இதழ்: 15     வைகாசி - 2014 (May)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 10 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 9 - ராஜேஷ்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 1 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------

ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் 3 - பால் க்ரானின் - தமிழில்: ஆனந்த், கோணங்கள்

--------------------------------
விருப்பம் வேலையானால் 2 – பிலிம்நியூஸ்ஆனந்தன் - தினேஷ் குமார்

--------------------------------

பாலுமகேந்திரா நினைவுக்கூட்டம் - 2 - தினேஷ் குமார்

--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 1 - பி.கே. நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 1 - என்.சி.நாயுடு
--------------------------------
சந்திரபாபு - சித்ராலயா
--------------------------------
 
   
   

 

 

உலக சினிமா சாதனையாளர்கள் - 1

ராபர்ட் ஃப்ளஹர்ட்டி (1992-  சலனம்)

- என்.சிநாயுடு :: தட்டச்சு உதவி: தினேஷ் குமார்


புவியியல் நூல்கள், இலக்கியங்கள் ஆகியவற்றின் வழியாகவே அறியப்பட்டு வந்த எஸ்கிமோ இன மக்களின் வாழ்க்கையினை , நாகரீக மனித உலகத்திற்கு “சினிமா” என்ற உயர்ந்த சாதனத்தின் வழியாக முதன் முதலில் எடுத்துக்காட்டியவர் ராபர்ட் ஃப்ளகர்டி . படப்பிடிப்பு இடம் , நடிப்புதிறன் ஆகியவற்றிற்கு சினிமா அகராதியில் புதிய இடம் பிடித்துத்தந்து , ஒடுக்கப்பட்ட இனத்தவர்களுக்கு குரல் எழுப்பியவராகவும் , டாக்குமென்ட்ரி படங்களின் முன்னோடியாகவும், பாதுகாவலராகவும் விளங்கியவர் இவர். ஃப்ளகர்டி தனது முடல் படமான “நானூக் ஆப் தி நார்த்”தை படமாக்கிய விதமே சிறப்பானது. எஸ்கிமோ இன மக்களை பற்றிய முதல் படமான இதை தயாரிக்க அந்த இன மக்களோடு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருந்து , அம்மக்களோடு மக்களாக கலந்து வாழ்ந்து படம் பிடித்தார். சுதந்திர மனிதர்களான எஸ்கிமோக்களின் வாழ்க்கைப் போராட்டம் நம்மால் கற்பனை செய்தும், அனுபவித்தும் உணர முடியாத அளவிற்கு உள்ளது என்பதை தெளிவாக விளக்கும் ஆவணமாகும் இது.

ராபர்ட் ஃப்ளகர்ட்டி, சூசன் என்ற ஜெர்மானிய ரோமன் கத்தோலிக்க பெண்ணுக்கும், ராபர்ட் ஹென்றி ஃப்ளகர்ட்டி என்ற அயர்லாந்து நாட்டிலிருந்து குடியேறிய பிராடஸ்டண்டு கிறிஸ்தவருக்கும் பிறந்த ஏழு குழந்தைகளுள் மூத்தவர். 1884 ஆம் ஆண்டு, பிப்ரவரி 16ம் நாள் மிசிகனில் உள்ள ‘அயன் மௌண்டன்’ என்ற இடத்தில் பிறந்தார்.

சுரங்கத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த ராபர்ட், ஹட்ஸன் விரிகுடாவின் கிழக்குக் கடற்கரையை சுற்றி, சங்கிலித் தொடர் போன்று அமைந்துள்ள தீவுகளில் இரும்புத் தாதுக்கள் கிடைக்கின்றனவா என சோதித்து அறிவதற்காக அமர்த்தப்பட்டார். தீரச்செயல் புரிதல் என்ற ஒன்றினை பரம்பரையாக இரத்தத்தில் கொண்டிருந்தார் என போற்றப்பட்ட ஃப்ளஹர்ட்டி, தனக்குத் தரப்பட்ட வேலையினை சவாலாக எடுத்துக்கொண்டு, இயற்கையின் சீற்றத்தையும் பொருட்படுத்தாமல், குறிக்கோளுடன் கூடிய துணிகர பயணத்தை நடந்தும் சில நேரங்களில் துடுப்பால் இயங்கும் படகின் உதவியோடும் நடத்தினார். டைரி,ஸ்டில் காமிரா ஆகியவற்றைக்கொண்டு குறிப்புகளை சேகரித்தும்,ஆராய்ந்தும்,புகைப்படங்கள் எடுத்தும்,கடற்கரை ஓரமாகவே பயணித்தமை, அத்தீவுகளின் அமைப்பு பற்றி ஏற்கனவே உள்ள வரைபடங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சுட்டிக்காட்ட ஏதுவாக அமைந்தது. மெக்கன்ஸி என்பவரால் மேற்கண்ட துணிச்சலான காரியத்தில் ஈடுபடுத்தப்பட்ட ஃப்ளஹர்ட்டியின் பயணத்திற்கு, ஐஸ்கட்டிகளை உடைத்து, பாதை அமைத்துத்தரும் சக்தி வாய்ந்த “தி லடி” என்ற படகும், பிற பொருட்களும் தரப்பட்டன. மேலும் ஃப்ளஹர்ட்டியை நோக்கி, திரைப்படம் எடுக்கும் காமிராவினையும் எடுத்து செல்லுமாறு எந்த வித தீவிரமும் இல்லாமல், சர்வசாதாரணமாக கூறினார் மெக்கன்ஸி. ஆனால் மேற்சொன்ன காமிராவினை இயக்கவே, நியூயார்க் ரோசெஸ்டரில் உள்ள ஈஸ்ட்மென் கம்பெனியில் ஃப்ளஹர்ட்டி மூன்று வாரம் பயிற்சி பெற வேண்டியிருந்தது. 1912ல் துவங்கிய ஃப்ளஹர்ட்டியின் இந்த பயணம், 1915ல் முடிவடைந்தபோது, நான்கு அல்லது ஐந்து முறை பனிப்பிரதேசங்களுக்கு அவர் செல்ல வேண்டிய நிர்பந்த்த்தினை உருவாக்கியது. இறுதியாக சுமார் எழுபதாயிரம் அடி படப்பிடிப்புடன் பயணம் முடிவடைந்தது.

