் மனதில் ஆழப் பதிந்துவிடும். வருடங்கள் கழிந்த பின்னும் பார்த்த திரைப்படம் வெளிப்படுத்திய அழகியலும், வலிகளும் என்னை விட்டு விலகியதில்லை. மோசமான திரைப்படங்கள்தான் திரைப்படத்தை எப்படி எடுக்கக் கூடாது என்பதை எனக்குக் கற்றுத் தந்தன. எனது முதல் திரைப்படம் நான் செய்த முதல் தவறு. அடுத்து எப்படி எனது திரைப்பட உருவாக்கத்தை சரியாகக் கொண்டு செல்லவேண்டும் என்பதை உணர்த்தியது இந்த முதல் படம் தான்.
சொந்த தயாரிப்பு நிறுவனத்தை மிகவும் குறைந்த வயதில் நிறுவியவர் நீங்கள். உங்கள் திரைப்படங்கள் அனைத்தும் ‘வெர்னர் ஹெர்ஸாக் புரொடக்ஷன்ஸ்’ ஆல் தயாரிக்கப்பட்டவை. தயாரிப்பில் எப்படி ஈடுபாடு ஏற்பட்டது?
தயாரிப்பாளருக்கு நான் அனுப்பியிருந்த படைப்பைப் பற்றி நேரில் பேச அழைப்பு வந்தபோது எனக்கு வயது பதினேழு. என்னை ஒரு இயக்குநராக அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறுவன் என்பதால் கேலியுடன் நிந்தனை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டேன். அப்போதே எனது திரைப்படங்களை நானே தயரிக்கவேண்டும் என முடிவு செய்தேன். தாய் அவருடைய பணக்கார நண்பர் ஒருவரிடம் அழைத்துச் சென்றார். ஒரு அனுபவமும் இல்லாத சிறுவனான நான் எப்படி திரைப்படம் எடுக்கமுடியும் என அவர் ஒரு மணி நேரத்துக்கு மேல் உரத்த குரலில் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அடுத்த இரண்டாவது நாளில் ’வெர்னர் ஹெர்ஸாக் புரொடக்ஷன்ஸ்’ என்னால் தொடங்கப்பட்டது.
தயாரிப்புக்கு யாரும் கிடைக்காததால் நான் துவங்கிய நிறுவனம், இன்றுவரை எனது படங்களை நானே தயாரிக்க காரணமாய் இருக்க்கிறது Nosferatu திரைப்படம் எடுக்கும் வரை ம்யூனிக்கில் இருந்த ஒரு சிறிய அப்பார்ட்மெண்ட் குடியிருப்புதான் எனது நிறுவன அலுவலகம், எனது குடியிருப்பு, எடிட்டிங் அறை அனைத்தும். எல்லா வேலைகளையும் நானே கவனித்துக்கொண்டேன். தயரிப்பாளராக இயங்க ஒரு தொலைபேசி, ஒரு கார், ஒரு டைப்ரைட்டர் மூன்றும் இருந்தால் போதும். மெதுவாக உலக அளவில் எனது திரைப்படங்கள் அறியப்படத் துவங்க, வேலைகள் அதிகமாகி தனியாக இயங்குவது என்பது சிரமமானதாக ஆனது.
 |
20th Century Fox நிறுவனம் Nosferatu திரைப்படத்தின் சக தயாரிப்பாளராக இணைந்தது. ஒப்பந்தம் பற்றிப் பேச ஹாலிவுட்டுக்கு அழைத்தனர். அவர்களை ம்யூனிக் வரச் சொன்னேன். உறையவைக்கும் ம்யூனிக் குளிரில் வந்து இறங்கிய படக் கம்பெனி உயர் அதிகரிகள் நால்வரையும் விமான நிலையத்திலிருந்து ஹீட்டர் இல்லாத என் வோல்க்ஸ்வாகன் மினி பஸ்ஸில் அழைத்து வந்தேன். கதை வசனம் எழுத பட்ஜெட்டில் இரண்டு டாலர்கள் மட்டும் ஒதுக்கப்பட்டிருந்தது ஏன் என்று அவர்களுக்குப் புரியவில்லை. கதை வசனம் எழுத எனக்குத் தேவைப்படும் 100 வெள்ளைத் தாள்களுக்கும் பென்சிலுக்கும் ஆகும் செலவு அவ்வளவுதான் எனபதை விளக்கினேன்.
துவக்கத்தில் தயரிப்புக்கான பணம் எங்கிருந்து கிடைத்த்து?.
பள்ளி இறுதி வருடங்களில் உருக்குத் தொழிற்சலையில் இரவில் வெல்டராகவும், கார்கள் நிறுத்துமிடங்களில் சிப்பந்தியாகவும் பணி புரிந்து பணம் ஈட்டினேன். திரைப்படம் எடுக்க விரும்புவோரிடம் நான் பகிர்ந்து கொள்ளும் முக்கிய அறிவுரை என்னவென்றால், அலுவலக வேலைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உடல் வலுவைப் பொறுத்து எந்த வேலை வேண்டுமானாலும் செய்து பணம் ஈட்டுங்கள். செக்ஸ் கிளப்பில் காப்பாளனாகவோ, மனநல விடுதி வார்டனகவோ வேலை செய்யுங்கள். கால்களைப் பயன்படுத்தி எங்கும் நடந்து செல்லுங்கள். பிற மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். திரைப்படத்துடன் தொடர்பில்லாத வேறு கலை ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ளுங்கள். வாழ்வின் அடிமட்ட அனுபவங்கள்தான் திரைப்பட உருவாக்கத்திற்கான அடிப்படைகள்.
என்னுடைய திரைப்படங்களை 35 எம் எம் பிலிமில்தான் படமாக்க வேண்டும் என முடிவு செய்தேன். 16 எம் எம் பிலிம் பயன் படுத்தி உருவாக்கினால் செலவு மிகவும் குறையும். ஆனல் எனக்கு அதில் உடன்பாடில்லை. அந்நேரம் என்னைப்போலவே ஏழெட்டு இளைஞர்கள் படமெடுக்கத் துவங்கியிருந்தனர். முடிவில் ஒருவரும் தங்கள் இலக்கை அடையவில்லை. நான் ஒருவன் தான் படத்தை முடித்தவன். பணம் இருந்தால் மட்டும் போதாது. உள்ளார்ந்த ஈடுபாடும், தெளிவான திட்டமிடுதலும். இருந்தால் மட்டுமே ஒரு திரைப்படத்தை துவங்கவும் முடிக்கவும் முடியும். Fitzcarraldo திரைப்படத்தில் கப்பலை மலை மீது இழுத்துக் கடக்கவைத்தது பணம் அல்ல, நம்பிக்கை.
என் முதல் திரைப்படம் Heracles முட்டாள்த்தனமாக, சரியான இலக்கின்றி எடுக்கப்பட்ட படம். அது எனக்கு எடிட்டிங் போன்ற பல நுட்பங்களை கற்றுக்கொள்ள உதவியாக இருந்த படம் .
திரைப்படப் பள்ளிகள் பற்றி உங்கள் கருத்து என்ன ?
உலகம் முழுவதும் திரைப்படப்பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் எனக்கு நம்பிக்கை கிடையாது. என்னுடைய படைப்புத்திறன் மீதான நம்பிக்கை மட்டுமே கடந்த நாற்பது வருடங்களாக திரைப்படங்களை உருவாக்கச் செய்துவந்திருக்கிறது. பள்ளியில் கற்பவற்றில் பெரும்பாலனவற்றை மறந்து விடுவோம். நாமாகக் கற்றுக்கொள்பவைதான் எப்போதும் நம்மோடு இருப்பவை.
திரைப்படம் எடுப்பது பாதுகாப்பற்ற தொழில். பணம், தொழில் நுட்பம், திட்டமிடுதல் அனைத்தும் சரியாக அமைய வேண்டும். கப்பலைக் கட்டலாம். 5000 எக்ஸ்ட்ராக்கள் கொண்ட ஒரு காட்சியை முக்கிய நடிகர்களுடன் திரைப்படமாக்க ஏற்பாடுகள் செய்யலாம். இறுதி நிமிடம், முக்கிய நடிகருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு அவர் படப்பிடிப்புக்கு வரமுடியது போகலாம். அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒரு சிறு விஷயம் சரியாக அமையாவிட்டால் மொத்த முயற்சியும் தோல்வியடைய நேரும். இத்தகைய பிரச்சினைகளை எப்படிக் கையாளுவது என்பதை படமெடுப்பவருக்கு கற்றுக்கொடுப்பது மிகவும் முக்கியம். பிரச்சினைகளைப் பற்றி புலம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்தத் தொழிலில் இடமில்லை.
 |
நான் திரைப்படப் பள்ளி துவங்குவதாக இருந்தால் அதன் நுழைவு விண்ணப்பம் பூர்திசெய்யும் தகுதி பெற நெடுந்தூர கால்நடைப்பயனம் மேற்கொண்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருக்கும். தூரம் என்றால் உதாரணத்திற்கு மாட்ரிட்டிலிருந்து கீவ் வரை உள்ள 5000 கிலோமீட்டர்கள். நடக்கும்போது எதிர்கொள்ளும் அனுபவங்களை எழுதவேண்டும். எழுதிய பக்கங்களைக் கொண்டு நீங்கள் உண்மையாகவே நடந்து அந்த தூரத்தைக் கடந்தவரா என்று என்னால் சொல்ல முடியும்.
நடந்து பயணம் செய்யும்போது பள்ளி அறையில் கற்பதை விட மிக அதிகம் கற்பீர்கள். இத்தகைய பயணம் ஐந்து வருடங்கள் திரைப்படப் பள்ளியில் கற்பதை விட அதிகம் கற்றுத்தரும். உங்கள் அனுபவம் வகுப்பறைக் கல்விக்கு முற்றிலும் எதிர்மறையானதாக இருக்கும். பள்ளியறை திரைப்படப் படிப்பு திரைப்படத்தை சாகடிப்பது; உணர்வுபூர்வ அணுகுதலுக்கு எதிரானது. என்னுடைய பள்ளி என்று ஒன்று இருந்தால் பல மொழிகளைக் கற்கச் செய்வேன். எதற்கும் அஞ்சாதிருக்க குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற விளையாட்டு சாகசங்களைக் கற்கச் செய்வேன். திரைப்படமெடுக்க விரும்பும் இளைஞர்கள் மனதில் பிரமிப்பையும், கொழுந்துவிட்டெரியும் ஆசையையும், ஏற்படுத்துவது மட்டுமே அவர்கள் திரைப்படங்களை உருவாக்குவதற்கான அடிப்படையாக அமையும்.
முதல் படமான Herakles வெளிவரும்போது உங்களுக்குப் பத்தொன்பது வயது.
இளமையாக இருக்கும்போதே படமெடுக்கத் துவங்கிவிட்டேன். Herakles க்குப் பிறகு திரைக்கதைக்கான கார்ள் மேயர் பரிசை Sighns of Life க்காக பெற்றேன். பரிசுத்தொகை 10,000 டாய்ஷ் மார்க்குகள். எனது திறமையை நான் உணர்ந்துகொள்ள இந்தப் பரிசு உதவியது. அடுத்த படைப்புகளுக்கு எனக்கு உந்துதலாக இருந்தது. 35 எம் எம் மில் எடுத்த அடுத்த குறும்படங்கள் Game in the Sand, The Unprecedented Defence of the Fortress of Duetschkreuz இந்தப் பரிசுப் பணத்தைக் கொண்டு எடுக்கப்பட்டவை.
திரைப்படங்களை எடுக்கும்பொழுது ஆபத்தான முறைகளைப் பின்பற்றுபர், அதிக ‘ரிஸ்க்’ எடுப்பவர், நடிப்பவர்களையும் ஆபத்தான படப்பிடிப்புகளில் ஈடுபடுத்துபவர் என்று சொல்லப்படுகிறதே?
ஆபத்தான வழிகளில் திரைப்படங்களை உருவாக்குபவனாக இருந்தால் இப்போது உங்கள் முன் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க மாட்டேன். என்னுடைய உயிரையோ, படத்தில் பணிபுரிவர் உயிரையோ முட்டாள்த்தனமாக ’ரிஸ்க்’ எடுத்து ஆபத்தில் மாட்டிக்கொள்ளும்படி நான் படங்களை உருவாக்கியதில்லை. ஏதாவது ‘ரிஸ்க்’ எடுக்கும் காட்சி எடுக்கப்பட வேண்டியதிருந்தால் முதலில் அதை என்னைப் பயன்படுத்தி பரிசோதித்து, ஆபத்தில்லை என அறிந்த பிறகே அம்முயற்சியை பிறர் மூலம் செயல் படுத்துவேன்.
Fitzcarraldo திரைப்படத்தை அமேசான் காடுகளில் எடுத்தபோது மிகுந்த காலதாமதமானதற்கு காரணம் ரிஸ்க் எடுக்க வேண்டியிருந்த ஆபத்தான சூழ்நிலைகளோ, படப்பிடிப்புக் குழுவினர் எதிர்கொண்ட பாதுகாப்பு பிரச்சினைகளோ அல்ல. இயற்கை பிரச்சினைகள் படப்பிடிப்பைத் தொடர்ந்து பாதித்தன. சொல்லப்போனால் Fitzcarraldo வில் க்ளாஸ் கின்ஸ்கியை (Klaus Kinski) வைத்து எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டுவிட்டன.
Sighns of Life தயாரிக்க அதிக காலமானது ஏன் ?
படத்தயாரிப்புக்குப் பணம் இல்லாத நிலையில் அமெரிக்காவில் படிக்க உதவித்தொகை கிடைத்தது. அமெரிக்காவில் படிக்கும்போது உருக்குத் தொழிற்சாலைகளில் வேலை செய்து தேவையான பணத்தை சம்பாதிக்கலாம் என பிட்ஸ்பர்கை தெரிவு செய்தேன். ஆனால் நன் சென்ற நேரம் உருக்குத் தொழிற்சலைகள் மூடப்பட்டுக் கொண்டிருந்தன. வந்திறங்கி மூன்றே நாட்களில் உதவிப் பணத்தை திருப்பி அனுப்பிவிட்டு உணவுக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் சில நாட்களைக் கழித்தேன். ஆறு குழந்தைகளிருந்த ஒரு வீட்டில் ஆறுமாதங்கள் தங்க இடம் கிடைத்தது. கணவர் இல்லாது அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த அந்த அன்பான தாய்க்கு நான் நன்றிக்கடன் பட்டவன்.
அந்த நேரத்தில் நாசாவுக்கு (NASA) ஆவணப்படங்கள் தயாரிக்கும் திட்டம் ஒன்றில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. விசா அனுமதியின்றி இருக்கிறேன் என்று தெரிந்தவுடன் வேலை போய்விட்டது. கொட்டும் பனியில் பழைய வோல்க்ஸ்வாகன் கார் ஓன்றில் நியூயார்க் வந்து சேர்ந்தேன். விறைக்கும் குளிரில் காரில் வாழவேண்டிய நிர்ப்பந்தம். என் கால் வேறு உடைந்து கட்டுப்போடப்பட்டிருந்தது. நியூயார்க்கில் என்னைப்போல் தெருக்களில் வாழ்ந்தவர்கள் தினமும் அதிகாலை மூன்று மணி போல ஓரிடத்தில் கூடி தீ மூட்டி குளிர்காய்வது வழக்கம். ஒரு நாள் கால் கட்டை பிரித்துப்போட்டுவிட்டு, எல்லையைக் கடந்து மெக்சிகோ வந்து சேர்ந்தேன்.
அங்கு ஸ்பனிஷ் மொழியை கற்றுக்கொண்டீர்கள் அல்லவா?
ஆம். லத்தீன் அமெரிக்க நாடுகள் எப்போதுமே என்னைக் கவருபவை. தினமும் ஆயிரக்கணக்கான கார்கள் அனுமதி பெற்று எல்லையைக்கடந்து அமெரிக்காவிற்குள் சென்று திரும்பிக்கொண்டிருந்தன. மற்றொரு காரிலிலிருந்து திருடிய அனுமதி ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டிக்கொண்டு அமெரிக்கவிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பல பொருட்களை காரில் கடத்திக் கொண்டுவந்து விற்று பணம் சம்பாதித்தேன் ஒரே ஒரு முறை ஒருவர் வற்புறுத்திக் கேட்டதற்காக கைத் துப்பாக்கி ஒன்றை வாங்கி வந்தேன். அதைக்கொண்டு நான் துப்பாக்கிகளை கடத்தியவன் என்று கதை சொல்லப்படுவதுண்டு. பிறகு ரோடியோக்களில் (Rodeo) காளைகளைக் கட்டுப்படுத்தும் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்பவனாக வேலை செய்துகொண்டிருந்தேன்.
மெக்சிகோவிலிருந்து எங்கு சென்றீர்கள்?
அங்கிருந்து ஐரோப்பாவில் சிலமாதங்கள் சுற்றியலைந்துவிட்டு ஜெர்மனிக்கு திரும்பினேன். Sighns of Life தயரிப்புக்கான வேலைகளைத் துவங்கினேன். ம்யூனிக் அப்போது ஜெர்மனியின் கலைத் தலைநகரமாக இருந்தது. பிற இளம் தயாரிப்பாளர்களுடன் தொடர்புகொண்டேன். தனது முதல் திரைப்படம் Young Torless எடுக்க இருந்த Volker Schlöndorff எனக்கு நெருங்கியவரானார்.
ரெய்னர் வெர்னர் ஃபாஸ்பைண்டரும் (Rainer Wener Fassbinder) அப்போது படங்களை எடுக்கத் துவங்கியிருந்தார், 1968 இல் என்னை அணுகி அவருடைய திரைப்படங்களை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டபோது, அவருடைய திரைப்படங்களை அவரே தயாரிப்பது தான் சரியானது என்றேன். அதன் படியே சுதந்திரமாக தனது சொந்த தயாரிப்பில் படங்களை உருவாக்கத் துவங்கினார்.
உங்கள் திரைக்கதைகள் வித்தியாசமானவை. அவை பற்றி சொல்ல முடியுமா?
என் முதல் திரைப்படங்களில் மிகக் குறைவான வசனங்களே இருந்தன, வசன அமைப்பு புதிய முறையில் இருக்கவேண்டும் எனபது என் விருப்பம். திரைக்கதைகள் (Screenplays) அவற்றிற்கேயான உயிரோட்டம் கொண்டவை. என் திரைக்கதை புத்தகமாக வெளிவரும்போது, புகைப்படங்கள் இன்றி திரைப்படத்தை சார்ந்து இராத ஒன்றாகவே வெளியிடப்படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் திரைக்கதை என்பது இலக்கியம் போல தனித்து நிற்பது.
உங்கள் படைப்புகளுக்கு அரசால் நிதியுதவி ஏதாவது அளிக்கப்பட்டதா?
1960களில் ஜெர்மனிய சினிமாவின் உந்து சக்தியென ஒருவரைச் சொல்லவேண்டுமனால் அது இயக்குநர் அலெக்ஸாண்டர் க்ளூஜ் (Alexander Kluge). அவரின் அயராத முயற்சியால் பல நல்ல காரியங்கள் நிகழ்ந்தன. திரைப்பட நிதியுதவிச் சட்டத்திற்கு பின்புலம் அவர்தான். ஜெர்மனிய திரைப்படப் படைப்பாளிகள் ஒரு சங்கத்தைத் துவங்கினர். அவர்களின் பார்வைக்கு நம் படக்கதையை அனுப்பி, அது அங்கீகரிக்கப்பட்டால் 300,0000 டாய்ஷ் மார்க்குகள் உதவித் தொகை கிடைக்கும். என்னதான் பரிசுகளும் பாரட்டுகளும் என் படங்களுக்குக் கிடைத்திருந்தாலும் இரண்டு வருடங்கள் இந்த உதவிப்பணம் எனக்கு மறுக்கப்ட்டது.
இருபத்தி இரண்டு வயதில் Sighns of Life ஐ முடித்து வெளியிட்டேன். அப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தேசிய விருது பெற்றிருந்த போதும் படத்தை விநியோகம் செய்வதற்கு ஆளில்லை. பெர்லின் திரைப்பட விழாவில் Silver Lion விருதையும் இப்படம் வென்றது. இதற்காக ஒரு பத்திரிகை ஏற்பாடு செய்த திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்டபோது வந்திருந்தவர் ஒன்பது பேர்கள் மட்டுமே. தொடர்ந்து வெளிவந்த எனது படைப்புகள் மீது பார்வையாளரின் கவனத்தைத் திருப்புவதற்கு நான் வெகு பாடு படவேண்டியதிருந்தது.
மகிழ்ச்சிக்கான வழிகளைத் தேடிக்கொண்டிருப்பது என்பது உங்கள் வாழ்கைத் தேடலாக எப்போதும் இருந்ததில்லை என்கிறீர்கள். திரைப்பட உருவாக்கம் உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது.
தேடல்கள் எனக்கு இல்லை. வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய கேள்விக்கு எளிமையான விடை இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எனது வேலை எப்போதும் மகிழ்ச்சியைத் தந்து வந்திருக்கிறது. சரியாகச் சொல்லப்போனால் நான் அதிகம் நேசிப்பது திரைப்படமெடுக்கும் எனது பணியை. இந்தப் பணி எனக்குக் கிடைத்த பரிசு. நான் இந்தத் துறையில் பல தடைகளைக் கடந்து வந்தவன். இருந்தும் சிறந்த படைப்பாற்றல் கொண்ட பலருக்குக் கிட்டாத அளவு வாய்ப்புகள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. எப்போது எனது பதினான்கு வயதில் திரைப்படங்களைப் படைப்பதுதான் எனது கடமை என உணர்ந்தேனோ அப்போதிலிருந்து எனது எண்னங்களை இத்துறையில் செயல்படுத்துவது ஒன்றே எனது குறிக்கோளாக இருந்துவந்திருக்கிறது.
இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com
முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi |