இதழ்: 15     வைகாசி - 2014 (May)
   
 
  உள்ளடக்கம்
 
உயிர் கொடுக்கும் கலை 10 - ட்ராட்ஸ்கி மருது
--------------------------------
திரைமொழி 9 - ராஜேஷ்
--------------------------------
இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை 1 - தம்பிஐயா தேவதாஸ்
--------------------------------

ஹெர்ஸாக் பற்றி ஹெர்ஸாக் 3 - பால் க்ரானின் - தமிழில்: ஆனந்த், கோணங்கள்

--------------------------------
விருப்பம் வேலையானால் 2 – பிலிம்நியூஸ்ஆனந்தன் - தினேஷ் குமார்

--------------------------------

பாலுமகேந்திரா நினைவுக்கூட்டம் - 2 - தினேஷ் குமார்

--------------------------------
இந்திய சினிமா வரலாறு – 1 - பி.கே. நாயர்
--------------------------------
உலக சினிமா சாதனையாளர்கள் - 1 - என்.சி.நாயுடு
--------------------------------
சந்திரபாபு - சித்ராலயா
--------------------------------
 
   
   

 

 

திரைமொழி - 9

முதல் பாகம் – Visualization – The Process

அத்தியாயம் 3 – Storyboards (தொடர்ச்சி)...

எளிமையான ஸ்டோரிபோர்ட் வரையும் முறைகள்

film directing
shot by shot
visualizing from concept to screen

Steven D. Katz         தமிழில்: ராஜேஷ்

மேல்விளக்கம் (Interpretation)

எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்டோரிபோர்ட்கள் ஒரு ஸீனின் ஷாட்கள் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை விளக்குகின்றன. இவைகள் க்ராஃபிக் டிஸைன் மற்றும் உணர்ச்சிபூர்வமான டிஸைன்களின் கலவை. சிறந்த ப்ரொடக்ஷன் ஓவியர்களால் அந்தக் காட்சியின் மனநிலை (Mood) மற்றும் தொனி (Tone) ஆகியவற்றையும் வெளிக்கொணர முடியும். இருந்தாலும், நடைமுறையில் உள்ள விளக்கம் என்னவெனில், வியூபாயிண்ட், லென்ஸின் கோணம் (perspective) மற்றும் கதை நகர்தல் (narrative motion) ஆகியவையே முக்கியம். இவைகளுக்கு ஒரு அருமையான உதாரணமாக ஹெரால்ட் மைக்கேல்ஸன் (Harold Michelson), The Graduate படத்துக்காக வரைந்த ஸ்டோரிபோர்ட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்துக்குப் ப்ரொடக்ஷன் டிஸைன் – ரிச்சர்ட் ஸில்பர்ட் (Richard Sylbert).





கதையைப் பற்றிய எந்த ஒரு ஐடியாவும் இல்லாமலேயே இந்த ஸ்டோரிபோர்ட்களைப் பார்த்தாலும் கூட எளிதில் அவைகளில் உள்ள காட்சிகள் புரியும்படி இருப்பதே இதன் சிறப்பு. குறிப்பாக பேனல்கள் 7,8,9 ஆகியவற்றில் உள்ள தனித்தனி மற்றும் கண்டின்யூட்டி டிஸைன்கள் அழகாகவும் நளினமாகவும் விளங்கி, கதாபாத்திரங்களுடனான நமது உறவைப் பல effectகள் மூலமாகத் தெளிவுபடுத்துகின்றன. அதேசமயம் இங்கே இருக்கும் பென்னின் (Ben) பாயிண்ட் ஆஃப் வ்யூவையும், அவன் கனவுகாண்கிறான் என்பதையும் தெளிவாக உணர்த்துகின்றன.ஃப்ரேம்களை அமைத்திருக்கும் விதம் (staging) மற்றும் பேக்லைட்டிங் (backlighting), தண்ணீரின் மீது உள்ள நிழல் எஃபெக்ட் ஆகியவை மிகவும் உயர்ந்த தரத்துடனானவை. விஷுவல்களில் கதைசொல்வது என்ற முறையின் உச்சபட்ச வெளிப்பாடு இது. படங்களின் தொடர்ச்சி மற்றும் படங்களை அமைத்திருக்கும் விதம் (composition) ஆகியவை தனியே துருத்திக்கொண்டு தெரியாமல், கதையுடனும் கதாபாத்திரங்களுடனும் கதை சொல்லும் முறையுடனும் தெளிவாக ஒன்றுசேர்கின்றன. கண்டின்யூட்டியோடு படம் வரைவதில் இது ஒரு முக்கியமான பாடமாக இருப்பதற்கு முழுதும் தகுதி வாய்ந்தவை.

Adaptation (தழுவுதல்)

ஒருவகையில் பார்த்தால், எல்லா ஸ்டோரிபோர்ட்களுமே adaptationகள்தான் காரணம் ஒரு திரைக்கதையின் தழுவலாகவே இவை இருக்கின்றன. ஆனால், ஒரு நாவலைப்போலவோ அல்லது ஒரு நாடகத்தைப்போலவோ ஒரு திரைக்கதை என்பது முழுமையான வடிவம் அல்ல. காரணம், இந்தத் திரைக்கதை என்பது ஒரு வரைபடம். பின்னால் எடுக்கப்படும் படத்துக்கு ஒரு ப்ளூப்ரிண்ட் போல விளங்குகிறது. ஒரு திரைக்கதை எழுத்தாளர், திரைக்கதையை விஷுவலாக எழுதத்தான் எப்போதும் முயல்கிறார். காரணம், பின்னால் திரைப்படமாக அந்தக் கதை எடுக்கப்படப்போகிறது என்பதால், அந்தக் கதை பார்த்தும் கேட்டும்தான் உணரப்பட்டுத்தான் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதால். மேலோட்டமாகப் பார்த்தால் ஸ்டோரிபோர்ட் ஆர்ட்டிஸ்ட் என்பவர் திரைக்கதையில் இருக்கும் ஐடியாக்களை வெறுமே படமாகக் கொண்டுவருகிறார் என்றுதான் தோன்றும். ஆனால் உண்மையில் ஸ்டோரிபோர்ட் என்பது திரைக்கதையின் இன்னொரு வடிவமாக வெளிவர நிறைய வாய்ப்பு இருக்கிறது. சில ஐடியாக்களை மட்டும் கூர்தீட்டினால் அப்படி வந்துவிடும். திரைக்கதை எழுத்தாளர்கள் எப்படி விஷுவலான விஷயங்களை எழுதுகிறார்களோ, அப்படி ஸ்டோரிபோர்ட் ஆர்ட்டிஸ்ட்களும் இலக்கிய ஐடியாக்களைப் பரிந்துரைக்கிறார்கள். காட்சிகளை மாற்றி, கதையில் சில விஷயங்களைப் புகுத்தி, வசனத்தைக்கூட சில சமயங்களில் ஆங்காங்கே எழுதுகிறார்கள்.

ஒரு கதையை எப்படி திரைக்காக மாற்றுவது என்று தெரிந்துகொள்ளச் சிறந்த உதாரணமாக ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் ஜே.ஜி. பால்லார்டின் (J.G. Ballard) கதையான ‘Empire of the Sun’ நாவலை எப்படி உருமாற்றியிருக்கிறார் என்று பார்த்தால் போதும். ஸ்பீல்பெர்க் தான் இந்தக் கதையின் ஸ்டோரிபோர்டுக்குக் காரணமாக இருந்தவர் நல்லவேளையாக நம்மிடம் நாவல் இருக்கிறது; திரைக்கதையின் இரண்டு வடிவங்கள் (draft 1 – January 7, 1986 by playwright Tom Stoppard and the revised third draft dated September 12, 1986, by Menno Meyjes) இருக்கின்றன; ஸ்டோரிபோர்டும் உள்ளது. டேவிட் ஜோனாஸினால் வரையப்பட்ட ஸ்டோரிபோர்ட், ஓரிரு பக்கங்கள் கழித்து வெளியிடப்பட்டுள்ளது.

நாவல்

ஷாங்காயில் தனது பணக்காரப் பெற்றோர்களுடன் வாழும் ஜிம் என்ற 11 வருட ப்ரிட்டிஷ் சிறுவனின் வாழ்க்கையை இந்த நாவல் பின்தொடர்கிறது. வருடம் – 1941. ஜப்பானியர்கள் ஷாங்காயை முற்றுகையிடுகின்றனர். நமது முதல் காட்சி, ஜிம்மின் அறையில் விடியலில் பேலஸ் ஹோட்டலில் துவங்குகிறது. நாவலில் அவன் ஏற்கெனவே எழுந்து பள்ளி உடைகளை அணிந்துகொண்டு ஷாங்காயின் யாங்ட்ஸே நதியை நோக்கியுள்ள ஜன்னலுக்குச் செல்கிறான். ஒரு பெரிய கப்பலில் இருந்து இரண்டு சிறிய படகுகள் ஜப்பானிய வீரர்களை ஏற்றிக்கொண்டு செல்வதைக் கவனிக்கிறான். கூடவே இன்னொரு படகில் சில மேலதிகாரிகளும் செல்கின்றனர். அவர்கள் ஒரு அமெரிக்கன் கப்பலிலும் ஒரு ப்ரிட்டிஷ் கப்பலிலும் ஏறுகின்றனர். சிறிய கப்பலில் இருந்து ஜப்பானியக் கப்பலுக்கு விளக்கொளியின் மூலமாக ஒரு சிக்னல் கொடுக்கப்படுகிறது. ஜிம்மும் ஜன்னலில் இருந்து ஸ்கௌட் முகாமில் கற்றுக்கொண்ட சைகைகளை அவை என்னவென்றே அறியாமல் வேகமாகச் செய்கிறான். ஒரு சில நொடிகளில், அந்தப் பெரிய ஜப்பானியப் படகில் இருந்து ப்ரிட்டிஷ் படகின்மேல் ஒரு குண்டு பாய்கிறது. ஷாங்காய் முற்றுகை இவ்வாறாகத் துவங்குகிறது. அந்த குண்டின் அதிர்ச்சி அலை ஹோட்டலையே நடுங்க வைக்கிறது. ஜிம் பயந்துபோய் படுக்கையில் பாய்கிறான். சில நிமிடங்களிலேயே திகிலடைந்த கஸ்டமர்கள் ஹோட்டலில் இருந்து சாரிசாரியாக வெளியேறுகின்றனர். ஜிம்மின் தந்தை உள்ளே வந்து, இன்னும் மூன்று நிமிடங்களில் அவர்கள் வெளியேறப்போவதாகச் சொல்கிறார். படுக்கையில் அமர்ந்துகொண்டிருக்கும் ஜிம்முக்கு, தான் தப்பாகச் செய்த சிக்னல்கள்தாம் அந்தப் போரைத் துவக்கிவைத்திருக்கின்றன என்பது புரிகிறது.

அந்தப் போரையே அவன் தான் துவக்கியிருக்கிறான் என்பதை ஜிம் புரிந்துகொண்டான். குழப்பமாக ஜன்னலில் இருந்து அவன் செய்த சிக்னல்கள்தான் படகில் இருந்த ஜப்பானிய அதிகாரிகளால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு அந்தக் குண்டு வெடித்திருக்கிறது.

திரைக்கதை

இதோ டாம் ஸ்டோப்பார்டின் திரைக்கதையில் இதே காட்சியின் திரைவடிவம். ஜிம்மின் ஹோட்டல் அறையில்தான் காட்சி துவங்குகிறது. இப்போது ஜிம் தூங்கிக்கொண்டிருக்கிறான். தாழ்வாகப் பறக்கும் ஒரு விமானத்தின் ஓசையால் அவனது தூக்கம் கலைகிறது. படுக்கையில் இருந்து எழுந்து ஜன்னலுக்குச் செல்கிறான் ஜிம்.

ஜப்பானிய வீரர்கள் கப்பல்களில் ஏறும் நீளமான சீக்வென்ஸ், திரைக்கதையில் மிகச்சுருக்கமாக, ஜிம் அந்த ஜப்பானியக் கப்பல்கள் தண்ணீரில் செல்வதைக் கவனிப்பதாக எழுதப்பட்டிருக்கிறது. ஜன்னலில் இருந்து நகரும் ஜிம், படுக்கையருகே இருக்கும் விளக்கைப் போடுகிறான். அப்போது ஹோட்டலின் வெளியே இருந்து ஒரு ஷாட்டில், இருளடைந்து கிடக்கும் ஹோட்டலின் அந்தப் பகுதியில் இந்த அறையில் மட்டும் மெலிதான வெளிச்சம் தெரிவது காட்டப்படுகிறது.

கட் செய்துவிட்டுச் சிறிது நேரம் கழித்து ஜிம்மைப் பார்க்கிறோம். இப்போது ஜிம் பள்ளி உடையில் இருக்கிறான். படுக்கையின் அருகே ஒரு சிறிய விமான பொம்மையின் பக்கத்தில் இருக்கும் ஒரு லாடின் இலக்கணப் புத்தகத்தை எடுத்துக்கொள்ளும் ஜிம்மை வெளியே கேட்கும் சத்தங்கள் கவர்கின்றன. வெளியே, ஜப்பானியக் கப்பல் இன்னொரு கப்பலுக்கு விளக்கின் வழியாக ஒரு சிக்னலை அனுப்பிக்கொண்டிருக்கிறது. ஜிம் உடனடியாகத் தனது படுக்கைக்கு வந்து அங்கிருக்கும் சிறிய ஃப்ளாஷ்லைட்டை எடுத்துக்கொள்கிறான். இப்போது ஒரு புதிய ஷாட்டுக்குக் கட் செய்யப்படுகிறது. இந்த ஷாட், ஹோட்டலின் வெளியே இருக்கும் படகுகளையும் ஹோட்டலின் வெளிப்புறத்தையும் காட்டும் wide ஷாட். அதிகாலையின் மெல்லிய இருளில் ஜிம்மின் ஃப்ளாஷ்லைட் அவனது ஹோட்டல் அறையில் இருந்து மெலிதாக மின்னுகிறது. சில நொடிகள் இப்படி ஜிம்மின் சிக்னல் அனுப்பப்படுவதைத் தொடர்ந்து, ஜப்பானியக் கப்பலின் பீரங்கிகளில் இருந்து பேரிடி போன்ற ஒரு சத்தம் கேட்கிறது. ஜிம்மின் அறை வெளிச்சத்தால் நிரம்புகிறது. ஜிம் பின்னால் வீசப்படுகிறான். சில நொடிகளில் அவனது தந்தை அவனது பெயரைக் கத்திக்கொண்டே உள்ளே ஓடிவருகிறார்.

ஜிம்
நான் வேண்டுமென்றே செய்யவில்லை! அது ஒரு ஜோக்தான்!!


உண்மையில் நாம் மேலே பார்த்த இரண்டு திரைக்கதை வடிவங்களுமே ஒரேபோன்றுதான் இருக்கின்றன. இப்போது, ஸ்டோரிபோர்டில் இவை எப்படிக் காட்டப்பட்டிருக்கின்றன என்பதைக் கவனிப்போம். இந்தக் காட்சியை அட்டகாசமான திரைப்பட அனுபவமாக அளிக்கும் காட்சிகள் திரைப்படத்தில் பின்னால் சேர்க்கப்பட்டன. இனி வருவது, இந்தக் காட்சியின் சுருக்கப்பட்ட ஸ்டோரிபோர்ட்கள்.








சரி. இப்போது நாவலையும் திரைக்கதையையும் ஸ்டோரிபோர்ட்களையும் நன்றாகக் கவனித்துவிட்டதால், இந்தக் காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டன என்பதை வரும் கட்டுரையில் விபரமாகக் காணலாம்.

தொடரலாம்...

 

go to top  

இந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamozhi@gmail.com

முகநூலில் இணைய: http://www.facebook.com/pesaamozhi

 
 
காப்புரிமை © பேசாமொழி
  </