அந்தோ! விதியை என்ன செய்வது? இவ்வளவு கடின உழைப்பினால் உருவான படச்சுருள், மறதியில் அவராமல் போடப்பட்ட சிகரெட் துண்டினால் சாம்பலாகியது. பிறருக்கு என்றால் வாழ்வு, அத்தோடு முடிவடைந்த முற்றுப்புள்ளி ஆகியிருக்கும். ஆனால் துன்பதைக் கண்டு சிறிதும் துவளாத ஃப்ள்ஹர்ட்டியோ அதனை அரைப்புள்ளியாக எண்ணி, மீண்டும் முயற்சியில் ஈடுபடலானார். அவருக்கு பணம் கொடுத்து உதவுவதற்கு ரெவில்லான் பெரேரஸ் கம்பெனியை சார்ந்த ஜான் ரெவில்லான் முன்வந்தார். ஐம்பத்தி மூன்றாயிரம் டாலரில் பட்ஜெட், காலவரம்பில்லாமல் ஐநூறு டாலர் ஃப்ள்ஹர்ட்டிக்கு சம்பளம். கருவிகளுக்காக பதிமூன்றாயிரம்,பிறருக்கான ஊதியம் மூன்றாயிரம் டாலர் என பங்கீடு செய்யப்பட்டது.

“நானூக் ஆப் தி நார்த்”(1992) படத்தினை உருவாக்கும் போது,எஸ்கிமோக்களின் போராட்டம் நிறைந்த ஒன்றாக இருப்பதனையும்,இயற்கையின் பல பரிமாணங்களை எதிர்கொள்ளுமாறு அமைந்த வாழ்க்கை முறையினையும், உணவு தேடி அலையும் முயற்சியில் அவர்களின் திறமை பலவீனப்படுத்தப்படும் தன்மையினையும் ஃப்ளஹர்ட்டியால் நன்கு உணர முடிந்தது.இந்த உணருதலின் உந்துதல்தான், தனிமனிதர்களின் செயல்களிலிருந்து கதையின் கரு பிறக்காமல், மனித இனத்தின் உண்மையான வாழ்விலிருந்து கதை பிறக்க வேண்டும் என்ற உண்மையினை அவருக்குக் காட்டியது.

ஃப்ளஹர்ட்டி தான் எதனை படமாக்க விரும்பினாரோ, அந்த இன மக்களோடு வாழ்ந்து, அவர்களின் வாழ்க்கைமுறையினை அறிந்து கொண்டால்தான் எடுக்கப்படும் படம் சிறப்பானதாகவும், கருத்தாழமிக்கதாகவும் இருக்கும் என்று கருதி அப்படியே சிறிது காலம் அவர்களுடன் வாழ்ந்து, உண்மையில் நடந்த நிகழ்ச்சிகளைப் படமாக்கிய திருப்தியினை அடைந்தார். பொதுவாக படங்களில் கதை, உண்மை நிகழ்ச்சி போல் காட்டப்படும். ஆனால் ஃப்ளஹர்ட்டியோ தனது படத்தில் உண்மையாக நடக்கும் காட்சிகளையே படமாக்கினார்.இது போன்று பூமியைச் சுற்றி அமைந்துள்ள ஒழுங்கற்ற பனிப்பிரதேசங்களில் வாழும் எஸ்கிமோக்களிடம் மனித இனத்தின் அடிப்படை தேவையாகிய அன்பு மற்றும் நல்லெண்ணம் போன்ற குணங்கள் குடி கொண்டிருப்பதனையும்,இவர்களின் வாழ்வை உலகினை ஆட்டுவிக்கும் நவீன தொழில்மயம் இன்னும் ஆட்கொள்ளவில்லை என்பதையும் அறிந்து கொண்டார். நாகரீகத்தால் அதிகம் பாதிக்கப்படாத இது போன்ற பனிப்பிரதேசங்களில் வாழ்க்கை முறையினை நேரத்தை அடிப்படையாக்க் கொண்டு அமைத்துக்கொள்ள முடியாது. பருவ நிலையினைப் பொறுத்துதான் வாழ்வின் பழக்க வழக்கங்களை நிர்ணயித்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்த ஃப்ளஹர்ட்டி, அம்மக்களுக்கு ஏற்றவாறு தன்னை சிறிது காலம் மாற்றிக்கொண்டு அவர்களோடு வாழ்ந்து படம் எடுத்தார். மனித இனத்தைப் பற்றியும் இடங்களைப் பற்றியும் அறிந்து கொள்வதிலும், கூர்ந்து கவனிப்பதிலும் அதிக ஆர்வமுள்ள அவரை இந்த சிறுபான்மை மக்களின் வாழ்க்கைமுறை மிகவும் கவர்ந்த்து. மற்ற இயக்குனர்கள், வழக்கம்போல்,இவரின் கருத்துக்கு மாறுபட்டவர்களாக தோற்றமளித்தார்கள்.ஏனென்றால் பெரும்பாலான இயக்குனர்கள் நாகரிக மனிதர்களைப் பற்றியும், அவர்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைப் பற்றியும் சொல்வதுதான் சினிமா என்ற கருத்துக்கு ஆட்பட்டிருந்தார்கள். மேலும் அவர்கள் சினிமா என்பது வளர்ச்சி அடைந்த மனித இன உணர்ச்சிகளை மட்டும் படம் பிடித்துக் காட்டும் சாதனம், நாகரிகத்தின் பிடியில் சிக்காத பாமர மனிதர்களை படம் பிடிக்க தோன்றியதல்ல என்ற தவறான மனப்பான்மையினை உடையவர்களாக இருந்தார்கள்.

“நானூக் ஆப் தி நார்த்” படத் தயாரிப்பே ஒரு சுவையான கதை. ஏனென்றால் இப்படம் நம்மால் புரிந்து கொள்ள முடியாமலும், உணர முடியாமலும், ஆனால் படிக்கப்பட்டு மட்டும் வந்த உலகின் ஒரு பகுதியினை மிகுந்த அளவில் எடுத்துக் காட்டிய படம். இப்படத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் படம் முழுவதும் இணைந்தே இழையோடி வருகிறது. இது ஆர்டிக் பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வு மற்றும் காதல் என்பதாகும். “பனிப்பிரதேசத்தின் கதை“ என்றும் இப்படத்தினைக் கூறலாம். படம் துவங்குகிற்து.’எந்த மனித இனமும் இங்கு உயிர் வாழ முடியாது… இருந்தாலும் இங்கு உலகின் மிக மகிழ்ச்சியான,பயமற்ற,அன்புமிக்க,அதிர்ஷ்டமுள்ள மக்களான எஸ்கிமோக்கள் வாழ்கிறார்கள்’ என்று தலைப்பு அட்டை காட்டப்படுகிறது.

வரைபடம் ஒன்று ஹட்சன் விரிகுடாவின் கிழக்குக் கரை ஓரமாக அமைந்துள்ள “அங்காவா பெனுசுலா”வினைக் காட்டுகிறது.அடுத்து க்ளோஸ்-அப் காட்சிகள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான “நானூக்”,(அல்லாக்கரியல்லாக் என்பவரால் இந்த பாத்திரம் செய்யப்பட்டுள்ளது) அவனுடைய மனைவி “னைலா” மற்றும் குடும்பத்தின் அங்கத்தினர்கள் அனைவரும் ,(ஒரு சர்க்கஸில் கோமாளிகள் அறிமுகப்படுதப்படுவது போல்) அவர்கள் வசிக்கும் மிக சிறிய எஸ்கிமோக்களின் வீட்டிலிருந்து வருவது போல் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.படத்தைப்பார்ப்பவர்கள், இத்தனைபேர்களும் இந்த சிறிய வீட்டில் எப்படி வசிக்கிறார்கள் என்று நிச்சயம் வியப்புறுவார்கள். இவ்வாறு அவர்கள் ஒரே சிறிய இடத்தில் உறங்கும் போது ஏற்படும் வெப்பக்காற்று அந்த பனிப்பிரதேசத்தின் கடுமையான குளிரிலிருந்து அவர்களை ஓரளவிற்கு பாதுகாக்கிறது. அடுத்து வரும் காட்சியில் அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான படகு காட்டப்படுகிறது.அதனைத்தான் அவர்கள் தரையிலும்,நதியிலும் பயணம் செய்வதற்கும், வியாபாரத்திற்காக மிருகங்களின் தோல் மற்றும் பொருள்களை விற்பனை செய்யும் இடத்திற்கு எடுத்துச்செல்லவும் பயன்படுத்துவார்கள். பிறகு அவர்களின் வால்ரஸ் வேட்டை,மீன் பிடிப்பு போன்ற காட்சிகள் படத்தில் காட்டப்படுகின்றன.

படம் நகருகிறது… ஒரு காட்சியில் நானூக்கின் மனைவி நைலா, தனது கணவனின் பூட்ஸ் தோலினை பற்களால் கடித்து பதப்படுத்துவது போலவும், பிறகு தனது குழந்தையை வாயில் ஊரும் எச்சிலைக் கொண்டு கழுவுவது போலவும், அதே நேரத்தில் தனது எச்சிலால் ஸ்லெட்ஜ் வண்டியின் ஓடப்பயன்படும் அடிப்பாகத்தினை மெருகேற்றுவது போலவும் காட்டப்படுகிறது.

படம் தீர்மானிக்க முடியாத அளவிற்கு துயரக்காட்சிகளோடு முடிவடைகிறது. குடும்பமே சிதைகிறது. நாய்கள் பனிபடர்ந்த கம்பளியின் கீழ் படுத்துறங்குகின்றன.வரப்போகும் விடியல், இயற்கையாக அமையப்பெற்றுள்ள என்னென்ன துன்பங்களையெல்லாம் அவர்களுக்குக் கொடுக்கப்போகிறதோ என்ற கேள்விக்குறியுடன் படம் முடிவடைகிறது.

ஒரு பொருள் தான் பெற வேண்டிய சிறப்பினை, அதன் பெருமையினை அறிந்தவரிடம் சென்றடைந்தால் மட்டுமே பெற முடியும்.அதுபோலவே “நானூக் ஆப் தி நார்த்” படம் அதன் இயக்குனரான ஃப்ளஹர்ட்டி படமாக்க வேண்டும் என்பதற்காகவே அமைந்திருந்தது போல் உள்ளது.ரிச்சர்ட் பார்சம் என்பவர், “ தி விஷன் ஆப் ராபர்ட் ஃப்ளாஹர்ட்டி” என்ற நூலில் இப்படத்தினைப் பற்றி குறிப்பிடுகையில் ,”இப்படத்தின் கதாநாயகன் நானூக்கும், இப்படத்தின் இயக்குனர் ஃப்ள்ஹர்ட்டியும், தத்தம் தொழிலில் வல்லவர்கள், கலைஞர்கள் , நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் ; இருவரும் அவரவர்களின் போற்றத்தக்க வாழ்வின் பெருமையினையும் மகிழ்ச்சியினையும்,அன்பையும் உணர்ந்தவர்கள் “ என்றும், ”நானூக், அவன் வாழும் இயற்கை சூழலின் உண்மையான பிரதிநிதி; தன்னை நன்குணர்ந்த, ஆணவமற்ற, அடக்கம் மிகுந்த,இயற்கையின் சீற்றத்துக்கு சவால்விட்டு வாழ்வா?,சாவா? என்ற போராட்டத்தை தினம் சந்திக்கும் மனிதன்” என்று எழுதுகிறார். படத்தில் நானூக்கின் பாத்திரப்படைப்பும், கொடுமையான பனிப்பிரதேசத்தின் குளிரும்,படத்தைப் பார்ப்பவர்களால் உணரப்படாமலும், உயிர் வாழ்வதற்காக அங்கு நடக்கும் போராட்டம் சிறப்பான நாடகக்காட்சி போல் படம் பார்ப்பவர்க்குத் தோன்றினால்,அது பார்வையாளரின் குறையேயன்றி, படத்தில் மிளிரும் உண்மையும்,எதார்த்தமும் போற்றத்தக்கதே. இந்தப்படத்தினைப் பற்றி எழுந்த முக்கியமான விமர்சனத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். விமர்சகர்கள் , படம் கற்பனை கதையினை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் போன்றோ அல்லது உண்மையானதும், நம்பத்தகுந்ததுமான அறிவியல் சார்ந்த மனித இனத்தின் விவரிப்பாகவோ தோன்றவில்லை என்றார்கள்.

மேற்சொன்ன கருத்தை எடுத்துக்கொண்டு பார்க்கும் போது, படம் உண்மையாகவே ஆர்டிக் போன்ற பனிப்பிரதேசங்களில் வாழும் எஸ்கிமோ இன மக்களைப் பற்றிய படம் என்ற போதிலும் , படத்தில் இந்த மக்களின் பழக்க வழக்கங்கள் காட்டப்படவில்லை என்பது ஒரு குறையாகவே சுட்டிக்காட்டப்பட்டது. (ஃப்ளஹர்ட்டியின் நோக்கில் இதனை பார்ப்போமேயானால், நிகழ்ந்திருக்கக்கூடியது என்னவென்றால், உயிரினம் இருக்க முடியுமா? என எண்ணக்கூடிய இடத்தில் எப்படி இந்த எஸ்கிமோக்கள் இவ்வளவு போராட்டத்துக்கிடையிலேயும், மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று ஆச்சரியத்துடன் எழும் கேள்வியே பெரியதாக தோன்றியிருக்கக்கூடும். அவர்கள் சிறு கூட்டம் கூட்டமாக, இடம் விட்டு இடம் மாறிக்கொண்டு வாழ்ந்து வருபவர்கள். பாதுகாப்பு மிகுந்த இடங்களில் வாழும் நாகரிக மக்கள் சமுதாயத்திற்கு எஸ்கிமோக்களின் பழக்க வழக்கங்கள் சில வேளைகளில் நகைப்புக்குரியதாக கூட தோன்றலாம் என்ற எண்ணத்தால் அவைகளை ஃப்ளஹர்ட்டி தனது படத்தில் காட்டாமல் இருந்திருக்க கூடும் என்று எண்ண முடிகிறது. எஸ்கிமோக்களின் திருமணம், பழக்க வழக்கங்கள் , பாலின வாழ்க்கை போன்றவைகளை காட்டாமல் இருப்பதனால், அறிவியல் சார்ந்த மனித விவரிப்புப் படமாக இல்லாமல், கலைப்பூர்வமான படமாக கருதப்படுகிறது. மேலும் இந்த படம், மனிதனின் உழைப்பு, வாழ்வதற்கான ஆற்றல், நிலையான நேர்மை போன்றவைகளை காட்டுகிறது.

படம் எடுக்கப்படும்போது ஃப்ளஹர்ட்டி, தொழில்நுட்ப ரீதியாக மற்ற பட இயக்குனர்கள் போல் திறமைமிக்கவராக விளங்கவில்லை. படத்தில் சில இடங்களில் காமிரா கோணம் சாய்ந்த நிலையில் சரிவர படமாக்கப்படாமல் இருந்தாலும், படத்தின் இடையிடையே காட்டப்படும் தலைப்பு அட்டை (இண்டர் டைட்டில்) இந்த குறையினை நிவர்த்தி செய்கிறது. ஆனால், படம் எடுக்கப்பட்ட பனிப்பிரதேசத்தின் சூழ்நிலை, வெளிச்சம், தளம் போன்றவைகளை கருத்தில் கொண்டு நாம் பார்த்தால் இந்த குறைகள் சர்வ சாதாரணமானவையே. படம் முதலில் வெளியிடப்பட்ட போது, ஒலி சேர்க்கப்படாமல் இருந்தது. ஆனால் படம் 1947 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் மறுபடியும் வெளியிடப்பட்ட போது, ஒலி சேர்க்கப்பட்டாலும், படம் ஒலி இல்லாமல் வெளியானபோது தோற்றுவித்த உணர்வை எடுத்துச்சென்றதாகவே கருத்து வெளியானது.

ஃப்ளஹர்ட்டிக்கு “நானூக் ஆஃப் தி நார்த்” படம் எடுத்ததே பெரிய நிகழ்ச்சியாக இருந்தது. மேலும் படத்தை வெளியிடுவதிலும் நிறைய பிரச்சனைகள் தோன்றின. ஏனெனில், பெரும்பாலான மக்கள் மனதில் திரைப்படங்கள் பொழுது போக்குவதற்கே என்ற எண்ணம் வேரூன்றியிருந்தது. அப்பொழுது வழக்கத்திலிருந்து மாறுபட்ட படங்கள் குறைவாகவே உருவாகின. படம் என்றால் இன்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தார்கள். இறுதியாக ‘பதே’ என்ற கம்பெனி படத்தை விநியோகிக்க முன் வந்தார்கள். “நானூக் ஆஃப் தி நார்த்” படத்தினை ஹெரால் லாயிட்ஸின் “கிராண்ட் மாஸ் பாய்” படத்துடன் சேர்த்து நியூயார்க்கிலுள்ள “கேப்பிட்டல்” தியேட்டரில் திரையிட்டார்கள், படத்தினைப் பார்த்தவர்கள் படம் புதுமையானதாகவும், நன்றாகவும் உள்ளது என பாராட்டினார்கள். ஃப்ளஹர்ட்டி எஸ்கிமோ இன மக்களோடு உண்மையிலெயே சில காலம் வாழ்ந்து, அவர்களின் வாழ்க்கையினை உள்ளபடியே டாக்குமெண்டரி படமாக எடுத்து வெளியிட்டுள்ளார் என்ற கருத்து வேறு, படத்தின் வெற்றிக்கு துணை நின்றது. அந்த காலகட்டத்தில் மக்கள் சாகசம் புரிவதிலும், துணிகர பயணம் மேற்கொள்வதிலும் விருப்பம் கொண்டவர்களகவும் , நல்ல விஷயங்களை கேட்பதற்கும், பார்ப்பதற்கும் தயராகவும் இருந்தார்கள். படம் இது போன்ற நேரத்தில் வெளிவந்தது, லண்டன் பாரீஸ் ஆகிய இடங்களில் ஆறு மாதங்களும், ஜெர்மனி, இத்தாலி, ஸ்காண்டிநேவியா போன்ற இடங்களில் அதற்கு அதிகமாகவும் படம் ஓடியது.

நானூக் படம் தயாரிக்க அந்த காலத்திலேயே 55,000 டாலர் பணம் செலவாகியது. அந்த செலவு அப்பொழுது அதிகமாக கருதப்பட்டது. 1926 செப்டம்பரில் ஃப்ளஹர்ட்டி உலகம் முழுவதிலிருந்தும், இப்படத்தின் வாயிலாக சுமார் 2,51,000 டாலர் வசூல் வந்தது என்று தெரிவித்தார். இதனால் லாபமாக கிடைத்த 36,000 டாலர் தொகையினை ஃப்ளஹர்ட்டியும், தயாரிப்பாளர் ரெவில்லான் பேரேரஷீம் பங்கிட்டுக்கொண்டார்கள். நமது பார்வைக்கு அசாதாரணமான சூழ்நிலையில் வாழும் எஸ்கிமோக்கள் (அவர்களுக்கு இயல்பு) என்ற மக்களைப் பற்றி வெளியான ”நானூக்”, என்ற இந்தப் படம் டாக்குமெண்டரி படம் என்று விமர்சிக்கப்பட்டாலும், படத்தின் வெற்றி அதனை டாக்குமெண்டரி படம் என்று எண்ண வைக்காமல், முழு நீள திரைப்பட வரிசையில் அதற்கு இடம் பிடித்து தந்தது என்ற விமர்சனமும் எழுந்தது. இந்த வெற்றிக்கு காரணம் ஃப்ளஹர்ட்டியும் அவரது செல்லமான “நானூக் ஆப் தி நார்த்”,தும் ஆகும் என்பதில் சந்தேகமே இல்லை.

”நானூக்” பட இயக்கம் மற்றும் வெளியீட்டுக்குப் பிறகு சுமார் ஒன்பது மாத காலத்திற்கு ஃப்ளஹர்ட்டியின் திரையுலக வாழ்வில் சிறிது தொய்வு ஏற்பட்ட்து. இதற்குப் பிறகு பாரமவுண்ட் பிக்சர்ஸின் படத்தயாரிப்பு பிரிவாகிய புகழ்வாய்ந்த “லாஸ்கி” குழுவின் ஜசே லாஸ்கி என்பவர் அடுத்த படம் தயாரிக்கும் வாய்ப்பினை ஃப்ளஹர்ட்டிக்கு அளித்தார். காரணம், ஃப்ளஹர்ட்டிக்கு அதிகமான விளம்பரத்திற்கு, விமர்சனத்திற்கும் ஆட்பட்டிருந்தமையும், “நானூக்” பட வெற்றியும்தான். மேலும் அவரின் அடுத்த படம், நானூக் போல மீண்டும் ஒரு வெற்றிப் படைப்பாக அமைய வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. “நானூக்” என்ற சிறந்த படைப்பின் பின்னால் எத்துனை கடுமையான உழைப்பு, போராட்டம், எஸ்கிமோக்களின் வாழ்க்கையினை திரையில் கொண்டு வர தானும் அவர்களோடு வாழ்ந்த வாழ்வு என்ற தியாகம் போன்றவைகள் யாராலும், எப்போதும் மறக்க முடியாத ஒன்றாகும்.

பல்வேறு சிந்தனைகளூக்கிடையேயும் ஃப்ளஹர்ட்டியின் மனதினை ஒரு விஷயம் உறுத்திக்கொண்டே இருந்தது. அது என்னவென்றால், மறந்துவிட்ட அவரது குடும்ப வாழ்க்கையும், குடும்பத்தினர்களுக்கு செய்ய வேண்டிய கடமையும் ஆகும். பனிப்பிரதேசங்களுக்கு சென்று “நானூக் ஆப் தி நார்த்” படப்பிடிப்பில் அதி தீவிரமாக மூழ்கி விட்டமையால், சிறிது காலம் மறந்திருந்த குடும்பத்தினரை, தனது அடுத்த படம் எடுக்கும்போது உடன் கட்டாயம் அழைத்துச்செல்ல தீர்மானித்தார். அவர் எடுத்ததாக “பாலினேஷன் கல்சர்” என்பதைப் பற்றி படமெடுக்க விரும்பி., நியூசிலாந்து, ஹவாய், சமோவான் போன்ற தீவுகளில், தென்கடலில் உள்ள சமோவான் தீவினை தேர்ந்தெடுத்து, குடும்பத்தினருடன் படப்பிடிப்புக்காக அங்கே சென்றார். அங்கு அவர்களுக்கு சாதகமான தட்ப வெப்ப நிலை அமைந்தது. 1923 ஏப்ரலில் தனது துணைவியார், மூன்று மகள்கள், தனது இளைய சகோதரர் டேவிட், ஒரு நர்ஸ் ஆகியோருடன் சமோவான் தீவிலுள்ள “சவை” என்ற இடத்தினைச் சார்ந்த “சபூனா” என்ற கிராமமே, 1924 டிசம்பரில் அமெரிக்கா திரும்பும்வரை ஃப்ளஹர்ட்டி மற்றும் குடும்பத்தினருக்கு வீடாக திகழ்ந்தது.

ஃப்ளஹர்ட்டி அங்கே சென்றபோது அவருடன் பதினாறு டன் எடை கொண்ட படப்பிடிப்பு கருவிகள், கறுப்பு வெள்ளை படமெடுக்க படச்சுருள், “நானூக்” படமெடுக்க உபயோகித்த அஃஹிலே காமிரா, படமெடுத்து கழுவ பயன்படும் சாதனங்கள், மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் போன்றவைகள் எடுத்துச்செல்லப்பட்டன. இந்த முறை அவர் பான் குரோமேட்டிக் பிலிமில் படமெடுக்க விரும்பி “பிரைஸ்மா” கலர் காமிராவினையும் எடுத்துச்சென்றார்.

“மோனா” என்ற படத்தினை எடுக்க அவருக்கு மூன்று வருடங்கள் பிடித்தது. படப்பிடிப்பில் சிறிய மற்றும் பெரிய பிரச்சனைகள் உண்டாயின. அவைகளில் ஒன்று அங்கு அமைந்த வாழ்க்கைச்சூழல், அங்கு வசித்த மக்களுடன் சிறு சச்சரவுகள் மற்றும் ஃப்ளஹர்ட்டிக்கு உண்டான உடல் நலக்குறைவு போன்றவை. முதற்படமான “நானூக்” படம் எடுக்கும்போது, நாடுகளைப்பற்றி ஆராயும் நோக்கம் கொண்டவராக, ஆர்டிக் பகுதியை நன்கு ஆராய்ந்து அறிந்த பிறகே படமாக்கினார். ஆனால், “மோனா”வினை படமாக்கிய இடமான தெற்குக் கடலைப் பற்றி படித்து மட்டுமே இருந்தார். அந்த இடத்திற்கு படம்பிடிக்கும் ஒரே நோக்கத்திற்காகவே முதன் முதலில் சென்றார்.

“மோனா” படத்தினைப் பற்றியும் பல்வேறு கருத்துகள் சொல்லப்பட்டன. “மோனா” படத்தைத்தான் டாக்குமெண்டரி வகைப்படம் என்று ஜான் கியர்சன் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஃப்ளஹர்ட்டி, இயற்கையிடம் மனிதன் நடத்தும் போராட்டத்தை மீண்டும் படமாக்க திரும்பினார். “மேன் ஆப் அரன், தி லேண்ட்” மற்றும் “லூசியானா ஸ்டோரி” போன்ற படங்களை எடுத்தார். ஃப்ளஹர்ட்டிக்கும், ஹாலிவுட் படக்காரர்களுக்குமிடையே கருத்து வேற்றுமை தோன்றியது. பெரும்பாலான ஹாலிவுட்காரர்களின் முக்கிய நோக்கம் பணம் சம்பாதிப்பது ஒன்றே. இந்த கருத்திலிருந்து மாறுபட்டமையால், ஃப்ளஹர்ட்டிக்கு வாய்ப்புகள் குறைந்தன. அதற்குப் பிறகு வாய்ப்புகள் வந்தாலும், நடிகர்கள், திரைக்கதை போன்றவைகளில் இவருக்கும், தயாரிப்பாளருக்கும் இடையில் மாறுபட்ட கருத்துகள் தோன்றின.

1930 டிசம்பரில் ஐரோப்பாவிற்கு சென்று அங்கு ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி ஃப்ளஹர்ட்டி அமெரிக்கா திரும்பினார். பிறகுதான் “தி லேண்ட்” படத்தை உருவாக்கினார். 1932ஆம் ஆண்டிற்கும், அவர் மறைந்த ஆண்டாகிய 1951க்கும் இடையில் அவர் நான்கு படங்களே எடுத்தார்.

ஃப்ளஹர்ட்டி, வழக்கமான படமெடுக்கும் இயக்குனர்களின் வரிசையிலிருந்து மாறுபட்டவர். நல்ல கலை படைப்புகளை உருவாக்க தான் நாடோடி போல் வாழ்ந்து படமெடுத்தார். அவர் தீவிரமான சுய ஆலோசனைக்குப் பின் தன் வழியினை மேற்கொண்டார். பெரும்பாலான இயக்குனர்கள் பணம் ஒன்றினையே குறிக்கோளாக கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நல்ல படம் என்பது, அதிக லாபம் சம்பாதித்து தருவதாகவே இருந்தது. அவர்கள் தாங்கள் செய்யும் தவறினை மறைப்பதற்கு, தங்களின் படத்திலும் ஒரு செய்தி இருப்பதாகவும், தங்களுக்கும் சமுதாய நலனில் பொறுப்பு இருப்பதாகவும் தங்களிடம் கேள்வி கேட்பவர்களிடம் கூறி தப்பித்துக் கொள்வார்கள். இருந்தாலும், அவர்களின் பேச்சில் உண்மையில்லை என்பது யாவரும் அறிந்ததே.

ஃப்ளஹர்ட்டியின் டைரி குறிப்பொன்று, ஆர் நானூக் படத்தினை முடித்து, அந்த பனிப்பிரதேசத்தை விட்டு வரும் போது, “நானூக்” என்ற எஸ்கிமோ அவர் செல்லும்போது வழியனுப்ப வந்து, நீண்ட நேரம் கையசைத்து, ஃப்ளஹர்ட்டிக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைத்தார் எனக் கூறுகிறது. இப்படியான அன்புள்ளம் கொண்ட “நானூக்” இரண்டு ஆண்டுகள் கழிந்த பிறகு, பசியாலும், பட்டினியாலும் இறந்த செய்தி, ஃப்ளஹர்ட்டிக்கு கடிதம் வழியாக யாரோ ஒருவரால் தெரிவிக்கப்பட்டது. (எஸ்கிமோ இன மக்களிடையே பசியாலும், பட்டினியாலும் இறப்பது சர்வ சாதாரணம்). பணம் ஒன்றினையே குறிக்கோளாக ஃப்ளஹர்ட்டி கருதியிருப்பாரேயானால், நானூக் இறந்த செய்தியை படத்தின் இடையில் தலைப்பு அட்டையாகவோ , இறந்த உடலை படத்தின் இறுதியிலோ காட்டி, மக்களின் அனுதாபத்தை அதிகப்படுத்தி பணம் சம்பாதித்துருக்க முடியும். ஆனால் அப்படியெல்லாம் செய்து பணம் சேர்க்க விரும்பாத மனிதர் ஃப்ளஹர்ட்டி. ரிச்சர்ட் கிரிபெத் என்பவர் நியூயார்க்கிலுள்ள ஒரு ஹோட்டலில், ஃப்ளஹர்ட்டியை சந்தித்து உரையாடும்பொழுது, “உங்களின் கடந்த காலத்தைப் பற்றியும், வருங்காலத் திட்டங்கள் பற்றியும் கூறுங்கள்” எனக் கேட்டபோது அவர், “நல்லது, உங்களின் விருப்பம் என்னவென்று கேளுங்கள், ஒன்று மட்டும் உறுதி, இந்த முப்பது ஆண்டுகள் எப்படி நாம் வாழ்ந்தோம் என்பதை யாரும் மறைத்தோ, மாற்றியோ சொல்ல முடியாது” என பதிலளித்தார். இது கேட்கப்பட்ட கேள்விக்குரிய பதிலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஃப்ளஹர்ட்டியின் மனம் எதனை விரும்புகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.

பொதுவாக திரைப்பட இயக்குனர்கள் தாங்கள் ஏற்கனவே தீர்மானித்து, பார்க்க விரும்பியதை காமிரா வழியாக புகுத்தி மக்களுக்குத் தருவார்கள். ஆனால் ஃப்ளஹர்ட்டியொ, தனது சொந்த கண்களே பார்த்தறியாத பல காட்சிகளை காமிரா என்ற கண்களின் துணைக்கொண்டு பார்த்து, திரைப்படமாக்கி உலகிற்குத் தந்த ஒப்பற்ற சாதனையாளர்” என ரிச்சர்ட் கிரிபெத் அவரைப் பாராட்டுகிறார்.

திரைப்படப் பணி வரலாறு:
நானூக் ஆப் தி நார்த் (1922)
தி பாட்டரி மேக்கர் (1925)
மோனா ஏ ரொமான்ஸ் ஆப் தி கோல்டன் ஏஜ் (1926)
ட்வெண்டி ஃபோர் டால் ஐலேண்ட் (1927)
ஒயிட் ஷேடோஸ் இன் தி செளத் ஸீஸ் (1929)
தபு – ஏ ஸ்டோரி ஆப் தி செளத் ஸீஸ் (1931)
இண்டஸ்ட்ரியல் பிரிட்டன் (1933)
மேன் ஆப் அரன் (1934)
எலிபெண்ட் பாய் (1923)
தி லேண்ட் (1942)
லூசியான ஸ்டோரி (1948)

- தொடரும் -

சலனம் இதழில் வெளிவந்த சில முக்கியமான கட்டுரைகளை, அதன் தேவை கருதி, பேசாமொழியில் மறு பிரசுரம் செய்கிறோம். அதன்படி, சலனம் இதழில் தொடராக வெளிவந்த, உலக சினிமா சாதனையாளர்கள் தொடரை இங்கே வாசகர்களுக்காக படிக்க கொடுக்கிறோம். சலனம் இதழ் ஆசிரியர்க்கு நன்றி.

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </